ஆறுமணி நேரம் கழித்து அலறி ஒலிக்க, ரஞ்சன் முதலில் கண்விழித்து அதை அணைத்து வைத்தவன், மருந்தை எடுத்தான். ஷோபனா சின்ன முறைப்புடன் எழுந்து முடியைக் கொண்டையிட்டு மகனது உடல் சூட்டை ஆராய்ந்தாள். இப்போது
சூடு நன்றாய் குறைந்துவிட்டிருக்க, கணவன் கொடுத்த மருந்தை மடியில் அவனைக் கிடத்திக் கொடுத்தாள். தூக்கத்தில் சிணுங்கி அடம்பிடித்து முகத்தை அஷ்டக் கோணலாக்கி குடித்து முடித்திருந்தான் அஷ்வின்.
“நான்தான் பார்த்துக்குறேன்னு சொன்னேன் இல்ல ரஞ்சன்!” என அதட்டலுடன் அவள் மகனைத் தட்டிக் கொடுக்க, இவன் எதுவும் பதிலுரைக்காது குப்புறப்படுத்து பாதியில்விட்ட உறக்கத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கினான். எட்டி அவனது தலையை இவள் கோத, அந்தக் கையைப் பிடித்து முத்தமிட்டான் கணவன். இவளுக்கு சிரிப்பு மலர்ந்தது.
திருமணத்திற்கு முன்பு ஷோபனா தன் அத்தைப் பெண் என்றளவில்தான் அவள் மீதான இவன் எண்ணம். ஏனோ யார் மீதும் ரஞ்சனுக்கு காதல் துளிர்விடவில்லை. ஷோபனாவிற்கு ரஞ்சனை பழகிய சில காலங்களிலே அத்தனைப் பிடித்துப் போனது. தூரத்து உறவாய் இருந்ததால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை.
ஒருநாள் இவள் தயங்கித் தயங்கித் தன் காதலை உரைக்க, அவன் சின்னப் பெண் என அவளிடம் அறிவுரை கூறிவிட்டு நகர்ந்துவிட்டான். ஆனால், அவள் அப்படியே எதையும் விடவில்லை. மூன்று வருடங்கள் கழித்து தாய் தந்தை தன் திருமணப் பேச்சை துவங்கும் போது ரஞ்சனைத் தவிர வேறொருவரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதியாய் நின்றுவிட்டாள்.
அதனாலே ஷோபனாவின் பெற்றவர்கள் ரஞ்சனின் தாய் தந்தையரிடம் நேரடியாக மகளின் விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர். ரஞ்சனின் பெற்றவர்களும் அப்போது அவனுக்குப் பெண் பார்க்கும் படலத்தில்தான் மும்முராமாகியிருந்தபடியால், ஷோபனாவைப் பார்த்ததும் அவர்களுக்குப் பரம திருப்தி.
தன் மகனை இந்தப் பெண் நிச்சயம் நன்றாய் பார்த்துக் கொள்வாள் எனத் தோன்றவும், மகனின் சம்மதத்தை வேண்டினர். அவன் சில நிமிடங்கள் யோசித்தவன், ஷோபனாவிடம் தனியாய் பேச வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றான்.
என்னப் பேசுவானென தெரியாது இவள் தயக்கமாய் அவனைப் பார்த்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னே அவளைப் பார்த்தது. அப்போது சிறுபெண்ணாய்த் தெரிந்தாள். ஆனால், இப்போது முகம் வயதுக்கேற்ப முதிர்ச்சியடைந்திருந்தது.
அவளையே ஆழ்ந்து பார்த்தான். நிச்சயமாய் இந்தப் பெண் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் தன் வாழ்வில் வருவாள் என அவன் எண்ணியிருக்கவில்லை. இவனது பார்வை குறுகுறுத்தாலும் தயக்கத்தை உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏன்… இல்லை வொய் டிட் யூ சூஸ் மீ?” எனக் கேட்டவனிடம் சற்றே ஆர்வம் கொட்டிக் கிடந்தது. அந்தக் கேள்வியில் இவளது உதடுகள் மலர்ந்தன.
“தெரியலையே… நீங்க பார்க்க அழகா இருக்கீங்களே, அதனால உங்களை எனக்குப் பிடிச்சிருக்குமோ?” எனக் குறும்பாய்க் கேள்வி கேட்டவளை மென்முறைப்புடன் பார்த்தான் ரஞ்சன்.
“நிஜமா, யூ ஆர் குட் லுக்கிங். பார்த்ததும் உங்களோட அப்பியரன்ஸ் என்னை அட்ராக்ட் பண்ணது சென்ட் பர்சன்டேஜ் உண்மை. பட், அப்போ எல்லாம் அதை அட்ராக்ஷன்னு நினைச்சு க்ராஸ் பண்ணிட்டேன். பட், உங்களோட பழகும்போது உங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சது.”
