ரஞ்சன் ஷோபனா தம்பதியர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்து ஒரு மாதம் ஓடியிருந்தது. அவர்களுக்கும் புதிய இடம் மெல்ல பரிட்சயமாகத் தொடங்க, வாழ்க்கை இந்நகரத்திற்கு ஏற்ப மாறியிருந்தது.
அஷ்வின் அருகே உள்ள பள்ளியில் தான் ஒன்றாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். காய்ச்சல் என ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தவன், அதற்கு அடுத்ததாய் எவ்வித விடுப்பும் எடுக்காது தொடர்ந்து பள்ளிச் செல்லத் துவங்கினான்.
ஒருவாரம் தொடர் விடுமுறை என்பதால் ரஞ்சனும் ஷோபனாவும் சென்று வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் என அனைவரையும் சந்திக்க வேண்டியதாகப் போயிற்று. மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன் ஒரு வாரம் விடுப்பு எடுத்ததை பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதச் செல்லும் மாணவன் போல அவர்கள் பேசியது ரஞ்சனுக்கு உவப்பாய் இல்லை.
ஏழு வயது சிறுவனுக்கு இத்தனை கெடுபிடிகள் அவசியமா என்பது அவனது கேள்வி. ஆனாலும், தற்போதைய கல்வி முறையை அவனால் மனதிற்குள் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது. வேறு வழியின்றி அவர்கள் கூறிய அனைத்திற்கும் தலையை அசைத்து மன்னிப்பைக் கேட்டுவிட்டு இவர்கள் வந்தனர்.
அடுத்தடுத்த நாட்கள் வேகமாய் ஓடின. ரஞ்சனுக்கு புது அலுவலகம், உயர் பதவி என நேரமே இல்லை. தனது முழு உழைப்பையும் நேரத்தையும் அலுவலகத்திற்கே அர்ப்பணிக்க வேண்டியதாயிருந்தது.
உழைத்துக் களைத்து சோர்ந்து வீடு வருபவனுக்கு மனைவியும் மகனும்தான் ஆறுதல். அவர்கள் முகத்தைப் பார்த்தால் அனைத்தும் மறந்துவிடும். சென்னையில் வசிக்கும்போது வெளியே சுற்றித் திரிவது அவர்களது வாடிக்கை. சினிமா செல்வது, கடற்கரை, பல்பொருள் அங்காடி, மகாபலிபுரம் என அவர்களது வார இறுதிகள் களவாடப்பட்டுவிடும். ஆனால், பெங்களூரு வந்ததிலிருந்து எங்குமே செல்லவில்லை என ரஞ்சனுக்குப் புரிந்தது.
எங்காவது செல்லலாமா? என மகன் மனைவியிடம் கேட்க, இருவருமே சென்னை செல்லலாம் என ஒன்று போல கூறிவிட்டனர். அஷ்வின் தாத்தா பாட்டியைப் பார்க்க ஏங்குகிறான் என ரஞ்சனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஷோபனாவும் மகனுக்காகப் பார்க்கிறாள் என்று உணர்ந்து முறுவலித்தவன், அந்த வார இறுதியில் ஒருநாள் விடுப்பை சேர்த்து எடுத்துக் கொண்டு சென்னை சென்று வந்தான்.
மூன்று நாட்கள் மூன்று மணி நேரம் போல கடந்துவிட்டன. வீடு நுழைந்ததும்தான் தாமதம். ரஞ்சனின் தாய், மகன் சரியாய் உணவு உண்ணவில்லையா? ஒரே மாதத்தில் இளைத்துவிட்டான் என மருமகளை ஒரு பாடுபடுத்திவிட்டார். இவன்தான் அவளை தாயிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது. ஆனாலும் ஷோபனாவின் முகம் ஒருநொடி கூட அவர் கேள்வியில் சுணங்கவில்லை.
அனைத்திற்கும் பொறுமையாய் பதிலளித்தாள். ஏனென்றால் ஒற்றை மகன் என ரஞ்சனை அவர்கள் எத்தனை பாசமாய் வளர்த்திருக்கிறார்கள் என திருமணம் முடிந்து வந்த சில நாட்களிலே புரிந்து கொண்டாள். மகனுக்கு ஒன்றென்றால் அவர்கள் துடித்துவிடுவார்கள் எனத் தெரியும். அவர்களைப் போலத்தான் ஷோபனாவிற்கும் ரஞ்சன் என்றால் அலாதிப் பிரியம்.
