• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 1 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் 1



அடர் கபில வண்ணத்தில் சற்று தளர்வான மேற்சட்டையும், சாம்பல் வண்ணத்தில் இறுக்கி பிடித்த காற்சட்டையுடன் உயர்த்தி போடப்பட்ட போனி டைல் என்று நவீனத்தில் நின்றிருந்தவளின் விழிகள் மின்தூக்கியை ஆராய்ந்து அபிநயம் படித்துக் கொண்டிருக்க உதடுகளோ தன் அருகில் நின்றிருந்த முயல்குட்டி கேட்கும் கேள்விகளுக்கு பதிலை முணுமுணுத்துக் கொண்டிருத்தது. அவள் யாஷ்வி, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவள்.

இரண்டு நிமிடங்களிலிருந்து காத்திருப்பு ஐந்து நிமிடங்களாக மாற அலைபேசி வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. 'ப்ம்ச்..' என்று மின்தூக்கி மீதான சலிப்புடன் அழைப்பை ஏற்று காதில் பொருத்த, "யாஷ், எங்க இருக்க நீ?" என்றான் மனோ, மனோகரன்.

"ண்ணா, லிப்ட்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றவள் குரல் மெதுவாக ஒலித்தாலும் அந்த நிசப்த இடத்தை நிரப்பிக் கொண்டிருக்க, "அத்தை" என்று அவ்வப்பொழுது அவளின் மேற்சட்டை, கை விரல்கள், தோளில் தொங்கியிருந்த பை என்று ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து தொந்தரவு செய்துகொண்டிருந்தது அவளின் இடுப்பிற்கும் குறைவான உயரத்தில் நின்றிருந்த அந்த நான்கு வயது முயல்குட்டி, ஷமீரா. மனோவின் புதல்வி. "ஷ்ஷ்..ஷமீ, கொஞ்சம் அமைதியா இருடி" என்று அலைபேசியை காதை விட்டு தள்ளி வைத்து அந்த குட்டியை பார்த்து தன் விழிகளை உருட்டி மிரட்டிய யாஷ்வி மீண்டும் அண்ணனிடம் உரையாடலை துவங்கினாள்.

"லிப்ட்ல ப்ராப்ளமாம் யாஷ், ஆப்டர்நூன் மேல தான சரி செய்வாங்களாம். நீங்க ஸ்டெப்ஸ்ல இறங்கி வாங்க" என்ற மனோ அழைப்பை துண்டிக்க யாஷ்வியின் விழிகள் தன் அருகிலிருந்த முயல்குட்டியை காணாது தேடியது.

கன்னத்தில் கைக்கொடுத்து முகத்தை தூக்கி வைத்து சற்று தள்ளியிருந்த படியில் அமர்ந்திருந்தாள், க்கும்... யாஷ்வியின் மிரட்டலுக்கான எதிர்வினையாம். பாவையின் இதழில் சட்டென்று புன்னகை தவழ, "ஹோய், வா போகலாம். டையமாகிடுச்சு" என்று முயல்குட்டியின் முன் இடுப்பில் கையூன்றி நக்கலாக நிற்க, அதுவோ தன் முகத்தை மற்றையபுறம் திருப்பிக் கொள்ள யாஷின் புன்னகை மேலும் விரிந்தது.


"மேடம்க்கு கோபமா? எத்தனை தடவை சொல்லி இருக்கேன். கால் பேசும் போது டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு" என்றவளின் பேச்சை காதில் வாங்காது உதட்டை பிதுக்கி அமர்ந்திருந்தது அந்த சின்னகுட்டி...இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த யாஷ், "ஷமீ, இப்ப நீ வந்தா அத்தை உனக்கு மம்மிக்கு தெரியாம ஐஸ்கீரிம் வாங்கி தரேன். வேகமா வாடா, டாடி வேற வெயிட் பண்றாங்க, கம் பாஸ்ட்" என்று அவளின் இடுப்பில் கைக்கொடுத்து தூக்கி விட முனைய, வேகமாக அந்த முயல் குட்டி தன் பிஞ்சு கரங்ளை நீட்டியது, "ப்ர்மிஸா வாங்கி தருவீங்களா?" என்று உறுதி கேட்டு. "யெஸ், ப்ராமிஸ் ப்ராமிஸ்" என்று இதழுக்குள் விழுங்கிய புன்னகையுடன் அந்த குட்டி கையை உரசி அதை அழுத்தி பற்றி எழுப்பி விட, "சரி அப்படியே என்னை தூக்கிக்கோங்களேன்" என்று நடக்க சோம்பேறிதனம் கொண்டு அந்த முயல் கள்ளப்புன்னகையுடன் நின்றிருந்தது.


