பார்கும் இடமெங்கும் ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தின் சுகந்தம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே மெழுகுதிரி, ரோஜா, மல்லிகை எனப் பூக்கள் என முதலிரவிற்குத் தயாராக இருந்த அறையின் கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஜீவா.
அவளது உடலைச் சுற்றி வலையால் பின்னப்பட்ட உடை. குட்டைக் கையை இழுத்து இழுத்துப் பெரிதாக்கியிருந்தாள். அவள் முழு நீளமாகக் கேட்ட கை அரை இஞ்ச் கூட இறங்கவில்லை என மாலையில் அதை இழுத்து இழுத்தே அவளுக்கு ஒற்றைக் கரம் வலித்து தொலைத்தது.
முகத்தில் உயர் ரக முகப்பூச்சு, ரோஜா நிற உதட்டுச் சாயம் என எதையுமே கலைக்கும் எண்ணமில்லாமல் வந்தவுடன் மெத்தையில் படுத்துவிட்டாள். கால், கை, இடுப்பு என இன்னதென வரையறுக்க முடியாத அளவிற்கு வலித்துத் தொலைத்தது.
அவள் முகத்திலும் அப்பட்டமான களைப்புத் தெரிந்தது. காலையில் ஓ.எம்.ஆர் சாலையிலிருந்த பெரிய மண்டபத்தில் ஊர் பார்க்க திருமணம், மாலையில் ஐந்து நட்சத்திர உணவகத்தில் வரவேற்பு என அடுத்தடுத்து அவளுக்கு மூச்சுவிட முடியாத அளவிற்கு இந்த நாள் அமைந்திற்று. அதனாலேயே களைப்பில் அடித்துப் போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தாள் ஜீவா.
தேவா குளித்துவிட்டு வந்தான். ஒரு பக்கமாகத் தலைக்கு கையைக் கொடுத்து தூங்கிய மனைவியைக் கண்டு அவனுள் பெரும் ஆசுவாசம் அமர்ந்தது. இந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய அவன் தலைகீழே நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாகப் போயிற்று என நினைத்துச் சிரித்துக் கொண்டே மெல்ல மெத்தையில் தன் அசைவு தெரியாதவாறு அவளருகே படுத்தான். கண்ணை மூடியவனுக்கு உறக்கம் வரவில்லை.
மாறாக, காலையில் அவன் தாலியை அணிவிக்கும்போது அவனைப் பார்த்து அகமும் முகமும் மலரச் சிரித்த ஜீவாவின் வதனம்தான் கண்முன்னே வந்து நின்றது. அவள் முகம் பார்க்குமாறு படுத்திருந்தவனின் சிந்தனை மெல்ல அவன் ஜீவாவைப் பெண் கேட்டு சென்ற நாளைச் சமீபித்தது.
தேவா குடும்பத்தினர் அகன்றதும் வீடே புயலடித்து ஓய்ந்ததைப் போலிருந்தது. ஜீவா கிரிஜாவைப் பார்த்தாள். அவர் அவளிடம் ஏதாவது கேட்பார் என அவரிடம் தேங்கி நின்றாள். அவள் முகத்தில் பெரும் சங்கடம். இப்படியொரு விஷயத்தௌ அவளே எதிர்பார்க்கவில்லை. அப்போது அவர் எப்படி அதிர்ந்திருப்பார் என எண்ணத்துடன் அவரையே நோக்கினாள். ஆனால், கிரிஜாவின் யோசனை இங்கில்லை. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
இப்படி திடீரென்று ஏற்கனவே திருமணம் நிச்சயம் முடிந்த பெண்ணைக் கேட்டு வருவார்கள் என அவர் எண்ணியிருக்கவில்லை. என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் அவர் ஸ்தம்பித்து நிற்க, ஜீவா உடை மாற்றி வந்தவள், தரையில் அமர்ந்து தாயின் மடியில் தலையைச் சாய்த்தாள்.
கிரிஜாவுக்கு அதில் சுயநினைவு வர, அவர் கைகள் அனிச்சையாக அவளது தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தன. அவள் தவறு செய்த பாவனையில் அவர் முகம் பார்த்தாள். அவருக்கும் அது புரிந்தது போல.
“நீ என்ன சொல்ற பாப்பா?” அவர் குழப்பத்துடன் கேட்டதும், மகள் யோசிக்கவே இல்லை.
“நீங்க யாரைப் பார்த்துக் கல்யாணம் பண்ண சொல்றீங்களோ, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்மா. அது முத்துக்குமாரா இருந்தாலும் சரி, தேவா சாரா இருந்தாலும் சரி” என அவள் கூறியதில் அவர் முகம் தெளிந்தது. ஒரே வார்த்தையில் நான் உங்கள் மகள் என சொல்லாமல் சொல்லிவிட்டாள் பெண். அது அவருக்கு எத்தனை நிம்மதியைக் கொடுத்தது என வார்த்தையால் விவரிக்க முடியாது.
