இதயம் 2.3

ஹ்ம்ம்… நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ என் மகனுக்கு பிடிக்காத சாப்பாடு எல்லாம் மறந்து கூட நீ செஞ்சிட கூடாது”என்றவர் ரிஷிக்கு பிடிக்காத உணவை கூற, தனது பையில் இருந்து ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு கவனமாக அதை எழுதிக் கொண்டாள்.

“எல்லாத்தையும் நோட் பண்ணிட்டியா?” என்று ராதா கேட்க, “ஆங் எல்லாத்தையும் எழுதி வச்சுக்கிட்டேன் மேடம் டெய்லி சமைக்கும் போது ஒரு தடவை  செக் பண்ணிட்டு சமைக்கிற மேடம்” என்றாள்.

“ஹ்ம்ம்..  ஈவினிங் ஆறு மணிக்கு சரியா வந்துடனும் வந்ததும் என் மகனுக்கு காபி போட்டு கொடுக்கணும் அவனுக்கு டீ பிடிக்காது’ என்று ராதா மொழிய, “ஓகே மேடம்” என்று தலையசைத்தாள்.

“மதியத்துக்கு சமைக்க தேவையில்லை அவன் கம்பெனில பாத்துப்பான். நைட் டின்னர் நீ தான் செய்யணும். அவனுக்கு பிடிச்சதா பார்த்து செய். ஒரு ஆளுக்குனு ஏனோ தானோன்னு செய்யக்கூடாது சரியா?” என்று ராதா கண்டிப்புடன் கூற, “நல்லா செஞ்சு கொடுப்பேன் மேடம்” என்று பதில் கொடுத்தாள்.

“ஆமா உன்னோட பேரு என்ன சொன்ன?” என்று ராதா அவளது பெயரை நினைவுப்படுத்த முயல, “என்னோட பேரு கருணை மலர் மேடம்” என்றாள்.

“கருணை மலர்…”என்றவர் புருவம் சுருக்கி பார்க்க, “எங்க அம்மா ஒரு படத்துல வர்ற கதாநாயகி பேர் நல்லா இருக்குனு வச்சாங்க மேடம்” என்று விளக்கம் அளித்தாள்.

“வாட் எவர்” என்று அதனை ஒதுக்கி தள்ளியவர், “கிச்சன்ல இருக்க எக்யூப்மெண்ட்ஸ் எல்லாம் யூஸ் பண்ண தெரியும் தானே?” என்று வினவ, “ஆங் கேஸ் அடுப்பு மைக்ரோவேவ் ஓவன் கரண்ட் அடுப்பு எல்லாமே யூஸ் பண்ண தெரியும் மேடம் அப்புறம் வாஷிங் மெஷின் கூட யூஸ் பண்ண தெரியும் மேடம்” என்று கேட்காததுக்கும் சேர்த்து பதில் அளித்தாள்.

“வாஷிங் மெஷின் பக்கம் நீ போகக் கூடாது‌. என் மகனுக்கு அவனோட ட்ரெஸ்ஸ வேற யாரும் தொட்றது சுத்தமா பிடிக்காது. சோ நீ அந்த வேலையை பார்க்க தேவையில்லை” என்று ராதா கூற, ‘டிரஸ்ஸ தொட்றதுல என்ன இருக்கு’ என்று மனதிற்குள் நினைத்தவள் சம்மதமாக தலையசைத்தாள்.

“எல்லாத்துக்கும் மேல முக்கியமான விஷயம் எனக்கு கை சுத்தம் ரொம்ப முக்கியம். இந்த வீட்ல இருந்து ஒரு துரும்ப கூட கேட்காம நீ எடுக்கக் கூடாது” என்று அழுத்தம் திருத்தமாக கூற, “எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைச்சு சாப்பிடணும்னு தான் மீன் விக்கிறது வீட்டு வேலைன்னு பார்க்கிறேன் மேடம் எந்த காலத்திலும் அடுத்தவங்க பொருளுக்கு நான் ஆசைப்பட மாட்டேன்” என்றவளது குரலில் ரோஷமிருந்தது.

“ஹ்ம்ம்… அதான் உனக்கும் நல்லது” என்று ராதா மீண்டும் எச்சரிக்கும் தொனியில் கூற, மெதுவாய் தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.