'இது வேறயா..?' என்று இடுப்பில் கை வைத்து முறைத்த யாஷ்வியை அதற்கு மேல் விட்டு வைக்கும் எண்ணமின்றி மனோ மீண்டும் அழைத்தான். அவனுக்கு அவனுடைய அவசரம், அவர்களை கடைவீதிக்கு அழைத்துச் சென்று, வீட்டில் விட்டு மீண்டும் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய கூட்டத்திற்கு செல்ல வேண்டும். ஆக, மீண்டும் அழைத்திருந்தான் தங்கைக்கு.


'ஷ்ஷ்...' என்று நெற்றியை தேய்த்தவள், "நீ ஸ்டெப்ஸ்ல்ல நடந்து வா, கீழ போனத்துக்கு அப்புறம் அத்தை உன்னை தூக்கிக்றேன்" என்று உறுதி மொழி கொடுத்தாலும் பாதி படிகளில் அவளை கையில் ஏந்தியிருந்தாள் தான். கிட்டதட்ட எழுபதையும் தாண்டியிருந்த படிகள், ஏழாவது மாடியில் இவர்களின் வசிப்பிடம். இருபத்தி இரண்டு வயது யுவதி அவளுக்கே மூச்சு பலமாக வாங்க அவளின் இழுப்பிற்கேற்ப நகர்ந்த அந்த முயல்குட்டியின் நிலை சற்று பரிதாபமானதாகவே இருந்தது. ஆக, அதுவோ இப்பொழுது சற்று ஒய்யாரமாகவே யாஷ்வியின் இடுப்பில் அமர்ந்திருந்தது.


கடைசி படியில் நின்றவளுக்கு நன்றாகவே மூச்சு வாங்க சில ஷணங்கள் அப்படியே நின்று விட்டாள். மெதுவாக வேகமாக என மூச்சை இழுத்து வெளியேற்றி என்று ஒருவாறு தன்னை சமன் செய்த யாஷ்வியின் விழிகள் அவர்களுக்கு சற்று தள்ளியிருந்த மின்தூக்கியிலே நிலைக்க கலங்கியது அவளையும் அறியாமலே! ஏனோ மனதில் ஒரு அபஸ்வரம் அதை காணும் நொடிகளில் எல்லாம். "எங்கே? ஏன்? எப்படி?" இன்னும் நிறைய வினாக்கள் மூளையை ஆக்கிரமித்து விடும் அவனில் எண்ணங்கள் நீந்திடும் கணங்களில். ஆக, பாதித்திருந்தான் மேலோட்டமாக அல்ல ஆழமாகவே. மூச்சு விடவே சற்று சிரமமாக இருப்பது போல் உணர சட்டென்று முகத்தை மற்றையபுறம் திருப்பிக் கொண்டாள் பெண்.



இதோ இங்கு தானே இப்படியான காலைப்பொழுதில் தானே அவனை முதன் முதலில் கண்டு கொண்டாள். ஆம், ஆகி விட்டது ஆறு மாதங்கள் அவன் தன் வசிப்பிடத்தை மாற்றி. ஆனால் அவளால் தான் இன்னும் அவனிலிருந்து மீள முடியவில்லை. 'இன்னும் அவனை கண்டு விட்டால் தன்னையும் மீறி அதிர்வுறும் விழிகள் மாறியிருக்குமோ! இல்லை வாய்ப்பில்லை' என்றெல்லாம் அவளின் எண்ணக்கற்றைகள் பிரிகையடைந்து மூளையை மரத்து போக செய்ய தேங்கி நின்ற இமையோர விழிநீரில் அவனின் பிம்பம் எதிரொலிப்பதை போலொரு மாயை. பிம்பம் மட்டுமல்ல அவனுமே பேதைக்கு தற்பொழுது மாயையாகி போனான் என்பது தான் பரிதாபம்.



