“ஆமா! உங்களுக்காகத்தான் வேலையை விட்டேன்… போதுமா?” இவள் மெலிதாய்க் குரலை உயர்த்த, குமரன் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது. அவள் தனக்காக செய்தது வருத்தமாயிருந்தாலும், தனக்காக மட்டும்தான் இதை செய்வாள் என்ற எண்ணம் மனதை வருடிப் போனது.
அவளது தந்தை சொல்லியும் கூட மனோஹரி வேலையைவிடத் தயாராக இல்லை. ஆனால், இப்போது தான் என்னும் போது அவள் முற்றிலும் மாறுபடுகிறாள் என்ற எண்ணம் உள்ளுக்குள்ளே ஏதோ செய்தது. விவரிக்க முடியாத உணர்வு அதுவொரு அலாதியான கர்வமும் கூட. மனைவி வசீகரித்தாள். அவன் கண்ணில் படவேண்டும் என எத்தனையோ முறை தன்னை அலங்காரம் செய்து மனோஹரி வளைய வந்தப்போது கூட கணவனுக்கு அத்தனை பிடித்தம் ஏற்படவில்லை. இப்போது காலையிலிருந்து குளிக்கக் கூட இல்லை பெண். துளி அலங்காரமும் அரிதாரமுமின்றி சோபையாய் இருந்தவள் அவனை அத்தனையாய் ஈர்த்துத் தொலைத்தாள்.
‘உங்களைத்தான் பிடிச்சிருக்கு. உங்களை மட்டும்தான் கல்யாணம் பண்ணுவேன். இந்தக் குமரனுக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமே இல்லை!’ என்று கத்திய மனோவின் வார்த்தைகள் இப்போதும் செவியை மோதின.
உதட்டிலேறிய சிரிப்புடன் அவளைக் குறுகுறுவென பார்த்தான் குமரன்.
“எதுக்கு இந்தப் பார்வை?” கேள்வி கேட்டவள் பழச்சாறை அவனிடம் நீட்டினாள். அமைதியாய் வாங்கிக் கொண்டவன், “மனோ, சைட் டேபிளை ஓபன் பண்ணி அதுல ஒரு பாக்ஸ் இருக்கும். அதை வெளியே எடு!” என்றான் சின்ன சிரிப்புடன்.
‘சிரிப்பே சரியில்லையே!’ என சிந்தனையுடன் மனோஹரி அந்த டப்பாவை வெளியே எடுத்தாள். முழுவதும் நக்கபூச்சுதான். அன்று தான் வாங்கிக் கொடுத்ததை மனைவி ஏற்கவில்லை எனப் பத்திரப்படுத்தியிருந்தான் குமரன்.
கையிலிருந்த டப்பாவையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்து முறைத்தவள், “என்ன இது?” என்றாள்.
“ஹக்கும்… அன்னைக்கே சொன்னேனே மனோ!” இவன் குறும்பாய் இழுக்க, “எதுக்கு வாங்கீட்டு வந்தீங்க. என்னைக் கிண்டல் பண்ணதானே?” இன்னுமே அவளிடம் முறைப்பு.
“ஹே! சத்தியமா இல்லை டி!” என்றவன் சிரிப்புடன், “நீதானே அன்னைக்கு நான் ரூம்க்குள்ள வரும்போது நெயில் பாலிஷ் வச்சுட்டு இருந்த!” என்றவனுக்கு அன்றைய மனைவியின் அலட்டிக்காதப் பேச்சில் இந்நொடி புன்னகை பிறந்தது. அன்றைக்கிருந்தக் கோபம் இப்போது துளியுமில்லை.
“அது... அன்னைக்கு ரொம்ப நெவர்ஸா இருந்தேன். அதான் நெயில் பாலிஷ் வச்சேன், என்னை ரிலாக்ஸ் பண்ண!” ரோஷமாய் இவள் உரைக்க, “அப்போ நிஜமா உனக்கு நெயில் பாலிஷ் பிடிக்காதா?” எனக் கேட்டவனின் வாயை எட்டிப் பொத்தினாள் மனைவி. இப்போதெல்லாம் பேச்சு வரையறையைக் கடந்து வரைமுறையில்லாதிருந்தது. அவன் கேட்கும் தொனியிலே விவகாரமாகப் பேசப் போகிறான் என்பதை உணர்ந்து இவள் உஷாராகினாள்.
