இது என்ன கொடுமையா இருக்கு மீன் வித்தா மீன் வாசம் வரத்தான் செய்யும்” என்று மாதவி நொடிக்க, “அதானே மீன் வாசம் வந்தா வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிடுவாங்களா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவங்க” என்று வித்யா பின்பாட்டு பாடினாள்.
“வித்து குட்டி நெஜமாவே அவங்கள பார்த்தா அப்பாடக்கர் மாதிரி தான் இருக்கு. அந்த அம்மாவோட சேலை நகை எல்லாம் பார்க்கும்போதே தெரியுது பெரிய பணக்காரங்களா தான் இருப்பாங்கன்னு. காலையில கூட என்கிட்ட வந்து நண்டு இறாலும் வாங்கிட்டு போனாங்க. அதுவும் விலையே கேட்காம வாங்கிட்டு போனாங்க தெரியுமா?” என்று தங்கையிடம் வினா தொடுத்தாள்.
“அப்படியா பெரிய பணக்காரங்களா அவங்க?” என்று வித்யா விழி விரித்து கேட்க, “அப்படித்தான்டி நினைக்கிறேன். அவங்க வச்சிருக்க காரை பாத்தாலே கப்பல் மாதிரி இருக்குடி” என்று பதில் மொழிந்தவள் துப்பட்டாவை எடுத்து தோள்பட்டையின் இருபுறமும் பின் குத்தினாள்.
“எல்லாம் சரிதான் மலரு மீன் வியாபாரம் பாக்குறவங்க மேல மீன் வாசம் வர தான செய்யும் அதுக்கு என்ன பண்ண முடியும்?” என்று மாதவி மீண்டும் கேள்வி எழுப்பினார்.
“அதாம்மா நானும் நெனச்சேன் வேற யாராவது இருந்தா மூஞ்சில அடிச்ச மாதிரி கேட்டிருக்கலாம். இவங்க வேலை கொடுக்க போறவங்க அப்படி பேச முடியுமா? அதுவும் அந்தம்மா தோரணையே எப்படி இருக்கு தெரியுமா? பரம்பரை பணக்காரங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றவள், “சாப்பாடு எடுத்து வைம்மா பசிக்குது ஒரு மணி நேரத்துல வர்றேன்னு வேற சொல்லிட்டு வந்து இருக்கேன் சரியா போகணும்” என்று மொழிந்தாள்.
“என்னவோ போடி…” என்ற மாதவி உணவை எடுத்து வர செல்ல, மலர் தங்கையிடம், “வித்து குட்டி கொஞ்சம் கிட்ட வந்து என் மேல மீன் வாசம் வருதான்னு பாத்து சொல்லு” என்று கூறினாள்.
வித்யாவும் தமக்கையின் அருகில் வந்தவள் சுற்றி சுற்றி முகர்ந்து பார்த்துவிட்டு, “சுத்தமா வரலக்கா சென்ட் வாசம் தான் குப்புன்னு அடிக்குது” என்று பதில் அளித்தாள்.
“அப்பாடி… இப்பதான் நிம்மதியா இருக்கு இனிமே தினமும் இந்த சென்ட் அடிச்சிட்டு போக வேண்டியது தான்” என்று மலர் இயம்ப, “ஆனா அக்கா உனக்கு தான் தலை வலிக்கும் இல்ல டெய்லி எப்படி போடுவ?” என்று இளையவள் கவலையுடன் கேட்டாள்.
“அதெல்லாம் பாத்துக்கலாம் விடு டி” என்று மலர் பதிலளிக்க, இவர்களது உரையாடலை கேட்டபடி படித்துக் கொண்டிருந்த முரளி தனது புத்தகத்தை பையில் வைத்து பூட்டிவிட்டு வந்து, “அக்கா நீ இந்த வேலைக்கு போய் தான் ஆகணுமா? தலைவலியோட எப்படிக்கா பார்ப்ப” என்று வருத்தம் இழையோடிய குரலில் கேட்டான்.
“முதநாள் தான்டா தலைவலிக்கும் இரண்டாவது மூனாவது நாள் பழகிரும்…” என்றவள் தாய் உணவை கொண்டு வந்ததும் அமர்ந்து உண்ண துவங்கினாள்.