யாஷ்வி, சென்னையில் பிரபல பொறியியல் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவளை வீட்டில் ஏற்பட்ட சில சலசலப்புக்கள் பெங்களூர்க்கு இடம் பெயர செய்திருக்க இதோ நான்காம் வருட இறுதியில் நின்றிருந்தாள் பெண். இரண்டு தமையன்களில் மூத்தவன் அமெரிக்காவிற்கு வேலையின் நிமித்தம் குடியேறியிருக்க அவளின் மனையாள் நான்கு மாத கர்ப்பமாக இருந்தாள். உடல் பலவீனம் காரணமாக மருத்துவரின் அறிவுரையின் பெயரில் அவள் பிரசவம் வரை படுக்கையில் ஓய்விலிருக்குமாறு கூறப்பட்டிருக்க யாஷ்வியின் பெற்றோர் மகளை இரண்டாவது மகன் மனோகரனின் பாதுகாப்பில் பெங்களூர்க்கு இடம் மாற்றி விட்டு தற்பொழுது அமெரிக்கா வாசம் தான்.
"ம்மா, நீங்க மட்டும் போங்களேன், நானும் அப்பாவும் சென்னையிலே இருக்கோம்" என்று மகள் கோரிக்கை வைக்க, "அது எல்லாம் சரி வராது யாஷ்ம்மா, உங்கப்பாவை கவனிக்கிற அளவுக்கு உனக்கு பக்குவம் போதாது. நீங்க ரெண்டு பேரும் என்ன செய்வீங்களோனு நினைச்சிட்டே இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. மிஞ்சி போனா இரண்டு வருஷம், அதுக்கு முன்னாடியே கூட வந்திடுவோம். நீ அதுவரை மனோ வீட்டில இரு" என்று மகளை பெங்களூரில் விட்டு கிளம்பி இருந்தார் சவிதா.

மனோ, அவனின் மனைவி ரூபா யாஷ்வியை தன் தங்கையை போலே பாவித்து விட பாவைக்கு இங்கு இருப்பதில் ஒன்றும் ஆட்சேபனை இருக்கவில்லை. கல்லூரியில் மட்டும் ஆரம்பத்தில் சற்று திணறியவள் நாட்கள் நகர்வில் எல்லாவற்றோடும் பொருந்தி நின்று கொண்டாள். அவளின் பெரும்பாலான பொழுதுகள் ஷமீரா என்ற முயல்குட்டியின் அட்டகாசத்தில் தான் கழியும். யாஷ்வியுடன் ஸ்கூட்டியில் பின்னால் தொற்றிக் கொண்டு தன் பள்ளிக்கு செல்பவள் மீண்டும் அவளுடன் தான் வீடும் திரும்புவாள்.
ரூபா, மனோ இருவருமே தனியார் துறை பணியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள்.



ஆறு மாதங்களுக்கு முன்பு, வாரத்தின் முதல்நாள் திங்களன்று அவசர அவசரமாக மின்தூக்கியில் நின்றிருந்தாள் யாஷ்வி தன்னுடைய பொறுமையை இழுத்துப்பிடித்தப்படி. அன்று தேர்வு என்பதை விட வழக்கமாக கிளம்புவதை விட சற்று கூடுதலாக நேரமாகியிருந்தது. படித்துக் கொண்டே ஆர்வத்தில் நேரத்தை கவனிக்காமல் போயிருந்தவள் அடித்து பிடித்து கிளம்பி பறந்து வந்திருந்தாள். மின்தூக்கியில் நின்றதொரு விழிகள்
அவளையே கபளீகரம் செய்ய அதை கண்டுகொள்ளவே சற்று நேரம் பிடித்தது. சட்டென்று திரும்பி பார்த்தவளின் விழிகளோ ஏனோ அதிர்ந்து நின்றது, 'யார் இவன்?' என்ற ரீதியில். அவளே கண்டு கொண்டாலும் பார்வையை விலக்கும் எண்ணமின்றி நின்றிருந்தான் கால்சராயில் கைகளை நுழைத்துக் கொண்டு லேசாக ஒருக்காலை மடித்து பின்னால் சாய்ந்து சாவகாசமாக. பாவையின் விழி அதிர்வினால் புதிதாக முளைத்த சுவாரசியத்தை விழிகளில் தேக்கி நின்றவன் புருவம், 'என்ன?' வினாவாய் மேலேறி இறங்க பாவையின் தலை தன்னை போல் இயல்பாய் இருபுறமும் அசைந்து திரும்பி கொண்டது முன்புறம் நோக்கி.


