காதல் 24.1

காதல் 24:

குருவால் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

எல்லா விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்று மகிழ் கூறியதை மனது நினைத்து பார்த்தது.

அத்தனை உறுதியுடன் தமையன் மீது நம்பிக்கை வைத்து அழுகையிலும் தெளிவாக பேசியவளது முகம் மனக்கண்ணில் தோன்றியது.

முதல் முறையாக வாழ்வில் தவறிவிட்டான் குரு பிரசாத்.

மகிச் சிறந்த தொழிலதிபர் குரு பிரசாத் குடும்ப விடயத்தில் தவறி இருந்தான். நியாயம் யார் பக்கம் உள்ளது என்று கோபத்தில் சிந்தித்து பார்ப்பதில் பிழை புரிந்து  இருந்தான்.

கோபம் அறிவுக் கண்ணை மறைத்துவிட்டது. தங்கையை அப்படி ஒரு கோலத்தில் கண்டவனது புத்தி சற்று சறுக்கியிருந்தது.

எது தவறு யார் மீது தவறு என்று சீர் தூக்கிப் பார்க்க தவறி இருந்தான். இதுநாள் வரை நான் எதிலும் தவறியதில்லை என்று இறுமாப்புடன் இருந்தவனது கர்வத்தில் அடி விழுந்திருந்தது.

அழுகையில் முகம் சிவந்து, ‘போதும் ப்ளீஸ்’ என்ற கெஞ்சி மடிந்து அமர்ந்தவளது வதனம் நினைவில் நிழலாடியது.

தான் பேசிய வார்த்தைகள் மனதிற்குள் ஓடியது. கோபத்தில் நிதானத்தை இழந்துவிட்டோம் என்று புரிந்தது.

தவறிழைக்காமல் தண்டனையை அனுபவிப்பது எவ்வளவு கொடுமை என்று அவனுக்கு தெரியும்.

முற்றிலுமாக நிதானமற்று தான் இழைத்த தவறை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

நடந்தவற்றை கூறிவிட்டு முகம் முழுவதும் பயத்துடன் தன்னையே பார்த்திருக்கும் தமக்கையை கண்டவன்,

“நான் பாத்துக்கிறேன். நீ போய் தூங்கு” என்று உணர்வுகளற்ற குரலில் மொழிய,

“சாரிண்ணா என்னை மன்னிச்சிடுங்க” என்று அழுகையும் தேம்பலுமாக வர்ஷினி கூற,

“ப்ச் அழாத அம்மு. போ எந்த பிராப்ளமும் வராம நான் பாத்துக்கிறேன். என்கிட்ட சொன்னதை யார்கிட்டேயும் சொல்லாத” என்று குரு இயம்ப,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் எழுந்து சென்றாள்.

போகும் வர்ஷினியையே பார்த்திருந்த குருவிற்கு தன் மீதே கோபம் எழுந்தது.

தந்தைக்கு கொடுத்த வாக்கை தன்னால் நிறைவேற்ற இயலவில்லை. குடும்பத்தினரை நன்றாக பார்த்து கொள்கிறேன் என்று கூறியவனால் அதனை காக்க முடியவில்லை.

தான் சரியாக வர்ஷினியை கவனிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இவள் இத்தனை தூரம் சென்றிருக்கமாட்டாள். தான் துவக்கத்திலே இதனை கண்டித்திருக்கலாம்.

அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம். தொழில் தொழில் என்று இதன் பின்னே ஓடி குடும்பத்தினரை கவனிக்க தவறிவிட்டோம் என்று உள்ளம் கூறியது.

இதை எல்லாம் தாண்டி சினத்தின் உச்சியில் ஏதுமறியா பெண்ணை வார்த்தைகளால் குத்தி குதறிவிட்டோமே அதனை எப்படி சரி செய்வது என்று தான் சிந்தித்தபடி இருந்தவன்,

“ப்ச்…” என்று நெற்றியை பெருவிரலால் தேய்த்தான்.

