இனிமேல் அங்கிள பாத்து பயப்படக்கூடாது ஓகே. அங்கிள் ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன். இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் ஓகே” என்று மொழிய,
“நானும் சாரி அங்கிள். அம்மா சொன்னா அடுத்தவங்க திங்க்ஸ எடுக்குறது பேட் ஹாப்பிட்னு. இனி உங்க திங்க்ஸ தொட மாட்டோம்” என்று எழில் பெரிய மனிதனை போல கூற,
குருவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. இந்த சிறு வயதிலே இப்படி பேசுகிறானே என்று.
குழந்தை மனம் மாறாத அவன் முகத்தினை கண்டவனுக்கு சிறிதான மென்னகை பிறக்க அவனது தலையை கலைத்துவிட்டான்.
பின்னர் கவினிடம் திரும்பி,
“இந்தா இது உனக்கு தான்” என்று கூற,
“ம்ஹூம் வேந்தா அம்மா அம்மா” என்று கூற,
குருவுக்கு சத்தியமாக அந்த சிறுவனை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
இனிப்பும் கொடுத்து பார்த்தாயிற்று இபபடி கல்லூளி மங்கனாக அம்மா அம்மா என்கிறானே நான் என்ன பதில் மொழிவேன் என்று மனதிற்குள் மட்டும் தான் புலம்ப முடிந்தது.
சரி வேறு எதாவது முயல்வோம் என்று நினைத்தவன் எழிலிடம்,
“நீ இந்த கார்டூன்ஸ் எல்லாம் பார்ப்பியா?” என்று வினா எழுப்ப,
இனிப்பை பார்த்துவிட்ட ஆனந்தத்தில்,
“ஹ்ம்ம் நான் நிறைய பார்ப்பேன். ஹட்டோரி எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான் புன்னகையுடன்,
“ஓ… ஹட்டோரி பிடிக்குமா. அப்போ ஹட்டோரிய நேர்ல பாக்க போலாமா?” என்று வினவ,
“ஐ நிஜமாவா? ஹட்டோரிய நேர்ல பாக்கலாமா அங்கிள்?” என்று வினா தொடுக்க,
“ஹ்ம்ம் பார்க்கலாம். நான் உன்னை அங்க அழைச்சிட்டு போறேன். ஆனால் உன்னை மட்டும் தான். உன் தம்பி மாதிரி அழுமூஞ்சி பாய்ஸ இல்லை” என்றான்.
அதில் கவின் கவனம் இவர்களது புறம் திரும்ப,
“நா அதுமூஞ்சி இல்லை” என்று ரோஷமாக கூற,
அந்த மழலை கோபத்தில் இவனுக்கு புன்னகை ஜனித்தது. அதுவும் அவனது உச்சரிப்பில் தான் புன்னகை இமை நீண்டது.
அதனை அடக்கி கொண்டு,
“இல்லை நீ அழுமூஞ்சி தான்” என்றான்.
“நோ நா அதுமூஞ்சி இல்லை அத மாத்தேன்” என்றவன் பிறகு,
“நானும் காத்தூ பாக்க வதவா? எக்கும் ஹத்தோதி பிதிக்கும்” என்றான்.
இம்முறை அவனது பேச்சை உற்று கவனித்தவனுக்கு லேசாக புரிபட முகம் முழுவதும் புன்னகை தான்.
‘ப்பா ஒரு வழியா இவனையும் சமாளிச்சாச்சு’ என்று எண்ணியவன்,
“ஹ்ம்ம் கண்டிப்பா உன்னையும் அழச்சிட்டு போறேன். நீங்க ஹட்டோரியோட பேசலாம் டான்ஸ் ஆடலாம். ஆனால் ஒரு கண்டிஷன் என்னை பார்த்து பயப்படக்கூடாது” என்றான்.
“நீந்த எதக்கு அம்மா தித்துதிங்க ம்மா பாவம்” என்று கவின் கூற,
சடுதியில் குருவிற்கு மகிழினியின் பயந்து சிவந்த முகம் மனக்கண்ணில் வந்து போக,
“அது கோபத்தில திட்டிட்டேன்டா. இனிமேல் உங்கம்மாவ நான் திட்டவே மாட்டேன். இந்தா சாக்லேட் வாங்கிக்கோ” என்றான்.
“பிதிச்சு கொதுந்த அம்மா அப்பதி தான் ததுவா?” என்றான்.
இம்முறை குருவுக்கு அவன் மொழி விளங்காது போக எழிலிடம் திரும்பி,
“என்ன சொன்னான் எனக்கு புரியலை” என்க,
“அதை ஓபன் பண்ணி கொடுப்பிங்களாம் அங்கிள். அம்மா ஓபன் பண்ணி தான் கொடுப்பா” என்றவன்,
“எனக்கும் ஓபன் பண்ணி கொடுங்க” என்று தன்னுடையதையும் நீட்டினான்.
‘ஹ்ம்ம் இதுல மட்டும் நல்ல விவரமா இருக்கான்’ என்று எண்ணிவிட்டு இருவருக்கும் பிரித்து கொடுத்தான்.
எழில் அதனை உண்டபடியே,
“அங்கிள் இந்த பிக் ஹவுஸ் உங்களோடதா?” என்று வினவ,
“ஹ்ம்ம் ஆமா” என்று பதில் மொழிந்தான் குரு.
“இனி நாங்க இங்க தான் இருக்க போறோமா அங்கிள்?” என்று எழில் மீண்டும் வினா கொடுக்க,
“ஆமா இனி இங்கதான் நீங்க தங்க போறீங்க” என்று குரு கூறியதும் எழிலது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“நிஜமாவா அங்கிள்?” என்று நம்பாது வினா எழுப்ப,
அவனது மகிழ்ச்சிக்கு அர்த்தம் அறியாதவன்,
“நிஜம்மா” என்க,
“ஐ ஜாலி ஜாலி நாங்க பிக் ஹவுஸ்ல இருக்க போறோம்” என்று குதூகலித்தவன்,
“நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கிட்ட எல்லாம் சொல்லுவேன் நாங்களும் பிக் ஹவுஸ்ல இருக்கோம்னு” என்றான்.
குரு, “ஏன் எதுக்கு ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லணும்?” என்று வினவ,
“எல்லார்கிட்டயும் இல்ல அங்கிள் இந்த தீபக்கிட்ட தான் பர்ஸ்ட் சொல்லணும். அவன்தான் அவன்கிட்ட பிக் ஹவுஸ் இருக்கு. எங்ககிட்ட ரொம்ப ஸ்மால் ஹவுஸ் தான் இருக்குனு ஓயாமா சொல்லுவான். அப்போ எனக்கும் பிக் ஹவுஸ்ல இருக்கணும்னு ஆசை. அம்மாட்ட சொன்னேன். அம்மா சீக்கிரமா உன்னை பிக் ஹவுஸ் கட்டி அழைச்சிட்டு போறேன்னு சொன்னா. இப்போ கூட்டிட்டு வந்துட்டா” என்று குதூகலத்துடன் கூற,