பேதையின் முதுகை ஆடவன் பார்வை துளைக்க, 'ஐயோடா, எப்பொழுது மின்தூக்கியின் கதவுகள் திறக்கும்' என்று அவளின் எண்ணம் அலைபாய மீண்டும் விழிகள் அவனை நோக்கி திரும்பியது தன் கட்டுப்படாட்டையும் மீறி. இம்முறை ஆடவன் விழிகளோடு இதழும் புன்னகைக்க சற்று நகர்ந்து அவளுக்கு இணையாக வந்து நின்று கொண்டான் அவளையே பார்த்தப்படி திரும்பி நின்று. அவளுக்கு திரும்பி பார்ப்பதால் அசௌகரியமாக இருக்குமென்றெண்ணி நகர்ந்து தரிசனம் கொடுத்து விட்டான் போலும்!


'அடேய் கிராதகா..யார்டா நீ?' என்று அரண்டு போனவளின் வதனம் முழுவதும் வியர்வையில் குளிக்க முகத்தை மற்றையபுறம் திருப்பிக் கொண்டாள் லஜ்ஜையோடு. மின்தூக்கியின் கதவுகள் திறந்திருக்க, வெளியேறியவன் நின்று ஒரு முறை திரும்பி அவளையே பார்க்க, அந்தோபரிதாபம் முறைக்க முயன்று தோன்றது பாவையின் விழிகள், 'ஆளை பார்!' என்பதாய்.


அந்த நிமிடங்களோடு சேர்த்து அவனையும் மறந்து விழுங்கி ஏப்பம் விட்டவள் கல்லூரியில் கலந்து போனாள். அன்று முதல் இது வாடிக்கையாகி போனது. தினமும் பார்ப்பான், அவளும் அவஸ்தையுடன் அந்த நிமிடங்களை கழிப்பாள். யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் சிறிதும் அலட்டாமல் அப்படியொரு பார்வையை கொடுப்பான். பார்வை மட்டுமே, பேசவோ அல்லது அவளை நோக்கி நகரவோ சிறு முயற்சிகளை கூட எடுத்ததில்லை. அவனின் பார்வையின் தீட்சண்யத்தில் பாவையின் தொண்டைக்குழி தான் ஏறி இறங்கும். 'சாதாரண பார்வை தானே!' என்ற நினைப்பில் கடக்க விழைந்தவளின் நிலை பரிதாபத்துகுரியது தான். அவனை கண்டவுடனே தன்னையும் அறியாமல் விழிகள் அதிர தான் செய்கிறது. அதில் அவனுக்கொரு திருப்தி தான் போல்!


'என்னடா தெரிகிறது? இப்படி பார்த்து தொலைக்கிறாய் எல்லோர் முன்னும்?' என்ற ரீதியில் அவள் பதில் பார்வை கொடுத்தாலும் இதழ் ஓரத்தில் பதிலாக புன்னகையே எஞ்சிடும் ஆடவனிடமிருந்து.



