• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நேயமுடன், நான் - 4

Ush

Well-known member
Messages
110
Reaction score
271
Points
63
4

தொடர்ந்த நான்கு நாட்களுக்கு அதே நிலைமை தான் நீடித்தது. ருத்ரன் எப்படி சீண்டினாலும் நேயா வார்த்தைகளால் எதுவும் பதில் கொடுப்பதில்லை.. அவனது வீட்டில் எந்த மாற்றங்களும் செய்ய முயலவும் இல்லை. ருத்ரன் டிசைன் டிசைனாக உணவு கேட்டு டார்ச்சர் செய்வதும் நின்று விடவில்லை..ஆதவனின் ஹைப்பர் அக்கறையும் அதை தொடர்ந்து ருத்ரனோடு சேர்ந்து நேயாவுக்கும் ஸ்ட்ரெஸ் ஏறிக்கொள்வதும் கூட நின்று விடவில்லை.. அவர்கள் மூவருமே கொஞ்சம் கொஞ்சமாய் மூவரையும் சேர்த்து ஏற்க பழகிவிட்டனர் போலும்..

அன்றைக்கு சனிக்கிழமை கொஞ்சம் நேரத்தோடேயே காரை வர சொல்லியிருந்தாள் நேயா. ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு விடுமுறை நாள் ஆகவே அடுத்த நாளைக்கான எல்லாவற்றையும் சுபாக்கா இலகுவாக சமாளித்து விடுமாறு முன் தயாரிப்பு செய்து ப்ரிட்ஜில் வைக்கவேண்டிய வேலை இருந்தது.

காரில் ஏறியதும் வழக்கம் போல தனக்கு வந்த செய்திகளை ஆராய்ந்து கொண்டிருக்கையில் நேற்று கடைசியாக வந்திருந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போனாள். அந்த மாசம் அவள் ஜெரமிக்கு அனுப்பியிருந்த பணம் அப்படியே அவளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தது... ஏன் எதற்கு..நேயாவுக்கு என்னதென்றே புரியவில்லை..

கைகள் தானாக ஜெரமிக்கு அழைப்பு விடுத்தன.

"சொல்லுடி" தூங்கிக்கொண்டிருப்பான் போலும் கரகரப்பாய் கேட்டது அவன் சோம்பல் குரல்

"எதுக்கு பணம் திரும்ப வந்திருக்கு ஜெரமி..நீ பார்த்தியா?"என்று அவசரமாய் கேட்டாள் நேயா.

"அதுவா? நான் தான் திரும்ப அனுப்பினேன்டி.. " ஜெரமியின் குரல் சர்வசாதாரணமாய் பதிலளிக்க

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. "ஏன்?" குரல் நடுங்கியது.. என்னமோ அவளையே அவன் நிராகரித்து வெட்டி விட்டது போன்ற ஒரு உணர்வு மனதுக்குள் வியாபித்து பரவியது.

"எனக்கு பார்ட் டைம் வேலை கிடைச்சிருக்குடி..என்னோட ஏரோ ஸ்கூல்லயே அட்மின் வேலை.. இனிமே எனக்கு பணம் அனுப்பாதே.. நான் பார்த்துக்கிறேன்.." அவன் முடிவாக சொன்னான்

"ஏன்டா" என்றாள் இவள் அடிபட்டு விரட்டப்பட்ட நாய்க்குட்டியாய்

"எனக்கும் இனிமே படிப்பு அவ்வளவு கஷ்டமா இருக்காது.. வேலை பார்க்கலாம்..இனியாவது என்னை மறந்துட்டு உன் தொழில் வாழ்க்கையை ப்ளான் பண்ணி பண்ணு" அவனது குரலே இது நிறைய நாட்கள் யோசித்து செய்த முடிவு என்று சொல்லியது

“உனக்கு நான் பார்க்கற வேலை பிடிக்கலை..அது தானே இதுக்கெல்லாம் காரணம்?” பிரச்சனையின் நாடியை பிடித்து விட்டாள் நேயா

“ஆமாம்.. பிடிக்கலை சுத்தமா பிடிக்கலை..” என்றான் அவனும் கொஞ்சம் கூட தயங்காமல் கோபமாய்

“உன் கனவுக்கு நான் தான் முதல் ஆளா ஆதரவு கொடுத்தேன்டா..” என்று நேயாவும் விடாமல் கேட்டாள்..அதில் எனக்கு நீ ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது.

