• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 11

Administrator
Staff member
Messages
575
Reaction score
832
Points
93
தேனும் இனிப்பும் 11

அவனும் நானும்

சொல்லும் பொருளும்…

மஹிமாவின் அதிர்ந்த முகத்தை கண்டவன் மீண்டும் அழுத்தமாக, “ஜீவிதா என்னோட சொந்த பொண்ணு என் ரத்தம்” என்று கூற,

“இது இது எப்படி பாசிபிள். அப்போ நீங்க என் அக்காக்கு துரோகம் பண்ணி இருக்கீங்க. அவளை ஏமாத்திட்டு தான் இவ்ளோ நாள் வாழ்ந்து இருக்கீங்களா?” என்று அதிர்வு விலகாது வினவினாள்.

அவளது இந்த எதிர்வினையை எதிர்ப்பார்த்து இருந்தவன் நடந்த அனைத்தையும் கூற, மஹிமாவால் அதற்கு மேல் அதிர்ச்சியை தாங்க இயலவில்லை.

“என்ன? அது அவங்க… நீங்க சொன்னது உண்மையா?” என்று நம்பவியலாது வினவ, “ஹ்ம்ம்…” என்று அமைதியாக தலையசைத்தவன், “எனக்கு என்செபலைட்டிஸ் வந்தப்போ டூ இயர்ஸ் நடந்தது மறந்து போனது உனக்கு தெரியும் தான?” என்று வினவினான்.

“ஹ்ம்ம்” என்று அமைதியாக மஹி தலையாட்ட, “அப்போதான் அவளை என் ஜானுவை மறந்துட்டேன். அவளோடான என் காதலை மறந்துட்டேன். அவளை தவிக்கவிட்டுட்டு லாவண்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றவனது குரலில் ஜானுவை தவிக்கவிட்ட வேதனை இருந்தது.

“என்னால அவ நிறைய இழந்துட்டா இனி இழக்க அவளுக்கு எதுவுமே இல்லை. இவ்வளவு நடந்தும் நான் மட்டும் போதும் என்னை தவிர யாருக்கும் வாழ்க்கையில இடமில்லைன்னு இருந்துட்டா. எல்லாத்துக்கும் மேல என்னோட சந்தோஷத்துல தான் அவ சந்தோஷம் இருக்குனு ஒன்பது வருஷமா என்னை பாத்திட்டு அதுவும் இன்னொருத்தியோட புருஷனா பாத்திட்டு வாழ்ந்திட்டா” என்றவனது குரல் அவனையும் மீறி கரகரத்தது. அந்த குரலில் அவனுடைய வாழ்நாள் குற்றவுணர்ச்சியை மஹிமா உணர்ந்தாள்.

“அவ இடத்துல வேற யாரு இருந்தாலும் என் வாழ்க்கையில கண்டிப்பா பிரச்சனை பண்ணி இருப்பாங்க. அவக்கிட்ட சண்ட போட பிரச்சனை பண்ண எல்லா ஆதாரமும் காரணமும் இருந்தது. ஆனால் அவ எதுவும் பண்ணலை. இனியும் பண்ணமாட்டா. என்னோட கல்யாணத்துக்கு வந்து அமைதியா வாழ்த்திட்டு போனா. எனக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எல்லாம் நினைவுக்கு வந்திடுச்சு”

“...”

“ஞாபகம் வந்ததும் அவள் கால்ல விழுந்து கதறுனேன். மன்னிப்பு கேட்டேன்.‌ எல்லாம் விதி உங்க மேல எந்த தப்பும் இல்லை. இனியும் உங்க கண் முன்னாடி நான் இருக்கது உங்க வாழ்க்கைக்கு நல்லதில்லை‌. என்னை பார்க்க பார்க்க உங்களுக்கு குற்றவுணர்ச்சி அதிகமாகும். உங்க சந்தோஷத்துல தான் என்னோடதும் இருக்கு. நீங்க லாவண்யா கூட ரொம்ப சந்தோஷமா வாழ்க்கைய வாழுங்கன்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டா”

“...”

“இனிமேல் உங்க கண்முன்னாடி நான் வர மாட்டேன். நீங்களும் என்னை தேடி வராதீங்கன்னு சொல்லிட்டு போனா. இரண்டு வருஷம் ஆச்சு இதுவரைக்கும் எந்தவிதத்துலயும் என்னை கான்டாக்ட் பண்ண முயற்சி பண்ணலை. இப்போ கூட நானா தான் அவளை தேடி போனேன். என் பொண்ணு ஜீவிதா பெரிய மனுஷியாகிட்டா. அதைக்கேட்டும் என்னால தனியாவிட முடியலை. அதான் தேடி போனேன். நான் போகலைன்னா இந்த ஜென்மத்துக்கும் அவ என்னை தேடி வந்திருக்க மாட்டா”

“...”

