“அப்படி எதுவும் பண்ணா, நான் செத்துடுவேன் குகா…” குரல் அடைக்கக் கூறியவளை அனல் கக்கும் விழிகளால் முறைத்தவன்,
“செத்துடு டி… செத்துப் போ. நாலு நாள் அழுதாலும் அதுக்குப் அப்புறம் நான் நிம்மதியா இருப்பேன் டி. நீ வாழ்ந்து, எங்க நிம்மதியையும் கெடுக்குற. பொண்டாட்டி புள்ளை, அம்மா அப்பான்னு இத்தனைப் பேர் இருந்தும் அநாதையா எங்கயோ போய் இருந்தேன் இல்ல. இது எனக்குத் தேவைதான் டி. உன்னாலதானே எல்லாம் பிரச்சனையும்!” அவன் வார்த்தைகளோடு சேர்த்து அருகிலிருந்த புத்தகத்தையும் அவள் மீதெறிய, அவன் கூறிய வார்த்தைகளின் வலியில் சந்தனா சுருண்டிருந்தாள்.
ஆம், அவனுரைப்பது அத்தனையும் மெய்தானே. தன்னால், தன்னைக் கொண்டு தானே அவர்களுக்குள்ளே பிரச்சனையின் அடிநாதம் துவங்கியது. ஆதி முதல் அந்தம் வரை சந்தனாவின் சர்வமும் பிணைந்து கிடந்ததே.
அவன் வார்த்தைகள் கொடுத்த வலியையும் வாதையையும் சேர்த்து விழுங்க முயன்றவளின் தொண்டை அடைத்துக் கொள்ள, நெஞ்சு வரை பாரம் அழுத்தி மூச்சடைத்து அவளை கொன்று குவித்தது.
“போய்டு குகா… இனிமே, இனிமே என்னால உன் வாழ்க்கையில எந்தப் பிரச்சனையும் வராது. நீ, நீ என்னைப் பார்க்க முயற்சி பண்ணாத. என்னால என்னைப் பார்த்துக்க முடியும்!” கரகரத்துப் போன குரலில் பேசியவளின் பார்வை மட்டும் அவனிடம் இறைஞ்சியது. விழிகள் முழுவதும் வலி சுமந்திருக்க, இப்போதும் உதட்டை இழுத்துப் பிடித்து புன்னகைத்து அவனை அனுப்ப முயன்றவளின் மனம் சத்தியமாய் உதிர்ந்திருந்தது. காயம் கண்ட இதயம்தான். மரத்துப் போய் விடாதா என எண்ணிய நாட்களின் ஏக்கம் இன்றும் அவளில் பிரவாகமாகப் பொங்கியது.
குகா வேதனைத் ததும்பும் விழிகளுடன் அவளைப் பார்த்தான். எத்தனையோ நாட்கள் அவளை விட்டுவிடு என மனம் முரண்ட, இந்த ஜென்மத்தில் தனது தோழியை, தன் சந்தனாவை அவனால் விட முடியாதே. பத்து வருடத்திற்கும் மேலான பந்தமாகிற்றே. எளிதில் வெட்டி வீசக்கூடிய உறவா இது?
தாய் தந்தையின்றி அரவணைப்பைத் தேடியவளுக்கு தாய் மடி ஈந்து உதவியவன் குகேஷ்தான்.
அந்த ஈரம் இன்னுமே அவன் நெஞ்சின் ஒரு ஓரமாய் ஒட்டியிருந்து அவனை இம்சித்தது. அவன்தான் சந்தனாவை தாங்கினான். இல்லை இல்லை, சரியாகச் சொன்னால் அவர்கள் தாங்கினார்கள் என்பதே தகும். குகேஷூம் யசோதாவும் இல்லையென்றால் இந்த சந்தனா இன்றில்லை. என்றோ உணர்வின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி இருப்பாள். அவளைப் புதைத்த இடத்தில் புற்கள் கூட முளைத்திருக்கும். நிஜம் அதுதான். அவர்கள் இருவரிடமும் சந்தனாவின் நன்றிக்கடன் அளப்பரியது.
ஒரு துன்ப பெருமூச்சோடு விழிகளை சிமிட்டி உணர்வுகளை அடக்கியவன், அவள் முன்னே சென்று நின்றான். “இப்போ நான் என்ன பண்ணணும்?” எனக் கேட்டவனை நன்றியோடு பார்த்தாள் சந்தனா.
