இரண்டு நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து குமரன் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டான். இனி ஒருமாதம் கழித்து வந்தால் போதுமென மருத்துவர் அறிவுரைக் கூறி மருந்து மாத்திரைகளை வழங்கியிருந்தார்.
கடந்து சென்ற இரு நாட்களுமே ஷெண்பா குமரனைவிட்டுப் பிரியவே இல்லை. காலையில் மருத்துவமனை வருபவள், மாலை கல்லூரிவிடும் நேரம்தான் வீட்டிற்கு கிளம்புவாள். விக்ரம் வந்து இவனைப் பார்த்து பேசிவிட்டு, பண்ணைக்குக் கிளம்புவான். மாலை அவனே வந்து ஷெண்பாவையும் அழைத்துச் செல்வான்.
குமரன் தங்கையை அதட்டிக் கல்லூரி செல்லப் பணிக்க, “பி.ஹெச்.டி ஸ்காலர் குமரா நானு, யூஜி இல்ல. தேவைபடுறப்போ போனா போதும்!” என அலட்டிக்காது பதிலளித்து அவனிடம் வளவளத்தாள் தங்கை. எத்தனை கூறியும் கேட்காதவளை அவனும் சரியென்று விட்டுவிட்டான். குமரனுக்கு மருத்துவமனையிலிருப்பது அத்தனை வெறுமையாய், கொடுமையாய் இருந்தது. இரண்டு நாட்களிலே அலுத்துப் போனான். எப்போதும் ஓட்டமும் நடையுமாய் இருப்பவனுக்கு ஓரிடத்தில் அமருவது அத்தனை எளிதாய் இல்லை. அந்தளவில் ஷெண்பா உடனிருக்கவும் அவனுக்குப் பொழுது கொஞ்சம் நன்றாகச் சென்றது. ஆனால், இன்னும் ஒருமாதம் வீட்டிலே இருக்க வேண்டும் என்ற நினைப்பே எட்டிக்காயாய் கசந்தது.
அதை மனோவிடம் அவன் பகிர, “கையும் காலும் சரியாகுற வரைக்கும் எங்கேயும் போகக்கூடாது!” என அவள் திட்டவட்டமாய்க் கூறிவிட, இவன் அவளை முறைத்தே தள்ளினான். அதையெல்லாம் அசட்டை செய்தாள் பெண்.
குமரன் வேலை பார்க்கும் செங்கல் சூளையின் முதலாளி வந்து பார்த்து நலம் விசாரித்தார். உடல்நலம் தேறியப்பிறகு வேலைக்கு வந்தால் போதுமென கூறிவிட்டு மருத்துவ செலவிற்கு அவரால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்தார் மனிதர்.
இவன் எவ்வளவோ மறுத்தும் அவர் கையில் திணித்துவிட்டுச் செல்ல, சரியென வாங்கிக் கொண்டான் ஆடவன்.
குமரனுக்கு விபத்து என்றதும் கோவிந்தன், வனிதா, அக்ஷயா, செபா, ஹரி என எல்லோரும் காணொளி அழைப்பில் அவனது நலம்நாட, மைதிலியும் லோகோஷூம் ஒருநாள் நேரில் வந்து அவனைப் பார்த்துவிட்டு சென்றனர்.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தும் கூட ஷெண்பா தினமும் இவனைக் காண வந்தாள். ராதாமணியும் அவனுக்கென தனியாய் அசைவம் சமைத்து எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போனார். அவர் திவாகரை அழைக்க, அவன் வேலையிருக்கிறது என தட்டிக் கழித்துவிட்டான். குமரனுக்கும் அவனுக்குமான அன்றைய பேச்சிற்குப் பிறகு திவாகர் அவனை சந்திக்க வரவேயில்லை. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணத்தைக் கூறி குமரனைக் காணும் சந்தர்பத்தை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான். மனோஹரிக்கு இப்போது கணவன் பிரதானமாகிப் போயிருக்க, தமையன் நினைவிலிருந்து சற்றே பின்னகர்ந்திருந்தான்.
வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடியிருக்க, சிந்து மகனுக்கு சமைப்பதற்காக கூடத்தில் அமர்ந்து கீரையை ஆய்ந்து கொண்டிருந்தார். அவரருகில் அமர்ந்து ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறெடுத்துக் கொண்டிருந்தாள் மருமகள்.
“மனோ, நீ வேலைக்கு எப்போ போகப் போற? ஒரு வாரத்துக்கு மேல லீவ்ல இருக்க…” சிந்து நினைவு வந்தவராய் அவளிடம் வினவினார்.
“போகலை அத்தை…” மனோ விட்டேற்றியாகப் பதிலளித்தாள்.
“போகலைன்னா என்ன அர்த்தம் மனோ… எத்தனை நாள் லீவு வாங்கியிருக்க?” சிந்து விடாது வினவினார்.
“ப்ம்ச்… இனிமே நம்ம இஷ்டம்தான் அத்த, வேலையை விட்டுட்டேன்!” என்று இயல்பாகக் கூறியவளின் கரம் பழச்சாற்றில் சர்க்கரையைக் கலந்தது.