“அவக்கிட்ட போய் நீ என்ன பேசியிருக்க மஹிமா. பணம் பணத்தை வச்சு பேரம் பேசியிருக்க. உன் சொத்தையே எழுதி கொடுத்தாலும் அவளோட கால் தூசிக்கு கூட ஈடாகாது. காதல் காதல்னு உளறிட்டு இருக்கியே. உண்மையான காதலுக்கு அர்த்தம் தெரியுமா மஹிமா? முழுசா இந்த ஜென்மத்தையே எனக்காக அர்ப்பணிச்சிருக்கா அவ. உன்னால இப்படி ஒரு வாழ்க்கைய யோசிச்சு பார்க்க முடியுமா?” என்று ஜீவா அவளது விழிகளை பார்த்து வினவிட,

“ம்ஹூம்” என்று இடவலமாக அசைத்தவளது விழிகளில் நீர் வழிந்தது.

“இப்போ நீ பேசிட்டு வந்திருக்க வார்த்தை அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் தெரியுமா? பணமிருந்தா எதையும் செய்யாலாம்னு உனக்கு எண்ணமிருக்கா மஹிமா. உங்கிட்ட இருக்க பணத்தை வச்சு ஒரே ஒரு உண்மையான காதலை உன் வாழ்க்கையில சம்பாதிக்க முடியுமா உன்னால?” என்று ஜீவா அழுத்தமாக கேட்க, எதிர்ப்புறம் மௌனம்.

“எந்த காலத்திலயும் உன்னால முடியாது மஹிமா. உனக்கு அப்பா அம்மா அண்ணா அத்தை மாமான்னு ஒரு பெரிய குடும்பமே இருக்கு. ஆனால் அவளுக்கு நான் மட்டும் தான் அவளோட உலகத்தில என்னை தவிர இந்த ஜென்மத்தில இடமில்லை. லாவண்யா இந்நேரம் இருந்திருந்தா நான் அவளை தேடி போயிருக்க மாட்டேன். இது அவளுக்கும் தெரியும். நான் வரவேயில்லைன்னாலும் என் நினைப்போட இந்த ஜென்மத்தை அவ கடந்திருவா. லாவண்யா இல்லாத காரணத்தால தான் நான் அவளை தேடி போயிருக்கேன் அது தெரிஞ்சும் அவ அவளோட வாழ்க்கையில எனக்கு இடம் கொடுத்திருக்கா. அவ இடத்தில நீயிருந்தா இந்த முடிவை எடுத்திருப்பியா மனசாட்சியை தொட்டு சொல்லு?” என்று ஜீவா கேட்க,

மஹிமா, “மாட்டேன்” என்று நிச்சலமாக மறுத்தாள்.

“இவ்வளவையும் தாண்டி அவ என்னோட நம்ம குடும்பத்தில ஒருத்தியா வர சம்மதிச்சிருக்கா. அதுவும் உடனே அவ ஒத்துக்கலை. நம்ப வீட்ல கண்டிப்பா யாரும் ஒத்துக்க மாட்டாங்க. என்னால என்னைக்குமே உங்க வாழ்க்கையில பிரச்சனை வர கூடாதுனு மறுத்தா. நான் தான் எந்த பிரச்சனையும் வராது. யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு அவக்கிட்ட உறுதியா சொல்லி சம்மதிக்க வச்சேன்”

“…”

“ஆனால் என்னால சொன்ன சொல்ல காப்பாத்த முடியலை. இப்போ இல்லை எப்பவுமே அவ விஷயத்துல வார்த்தைய காப்பாத்த முடியலை. நீ செஞ்ச காரியம் மொத்தமா அவளை உடைச்சிருக்கும். நீ ஒரு ஆளே இப்படி பேசுனா மத்த பேமிலி மெம்மர்ஸ் எப்படி பேசுவாங்கன்னு அவளுக்கு தோணி இருக்கும். கடைசில அவ சொன்னது உண்மையாகிடுச்சு. என்னால எப்பவுமே அவளுக்கு நியாயம் செய்ய முடியலை” என்றவனது குரல் மேலும் கரகரக்க,

“மாமா” என்று அவனது கையை பிடித்து கொண்டவளுக்கு கண்ணீர் பெருகியது.