ஆக, 'அண்ணனிடம் கூறுவதா? என்னவென்று கூறுவது அவன் என்னை பார்க்கிறான் என்றா? தொந்தரவு செய்தால் கூறலாம் இதை எப்படி கூறுவது?' என்று பல்வேறு எண்ணங்களில் குழம்பி தவித்தாள். எப்பொழுதையும் விட பத்து நிமிடம் முன் இல்லை பின் என்று மாற்றி மாற்றி மின்தூக்கியில் ஏறினாலும் நிற்பான். சில நாட்கள் படியில் இறங்கி மூச்சு வாங்க ஸ்கூட்டியை உயிர்ப்பிக்க அவளை கடந்தே அவனது கார் பயணிக்கும் ஹாரன் ஒலியுடன், 'அடேய் முடியலைடா, உன்னோடு' என்று சலிப்பாய் தலையசைத்து கடப்பதை தவிர வேறு வழியிருந்திருக்கவில்லை.



அதன் பிறகு சில நாட்கள் மனோவுடன் தொற்றிக் கொண்டு திரிய அப்பொழுதும் பார்வை மாறவேயில்லை ஆனால், 'துணைக்கு ஆளாய், பயந்திடுவேனா என்ன?' என்பதாய் கேலியில் இதழ் வளைந்திருந்தது அவள் மின்தூக்கியிருந்து கீழிறங்கும் வரையிலும். பொறுத்து பார்த்தவள் ஒரு கட்டத்தில், 'போடா...பார்க்க தானே செய்கிறாய், போய் தொலையும்' என்ற ரீதியில் தன்னை இயல்பாக்க முயன்றாள். ஆஹா, முயன்றாள் அவ்வளவே....ஆனால் பலன் இருந்திருக்கவில்லை.


ஒரு மாதம் கடந்திருக்க இப்பொழுதெல்லாம் அவனை காணவிட்டால் விழிகள் அலைபாய துவங்கியிருந்தது. அப்படியொரு முறை அலைப்புற சட்டென்று மின்தூக்கி மூடும் கணத்தில் ஓடி வந்து ஏறியவனை கண்டவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிய நிலை தான். ஆம், தூரத்திலே அவளின் தேடலை கண்டு கொண்டே வந்தவனின் நக்கல் வழிந்த புன்னகையில் பாவைக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை. ஐயோ! நொடியில் முகமே சிவந்து போனது.. நெற்றியை தேய்த்தவள் முகத்தை அங்கும் இங்கும் திருப்பி ஓட்டம் பிடித்திருந்தாள்.


ஏறும் பொழுது மற்றும் இறங்கும் பொழுதை தவிர அவனை எங்குமே கண்டதில்லை அவள் வந்து இரண்டு மாதங்களை கடந்தும்.
எங்கிருந்து வருகிறான் என்று ஆராயந்த மூளையுடன் போராட்டம் தான் எஞ்சியது பேதைக்கு.


அன்றொரு முறை அவள் இடுப்பில் அமர்ந்திருந்த ஷமீரா பக்கத்தில் நின்றிருந்தவன் முதுகில் தொங்கியிருந்த பையை விளையாட்டாய் பிடித்து இழுத்து விட, "ஷமீ" என்று மெலிதாக அதட்டியவளுக்கு பையின் உரிமையாளனை கண்டு மூச்சு நின்று போனது. ஆமாம் அவனே தான். எப்பொழுதும் கசங்காத சட்டையுடன் மிடுக்காக வருபவன் இன்று வியர்வை வடிய தலை முடியெல்லாம் கலைந்து அரக்க பறக்க சட்டையின் மேற்பட்டன்களை கழட்டி விட்டு ஒரு விதமான தோரணையில் நின்றிருந்தான். சும்மாவே மருள்பவளின் விழிகள் அவனுடைய உடல் மொழியில் இன்னும் கொஞ்சம் சேர்த்து நடுங்கவே செய்தது. குனிந்து அலைபேசியில் எதையோ தீவிரமாய் ஆராய்ந்திருந்தவனை அந்த குட்டியின் செயல் கலைத்து தங்களின் வருகையை தெரிவித்திருந்தது. நிமிர்ந்தவன் பார்வை யாஷ்வியை விட்டு முயல்குட்டி மீது படிய சட்டென்று கால்சராயில் கை விட்டு ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்டியிருந்தவன் முகத்தில் ஆர்பரிப்பான புன்னகை நிரம்பியிருந்தது.


