உள்ளம் – 26.1

ஷெண்பா முகம் முழுவதும் அப்பிய பயத்துடன் நிற்க, ஏனோ குமரன் முகத்தையும் அவளது சிந்துமாவையும் தைரியமாய் எதிர்நோக்க முடியாது தலையைக் கவிழ்த்தாள். தன் செயல் அவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியைக் கொடுக்கும் என்று தெரிந்துதானே வந்திருந்தாள்.
சில நொடிகளில் அவளது கைகள் வியர்த்துப் பிசுபிசுத்துப் போய்விட, திவாகரின் கரங்கள் அன்னிச்சை செயலாய் அதனுடன் சேர்த்து ஆதரவு கொடுத்தன. அவனும் மற்றவர்களைத்தான் பார்த்திருந்தான்.

நொடியில் தங்களைச் சுற்றியிருந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த சிந்து, “ஷெண்பா, என்ன பண்ணீட்டு வந்திருக்க டி?” எனக் கேட்டு கோபமாய் அவள் கையைப் பிடித்திழுத்தார்.

“சிந்து மா…” மெலிதான அழுகையை அடக்கியக் குரலில் அவள் ஏதோ பேச வர, குமரனுக்கு திவாகரின் மீது சுறுசுறுவென அத்தனைக் கோபம் பொங்கியது.

ஏனோ திவாகர் நினைத்ததை சாதித்துவிட்டான் என்ற எண்ணம் அவனது நிதானத்தை பின்னகர்த்த, “திவாகர்…” என அவன் சட்டையைப் பிடித்தவன், “என்ன சொல்லி என் தங்கச்சியை ஏமாத்துனீங்க… அவ சின்னப் பொண்ணு. நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்களா?” எனக் கர்ஜித்தான். ஷெண்பா அவனது குரலில் ஒரு நொடி பயந்து போனாள். முகம் முழுவதும் பதற்றம் படர, இருவரையும் பார்த்திருந்தாள்.

திவாகருக்கு அவன் செயலின் வீரியம் புரிந்ததோ இல்லையோ நொடியில் குமரனுக்கு அடுத்தடுத்து நடக்கப் போவது எல்லாம் நிழலாகத் தெரியத் தொடங்கியது. ரங்கா இந்த விஷயமறிந்தால் என்ன எதிர்வினையாற்றுவார் என நினைக்கையிலே அவனுக்குள் ஒரு பயம் தொண்டையைக் கவ்வியது. ஷெண்பா, அவர்கள் வீட்டு மருமகளா எப்படி வாழப் போகிறாள் எனத் தங்கையை எண்ணியதும் மூச்சடைத்துப் போனது. சொக்கநாதன் மீதிருக்கும் கோபமும் குடும்பப் பகையும் தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாதே என நினைத்து மனம் பரிதவித்துப் போனது. இதையெல்லாம் எண்ணித்தானே அவன் திவாகரை ஷெண்பாவிடம் நெருங்காமல் பார்த்துக் கொண்டான். ஆனால், எப்படி இப்படி திருமணம் வரை செல்லுமளவு தான் அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம் என மனம் கூச்சலிட்டது.

“ஏன் இப்படி பண்ணீங்க? அத்தனை தடவைப் படிச்சு படிச்சு சொன்னேனே… இது எந்த வகையிலும் ஒத்து வராதுன்னு!” என்று குமரன் கோபத்தில் பல்லைக் கடிக்க, திவாகர் அசையாது நின்றான். அவனிடம் திமிரும் இல்லை, அலட்சியமும் இல்லை. அதே போல அவனது செயல் தவறென்ற எண்ணமுமில்லாது நின்றிருந்தான்.

