அன்பு 4.1

மெதுவாய் எரிந்தக் கண்களை கசக்கிவிட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தான் ரஞ்சன். அருகில் அமர்ந்தவாறு ஷோபனா பாதி உடலைப் படுத்தது போல மெத்தையில் சாய்த்திருந்தாள். அவளது கைகள் அஷ்வினைத் தட்டிக் கொண்டேயிருக்க, அரை உறக்கத்திலிருப்பதை உணர்ந்தான் ரஞ்சன். அவனது கைகள் நீண்டு மகனது உடல் சூட்டை ஆராய்ந்தன. அது குறைந்திருக்கவும் நிம்மதி பெருமூச்சு வெளிவந்தது.

எழுந்து மறுபுறம் சென்று ஷோபனாவை நன்றாய்ப் படுக்க வைத்தவன், காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தான். மணி ஆறைத் தொட்டும் இன்னுமே அறை முழுதும் இருளாகக் காட்சியளிக்க, ஜன்னல் கதவைத் திறந்துவிட்டான்.

குபுகுபுவென உள்ளே நுழைந்த குளிர் காற்று சற்றே அவனது உடலை ஊசியாய் ஊடுருவிச் செல்ல, வெளியே எட்டிப் பார்த்தான். மழையில்லை எனினும் வானம் மங்கலாகக் காட்சியளித்தது. இன்னும் சூரியன் முழுதாய் வெப்பத்தை படரவிடவில்லை‌.

சாலைகளில் ஈரம் படர்ந்திருந்தது. வலதுபுறம் அடுக்குமாடிக் கட்டிடத்தோடு கூடிய சிறிய பூங்கா போல ஆங்காங்கே கல்மேஜைகளும் புல்வெளியும் அமைத்திருந்தனர். அங்கே வயதான முதியவர்களும் இளம் பிராய இளைஞர் யுவதிகளும் நடை பயின்று கொண்டிருந்தனர்.

“மனோ… ஓடாத டா! மெதுவா நட!” என அதட்டலிட்டவாறு சந்தனா பூங்காவில் நடைபயின்று கொண்டிருந்தாள். மனோகர் முன்னும் பின்னும் ஓடியவாறு இருக்க, இவள் அவனது நடைக்கு ஈடு கொடுத்தாள்.

“மனோ!” என மீண்டுமொரு அதட்டல் இவளிடம். அவன் வயதையொத்த இளம்சிட்டை கண்டதும் சின்னவன் அவனுடன் சேர்ந்துவிட, இவள் ஆசுவாசப் பெருமூச்சுடன் கல்மேஜையில் அமர்ந்தாள். கொஞ்ச நேரம் ஓடியதில் மூச்சுவாங்க, அமர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

அந்த வழியே சென்ற ஓரிருவர் இவளிடம் ஏதோ கேட்க, புன்னகையுடன் பதிலளித்தவண்ணம் இருந்தாள். நேற்றைக்கும் இன்றைக்கும் அவளிடம் நிறைய வேறுபாடுகள். சிறு பெண்ணாய் தெரிந்தாள் போல. ரஞ்சன் அவளைத்தான் பார்த்தான். பார்த்ததும், “டாக்டர்” என அவனது இதழ்கள் முணுமுணுத்தன. நேற்றைய அவளது புன்னகை ததும்பிய முகமும் பேச்சும் கண்முன்னே வந்து சென்றது. தூரத்தே தெரிந்த பறவையொன்று சப்தமிடவும் அதில் கலைந்தவன் தலையை உலுக்கிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

இந்த குளிருக்கு சூடாய் ஒரு தேநீரை உள்ளிறக்கினால் நன்றாய் இருக்குமென மனம் கூற, பாலை மிதமான சூட்டில் காய்ச்சி தேநீர் பொடியைக் கலந்து வடிகட்டவும், ஷோபனா எழுந்து வந்தாள்.

“என்னை எழுப்பி இருக்கலாம்ல ரஞ்சன்?” என சோபையாய் புன்னகைத்தவாறே கலைந்திருந்த முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள்.

“நல்லா தூங்கீட்டிருந்த ஷோபி, அதான் எழுப்பலை. டீ குடி வா” அவளுக்குமொரு கோப்பையை நகர்த்தி வைத்தான். எந்த அலட்டலுமின்றி அவளும் எடுத்துப் பருகலானாள்.

அவனே இருவர் குடித்தக் கோப்பையைக் கழுவி வைக்க, “நீங்க போங்க… போய் ஆபிஸ் கிளம்புங்க. நான் ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்றேன்!” என்றவளிடம் தலையசைத்து அவன் நகர, இவள் தோசை சுட்டு எளிமையாய் சாம்பார் ஒன்றை வைத்தாள். மகனுக்கென கொஞ்சம் சாதம் வடித்து, ரசம் வைத்தாள்.

“எனி ஹெல்ப் ஷோபி?” அலுவலகம் தயாராகி வந்த ரஞ்சன் வினவினான்.

“இதோ, முடிஞ்சது பா!” என ரசத்தை மூடி வைத்து அடுப்புத் தீயை குறைத்தாள்.

