“ண்ணா… காஃபியைக் குடிங்க!” எனத் தன் முன்னே நீண்ட கரங்களை நிமிர்ந்து பார்த்த தீனாவின் உதடுகளில் சர்வ நிச்சயமாய் உயிர்ப்பில்லை. எதிரிலிருந்தவளுக்காக என யோசித்து புன்னகையை உதிர்த்தான்.
“என்னாச்சுண்ணா… உங்க ஃப்ரெண்ட் தாத்தா இப்போ பரவாயில்லையா? ரொம்ப தெரிஞ்சவரா? உங்க ரெண்டு பேரு முகத்தையும் பார்த்தா அப்படித்தான் தோணுது?” அவள் அக்கறையாய்க் கேட்க, இவனது கண்கள் கலங்கின.
“ரொம்ப தெரிஞ்சவங்க ஷோபி. அவங்களுக்கு இப்படியொரு நிலைமை வரும்னு நாங்க நினைக்கலை!” தீனாவின் குரல் வருத்தத்தில் தோய்ந்தது.
நேற்று நள்ளிரவு கடந்தும் வராத கணவன் மற்றும் தமையனை எண்ணி ஷோபனா பயத்துடன் அமர்ந்திருக்க, இவர்கள் வெகு தாமதமாகத்தான் வந்தனர். முகமெல்லாம் சிவந்து வந்திருந்த ரஞ்சனைப் பார்த்து இவள் பதறிவிட, “ஷோபி… அது என்னோட கொலிக் ஒருத்தரோட தாத்தவுக்கு ரொம்ப முடியலை. ஹீ வாஸ் சோ சிக். அவரைப் பார்க்கத்தான் போனோம். அங்க, அவர்… அவர் யாரோன்னு நினைச்சிட்டு போனோம். பட், சின்ன வயசுல நாங்க குடியிருந்த வீட்டுப் பக்கம்தான் அவரும் இருந்தாரு. ரொம்ப நாள் கழிச்சு அவரை இப்படி பார்க்கவும் மனோ எமோஷ்னலாகிட்டான். அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் வலியில துடிக்கிறதை எங்களால பார்க்க முடியலை!” என்றவன் குரல் லேசாய் பிசிறு தட்டியது.
ஷோபனா எதுவும் தோண்டித் துருவவில்லை. கணவனை ஆறுதலாக அணைத்துக் கொள்ள, அவனுக்கும் பற்றுக் கோல் கிடைத்ததில், அவளை இறுகக் கட்டிப் பிடித்து கண்களை மூடினான். ஆனாலும் விழிகளை உறக்கம் அண்டவே இல்லை. பாரத்தை இறக்கி வைத்தவள் சிறிது நேரமேனும் விழிகளை மூட, அதை வாங்கிக் கொண்டவனின் தூக்கம் அவர்கள் வீட்டு வாயிலோடு மறித்திருந்தது.
“அண்ணா… ஹம்ம், நம்மளால எதுவும் பண்ண முடியாது. கண்டிப்பா அவருக்காக நான் வேண்டிக்கிறேன். அவரோட கஷ்டம் சீக்கிரம் சரியாகிடணும்னு!” அவள் கூற, இவன் மௌனமாகத் தலையை அசைத்தான்.
மனோரஞ்சன் எழுந்து வெளியே வந்தான். தூங்காத விழிகள் சிவந்து கிடந்தன. தீனாவின் அருகே அமர்ந்தவன், ஷோபியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஏனோ இந்தப் பெண்ணை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
“ரஞ்சன், நான் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்!” என அவள் எழ, “வேணாம் ஷோபி, நான் வெளிய போய்ட்டு வரேன்!” என எழுந்துவிட்டான்.
“ஷோபி, அது… தாத்தாவைப் பார்த்துட்டு வரோம் நாங்க…” என தீனாவுமே எழுந்தான்.
“அண்ணா, எழுந்து அப்படியே போகணுமா? குளிச்சிட்டு போகலாம் இல்ல?” என ஷோபனா பேச்சைக் கேட்காது மனோ காலணிகளை அணிய,
தீனா பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன், “ஷோபி… ஹீ இஸ் சோ அப்செட் டா. அதான், நான்… நாங்க போய்ட்டு வர்றோம்!” என்றான் சங்கடமாக.
“ப்ம்ச்… அண்ணா, என் ரஞ்சனைப் பத்தி எனக்குத் தெரியாதா? போய்ட்டு வாங்க. அப்பப்போ ஃபோன் மட்டும் போடுவேன். எடுத்துப் பேசுங்க!” என அவள் கணவனை வாஞ்சையுடன் பார்க்க, மனோவிற்கு கண்கள் கலங்கின. யாருக்கும் தான் உண்மையாய் இல்லையென மனம் வெகுவாய்க் கனத்துப் போனது.
“சரி டா…” என்ற மனோ வெளியே வர, இருவரும் சந்தனாவின் வீட்டின் முன்னே சென்று நின்றனர்.
சந்தனா வந்து கதவைத் திறந்தாள். குளித்து முடித்திருப்பாள் போல, தலையில் தண்ணீர் சொட்டியது. அவர்களை எதிர்பார்த்தேன் என்ற பாவனை முகத்தில் கவிழ, “வா தீனா… வாங்க ரஞ்சன்!” என்றாள் புன்னகைத்து. என்ன முயன்றும் அவளிடம் தன் குட்டியைக் காண முடியவில்லை என மனோவின் மனம் அந்நொடி வெகுவாய் அடிவாங்கியது.