தன் பிரியத்திற்கு உரியவர்களின் நலனை நாடுபவர்கள் எவராயினும் ஒரு போதும் நமக்கு கோபம் வருவதில்லை. மாறாய் மனம் அந்த அன்பில் நனைந்து குளிர்ந்து போகும். அப்படித்தான் ஷோபனாவும் அவருடைய திட்டுகள், கோபமான பேச்சுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அன்பை மட்டுமே பார்ப்பாள். அதனாலே அவளுக்கு மாமியார் மீது கோபம் வந்தது இல்லை.
மூன்று நாட்களும் மகனுக்கும் பேரனுக்கும் என்று அவர் அத்தனை வகையாய் சமைத்துப் போட்டார். அவர்களே சுகமாய் சலித்துக் கொள்ளுமளவிற்கு அவரது அன்பிருந்தது.
அங்கிருந்த நாட்களில் பேரனை எப்போதும் தூக்கிக்கொண்டு சுற்றினார் ரஞ்சனின் தந்தை. அவரும் மூன்று நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு வாங்கிவிட்டார். குடும்பமாய் வெளியே சென்று வந்தார்கள். சட்டென விடுப்பு முடிந்துவிட, அடுத்த மாதம் கண்டிப்பாய் அழைத்து வருவதாகக் கூறி மகனை சமாதானம் செய்து, பெரியவர்களிடமும் கூறிவிட்டு இவர்கள் பெங்களூர் வந்தடைந்தனர்.
அடுத்த நாள் திங்கள் கிழமை வழக்கமான பரபரப்புடன் நகரத் துவங்கியது. ரஞ்சன் இப்போதெல்லாம் விரைவாகவே அலுவலகம் செல்லத் துவங்கினான். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் அலுவலகத்தை அடைய அவ்வப்போது தாமதமாகிவிடுகிறது.
வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல சரியாய் நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவைப்பட்டன. போக்குவரத்து நெரிசல் அதிகமாய் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியது. அதனாலே விரைவில் செல்லத் தொடங்கினான். இரவில் சில சமயம் வேலை நீண்டுவிட்டால் வரத் தாமதமாகும்.
பெரும்பாலும் சரியான நேரத்திற்கு இருப்பிடம் வந்தடைந்திடுவான். ஷோபனா மகனுடன் தனியே இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை எங்கும் செல்ல அனுமதிக்காது. அங்கே சென்னையில் தன்னுடைய பெற்றவர்கள் உடனிருந்ததால் நேரத்தைப் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டான்.
அதுவுமில்லாமல் அக்கம் பக்கமிருந்தவர்கள் எல்லாம் நண்பர்கள், உறவினர்கள். பயமில்லாமல் இவனால் இருக்க முடிந்தது. ஆனால் இங்கே அவர்களுக்குப் பழக்கமானவர்கள் வெகு சொற்பம்.
அன்று அஷ்வினுக்கு உடல் நலமில்லாமல் போனபோதே ஷோபனா யாரிடம் உதவி கேட்பதெனத் தெரியாது நிர்க்கதியாய் நின்றுவிட்டாள். அப்போதே ரஞ்சனுக்கு வருத்தம்தான்.
இடமாற்றத்தை அவன் பெரிதாய் விரும்பவில்லை. பெற்றவர்களின் வற்புறுத்தலினாலே இங்கே குடி புகுந்திருந்தான். அவனது தந்தையும் தாயும் இங்கே வர இன்னும் ஒரு வருடமாகும். அதுவரை ஷோபனாவையும் அஷ்வினையும் கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு மனமெங்கும் வியாபித்திருந்தது.
ரஞ்சன் பெற்றவர்களிடம் பேசிவிட்டு அலுவலம் கிளம்ப, ஷோபனா உணவை ஊட்டிவிட்டு மகனைப் பள்ளிக்கு தயார் செய்தாள். அவனது கழுத்துப் பட்டை சற்றே விலகியிருக்க, அதை சரி செய்தவள், “அஷு… டிவியை ஆஃப் பண்ணு. போகலாம்…” என மகனின் பள்ளிப் பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு நடக்க, சின்னவனும் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு வெளியே ஓடினான்.
