வெங்காயத்தைப் பொடிபொடியாய் நறுக்கிக் கொண்டிருந்த சிந்துவின் கவனம் முழுவதும் மனோஹரியிடம்தான். விக்ரம் வருவதற்கு முன்புவரை அவளது முகம் சாதரணமாயிருந்தது. ஆனால், இப்போது வாடியிருப்பது போலொரு தோற்றத்தைக் கொடுக்க, இவருக்கு யோசனை பிறந்தது.“ஏன் மனோ, இங்க சும்மா உட்கார்ந்து சுவத்தை வெறிச்சுப் பார்க்குறதுக்கு பேசாம அவங்களோட நீயும் போய்ருக்கலாம்ல?” என அவர் வினவ, மனோவிடம் ஆழ்ந்த அமைதி. அவரது பேச்சு பெண்ணின் சிந்தையில் பதியவே இல்லை. அவள் எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். சுருங்கியிருந்த நெற்றியும் லேசாய் சாய்ந்தமர்ந்திருந்த விதமும் அதைக் காண்பித்துக் கொடுத்தன.“மனோ, என்ன யோசனை?” பெரியவர் இரண்டு முறை அழைத்தப் பின்புதான் நிகழ்காலத்திற்கு வந்தவள், “ஆங்… என்னத்த கேட்டீங்க?” எனப் புரியாது வினவினாள்.“சரியா போச்சு போ!” சிந்து அலுத்துக் கொண்டு புன்னகைத்தார். அவரது சிரித்த முகத்தை ஒரு நொடி ஆழப் பார்த்திருந்தவள், “அத்தை, உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா? எத்தனையோ நாள் பேசணும்னு நினைச்சுருக்கேன், ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. ஆனால், இப்போ தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப மனசு போட்டு அரிச்சுட்டே இருக்கு” என நிறுத்திவிட்டு அவர் முகத்தை ஏறிட்டாள்.சிந்து அவளது பேச்சை அவதானித்தவர், மெலிதாய்ப் புன்னகைத்தார். மருமகள் பேச்சின் சாரம்சம் அவருக்கு புரியாமல் இல்லை. இருந்தும் அவள் வாய்வழியே கேட்கலாம் என தலையை சம்மதமாக அசைத்தார்.“அது, ஷெண்பா அப்புறம் அவரோட அண்ணன் விக்ரம் ரெண்டு பேருக்குமே அவர் மேல அவ்வளோ அன்பு இருக்கு, உங்ககிட்ட பாசமா நடந்துக்குறாங்க. ஆனால், ஏன் இந்த பத்து வருஷமா பேசாம, சண்டை போட்டு பிரிஞ்சு இருந்தாங்க?” எனத் தயக்கமாய் வினவினாள். அவ்வப்போது சிந்து பேசும்போது மூவரைப் பற்றியும் விவரித்திருக்கிறார் தான். ஆனால், நடந்த எதையும் முழுதாக உரைத்தது இல்லை. இவளுக்கும் அப்போது தெரிந்து கொள்ள ஆர்வம் குறைவுதான். ஆனால், இன்று ஏனோ கேட்கத் தோன்றியதை கேட்டாள்.ஒரு பெருமூச்சை வெளிவிட்டவர், “எல்லாம் சூழ்நிலைதான் மா காரணம். அவங்க, இவங்கன்னு யாரையும் குத்தமெல்லாம் சொல்ல முடியாது. அவங்கவங்க வாழ்க்கை, அவங்களுக்கு முக்கியம். அதைவிட எம்மகனுக்கு என்னோட மரியாதை முக்கியம்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டான்!” என்றார் சாந்தமான முகத்துடன். ஏனோ ஒருவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற அப்பெண்மணிக்கு விருப்பமில்லை.