அன்பு 16.1

என்றென்றும் அன்புடன் சந்தனா கதையை முழு ஆடியோ நாவலாக கேட்டு மகிழுங்கள் மக்களே 💖🫶

லிங்க்👇,

கசங்கிய முகமும் தவித்த உதடுகளும் சிவந்த விழிகளுமாய் தன் முன்னே நின்றிருந்தவளைக் கண்ட குகாவுக்கு சர்வ நிச்சயமாய் இதயம் நடுங்கிப் போயிருந்தது.

“ஏய்… சந்து… என்னாச்சு டி?” எனக் கேட்டு அவளைத் தொட முயல, முகத்தைத் திருப்பி தொண்டை வரை வந்த துக்கத்தை கடினப்பட்டு விழுங்கி அழுகையை அடக்க முயன்றாள்.

வேண்டாமே, தான் உடைந்தால் குகேஷ் பதறிவிடுவான் என மனம் கூச்சலிட, என்னவென்று கேட்பவனிடம் என்ன உரைப்பாள்? இத்தனை நாட்கள் நான் நன்றாய் இருக்கிறேன் என உன்னை ஏமாற்றியதன் பலன் இந்த நொடி உடைந்து தூள் தூளாகிவிட்டேன் என்றா கூற முடியும்‌.

உதடு அழுகையில் விம்மியது. தன்னை நினைத்தே கோபம் ஒருபுறம் பொங்கியது. ஏன் நான் தன்னவர்கள் எனும்போது இத்தனை பலவீனமாய் போய்விடுகிறேன். என் சுயத்தேற்றல்கள் எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டன? என தன்னை தானே தேற்றிய இதயம் பரிதவித்து ஆர்ப்பாட்டம் இல்லாது விழிகளில் இன்னுமே ஈரத்தைப் படரச் செய்தது.

“என்னாச்சுன்னு கேட்குறேன் இல்ல? வாயைத் தொறந்து சொல்லுடி…” என அதட்டலிட்டவன் குரலில் லட்சுமி அம்மா எழுந்து வந்துவிட்டார்.

அவனை எதிர்பாராது திகைத்தவர், “தம்பி, வாங்க… நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளாச்சே இந்தப் பக்கம் வந்து?” என அவர் வாஞ்சையாய் உரைக்க, சந்தனாவிடமிருந்த பார்வையை விலக்கி அவரிடம் குவித்தவன்,

“நல்லா இருக்கேன் லட்சுமி மா. வெளிநாடு போய்ட்டேன் ரெண்டு வருஷமா. அதான் உங்களை பார்க்க வர முடியலை!” என்றான். அவர்கள் பேசும்போதே சந்தனா வேறொரு அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தாள்.‌

“சரிங்க தம்பி…” என்றவர், “சந்துவுக்கு என்னாச்சுன்னு தெரியலை. கொஞ்ச நாளாவே ஒரு மாதிரிதான் இருக்கா. நான் கேட்டாலும் சரியா பதில் சொல்ல மாட்றா. நீங்க என்னென்னுப் பாருங்கப்பா…” லட்சுமியின் குரல் ஆதங்கத்திலும் சந்தனாவின் மீதான அக்கறையிலும் வந்து விழுந்தது.

“சரிங்க மா… நான் அவளைப் பார்த்துக்கிறேன்!”

“நீங்க போய் அவளைப் பாருங்கபா. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்!” என அவர் நகர, பாவனா தந்தையை மருண்ட விழிகளுடன் நோக்கினாள்.

ஒரு நொடி மூச்சை இழுத்துவிட்டவன், “பப்பி ஒன்னும் இல்ல டா. நீ மனோவைப் பார்க்கப் போகலையா?” எனக் கேட்டு மனோகர் படுத்திருந்த அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். மனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“இந்தா, நீ அவனுக்கு வாங்கியிருக்க கிஃப்ட். சர்ப்ரைஸா அவனை எழுப்பி கொடுடா. நான் அம்மாகிட்டே பேசிட்டு வரேன். சரியா?” என அவன் கேட்க,

“ஓகே டாடி… நான் அவனை சர்ப்ரைஸ் பண்றேன்…” என சின்னவள் துள்ளிக் கொண்டே மனோ அருகே செல்ல, இவன் விறுவிறுவென சந்தனா இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினான்.

“சந்தனா… கதவைத் திற டி. இப்போ நீ திறக்கலைன்னா உடைச்சுட்டு உள்ள வந்துடுவேன். பரவாயில்லையா?” குகா பற்கள் கோபத்தில் நறநறப்பதை அவளால் உணர முடிந்தது.

சில நிமிடங்கள் பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “கதவை தொறக்கப் போறீயா? இல்லையா?” என அவன் கத்தலில் கதவு திறக்கப்பட்டது.

சற்று முன்னே உடைந்து சிதறியிருந்தவள் இப்போது நிச்சலனமாய் அவனைப் பார்த்தாள். சிவப்பேறி இருந்த விழிகளில் கண்ணீர் வற்றியிருந்தன. விம்மித் துடித்த இதழ்கள் இப்போது இறுகப் பூட்டியிருந்தன. முகத்தை அழுந்தக் கழுவியதன் விளைவால் நீர் துளி படர்ந்து இருந்தது.

அவனை உறுத்து விழித்தாள் பெண். சர்வ நிச்சயமாய் சில நிமிடங்கள் முன்னே, தான் பார்த்தப் பெண் இவள்தான் என அவனே அடையாளம் காண ஒரு நொடி தடுமாறிப் போய்விடுவான்.