“சாப்பாடு எடுத்து வைக்கிறேன். வந்து சாப்டுங்க நீங்க…” என அவள் உணவு பாத்திரத்தில் கையை வைக்கச் செல்லும் முன்னே, “மம்மி…” என கண்ணைக் கசக்கிக் கொண்டே அஷ்வின் எழுந்து வந்து அவளை அணைத்தான்.

இவள் குனிந்து அவனைத் தூக்கி இடுப்பில் வைத்து, “குட் மார்னிங் அஷூ கண்ணா…” என்றாள் அவனின் தலையைக் கோதி.

“குட்மார்னிங் மம்மி… அஷூக்கு ஃபீவர் கோன்! போயே போச்சு” என்றான் சின்னவன் பற்கள் தெரிய புன்னகைத்து. அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் இவள். ஒருநாள் காய்ச்சலுக்கே மகன் மெலிந்து விட்டதாய் அவளுக்கொரு எண்ணம் பிறந்தது.

“ஒருநாள் பீவர்க்கே அஷூ மெலிஞ்சுட்டான் இல்ல ரஞ்சன்?” ஷோபனா கவலையாய்க் கேட்க, ரஞ்சன் தலையை அசைத்துப் புன்னகைத்துக் கொண்டான். எல்லா தாய்க்கும் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவனது உடல்எடை ஒரே நாளில் குறைந்து விடுவது போலொரு பிரேமை என நினைத்தவனுக்குப் பெற்றவர்கள் நினைவில் மனம் கனிந்து போனது. நேரத்தைப் பார்த்தான், இன்னும் சிறிது நேரத்தில் அவர்களே அழைப்பார்கள் என எண்ணிவிட்டு, உணவை மேஜை மீது எடுத்து வைத்து உண்ணத் துவங்கினான்.

ஷோபனா மகனை இடுப்பில் வைத்தவாறே பாலைக் காய்ச்சி அவனுக்குச் சத்துமாவைக் கலந்து கொடுத்தாள்.

“ஹார்லிக்ஸ் பூஸ்ட்னு கண்டதை புள்ளைக்கு கொடுக்காத ஷோபனா. சத்துமாவை நானே அரைச்சேன்‌‌. இதுல எல்லா சத்தும் இருக்கு. அவனே வேண்டாம்னு அடம்பிடிச்சாலும் நீ மறக்காம டெய்லி கொடுத்துடு!” அன்பைக் கூட அதட்டலாய் உரைத்த மாமியாரின் நினைவில் உதடுகள் மலர்ந்தன.

பசியில் இருந்ததால் அஷ்வின் மடமடவென பாலைக் குடித்து முடித்திருந்தான். ரஞ்சன் உண்டுவிட்டு எழ, “அதுக்குள்ளேயும் சாப்டீங்களா?” எனக் கேட்டவளின் குரலில் லேசான கவலை தேய்ந்திருந்தது.

“ப்ம்ச்… ஷோபி, நாலு தோசை சாப்டேன் டி. இதுக்கும் மேல வயித்துல இடமே இல்ல. நான் பட்னியா போற மாதிரி பார்க்காத நீ!” அவன் முறைப்புடன் எழுந்தான்.

“டாடி, நான் த்ரீ தோசை சாப்பிடுவேன்!” அஷ்வின் துள்ளலாய்க் கூற, அந்த உற்சாகக் குரல் இவர்களையும் தொற்றிக் கொண்டது.

“யெஸ்… அஷூ கண்ணா குட் பாய்!” என்ற ரஞ்சனும் அவனுக்குப் பதிலளிக்க, ஷோபனாவின் கைபேசி இசைத்தது.

“ரஞ்சன், அத்தைதான்!” எப்போதும் காலை இதே நேரத்திற்கு அழைப்பதை வழக்கமாய் வைத்திருந்தார் பெரியவர்.

“என்ன டா, ஆஃபிஸ் கிளம்பிட்டீயா? பத்திரமா போ டா. கேண்டீன்ல சாப்ட்டு உடம்பை கெடுத்துக்காத டா. ஷோபனா மதிய டிபன் கட்டிக் கொடுக்குறா தானே?” என அவர் கேட்க, இவன் சிரிப்புடன் ஆமாம் என்பது போல தலையை அசைத்தான்.

ஷோபனாவால் மதிய உணவை சமைத்து தர இயலவில்லை. இப்போதைக்கு பணிமனையில் உண்டு கொள்வதாக அவளை சமாதானம் செய்திருந்தான் கணவன். அதை தாயிடம் தெரியப்படுத்தினால் அவர் வருந்துவார், மனைவியை ஏதும் சொல்லிவிடுவார் என பொய்யுரைத்தான்.

ஷோபனா அவனை நுரைத்துப் பொங்கிய அன்போடு பார்த்தாள். எங்கேயும் கணவன் தன்னை விட்டுத் தருவதில்லை என்பதில் அவளுக்கொரு அலாதி கர்வமே உண்டு. அவள்தான் அவன் வேண்டுமென விரும்பி வந்திருந்தாலும், ஒருபோதும் ரஞ்சன் அவளைக் குறைவாய் நடத்திவிடவில்லை.