“அண்ணா… அவர் மேல தப்பில்லை!” என ஷெண்பா எதையோ இடையில் கூற வர, “ஷெண்பா…” என திவாகர் அதட்டவும், அவளது பேச்சு தடைபட்டது. அவன் தலை எதுவும் பேசாதே என்பது போல அசைய, இவளது வாய்ப் பூட்டுப் போட்டுக் கொள்ள, தமையனையும் கட்டியவனையும் வேதனையுடன் பார்த்தாள்.

குமரனின் கையை தன் சட்டையிலிருந்து திவா எடுத்துவிட முயல, தமையனின் செயலில் சமைந்து போய் நின்ற மனோ, கணவனை அவனிடமிருந்து பிரித்தாள். மனம் முழுவதும் சொல்வொன்னா துயரம் நொடியில் வியாபிக்க, அதிர்ச்சியும் கோபமும் முகத்தில் படர்ந்தது. இன்னுமே நடந்ததை மூளையும் மனதும் நம்ப மறுத்து சண்டித்தனம் செய்தது.

“ஏன் டா இப்படி பண்ண, ஏன் இப்படி பண்ண?” திவாகர் செய்த செயலில் அவளது இதயம் பயத்தில் துடித்தது. தந்தையை நினைத்ததும் நெஞ்சடைத்துப் போனது. இப்படியே இவர்கள் அங்கே சென்று நின்றால் அந்த மனிதர் என்னவாகக் கூடும் என்ற கற்பனையே அவளை உடைக்கப் போதுமானதாய் இருந்தது.

“ஏன் திவா இப்படி பண்ண?” எனக் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள், கன்னத்திலே வலிக்க வலிக்க அடித்தாள். அவளது விழிகளிலும் நீர் நிரம்பத் துவங்கியது.

“உன் மேல அந்த மனுஷன் அவ்வளோ நம்பிக்கை வச்சிருந்தாரே டா… இப்படி அவர் நினைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டீயே டா! நீ செஞ்ச செயலோட வீரியம் உனக்குப் புரியுதா? பொண்ணுங்க வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணா மட்டும் அசிங்கம் இல்லை. ஆம்பளைங்களும் அடக்கம் டா! அம்மா, அப்பாவை நினைச்சா நீ இப்படி பண்ணியிருப்பீயா?” எனக் கோபமாய்க் கேட்டவளின் கைகள் அவனை சரமாரியாக அடிக்க, ஷெண்பா உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி அவனைப் பார்த்தாள். திவாகரும் அவளைத்தான் பார்த்திருந்தான். மனோவின் ஒவ்வொரு அடியும் இவளுக்கு வலிக்க,

“அண்ணி, போதும் அவரை அடிக்காதீங்க…” என அவள் இடையில் நுழைய, அவள் முன்னே விரலை நீட்டியவள், “இது எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில இருக்கப் பிரச்சனை. இடையில வந்த…” என்றவளின் பேச்சு அத்தனை சூடாய் இருந்தது. ஏனோ இந்நொடி வரை தமையனது செயல் வெறும் பிரம்மையாய் இருக்கக் கூடாதோ என மனம் பரிதவித்தது. அதைவிட கண்டிப்பாக இதற்குப் பின்னால் ஷெண்பாவும் அவளது அடமான குணமும் இருக்கக் கூடும் என மூளை கணித்தது.

“இப்போ அவர் எனக்குப் புருஷனும் கூட. நீங்க அவரை அடிக்கிறதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது!” என ஷெண்பா விழிகளை வழியும் நீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள். இவளது பேச்சிலும் மனோவின் மீதானக் கோபம் தெறித்தது. துணிந்து செய்த காரியத்தின் சாதகப் பாதகங்கள் எதுவாயிருந்தாலும் தாங்கள்தான் சந்தித்தாக வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் வந்திருக்க, அண்ணியிடம் அதை காண்பித்தாள்.

மனோ அவளிடம் பதில் பேசும் முன்னே, “ஷெண்பா… அமைதியா இரு. நீ இடையில வராத!” என திவாகர் பேச்சில் நுழைந்திருந்தான்.

