உள்ளம் – 24.2

தொன்றுதொட்டு திருச்சியை இருப்பிடமாகக் கொண்டவர் அருணாச்சலம். கண்ணுக்கு எட்டியவரை நிலபுலன்களும் சொத்துக்களும் வைத்திருந்தப் பரம்பரை செல்வந்தர்களில் அவரும் ஒருவர். கோழிப்பண்ணை தொழில்தான் அவருக்குப் பிரதானமான ஒன்று. தோட்டம், வயல்காடு என அனைத்திற்கும் ஆட்களை நியமித்துப் பராமரித்து வந்தார். மனைவி தங்கம்மாள் வீட்டைக் கவனித்துக் கொள்ள, மகன் சொக்கநாதனைப் பள்ளி படிப்போடு நிறுத்திவிட்டு தன்னுடன் தொழிலுக்கு அமர்த்திக் கொண்டார். சொக்கநாதனுக்கும் படிப்புக்கும் காத தூரமென்பதும் மற்றொரு காரணம்.

சொக்கநாதன் இயல்பிலே கொஞ்சம் இரக்கக் குணமும் நலலெண்ணமும் கொண்டவர். தந்தையை நகலெடுத்துப் பிறந்திருந்தார். அதனாலே அருணாச்சலத்திற்கு மகனைப் பற்றிய கவலை உண்டு. தன் காலத்திற்குப் பின்னர் மகன் எப்படி சொத்தைக் காப்பாற்ற போகிறான் என்ற எண்ணம் அவரை அரித்தது. அதனாலே தான் நன்றாய் இருக்கும் காலத்திலே மகனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொழில் நுணுக்கங்களைக் சொல்லிக் கொடுத்தார்.

சொக்கநாதனும் தாய், தந்தை சொல் தட்டாத பிள்ளைதான். இயல்பிலே அமைதியான சுபாவம் கொண்ட மனிதர், தந்தையிடம் அதீத அன்பும் மரியாதையும், தாயிடம் அதீத பயமும் கொண்டிருந்தார். அருணாச்சலத்திற்கு நேரெதிர் குணம் கொண்டவர் தங்கம்மாள். கணவருக்கு அடுத்து தான்தான் அனைத்திலும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே மகனைக் கூட எதையும் முன்னின்று செய்ய அனுமதிக்காது தானே செய்வார். அதில் அவருக்கொரு திருப்தியும் கர்வமும் உண்டு. பிறந்ததிலிருந்தே தங்கம்மாள் பணத்தில் புரளும் வகையில் சேர்த்தி. அதனோடு சேர்த்து கொஞ்சமல்ல அதிக திமிரும் கர்வமும் அவரிடம் உண்டு.

அருணாச்சலத்தைப் பின்பற்றி சொக்கநாதன் தொழில் அனைத்தையும் திறம்பட செய்யக் கற்றுக் கொண்டார். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல சில வருடங்களிலே தொழிலின் நெளிவு சுழிவுகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த மகனுக்குத் திருமணம் முடிக்கலாம் என தந்தை எண்ணியிருந்தார். ஆனால், சொக்கநாதன் தோட்டவேலை செய்யும் சிந்துவின் மீது விருப்பம் கொண்டு காதல்வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து வந்து தந்தை முன்பு நிற்க, அருணாச்சலம் அவரின் செயலில் அதிர்ந்து போனார்.

மகனிடம் இப்படியொரு நடவடிக்கையை அவர் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அத்தனை கோபம் அனைத்தையும் அவரிடம் காண்பித்து அடித்து வெளுக்க, சிந்து இடையில் நுழைந்தார்.

“போதும் மாமா, அவரை அடிச்சேக் கொன்னுடாதீங்க! நான் எவ்வளோ சொல்லியும் நான்தான் வேணும்னு நின்ன மனுஷரை உதறீட்டுப் போக விருப்பமில்லை. அதான் என்னவானாலும் பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். உங்க மகன் உசுரு உங்களுக்கு முக்கியமா இல்லாம இருக்கலாம். ஆனால், என் புருஷன் உசுரு எனக்கு ரொம்ப முக்கியம். எங்களை விட்டுடுங்க, சொத்து சுகம் எதுவும் வேணாம். எங்கேயாவது போய்ப் பிழைச்சுக்குவோம்!” என்று சிந்து அப்போதும் நிமிர்வான குரலில் உரைக்க, சொக்கநாதன் ஒரு வார்த்தை தந்தையை எதிர்த்துப் பேசவில்லை‌. அமைதியாய் தலையைக் குனிந்திருந்தார். திருமணம் செய்யும் போதிருந்த தைரியமெல்லாம் தந்தையைக் கண்டதும் அமிழ்ந்திருந்தது. அதனாலே அமைதியாய் அவரின் கோபத்தைப் பெற்றுக் கொண்டார்.

