• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 11

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் 11



மறுநாள் சவிதா வீட்டிற்கு சென்று திரும்ப யாஷ் தாயை கட்டிக் கொண்டு அப்படியொரு அழுகை. அவரும் குழந்தை போல் தேம்ப துவங்க சமாதானம் செய்வதற்குள் நவீன் தான் தவித்து போனான். ஆம், யாஷ் கூட அவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அமைதியாகி போயிருந்தாள். "யாஷ் என்ன ரொம்ப தூரமா போக போறா, எதுக்கு இப்படி அழுகுறீங்க. கார் எடுத்தா அரை மணி நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்திடலாம். உங்களுக்கு முடியலைன்னா எனக்கு கூப்பிடுங்க அழைச்சுட்டு வரேன் ஆன்ட்டி" என்று நவீன் ஆறுதலாக அவரை தேற்ற மனோவும் ரிதனும் இணைந்து தந்தையை சமாதானம் செய்தனர். வாணியும் ராகவனும் அவர்களுடன் வந்திருக்க, "எதுக்கு சவி இப்படி அழுகுறீங்க? பேசாம வீட்டோட மாப்பிள்ளையா நவீனை நீங்க பிடிச்சு வைச்சுக்கோங்களேன். நானாவது ஃப்ரியாகிடுவேன்" என்று கண்சிமிட்டி புன்னகைத்து அவரை இயல்பாக்க முயல சவிதாவிற்கு மட்டுமின்றி யாஷூக்குமே அவரை பிடித்து தான் போனது.

யாஷ், நினைத்ததை விட நவீனோடும் அவனின் குடும்பத்தோடும் மிககச்சிதமாகவே பொருந்தி நின்றாள். திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது. பெண் முன்பை விட அதிகமாகவே ஆடவனை தேட துவங்கி அவனையும் தேட வைத்துக் கொண்டிருந்தாள். வாணிக்கு மட்டுமின்றி சவிதாவிற்கும் அத்தனை திருப்தியாக மனது நிறைந்து போனது அவர்களின் புரிதலைக் கண்டு. அதிலும் யாஷின் முகத்தை கொண்டு அவளுக்கானதை செய்து கொண்டிருந்த நவீனை அவர் ஆச்சரியமாய் நான் பார்த்திருந்தார். 'தாங்களே தேடியிருந்தால் கூட இப்படியொருவனை கண்டுபிடித்திருக்க மாட்டோம்' என்ற எண்ணங்களை யாஷின் குடும்பத்திற்கு கொடுத்திருந்தான் குறுகிய காலங்களிலே. சவிதாவிற்கு மகன்களை விட மகளை குறித்து, 'இந்த பொண்ணு சத்தமா கூட பேசாதே! எப்படி தான் உலகத்தை சமாளிக்க போகுதோ?' என்று ஆழ்ந்திருந்த பெரிய கவலையை அகற்றியிருந்தான். அவளுக்கும் சேர்த்து நவீனே பேசினான் இல்லை இல்லை அதாவது எதிரிலிருப்பவரை கண்களாலே பணிய வைத்து வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான். ஷமீயும் ஸ்மிருதியும் யாஷை விட்டு தற்பொழுது நவீனின் பின்பு சுற்றத் துவங்கியிருந்தனர். ஷமீ எப்பொழுதும் அப்படி தான் என்றாலும் தற்பொழுது புதிதாக ஸ்மிருதியும் இணைந்து கொண்டாள். ரிதன், திருமணம் முடிந்தாலும் மேலும் ஒரு மாதம் விடுப்பை நீட்டித்து குடும்பத்துடன் அன்னையிடம் சீராடி விட்டே கிளம்பியிருந்தான். எல்லோரும் இணைந்து விட்டால் வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. அதிலும் ஷமீயுடன் இணைந்து வாணி அடிக்கும் கூத்திற்கு வீடே அதிரும். ஆம், யாஷ் அவர்களோடு எப்பொழும் வாணியையும் ராகவனையும் இழுத்து வந்து விடுவாள்.


