அத்தியாயம் 1:
அவனும் நானும் திங்களும் குளிரும்…
டெல்லியின் மத்திய பகுதியில் அமர்ந்திருந்தது அந்த உயர்நிலை பள்ளி.
எப்போதும் ஒரே போல சீருடை அணிந்து இருக்கும் மாணவர்கள் இன்று வண்ண வண்ண உடைகளில் பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்தனர்.
காரணம் அன்று பள்ளியின் ஆண்டுவிழா. பெற்றோர்கள் எல்லோரும் தங்களது பிள்ளையை அழாகாக அலங்கரித்து அழைத்து வந்திருந்தனர்.
பள்ளியின் அரங்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுமிருந்ததனர்.
எப்போதும் கண்டிப்பு காண்பிக்கும் ஆசிரியர்கள் கூட இன்று மாணவர்களிடம் இனிமையாக நடந்து கொள்ள மாணவர்களை கையில் பிடிக்க முடியவில்லை.
அந்த கூட்டத்தில் தான் ஜானவியும் அமர்ந்து இருந்தாள்.
“ம்மா என்னோட காஸ்டியூம் மேக்கப் எல்லாம் ஓகே தான?” என்று கேட்ட ஜீவியிடம் புன்னகையுடன்,
“ரொம்ப அழகா இருக்கடி செல்லம்” என்று மொழிந்தாள்.
“நிஜமாவா?” என்று மகள் விழிகளை விரிக்க,
“நிஜம்மா அப்படியே அப்சரஸ் மாதிரி இருக்க” என்று தாய் கூறியதும் இளையவளின் புன்னகை இமை நீண்டது.
“சரி டைம் ஆச்சு போ. டீச்சர் கூப்பிட போறாங்க” என்று ஜானவி கூற,
“ஹ்ம்ம் சரிம்மா. என்னோட பெர்மாமென்ஸ் வரும்போது பர்ஸ்ட் ரோல வந்து உட்காரும்மா” என்று மகள் விழிகளை சுருக்கி கூற,
“கண்டிப்பா உட்காட்றேன் செல்லம்” என்று மகளது கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
அதற்குள் ஆசிரியர் அழைப்பது கேட்க, “சரிம்மா மிஸ் கூப்பிட்றாங்க நான் போறேன்” என்றவள், “மறக்காம அழகா தெளிவா வீடியோ எடுத்திடும்மா. அத்தைக்கிட்ட காட்டணும்” என்றுவிட்டு நகர,
“ஹ்ம்ம் எடுத்து வைக்கிறேன். நீ நல்லா பண்ணு ஆல் தி பெஸ்ட்” என்று மகளுக்கு வாழ்த்து கூறிய ஜானு மேடையில் விழிகளை பதித்தாள்.
சிறப்பு விருந்தினர் வர விழா துவங்கியது.
முதலில் வரவேற்பு நடனம் பிறகு அடுத்தடுத்த நிகழ்ச்சி வர ஜானவி புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
“அடுத்தாக ஆறாம் வகுப்பு மாணவிகள் குழு நடனம்” என்று தொகுப்பாளர் அறிவிக்க,
ஜானவி பரபரப்பானாள். எழுந்து சென்று முதல் வரிசையில் இடம் இருக்கிறதா என தேட எல்லா இருக்கையும் நிரம்பி இருந்தது.
பின்னிருந்து பார்த்தால் நன்றாக தெரியாது என்று எண்ணியவள் முன்புறத்தில் ஓரமாக நின்று கொண்டாள்.
ஆறாம் வகுப்பு மாணவிகள் ஒவ்வொருவராக மேடை ஏற துவங்க ஜானு அலைபேசியை எடுத்து காணொளி எடுக்க தொடங்கினாள்.
மாணவிகள் அவர்களது இடத்தில் நின்றதும் பாடல் ஒலிக்கப்பட அவர்கள் ஆட துவங்கினர்.
ஜானவி விழிகள் ரசனையுடனும் சிரிப்புடனும் மகள் மீது படிந்தன.
டெல்லி வந்த இந்த இரண்டு வருடத்தில் மகள் வளர்ந்துவிட்டதாய் எண்ணம்.
தனது தோள் அளவிற்கு வளர்ந்துவிட்டாளே என்று சில சமயம் ஆச்சரியமாக இருக்கும்.
இப்போது மேடையில் நடனமாடும் சமயம் இன்னும் கொஞ்சம் உயரமாக தெரிந்தாள். அதுவும் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற தாவணி வகை உடை அவ்வளவு அழகாய் பொருந்தி போனது.