“ஏன் மனோ, எதுக்காக நீ வேலையைவிட்ட!” அதட்டலாய்க் கேட்டவர், “அவனைப் பார்த்துக்கன்னு சொல்லாத! பெத்தவ நான் இருக்கேனே, நல்லா பார்த்துக்க மாட்டேனா?” பெரியவர் கொஞ்சம் கோபமாய் வினவினார். இவள் இப்படி செய்யக் கூடுமென அவர் எண்ணியிருக்கவில்லை. அதனால் கொஞ்சம் அதிர்ச்சியும் அதிருப்தியும் வெளிப்பட்டது அவரது குரலில்.
“ஹக்கும்… அது ஒன்னும் கலெக்டர் வேலை இல்லயே அத்தை. இவருக்கு சரியானதும் வேற ஒரு ஹாஸ்பிடல்ல ஜாய்ன் பண்ணிக்கப் போறேன். விடுங்கத்தை, பார்த்துக்கலாம்!” என்றவள் அந்தப் பேச்சிற்குள்ளே நுழைய விரும்பவில்லை. அவளது பதிலில் மருமகளை ஆயாசமாகப் பார்த்தார் சிந்து. அவரது பார்வையை உணர்ந்தவள், அலட்டிக் கொள்ளவில்லை.
“அத்தை, கீரை ஆய்ங்க… உங்க மகனுக்கு போய் ஜூஸைக் கொடுத்துட்டு வரேன்!” என்றவள்
அறைக்குள் நுழைய, குமரன் அவளை அழுத்தமாய்ப் பார்த்தான். இத்தனை நேரப் பேச்சுக்கள் எல்லாம் அவன் செவியிலும் விழத்தான் செய்தன. அவனுக்குமே மனைவியின் செயல் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.
“ஜூஸைக் குடிங்க, ஐஸ் போடலை!” என்றவளின் புறத்தோற்றத்தை அவனின் பார்வை அளந்தது. முன்பு போல எந்தவித அலங்காரமும் இப்போதெல்லாம் மெனக்கெட்டு மனோஹரி செய்து கொள்வதில்லை என சிந்தைக்கு அப்போதுதான் உறைத்தது. இரவு உடையில்தான் இருந்தாள். முடியைப் பின்னலிடக் கூடத் தோன்றாது தூக்கிக் கொண்டையிட்டிருந்தவள் முழுதாய் குமரனின் மனைவியாய் மாறியிருந்தாள்.
அவனறிந்தவரை எங்கே செல்ல வேண்டுமென்றாலும் அத்தனை சிரத்தையாய்த் தன்னை அலங்கரித்துக் கொள்வாள் மனோ. கையிலிருந்த நகப்பூச்சைக் கூட அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பாள். ஆனால், அதெல்லாம் கடந்தப் பத்து நாட்களில் காணாமல் சென்றிருக்க, அது தனக்காகத்தான், தன்னால்தான் எனப் புத்திக்குப் புரிந்தது.
“ஏன் வேலையைவிட்ட மனோ?” இப்போது குமரனும் அதே கேள்வியைக் கேட்டான்.
“இப்போதான் உங்கம்மாவுக்கு பதில் சொன்னேன். மறுபடியும் புள்ளைக்கிட்டயா?” போலியாய் அலுத்தாள் மனைவி. அதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பது போல ஒரு பார்வை அவனிடம்.
பெருமூச்சைவிட்டவள், “ச்சு… ஆமா, வேணாம்னு ரிசைன் பண்ணிட்டேன்!” என்றாள் அவன் பார்வைக்குப் பதிலாக.
“இந்த வேலை உனக்கு எவ்வளோ கஷ்டப்பட்டு கிடைச்சது. மூனு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி வாங்குன வேலை!” எனக் குற்றப் பார்வைப் பார்த்தான் கணவன்.
“ஏன், வேலைக்குப் போகலைன்னா இந்த வீட்ல இருக்கவிட மாட்டீங்களா?” மனோ இடக்காகக் கேள்வி கேட்க, “நான் என்ன கேட்குறேன், நீ என்னடி பேசுற!” என குமரன் எரிச்சலானான்.
அவனது பார்வையில் கொஞ்சம் தணிந்து கணவனருகே அமர்ந்தவள், “சரி, சரி. உங்களுக்கு ஹெல்த் சரியாகட்டுமே. வேற ஹாஸ்பிடல்ல வேலைக்கு ஜாய்ன் பண்ணிக்கிறேன்…” என அவளது குரல் கணவனை சமாதானம் செய்தது.
இருந்தும் ஆற்றமாட்டாது, “ஏன் டி?” எனக் கேட்டவனுக்கு நன்றாய்ப் புரிந்தது. தன்னைக்
கொண்டுதான் இந்தப் பெண் வேலையைவிட்டிருக்கிறாள் என. அவளது பணியின் மீதான பிடித்தத்தைக் குமரன் எத்தனையோ முறை கண்டிருக்கிறானே.
“எனக்காகத்தான் வேலை வேணாம் முடிவு பண்ணீயா?” அவன் கேள்வியில் முறைத்தவள், “இப்போ என்னங்க கதையா சொன்னேன். மறுபடியும் கேட்குறீங்க!” என இவள் அலுத்தாள்.
“வாயைத் திறந்து சொல்லு டி!” அதட்டலிட்டான் அவன்.