யாஷ், எப்பொழுதும் போல் வேலைக்கு செல்ல துவங்கியிருக்க நவீனும் தன்னுடைய வேலையின் பின்பு தான் ஓடினான் ஆனால் இப்பொழுது உடன் யாஷ்வி நின்று கொண்டாள் ஆதரவாக தோள் சாய்த்துக் கொண்டு. வாணி, திருமணம் முடிந்தாவது மகன் சற்று பொறுப்பாவான் என்றெண்ணியிருக்க அவனோ யாஷ்வியையும் தன் இழுப்பிற்கெல்லாம் இழுத்து சென்று தன்னுடைய க்ரிமினல் பார்ட்னராக்கி கொண்டது தான் ஆகச்சிறந்த பரிதாபம். நவீன், தன்னை தவிர வேறெதையும் அவளின் மனதையும் மூளையும் ஆக்கிரமிக்க அனுமதியளிப்பதில்லை. முன்பே இழுத்து பிடித்துத் கொள்வபவனை இப்பொழுது சொல்லவா வேண்டும்! யாஷ்வி, முழுவதுமாக ஆடவன் கைகளுக்குள் வந்திருந்தாள். முன்பு அவனாக பாவையின் இருப்பிடங்களை அறிந்து கொண்டான் இப்பொழுதோ பேதையே தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் அவ்வளவே வித்தியாசங்கள்.



நவீன் போடும் குளம்பியோடு துவங்கும் அவர்களின் இனிமையான அதிகாலை பொழுதுகள் இரவில் அவனின் குளம்பியோடு தான் நிறைவு பெறும். 'யாருக்கும் அடங்காது, வந்து தான் பாரேன்' என்று பார்வை பார்த்து எல்லாரையும் தூர துரத்துபவனை, காலாட்டி அமர்ந்து கொண்டு வேலை வாங்குவதில் யாஷ்விக்கு அலாதி இன்பமும் கூட. நவீனும் அதற்கெல்லாம் சலித்துக் கொண்டதே கிடையாது. அதற்கு மேல் நாக்கின் நுனியில் தங்கி கொண்டு அவளை சிலிர்க்க செய்திடும் ஆடவனது குளம்பியின் மீது அவளுக்கு அதீத விருப்பமும் கூட. ஆம், நவீன் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி எல்லோரும் இரண்டடி தூரம் தான்! வாணிக்கு தான் பொங்கி பொங்கி சிரிப்பு வரும். அடுப்பறையில் வியர்வை வழிய நின்று கொண்டிருக்கும் மகனை கண்டு. "நவீன் யாஷ்க்கு மட்டும் தான் காபியா? எனக்கும் அப்பாக்கும் சேர்த்து போடேன்" என்று மகனை சீண்டி வம்பிலுக்காது வாணியின் பொழுதுகள் துவங்கியதே கிடையாது. யாஷ், நவீனின் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையும் நிறைத்திருந்தாள். வாணிக்கும் மகள் இல்லை என்ற குறை தீர்ந்து போக, எல்லாவற்றையும் அவளுடன் கலந்தாலோசித்து இருவரின் எண்ணங்களின்படி தான் வீடு இயங்கிக் கொண்டிருக்கிறது. ராகவனும் சரி நவீனும் சரி எதிலுமே தலையிட்டது கிடையாது. எல்லாமே வாணி தான் பார்த்துக் கொள்வார். அது அதற்கு என தனி தனியாக ஆட்கள் உண்டென்றாலும் ஆலோசனை கூற, அவரை மறுக்க என்று யாருமின்றி தனியா அல்லாடிக் கொண்டிருந்தவருடன் யாஷ் இயல்பாய் பொருந்தி நின்றாள்.