“இது உன் கனவில்லையே நேயா.. “

அவ்வளவு தான் நேயாவுக்கு வந்ததே கோபம்! “எல்லாரும் உன்னை மாதிரி பிறக்கும் போதே வானத்துல பறக்குற கனவோட பிறக்க மாட்டாங்க ஜெரமி ஜெபதர்ஷன். உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? எனக்கு பழக பழகத்தான் எனக்கென்ன பிடிக்கும்னு தெரியும். எனக்கு இப்போ நான் பண்ற வேலை ரொம்ப பிடிச்சிருக்கு.. என் சாதனைகள் எல்லாம் உனக்கு ஒண்ணுமே இல்லையா? நீ பெருமை பட மாட்டியா?” கிட்டத்தட்ட கத்தினாள் அவள்

“வேணும்னே கோக்குமாக்கா அர்த்தம் பணிக்காத.. என்று பல்லை கடித்தவனும் “ருத்ரேஷ்வருக்கு வேலை செய்றேன்னு நீ ஏன் சொல்லல எனக்கு?” என்று கோபமாய் கேட்டான்

“இப்படி லூசு மாதிரி பேசுவன்னு தான் சொல்லல..”

“அப்போ என் எண்ணம் உனக்கு ஒண்ணுமே இல்லைல்ல?”

“ டேய்..நீ தான் எனக்கு எல்லாம்! ஆனால் ஜெரமியோட ட்வின்றது மட்டும் நான் இல்லை..என்னை உனக்காக கூட என்னால் விட்டு கொடுக்க முடியாதுடா. உன் பிரச்சனை என்னன்னு நான் சொல்லவா..நீ என் வேலையை கௌரவ குறைச்சலா பார்க்கிற.. இந்த காலத்துல செப்புக்கு எவ்வளவு மரியாதை ஏகப்பட்ட சம்பளம் என எல்லாருமே கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க..ஆனா உன்ன மாதிரி ஆட்கள் தான் குறுகிய மனப்பான்மையோட இருக்கீங்க..எந்த தொழிலும் குறைச்சல் கிடையாது...” ஆதங்கத்தில் பேச்சு சரளமாய் கொட்டியது நேயாவுக்கு

“உளறாதேடி...சரி இது தான் உனக்கு பிடிக்குதுன்னே வச்சுக்க.. நீ இப்படி யார் யாருக்கோ சேவகம் பண்றது எனக்கு பிடிக்கல..அவர் எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலுமே..பணத்தை சேர்த்து வை.. சொந்தமா ஆரம்பி. இல்லைன்னா பெரிய ஹோட்டல் எதிலேயும் போய் சேரு. ரொம்ப பெருமைப்படுவேன்..நான் மட்டுமில்லை அப்பா அம்மா எல்லாருமே...” என்று ஜெரமி சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை

கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டானா இவன்?

“நீ தான் உளறிட்டிருக்க!.இப்போ தான் காலேஜே முடிச்சிருக்கேன்..நான் உடனே ரெஸ்டாரன்ட் எல்லாம் ஆரம்பிக்க முடியாது..அனுபவம் வேணும்.. ஏன் நான் உனக்கு நீ சொன்னதையே திருப்பி சொல்லவா..நீ பார்க்கிறதும் ஒரு வகையில் இன்னொருத்தனுக்கு டிரைவர் வேலை தான். ஏர்லைன்சை சொந்தமா வாங்குன்னு நானும் சொல்லவா.. அந்தளவு முட்டாள் கிடையாது நான்!” கோபத்திலும் அந்த அபத்தத்தை நினைத்து சிரிப்பு வந்தது அவளுக்கு

“போடி நான் என்ன சொல்லவரேன்னு கூட புரிஞ்சுக்காம விதண்டாவாதம் பன்றேல்ல.. என்கிட்ட பேசாத..” அவன் போனை கட் செய்து விட

“நான் விதண்டாவாதம் பண்றேனா? அவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போய் டிரைவர் பதட்டமாய் டிஷூ பாக்சை தந்ததை கூட கவனிக்காமல் அழுது கொண்டே இருந்தவள் இயந்திரமாய் ருத்ரேஷ்வர் வீட்டு வாசலில் போய்இறங்கினாள்.