அருணாச்சலம் சற்று நிதானித்தார். கடந்த ஐந்து வருடங்களாக சிந்து தோட்ட வேலையைக் கவனித்து வருகிறாள். தாயை இழந்து தந்தையும் மகளுமாக வேலைக்கு சேர்ந்திருக்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு தந்தையைப் பறிகொடுத்து இருந்தார். அதற்காக வீட்டிலே முடங்கிவிடாமல் அடுத்தடுத்து என்ன என வாழ்க்கையை அதன்போக்கிலே ஏற்றுக்கொண்டு தனியாளாக இந்த ஊரில் வசித்து வந்தார். ஒரு தனிமனுஷியாகப் பார்த்தால் சிந்துவின் பால் எந்தக் குற்றமும் காண முடியாது. குடும்பத்திற்கு ஏற்ற, அதைவிட சொக்கநாதனுக்கு ஏற்றப் பெண், குடும்பத்தை நிர்வகிக்கும் திறமையும் அவருக்கு உண்டு. சிந்துவிற்கு சொத்துக்களும் இல்லை, சொல்லிக் கொள்ளுமளவிற்கு சொந்தங்களும் இல்லை என்பதே உண்மை. பணம், அந்தஸ்து எல்லாம் அருணாச்சலத்திற்குப் ஒரு பொருட்டே இல்லை. சிந்துவின் ஜாதியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கீழ் ஜாதிக்கார பெண் தன் வீட்டு மருமகள் என்பதை அவரால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒற்றை மகனை அப்படியே விட்டுவிட முடியாதே! கொஞ்சம் யோசித்தார் மனிதர்.

நிமிர்ந்த பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்ட சிந்து மகனை நன்றாகப் பார்த்துக்கொள்ளக் கூடும் என தன்னிலையிலிருந்து இறங்கி வந்தார். மகன் கைமீறிவிட்ட நிலையில் அவருக்கு வேறு வழியும் இல்லாது போக, அவர்களை ஏற்றுக் கொண்டார். ஆனால், தங்கம்மாவால் எளிதாக சிந்துவை மருமகள் என்ற இடத்தில் பொருத்த முடியவில்லை.

அவர்களது ஜாதிக்கார்களைப் பார்த்ததும் கும்பிட்டுவிட்டு செல்லும் கீழான ஜாதிப் பெண் தனக்கு நிகராக வீட்டில் இருப்பதா என்ற காழ்ப்புணர்ச்சியை வாய்ப்பு வரும் நேரமெல்லாம் காண்பித்தார். மாமியார் என்ற எண்ணத்தில் சிந்துவை முடிந்தளவிற்கு வார்த்தைகளால் சாடினார்.

சிந்து ஆரம்ப காலத்தில் என்ன செய்வது எனத் தடுமாறினார். பின்னர் நாட்கள் நகர நகர தங்கம்மாளின் குணம் ஓரளவு பிடிபட்டதும் அவரிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டார். அப்படியும் மீறி வார்த்தைகள் நீண்டால், அவரது பார்வைக் கணவரைத் தேடும். ஆனால், சொக்கநாதன் எந்நிலையிலும் தாயை எதிர்த்து ஒருவார்த்தை பேச மாட்டார்.

இதே நிலைதான் எப்போதுமே நீடித்தது. தங்கம்மாளின் பேச்சு வரம்பு மீறிச் செல்லத் துவங்க, கணவர் கேட்பார் எனப் பொறுத்துப் போன சிந்து அவரின் பேச்சற்ற குணத்தில் வெறுத்துப் போனார். சொக்கநாதன் இயல்பிலே அமைதியான சுபாவம் என்று அறிந்திருந்தாலும் பேச வேண்டிய இடத்தில் கூட தனக்காக கணவர் நிற்கவில்லையே என்ற எண்ணம் ஆதங்கமாய் மனதில் உருமாற ஆரம்பித்திருந்தது.

தங்கம்மாளின் பேச்சிற்கு வலு சேர்ப்பது போல இரண்டு வருடங்கள் கழிந்தும் சிந்து கருத்தரிக்கவில்லை. வேறு எதைக்கொண்டு பேசினாலும் எதிர்த்துப் பேசும் சிந்துவால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பதில் கூற இயலவில்லை. ஆரம்பத்தில் மனைவியின் பேச்சுப் பிடிக்காது அருணாச்சலம் அவரை அதட்டினார். அவருக்கும் பேரக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச மனமெல்லாம் ஆசை நிரம்பி வழிந்தது. வெகு சீக்கிரம் இல்லையெனினும் கண்டிப்பாக கடவுள் தங்கள் மகனுக்கொரு குழந்தையை பரிசளிப்பார் என அவர் நம்பினார்.