வாணியுடன் இருக்கும் பொழுது சவிதாவுடன் இருப்பது போலொரு இயல்பான எண்ணம் தான் பெண்ணின் மனதை வியாபிக்கும். வாணி இயல்பிலே சற்று கலகலப்பானவராகி போக, அவ்வப்பொழுது மகனை சீண்டி வம்பிலுத்து துணைக்கு மருமகளையும் அழைத்துக் கொள்வார். அவரும் நவீனும் சந்தித்து கொள்ளும் கணங்களில் யாஷ் தான் கண்களில் நீர் வருமளவிற்கு புன்னகையுடன் அமர்ந்திருப்பாள். "நீயும் வாயேன் யாஷ், இந்த பையனை என்னனு கேளு" என்று அவளையும் உடன் துணைக்கு அழைக்க, 'ஆத்தாடி, சும்மாவே என்னை வைச்சு செய்வான். இவங்க வேற பாயிண்ட் எடுத்து கோர்த்து விட பார்க்கிறாங்களே!' என்ற ரீதியில் அமர்ந்திருப்பவளை நோக்கி, 'வாயை திறந்து தான் பாரேன்' என்று பார்வை கொடுத்து அத்தனை கெத்தாக அசட்டையோடு அமர்ந்திருப்பான் இதழ் வளைத்து. தாயை நோக்கி வேறு, 'எங்கு எனக்கெதிராக அவளை ஒரு வார்த்தை பேச வைங்களேன்' என்று சவாலே கொடுப்பான் மந்தகாச புன்னகையுடன். வாணி தான், "போங்கடா டேய்..ம்கும், உனக்கு ஏத்த பொண்ணா பார்த்தியா இல்ல அவளை இப்படி ட்ரெய்ன் பண்ணி வைச்சிருக்கியா?" என்று ஆராய்ச்சியாய் கேட்டு மகனை செல்லமாக முறைப்பார். யாஷ், 'ம்க்கும்...எப்பயுமே சிரிச்சு பேசுற உங்களுக்கு இப்படியொரு சிடு மூஞ்சி பையனா?' என்று வாணியை நோக்கி பார்வை கொடுப்பதுண்டு. புரிந்து கொண்டவர், "அதான் யாஷ்ம்மா நானும் நிறைய நாள் யோசிச்சிருக்கேன். உங்க மாமாக்கிட்ட கூட கேட்டேன் டெலிவரி அப்ப அடுத்த பெட் குழந்தையை மாத்தி தூக்கிட்டு வந்திட்டீங்களானு" என்பவரோடு இணைந்து யாஷ் அடக்க முடியாது புன்னகைக்க நவீன் தான் இருவரையும் தீயாய் முறைப்பான்.


நவீன், முன்பை போல் வெளியில் சுற்றுவதில்லை. அதாவது அறவே இல்லை என்று கூறிட இயலாது அவ்வப்பொழுது அதுவும் யாஷ்வியுடன் எங்காவது பறந்து விடுவான். கடந்த மாதம் கூட ரிதன் வீட்டிற்கு சென்று பத்து நாட்கள் தங்கியிருந்து வந்திருந்தனர்.