தான் கொஞ்சம் நிதானமாக சிந்தித்திருக்கலாம். தன்னுடைய விரல் தெரியாது கூட படக்கூடாது என்று அத்தனை கவனமாக இருப்பாளே அவளை தான் தான் சொல் எனும் விஷத்தால் கொன்றுவிட்டோம் என்று மனசாட்சி உரைத்தது.

இந்த ஒரு வருடத்தில் ஒரு இடத்தில் கூட அவளது செய்கையில் இப்படி ஒரு குறையை தான் கண்டதில்லையே. உறங்கும் போது கூட போர்வையை கழுத்து வரை இழுத்து சிறிதும் விலகிவிடாதவாறு உறங்குவாளே…?

இவை யாவிற்கும் மேல் தன்னை கண்டவுடன் முகம் முழுவதும் கள்ளமற்ற சிரிப்புடன்,

“அப்பா…” என்று தாவி அணைத்து கொள்ளும் இளையவர்களை கோபத்தில் திட்டிவிட்டோம்.

இருவரும் தன்னை கண்டு பயந்து நடுங்கி அழ தயாரான முகத்துடன் நின்றிருந்த காட்சி நிழலாட இவனுக்கு தன்பால் இருந்த கோபம் அதிகரித்தது.

சிறியவர்களிடம் தான் அப்படி நடந்திருக்க கூடாது இனி எப்படி அவர்கள் தன்னிடம் வருவார்கள். தன்னிடம் வரவே நிச்சயமாக அஞ்சுவார்கள் நடந்த கலவரத்தில் அவர்கள் உண்டனரா என்று தெரியவில்லை.

மகிழ் இருந்த மனநிலைக்கு அவர்களுக்கு உணவை கொடுத்திருப்பாளா? வாய்ப்பில்லை என்று எண்ணியவன் அறையில் இருந்து வெளியேறி அவர்களை காண சென்றான்.

தான் கூறிய வார்த்தைகளால் தான் மகிழ் அறைக்கு வரவில்லை என்று புரிந்திருந்தது குருவிற்கு.

இங்கு அறைக்குள்ளே வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்த மகிழுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

மனதிற்குள் குரு பேசிய வார்த்தைகளை நினைத்து நினைத்து வேதனையில் கலங்கி தவித்து மீண்டும் மீண்டும் ஆயிரம் பாகங்களாக சிதறி போனாள்.

எவ்வளவு பெரிய வார்த்தைகள் பணம் இல்லாதவர்கள் எல்லாம் பணத்திற்கு ஆசைப்பட்டு கண்டிப்பாக தவறு தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் எதாவது ஒன்று இருக்கிறதா…?

பணம் இல்லை என்றால் தங்களிடம் நல்ல குணமும் எண்ணமும் இருக்காதா? பணத்திற்கும் குணத்திற்கும் என்ன தொடர்பு.

பணத்தை வைத்து தான் ஆட்களை எல்லோரும் எடை போடுவார்களா?

யார் மீது தவறு என்று ஒரு வார்த்தை கூட தங்களது தரப்பை கேட்காது அவரே ஒரு முடிவை எடுத்துவிட்டு எத்தனை கடும் சொற்களால் என்னை தாக்கிவிட்டார்.

உனக்கு உதவி புரிந்தான்.  இத்தனை நாட்களாக நீ சுமந்த இந்த பொறுப்புகளை சிறிது காலம் வாங்கி கொண்டு உனக்கு தோள் சாய ஆள் கிடைத்தது என்று தானே அவன் மீது நேசத்தை ஏதோ ஒரு புள்ளியில் வளர்த்து கொண்டாய்.

ஆனால் இவை எல்லாம் வெறும் மாயை தான்.‌ நிஜம் என்ன இந்த நினைவுகள் கூட உனது மனதில் நெருஞ்சியாய் தான் இனி குத்தும்.