அவளுக்கான சுயமரியாதை, சுதந்திரம் என எதையும் குறைக்காது அதே நேரம் பொறுப்பாய் அன்பாய் பார்த்துக் கொள்வான். தனக்கும் மகனுக்கும் என்று வருகையில் தங்கள் மீதான பாசம் எப்போதும் முன்நிற்கும். நேற்றைய அவன் செயலில் சுணங்கியிருந்த மனம் இப்போது தெளிந்திருந்தது.

“சரி மா, சரிப்பா.‌‌.. பாய், ஆபிஸ் கிளம்புறேன்!” என ரஞ்சன் விடைபெற, அவனை அனுப்பிவிட்டு இவள் வந்தாள். அஷ்வின் தாத்தா, பாட்டியிடம் ஏதோ செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

இவள் முகம் திரையில் விழுந்ததும், “என்ன ஷோபனா புள்ளை இளைச்சுப் போய்ட்டான்!” எனக் கேட்டார் பெரியவர். ரஞ்சன் புன்னகைக்கான காரணம் இப்போது புரிந்தது.

“ஆமா அத்தை!” இவள் பதிலளித்தாள்.

“சத்துமாவைக் கொடுக்குறீயா இல்லையா?”

“பாட்டி, இப்போதான் குடிச்சேன்…” அஷ்வின் இடைபுக, அனைவரது முகத்திலும் புன்னகை.

“கண்ணுக்குள்ளே நிக்கிறான் என் பேரன். ரொம்ப மிஸ் பண்றேன் உங்களை!” அவர் கூறவும், இவள் முகம் மென்மையானது. தன்னிடம் அவ்வப்போது அரட்டி உருட்டி மாமியார் என்ற பதவியைத் தக்க வைத்திருந்தாலும், அஷ்வினுடன் இருக்கும்போது பெரியவர்கள் இருவரும் குழந்தைகள்தான்.

அவர்களது இருபத்து நான்கு மணி நேரமும் அவனைச் சுற்றித்தான் நகரும். அவன் கேட்கும் முன்னே தாத்தாவும் பாட்டியும் எதுவென்றாலும் வாங்கித் தந்துவிடுவார்கள். அதனாலே அஷ்வின் பெற்றவர்களைவிட அவர்களிடம் அதிகம் ஒட்டிக் கொள்வான்.

சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்த ரஞ்சனுக்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைக்க, அவன் பெற்றவர்களைத் தனியே விடக் கூடாதென எண்ணி, அதை மறுக்கும் எண்ணத்திலிருந்தான்.

தங்கள் மகனின் வளர்ச்சி தங்களால் தடைபடக் கூடாதென பெற்றவர்கள் எண்ணினர். அவனது ஆறிலக்க சம்பளத்தை தாண்டி அவனுக்கான பதவி உயர்வு அவனது உழைப்பின் பலன் எனக் கருதி சமாதானம் செய்து ரஞ்சனை அனுப்பி வைத்தனர். அரை மனதாய்தான் மூவரும் கிளம்பினர். அஷ்வின் தாத்தா பாட்டியைவிட்டு வர மாட்டேன் என அழுது தேம்பிய போது பெரியவர்களுக்கு மனம் கனத்துப் போனதென்னவோ உண்மை.

இங்கே வந்தப்பின் நாள் தவறாது அழைத்துப் பேசி விடுவார்கள். ரஞ்சனின் தந்தைக்கு இன்னும் ஒரு வருடத்தில் பணி ஓய்வு கிடைத்துவிடும். அதற்குப் பின்னே அவர்களும் பெங்களூருக்கு இடம்பெயர எண்ணியிருந்தனர்.

“நாங்களும் உங்களை மிஸ் பண்றோம் அத்தை. உங்கப் பேரனோட பெட் டைம் ஸ்டோரியைக் கூட மிஸ் பண்றோம்!” என உணர்ந்து கூறினாள். சென்னையில் இருக்கும் போது மாமியார் அனைத்தையும் முன்னின்று செய்ய, இவள் அவருக்கு உதவுவாள்‌‌. மற்றபடி பெரிதாய் வேலையெதுவும் இருக்காது.

ஆனால், இப்போது ஒற்றை ஆளாய் அனைத்தையும் சமாளிக்க முடியாது திணறினாள். ரஞ்சன் உதவி செய்தும், அவளால் சரிவர எதையும் செய்ய முடியவில்லை. இத்தனை நாட்கள் அவர்களின் நிழலிலே இளைப்பாறிவிட்டு திடீரென தனியாய் குடும்ப சுமையை சுமக்க முடியாது வெகுவாய் சோர்ந்து போனாள்.

மேலும் சில பல நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் அஷ்வினுக்கு உணவை ஊட்டி, மருந்தைக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு சப்தமிடாது வீட்டு வேலைகளை கவனிக்கலானாள்.


error: Content is protected !!
Scroll to Top