ஷமீ சாக்லேட்டையும் யாஷ்வியையும் மாறி மாறி பார்க்க அவளே மிரண்டு போய் நின்றிருக்க இவளுக்கு எங்கு அனுமதியளிப்பது. ஷமீ சட்டென்று அவளின் மார்பில் முகத்தை மறைத்துக் கொள்ள, 'இப்பொழுது அவள் வாங்கியாக வேண்டும்' என்ற ஒரு வித மிரட்டலான பார்வையை யாஷ்வியை நோக்கி கொடுத்தவன் கை கீழிறங்கவே இல்லை. 'ஐயோ! எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாமா?' என்று தன்னை தானே நொந்து கொண்டவள், "ஷமீ, வாங்கு" என்று லேசாக முணுமுணுக்க தலையை நிமிர்த்தி அத்தையிடம் கண் சிமிட்டியவள் அதே பாவனையை எதிரில் நிற்பவனிடமும் காட்டி சாக்லேட்டை கைப்பற்றிக் கொண்டாள்.

அவனின் புன்னகை மேலும் விரிய, முயல்குட்டியின் கன்னங்களை லேசாக விரல் கொண்டு தட்டியவன் மின்தூக்கியிலிருந்து இறங்கி சென்றிருக்க யாஷ்வி மருண்டு தான் நின்றிருந்தாள். ஷமீயின் கன்னத்தில் விரல்பட்டதா? அல்லது தன் கன்னங்களிலுமா? என்று உணர இயலாத ஸ்தம்பித்த நிலை. ஆம், ஷமீயின் கன்னத்தை தட்டிய விரல்கள் அருகிலிருந்த யாஷ்வியின் கன்னங்களை உரசியும் உரசாமலும் நூழிலையில் கடந்து சென்றிருக்க அவளின் நிலை அந்தோ பரிதாபம்.


அவன் இறங்கியவுடன் ஷமீரா காதை திருகியவள், "கைக்காலை வைச்சுட்டு சும்மா இருக்கிறதில்ல. வம்பை விலை கொடுத்து எனக்கு வாங்கி தர்றீயா நீ?" என்று அதட்டியவளின் குரல் முழுவதுமாக உள்ளே சென்றிருந்தது மீண்டும் தங்களை நோக்கி வந்தவனைக் கண்டு.

கையிலிருந்த பையை மின்தூக்கியிலே மறந்து வைத்து விட்டிருந்தவன் அதை எடுத்துக் கொண்டு திரும்ப யாஷ்வி ஓட்டம் பிடித்திருந்தாள். அதை கண்டு தலையை கோதியவன் இதழில் புன்னகை நிறைய வீட்டை நோக்கி பறந்திருந்தான் அவன்.



தொடரும்....
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Semmmmmmmaaaaa ma
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Hero sir per sollave illaye
அவ்வ்🙊🙊.அதை இன்னும் தேடிட்டு இருக்கேன் நாளைக்கு வந்திடும்😂😂
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Starting yae different ah iruku.yae yashvi lift la meet pannavan ah parthu bayan thathu poi ippo miss panra alavukku iruku ah
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
செம்ம ஆரம்ப நல்ல இருக்கு🥳🥳 யாஷ் முயல்குட்டி சமிர cute பெயர் 💖 கதை வித்தியாசமா இருக்கு ❤️😍அந்த ஹீரோ பெயர் தான் என்ன அத சொல்லாம 😁😁
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
செம்ம ஆரம்ப நல்ல இருக்கு🥳🥳 யாஷ் முயல்குட்டி சமிர cute பெயர் 💖 கதை வித்தியாசமா இருக்கு ❤️😍அந்த ஹீரோ பெயர் தான் என்ன அத சொல்லாம 😁😁
நன்றி❤️❤️...அடுத்த அப்டேட்ல்ல சொல்லிட்டேன்ம்மா
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
லிப்ட் ல வந்த பையன் தான் ஹீரோவா இருப்பானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔முதல்ல அண்ணன்கிட்ட அவன பத்தி சொல்லலாம்மான்னு நினைச்சவ அவனை காணம்னு தேடுறாளே 😄😄😄😄😄
 
Top