ஜானவியை போலவே விழிகளில் அவ்வளவு அபிநயம் பிடித்து பார்ப்பவர்களை கவர்ந்தாள் ஜீவிதா. மகளை நினைத்து பெருமை பொங்கி வழிந்தது. தன்னை போலவே மகளுக்கு நடனத்தில் ஆர்வம் இருப்பதில் ஜானவிக்கு ஏக மகிழ்ச்சி.
முழுதாக ஐந்து நிமிடம் ஓடிய பாடலுக்கு அனைவரும் ஒன்று போல எந்த சொதப்பல்கள் இன்றியும் ஆடி முடிக்க, அங்கே கரகோஷம் எழுந்தது.
தானும் சிரிப்புடன் கைகளை தட்டியவள் பழைய இடத்திற்கே வந்து அமர்ந்தாள்.
மேடையில் இருந்து இறங்கியதும், “ம்மா…” என்று தாயருகில் வந்தவள், “நல்லா ஆடுனேனா?” என்று ஆர்வமாக வினவினாள் ஜீவி.
“சூப்பரா ஆடுனடா தங்கம்” என்று ஜானவி மகளின் முகத்தை பிடித்து கூற,
“உண்மையாவா? எதுவும் சொதப்பலையே? எனக்கு ஸ்டேஜ்ல ஏறுனதும் லைட்டா பயம் வந்திடுச்சும்மா” என்றவள், “பேஸ்ல பயம் தெரிஞ்சதாம்மா?” என்று கவலையாக வினவினாள்.
“அதெல்லாம் எதுவுமே தெரியலைடா. நீ ரொம்ப நல்லா பெர்பார்ம் பண்ணடா” என்று மகளை பாராட்டிய ஜானு, “நீயே பாரு” என்று காணோளியை காண்பிக்க,
அதனை வாங்கி பார்த்தவள், “நல்லாதான் ஆடி இருக்கேன்மா” என்று இழுத்தாள்.
“ஹ்ம்ம் அப்புறம் என்ன?” என்று ஜானு மகளை காண,
“இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்லா பர்பார்ம் பண்ணி இருக்கலாம்” என்று ஜீவி கவலைப்பட்டாள்.
“இது பர்ஸ்ட் டைம் தான? நெக்ஸ்ட் டைம் சோலோ பர்பாமென்ஸ் பண்ணு” என்று ஜானு கூற,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தபடி காணொளியை மீண்டும் பார்த்தவள், “நான் சென்டர்ல நின்னு இருக்கலாம். சைட்ல நின்னதால நல்லா ஃபோகஸ் ஆகலை” என்று வருந்தினாள்.
“விடுடா தங்கம். நெக்ஸ்ட் டைம் சோலோ பெர்பாமென்ஸ்ல புல் ஃபோகஸ் நீ தான்” என்று ஜானு தேற்ற,
“ஹ்ம்ம்” என்று மனமே இல்லாமல் ஜீவி தலையசைத்தாள்.
“சரி ஸ்டேஜை கவனி. அனி பெர்பாமென்ஸ் வர போகுது” என்று ஜானு கூற,
“ஹ்ம்ம் இன்னும் அத்தை வரலையா?” என்று ஜீவி வினா தொடுத்தாள்.
“வந்துட்டே இருக்கேன்னு சொன்னா” என்ற ஜானு அலைபேசியை கையில் எடுக்க,
கனிமொழி உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
ஜீவி, “ம்மா அத்தை வந்துட்டாங்க” என்று காண்பிக்க,
“வந்துட்டாளா?” என்று ஜானு நிமிர்ந்தாள்.
“லேட் ஆகிடுச்சு” என்றபடி வந்து அமர்ந்தாள் கனி.
வந்த வேகத்தில் அவளுக்கு மூச்சு வாங்க, “தண்ணீயை குடி. எதுக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வந்த?” என்று கடிந்தபடி தண்ணீர் போத்தலை நீட்டினாள் ஜானவி.
“ஜீவி பெர்பாமென்ஸ் பாக்க தான் ஓடி வந்தேன்” என்று நீரை அருந்தியவள் கூற,
“ஹ்ம்ம் நல்லா வந்த அவளோடது முடிஞ்சது” என்று ஜானு மொழிந்தாள்.
“முடிஞ்சதா?” என்று கனி அதிர,
“ஆமாத்தை இப்போதான் ஆடி முடிச்சேன். உங்களுக்கு காட்டதான் வீடியோ எடுத்து வச்சிருக்கோம்” என்று ஜீவி பதில் கூற,
“எவ்ளோ வேகமா வந்தும் பாக்க முடியாம போய்டுச்சே” என்று கனி வருந்த,
“சரி விடு நெக்ஸ்ட் டைம் பாக்கலாம்” என்று ஜானு தேற்றினாள்.