“நீ செஞ்சிட்டிருக்கதுக்கு பேர் காதலா மஹிமா? என் மேல இருக்க சிம்பதில இதெல்லாம் நீ பண்ணிட்டு இருக்க. சொன்னா புரிஞ்சுப்பேன்னு தான் நான் எடுத்து சொன்னேன். ஆனால் நீ எதையும் புரிஞ்சுக்க தயாரா இல்லை. அதுனால தான் நான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் அதையும் நீ எப்படி செய்யலாம்னு எல்லாத்தையும் செஞ்சிட்டு கடைசிவரை குற்றவுணர்ச்சியோட செத்திடுனு சொல்ற மாதிரி செஞ்சிட்ட” என்று ஜீவா உணர்ச்சி துடைத்த குரலில் கூற,

“மாமா போதும் ப்ளீஸ் இதுக்கு மேல பேசாதீங்க” என்றவள் அழுகையை முயன்று கட்டுப்படுத்தினாள்.

ஜீவாவிற்கும் அதற்கு மேல் பேச்சே வரவில்லை. சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய,

“சாரி…” என்று முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு மஹிமா கூறினாள்.

ஜீவா பதில் ஏதும் கூறவில்லை. அப்போது அவனின் அலைபேசி அழைத்தது. எடுத்து பார்க்க ஜானவி தான் அழைத்தாள்.

மஹியும் அதனை கவனிக்க அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் அழைப்பை ஏற்று ஒலி பெருக்கியில் போட்டான்.

அழைப்பை ஏற்றதும் அவளிடம் பெரிய மௌனம். அவள் பேச போவதில்லை என்று உணர்ந்து ஜீவாவே, “ஜானு…” என்று அழைத்தான். அந்த குரலில் அவனது குற்றவுணர்வை தாண்டி ஜானுவின் மீதான நேசம் கொட்டி கிடந்தது‌.

“சொல்லுங்க…” என்றவளது குரல் அப்பட்டமாக சோகத்தை பிரதிபலித்தது. அதனை உணர்ந்தவன் மஹிமாவை காண அவள் குற்றவுணர்வில் தலையை குனிந்து கொண்டாள்.

“சாரி…” என்றவன் மிகுந்த தயக்கத்துடன் கேட்க, “எதுக்கு ஜீவா. நீ… நீங்க ஏன் கேக்குறீங்க. உங்க மேல எந்த தப்பும் இல்லை” என்று கூறிட, ஜீவாவின் அர்த்த பார்வை மஹிமாவின் மீது விழுந்தது‌.

“என்னால தான் உனக்கு எப்பவுமே கஷ்டம்” என்றவனது குரல் கரகரக்க, “நோ இல்லை” என்று தீட்சண்யமாக மறுத்தவள், “உங்களால என்னை என்னைக்குமே கஷ்டப்படுத்த முடியாது ஜீவா” என்றவள் சில கணங்கள் அமைதிக்கு பிறகு, “நான் சொன்னேன் தான ஜீவா. இது சரிவராது” என்க, எதிர்புறம் மௌனம்.

“கண்டிப்பா உங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க ஜீவா. அந்த பொண்ணே அவ்ளோ பேசும் போது உங்க வீட்லயும் கண்டிப்பா எதிர்ப்பாங்க ஜீவா. இது இது எதுவும் வேணாம் ஜீவா. இதுவரைக்கும் நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படியே இனியும் இருந்துட்டு போறேன். எனக்காக நீங்க உங்க குடும்பத்துல எந்த பிரச்சனையும் பண்ண வேணாம் ஜீவா. கடைசி வரைக்கும் தனியா தான் இருக்கணும்னு என் விதியில இருக்கு போல. நான் அதை அனுபவிச்சிட்டு போறேன்” என்றவளது குரல் தழுதழுத்தது.
இங்கு ஜீவாவின் விழிகளும் சிவந்து போயிருந்தன.

“நீ… நீங்க உங்க மாமா பொண்ணு அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோங்க. அது தான் உங்களுக்கும் உங்க வாழ்க்கைக்கும் நல்லது” என்று ஜானு மனதை கல்லாக்கி கொண்டு கூற, “ஜானு அவ ஏதோ புரியாம பேசிட்டா. நீ அதை பெரிசு பண்ணாத நான் அவக்கிட்ட பேசி புரிய வைக்கிறேன்” என்று தவிப்புடன் கூறினான்.