“அம்மா எது செஞ்சாலும் உன் நலத்துக்குத்தான் செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல ஜீவா?” கிரிஜா தன் கலக்கத்தை மறைக்காமல் கேட்டதும், இவள் முறுவலித்தாள்.
இத்தனை நாட்கள் அவளைத் தன் பெற்ற பிள்ளைக்கு இணையாகத்தான் வளர்த்திருந்தார் கிரிஜா. இருந்தும் இப்படியொரு சூழ்நிலையில் அவர் தன் மனத்திற்கு எது சரியென யோசித்து முடிவெடுக்கையில், அவள் தன் தமக்கையின் மகள் என்ற எண்ணம் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை.
ஒருவேளை மகள் இன்னும் தேவாவை மனத்தில் எண்ணி மறுகிக் கொண்டிருக்கிறாளோ? என்னிடம் சொல்லத் தயங்குகிறாளோ? இதுவே அவளது பெற்ற தாயாக இருந்தால் மனம் திறந்து பேசியிருப்பாளோ எனப் பலவிதமான எண்ணங்கள் அவரை அலைக்கழித்துப் பார்த்தன.
“ம்மா…” அவள் அவர் கையைத் தட்டிக் கொடுத்தபடியே எழுந்து முடியைக் கொண்டையிட்டாள். அவளுக்கு அப்படியெல்லாம் தோன்றவேயில்லை. கிரிஜா வடிவில் வனஜாவைப் பார்த்தாள்.
“நைட்டுக்கு என்ன டிபன் செய்யட்டும்மா, பூரி சுட்டு பன்னீர் குருமா செய்யவா? வேலு கேட்டுட்டே இருந்தான்” என அவர் சிந்தனையைக் கலைக்க முயன்றாள்.
“ஜீவா… அம்மா கேட்குற ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. இன்னும் நீ அந்தப் பையனை நினைச்சுட்டு இருக்கீயா?” இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்த்தே இருந்தாள். அவளது முதல் ஈர்ப்பிற்கு அத்தாட்சி இவர் மட்டும்தானே? அதுதான் மறுகிய மனம் கேட்டே விட்டது.
அதிராமல் மெல்ல முறுவலித்து இல்லையெனத் தலையசைத்தவள், “உங்களுக்கும் அப்பாக்கும் சப்பாத்தி சுடுறேன். நைட்டு நேரம் எண்ணெய்ல பொரிக்கிற ஐட்டம் வேணாம். எங்களுக்கு மட்டும் பூரி” என அவள் மீண்டுவிட்டேன் என போலியான குரலில் மிரட்டி அகல, இவருக்கு மனத்தில் எஞ்சியிருந்த கொஞ்சம் நிம்மதியும் காணாமல் போயிருந்தது.
ஜீவா வேண்டுமென வாய்விட்டுக் கேட்கும் ரகமல்ல. பெற்ற தாயை இழந்தபோதுகூட அழுகையைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டாள். யாரிடமும் பகிராமல் தனிமையில் அழுது கரைந்தவள். இதுவரை அது வேண்டும், இது பிடித்திருக்கிறது என அவள் வாய்விட்டுக் கேட்டதே மிகச் சொற்பம். அவர் என்ன செய்தாலும், எது வாங்கிக் கொடுத்தாலும் மறுக்க மாட்டாள். அப்படியே ஏற்றுக் கொள்வாள்.
தேவாவை மகளுக்குப் பிடித்திருந்தது என்பதே அவள் ஒருநாள் அவன் திரைப்படத்தைப் பார்த்து ஏங்கியழுதபோதுதான் கண்டு கொண்டார். அப்போதுகூட வாய் வார்த்தையாக ஜீவா அவரிடம் அதைக் சொல்லவில்லை. இவராக அதட்டி என்னவென விசாரித்து விஷயத்தை இன்னதென அறிந்திருந்தார்.
“பாப்பா… இது இந்த வயசுல வர்ற சாதாரண விஷயம். ஒரு சிலரை நமக்கு காரணமில்லாம பிடிக்கும். அதுபோலத்தான் இதுவும். நீ ரொம்ப குழப்பிக்காத. அந்தப் பையனைப் பாரு, கஷ்டப்பட்டு முன்னேறிப் போயிருக்கான். அதை நினைச்சு சந்தோஷப்படு. நீயும் உனக்கான பாதையில முன்னேறு. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சுக் கொடுப்பேன். என் மேல நம்பிக்கை வைடா!” என அவர் அவளை ஆற்றுப்படுத்தினார்.
ஜீவா, தேவா என்ற மனிதனிடமிருந்து முழுதாக மீளவில்லை எனினும், உணவகம், வேலை அது இதுவென வாழ்க்கை அவளை அவனிடமிருந்து தூரத் தள்ளியிருந்தது. அவனை மறந்திருந்தாள். ஆனாலும் கூட ஆழ்மனத்தில் அந்த முதல் ஈர்ப்பு பசுமையாக இன்றளவும் இருந்தது. அவ்வப்போது அவனைப் பற்றிய செய்திகளைக் கேட்பதோடு சரி. அவனைப் பார்க்க முயற்சியெல்லாம் அவள் செய்யவில்லை.