ஜீவி, “அத்தை அனி அப்புறம் தேஜ் ரெண்டு பேரோட பெர்பாமென்ஸ் வர போகுது ஸ்டேஜை கவனிங்க” என்று கூறியதும் மற்ற இருவரும் மேடையில் கண்ணை வைத்தனர். மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நடன நிகழ்ச்சி துவங்கியது.
“அத்தை அனி சென்டர்ல நிக்கிறான்” என்று ஜீவி மொழிய,
“ஆமா தேஜ் செகெண்ட் லைன்ல இருக்கான்” என்ற கனி மகனை ரசித்தாள். அவர்கள் நடனம் முடிந்ததும் கனியின் மகன் அனிருத்தும் அவனது தோழன் தேஜூம் இவர்களிடத்தில் தான் வந்தனர்.
“ரெண்டு பேரும் சூப்பரா ஆடுனிங்க” என்று கனி சிரிப்புடன் அணைத்து கொண்டாள். இளையவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
அடுத்தடுத்து நிகழ்ச்சி சிறப்பாக முடிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கையால் பரிசு கொடுக்க துவங்கினார்கள்.
இளையவர் மூவருமே சில போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தனர். ஜீவி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றிருக்க தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.
ஜானவிக்கு பெருமையில் முகம் விகசித்தது.
முகம் முழுவதும் நிறைந்த புன்னகையுடன் புகைப்படம் எடுத்து கொண்டாள்.
அடுத்து அனிருத் மற்றும் தேஜ் இருவரும் பரிசை பெற்று கொண்டனர்.
சிறுவர்கள் இருவரும், “ம்மா என் ப்ரைஸ் அழகா இருக்குல” என்று ஆர்ப்பரித்தனர்.
மாலை நெருங்கும் வேளை நிகழ்ச்சி முடிய மூவரையும் நிற்க வைத்து புகைகப்படத்தை பிடித்து கொண்டவர்கள் மகிழ்வுடன் வீட்டை நோக்கி சென்றனர்.
ஜானு ஜீவாவை பிரிந்து வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன.
முதலில் அவனை காணாது அவனது குரல் கேட்காது மிகவும் தவித்து போனாள்.
வழக்கம் போல இரவெல்லாம் கண்ணீரில் கழிந்தது.
அவனுக்கு நினைவே வராமல் இருந்திருக்கலாம் என்றெல்லாம் எண்ணி அழுது கரைந்தாள்.
பின்னர் காலப்போக்கில் இது தான் இந்த பிறவியில் தனக்கு விதிக்கப்பட்டுள்ளது என்று மனதை ஒருவாறு தேற்றி கொண்டாள்.
ஜானு இப்போது அவளுடைய வீட்டில் தான் வசிக்கிறாள். கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து ஒரு வாரத்தில் வெளியேறியவளுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை.
பல்வேறு வகையில் சிந்தித்து டெல்லி வந்துவிட்டாள். நரேன் கூட தன்னுடனே கோவையில் இருக்குமாறு கூற மறுத்து அவனது நினைவுகளை சுமந்த இடத்திற்கு வந்துவிட்டாள்.
இத்தனை நாட்கள் அவனருகே வாழ்ந்தவள் இப்போது அவனது நினைவுகளுடன் மீதி காலத்தை கழிக்க முடிவு செய்திருந்தாள்.
இத்தனை வருடங்கள் தங்களுடன் தொடர்பில் இல்லாது போனாலும் அவளுடைய நட்புக்கள் அவளது நிலை அறிந்து அரவணைத்து கொண்டனர்.
அனிகா மற்றும் கீர்த்தி வெளியூரில் திருமணம் செய்து வசிக்க கனிமொழி மட்டும் தாய் வீட்டருகே வசிக்கிறாள்.
கனிமொழி தான் ஜானவிக்கு நிறைய ஆறுதல் அளித்தாள். அவள் துவளும் சமயம் தாங்கி கொண்டாள். கனியின் கணவன் பிரகாஷ் கூட ஜானவிக்கு உறுதுணையாக இருந்தான்.
ஒருவழியாக அவனை பிரிந்த துக்கத்தில் இருந்து மீண்டு வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
சிந்தனையுடன் வீட்டை அடைந்திருக்க, தேஜ், “ஆன்ட்டி நான் உங்க கூட வர்றேன்” என்று ஜானுவின் கையை பிடிக்க,
“வாடா தங்கம்” என்ற ஜானவி மகளை மற்றொரு கையில் பிடித்து கொண்டாள்.