“இல்லை வேணாம் ஜீவா. அவங்க இடத்தில இருந்தும் நாம யோசிக்கணும் எங்க வேற யாரையும் நீங்க கல்யாணம் பண்ணா அவங்க அக்கா குழந்தைங்களை நல்லா பாத்துக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம் இருக்கு. யாருக்கா இருந்தாலும் இது தோணும். அது நியாயமான பயம் தான். அவங்க உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா அக்கா பசங்களை பாத்துக்கலாம்னு நினைக்கிறாங்க. நீங்க அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று முடித்திட, ஜானுவின் வார்த்தைகள் மஹியை சுட்டது.

ஜீவா பதில் பேசும் முன், “எனக்கு ஒரு வொர்க் வந்திடுச்சு அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு போக, ஜீவாவின் பார்வை அமைதியாக எதிரில் இருந்தவள் மீது படிந்தது.

“கேட்டியா? நீ அவ்ளோ மோசமா பேசியும் உன் பக்கத்துல இருக்க நியாயத்தை யோசிக்கிறா அவளை போய் உன்னால எப்படி இப்படி பேச முடிஞ்சது” என்று ஜீவா கேள்வி கனைகளை தொடுக்க, மஹிமாவிற்கும் உள்ளுக்குள் வியப்பும் குற்றவுணர்வும் பெருகியது.

இவள் இடத்தில் தான் இருந்தால் நிச்சயம் வாங்கிய பேச்சிற்கு அவ்வளவு பேசியிருக்க கூடும் ஆனால் இவள் என்னவென்றால் என்னிடத்தில் இருந்து சிந்தித்து பார்க்கிறாள் என்று.

“இப்போ புரியுதா உனக்கு காதல்னா என்னன்னு?” என்று ஜீவா உறுத்து விழிக்க, குனிந்த தலை நிமிரவில்லை.

“அவ சொன்ன மாதிரி தான் நீ நினைச்சு இதை பண்ணிட்டு இருக்கேன்னா நல்லா கேட்டுக்கோ அவளை விட யாராலுமே என் பசங்களை நல்லா பாத்துக்க முடியாது” என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட, அது மஹிமாவிற்கும் புரிந்தது.

“நான் அவங்க கிட்ட பேசணும்?” என்று மஹி நிமிர்ந்து கூற, “எதுக்கு இன்னும் அவளை காயப்படுத்தவா” என்றவனது குரலில் கோபம்.

“ப்ளீஸ் நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்றவளது குரலில் இருந்த குற்றவுணர்வை உணர்ந்தவன் அமைதியாக ஜானுவிற்கு அழைப்பு விடுத்தான் அதுவும் காணொளி அழைப்பு.

முதல் முறை ஜானு துண்டிக்க மீண்டும் அழைத்தான். இம்முறை அழைப்பை ஏற்க, ஜீவா, “உன்கிட்ட மஹிமா பேசணுமாம்” என்று அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டான்.

இதனை எதிர்ப்பாராத ஜானு அதிர்ந்து பார்க்க எதிர் முனையில் அழுதழுது முகம் சிவந்த மஹிமா தோன்றினாள்.

அவளது அழுத முகத்தை கண்டு ஜானு மேலும் அதிர, “சாரி என்னை மன்னிச்சிடுங்க” என்று மஹிமா கேட்டிட, சடுதியில் என்ன எதிர்வினை புரிவதென்று அவளுக்கு தெரியவில்லை.

ஜீவாதான் இவளது அழுகைக்கு காரணமா‌ என்று எண்ணியவள், “ஜீ… ஜீவா எதுவும் திட்டிட்டாங்களா?” என்று தயக்கத்துடன் வினவினாள்.

“ஆமா மாமா திட்டுனாங்க. திட்டுனதால தான் எனக்கு நான் பண்ண தப்பு உறைச்சிருக்கு. நான் பேசுனது எல்லாம் ரொம்ப தப்பு. சாரி என்னை மன்னிச்சிடுங்க” என்று அழுகையுடன் கேட்க, ஜானுவிற்கு சிறு பெண்ணின் அழுகை கண்டு பாவமாகிவிட்டது.

பதில் எதுவும் கூற இயலவில்லை. அவள் பேசிய பேச்சுக்கள் இன்னும் வலித்தது.