இந்தப் புரிதல், இதுதானே அவளுடைய குகா. அவள் முகம் பார்த்து அகமறிந்து நடக்கும் உற்றத் தோழனை எண்ணி மனம் நேசத்தில் ததும்ப, “நீ வீட்டுக்கு கிளம்பு குகா. உனக்காக எல்லாரும் வெயிட் பண்றாங்க…” என்றாள் இறைஞ்சலாய்.
அந்தப் பார்வையில் மறுக்க வந்த வார்த்தைகள் உள்ளே அமிழ்ந்துவிட, “சாப்ட்டுப் போறேன்…” என்றான். ஏனோ இந்த நிலையில் இவளை தனித்துவிட்டுச் சென்றால் தன்னுணர்வுகள் அவனை நிம்மதியாக இருக்க விடாதே. அதனால் அவளுடனிருக்கும் நேரத்தை நீட்டிக்கவே விரும்பினான்.
“வீட்டுக்குப் போய் சாப்பிடு. உன் பொண்டாட்டி சமைச்சுத் தருவா!” குரலில் காரமில்லை. அவன் மீதான அன்பே கொட்டிக் கிடந்தது. மூக்கை உறுஞ்சி உதடுகளில் புன்னகையை சுமக்க முயன்றவளின் மனம் அருகிலிருந்தவன் மீதான நேசத்தில் ததும்பி வழிந்தது.
“பசிக்குது டி… உன் கையால எதுவும் செஞ்சுத் தருவீயா மாட்டீயா?” என அவன் வயிற்றைத் தடவ, மறுக்க வந்த வார்த்தைகள் உதட்டுக்குள்ளே மரித்துவிட, “சரி, சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிடணும்…” என்று முகம் கழுவி வந்தாள்.
“குளிச்சிட்டு வா… நான் டிஃபன் செய்றேன்…” என அறையை விட்டு வெளியேறியவளின் முகத்தில் இத்தனை நேரமிருந்த கவலை, சுணக்கம் துக்கமெல்லாம் அறை வாயிலைக் கடக்கும் போது காத தூரம் சென்றிருந்தன. இதோ தனக்காக தன்னலமில்லாத அன்புடன் இருகரங்கள் காத்திருக்க, இந்நொடி அவளுடைய வலிகள் தற்காலிகமாக விடுப்பெடுத்துக் கொண்டன.
மலர்ந்த முகத்துடன் பாவனாவைத் தூக்கி ஆசை தீர முத்தமிட்டாள். ஏனோ, இதுதான் இவர்களைத் தான் கடைசியாய் சந்திக்கும் வாய்ப்பு என எண்ணியதும் மனம் கசந்தது.
அவளிடம் பேசி சிரித்தவள், “பப்பி போய் ப்ரெஷ் பண்ணீட்டு வா. மனோ நீயும் தான். நான் உங்களுக்கு ஏதாவது குக் பண்றேன்!” என்றாள் வாஞ்சையாய்.
“மம்மி, எனக்கு கேரட் தோசை வேணும்!” பாவனா ஆசையாய்க் கேட்க, “பத்து நிமிஷத்துல அம்மா சுட்டுத் தரேன் டா…” என்றவள் அடுக்களைக்குள் நுழைந்தாள். லட்சுமி அவர்களுக்கென தயாரித்திருந்த குளம்பி ஆறி அவலாகியிருந்தது.
இவள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மாவை வெளியே வைத்துவிட்டு கேரட்டைத் துருவ, லட்சுமி அம்மா அவளது முகத்தைப் பார்த்து என்ன வினவுவது எனத் தெரியாது தயங்கி நின்றார். சில நொடிகளில் அவர் பார்வைத் தன்னைக் குறுகுறுக்கச் செய்ய, நிமிர்ந்தவள் புன்னகைத்தாள். நான் நன்றாய் இருக்கிறேன் என்ற புன்னகை அது.
“லட்சுமி மா… உங்க கையால மிளகாய் சட்னி வைங்க. குகாக்கு ரொம்ப பிடிக்கும். நான் புள்ளைங்களுக்கு காரமில்லாம பருப்பு சாம்பார் வைக்கிறேன்…” என்றவள் வேலையில் இறங்க, லட்சுமி பெருமூச்சோடு வேலையைக் கவனித்தார்.