“ஏன் டி இப்படி பண்ண? பெத்தவங்க இல்லையா உனக்கு? நாங்கப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டோமா? இப்படி உன் வாழ்க்கையை நீயா முடிவு செஞ்சுட்டு வந்து நிக்கிற. இதுதான் நான் உன்னை வளர்த்த லட்சணமா? அசிங்கமா இருக்கு ஷெண்பா! உங்கப்பாவை ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தா, நீ இப்படியொரு காரியத்தை செஞ்சுட்டு வந்திருப்பீயா? எங்களை அசிங்கப்படுத்திட்ட டி நீ!” என்ற சிந்து முதல்முறையாக அவளைக் கைநீட்டி அடித்திருந்தார். இவளது கன்னம் திகுதிகுவென எரிய, குமரன் தங்கையை வெறித்துப் பார்த்தான்.‌

தானும் விக்ரமும் தான் பிரதானம் என்பது போலிருந்தவளுக்கு எப்போது தாங்கள் இரண்டாம்பட்சமாகிப் போனோம்? தங்கை தங்களுக்கு தெரியாமல் வாழ்க்கையின் இத்தகைய முடிவை தானாய் எடுத்ததை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் திவாகரைத் திருமணம் செய்ததை அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை. திவாகரின் பார்வைத் தங்கையைத் தொடர்ந்தப் போது கூட, அவள் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தானே! அனைத்தையும் சுக்கு நூறாய் உடைத்தவளை அனல் கக்கும் விழிகளால் பார்த்தான் குமரன். ஒற்றைத் தங்கையென சிறுவயதிலிருந்தே அவளுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது இப்போது பூதாகரமானத் தவறாய் தோன்றித் தொலைத்தது. மனோஹரி கூறிய போதே அவளை கண்டித்திருக்கலாமோ என்ற தாமதமான யோசனை நெஞ்சை அழுத்தியது.
மனம் முழுவதும் அத்தனை வலி.

தன்னைப் பார்த்தவனின் மனதைப் படித்த ஷெண்பாவின் உறுதி ஆட்டம் காண ஆரம்பித்தது.
தான் அதிகம் நேசித்த அண்ணன் தன் செயலால் எத்தனை பாதிப்படைந்திருக்கிறான் என அறிந்தாலும், அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. குமரனை எந்த சூழ்நிலையிலும் இழக்கக் கூடாது என்றுதானே இந்த முடிவை எடுத்தாள். ஏனோ அதை வாய்வழியாய்க் கூறாது,
‘என்னை வெறுத்துடாத குமரா! தாங்க மாட்டேன்!’ என விழிகளில் வலியைத் தேக்கிப் பார்த்தவளின் கண்களில் ஈரம் படரத் தொடங்கியது. அவள் கண்கள் பனிக்க, முகம் இறைஞ்சியது.

“அண்ணா, என்னை மன்னிச்சுடு. எதையும் நான் வேணும்னு செய்யலை, சிட்சுவேஷன் அப்படி அமைஞ்சுடுச்சு. என்னைப் புரிஞ்சுக்கோ!” என்ற ஷெண்பா அவன் கையைப் பிடிக்க வர, குமரன் அவளிடமிருந்து நொடியில் விலகியிருந்தான். அவனுக்கு நேரம் தேவைப்பட்டது சூழ்நிலையைக் கிரகிக்க. அவனது செயலில் தங்கையின் முகம் கசங்கிப் போனது.

“நான் செஞ்சது தப்புதான் குமரா, என்னைத் திட்டு, அடி… பேசாம இருக்காத டா!” என்று குரல் கமறப் பேசியவளைப் பார்த்தவனுக்கு வலித்தது. இவளது கண்ணிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு நீரும் எப்போதுமே அவனைப் பதம் பார்க்கத் தவறுவதில்லை.

error: Content is protected !!
Scroll to Top