காதல் 24.2

இருட்டாக இருந்ததால் மகிக்கும் அகிலனுக்கும் குரு நிற்பது தெரியவில்லை.

உள்ளே நுழைந்ததும் தமக்கையை இறுக்கமாக அணைத்து கொண்ட அகிலனது விழிகளில் இருந்து இரண்டு சொட்டு நீர் மகியின் தோளை நனைத்தது.

அதனை உணர்ந்த மகிழ்,

“அகி அழறியா?” என்று அதிர்ந்து வினவ,

“சாரிக்கா…” என்று மொழிந்தான் அகிலன்.

தமக்கையின் கண்ணீரில் தனக்கும் விழிநீர் வழிய,

“நீ ஏன்டா மன்னிப்பு கேக்கற… நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.‌ உன் மேல தப்பு இருக்காதுனு தெரிஞ்சும் நான் உன்னை அடிச்சிருக்க கூடாது. அப்போ எனக்கு அத்தையோட கோபத்தை குறைக்க வேற வழி தெரியலைடா. நீ அவங்க கண் முன்னாடி நின்னா அவங்க கோபம் அதிகமாகி உடம்புக்கு எதாவது வந்திடுமோன்னு பயந்து தான் அப்படி பண்ணேன்” என்றவள் அழுகையுடன் தம்பியை இறுக்கி கொள்ள,

இங்கு குருவிற்கு உள்ளே ஒன்று நழுவியது…

“எனக்கு தெரியும் கா உன்னை பத்தி. நீ எந்த விளக்கமும் எனக்கு கொடுக்க தேவையில்லை. நீ என்னை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்” என்று அகிலன் மொழிந்தான்.

சில பல நிமிடங்களில் இருவரும் தங்களை மீட்டு கொள்ள நீள்விருக்கையில் அமர்ந்த மகிழ் தமையனையும் அருகில் இருத்தி கொண்டவள்,

“அகி என்ன நடந்துச்சு சொல்லு?” என்று வினவ,

“க்கா…” என்ற அகிலனது குரலில் ஏகமாய் தயக்கம்.

“என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம். சொல்லு” என்று மீண்டும் வினா தொடுத்தாள்.

“அது அக்கா…” என்று தொடங்கியவன் நடந்தவற்றை கூறி முடிக்க,

அதனை கேட்டிருந்த மகியினது முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அவள் ஏற்கனவே இது போல தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகித்திருந்தாள்.

“இதை நீ என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா இவ்ளோ தூரம் வர விட்டிருக்க மாட்டேன். வர்ஷினியை கூப்பிடு நானே பேசியிருப்பேன்” என்று மகிழ் மொழிய,

“இல்லலக்கா வர்ஷினி ஏதோ தெரியாம இந்த வயசுல வர்ற இன்பாக்சுவேஷனால பண்றா. போக போக அவளே சரியாகிடுவான்னு நினைச்சேன் கா. ஆனால் இது இவ்ளோ தூரம் வந்து நிக்கும்னு நான் நினைக்கலை. என் மேல தான் தப்பு ஸ்டார்ட்டிங்கலயே உன்கிட்ட சொல்லி இருக்கணும்”

“…”

“எங்க நான் சொல்லி அந்த விஷயம் பெரியவங்க வரை வந்துட்டா அவளுக்கு தானே கெட்ட பேருன்னு நினைச்சேன் கா. நான் அன்னைக்கு நைட் அங்க போயிருக்க கூடாது. போகாம இருந்தா இவ்ளோ ப்ராப்ளம் வந்திருக்காது. சாரிக்கா” என்று மீண்டும் வருந்த,

“விடு அகி. என்ன நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும்” என்று ஆறுதல் மொழிய,

“அன்னைக்கு நைட் அவ கையை கட் பண்ணிக்குவேன்னு சொன்னதும் எனக்கு பதட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியலை அதான் அங்க ஓடி போனேன்” என்று மீண்டும் அதையே கூறினான்.

“போதும் அகி. விட்ரு இதுக்கு மேல இதை பேச வேண்டாம்” என்று மகிழ் இயம்ப,

“க்கா என்னால தான் உனக்கு இவ்ளோ பிராப்ளம். மாமா உன்னை எதாவது சொல்லிட்டாங்களாக்கா‌” என்று சற்று அஞ்சிய குரலில் கேட்க,

“சே சே அதெல்லாம் இல்லை. உனக்கு உங்க மாமாவ பத்தி தெரியாதா? அவரு எப்பவும் எதையும் நிதானமா விசாரிச்சு யார் மேல தப்பு இருக்குன்னு பாத்திட்டு தான் ஒரு முடிவுக்கு வருவாரு. இப்போ வரைக்கும் அவர் இதை பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கலை” என்றவள் வேதனையை விழுங்கினாள்.