“மலரு எத்தனை பேர் டி அந்த வீட்ல? நிறைய வேலை இருக்குமோ?” என்று மாதவி தன் பங்கிற்கு வருத்தப்பட, “ம்மா மொத்தம் ரெண்டு பேரு தான் நினைக்கிறேன். அந்தம்மாவும் அந்த சாரும் மட்டும் தான் இருந்தாங்க. முன்னாடி பார்த்த வேலைய விட கம்மியா தான் இருக்கும்” என்று தாயை சமாதானம் செய்தபடி உண்டு முடித்தவள் எழுந்து சென்று தட்டை கழுவி வைத்துவிட்டு வந்தாள்.
வித்யாவும் முரளியும் தங்களது பள்ளி பையை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமாக, “இரண்டு பேரும் பார்த்து போயிட்டு வாங்க” என்றவள், “நானும் போய் அவங்க கிட்ட பேசிட்டு அப்படியே காலேஜ் போயிடுறேன்” என்று தனது கல்லூரி பையை எடுத்துக் கொண்டாள்.
“டிபன் எடுத்துட்டு போ மலரு” என்ற மாதவி அவளுக்கு மதிய உணவை எடுத்து கொடுக்க, “மறந்துட்டேன் மா” என்றவள் அதை வாங்கி பையில் வைத்துவிட்டு மீண்டும் ரிஷியின் வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள்.
சொன்னபடி சரியாக ஒரு மணி நேரத்தில் ரிஷியின் வீட்டை அடைந்தவள் அழைப்பு மணியை அழுத்த இப்போது வந்து கதவை திறந்தது ரிஷிகேஷவ் தான்.
கதவைத் திறந்த கணம் குப்பென்று வாசனை திரவியத்தின் நொடி அவனது நாசியை துளைத்தது.
“குளிச்சிட்டு வந்துட்டேன் சார் இப்போ மீன் வாசனை வரல தானே சார்” என்றவள் மலர்ந்த முகத்துடன் வினவ, “ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் நகர்ந்து அவளுக்கு வழிவிட்டான்.
‘சார் வாயை திறந்து பேச மாட்டார் போல’ என்று மனதிற்குள் நினைத்தவள் உள்ளே வர, “அந்த பொண்ணு வந்துட்டாளா?” என்றபடி மாதவியும் அறையில் இருந்து வெளியே வந்தார்.
“வந்துட்டேன்ம்மா…” என்று மலர் குரல் கொடுக்க, கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் வந்து அமர்ந்தவர் எதிரில் இருந்தவளை அமரக் கூறவில்லை.
மலரும் அதனை எதிர்பார்க்கவில்லை. மலர் உள்ளே நுழைந்ததும் வீடு முழுவதும் அவளது வாசனை திரவியத்தின் மணம் பரவியது.
அவள் மேலிருந்து மீன் வாசனை வரவில்லை என்பதை உறுதி செய்த ராதா, “ஹ்ம்ம்… இதே போல டெய்லியும் குளிச்சிட்டு சுத்தமா வரணும்” என்று கூற, “சரிங்கம்மா கரெக்டா இருப்பேன்” என்று மலரும் பதில் இயம்பினாள்.
இவர்கள் இருவரும் உரையாட ரிஷி எப்போதோ அறைக்கு சென்றிருந்தான். அவனுக்கு தனது தொழில் சம்பந்தமான வேலை நிறைய இருந்தது.
ராதா, “நீ என்னென்ன வேலை செய்வ?” என்று வினா எழுப்ப, “வீடு பெருக்கிறது, தொடைக்கிறது, துணி துவைக்கிறது, எல்லாத்தையும் காய போட்டு மடிச்சு வைக்கிறது, சமைக்கிறது, பாத்திரம் விளக்குறது, அப்புறம் வாஷிங் மெஷின்ல துணி போட்டு எடுக்க கூட தெரியும்” என்று தான் செய்யும் வேலையை பட்டியளிட்டாள்.
“சமையல் நல்லா செய்ய தெரியுமா?” என்று ராதாவின் கேள்விக்கு, “அதெல்லாம் நல்லாவே செய்வேன்மா சைவம் அசைவம் ரெண்டும் நல்ல சமைப்பேன் அசைவத்துல பிரியாணி புலாவ் இறால் பிரியாணி இறால் தொக்கு நண்டு தொக்கு நண்டு பிரியாணி ப்ரைட் ரைஸ் இன்னும் நிறைய செய்ய தெரியும்மா தெரியலன்னா கூட ஒரு தடவை யூட்யூப்ல பார்த்தா கரெக்டா செஞ்சிடுவேன்ம்மா” என்று ன்று பதில் இயம்பினாள்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவர், “இந்த அம்மானு கூப்பிடுறதை நிறுத்து. எனக்கு இதெல்லாம் பிடிக்காது. ஒழுங்கா மேடம் இல்லன்ன மேம்னு கூப்பிடு” என்று ராதா அதிகார குரலில் கூற, “சரிங்க மேடம்” என்று உடனே ஒப்புக் கொண்டாள்.