குளம்பிக்கு பின்பு அவனுடன் சிறிது நேர நடைபயிற்சி செல்வாள். அவன் கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டான். யாஷ் கூட அலுத்து சலித்துக் கொண்டதுண்டு. ஆனால் நவீன் கெட்டியாக பிடித்து இழுத்துக் கொண்டான். உடற்பயிற்சி, கூடைப்பந்து, கைப்பந்து என்று அவனுடைய பழக்க வழக்கமெல்லாம் இப்பொழுது அவளுக்கும் தொற்றிக் கொண்டிருந்தது. ஆம், எவ்வளவு நேரம் தான் வெறும் பார்வையாளராய் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது என்று களம் இறங்கி விடுவாள்!.. தெரியாததை நவீன மெதுமெதுவாக கற்றுக் கொடுத்தான். அலுவலகத்தில் கழியும் பொழுதுகளை தவிர பாவையின் நேரமெல்லாம் நவீனின் வசமாகி போனது. மாதத்தில் இரண்டொரு நாள் ஷமீயை காண பறந்து விடுவாள். தன்னை பார்த்தவுடன் ஆர்பரிப்புடன் கால்களைக்கட்டிக் கொள்ளும் முயல்குட்டி மீது நவீனுக்கும் இனம்புரியாத பிரியமொன்று உண்டு. அவர்கள் இருவரும் இணைந்து விட்டால் யாஷ் பாடு தான் சற்று திண்டாட்டமாகி போகும். ஆம், ஷமீ வேறு யாஷ் மடியில் அமர்ந்து கழுத்தை கட்டிக் கொண்டு நவீனை அருகில் விடாது உரிமை போர் செய்து வம்பிலுக்க அவனோ ஷமீயை பிடிக்கிறேன் என்ற பெயரில் யாஷை உரசி அவள் மேல் விழுந்து என்று உருண்டு புரண்டு இருவரும் செய்யும் அட்டகாசத்தில் யாஷ் தலை தெறிக்க தான் ஓடுவாள் இருவரின் கூட்டணியைக் கண்டு.



நவீனுக்கு இன்னுமே ஆச்சரியம் விலகாத பாவம் தான், எப்படி தன்னுடன் இத்தனை இறுக்கமாக பிணைந்து போனாள் பெண் என்று!. நவீனின் இலக்கில்லா தேடல்கள் சற்றேனும் மட்டுப்பட்டிருந்தது பாவையின் வருகைக்கு பின். யாஷின் அனுமதியின்றி ஆடவனின் அணுவும் அசையாது என்றொரு நிலை! நான் எவ்வாறு இப்படி அடங்கி செல்கிறேன் இவளிடம் மட்டும், அவளால் உண்மையிலுமே என்னை கட்டுப்படுத்த முடிகிறதா? தன்னையும் அதட்டி உருட்டி மிரட்ட ஒரு ஆள்..ம்ம், சிலிர்த்து தான் போனான் தன்னைக் குறித்து எண்ணியே. பாவையின் பேச்சை கேட்கிறான் கேட்கவில்லை என்பதை விட தன்னை அடக்கி பேதை லாவகமாக கையாள முனைவதே ஆடவனுக்கொரு பூரிப்பு. பிடித்தது பெண்ணின் மீது பித்து தான்! தீரவே விரும்பாது காதல் பித்து...! நவீனின் அசைவுகள் அவளுக்கெப்படி அத்துப்படியோ அதே போல் இப்பொழுது யாஷின் அசைவுகள் ஆடவனுக்கு அத்துப்படியாகி போனது. எந்த நேரத்தில் எண்ண மாதிரி சிந்திப்பாள் என்று கூட யூகிக்க கற்றுக் கொண்டான்.



"பார்த்து கவனமா போய்ட்டு வாங்க, ரீச்சானதும் கால் பண்ணனும். இவன் நான் சொல்றதை கேட்க மாட்டான் எனக்கு தெரியும். ஆனா நீ அங்க போனதும் எனக்கு கூப்பிடணும். எல்லாத்தையும் எடுத்து வைச்சுக்கிட்டியா?" என்று நெற்றியை தட்டி ஒவ்வொன்றாக நினைவு படுத்தி கூறியபடி மற்றொரு கையால் மருமகளை அணைத்து பிடித்திருந்தார் வாணி. மகிழுந்தில் அமர்ந்திருந்த நவீன் ஒலிப்பானை விடாது அழுத்தி தாயை முறைத்துக் கொண்டிருந்தான். "இந்த பையன் இருக்கானே, அவசரத்துக்கு பொறந்தவனா இருப்பான் போல!" என்று வாய் விட்டு வாணி புலம்பியதில் பொங்கி வரும் புன்னகையை யாஷால் அடக்க முடியவில்லை. மேலும் இரண்டு நிமிடம் அவளை பிடித்து வைத்து மகனை வெறுப்பேற்றியே பின்பே யாஷ்விக்கு அனுமதியளிக்க அவர்களை பார்த்தப்படி நின்றிருந்த ராகவனிடம் தலையைசைத்து விட்டு கிளம்பியிருந்தாள்.