அவர்களை அமர வைத்தவள், “இவ்வளோ காலைல வரணுமா? எழுந்ததும் வந்துட்டீங்க? ஷோபனா உங்களை எதுவும் கேட்கலையா ரஞ்சன்?” என விளையாட்டாய்க் கோபம் கொண்டவளிடம் நேற்றைய சுவடு துளியும் இல்லை. ஏனோ நேற்று நடந்தது எல்லாம் கனவு போல அவர்களுக்குத் தோன்றிற்று.
“குட்டி…” என மனோ அவளருகே தவிப்புடன் வர முனைய, “ரஞ்சன், உட்காருங்க!” என அதட்டலிட்டாள். அச்சிறு குரலுக்கே அவன் அமர்ந்துவிட, பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அவர்களுக்கு அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“ஹம்ம்… நேத்து நான் ரொம்ப எமோஷனலா இருந்தேன். சாரி ரஞ்சன், உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல? ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி…” என்றாள் புன்னகையுடன். அந்த சிரிப்பின் பின்னிருந்த வலியை உணர்ந்தவனுக்கு விழியோரம் ஈரம் படரப் பார்த்தது.
“அது… அது நீங்க ரெண்டு பேரும் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இல்ல. யார்கிட்டேயும் ஷேர் பண்ணாம மனசுக்குள்ளயே வச்சிருந்ததால, என் கன்ட்ரோலை மீறி நான் நடந்துகிட்டேன் ரஞ்சன். தீனா சாரி டா. உன்னையும் அப்செட் பண்ணிட்டேன் இல்ல. நீ ஆசையா என்னைப் பார்க்க வந்த. பட், உன் மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டேன்!” என்று வருத்தப் புன்னகையை உதிர்த்தவள், சில நொடிகள் தயங்கினாள். பின்னர் அதை உடைத்தெறிந்துவிட்டு,
“உங்க ரெண்டு பேர் மனசுலயும் என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனால், நிஜமா நீங்க எந்த வகையிலயும் என் டிசிஷனுக்கு காரணம் இல்ல. நம்மளாலதான் இவ இப்படி இருக்கான்னு கில்டி கான்ஷியஸ் எல்லாம் வேண்டாம். நீங்க பார்த்து பரிதாபப்படுற அளவுக்கு எல்லாம் நான் மோசமா இல்ல. படிச்சு முடிச்சிட்டு ஒரு ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்கேன். நல்ல சம்பளம், நல்ல சுகமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன்.
எனக்குன்னு அழகான பையன், என்னோட லட்சுமிமான்னு இதான் என்னோட கூடு. என் மேல பிரியத்த வச்சிருக்க அவங்க ரெண்டு பேரும் இருக்கவரைக்கும் நான் சந்தோஷமா இருப்பேன்…” என்றவள்,
“நான் தனியா இருக்கதால நீங்க கவலைப்படாதீங்க. எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணாம, சிங்கிளா சந்தோஷமா வாழலையா என்ன? நான் மனோவை நினைச்சு கல்யாணம் பண்ணலைன்னு நீங்க நினைக்கிறது தப்பு.
எனக்கு யாரையும் பிடிக்கலை, தட்ஸ் இட். சப்போஸ் எனக்கு ப்யூச்சர்ல யாரையும் பிடிச்சா, நான் என் வாழ்க்கையை அவங்களோட ஷேர் பண்ணிப்பேன். சோ, என் வாழ்க்கை என்னோட தனிப்பட்ட முடிவுதான். யாருக்காகவும் நான் என்னோட முடிவை மாத்திக்க மாட்டேன். எனக்கு சரின்னு பட்டதைதான் பண்ணுவேன்!” என்றாள் தெளிவான குரலில்.
நீங்கள் எந்த வகையிலும் என் வாழ்வில் தொடர்பில்லை என எட்ட நிறுத்தி விட்டாள் பெண். கேட்டுக் கொண்டிருந்த மனோ அட்சர சுத்தமாய் அந்தப் பேச்சின் விருப்பமின்மையை முகத்தில் காண்பித்தான்.
ஏனோ நடந்து முடிந்த ஒன்றைப் பேசுவதில் என்ன பயன் இருந்துவிடப் போகிறது. இப்படித்தான் எனத் தெரிந்து தானே சந்தனா இந்த வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தாள். பிறகு யாரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற துளியும் அவளுக்கு விருப்பமில்லை.
வாழ்ந்துவிட்டு போகிறேன் நான். நிம்மதியான வாழ்க்கையை கடவுள் எனக்குக் கொடுத்தால் போதும். அதுவே எனக்குப் பேரானந்தம் என்றொரு எண்ணம் அவளிடம் எப்போதும் உண்டு. சந்தோஷமான வாழ்வைவிட நிம்மதி மிகவும் முக்கியம் என்பது சந்தனாவின் சித்தாந்தம். இத்தனை நாட்கள் மனதில் அழுத்திய பாரமெல்லாம் கரைந்திருந்தது. உரியவரிடம் சேர்ப்பித்த நிம்மதியில் மனம் ஆழ்ந்த அமைதியிலிருந்தது.
சந்தனா பேச பேச மனோ அவளை வெற்றுப் பார்வை பார்த்தான். அதை சந்திக்க தன்னிடம் திராணியில்லை என்றுணர்ந்தவள், விழிகளை தீனாவிடம் நகர்த்தினாள்.