அவனைக் குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தவள், “எதுக்கு வந்த குகா?” என்றாள். குரலில் கோபத்தைத் தேக்க முயன்றாலும், அழுகையின் தடம் அப்பட்டமாய் காண்பித்துக் கொடுத்தது. வார்த்தைகளில் வேதனை அப்பிக் கிடந்தது.

குகேஷூக்கு மூளை மொத்தமாய் சூடாகிப் போனது. “ஏன் டி… ஏன் இப்படி பண்ற? என்ன, ஏதுன்னு கேட்டாலும் இத்தனை வருஷத்துல ஒரு வார்த்தை சொல்லி இருக்கீயா? அப்படியென்னத்த டி மனசுக்குள்ள போட்டு தினம் தினம் நீயும் செத்து எங்களையும் கஷ்டப்படுத்துற?” எனக் கேட்டவன் குரல் கோபத்தில் துவங்கி ஆற்றாமையில் தோய்ந்து போக, சந்தனாவிடம் நொடி நேர இளக்கம்.

அதை இறுகப் பூட்டியவள், “பொண்டாட்டி, பெத்த புள்ளை, அம்மா, அப்பான்னு உனக்காக இருக்கவங்களைப் பார்க்காம எதுக்காக என்னைப் பார்க்க இங்க வந்த? முதல்ல கிளம்பு குகா. அம்மா பாவம், யசோ… யசோ, பிரகா… பாவம்டா அவன். சின்னப் பையன், அப்பா எப்போ வருவார்னு காத்துட்டு இருக்கான். முதல்ல அவங்களைப் போய் பாரு…” என்றாள் அவன் முகத்தைப் பார்க்காது.

அவன் பேச்சை அத்தனை லாவகமாய் தவிர்த்தவளைக் கண்டு குகேஷுக்கு இன்னுமே இதயம் பாரமானது. அந்தக் குரலிலிருந்த வாதை அவனை கொஞ்சம் கொஞ்சமாக உலுக்கியது.

அவளது தோளைப் பிடித்தவன், “ஏன் சந்தனா… ஏன் இப்படி பண்ற? எதுக்காக அழறடி… ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழ்ற? இதெல்லாம் செய்யணும்னு உனக்கென்னத் தலையெழுத்தா? ஒவ்வொரு தடவை அழும்போது நான் உனக்கு தோள் சாய வேணும். ஆனால், எதையும் சொல்ல மாட்ட. என் கண்ணு முன்னாடி அழுது என்னை சாகடிப்ப. நீ அழுறதைப் பார்த்து நானும் கஷ்டப்படணும். அதானே உன்னோட எண்ணம்?” வார்த்தைகளில் நஞ்சைத் தடவி கூரிய ஆயுதமாய் எறிந்தவனை உதடு துடிக்கப் பார்த்தாள் பெண்.

மெது மெதுவாக கீழிமைப் படர்ந்து நீர் மேழிமைத் தொட, “குகா… இல்ல டா!” என்றாள். குரல் நலிந்து வந்தது. எதிரிலிருந்தவளி‌டம் விசும்பல் வர, இவனுக்கு உருகிப் போனது.

“ப்ம்ச்… ஏன் டி?” எனக் கேட்டு இழுத்து தோளணைத்தவனிடம் சந்தனாவின் மௌனமான கண்ணீர் பல கதைகள் பேசின. தேம்பியபடியே ஆதாரத்திற்குப் பற்றுக் கோலாகக் கிடைத்தவனை இறுக்கிப் பிடித்தவளின் நெஞ்சம் கனத்தை அவனிடம் இறக்கி வைக்கும் முயற்சியில் இறங்க, குகேஷிற்கு அவளது அழுகைப் பொறுக்க முடியவில்லை. அவனது விழிகளும் கலங்கின.

“சந்து… என்னடி?” எனக் கேட்டவனின் பிடி இறுக, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “குகா… குகா, மனோவைப் பார்த்தேன் டா!” என்றாள் தெளிவில்லாத குரலில்.

ஆனால் அவனுக்குப் புரிந்திருந்தது. மனோ என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர பத்து வருடங்களாக அவனால் அவளிடம் எதையும் பெற முடியவில்லையே. அதட்டி, கெஞ்சி, உருட்டி, அடித்துக் கூடப் பார்த்தும் சந்தனா வாயை இறுகப் பூட்டிக் கொண்டாளொழிய ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. தான் தான் ஒரு நண்பனாய் தவறி விட்டோம் என பாரமேறிய நாட்கள் ஏராளம்.

அவளை தள்ளி நிறுத்தியவன், “இத்தனை நாள் உன் வார்த்தைக்காகத்தான் பொறுத்துட்டு இருந்தேன் டி. பட், இனிமே கண்டிப்பா மாட்டேன். மனோ, இந்த மனோவைக் கண்டு பிடிக்கிறது மட்டும்தான் என் வேலை. அவனைக் கண்டு பிடிச்சு நானே கேக்குறேன். உன்னோட இந்த நிலைமைக்கு அவன் மட்டும்தானே காரணம்? அவனைப் பிடிச்சு நாலு சாத்தணும்…” என்ற குகா வெறிப் பிடித்தவன் போல வெளியேற முயல, சந்தனாவின் வார்த்தைகளில் அவன் நடை நிதானப்படவில்லை. மொத்தமாய் ஸ்தம்பித்து வேரோடிப் போய் நின்றுவிட்டான். எத்தனை பெரிய வார்த்தைகளை இவள் இத்தனை எளிதாய் உதிர்க்கிறாளே என சினம் பொங்கியது அவனுக்கு.

error: Content is protected !!
Scroll to Top