“மகனுக்காக வந்தீங்க சரித்தை, உங்களுக்கு…” என ஒரு நொடி தயங்கி நிறுத்தியவள், “உங்களுக்கு மாமாவைப் பிடிக்கலையா, அவர்கூட வாழ ஆசையில்லையா? மகனுக்காக அவரை வேண்டாம்னு சொன்னாலும், உங்களுக்குத் தனிப்பட்ட விருப்பம்னு ஒன்னு இருக்குமே அத்தை!” என்றவள் சிறிது யோசித்தாள். “இளமைல துணை இல்லைனாலும், முதுமைல நமக்கெல்லாம் துணை அவசியம் அத்தை. கீழே விழும்போது தூக்கிப் பிடிக்க முடியலைனாலும், ஆறுதல் சொல்ல அரவணைச்சுக்க ஒருத்தர் வேணும்னு மனசு கேட்கும். தனிமையை உணராம இருக்க, அப்பப்ப கடந்த காலத்தைப் பத்தி பேசி சிரிக்க, சண்டை போட, வயசான காலத்துல அன்பான ஒரு கை நம்மளை நோக்கி நீளன்னு எவ்வளவோ இருக்கே!என்னதான் பையனா இருந்தாலும் உங்கப் பையன்கிட்ட மனசுல உள்ள எல்லாத்தையும் ஷேர் பண்ண முடியாதே!” என நிறுத்தினாள். சிந்து மருமகளை ஒரு நொடி அதிசயித்துப் பார்த்தார். தன்னைப் பற்றி மனோவின் சிந்தனை இந்தளவிற்கு இருக்குமென அவர் எண்ணியிருக்கவில்லை. மனம் ஒரு நொடி நெகிழ்ந்திருந்தது. பதில் பேசாதவரின் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது.“சிரிக்காதீங்க அத்தை, பதில் சொல்லுங்க!” அதட்டலாய்க் கேட்டவள், “என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எவ்வளோவோ சண்டை வந்திருக்கு. ஆனாலும் அவங்க பிரிஞ்சு போகணும்னு நினைச்சதே இல்ல! பிரிஞ்சு போறதுக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், சேர்ந்து வாழ்றதுக்கு ஒரு சின்ன காரணம் போதும். ஒருத்தர் மேல ஒருத்தர் பரஸ்பர அன்போ பிடித்தமோ, புரிதலோ இருந்தாப் போதுமே அத்தை. உங்களுக்கும் மாமாவுக்கும் இடையில ஒரே ஒரு சின்ன பிடிப்புக் கூடவா இல்ல? மாமாவை உங்களுக்குப் பிடிக்காதா?” அமைதியாய் சிந்து மனோஹரியைப் பார்த்தார். அவளது ஒவ்வொரு கேள்வியும் அவரது கடந்த கால வாழ்க்கையை சப்தமின்றி தட்டியெழுப்பிக் கொண்டிருந்தது. எத்தனையோ நாட்கள் மனதிலிருப்பதை யாரிடமாவது கொட்டிவிட எண்ணியிருக்கிறார். ஆனால், அந்தளவிற்கு நெருக்கமான சொந்தமொன்று இன்றுவரை அவருக்கு கிட்டவில்லை. முதிர்ச்சி வந்தப் பின்னர் அனைத்தையும் தனக்குள்ளே போட்டு அழுத்திக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது, தன் மகனுக்காகத்தான் மீதமிருக்கும் வாழ்க்கை என குமரனுக்காக சொற்ப வாழ்க்கையை அர்பணித்திருந்தார் பெரியவர். ஆம்! சிந்து என்ற பெண்ணின் அர்பணிப்புதான் அவர்கள் வாழும் வாழ்க்கை.ஆனால், அவரைப் பொறுத்தவரை அதொன்றும் பெரிய தியாகமில்லை, அவரது எண்ணம் தன் மகனுடைய நியாயமான ஆசைகளுக்குத் துணை நிற்பது, அவ்வளவுதான். சிந்துவுடைய சித்தாந்தம் இதுதான். ஆனால், கணவர், அவரைப் பற்றி எண்ணாத நாளில்லைதான். ஆனாலும் குமரனை மீறிச்செல்ல விருப்பமில்லை. சொக்கநாதனுக்குத்தான் தன்னால் உண்மையாய் இருக்க முடியவில்லை. தன் மகனுக்காவது உண்மையாய் இருந்துவிட்டு எஞ்சிய காலத்தைக் கழித்துவிடலாம் என எண்ணித்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.