‘என்னை புரிஞ்சுக்காத அவன் கிட்ட இனிமே நானா போன் போட்டு பேசவே மாட்டேன்’ கண்ணையும் மூக்கையும் கோபாவேசமாய் துடைத்துக்கொண்டு உள்ளே வர ருத்ரேஷ்வர் யன்னல் வழியே வெளியே பார்த்தபடி இருந்தவன் சத்தம் கேட்டு அவள் புறம் திரும்பினாலும் பிறகு ஏதோ பூச்சி வந்து விட்டு போவதை பார்த்தது போல பேசாமல் திரும்பிக்கொண்டான்..

வந்துட்டான் அடுத்தவன்! இந்த உலகமே நாடகமேடை அதில் எல்லாருமே வில்லன்கள்! என்று மனம் பொங்க சம்பந்தமே இல்லாமல் சும்மா இருந்த அவனையும் ஒரு முறை முறைத்து விட்டு கிச்சனுக்குள் போய்விட்டாள் நேயா.

‘ஜெரமிக்கு என் மனம் ஒன்றுமே இல்லை நானும் அவனை பற்றி நினைக்க மாட்டேன் என்று சபதம் செய்தாலும் என்னவோ எக்ஸாம் என்று சொன்னானே அதற்கு பணத்துக்கு என்ன செய்வான்? அதற்கும் பணம் கட்டி சாப்பாடு இதர செலவையும் எப்படி அவனால் பார்த்துக்கொள்ள முடியும்?’ என்ற எண்ணமே எழுந்து அழுகையாய் வந்தது அவளுக்கு.

பைலட் பயிற்சியில் இருப்பவர்களுக்கு மாறி மாறி பரீட்சைகள் வந்து கொண்டே இருக்கும்.. இருக்கும் அறையில் கூட மாடல் செட் பண்ணி வைத்து பயிற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.. இதில் பகுதி நேரமாய் படித்துக்கொண்டே வேலை செய்வதெல்லாம் சாத்தியமா?

ஏன்டா இப்படி பண்ற? நான் வேற நீ வேறயா? எப்போல இருந்து? கண்ணீர் பொங்கி கண்ணை மறைத்தது

ஏதோவொரு வகையில் அவளின் பிரச்சனைக்கு காரணமான ருத்ரனுக்கு அன்றொரு நாள் செய்ய நினைத்து செய்யாமல் விட்ட எளிமையான ஆம்லெட்டும் சூப்புமே இன்றைக்கு என்று முடிவெடுத்துக்கொண்டவள் அவசர அவசரமாய் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தாள்..

இன்னும் கண்ணீர் நிற்காமல் ஓட இருக்கும் கோபமெல்லாம் சேர முட்டையை அடிக்க ஆரம்பித்தாள்..

அருகே நெருங்கிய ருத்ரேஷ்வரின் காலடி சத்தம் கூட அவளது வேகத்தை குறைக்கவில்லை..

என்ன?” வழக்கமான அதே உர்ர்ர் குரல்

“சார்” மெல்லத்திரும்பி பார்த்தாள் நேயா.. இப்போ என்ன வேணுமாம் இவனுக்கு?

“என்ன ஆச்சுன்னு கேட்டேன்” அவனது முகமும் மிளகாயை கடித்தவன் போலத்தான் இருந்தது..

“ஆம்லேட் அதான் முட்டையை அடிக்கிறேன்..” பேசக்கூட விடாமல் கண் கலங்கியது..

“அதுக்கு எதுக்கு கண்ணீரை கொட்டிட்டு இருக்க..?”

‘என் விதி கண்ணுல கண்ணீர் மட்டம் கூடிருச்சு அதான் டாமை திறந்து விட்டிருக்கேன்..’ பதில் சொல்லாமல் முறைத்தபடியே முட்டையை விடாமல் அடித்தாள் நேயா.

“கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் வரணும்” அவன் குரல் கடுமையாகி நேயாவின் கோப மீட்டரை எகிற வைக்க

“ஏன் சார் சொல்லணும்? ஏன் சொல்லணும்? என் வேலைல குறை இருந்தா கேள்வி கேளுங்க அதுக்கு நான் பதில் சொல்லணும்..என் கண் ..என் கண்ணீர்.. நான் அழுவேன் சிரிப்பேன் என் பர்சனல் விஷயத்தில் தலையிடாதிங்க..” என்று ஒரேயடியாய் பொங்கி விட்டாள்

ஒரு செக்கன்ட் அவளையே பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றான் ருத்ரன்..கன்னத்தசைகள் துடிப்பது போலவும் தெரிந்தது.. சிரிக்கிறானோ

அடுத்த நொடி “வேலை விஷயம் தான். கண்ணீர் என் சாப்பாட்டுல விழுந்து கிருமி தொற்றி என் தோளுக்கு பிரச்சனை ஆகும்... இருநூறு மில்லியன் நீ தருவியா?” என்று அமர்த்தலாய் கேட்டவனைப்பார்த்து இமை தட்டி விழித்தாள் நேயா..

மாட்டை பற்றி எழுத சொன்னால் ஆட்டை பற்றி எழுதிவிட்டு அது மாடில்லை என்று எழுதி வைப்பான் போல..எதை எதோடு முடிச்சு போடுகிறான்! எமகாதகன் அதற்குள் இருநூறு மில்லியன் டாமேஜ் க்ளைம் வேறு! இரண்டு மில்லிலீட்டர் கண்ணீர் விட்டது ஒரு குற்றமாடா?

“உங்க சாப்பாட்டுக்கு ஒண்ணும் ஆகாது போதுமா” என்று சொல்லி விட்டு அவள் பொருட்களை எடுப்பது போல உள்ளே போய்விட்டாள்..திரும்பி வந்த போது ருத்ரன் அங்கில்லை..

மதிய உணவு நேரத்துக்கு ஆம்லேட் சூப் எல்லாவற்றையும் கொண்டு போய் வைக்க ருத்ரன் வந்து அமைதியாய் எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்..

கிச்சனில் அவளது அசைவுகளை அங்கிருந்தே பார்க்க முடியும்..

“உங்கண்ணனுக்கு வீடு போதாதாமா? இன்னும் கேட்கிறானா?” லேசாய் சிரிப்பு கலந்திருந்தது அவன் குரலில்..

இவனுக்கு எங்களை பற்றி இன்னும் என்னவெல்லாம் தெரியும்? என்னமோ வீட்டை அவள் கொடுத்ததுமே ஜெரமி கைநீட்டி வாங்கிக்கொண்டது போலவல்லவா இவன் சொல்வது இருக்கிறது..தெரியாமல் பேசுவதை கூட விட்டு விடலாம்..அவனுக்கு சம்பந்தே இல்லாத விஷயம் பற்றி நக்கல் பண்ண இவன் யார்?

“சார் உங்களை பத்தியும் கிரிக்கட் பத்தியும் நான் கமன்ட் பண்ணினா எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இருக்கு இதுவும்..உங்களால என் விஷயத்தை புரிஞ்சுக்க கூட முடியாது..விட்ருங்க..” என்று அவனது கண்களை பார்த்து சொல்லி விட்டு கிச்சனுக்குள் நுழைந்தவள் அடுத்த வேளைக்கான தயார்படுத்தல்களை முடித்துவிட்டு வந்து பார்க்க ருத்ரன் சாப்பிட்டு முடித்து விட்டு போயிருந்தான்.. அவனுக்கு கொடுக்கப்பட்டது எதுவும் மிச்சமில்லை..

அவன் மட்டும் சாப்பிடாமல் மீதம் வைத்திருந்தால் நேயாவுக்கு இன்றைக்கு உயர் குருதியழுத்தமே வந்திருக்கும்..நல்ல வேளை..

நம்மை பார்த்து பயந்துட்டானோ..எப்படியோ கஷ்டப்பட்டது வீண் போகலை..

நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாய் அவளது பதட்டங்கள் சமப்பட ஆரம்பிக்க ஜெரமி பிரச்சனையும் மனதில் கொஞ்சம் ஆற ஆரம்பித்திருந்தது.

எல்லாம் கொஞ்ச நேரம் தான்...எல்லாவற்றையும் கெடுப்பது போல தேசிய கிரிக்கட் அணியின் முகாமையாளர்களோடு ஒரு மீட்டிங்குக்கு போய்விட்டு வந்ததாக காய்ந்து போய் வந்து சேர்ந்தான் ஆதவன் கூடவே வழக்கம் போல பதட்டத்தையும் கூட்டிக்கொண்டு..