“இவரோட வாழ்ந்தா லைஃப் நல்லா இருக்கும்னு என் மனசு சொல்லுச்சு. அப்போதான் உங்ககிட்டே வந்து ப்ரபோஸ் பண்ணேன். நீங்க அதை கேர் பண்ணலை. சரிதான் போங்கன்னு உங்களை பாசிங் க்ளவுடா நினைச்சு மறந்துடலாம்னு நினைச்சேன். பட், கொஞ்ச நாள் கழிச்சுதான் எனக்குப் புரிஞ்சது!” என அவள் இடைநிறுத்தி அவனைப் பார்க்க, ரஞ்சன் என்னவென புருவத்தை உயர்த்தினான்.
“உங்களோட வாழ்ந்தா சந்தோஷமா இருப்பேன்னு தப்பா நினைச்சுட்டேன். உங்களோட வாழ்ந்தா மட்டும்தான் சந்தோஷமா வாழ்வேன்னு புரிஞ்சது. அதான் என் பேரண்ட்ஸ்கிட்டே சொல்லி இங்க வந்து இப்படியொரு ப்ரபோசல். ஐ க்நோ, உங்களை இப்படியொரு சிட்சுவேஷன்ல நிறுத்திட்டேன். சாரி, அட்ராக்ஷன், அன்பு, ஈர்ப்புன்னு எத்தனையோ நேம் இருக்குதான். பட், உங்களை இந்த நிமிஷம் எனக்கு அவ்வளோ பிடிக்கும். உங்களோட வாழ்ற ஒவ்வொரு நாளையும் சந்தோஷமா வாழணும். என்னோட காதலை உங்ககிட்டே கொட்டணும்னு ரொம்ப ஆசை. இதுக்கெல்லாம் பேர் லவ்னா, யெஸ் ஐ லவ் யூ!” எனக் கூறிமுடித்தவள் முகம் முழுவதும் மெலிதான பதற்றம் விரவியது. அதைக் காண்பிக்காதிருக்க அவள் பட்ட பிரம்மபிரயத்தனங்களும் அவளது கண்களில் தனக்கான உணர்வுகளும் இவனை உருகச் செய்திருந்தது.
அவளுக்கு விழிகளில் கொஞ்சம் தவிப்பு கூடிக்கொண்டே சென்றது. எங்கே வேண்டாமென்று கூறி விடுவானோ எனப் பதைபதைத்துப் போன மனதை மறைக்கத் தெரியாது நின்றவளைப் பார்த்து இவனுக்கு இன்னுமின்னும் பிடித்துப் போனது.
“ஷோபனா…” என அழைக்க வந்து பெயரை சுருக்கி, “ஷோபி… கம் ஹியர்!” எனக் கையை விரிக்கவும், அதில் அவளது முகம் முழுவதும் புன்னகைப் படரப் பார்த்தது. ஆசையும் ஆர்வமுமாய் அவனை நோக்கியவளின் இத்தனை நேரப் பதற்றம் தணிந்திருக்க, எட்டி கூடத்தைப் பார்த்தாள். இருவீட்டு பெற்றவர்களும் நின்றிருக்க, முடியாது என்றாள் சிரிப்புடன். அவன் மெதுவாய் அவள்புறம் வந்து கையைப் பிடித்தான்.
“கல்யாணம் பண்ணிக்கலாம். நான்தான் வேணும்னு வந்த இந்தப் பொண்ணை எனக்கு இப்ப கொஞ்சம் பிடிச்சிருக்கு. சேர்ந்து வாழும்போது கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். காதலிக்கவும் செய்வேன்!” என்றான். அந்த வார்த்தைகளில் இவளது விழியோரம் ஈரம் படர்ந்தது.
“என்னோட காதலை உங்ககிட்டே கொடுக்கணும்ன்றது ஆசை. பட், உங்களோட காதல்ல வாழணும்ன்றது பேராசை!” விழிகள் பளபளக்க உரைத்தவளை இழுத்து அணைத்தவன் உச்சியில் முத்தமிட, ஷோபனாவும் அவனை இறுக்கிப் பிடித்திருந்தாள். அன்று பிடித்த பிடிதான் இத்தனை வருட திருமண வாழ்க்கையை அழகாய் நகர்த்திச் சென்றிருக்கிறது. ஷோபனாவின் ஒவ்வொரு செயலிலும் கணவன் மீதான அன்பு கொட்டிக் கிடக்கும். ரஞ்சனுக்கும் மனைவி மீது அள்ள அள்ள குறையாத பாசமும் நேசமும் உண்டு.
