காதல் 26:
“ம்மா ஐஸ்கிரீம் வேணும்…” என்ற கவினின் குரலில் கணினியில் இருந்து பார்வையை விலக்கியவள்,
“நைட் டைம்ல ஐஸ் வேணாம். அம்மா காலையில தர்றேன்” என்று கூற,
“ம்ஹூம் எனக்கு இப்போவே வேணும்” என்று உதடு பிதுக்கினான் கவின்.
“ப்ச் சொல்றது கேட்க மாட்டியா எழில். போ போய் படு” என்று அதட்டினாள் மகிழ்.
‘உடம்பு சரியில்லைன்னு கேட்குற எல்லாத்தையும் செய்யுறதால ஓவரா அடம்பிடிக்கிறான்’ என்று மனதிற்குள் நினைத்தவள் கவின் இன்னும் நகராததை கண்டு,
“ஒரு டைம் சொன்னா உனக்கு புரியாதா…? போய் படு” என்று மீண்டும் அதட்ட,
“ப்பா அம்மா ஐஸ் தர மாட்றா…” என்று பால்கனியில் நின்று அலைபேசியில் பேசி கொண்டிருந்த குருவிடம் போய் நின்றான்.
குரு, “வில் யூ கால் லேட்டர்” என்று அழைப்பை துண்டித்தவன்,
“என்ன வேணும் கவின் செல்லத்துக்கு” என்று இளையவனை கைகளில் வாரி கொண்டான்.
“கவினுக்கு ஐஸ் வேணும்” என்று இளையவன் மொழிய,
“ஓ… ஐஸ்கிரீம் வேணுமா…? என்ன ப்ளேவர் வேணும்?” என்று வினவ,
மகிழ் நிமிர்ந்து அவனை கண்டாள். தான் வேண்டாம் என்ற பின்பும் இவன் தருகிறேன் என்கிறானே…? என்ற பாவனை அவளது முகத்தில்.
அந்த நொடி குருவும் அவளை நோக்கினான்.
“ஐஸ் சாப்பிட்டு ஹாட் வாட்டர் குடிச்சா சரியாகிடும்” என்றிட்டவன் இளையவனிடம் திரும்ப,
“எனக்கு சாக்லேட் ப்ளேவர்” என்று எழில் மொழிய,
“ப்பா எனக்கு ஸ்ட்ராபெரி” என்று இங்கிருந்து தந்தையிடம் ஓடினான் எழில்.
“உனக்கு ஸ்ட்ராபெரியா…? சரி வாங்க நாம ஐஸ்க்ரீம் பார்லர் போகலாம்” என்றிட,
“ஐ…” என்று இருவரும் மகிழ்ச்சியில் குதித்தனர்.
எழில், “ப்பா அம்மாக்கு…?” என்று வினவ,
ஒரு விநாடி அவள் மீது பார்வை பதித்தவன்,
“போய் கேளு உங்கம்மாவும் வர்றாளான்னு?” என்று மொழிந்தான்.
இருவரும் ஓடி சென்று ஒரு சேர,
“ம்மா நாங்க ஐஸ் சாப்பிட பார்லர் போறோம். உனக்கும் வேணுமா…?” என்று வினவிட,
“இல்லை எனக்கு வேணாம். ரெண்டு பேரும் நிறைய சாப்பிட கூடாது. ஒன்னு தான் சாப்பிடணும்.” என்று கண்டிப்புடன் இயம்ப,
“சரிம்மா…” என்று இழுத்து தலையசைத்தவர்கள் சிட்டாக பறந்துவிட்டனர்.
குருவும் இளைவர்களுடன் மகிழுந்தின் சாவியை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
தன்னை கடந்து செல்லும் அவனரவம் உணர்ந்தாலும் தலையை நிமிர்த்தி பார்க்கவில்லை மகிழ்.
அவர்கள் வெளியேறியதும் பால்கனியை ஒரு முறை வெறித்தவள் எழுந்து சென்று குளிர்சாதன பெட்டியில் இருந்து நீரை எடுத்து மடமடவென அருந்தினாள்.
பின்னர் மீண்டும் வந்து மடிக்கணினியை எடுத்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.
விழிகள் திரையில் இருந்தாலும் மனது இளையவர்களிடம் தான் இருந்தது. அதிகமாக பனிக்கூழை சாப்பிட்டால் சளி பிடித்து கொள்ளுமே என்ற எண்ணம் தான்.
மற்றபடி குருவை பற்றி கிஞ்சித்தும் அவள் எண்ணவில்லை. அன்று குருவிடம் பேசிவிட்டு படுத்தவள் அப்படியே உள்ளுக்குள் இறுகி போனாள்.
இந்த ஐந்தாண்டு கால வாழ்க்கை கற்று கொடுத்திராத ஒன்றை ஒற்றை நாளில் குரு கற்பித்துவிட்டானே பிறகு எப்படி மாறாது இருப்பாள்.
குருவும் அந்த சம்பவத்திற்கு பிறகு நடந்த நிகழ்வை பற்றி பேசவில்லை. என்னவோ ஒரு முறை மன்னிப்பு கேட்க வந்து அவள் பேசிய பேச்சுக்களில் இவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
அதனால் இதற்கு மேலும் தான் இறங்கி வந்து பேச முடியாது என்று நினைத்து விட்டுவிட்டான். பின்னர் மகிழ் கூறியது போல குருவிற்கு இருந்த ஆயிரம் வேலைகளில் அதனை மறந்தும் இருந்தான்.