மகிழுந்தில் ஏறியும் வாணியின் வார்த்தையில் அவளுக்கு அப்படியொரு புன்னகை ஜனித்தது. இதில் அவ்வப்பொழுது பார்வை வேறு நவீனையே தழுவ, "எதுக்குடி சிரிக்கிற நீ? என்ன சொன்னாங்க அம்மா?" என்றான் புருவமுயர்த்தி. 'ஒண்ணுமில்லை' என்று இருபுறமும் தலையசைத்தவள் புன்னகையை விழுங்க முயல, "நான் கட்டிப்பிடிச்சதை விட எங்கம்மா தான் உன்னை அதிகமா கட்டிப்பிடிச்சிருப்பாங்க போல!" என்று முறைப்பும் சிரிப்புமாய் சற்று முன் நடந்த சம்பாஷனைகளை நினைவில் கொண்டு கூறியவன் கைகள் அவளை தன்னிடம் இழுத்துக் கொள்ள அவனின் வார்த்தையில் மேலும் இதழ் விரிய, "வேறொண்ணுமில்லை நவீன், இது பேர் ஜெலஸ்" என்று அவனின் கைகளை தள்ளி விட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.


"இருந்துட்டு போகட்டும், தப்பில்லை தப்பில்லை" என்று காலரை தூக்கி விட்டு தலையை கோதியவன் பாவனையில், 'நவீனே நீயா இது?' என்று பார்த்திருந்தாள். ஆம், அவளே ஆடவன் பின்பு சுற்றிய பொழுதும் கண்டும் காணாமல் அசட்டையாக சீண்டிக் கொண்டே சுற்றியவன் தானே இவன்!...


"ம்கும்..என்ன பார்வை இது?" என்றவன் அசட்டையாக இதழை வளைக்க அதில் லேசாக கடுப்பாகி போனவள், "ம்ப்ச்...எத்தனை தடவை இப்படி பண்ணாதீங்கனு சொல்றது நவீன்" என்றவள் தன் தோளை ஆக்கிரமித்திருந்த அவனின் கை விரல்களை பிடித்து முன்னால் இழுத்து பற்களுக்கிடையில் லேசாக அழுத்தி சிறை வைத்துக் கொண்டாள்.


"ஸ்ஸ்...வலிக்குது டி, ராட்சசி. இது என்ன ஸ்நாக்ஸா..? ஷமீக் கூட சேரதனு எத்தனை தடவை சொல்றது" என்றவன் அவளின் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்துக் விட்டான் விளையாட்டாய் நெறிப்பது போல். கடந்த முறை இவர்கள் ஊருக்கு சென்ற பொழுது ஷமீ பள்ளியிலிருந்து அழைப்பு வந்திருந்தது. கோபத்தில் ஏதோ வாக்குவாதத்தில் அருகிலிருந்த மாணவனின் கையை கடித்து விட்டாள் என்று. ரூபாவும் மனோவும் அவசர வேலையின் பொருட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட யாஷூம் நவீனும் தான் சென்று அவளின் ஆசிரியரை பார்த்து சமாதானம் செய்து காது தீய பரிசுகளை வாங்கி வீடு வந்திருந்தனர். அதை கொண்டே நவீன் ஷமீயை சீண்டியிருக்க கடுப்பில் தன் முன் நீண்டிருந்த அவனது இரண்டு விரல்களையும் பதம் பார்த்து அனுப்பி வைத்திருந்தாள் முயல்குட்டி. "ஷ்ஷ்..ஷமீ" என்று அதட்டிய நவீன் துள்ளி குதித்து அவளிடம் போராடி விடுபட்டதை இப்பொழுது நினைத்தாலும் யாஷால் புன்னகைப்பதை நிறுத்த இயலாது. "இதெல்லாம் உங்களுக்கு தேவையா நவீன்? போனமா வேலைய பார்த்தமானு இல்லாம அவக் கூட யார் வம்பு பேச சொன்னது உங்களை. எல்லாருமே யாஷ் மாதிரி அப்பாவியா இருப்பாங்களா நீங்க போட்டு படுத்திறதுக்கெல்லாம்" என்று வேறு கூற, இடுப்பில் கையூன்றி முறைத்து, "அதெல்லாம் சரி, யார் நீ அப்பாவியா.. நான் உன்னை படுத்துறனா?"என்றான் புன்னகை மாறா பாவத்துடன்.