“அப்போ நாளையிலிருந்து நான் வேலைக்கு வரலாமா மேடம்?” என்று மலர் கேட்க,  “ஹ்ம்ம் நாளைக்கு காலைல இருந்து வேலைக்கு வா. அதுக்கு முன்னாடி இப்ப உன்னோட சமையல் எப்படி இருக்குன்னு நான் பாக்கணும். வாங்கிட்டு வந்த இறால் இருக்கு அதை வைச்சு மதிய சமையல் செய்” என்று கூற மலரின் விழிகள் ஒரு நொடி சுவர் கடிகாரத்தை தொட்டு மீண்டது.

ஏற்கனவே கல்லூரிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவள் இன்று அரைநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு சம்மதமாய் தலையசைத்தாள்.

“ஹ்ம்ம் போ போய் குக் பண்ணு” என்று ராதா கூற, தனது கல்லூரி பையை அந்த கூடத்தின் ஓரத்தில் வைத்தவள், “என்ன சமைக்க மேடம்” என்று வினவினாள்.

“உனக்கு இறால் வச்சி என்ன சமைக்க தெரியும்?”என்று ராதா பதில் வினவ, “இறால் பிரியாணி இறால் தொக்கு இறால் சுக்கா இறால் சிக்ஷ்டி பைவ் இறால் வறுவல் இறால் கிரேவி” என்று தனக்குத் தெரிந்தவற்றை கூற, ‘இறால் பிரியாணியும் கிரேவியும் செஞ்சிடு” என்று ராதா கூறினார்.

“சரிங்க மேடம்” என்றவள், சமையல் அறைக்கு சென்று இறாலை மீண்டும் ஒரு முறை நன்றாக கழுவிவிட்டு பிரியாணிக்கு தேவையான மசாலாவை தயார் செய்ய துவங்கினாள். மலருக்கு சமையல் கைவந்த கலை ஆகையால் வேக வேகமாக வெங்காயத்தை நறுக்கி பிரியாணிக்கு அனைத்தையும் சேர்த்து தம் போட்டவள் இறால் கிரேவிக்கு தேவையானவற்றை செய்ய துவங்கினாள். சரியாக முக்கால் மணி நேரத்தில் இறால் பிரியாணியும் கிரேவியும் அதோடு சேர்த்து தயிர் பச்சடியும் செய்து முடித்திருக்க மதிய உணவு நேரமும் வந்திருந்தது.

சமையல் முடிந்ததும் சமையலறையை நன்றாக துடைத்து சுத்தம் செய்தவள் வெளியே வந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ராதாவிடம்,  “மேடம் சமைச்சு முடிச்சிட்டேன்” என்று கூற, “ஹ்ம்ம் டைனிங் டேபிள்ல எடுத்து வை” என்று திரும்பாமலே பதில் அளித்தார்.

‘எப்படியும் இன்னைக்கு காலேஜ கட்டடிக்க தான் போறேன்’ என்று மனதிற்குள் நினைத்தவள், சமைத்த உணவை எடுத்து வந்து மேஜை மீது அடுக்கினாள்.

இங்கு ராதா கூடத்தில் இருந்தபடியே, “கண்ணா சாப்பிட வாப்பா” என்று குரல் கொடுக்க, “மா நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். எனக்கு லேட் ஆகும் நீங்க சாப்பிடுங்கம்மா” என்று உள்ளிருந்தே பதில் மொழிந்தான்.

‘பார்ரா இந்த சாருக்கு இவ்வளவு நீளமா பேச தெரியுமா?’ என்று  மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அமைதியாக நிற்க, ராதா வந்து உணவு மேஜையில் அமர்ந்தார்.

“உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா மேடம்?” என்று மலர் வினா தொடுக்க, “ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவர், “என் மகனுக்கு மெய்ட்ஸ் சர்வ் பண்றது பிடிக்காது நீ சமைச்சதை டைனிங் டேபிள எடுத்து வச்சிட்டு அவன்கிட்ட இன்பார்ம் பண்ணிடு சேவ் பண்ண வேண்டாம்” என்று மலரிடம் கூற, “சரிங்க மேடம்” என்றவள் நூறாவது முறையாக தலையை அசைத்து வைத்தாள்.

வாசனை திரவியம் பூசியது இவரிடம் தலையை பலமுறை அசைத்தது என்று மலருக்கு தலைவலியே வந்து விட்டிருந்தது. வேலை முடிந்ததும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிற்க்கே சென்று விடுவோம் என்ற முடிவுக்கே வந்திருந்தாள்.