“நீங்க சொன்னது ரொம்ப சரி. என் அக்கா பசங்களை என்னை தவிர யாரும் நல்லா பாத்துக்க மாட்டாங்கன்னு தான் இவரை கல்யாணம் பண்ண நினைச்சு அதுக்கு இவர் மேல வந்த சிம்பதிய காதல்னு பேர் வச்சு என்னென்னவோ பண்ணிட்டேன் புத்தி கெட்டு. நான் பேசுன வார்த்தை மன்னிப்பு கேட்டா சரியாகாதுனு எனக்கு தெரியும். இருந்தாலும் இதை தவிர என்ன சொல்றதுனு எனக்கு தெரியலை” என்று கண்ணீரை துடைக்க, செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவளிடம் என்ன கூறுவதென்று தெரியாமல், “நான் எதுவும் நினைக்கலை” என்று விட்டாள்‌.

“உங்க இடத்துல நான் இருந்தா இவ்ளோ பெருந்தன்மையா நடந்து இருப்பேனானு தெரியலை.‌‌ எனக்கு கொஞ்சம் முன்ன தான் புரிஞ்சது என்னை விட என் அக்கா பசங்களை நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னு” என்று மஹி பேசுகையில் இடை நுழைந்தவள், “ப்ளீஸ் இது வேண்டாம்” என்று மறுத்தாள்.

“ம்ஹூம் இதுவரைக்கும் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத உங்களுக்கு கடவுள் கொடுக்க இருந்த சந்தோஷம் என்னால எப்பவுமே கெட்டு போகாது. என் மாமாவுக்கு உங்களைவிட யாரும் பொருத்தமா இருக்க முடியாது. அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ். நானே முன்ன நின்னு உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நடந்ததுல அவர் மேல எந்த தப்பும் இல்லை. காதலுக்கும் பரிதாபத்துக்கும் வித்யாசம் தெரியாம நான் தான் எல்லாத்தையும் கெடுத்துட்டேன். இவர் என்னோட காதல் இல்லை. உங்க அளவுக்கு இல்லைனாலும் எனக்கான காதலை நான் தேடி கண்டுபிடிப்பேன். நான் செஞ்ச தப்புக்கு மாமாவ தண்டிச்சிடாதீங்க. உங்க மேல வச்ச காதல் உங்களுக்கு செஞ்சதுக்குமான குற்றவுணர்வு ரெண்டுக்கும் இடையில ரொம்ப கஷ்டப்பட்றாரு” என்று முடிக்க, ஜீவாவை எண்ணி ஜானுவிற்கு விழிகள் கலங்கியது.

“எந்த ஜென்மத்தில என்ன புண்ணியம் செஞ்சாருன்னு தெரியலை உங்க காதல் கிடைச்சிருக்கு. நான் செஞ்ச தப்புக்கு அவருக்கு தண்டனை வேணாம்” என்று மருகி கேட்க, ஜானு கன்னம் தாண்டிய கண்ணீரை துடைத்தாள்.

“மாமாக்கிட்ட பேசுங்க ப்ளீஸ்” என்றவள் அலைபேசியை ஜீவாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

அலைபேசியை வாங்கிய ஜீவா அமைதியாக அவளை பார்த்திருந்தான். அந்த பார்வையில் அவளுக்கான ஒட்டு மொத்த காதலும் தவிப்பும் கொட்டி கிடந்தது.

“ஜீவா‌…” என்றவள் தவிப்புடன் அழைக்க, “நான் உன்னை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கேன்” என்று மறுமொழிந்தான்.

“ம்ஹூம் இல்லை. என் வாழ்க்கையில இருக்க ஒரே சந்தோஷம் நீயும் ஜீவியும் தான். உங்களால மட்டும் தான் இந்த வாழ்க்கை இன்னும் பிடிப்போடு போய்ட்டு இருக்கு”என்று கண்ணீருடன் புன்னகைத்தாள்.

“நீ என்னை நம்புற தான? நான் எல்லாத்தையும் சீக்கிரம் சரி செய்றேன். திரும்பவும் உன்னை இழக்க நான் தயாரா இல்லை” என்று தவிப்புடன் ஜீவா கேட்க,

“இந்த உலகத்துல உன்னைவிட யாரையும் நான் நம்ப மாட்டேன்” என்று மொழிய, அவளது காதல் வழக்கம் போல இவனை நெகிழ செய்தது.

“சீக்கிரமா வீட்ல பேசி சம்மதம் வாங்கி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்” என்று ஜீவா உறுதியளிக்க, “ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள்.

மேலும் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்
டித்தவன் முகத்தை கழுவிவிட்டு வெளியே வர அவனது மொத்த குடும்பமும் லாவண்யாவுடைய பெற்றோரையும் சேர்த்து காத்திருந்தது.




 
Top