ஆனால் ஒன்று மகிழ் மற்றும் அகிலன் மீது இருந்த எண்ணம் பல மடங்கு உயர்ந்திருந்தது. பணத்தையும் தாண்டி குணத்திற்கும் மதிப்பளிக்கலாம் என்று அவனுக்கு புரிந்திருந்தது.
காயப்படுத்தியவன் மறந்து கடந்திருக்கலாம். ஆனால் காயப்பட்டவளால் அதனை எளிதில் கடக்க இயலவில்லை.
ஏற்கனவே பெற்றோரை இழந்து தனக்கிருந்த பொறுப்புகளின் காரணமாக அமைதியாக இருந்தவள் கொண்டவன் கொடுத்த காயங்களால் இன்னும் அமைதியாகி உள்ளுக்குள் இறுகி போனாள்.
கோதை மற்றும் பிறைசூடனிடம் கூட தன்னுடைய பேச்சை குறைத்து கொண்டாள்.
தான் எப்போது இங்கிருந்து வெளியேறி செல்வோம் என்று நாட்களை எண்ண துவங்கி இருந்தாள். எண்ண வைத்திருந்தான் குரு பிரசாத்.
அவன் அத்தனை பேச்சுக்களை பேசிய பிறகு அந்நியர்களுக்கு மத்தியில் இருப்பது போல ஒரு சிந்தை நாளுக்கு நாள் வலுத்தது.
என்னவோ உணவு கூட தொண்டையை விட்டு இறங்க மறுத்தது.
அடிக்கடி மனதில் அவன் கூறிய வார்த்தைகள் முள்ளாக தைத்தது. அவசியமின்றி தன்னால் எந்த செலவும் வர கூடாது என்று கவனமாக இருந்தாள்.
பிள்ளைகள் தன்னிடம் ஏதாவது கேட்டாலும் குருவினுடைய பணத்தை உபயோகிக்காது தனக்கு அவன் கொடுத்திருந்த சம்பள பணத்தில் வாங்கி கொடுத்தாள்.
சுத்தமாக விருப்பம் இல்லாத வீட்டில் இருப்பது வெகு கொடுமையாக தான் இருந்தது.
இருந்தும் பட்ட நன்றி கடனுக்காக அங்கிருந்தாள். அவன் கொடுத்த காயங்களை போல அவன் செய்த உதவிகளும் அளப்பரியது.
அதுவும் தனது வாழ்விற்கு ஆதரமாக இருந்த கவினை நல்லபடியாக காப்பாற்றி கொடுத்திருக்கிறான்.
அதற்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் கூட மனைவியாக நடிக்கலாம் கண்டிப்பாக தவறில்லை. ஏன் தானோ இதனை அவனிடம் கூறியிருக்கிறோமே…?
ஒருவேளை அவன் தன்னை வாழ்நாள் முழுவதும் நடிக்க கேட்டாலும் தன்னால் மறுக்க இயலாது. மறுக்க கூடிய நிலையில் தான் இல்லை.
ஆனால் அதற்கு வாய்ப்பு எந்த காலத்திலும் இல்லை. அவரது வாழ்வில் இன்னொரு பெண் அங்கமாக இருப்பதில் இதற்கான சாத்தியக்கூறு ஒரு சதவீதம் கூட இல்லை.
முன்பு கசந்த உண்மையாக இருந்த ஒன்று இப்போது சற்று நிம்மதி அளிக்கக்கூடியதாக இருந்தது.
மனதிற்குள் அவன் பேசிய வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது வரை மனதில் அவன் நன்றாக குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ஹனிகாவுடன் மனம் நிறைந்து வாழ வேண்டும் என்று தான் எண்ணியது.
இந்த கணம் வரை வாழ்வில் தனக்கு மிக மிக பெரிய உதவிகளை செய்தவனை மனது கடவுளாக தான் எண்ணியது.
“மகிழ் வேலையா இருக்கியாம்மா?” என்ற கோதையின் குரல் எண்ணங்களில் உழன்றபடி இருந்தவளை கலைத்தது.
சுயம் அடைந்தவள்,
“இல்லை இல்லைத்தை வாங்க” என்று மடிக்கணினியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு எழ முயற்சிக்க,
“அட உட்காரும்மா. எதுக்கு எழற?” என்றபடி அவளருகில் அமர்ந்தார்.
“சொல்லுங்கத்தை எதாவது வேணுமா…? எதுக்கு முட்டி வலியோட மேல ஏறி வந்திங்க?” என்ற கேட்டவளது குரலில் சிறிதான ஒட்டுதல் தன்மை கூட இல்லை.
இங்கிருக்கும் வரை இவர்களிடம் நன்முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்து முயன்று தன்னை இயல்பாக காண்பித்து கொண்டாள். ஆனால் என்ன முயன்றும் அந்த பழைய பாவனைகள் வரவில்லை.
“எதுவுமே வேண்டாம்மா. நீ தான் சாப்பாடு மாத்திரை எல்லாம்