‘அது என்ன சாப்பாடு சமைக்கிறவங்க அதே வேலைக்காரங்க தானே அவங்க சாப்பாடு எடுத்து வச்சா பிடிக்காதா? இந்த சார் சரியான  அப்பாடக்கரா இருப்பாரு போலவே’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், ராதாவிற்கு உணவைப் பரிமாறி விட்டு அவரது முகத்தையே ஆர்வமாக பார்த்தாள்.

பிரியாணியை எடுத்து வாயில் வைத்து சுவைத்தவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. மலர் முதல் முறை சமைக்கப் போகிறோம் இவர்களுக்கு பிடிக்க வேண்டுமே என்று பார்த்து பார்த்து சமைத்திருந்ததால் உணவு கூடுதல் சுவையுடன் இருந்தது.

மற்றொரு கவளம் உணவை எடுத்து வாயில் வைத்தவர், “ஹ்ம்ம் சாப்பாடு ஓகே தான்.  நான் சமைக்கிற அளவுக்கு இல்லாட்டினாலும் ஒரளவுக்கு சாப்பிடுற மாதிரி தான் இருக்கு” என்று கூற, மலருக்கு புஸ்ஸென்றானது.

‘எவ்வளவு பார்த்து பார்த்து சமைச்சிருக்கேன் நல்லா இருக்குன்னு சொன்னா குறைஞ்சா போயிருவாங்க சாப்பிடற மாதிரி இருக்குனு சொல்றாங்க’ என்று மனதிற்கு பொறுமியவள் வெளியே மெதுவாய் புன்னகைத்தாள்.

“ஹ்ம்ம் இப்ப கிளம்பு நாளைக்கு காலைல இருந்து சரியா வேலைக்கு வந்துடணும். நான் இல்லைன்னு நான் சொன்ன வேலையெல்லாம் செய்யாம விடக்கூடாது அப்பப்ப சொல்லாம கொள்ளாம வந்து செக் பண்ணுவேன் சரியா?” என்று அதிகார தொனியில் கூற, “என் வேலையில நான் சரியா இருப்பேன் மேடம்” என்று பத்தாவது முறையாக அவருக்கு உறுதியளித்தவள் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அவர்களது வீட்டை கடந்து தெருமுனைக்கு வந்து, “ஊஃப்…” என்று பெருமூச்சு விட்டவள், “ஹப்பா இந்தம்மா சரியான நொச்சு போலவே. எவ்ளோ கண்டிஷன் யப்பா  சாமி முடியல
நல்லவேளை இவங்க இங்கேயே இருக்கல இருந்தா நான் நொந்து போயிருவேன். கடவுள்தான் என்னை காப்பாத்தி விட்டுருக்கு” இன்று புலம்பியவள் தலைவலியோடு வீட்டிற்கு சென்றாள்.

ரிஷி தனது வேலையை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வர, “கண்ணா சாப்பிடுறியா சாப்பாடு எடுத்து வைக்கவா” என்று ராதா வினவ, சம்மதமாய் தலையசைத்தவன் உணவு மேஜையில் அமர்ந்தான்.

இறால் பிரியாணியை அவனுக்கு பரிமாறியவர், “நான் செய்யிற அளவுக்கு இல்லைனாலும் ஓரளவு சுமாரா செஞ்சிருக்கா இந்த பொண்ணு. சாப்பிட்டு பாரு உனக்கு பிடிக்கலைன்னா வேற ஆள் கூட மாத்திக்கலாம்” என்று மகனிடம் கூற, அமைதியாய் கேட்டுக் கொண்டவன் உணவை எடுத்து வாயில் வைத்தான்.

“என்னப்பா உனக்கு ஓகேவா இந்த பொண்ணவே குக்கிங்கு வச்சுக்கலாமா?” என்று  ராதா கேட்க, “ஹ்ம்ம்… இருக்கட்டும்மா” என்று பதிலளித்தான்.

“காலையில ஏழு மணிக்கு வந்து என்னென்ன வேலை செய்யணும்னு அந்த பொண்ணுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்து இருக்கேன். கரெக்டா வேலை செய்றாளான்னு  பாத்துக்கோ இன்கேஸ் உனக்கு புடிக்கலைன்னா சொல்லு  இந்த மந்த்தோட நிறுத்திடலாம்” என்று தாய் கூற, “ப்ளீஸ் சார்” என்று கெஞ்சியவளின் முகம் நிழலாட சம்மதமாய் தலையசைத்தான் ரிஷிகேஷவ்.

இங்கு வீட்டிற்கு சென்ற மலர் தலைவலி தாங்காமல் ஒரு மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து விட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top