வழக்கமே இல்லாத வழக்கமாய் சமையலறைக்கு வந்து “ஏதாவது சாப்பிட இருக்கா?” என்று கேட்க தலையசைத்தவள் சூப்பினை ஒரு கப்பில் வார்த்து பாணையும் டோஸ்ட் செய்து கொண்டு போய் கொடுத்தாள்..ஆதவனுக்கு என்ன கட்டுப்பாடு..

அவனுக்கே கேட்காத குரலில் நன்றி சொன்னவன் உணவை நோக்கி குனிய லேசான புன்னகையோடு கிச்சனை நோக்கி நகர்ந்தவளை ஆதவனின் குரல் தடுத்து நிறுத்தியது..

“என்ன சூப் இது? உப்பேயில்லை? இதையா அவனுக்கு கொடுத்த? அவன் சாப்பிட்டிருக்க மாட்டானே. ஏம்மா உனக்கு சமைக்க தெரியலைன்னா சொல்லிடு நான் வேற ஆளை தேடிக்கிறேன்.. எதை தின்னா பித்தம் தெளியும்னு நாங்களே அவஸ்தைப்படுறோம் நீ வேற புதுசா வந்து உயிரை வாங்குறியே” என்று அவன் தலையை பிடித்துக்கொள்ள

உப்பு உப்பு உப்பு என்று நான்கு புறமும் எதிரொலிக்க நினைவுகளை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தாள் நேயா.. ஆமாம் உப்பு போடவில்லை தான்..அவசரமாய் கிச்சனில் இருந்த சூப்பை சுவைத்து பார்க்க சுத்தமாய் உப்பில்லை..

ஐயோ

ஓடிப்போய் சாப்பிடும் இடத்தில் இருந்த உப்பு மிளகு இத்யாதிகளை அவன் புறம் நகர்த்தியவள் தொடர்ந்த அவனது திட்டுக்களுக்கு மௌனமாகவே நின்றிருந்தாள்..

தவறு அவளுடையது அல்லவா? உடல் தான் அங்கிருந்தது மனம் அங்கில்லை..

ருத்ரன் முழுவதையும் சாப்பிட்டானே..ஒன்றும் சொல்லவில்லையே..வழக்கமாய் ஒரு துணுக்கு மிளகு குறைந்தாலும் நொட்டை சொல்பவன் எப்படி வாயே திறக்காமல் இதை சாப்பிட்டான்? அதையும் சொல்லி நம்மை அழ வைக்க வேண்டாம் என்றா? அவனுக்கு அப்படியெல்லாம் சரிசனமாய் யோசிக்க தெரியுமா?

இவள் யோசித்துக்கொண்டிருக்க ஒரு வழியாய் தன் கடமையை சிறப்பாய் செய்து விட்டு நாளைக்கு டாக்டர் வந்து பரிசோதிப்பார் என்று ஆயிரம் தடவை நினைவும் படுத்தி விட்டு ஆதவன் போய்விட்டான்..

ஹாலில் இருந்த ருத்ரன் படிகளில் ஏறும் சத்தம் கேட்டது.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமில்லையா..

அவசரமாய் அவனை நோக்கி ஓடிப்போனாள் நேயா.. அவளின் வருகையை உணர்ந்து திரும்பி பார்த்தபடி ஒற்றைப்படியில் கால்வைத்ததோடு அப்படியே நின்றான் ருத்ரன்.

“சாரி..” உள்ளே போய்விட்ட குரலில் சொன்னாள் நேயா.

“எதுக்கு?”

“சூப்புல உப்பு போட மறந்துட்டேன்..இனிமே இப்படி நடக்காது. சாரி”

“போட்டியே...” லேசாய் அவனது கன்னம் துடித்தது..

“என்ன?” நேயாவுக்கு புரியவில்லை

“கண்ணீர்..” என்றவனுக்கு இப்போது லேசாய் சிரிப்பு எட்டிப்பார்க்க அவன் மேலே ஏறிப்போய் விட்டான்.

திரும்பி கிச்சனுக்கு ஓட்டமாய் வந்த நேயாவின் முகத்திலும் அடக்க முடியாத முறுவல் மலர்ந்திருந்தது..

அன்றைக்கு மதியம் சமாதானப்படலமாய் ருத்ரேஷ்வரின் தட்டில் சின்ன கிண்ணமொன்று முளைத்திருந்தது.