“அப்புறம் ஏன் கா பசங்க இந்த ரூம்ல தூங்குறாங்க?” என்று திறந்து இருந்த அறையை காண்பித்து வினவ,

“அது உங்க மாமா நடந்த விஷயத்தினால ரொம்ப அப்செட்டா இருக்காங்க. இவங்களுக்கு அது புரியாது. வழக்கம் போல அவர்கிட்ட விளையாட்டாக்கு எதாவது பண்ணி அவர் டென்சன் அதிகமாகிடும் அதான் இங்க தூங்க வைக்கிறேன். அவர்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அவர் இந்த பிராப்ளமா எப்படி சால்வ் பண்றதுன்னு தான் பாத்திட்டு இருப்பாரு” என்றிட

இங்கு இதை கேட்டு கொண்டிருந்த குரு தான் படியின் கைப்பிடியை இறுக்கினான்.

மகிழின் வார்த்தையை கேட்ட பிறகு தான் அகிலின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

தமையனது முகத்தையே பார்த்திருந்தவள்,

“அகி எனக்காக ஒன்னு செய்வியா?” என்று வினா எழுப்ப,

“சொல்லுக்கா. உனக்காக நான் என்னவேனா செய்வேன்” என்று பதில் அளிக்க,

“இது இந்த விஷயம் ஐ மீன் நடந்த உண்மை யாருக்கும் தெரிய வேண்டாம்டா. யார்க்கிட்டயும் சொல்லாதடா. வர்ஷினி ரொம்ப சின்ன பொண்ணு. செல்லமா வளர்ந்திட்டதால நல்லது கெட்டது தெரியாம வயசு கோளாறுல இப்படி பண்ணிட்டா. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா கண்டிப்பா அவளுக்கு தான் கெட்ட பேரு”

“…”

“என்ன இருந்தாலும் நாளைக்கு வேற வீட்ல போய் வாழ போற பொண்ணு. அவ வாழ்க்கை நல்லா இருக்கணும். எல்லாத்துக்கும் மேல கோதை அத்தை. அவங்க நமக்கு இன்னொரு அம்மா. இது தெரிஞ்சா கண்டிப்பா அவங்க உடைஞ்சு போய்டுவாங்க. ஏற்கனவே உடம்பு சரியில்லாதவங்க. எதாவது ஹெல்த் ப்ராப்ளம் வந்திட்டா என்ன பண்றது. எனக்காக இதை இப்படியே விட்டுட்றியாடா?” என்று தயக்கமாக தமையனை காண,

“க்கா இதை நீ என்கிட்ட சொல்லணுமா…? நானே இந்த முடிவுல தான் இருந்தேன் கா. வர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு. அவ உலகம் தெரியாத குழந்தை கா. ஏதோ சேர கூடாத ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து இப்படி பண்ணிட்டா‌. மத்தபடி அவ நல்ல கேரக்டர் தான் கா. யாருக்கும் மனசால கூட கெடுதல் நினைக்க தெரியாதவ கா. அவ வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கணும்”

“…”

“என்னால கண்டிப்பா அவ வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராது கா. இது சத்தியம். இந்த விஷயம் நம்மளோடவே முடிஞ்சு போச்சு அவ்ளோ தான். என்னை நாலு பேர் என்னை தப்பா பேசுவாங்க அவ்ளோ தான. பேசிட்டு போகட்டும் நாளை வேற விஷயம் கிடைச்சா அதை பேச போயிடுவாங்க. பிறைசூடன் தாத்தா நம்ம கஷ்டத்துல இருந்தப்போ எவ்ளோ உதவி செஞ்சு இருக்காங்க. குரு மாமா எவ்ளோ நல்லவரு.”

“…”

“அவரோட இடத்தில வேற யாராவது இருந்திருந்தா பணத்தை வச்சு ஆள ஜட்ஜ் பண்ணி நமக்கு அவுட் ஹவுஸ கூட தந்திருக்க மாட்டாங்க. ஆனால் அவங்க‌ அம்மா மாதிரி பாத்துக்கிற மாமியார் அன்பான தாத்தான்னு அநாதையா இருந்த நமக்கு எவ்ளோ அழகான குடும்பத்தை கொடுத்திருக்காங்க.  அதுவுமில்லாம என்னை இவ்ளோ செலவு பண்ணி படிக்க வைக்கிறாங்க. கூட பிறந்தவங்களுக்கே கணக்கு பாக்குற இந்த காலத்துல யார் இவ்வளவு பெரிய உதவி எல்லாம் செய்வா. ஆனால் மாமா பண்ணி இருக்காரு.”