கனி, “சரிடி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றவாறு தனது வீட்டிற்குள் நுழைய,
பக்கத்து வீட்டை திறந்து உள்ளே வந்த ஜானு தொலைக்காட்சியை ஓடவிட்டு, “ரெண்டு பேரும் சமத்தா டி.விய பாருங்க நான் ஸ்னாக்ஸ் கொண்டு வர்றேன்” என்று சமையலறை சென்றாள்.
அவர்களுக்கு உண்ண கொடுத்துவிட்டு உடை மாற்றி வந்து தேநீரை தயாரித்தவள் பால்கனியில் அமர்ந்து அருந்த துவங்கினாள்.
ஒவ்வொரு முறை பால்கனிக்கு வரும் சமயமும் ஜீவாவை முதல் முறையாக பார்த்தது நினைவில் நழுவி செல்லும்.
அலைபேசியில் மகளை இன்று எடுத்த புகைப்படம்தான் இருந்தது. பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
கூடவே தன்னவனது நினைவும் அவன் பார்த்தால் எவ்வளவு மகிழ்வான் என்று கற்பனை நீண்டது.
பிறகு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று புரிய அமைதியாக எழுந்து வந்து இரவு சமையலை கவனித்தாள்.
இருவருக்கும் பூரி மிகவும் பிடிக்கும் என்பதால் பூரி சுட்டு உருளை கிழங்கு குருமாவை வைத்து முடிக்க நேரம் எட்டாகியிருந்தது.
இடையில் பிள்ளைகள் இருவரையும் வீட்டுப்பாடம் செய்ய கூறியிருந்தாள்.
“ரெண்டு பேரும் ஹோம் வொர்க் முடிச்சிட்டிங்களா?” என்று ஜானவி குரல் கொடுக்க,
“ஹ்ம்ம் முடிச்சிட்டோம்” என்று இருவரும் ஒரு சேர கூறினர்.
“நான் செக் பண்றேன்” என்றவள் முதலில் ஜீவியின் நோட்டை வாங்கி சரிபார்த்தாள்.
பிறகு தேஜிடம், “உன்னோடது கொடு” என்க,
“இந்தாங்க” என்றவனது மற்றொரு கையில் வாங்கிய பரிசு இருந்தது.
அதனை கண்டு புன்னகை எழ, “அதை கையிலே வச்சிட்டு சுத்துறீயா நீ?” என்று வினவ,
“ஆமா ஆன்ட்டி அப்பா வந்ததும் அவர்க்கிட்ட காட்டணும் நான் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குனத” என்று விழி விரித்து கூற,
“நானும் கேட்டேன்மா ஷெல்ப்ல வைக்கவான்னு இவன் தரமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று ஜீவியும் தன்பங்கிற்கு மொழிந்தாள்.
“கொஞ்ச நேரம் கீழ வைடா கை வலிக்க போகுது” என்று ஜானவி சிரிப்புடன் கூற,
“ம்ஹூம் அப்பாட்ட காட்டிட்டு தான் வைப்பேன்” என்று தேஜ் விழிகளை மூடி மறுக்க, இவளுக்கு புன்னகையை அடக்க முடியவில்லை.
லேசான சிரிப்புடன், “சரிடா நீ உன் அப்பா வந்ததும் காட்டிட்டே கீழ வை” என்றவள் அவனது நோட்டை சரிப்பார்த்தாள்.
இருவரும் எல்லாம் சரியாக எழுதியிருந்தனர்.
“ஹ்ம்ம் குட் ரெண்டு பேரும் கரெக்டா முடிச்சிட்டிங்க” என்று பாராட்டியவள், “டின்னர் சாப்பிட்றீங்களா?” என்று வினவ,
“சரி” என்று இருவரும் தலையசைத்தனர்.
“ரெண்டு பேரும் எல்லாத்தையும் பேக்ல எடுத்து வச்சிட்டு சாப்பிட வாங்க” என்றவள் உணவை எடுக்க செல்ல,
“என்ன டின்னர் மா?” என்று ஜீவி கேள்வி எழுப்பினாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பூரி” என்றதும் தான் தாமதம்,
“ஹை…” என்று குதூகலித்த இருவரும் கையை கழுவிவிட்டு வந்து வேகமாய் அமர, இவள் புன்னகையுடன் உணவை எடுத்து வந்து வைத்தாள். அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
“நீங்க சாப்பிடுங்க” என்றவள் கதவை திறக்க, “அத்தை…” என்று சிரிப்புடன் கையில் கிண்ணத்துடன் நின்றிருந்தான் அனிருத்.