தவறே இழைக்காத ஒன்றிற்காகவே இத்தனை துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறாயே…? அவன்பால் நீ கொண்ட நேசத்தை அறிந்தால் என்ன நடக்கும் நினைத்து பார்.

அவன் கூறியது அனைத்தும் அப்பட்டமான உண்மை என்று உறுதியாகிவிடும்.

இல்லை இல்லை நான் கொண்ட நேசம் இந்த வளமான வாழ்விற்கு ஆசைப்பட்டு இல்லை என்று தனக்கு தானே கூறி கொண்டவள் தன்னுடைய நேசத்தை அந்த விநாடியே மரிக்க செய்திருந்தாள்.

விழிகளில் நீர் தானாக வடிய சடுதியில் தமையனின் நினைவு வர கடிகாரத்தை கண்டாள்.

நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது. அகிலன் நிச்சயமாக வீட்டில் இருக்க மாட்டான் என்று உறுதியாக தெரிந்தவள் அலைபேசியை தேடி எடுத்து தமையனுக்கு அழைப்பு விடுத்தாள்.

இங்கே திரையில் புன்னகையுடன் இளையவர்களை தூக்கி கொண்டு நின்றிருந்த மகிழினியின் முகத்தினையே வெறித்த அகில் அழைப்பின் இறுதி நொடியில் ஏற்றிருந்தான்.

மறு முனையில் மகிழ்,

“அகி எங்க இருக்க…?” என்று வினவ,

அகிலனிடம் மௌனம்.

“அகி உன்னை தான் கேக்குறேன்” என்று அழுத்தமாக வினவ,

“இங்க பக்கத்துல தான் இருக்கேன் கா” என்று அகிலன் பதில் மொழிய,

“பக்கத்துலனா எங்க…?”

“வீட்ல இருந்து த்ரீ கிலோ மீட்டர் தூரத்தில மெயின் ரோட்ல இருக்கேன்”

“சரி கிளம்பி வா” என்று மகிழ் மொழிய,

மீண்டும் மௌனம் கோலோச்சியது.

“உன்கிட்ட தான் சொல்றேன் கிளம்பி வா இப்போ” என்று மறுபடியும் கூற,

“இல்லை நான் வரலைக்கா அங்க. நான் வந்தா திரும்ப பிரச்சனை ஆகும்…”

“எந்த பிரச்சனையும் ஆகாது. என் பேச்சை நீ மதிச்சேனா இப்போ கிளம்பி வர்ற” என்றவள் அழைப்பை துண்டித்துவிட,

இங்கு ஒரு நிமிடம் வானத்தை வெறித்த அகிலன் மனமின்றி மகிழினியை காண குரு பிரசாத்தின் வீட்டை நோக்கி நடை போட்டான்.

இங்கு மகிழோ அறையின் கதவை லேசாக திறந்து வைத்தபடி கூடத்தில் உள்ள நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சரியாக அரை மணி நேரத்தில் வீட்டினுள் நுழைந்தான் அகிலன்.

வாசல் வரை வந்துவிட்டவனுக்கு உள்ளே வர முடியவில்லை‌.  இங்கு அகிலனது அரவத்தை உணர்ந்த மகிழ் எழுந்து சென்று,

“உள்ள வா அகி” என்று மொழிய,

அகிலன் அசையாது தமக்கையை கண்டான்.

“தப்பு பண்ணவங்க தான் அகி பயப்படணும்.‌ எந்த தப்பும் பண்ணாம நீ ஏன் தயங்கி நிக்கிற வா” என்றவள் அகிலனது கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

சரியாக அதே நேரம் அறையை விட்டு வெளியே வந்த குரு இவர்களது பேச்சை கேட்டு படிகட்டின் விளிம்பிலே நின்று கொண்டான்.

error: Content is protected !!
Scroll to Top