“…”

“உனக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதா? எங்களுகாக பாத்து நீ கல்யாணமே பண்ணாம விட்ருவியோ…?  அப்படியே பண்ணாலும் எங்களையும் யார் சேர்த்து ஏத்துப்பா கண்டிப்பா சுமையா தான் நினைப்பாங்கன்னு நான் நிறைய நாள் கவலைப்பட்டு இருக்கேன். ஆனால் குரு மாமா ரொம்ப ரொம்ப நல்லவரு கா. இந்த காலத்துல இப்படிபட்ட நல்லவங்களை பாக்குறது எல்லாம் ரொம்ப அபூர்வம் கா. ஆனால் அம்மா அப்பா நமக்கு கொடுத்திருக்காங்க. எழிலையும் கவினையும் சொந்த பிள்ளைங்க மாதிரி பாத்துக்குறாங்க.”

“…”

“சொல்ல போனா குரு மாமா எனக்கு கடவுள் மாதிரி கா. அவருக்காக என்ன வேணா செய்வேன் கா. இந்த சின்ன விஷயத்தை செய்ய மாட்டேனா? கண்டிப்பா செய்றேன் கா. இது சம்மந்தமா யார் கேட்டாலும் தப்பு என் மேல தான். வர்ஷினி எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்லிட்றேன் கா” என்ற நீளமாக பேசிய தம்பியின் மன முதிர்ச்சியை கண்டு மனம் நெகிழ்ந்தவள் அவனை அணைத்து கொண்டாள்.

“உன்னை பாக்கும் போது அப்பாவ பாக்குற மாதிரி இருக்கு டா. அப்பா இருந்திருந்தா கண்டிப்பா இந்த முடிவை தான் டா எடுத்திருப்பாரு” என்றவள்,

“அகில் அப்புறம் இன்னொரு விஷயம் இதை நான் சொல்றதால என்னை செல்பிஷ்னு நினைச்சிடாதடா” என்றவள் பிறகு தயங்கி,

“நீ ஹாஸ்டல்லயே இருந்துக்கோ டா. உன்னை பார்த்தா எல்லாருக்கும் சங்கட சூழ்நிலை தான். எப்படியும் அவரு வர்ஷினிய வேற காலேஜ்க்கு மாத்திடுவாரு. முடிஞ்சவரை வர்ஷினியை சந்திக்கிறதை அவாய்ட் பண்ணிடு. உன்னை பாக்கணும் போல இருந்தா நானே கிளம்பி வர்றேன்” என்று கூற,

“க்கா இதை சொல்றதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். நானே உன்கிட்ட இதை சொல்லலாமானு திங்க் பண்ணேன். எங்க நீ கோவிச்சுப்பியோன்னு தான் நான் சொல்லலைகா. நான் இனி இங்க வரலை கா.  எனக்கு உன்னை பாக்கணும் போல இருந்தா நானே கால் பண்ணி கூப்பிட்றேன் கா. அப்படி வர முடியலைனா வீடியோ கால்ல பாத்துக்கலாம் கா. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்” என்று முடித்திட,

மகிக்கு தான் விழிகள் கலங்கியது. தமையனை பார்க்க வராதே என்று தானே கூறும் படி இந்த விதி என்னை சிந்தித்துவிட்டதே என்று உள்ளுக்குள் மறுகினாள்.

அகிலனது கையை பிடித்து கொண்டவள்,

“அகி கடைசியா ஒன்னு கேக்கணும். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. இருந்தும் எல்லா நேரமும் சூழ்நிலை ஒரே மாதிரி இருக்கது இல்லைல. உனக்கு எதாவது வர்ஷினி மேல எண்ணம்” என்று பேசுகையிலே இடை நுழைந்தவன்,

“சே சே அப்படி எதுவுமே இல்லை கா. நான் இருக்க நிலைமைக்கு படிப்பு எவ்ளோ முக்கியம்.  என்னை நம்பி இவ்வளவு செலவு பண்ணி மாமா படிக்க வைக்கிறாரு. அவருக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு நான் எப்படி இதெல்லாம் பண்ணுவேன். அவர் எனக்கு கடவுள் கா. அவருக்கு துரோகம் பண்ண நான் கனவுல கூட நினைக்க மாட்டேன். எல்லாத்துக்கும் மேல வர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு கா. அவ வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும். எப்படி பிறந்து வளர்ந்த பொண்ணு அவ வாழ்க்கை என்னோடலாம் எப்பவுமே சரி வராது”