“வா அனி” என்றவள் உள்ளே அழைக்க,
“அம்மா கேசரி கொடுத்துவிட்டாங்க” என்று கையில் இருந்ததை நீட்டினான்.
“ப்ரைஸ் வாங்குனதுக்கு கேசரியா?” என்று சிரிப்புடன் வாங்கி கொண்டவள்,
“பூரி சுட்டு இருக்கேன் சாப்பிட்றீயா?” என்று வினவ,
“அம்மா தோசை சுட்டு தர்றேன்னு சொன்னாங்க” என்று அவன் இழுத்தான்.
“உங்க அம்மாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன் நீ வா” என்றவள் அவனுக்கு பூரியை வைத்து கொடுக்க,
மீண்டும் அழைப்பு மணி அழைத்தது.
எழுந்து சென்று பார்க்க ஆதவன் நின்று இருந்தான். ஆதவ் தேஜின் தந்தை எதிர்வீட்டில் மகனோடு வசிக்கிறான்.
“வாங்க” என்று ஜானு இயம்ப, மென்னகைத்தவன், “தேஜ்?” என்று கேட்டான்.
“அவன் சாப்பிட்டு இருக்கான். சாப்பிட்டதும் அனுப்புறேன்” என்று ஜானு கூற,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவனிடத்தில் மெல்லிய சங்கடம்.
தினமும் விரைவாக வர தான் முயற்சிக்கிறான். ஆனால் வேலை இழுத்து கொள்கிறது.
அடிக்கடி மகன் மற்றவர் வீட்டில் உண்ணும் படி ஆகிறது என்று மனதுக்குள் வருத்தம்.
அவனது முகம் கண்டு அகத்தை உணர்ந்தவள், “நீங்க சங்கடப்பட்ற அளவுக்கு எதுவும் இல்லை. எம்பொண்ணுக்கு சமைக்கும் போது கொஞ்சம் சேர்த்து செய்யிறேன் அவ்ளோதான்” என்றவள்,
“தேஜ் சாப்பிட்டியா?” என்று குரல் கொடுத்தாள்.
“ஹ்ம்ம் சாப்பிட்டேன்” என்றான் அவன்.
“அப்பா வந்துட்டாங்க வா” என்று ஜானு கூற,
“இதோ வர்றேன்” என்றவள் கையில் பரிசுடன் பையை மாட்டி கொண்டு,
“அப்பா நான் ப்ரைஸ் வாங்கி இருக்கேன்” என்று சிரிப்புடன் தந்தையை கட்டி கொண்டான்.
ஜானவியிடம் தலையசைப்பை கொடுத்தவன், “என்னோட லிட்டில் சாம்ப் ப்ரைஸ் வாங்கி இருக்கிங்களா?” என்று சிரிப்புடன் கேட்டவாறு தனது வீட்டிற்கு செல்ல, அவர்களை சிரிப்புடன் பார்த்தாள் ஜானவி.
“என்னடி வேடிக்கை பாத்திட்டு இருக்க” என்றபடி கனி வர,
“அவரை பாத்து கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அவர் வொய்பை கடவுள் இவ்ளோ சீக்கிரம் கூப்டிருக்க வேணாம்” என்று ஜானு வருந்த,
தன்னுடைய நிலையே நன்றாக இல்லாத போதும் மற்றவருக்காக வருந்தும் தோழியின் நல்லெண்ணத்தை உணர்ந்து புன்னகைத்தவள், “விதில எப்படி இருக்கோ அப்படிதான் நடக்கும்டி” என்றாள்.
சிறிது நேரம் கனியுடன் பேசியவள் பிறகு இரவுணவை முடித்துவிட்டு மகளுடன் படுக்கையில் விழுந்தாள்.
ஜீவி படுத்தவுடன் உறங்கிவிட ஜானுவின் விழிகள் மகளிடத்தில் நிலைத்தது.
மகள் வளர வளர தனக்கு பொறுப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது என்று எண்ணம் வர விரல்கள் ஜீவியை வருடின. ஜீவாவை வருடியது போல உள்ளுக்குள் சிலிர்ப்பு இழையோடியது.
என் வாழ்
வை புதுப்பிக்க வந்தவள் என்று வழக்கம் போல மகளை ரசித்தவள் அலைபேசி புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.
இந்நேரம் ஜீவாவும் தன் வாழ்வில் இருந்தால் எத்தனை மகிழ்ந்திருப்பான். மகளை தூக்கி வைத்து கொண்டாடி இருந்திருப்பான் என்று எண்ணியவள் அவன் நினைவுகளுடனே உறங்கி போனாள்…