பார்த்ததுமே அது என்ன என்று தான் கேட்டான் முகத்தை சுருக்கியபடி.. காலையில் அவளிடம் இலகுவாய் பேசியதெல்லாம் என் பிரமையா என்று நேயாவுக்கே சந்தேகம் வர வைத்து விட்டது அவன் முகபாவம்

“பாயாசம் சார்..”

“ப்ச். பொய் சொல்லாதே..பாயாசம் மாதிரித்தான் இருக்கும் ஆனா அதா இருக்காது..என்னதிது?”

சிரிப்பை அடக்கிக்கொண்டு “சுரைக்காய்” என்றாள் நேயா..

ஒரு பார்வை பார்த்தவன் அந்த கப்பை எடுத்து தனியே வைத்து விட்டான்..

சிரிப்போடு அவன் மதிய உணவை சாப்பிடும் வரை உள்ளே போய்விட்டவள் பிறகு வந்து “இந்த ஒரு தடவை மட்டும் அதை டேஸ்ட் பண்ணி பாருங்க சார்..யூ வோன்ட் ரிக்ரெட்” என்றாள்

“நோ தாங்க்ஸ்..”

“ப்ளீஸ் சார்”

சலித்துக்கொண்டு என்னமோ கசப்பு மருந்து குடிப்பது போல எடுத்து வாயில் வைத்தவன் பிறகு வேக வேகமாய் சாப்பிட ஆரம்பிக்க

சிரிப்போடு நேயா உள்ளே போய்விட்டாள்

இவனை எல்லாம் ஆட்டுவிக்க கோர்ட் கேஸ் எல்லாம் தேவையே இல்லை.. ஒரு கப் சர்க்கரையை கொடுத்தாலே சொத்தெழுதி வச்சிடுவான் போலயே..

“இன்னொரு கப் வேணும்..” விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல கோரிக்கை கூட ஆர்டராய் வந்து விழுந்தது..

உக்கும் ஆதவன் கிட்ட நான் அடிவாங்கவா? “அவ்ளோ தான் சார் பண்ணினேன்.. இன்னொரு நாளைக்கு பண்ணி தரேன்..”

அவன் அடுத்த வார்த்தை பேசுமுன் தோட்டப்பக்கமாய் ஓடிவிட்டாள் நேயா..

அன்றைக்கு வீட்டுக்கு வரும் போது காலையில் இருந்த மனநிலை இப்போது இல்லை..

வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் நடந்ததை சொன்னாள் நேயா.

அம்மாவோ கொஞ்சமும் பதறாமல் “அவனுக்கு வேலை கிடைச்சா நல்லது தானேடி..” என்றார் உற்சாகமாய்

“அம்மா என்னம்மா புரிஞ்சுக்காம பேசறீங்க.. வேலை பார்த்துட்டிருந்தா எப்படி எக்சாமெல்லாம் பண்ணுவான்..இன்னும் கொஞ்ச காலம் தானே ...நீங்க அவன் கிட்ட சொல்லுங்களேன்..” என்ற அவளின் கோரிக்கைக்கு

“விரும்பினது கிடைக்கணும்னா அதுக்கு கஷ்டப்படவும் வேணும்..அப்போ தான் கைல கிடைக்கும் போது ரசிச்சு அனுபவிக்க முடியும்.. அவனை அவன் போக்குல விடு” என்று விட்டு அம்மா தோசைக்கு சட்னி அரைப்பதில் மும்முரமாகி விட தலையை பிய்த்து கொண்டு வெளியே வந்தாள் நேயா..

ஆரம்பத்தில் அவனது பிரச்சனையை நான் என் பிரச்சனையாக்கி கொண்டிருந்தேன்..இப்போ என் பிரச்சனையை அவன் பிரச்சனையாக்கி கொண்டிருக்கிறான். நம்ம அம்மாவோ ரெண்டு பேரையுமே மொத்தமா பிரச்சனைன்னு தள்ளி வச்சிட்டு சந்தோஷமா தோசை சுட்டுட்டிருக்காங்க.. ஆண்டவா இதுக்கு ஒரு முடிவே இல்லையா

வருவாள்

எழுதி வச்சது எல்லாம் முடிஞ்சது.. இனி அடுத்த சாப்டர் எழுதிட்டு வர்றேன்.. ஒகே
 
Top