குகேஷ் குளித்து வர, மனோ அவனை ஆரத் தழுவினான். இத்தனை நாட்கள் தங்களைப் பார்க்க ஏன் வரவில்லை என புகார் வாசித்து, பெரியவனின் சமாதானத் தூதில் கையெழுத்திட்டு லஞ்சமென மனதில் வாங்க வேண்டியதாய் உருப்போட்டிருந்த வரிசையை அடுக்கி முடிய, சந்தனா சமைத்து முடித்திருந்தாள்.
சிறியவர்கள் இருவரும் குகேஷின் இருபுறமும் அமர, சந்தனா தோசையை பரிமாற, லட்சுமி சட்னியை வைத்தார்.
“சந்து வா… நீயும் சாப்பிட. லட்சுமி மா, உங்களையும் தான். ரெண்டு பேரும் உட்காருங்க…” எனக் கட்டாயப்படுத்தி அவர்களையும் சேர்த்துக் கொண்டான். நீண்ட நாட்களுக்குப் பின்னரான வீட்டு சாப்பாடுதான். ஆனாலும் குகேஷூக்கு ருசிக்கவில்லை. பெயரளவில் உண்டு எழுந்தான்.
நேரத்தைக் கவனித்த சந்தனா அவனைத் தயக்கமாய்ப் பார்க்க, “சந்தனா…” என அவள் கையை அழுத்தினான். அவள் புன்னகைத்தாள்.
அந்த அழுத்தத்தில் அவன் முகத்தில் அவளுக்கான வாஞ்சையும் பரிவும் அக்கறையும் நிரம்ப இருந்தன. இதற்கெல்லாம் இவர்களுக்கு என்ன திருப்பி செய்யப் போகிறோம் என நெஞ்சம் நெகிழ்ந்திருக்க, “இங்க வராதே குகா…” என்றாள் புன்னகை முகமாக. அதன் பின்னிருந்த வலியை உணர்ந்தவன் தலையை இடம் வலமாக முடியாது என அசைத்து, “அதை நீ சொல்லாத சந்தனா…” என்றான் அழுத்தமாக.
சில நிமிடங்கள் மௌனமாக கழிய, “ப்பா… நானும் உங்களோட வரேன்!” என மனோ குகேஷ் கையைப் பிடித்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களைப் பார்த்ததில், இவனுக்கு ஏக்கம் பிறந்திருந்தது.
அவனை வாஞ்சையாகப் பார்த்தவன், “சரி மனோ… நீயும் ஒரு நாலு நாள் எங்களோட தங்கிட்டுப் போ டா!” எனவும், சின்னவன் குஷியாகிப் போனான்.
அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியில் ஆரவாரத்தில் சந்தனாவும் பள்ளியில் நான்கு நாட்கள் அவனுக்கு விடுப்புக் கூறிக் கொள்ளலாம் என சின்னவனுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்து குகேஷ் மற்றும் பாவனாவுடன் அனுப்ப, குகா மனதே இல்லாமல் விடை பெற்றான். சந்தனா உதட்டில் முறுவலுடன் அவர்களை அனுப்பி வைத்தாள்.
ஏனோ அதீத சோர்வில் உடல் ஓய்வுக்கு கெஞ்சியது போலொரு எண்ணம். படுத்து தூங்கினால் நன்றாக இருக்கும் என அவள் எண்ண, மருத்துவனையிலிருந்து அழைப்பு வந்தது. இன்றைக்கென அவளைக் காண நான்கு பேர் முன்பதிவு செய்திருக்க, உள் நோயாளிகளை வேறு பார்க்க வேண்டும் என்ற நினைப்பு அவளை உந்த, சொந்த விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள்.
சந்தனாவுக்கும் மனோவுக்கும் நாட்கள் நட்பென்ற பிணைப்பில் மீண்டும் துளிர்க்க, அழகாய் நகர ஆரம்பித்தன.
சந்தனா காலையில் முன்பு போல சதா வீட்டிற்கு வருகை தரவில்லை. மாலை பள்ளி முடிந்ததும் இங்கே வந்துவிடுவதை வழக்கமாக்கியிருந்தாள்.