“உங்களுக்கு வேலையில்லை பூரணி. ஒருநாள் செஞ்ச வேலைக்கு சம்பளத்தை வாங்கீட்டுப் போகலாம் நீங்க!” என்ற சதாம்பிகாவிடம் பதிலுரைக்காது அமைதியாய் நின்றார் அன்னபூரணி. வேறு வேலை எளிதில் கிடைக்காது எனத் தோன்ற, என்ன சொல்வதெனத் தெரியாது நின்றார்.
“சதா, யார்கிட்டே பேசீட்டு இருக்க?” குளித்து வந்த உமாகாந்தன் உடையை மாற்றிவிட்டு வாயிலுக்கு நடந்தபடியே வினவினார். பூரணியையும் சந்தனாவையும் கேள்வியாகப் பார்த்தன அவரது விழிகள்.
“வீட்டு வேலைக்கு ஆள் கேட்டிருந்தேன்னு மரிக்கொழுந்து நேத்து இவங்களை சேர்த்துவிட்டாங்க…” என்றவர் நடந்ததை விவரித்தார்.
“அவங்கப் பொண்ணைக் கூட்டீட்டு வந்ததால வேலை இல்லைன்னு சொல்லிட்டேன்!” இவர் கூறியதும்,
“மேடம், இனிமே வீட்டுக்குள்ள நான் வர மாட்டேன். வெளியே விளையாட்றேன். ப்ராமிஸா மேடம்!” என சந்தனா கூறினாள். தான் நேற்று செய்த தவறினால்தான் தாய்க்கு வேலை பறிபோகப் போகிறதென அந்த சிறுமிக்குப் புரிந்ததால் வார்த்தைகள் வெளியே வந்தன.
உமாகாந்தன் சந்தனாவையும் பூரணியையும் பார்த்தார். ஏனோ அவர்களிடம் மனைவி போல கடுமையைக் காட்ட மனம் வரவில்லை.
“சதா, சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டா. இனிமே வர மாட்டேன்னு அவளே சொல்றா இல்ல, விடு. பார்த்துக்கலாம்!” என்றார் அவர்களுக்கு ஆதரவாக.
“இல்லங்க… எனக்கென்னமோ ஒத்து வரும்னு தோணலை. மனோவை நினைச்சுத்தான் சொல்றேன்!” சதாம்பிகா அவர் பிடியிலே நின்றார்.
“மனோகிட்டே நான் பேசிக்கிறேன். நீ இவங்களை வேலைக்கு வச்சுக்கோ. உன்னால ஏற்கனவே முடியலை. வேற ஆளைத் தேட டைம் ஆகும். பிரச்சனையாகாமப் பார்த்துக்கலாம்!” என்று அவர் மீண்டும் அழுத்தி உரைக்கவும், சதாம்பிகாவிற்கு விருப்பம் இல்லையெனினும் சரியென தலையை அசைத்தார்.
“நன்றிங்க சார்!” என்ற பூரணியிடம் புன்னகைத்தவர் உள்ளே சென்றுவிட்டார்.
“குட்டி, எந்த சத்தம் கேட்டாலும் நீ வீட்டுக்குள்ள வரக்கூடாது. எதுனாலும் நானா வரேன். நீ இங்கேயே விளையாடு. வேற எங்கேயும் போகக் கூடாது!” என்றார் அழுத்தமாய்.
“ம்மா… நான் உள்ளே வர மாட்டேன் மா. நான் வந்தா அந்த மேடத்துக்குப் பிடிக்கலை இல்ல. இங்கேயே விளையாடீட்டு சமத்தா இருப்பேன்!” எனப் புன்னகைத்த மகளைக் காணும்போது அவருக்கு மனம் கனத்தது. இப்படியொரு நிலை எதற்காக கடவுள் கொடுத்தார் என்ற வருத்தத்துடன் வேலையை கவனிக்க சென்றார்.
சந்தனா அங்கேயிருந்த வரண்டாவில் அமர்ந்துவிட்டாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே அமர்ந்தவாறு வெளியே செல்பவர்களை வேடிக்கைப் பார்த்தாள். வாசலில் இருபுறமும் நிறைய பூந்தொட்டிகளும் செடிகளும் வரிசையாய் இருந்தன.
அவற்றை ஆசையாய் தொட்டுப் பார்த்தாள். பூவைப் பறித்துக் கொள்ள மனம் தூண்டினாலும், தொட்டுப் பார்ப்பதோடு நிறுத்திவிட்டாள். பூவைப் பறித்து மீண்டும் சதாம்பிகா தாயைத் திட்டிவிடுவாரோ என அஞ்சியது அவளின் மனது.