“…”

“அத்தைக்கு தாத்தாக்கு எல்லாம் அவளை ஒரு நல்ல அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு இடத்தில கல்யாணம் பண்ணி கொடுத்து அவ சந்தோஷமா வாழ்றதை பாக்கணும் ஆசை நிறையா இருக்கும்கா. குரு மாமாக்கே தங்கச்சியை எப்படி எப்படியோ வாழ வைக்கணும் ஆசை இருக்கு. நான் அதை எப்படிக்கா கெடுப்பேன். எந்த காலத்திலும் இந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்கு வராது. ஏன் என் தகுதி என்னன்னு எனக்கு தெரியும். நீ பயப்படாதக்கா.”

“…”

“அப்புறம் நீ இதைன்னு இல்லை வேற எதை கேட்டு இருந்தாலும் ஏன் இந்த விஷயத்துல நான் தான் தப்பு பண்ணி இருப்பேன்னு நினைச்சு இருந்தாலும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன். ஏன் நீ எனக்கு இன்னொரு அம்மா மாமா அப்பா மாதிரி.  அம்மா அப்பாவ எந்த பிள்ளையும் தப்பா நினைக்க மாட்டாங்க” என்றுவிட, மகிழுக்கு விழி நீர் கன்னம் தாண்டி இருந்தது.

கடவுள் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தாலும் அவர்களை எல்லாம் சேர்த்து வைத்தது போல ஒரு தமையனை கொடுத்து இருக்கிறார். இவன் இருக்கையில் இது என்ன இதையும் விட பெரிய பிரச்சினைகளை கூட நான் சுலபமாக கடந்து வந்துவிடுவேன் என்று எண்ணி கொண்டாள்.

இங்கு குருவோ அதற்கு மேல் கேட்க இயலாது அறைக்குள் நுழைந்து விட்டான்.

அந்த நொடி மனது என்ன உணர்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புத்தியில் உரைத்தது பணத்தையும் தாண்டிய அதற்கு அப்பாற்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

அதற்கு தான் கண்முன்னே பார்த்த இருவரே சாட்சியாக இருந்தனர்.

தமக்கையிடம் பேசிவிட்ட அகிலன் அவளை உறங்க கூறிவிட்டு தான் முன்பு குடியிருந்த வீட்டில் உறங்குவதாக மொழிந்துவிட்டு அவளறியாது குருவை காண சென்றான்.

இங்கு குருவோ இன்னதென பிரித்தரிய முடியாத நிலையில் இருக்க வாசலில் நிழலாடியது.

நிமிர்ந்து பார்க்க வாசலில் தயக்கமான பாவனையுடன் நின்று இருந்த அகிலன்,

“உள்ள வரலாமா மாமா?” என்று வெகுவாக தயங்கி தயங்கி வினா தொடுத்தான்.

“ஹ்ம்ம்…” என்று குரு தலையசைக்கவும் குருவின் அருகில் வந்தவன் சில நொடிகள் மௌனம் காத்தான்.

குருவும் எதையும் பேசவில்லை. வந்தவனே பேசட்டும் என்று அமைதி காத்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க மாமா. நடந்த எதையும் இந்த மன்னிப்பு சரி செய்யாதுனு எனக்கு தெரியும் ஆனால் இதை தவிர என்ன சொல்றதுனு தெரியலை மாமா‌. உங்களுக்கு என் மேல கோபம் இருக்கும்னு எனக்கு தெரியும் மாமா. உங்க கோபம் தீர அடிக்கிறதுனா கூட அடிச்சுக்கோங்க மாமா. வர்ஷினி உங்க தங்கச்சி மேல எந்த தப்பும் இல்லை என் மேல தான் தப்பு. இதுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏதுக்கிறேன் மாமா” என்றவன் பிறகு ஒரு விநாடி நிறுத்திவிட்டு,

“என் அக்காக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லை. அவளை எதுவும் சொல்லிடாதிங்க மாமா.‌ என்னால அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாது. இனிமே நான் உங்க‌ கண்முன்னாடி கூட வர மாட்டேன்” என்றவனது குரல் தழுதழுக்க குருவினது கரத்தை பிடித்து கொண்டான்.

நொடிகள் கடந்த பிறகு, “செய்யாத தப்புக்கு நீ ஏன் மன்னிப்பு கேட்குற அகில்” என்ற குருவின் குரல் அழுத்தமாக ஒலித்தது‌…

error: Content is protected !!
Scroll to Top