“சுதாகர் கிட்ட எவ்வளவு சம்பளம் வாங்கிட்டு இருந்த?” என் ராதா கேள்வி எழுப்ப, “பத்தாயிரம் வாங்கினேன் மேடம்” என்று பதில் மொழிந்தாள்.
“சரி உனக்கு நான் பன்னெண்டாயிரம் சம்பளம் தர்றேன். எனக்கு பணம் பெருசு இல்ல வேலை சுத்தமா இருக்கணும். என் பையனுக்கு வீடு சுத்தமா இல்லாட்டினா பிடிக்காது. ஒரு தூசி கூட இல்லாம பாத்துக்கணும்” என்று ராதா மொழிய, அவரது பனிரெண்டாயிரத்திலே அகமகிழ்ந்து போனவள், “மேடம் அதெல்லாம் வாரத்துல ரெண்டு நாள் துடைக்கிறது டெய்லி கூட்டுறதுன்னு வீட்ட கண்ணாடி மாதிரி பளபளன்னு வச்சுக்குவேன். ஒரு தூசி தும்பட்டை இருக்காது” உடனடியாக பதிலளித்தாள்.
“வாரத்துக்கு ரெண்டு நாள் இல்ல ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டை தொடைக்கணும். அதுவும் ஹால் கிச்சன் மூணு ரூம் எல்லாத்தையும் தொடைக்கணும். ஒட்டடைய அடிச்சு கிளீனா வச்சுக்கணும். டஸ்ட் இருக்க கூடாது. டெய்லியும் காலையிலயும் சாயங்காலமும் வீட்ட பெருக்கணும். காலையில வந்த உடனே வாசலை பெருக்கி தண்ணீர் தெளிச்சு கோலம் போட்டுடணும்” என்று ராதா அடுக்க, “சரிங்க மேடம்” என்று கேட்டுக் கொண்டாள்.
“ஆமா உன் வயசு என்ன? பாக்க ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க. உன்னை வேலைக்கு வச்சு சைல்ட் லேபர்னு எங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன பண்றது?” என்று திடீரென எண்ணம் தோன்ற ராதா கேட்டுவிட்டார்.
“ஐயோ மேடம் எனக்கு இருவது வயசு ஆயிடுச்சு. பக்கத்துல இருக்க ஏசிஎஸ் காலேஜ்ல தான் தேர்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன். மேடம் சைல்ட் லேபர் எல்லாம் இல்லை” என்று பதறி மறுத்தாள் மலர்.
“ஓ…” என்று இழுத்தவர், “நீ காலேஜ் வேற படிக்கிறியா?” என்று வினவ, “ஆமாங்க மேடம் சுவாலஜி தேர்ட் இயர் படிக்கிறேன்” இன்று பதில் கொடுத்தாள்.
அவள் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியதை கேட்டதும் ராதாவின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் படர்ந்தது. சில நிமிடங்கள் யோசித்தவர், “மீன் விக்கிறது அப்புறம் இங்கே வேலைக்கு வர்றது காலேஜ் போறது இத்தனையும் நீ எப்படி சமாளிப்ப அடிக்கடி லீவ் போட மாட்டியே?” என்று சந்தேகமாக ராதா வினவ,
“அதெல்லாம் சமாளிச்சிடுவேன் மேடம்” என்று பதில் மொழிந்தாள்.
“உன்னோட வீடு எங்க இருக்கு?” என்று ராதா கேட்க, “இங்கதான் மேடம் பக்கத்துல மீரா ஸ்டோர் கிட்ட இருக்கு. இங்க இருந்து நடந்து போனா பதினஞ்சு நிமிஷம் ஆகும்” என்று பதில் இயம்பினாள்.
“உன் வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?” என்று ராதா கேள்வி தொடுக்க, “நான் அம்மா என்னோட தம்பி ரெண்டு தங்கச்சிங்க மேடம்”என்று பதில் கொடுத்தாள்.
