காதல் 19.2

“நான் என் ப்ரெண்ட் முரளிக்கிட்ட பேசிட்டேன். அவன் பேமஸ் கார்டியாலஜிஸ்ட். ஹாஸ்பிடல் ரன் பண்றான். அவன் மூலமா கவினுக்கு ட்ரீட்மெண்ட் ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று கூறியதும் மகிழுக்கு உள்ளுக்குள் ஒரு பெரியதான ஆசுவாசம் பிறந்தது.

இதில் அவன் அழுது நடிக்காதே என்று கூறியதெல்லாம் கருத்திலே பதியவில்லை.‌ அதுதான் கவினை குணப்படுத்துவது தன்னுடைய பொறுப்பு என்றுவிட்டானே இனி தன்னை என்ன கூறினாலும் ஏன் திட்டினாலும் கூட அவள் கவலையே படமாட்டாள்.

அதன் பிறகு சில நிமிடங்கள் அமைதி கோலோச்சியது. அவளுக்கு யாவும் புரிந்துவிட்டது தன்னிலைக்கு வந்துவிட்டாள் என்று உணர்ந்து,

எழுந்து நின்று, “போ போய் கவினை பாரு பக்கத்து ரூம்ல தான் இருக்கான்” என்றவன்,

“அவன் முன்னாடியே அழுது வைக்காத”என்றும் மொழிய,

சம்மதமாக தலையசைத்தவள் எழுந்து வெளியே சென்றாள்.

இங்கு அவள் அகன்றதும் குரு இருக்கையில் பொத்தென்று அமர்ந்துவிட்டான்.

விழிகள் குருதியில் நனைந்திருந்த தனது கையை வெறித்தது. சற்று நேரத்தில் ஆறாய் ஓடிய குருதி நினைவிற்கு வந்தது.‌ குருதி படிந்த சட்டையில் கரங்கள் பதிந்தது.

இன்று காலை இதனை அணியும் நேரம் இரவிற்குள் இது குருதியில் குளித்திடும் என்று நினைத்து பார்த்தானா இவன்.

என்னவோ ஒரு அலைப்புறுதல் உள்ளே. சற்று நேரத்திற்கு முன்பு அழுகையில் கதறி தனது காலை பிடித்து கொண்ட பெண் நினைவிற்கு வந்தாள்.

தலையை பிடித்து கொண்டான். அந்த கணத்தை நினைத்து அப்போதும்‌ உள்ளுக்குள் என்னவோ செய்தது. பிள்ளைக்காக கதறி துடித்து அவனது காலை கண்ணீரால் நனைத்த பெண் இவனை ஒரு நொடி கலங்க செய்திருந்தாள்.

முதன் முறையாக ஒரு பெண்ணின் கண்ணீர் தன்னையே ஆட்டம் காண வைத்துவிட்டது. ஆம் மகிழினியின் கண்ணீர் குருவை உலுக்கியிருந்தது.

அதன் விளைவே இத்தனை துரிதமான இவள் கண்விழிக்கும் முன் சிகிச்சைக்கு பேசியிருந்தான். அவள் அழவில்லை என்றாலும் பேசியிருப்பான் தான்.‌ ஆனால் இத்தனை அவசரமாக ஒருவித பதட்டத்துடன் செய்திருக்க மாட்டான்.

நிறுத்தி யோசித்து நிதானமாக கலந்தாலோசித்து செய்திருப்பான். கவினுக்கு ஒன்று என்றதும் உள்ளே துடித்தது தான்.

“அப்பா சாக்லேட்…” என்று மழலையில் அழைத்து பிஞ்சு கரங்களால் தனது காலை கட்டி கொள்ளும் அந்த சின்ன சிறிய வாண்டிற்காக மனது துடித்தது. அவனுக்கு ஏதும் நிகழ்ந்துவிட கூடாது அவனை என்ன நடந்தாலும் காப்பாற்றியே தீருவேன் என்று உள்ளம் கூக்குரலிட்டது.

ஆனால் இவை யாவையும் தாண்டி மகிழினியின் கதறல் ஒலி அவனுக்குள் ஊடுருவி இருந்தது. தன் காலை அவள் பிடித்து கொண்ட விதத்தில் உள்ளே ஒன்று இறுகியது.

இதற்கு முன் அவனது கண்முன் யாரும் இப்படி கதறியதோ கெஞ்சியதோ இல்லை. முதல் முறையாக இப்படி ஒரு அழுகை குரலை கேட்டதும் சற்று ஆடிவிட்டான். அதன் விளைவே என் முன்னால் அழுது நடிக்காதே எனக்கு பிடிக்காது என்றிருந்தான்.

என்னை ஒருத்தி அசைத்து பார்ப்பதா என்று சிறிதாய் எரிச்சல் ஆணவம் என்னவோ அவளிடம் கோபமாக பேச வைத்துவிட்டது.

ஆனால் கையை நனைத்த குருதி மீண்டும் அவனை ஆட செய்திட்டது.‌ அவ்வளவு குருதி வழிந்தும் எந்தவித சலனமும் இன்றி நான் கவினை பார்க்க வேண்டும் என்று முகம் மாறாது அவள் கூறிய விதம் அவனை அசைத்தது.

“ப்ச்…” என்று சலித்து கொண்டு எழுந்து கைகளை நன்றாக கழுவினான்.

உறைந்திருந்த ரத்தம் போவேனா என்று அடம்பிடித்தது. நன்றாக தேய்த்து கழுவியவன் கையை நுகர்ந்து பார்க்க அவளது குருதியின் வாசனை அப்படியே இருந்தது.

அருகில் இருந்த கிருமிநாசினியை கை நிறைய ஊற்றி நன்றாக தேய்த்து தேய்த்து கழுவினான்.

இங்கே மகிழ் அறைக்குள் நுழைந்தும்,

error: Content is protected !!
Scroll to Top