வருடங்கள் மெல்ல கடக்க, மகளுக்கு வயது கூடுகிறதே எனத் தேடியலைந்து முத்துக்குமாரை இவள் முன்னே நிறுத்தினார் கிரிஜா. அதற்கு முன்னே நிறைய வரன்களை அவரே தட்டிவிட்டிருக்கிறார். முத்துக்குமார் ஒருவன்தான் அவர் மனதிற்குத் திருப்தியாக இருந்தான்.
அவனின் அம்மா நிரம்பப் பொறுமைசாலி, வெள்ளை மனம் உள்ளவர். இப்படியொரு குடும்பத்தில் மகள் நன்றாக வாழுவாள் என்பது அவரது எண்ணம். அவர் முத்துக்குமார்தான் உன் வாழ்க்கைத்துணை என அவனை அழைத்து வந்து நிறுத்தியபோது ஜீவா எவ்வித மறுப்பும் கூறவில்லை.
“உங்களுக்கு சரின்னு தோணுதாம்மா? அப்போ எனக்கு ஓகேதான். நீங்க ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!” என இரண்டே வார்த்தையில் சம்மதம் தெரிவித்தாள். அவள் மறுப்பாள், வேண்டாமென அடம் பிடிப்பாள் என அவர் எண்ணியிருந்தவை எல்லாம் பொய்த்துப் போயின. தன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை வாயடைத்துப் போகச் செய்தது. இருபத்தியேழு வயதில் பெற்றோர் பார்க்கும் வரனை இந்தக் காலத்தில் மணம் முடிக்கும் பெண்கள் வெகு குறைவு.
அப்படிப்பட்ட பெண்ணிற்கு இப்போது நாம் செய்வது பெரும் தவறோ என அவருக்கு மனம் உறுத்தியது. தேவாவை அவருக்குக் கடந்த சில வருடங்களாகத் தெரியும். மற்றபடி அவனைப் பற்றி முழுதாக அறியாதவர். அவன் தற்போதிருக்கும் சினிமா துறையின் மீது அவருக்குப் பெரும் அதிருப்தி உண்டு. சினிமா துறையில் உள்ளவர்களுக்கு திருமணம் என்பது ஒரு பொருட்டே கிடையாது.
அவர்கள் நினைத்தால் சமூக வலைதளப் பக்கத்தில் அரை பக்கத்திற்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி பத்து பதினைந்து வருடத் திருமண பந்தத்தை இரண்டே நிமிடத்தில் எளிதாக முடித்துக் கொள்வார்கள். அப்படியொரு நிலையில் தன் மகள் நின்றுவிடக் கூடாது என அவர் மனம் பதறிற்று. தேவா மீது அவர் குற்றம் சுமத்தவில்லை. இன்றைய தலைமுறையின் செயல்பாடுகள் மீது அவருக்குப் பெரிதாக உடன்பாடில்லை.
அவருக்கு ஜீவா காலம் முழுவதும் ஒரு நல்ல துணையோடு நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும். இப்போது அவர்கள் ஓரளவிற்கு வசதியாக இருக்கிறார்கள். இரண்டு பெண் பிள்ளைகளுக்கென அவர் நகை, பொருள் எனச் சேர்த்து வைத்திருக்கிறார். அதுவே அவர்களுக்குப் போதும்.
வங்கிக் கணக்கில் பத்து இலக்கப் பணம் அவருக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. மாறாக மகளுக்கு ஒரு அமைதியான நிம்மதியான வாழ்க்கையைத் தர விரும்பினார். இப்போது ஜீவாவிற்கு இது வருத்தமாக இருந்தாலும், பின்னாளில் அவள் தன்னைப் புரிந்து கொள்வாள் என எண்ணி அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
ஜீவா பூரிக்கு மாவைப் பிசைந்து அதை மூடி வைத்துவிட்டு வந்து வியர்த்திருந்த முகத்தைக் கழுவினாள். அலைபேசிக் குறுஞ்செய்தி அவளை அழைக்க, எடுத்துப் பார்த்தாள்.
“யூ ஆர் சோ ப்ரிட்டீ இன் தட் சேரி!” என தேவா என்னவோ வர்ணித்து அனுப்பியிருக்க, இவள் சில நொடிகள் அந்தச் செய்தியைப் பார்த்தபடியே நின்றுவிட்டாள். அவன் வேறு ஏதோ தட்டச்சு செய்வதை உணர்ந்து, படக்கென அவன் எண்ணை முடக்கினாள். அவனுடைய வலைதளப் பக்கங்கள் அனைத்தையும் கருப்பினாள்.