பள்ளிப் பேருந்திற்காக இவர்கள் காத்திருக்க, தினமும் வழக்கமாய் சந்தனாவும் மனோவும் வந்து நின்றனர். அஷ்வினும் மனோவும் ஒரே பள்ளியில்தான் பயின்றனர்.
முதல்நாள் சந்தனாவைப் பார்த்ததும் ஷோபனா தங்களுக்கு உதவி செய்தவள் என்ற வகையில் அவளைப் பார்த்து சிரித்தாள். இருவரும் பரஸ்பர புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். ஷோபனா சட்டென யாரிடமும் எளிதில் பழகிவிட மாட்டாள். அதனாலே ஒரு மாதமாய் வெறும் புன்னகை மட்டும்தான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
சிறியவர்களுக்கு அப்படி எந்த நூற்றி நாற்பத்து நாலு தடையும் இல்லாததால் ஒருவருக்கொருவர் நட்பாகத் தொடங்கினர். அஷ்வின் மனோவை அண்ணா என அழைத்துப் பழக, அவனும் புதிதாய் கிடைத்த உறவை கைநீட்டி அணைத்துக் கொண்டான். இருவரும் காலையில் ஒன்றாய்தான் பேருந்தில் ஏறுவார்கள். வீட்டிற்கு வரும்போது கூட ஒன்றாய்தான் வருகைதருவர்.
அஷ்வின் சந்தனாவிடம் ஒட்டிக் கொண்டான். இவனாகச் சென்று அவளிடம் பேசுவான். அவளும் தூக்கி வைத்துக் கொஞ்சுவாள். மனோவுக்கு சற்று பொறாமைதான். இருந்தும் அஷூவைத் தம்பியாய் ஏற்றுக் கொண்ட காரணத்தால் கண்டு கொள்ளவில்லை.
அங்கிருந்த கல்மேஜையில் ஷோபனா அமர்ந்திருந்தாள். அவளது விழிகள் அலைபேசியில் இருந்தாலும், மகனை அடிக்கடி பார்த்துக் கொண்டன.
மனோவும் அஷ்வினும் ஏதோ குசுகுசுவென பேச, சந்தனா அவர்களை சிரிப்புடன் பார்த்தாள். அஷ்வின் இவளிடம் ஏதோ கேட்க வருவதும், பின்னர் தயங்குவதுமாய் இருக்க, “அஷூ... இங்க வா!” என அழைத்தாள். அவனும் அவளருகில் சென்றான்.
“என்கிட்ட எதுவும் கேட்கணுமா?” என சந்தனா வினவ, “ஆமா ஆன்ட்டி…” என தலையை பலமாய் ஆட்டினான்.
“என்ன வேணும் அஷ்வினுக்கு?” இவள் அவனது உயரத்திற்கு குனிந்து தூக்கி தன்னருகே அமர்த்தினாள்.
“எனக்கு முட்டை சப்பாத்தி வேணும் ஆன்ட்டி…” எனக் கேட்டான் ஆசையாய்.
“முட்டை சப்பாத்தி தானே? கண்டிப்பா ஆன்ட்டி உங்களுக்கு சொஞ்சுத் தரேன்!” என அவனது கன்னத்தை வாஞ்சையாய் தடவினாள்.
“அம்மா எனக்கும்…” மனோகர் மறுபுறம் அவளது இடையோடு கட்டிக் கொள்ள, திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.
“உனக்கும் செஞ்சுத் தரேன் டா…” என அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.
“முட்டை சப்பாத்தி வித் பன்னீர் க்ரேவி வேணும் ஆன்ட்டி…” மறுபுறமிருந்து குரல் வரவும், அஷ்வினைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் புன்னகை கவிழ்ந்தது.
“பன்னீர் பிடிக்குமா அஷூவுக்கு?” சந்தனா கேட்க, “ரொம்பபபப பிடிக்கும் ஆன்ட்டி…” எனக் கையை விரித்துப் பாவனையாய்க் கூறியவனை கன்னங்கிள்ளி முத்தமிட்டாள். சின்னவன் லேசாய் வெட்கப்பட்டான்.
“ஆன்ட்டி… மனோ அண்ணாவுக்கும் உங்களுக்கும் கேக் கொண்டு வந்தேன். அம்மாவே குக் பண்ணாங்க. டேஸ்டா இருக்கும் ஆன்ட்டி…” என ஓடிச்சென்று பையைத் திறந்து ஒரு டப்பாவை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.