“அப்பா…?” என்று ராதா நிறுத்திவிட்டு கேள்வியாக பார்க்க, “அப்பா கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க மேடம்” என்று பதில் கூறினாள்.
“ஓ… வீட்டை நீ தான் பாத்துக்குறீயா?” என்று ராதா வினவ, “ஆமாங்க மேடம். அம்மா வீட்டில் இருந்தே துணி தச்சு கொடுக்கிற வேலை பார்க்குறாங்க. இரண்டு பேரும் சேர்த்து வீட்டு செலவை பாத்துக்குறோம்” என்று பதில் கொடுத்தாள்.
“உனக்கு சொந்த ஊரே மதுரை தானா?” என்று ராதா கேட்க, “இல்லங்க மேடம் எனக்கு சொந்த ஊர் சென்னை மேடம்” என்றாள்.
“ஓ… சென்னையில எந்த இடம்?” என்று கேள்வி வர, “சென்னையில வவ்வா குப்பம் மேடம்” என்க, அடுத்த கணமே “குப்பமா…?”என்று கேட்டவரது முகத்தில் ஒருவித அசூகை படர்ந்தது.
அதனைக் கண்ட மலர் முகம் மாறாதிருக்க வெகுவாக சிரமப்பட்டாள். மதுரைக்கு வந்ததிலிருந்து நிறைய பேரிடம் இதே போன்று ஒரு பாவணையை எதிர்கொண்டிருக்கிறாள். சில சமயம் கோபப்பட்டு, “குப்பத்துக்காரங்க எல்லாம் மனுஷங்க இல்லையா எதுக்கு முகத்தை அப்படி வச்சுக்குறீங்க?” என்று சண்டைக்கு கூட சென்றிருக்கிறாள்.
ஆனால் இப்போது அப்படி கேட்டுவிட முடியாது. என்ன இருந்தாலும் சம்பளம் கொடுக்க போகும் முதலாளி ஆயிற்றே. நிர்மலான முகத்துடன் அமைதியாக நின்றிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு, “வேலைக்கு கரெக்டா வரணும். சும்மா காலேஜ் போகணும் எக்ஸாம் இருக்கு அது இதுன்னு சொல்லிட்டு அடிக்கடி லீவ் போடக்கூடாது. மாசத்துல ஒரே ஒரு நாள் லீவ் போட்டுக்கலாம் அதுக்கு மட்டும் தான் உனக்கு பர்மிஷன்” என்று ராதா கண்டிப்புடன் கூற, “உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுன்னு நம்புறவ மேடம் நான். வாங்குற சம்பளத்துக்கு கரெக்ட்டா லீவு போடாம வந்து வேலை பார்த்திருவேன் மேடம்” என்று உறுதியளித்தாள்.
“காலையில் ஏழு மணிக்கு சரியா வந்துடனும் என் பையன் காலையில எந்திரிச்சதும் சத்துமாவு கஞ்சி குடிப்பான் செய்யத் தெரியும் தானே?” என்று ராதா கேள்வி கேட்க, “செய்ய தெரியும் மேடம் சுதாகர் அண்ணன் பையனுக்கு தினமும் செஞ்சு கொடுப்பேன்” பதில் இயம்பினாள்.
“வந்ததும் என் பையனுக்கு சத்துமாவு கஞ்சி செஞ்சி கொடுத்துட்டு வாசலை பெருக்கி கோலம் போட்டுட்டு வீடு ஃபுல்லா பெருக்கி ஒட்டடை அடிக்கணும். அப்புறம் காலையில் சமையல் செய்யணும்” என்று ராதா வேலைகளை பட்டியலிட, “சரிங்க மேடம்” என்று அமைதியாய் கேட்டுக்கொண்டாள்.
“உனக்கு வெரைட்டியா சமைக்க தெரியும் தானே? டெய்லி ஒரே சாப்பாடு செய்யக்கூடாது என் பையனுக்கு பிடிக்காது அவன் வெரைட்டியா சாப்பிட தான் ஆசைப்படுவான்” என்று ராதா மகனைப் பற்றி கூற, “எனக்கு சமையல் நிறைய தெரியும் மேடம். எங்க அப்பா கல்யாண வீட்டுக்கெல்லாம் சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்ற வேலை தான் மேடம் பாத்தாரு. எல்லா வகையான சாப்பாடு செய்ய தெரியும். தினமும் விதவிதமா சமைச்சு கொடுப்பேன் மேடம்” என்றாள்.