தான் அவர்கள் வீட்டிற்குள் நுழைவது தவறென அவளின் மனதில் ஆழப்பதிந்துவிட்டிருந்தது. தாய் இரவு அழுததும் கொஞ்சம் புரிய, இனிமேல் அந்த வீட்டிற்குள்ளே நுழையக் கூடாதென மனதில் அழுந்தப் பதிந்து கொண்டாள்.
மீண்டும் வராண்டாவில் வந்து சாய்ந்தமர்ந்தவள் நிமிர்ந்து மரங்களை வேடிக்கைப் பார்த்தாள். உமாகாந்தன் வேலைக்கு கிளம்பி வெளியே வந்தார். இவள் அமர்ந்திருக்கவும், புன்னகைத்தார்.
அவரைப் பார்த்து சந்தனாவும் சிரித்தாள். சதாம்பிகாவைப் பார்த்ததும் அவளுக்குத் தன்னாலே ஒரு பயம் மனதோரம் துளிர்த்திருந்தது. ஆனால் இவரைப் பார்த்து அப்படியெதுவும் தோன்றவில்லை.
“ஃபேன் போட்டுக்கலாம் இல்ல மா. இப்படி ஸ்வெட் ஆகுது உனக்கு?” என அவர் கூற, அப்போதுதான் நிமிர்ந்து மின்விசிறியைப் பார்த்தாள்.
“இல்ல சார், வேணாம். நான் அங்கப் போய் விளையாட போறேன்!” என்றாள்.
“விளையாடப் போகும்போது ஃபேனை ஆஃப் பண்ணிக்கோ. இப்போ நான் ஆன் பண்ணி விட்டுட்டு போறேன்!” என்றவர் காலணியை அணிந்துவிட்டு மின்விசிறியை உயிர்ப்பித்தார்.
அவர் அகன்றதும் சந்தனா நிமிர்ந்து பார்க்க, விசிறி சுழன்றது. உள்ளே எட்டிப் பார்த்தாள். சதாம்பிகா வந்தால் இதற்கும் எதாவது கூறுவாரோ என பயம் வந்தது.
அவர்களது வீட்டு மின்விசிறியை கேட்காமல் போட்டது தவறென திட்டுவார் என நினைத்தவள் எழுந்து நின்று பொத்தானை அழுத்தப் பார்க்க, அவளுக்கு எட்டவில்லை. எக்கி எக்கி அவள் முயற்சிக்க, சதா அவளது சப்தம் கேட்டு வெளியே வந்தார்.
அவர் என்னவெனப் பார்க்க, “மேடம் சார்தான் ஃபேனை போட்டாரு. நான் போடலை. நான் அங்கப் போய் மண்ணுல வீடு கட்டப் போறேன். அதான் அமத்தப் போனேன்” என்றாள் பயத்துடன்.
அவர் எதுவும் கூறாது மின்விசிறியை அணைத்துவிட்டு மகனுக்கு உணவு கொடுக்கச் சென்றுவிட்டார். இவள் நேற்றைக்குப் போல இன்றைக்கும் மணலில் வீட்டைக் கட்டினாள்.
அது முன்பு கட்டியதை விட இன்னுமே அழகாய் வந்திருக்க, தாயிடம் காட்டி அவரது பாராட்டுதலை பெற வேண்டும் என்றொரு அவா. ஆனால், அவரை அழைக்க செல்லாது அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டாள். வீட்டிற்கு செல்லும்போது காண்பித்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் அமர்ந்திருந்த இடத்தை சூரியன் ஆக்கிரமிக்கவும், அவளால் உட்கார முடியவில்லை. வரண்டாவிற்கு எழுந்து சென்றுவிட்டாள். உள்ளே எட்டிப் பார்க்க, பூரணி வேலையாய் இருந்தார்.
பசித்தது அவளுக்கு. காலை ஏழு மணிக்கே பூரணி மகளுக்கு உணவைக் கொடுத்துவிட, பதினோரு மணியளவில் வயிறு காலியாகியிருந்தது.
“நல்லா சாப்பிடு குட்டி. அங்கப் போனா எதுவும் கிடைக்காது. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்புறம் தான் சாப்பாடு தருவேன்!” எனக் காலையில் பூரணி கூறியது நினைவு வந்தது. வீட்டிற்கு சென்றப் பின்னே தான் மதிய உணவு என்று புரிய, காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
வரும்போது கொண்டு வந்த தண்ணீர் பொத்தல் அருகேயிருக்க, அதைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டாள். பசி மட்டுப்பட்டதும் விழிகள் மெதுவாய் மூட, அமர்ந்தபடியே உறங்கிப் போனாள்.
“குட்டி… குட்டி எழுந்திரி. வீட்டுக்குப் போகலாம்!” பூரணி மகளை எழுப்ப, விழிகளை கசக்கிக் கொண்டே எழுந்தாள்.
“வீட்டுக்குப் போய் தூங்கலாம். வாடி…” என அவர் காலணிகளை அணிய, “ம்மா… நான் வீடு கட்டுனேன். வந்து பாரும்மா!” என சந்தனா மணலருகே தாயை அழைத்துச் சென்றாள்.
“நல்லா இருக்கு குட்டி…” என்றவர் அங்கே வெளியே இருந்த விளக்குமாறை எடுத்து அந்த வீட்டை இடித்து மணலை ஒருபுறமாகத் தள்ளினார்.