அவளது செயலில் குமரன் விழிகள் மின்ன சிரித்தான். “யப்பா சாமி, எனக்கு நெயில் பாலிஷ் ரொம்பப் பிடிக்கும். எடுத்து வச்சுட்றேன்!” என இவள் இறங்கி வர, அவனிடம் சன்னமான சிரிப்பு.
இப்போது குமரனின் பார்வை போகும் இடத்தை உணர்ந்து படக்கென அவனிடமிருந்து எழுந்தவள், கழுத்தணியில் ஒரு கையை வைத்து முருகன் படத்தை மறைத்தாள். “அந்த செயினுக்கு வாயிருந்தா அழுதுடும்!” என்றவளின் முறைப்பு அவனைத் தொடர்ந்தது. கணவன் சன்னமாய் புன்னகைத்தான். அவளது பாவனையில், செய்கையில், அங்கலாய்ப்பில் இவனுக்கு சிரிப்பு பொங்கியது.
“ஹக்கும்… பரவாயில்லை, அழட்டும்!” என்ற குமரன் எட்டி அவளை இழுத்து அணைத்தான். சரியாய் அவனது முகம் மனைவியின் வயிற்றில் புதைந்தது. மனோஹரி துள்ளி விலகவெல்லாம் இல்லை. அவளது கைகள் கணவனின் கேசத்தைக் கோதின. இந்த சில தினங்களாக அவள் குமரனுக்குப் பழகியிருந்தாள்.
சின்ன சின்ன அணைப்பு, மெல்லிய ஸ்பரிசம், அவனுக்கும் அவளுக்கு மட்டுமேயான கழுத்தணி முத்தம், கொள்ளை கொள்ளையாய்ப் பார்வை, மனைவியிடம் மட்டுமான வரைமுறையற்றப் பேச்சு என குமரன் அவளைத் தனக்குப் பழக்கியிருந்தான். அதனாலே இப்போது கணவன் அருகில் வரும்போது துளிர்க்கும் படபடப்பும் நடுக்கமும் உதறலும் மனோவிடம் குறைந்திருக்க, அவளுக்கே அவளுக்கான அவனது அருகாமையை அமைதியாய் உள்வாங்கினாள். குமரன் அவளிடமிருந்து நீண்டநேரம் பிரியவே இல்லை.
“போதும் விடுங்க, உங்கம்மா வெளிய இருக்காங்க!” இவள் விலகப் பார்க்க, “வெளிய தானே இருக்காங்க, உள்ள இல்லையே!” என்றான் குறும்பாய்.
“ச்சு… என்னப் பேச்சு இது. எவ்வளோ பேசுறீங்க நீங்க!” அதட்டலும் சுகமான அலுப்புமாய் மனோ கூற, “அதான் அந்த வாயையும் பேச்சையும் உன் உதட்டை வச்சு நிறுத்திடலாமே!” என்றவன் பேச்சின் சாரம்சத்தில் மனோ ஓடியே போனாள். இல்லையென்றால் இன்னுமின்னும் பேசி சிவக்கச் செய்வான் என அவளறிந்ததே. அவன் சிரிப்பு அவளைத் தொடர்ந்தது.
மேலும் ஒருவாரம் கடந்திருந்தது. குமரனுக்கு காலிலிருந்த காயம் நன்றாய் குணமடைந்திருக்க, எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தான். இருந்தும் வெளியே செல்ல 144 தடை உத்தரவை தாரமும் தாயும் விதித்திருக்க, விதியை நொந்தவன் வீட்டிலே இருந்தான். அவனால் அவர்களது வார்த்தையை மீறி செல்ல முடியும்தான். இருந்தும் மனம் அப்படி செய்யவிடவில்லை. இத்தனை நாட்கள் ஓடியதற்கு மாற்றாக இந்த சில தினங்களை ஓய்வுக்குப் அர்பணித்திருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, காலையிலே ஷெண்பா வந்துவிட்டாள். குமரனுடன் அமர்ந்து இளங்கலையில் நடந்த ஆண்டு விழாவைப் பற்றியும் எடுத்து வந்திருந்த அவளது புகைப்படங்களையும் தமையனுக்குக் காண்பித்துப் பேசிக் கொண்டிருந்தாள். ஷெண்பா வந்தவுடன் மனோஹரி அவ்விடத்தைவிட்டு அகன்றிடுவாள். அவளும் அப்படித்தான். இருவருக்கும் இன்னும் சுமூகமான பார்வைகளோ, பேச்சோ அகப்படவில்லை. அதனாலே அன்றும் மனோஹரி அறையிலிருந்து வெளியே வந்து சிந்துவுடன் அமர்ந்துவிட்டாள்.