ஆனால் வருடங்கள் கடந்ததே ஒழிய, சிந்து கர்ப்பம் தரிக்கவே இல்லை‌. அவரது கருவறையில் சூல் இல்லாது வெறுமையாகவே நாட்கள் கழிந்தன. கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கடக்க, அருணாச்சலத்திற்கும் நம்பிக்கை அற்றுப் போனது. அதனாலே தங்கம்மாளின் பேச்சு வரம்பு மீறினாலும் அவர் அதை தட்டிக் கேட்க முனையவில்லை.
கணவரும் துணையின்றி, மாமனாரின் ஆதரவுமற்று சிந்து தனியாளாக உணர்ந்தார். ஒவ்வொரு நாளும் ஏனோ நரகமாய்க் கழிந்தது அந்தப் பெண்மணிக்கு.

நாட்கள் செல்ல செல்ல தங்கம்மாளின் பேச்சு வரைமுறையைக் கடந்தது‌. தனக்கென யாரும் இல்லாது அநாதையாக உணர ஆரம்பித்த சிந்து அதீத மன அழுத்தத்திற்கு ஆளானார். சொக்கநாதன் பெற்றவர்கள் முன்பு அமைதியாய் இருந்தாலும், அறைக்குள்ளே மனைவியிடம் அன்பு காட்டினார், அரவணைத்தார். ஆனால், சிந்துவால் அந்த அன்பை ஏற்க முடியவில்லை. முள்மேல் நிற்பது போலிருந்தது. எந்த அமைதியான சொக்கனை விரும்பினாரோ, அதே நபரை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தார். தனிமையை நாடி ஓடத் தொடங்கினார்.

அருணாச்சலம் பேரக் குழந்தை இல்லை என்ற ஏக்கத்திலே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழ, தங்கம்மாள் கொதித்துப் போனார். தன் கணவர் நன்றாகத் தேறி வரவேண்டுமென்றால் கண்டிப்பாக சிந்து இந்த வீட்டிற்கு ஒரு வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் ஆடி தீர்த்தார்.

மாமனார் ஒருபுறம் படுக்கையில் கிடக்க, மாமியாரின் சுடு சொற்களைக் கேட்டும் எந்த வித எதிர்வினையும் தனக்காகவென மெனக்கெடாத கணவரைப் பார்த்து வெற்றுப் புன்னகையை உதிர்த்தவர், ஒரு முடிவுக்கு வந்திருந்தார். தனக்காக இல்லையெனினும் மாமனாரின் உடல் நலத்தைப் பேண வேண்டுமென தன் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முன்வந்தார்.

தங்கம்மாளின் எண்ணம் நிறைவேறப் போவதில் அவர் சம்மதித்து அமைதியாய் இருந்துவிட, அருணாச்சலமும் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காது போக, அவரது விருப்பமும் அதுதான் என உணர்ந்தார் சிந்து. பெற்றவர்கள் சம்மதம் தெரிவித்துவிட, மகன் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. பிடிவாதமாய் அவர் மறுக்க, சிந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசி கணவரை சம்மதம் சொல்ல வைத்திருந்தார்.

“சிந்து, நானா சொல்ற வரைக்கும் இந்த வீட்டைவிட்டு வெளிய போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு!” என்ற நிபந்தனையுடன்தான் சொக்கன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

சிந்து அருணாச்சலத்தின் சொந்தத்திலே சுமதியை கணவருக்கு மனம் முடிக்க தேர்வு செய்தார். தங்கம்மாளுக்கும் சுமதியின் பின்புலமும் தங்கள் ஜாதி அவள் என்ற எண்ணமும் சம்மதத்தை உரைக்க வைத்திருந்தது. சிந்து தங்கள் வீட்டு வாரிசை சுமக்காதிருந்ததில் அவருக்கு குரூர திருப்தி. கீழ் ஜாதிக்கார பெண்ணின் வயிற்றில் தங்கள் வாரிசா என ஏற்கனவே அவர் குமைந்திருக்க, அவரது எண்ணம் பழித்து விட்டதோ என்னவோ?

சுமதி இயல்பிலே கொஞ்சம் அமைதிபோலத்தான் தோற்றமளித்தார். அதனாலே சொக்கநாதனை திருமணம் முடித்ததும் அவர்கள் உறவு சுமூகமாக சென்றது. சிந்துவிடத்திலும் சுமதி அக்கா என்றொரு பாசத்தையும் மரியாதையும் வைத்திருந்தாள்.

மணம் முடிந்த ஆறு மாதத்திலே சுமதி கருவுற்றிருக்க, தங்கமாளைக் கையில் பிடிக்க முடியவில்லை. சுமதியை அக்கறையாய் கவனித்துக் கொண்டவர் சிந்துவை வார்த்தையால் சாடினார். அதையெல்லாம் சிந்து கண்டுகொள்ளவில்லை. சில சமயம் சுமதி அவருக்கு ஆதரவாக மாமியாரிடம் பேசுவாள்.

error: Content is protected !!
Scroll to Top