“ஏன் அத்தை அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்கத்தை… நானும் இந்த வீட்ல ஒரு ஆள்தானே. உங்களோட வாழ்க்கையில நடந்ததைத் தெரிஞ்சுக்க, உங்க மகனோட பாஸ்ட் லைஃபை பத்தி கேட்க எனக்கு உரிமை இருக்குன்னுதான் இதெல்லாம் கேட்குறேன். உங்களோட விருப்பம்தான் அத்தை!” கட்டாயப்படுத்த விருப்பமில்லை மனோஹரிக்கு. இருந்தும் நடந்தவற்றின் அடிநாதம் கூட அறியாதது மனதை உறுத்தியது. அதைவிட இந்த மூவருக்கிடையே இருந்தப் பிணைப்புக் கூட அவளை அதிகம் யோசிக்க வைத்ததது; கேள்வி கேட்க வைத்திருந்தது.தன்னை அலட்சியம் செய்துவிட்டு சென்ற குமரன் மீது ஏகக் கோபம் இருந்தப் போதும், அவனுடைய செயல் மனைவியை ஆழ சிந்திக்கத் தூண்டியது. இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் நடந்ததை அறிந்து கொள்ள வாய்ப்புக் குறைவு என சிந்துவிடம் மனதிலிருக்கும் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.நீண்ட நெடியதாய் தோன்றிய முதல் ஐந்து நிமிடங்களை மொளனம் அமிழ்த்தி சுருட்டிக் கொள்ள, சிந்து எதுவுமே உரைக்கவில்லை. அவருக்கு சொல்ல விருப்பமில்லை என எண்ணி மனோஹரி நகர விழைய, “எங்களோடது காதல் திருமணம் மா!” என்றவரின் பேச்சு அவளது நடையை நிதானப்படுத்தியிருக்க, முகம் முழுவதும் திகைப்புடன் அவரைப் பார்த்தாள். சர்வ நிச்சயமாக அவள் இப்படியான கோணத்தில் சிந்தித்திருக்கவில்லை. இது அவளுக்கு அதிர்ச்சியான செய்திதான்.“என்ன சொல்றீங்க அத்தை, லவ் மேரேஜா, அப்புறம் எப்படி நீங்க மாமாவை விட்டுவிட்டு பிரிஞ்சு வந்தீங்க?” ஆச்சரியம் மேவிய குரலில் கேட்டவள் அவரருகே கால்களை மடக்கி வலதுகையை நிலத்தில் குற்றி கதைக் கேட்கும் பாவனையில் அமர்ந்தாள். முகம் சிந்துவின் பதிலுக்கான காத்திருப்பில் ஆர்வத்துடன் கனிந்திருந்தது. அவளது தலையைக் கலைத்துவிட்டார் சிந்து.“எனக்கும் நடந்ததையெல்லாம் யார்கிட்டயாவது மனசுவிட்டு சொல்லணும்னு தோணும். ஆனாலும் அதுபோல ஒரு சந்தர்ப்பம் அமையலை. இப்போ உன்கிட்ட சொல்லணும்னு ஒரு எண்ணம். என் காலத்துக்குப் பின்னாடி என் புள்ளையோடதான் உன்னோட வாழ்க்கையும் நகரும். எனக்காக இல்லைனாலும், அவனுக்காகக் கண்டிப்பா சொல்றேன்!” என்றவரின் குரல் லேசாய் தடுமாற, “அத்தை, என்ன பண்ணுது… இல்ல, இல்ல நீங்க சொல்ல வேணாம்! விடுங்க!” என அவரது பிசிறு தட்டியக் குரலில் மனோஹரி கொஞ்சம் பதறி மாமியாரை சமாதானம் செய்தாள். தன்னுடைய கேள்வி அவரைக் காயப்படுத்திவிட்டதோ என்ற பாவனை முகத்தில்.அவளது கரங்கள் மாமியாரின் கைகளைத் தன்னுள் பொதிந்து கொண்டது.தொட்டதைத் தொடர்ந்துவிடும் எண்ணத்தில் சிந்து நடந்தவற்றை விவரிக்கத் தொடங்கினார்.