"இல்லையா பின்ன, நேத்து நைட் கூட தூங்க விடாம....அப்படியே அங்க இங்க எல்லாம் கடிச்சு வைச்சு" என்று கழுத்து வளைவு, கன்னம் என்று ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி இழுத்தவளின் பாவனையிலும் கண் சிமிட்டலிலும், 'அடிப்பாவி' என்று அதிர்ந்தவன் அவசரமாய் அவளின் இதழை மூடியிருந்தான் அடுத்து பேச விடாது. அவனது கையை தட்டி விட்டவள் குறும்புடன் கண் சிமிட்டி அவனின் செயல்களை விவரிக்க துவங்க, "யாஷ்..ஹேய் என்னடி பண்ணிட்டு இருக்க நீ?" என்று பின்னந்தலையை கோதியபடி கீழுதட்டை அழுத்தி கடித்துக் கொண்டவனுக்கு அவளது பேச்சில் வெட்கம் வேறு வந்து தொலைத்தது. முகத்தை ஒரு கைகளால் மூடியப்படி அவளின் முன் சிவந்து போய் நின்றவனை ஒரு சுற்று சுற்றி வந்து, "வாவ் நவீன் நீங்க வெக்கப்படுறீங்க, இது கூட நல்லா தான் இருக்கு" என்று சிவந்து போன அவனின காது மடல்களை வருடி மேலும் சீண்டியவளை அப்படியே கைகளில் அள்ளி தூக்கி இருந்தான். "அச்சோ! பயமா இருக்கு நவீன், கீழ இறக்குங்க, ப்ளீஸ்" என்று ஏறக்குறைய அறையே அதிரும் வண்ணம் கத்தியவளின் மீதி வார்த்தைகள் அவனிதழினுள்ளே சென்றிருந்தது லவகமாக. நினைவுகளில் சிலிர்த்து சிவந்தவளை கண்டு கொண்ட நவீனும் அவளின் கன்னங்களில் கோடிழுத்து வம்பு செய்ய அவனின் கையை தட்டி விட்டு, "நேரா பார்த்து ட்ரைவ் பண்ணுங்க நவீன்" என்று முணுமுணுத்திருந்தவள் ஆடவனின் புஜங்களில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அரைமணி நேர பயணத்தில் சீண்டல்களோடும் புன்னகையோடும் விமானநிலையத்தை வந்தடைந்திருந்தனர். நவீனின் நண்பர்கள் குடும்பத்துடன் கேரளாவிற்கு மலையேற்றத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்க யாஷோடு நவீனும் கிளம்பியிருந்தான்.





தொடரும்.....
 
Last edited by a moderator:
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Naveen yash ah nallavae train panni vachi tan pa avanuku yetha mathiri yae vani nalla vachi tease panraga naveen rombha paduthi irukan pola avangala
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Nalla mamiyar marumagal 😁😁naveen ku yash tha crt pa eppo naveen yash ka romba mari irukan 😊😊muyal kutty naveen combo Vera level tha 🤩🤩🤩Kerala going ya superr😌😌
 
Top