“ம்மா… என்னம்மா நான் கட்டுன வீட்டை இடிக்கிற?” சந்தனா தாயை முறைத்துவிட்டு உதட்டைப் பிதுக்க,
“நாளைக்கு வந்து இதைவிட பெருசா கட்டிக்கலாம் குட்டி. மண்ணை இங்க வரை வாரி இறைச்சு வச்சிருக்க. அதான் கூட்டித் தள்ளுனேன். நீ போய் காலைக் கழுவு. மண்ணா இருக்கு பாரு!” என அவர் கூறவும் இவள் சென்று காலைக் கழுவிவிட்டு வந்தாள்.
“ம்மா… அந்த பூச்செடியெல்லாம் அழகா இருக்குல்ல மா?” சின்னவள் கூற, “ஹம்ம்…” என நடந்தபடியே பதிலளித்தார் பூரணி.
“அந்தப் பூவை பறிச்சுக்கலாமா மா?” இவள் தாய் முகம் பார்க்க, “இல்ல குட்டி, பூவை பறிக்க கூடாது. ஓனரம்மா திட்டுவாங்க. அது அவங்களோட செடி!” என்றார் மகளுக்குப் புரியும்படி. இந்த இரண்டு நாட்களிலே சதாவை ஓரளவிற்கு அவரால் அனுமானிக்க முடிந்தது.
“அப்படியா மா?” எனக் கேட்டவளின் குரல் உள்ளே சென்றிருந்தது. அவளுக்கு ஏற்கனவே சதா திட்டுவாரென பயம் இருந்தது. இப்போது தாயும் அதையே கூறினார்.
“ம்மா… பூவை பறிக்க மாட்டேன். தண்ணி மட்டும் ஊத்தவா மா?”
“வேணாம் குட்டி. நிறைய தண்ணி ஊத்துனா செடி அழுகிடும். கரெக்டா தண்ணி ஊத்தணும்!”
“ம்மா… நீ ஒரு தடவை ஊத்திக் காட்டு. நான் அதே மாதிரி ஊத்துறேன் மா. ப்ளீஸ் மா!” சின்னவள் கெஞ்ச,
“சரி, நாளைக்குப் பார்க்கலாம்!” என்றார் அப்போதைக்கு அவளை சமாளிக்கும் பொருட்டு.
அவர்கள் கடையைக் கடந்து செல்ல, “ம்மா… பசிக்குது மா. ரொட்டி வாங்கித் தரீயா?” எனக் கேட்டவளின் பார்வை கடையை மொய்த்தது. தந்தை இருந்தவரை தினமும் கேட்காமலே அவளுக்கு ரொட்டி வாங்கித் தருவார். இப்போதெல்லாம் யாருமே வாங்கித் தருவதில்லை என மனம் ஏங்கியது.
மகளின் முகத்தைப் பார்த்தவர், “இன்னைக்கு ஒருநாள்தான் வாங்கித் தருவேன். தினமும் கேட்க கூடாது குட்டி!” என அவர் கூறிய பின்பாதியைக் கிடப்பில் போட்டவள், “சரி மா…” எனத் தலையை அசைத்தாள்.
பத்து ரூபாய்க்கு அவளுக்கொரு ரொட்டியை வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றார் பூரணி. மதிய உணவை உண்டு முடித்து மீண்டும் நான்கு மணிக்கு மேல் தாயும் மகளுமாக சதாம்பிகா வீட்டுக்குச் சென்றனர். சந்தனா வெளியே அமர்ந்திருக்க, பூரணி காலையில் துவைத்த துணியை மடித்து வைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை வீட்டைப் பெருக்கி, மதியம் அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு, இரவு உணவைத் தயாரிக்கலானார்.
உமாகாந்தன் வேலை முடிந்து வந்தார். சந்தனா வெளியே அமர்ந்திருக்க, “இங்க வா மா, உன் பேரென்ன?” என வினவினார்.
“குட்டி… சந்தனா குட்டி சார்!” என்றாள் பற்கள் தெரிய புன்னகைத்து.
“சந்தனா குட்டிக்கு சாக்லேட்!” என அவர் விலை உயர்ந்த இன்னட்டை அவள் முன்னே நீட்டினார். அந்த இன்னட்டை சுவைக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்தது.
ஆனாலும் தாய் யாரிடமும் எதுவும் வாங்கக் கூடாதென அறிவுறுத்தியிருக்க, “இல்ல சார்… வேணாம்!” என்றாள் அவர் கையைப் பார்த்துக் கொண்டே.
“பரவாயில்லை, வாங்கிக்கோ மா!” என அவர் கையை முன்னே கொண்டு வர, “இல்ல சார், எனக்கு பூச்சி பல்லு. மிட்டாய் சாப்ட்டா அம்மா திட்டுவாங்க!” என்றாள்.
அவள் முகத்தை வைத்தே அகத்தைக் கணித்த உமாகாந்தன் பெருமூச்சோடு நகர்ந்தார். பெண் பிள்ளைகள் இன்றைய சூழ்நிலையில் எல்லோரிடமும் இப்படி இருந்தாக வேண்டிய கட்டாயம் உணர்ந்திருந்ததாலோ என்னவோ அவளைக் கட்டாயப்படுத்தாது நகர்ந்திருந்தார். பூரணி சமைத்து முடித்துவிட்டு வர, தாயும் மகளும் வீடு வந்து சேர்ந்தனர்.
காலையில் வைத்த சாம்பார் மீதம் இருக்க, தனக்கும் மகளுக்கும் தோசையை சுட்டு முடித்திருந்தார். நாளைக்கு மகளைப் பள்ளியில் விட வேண்டும் என அதற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்தார். புதிய பள்ளிக்கு செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தாயிடம் வளவளத்தவாறே சந்தனா உறங்கிவிட, பூரணியும் நித்திரா தேவியை சரணடைந்திருந்தார்.
தொடரும்…