அன்பு 1.2

“அவகிட்டே என்ன மேடம் பேச்சு. என்கிட்ட கேளுங்க, வர வர ஒரு வேலையும் ஒழுங்கா பார்க்க மாட்றா. கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதில்லை. புள்ளைங்களை பார்க்குறதில்லை. சமைச்சா உப்பு போட மாட்றா. மோட்டரை போட்டா ஆஃப் பண்றது இல்ல. பக்கத்து வீட்டுல தண்ணிப் போய்டுச்சுன்னு அவங்க சண்டைக்கு வர்றாங்க, தண்டத்துக்கு இருக்கா”

“வீட்ல இருக்க வேலையைக் கூடப் பார்க்குறது இல்ல. எது சொன்னாலும் மூஞ்சிய மூஞ்சியைப் பார்க்குறா. பைத்தியம் புடிச்சுப் போச்சுன்னு உங்ககிட்டே கூட்டீட்டு வந்தேன்!” என்றவர் வார்த்தைகளில் ஆதங்கம் அப்பிக் கிடந்தது. மனைவி மீதுதான் முழுத் தவறு என்று மனம் அத்தனையாய் நம்ப, முகத்தில் அதைக் காண்பித்தவாறு அமர்ந்திருந்தார் அந்த மனிதர்.

அவர் பேசப் பேச அருகிலிருந்த மனைவியின் விழிகள் கலங்க, விரக்திப் புன்னகையொன்று அவரது இதழ்களில் தவழ்ந்தது. அதைப் பார்த்த சந்தனா பொறுமையாய் அவர் பக்கம் திரும்பினாள்.

“உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது சார்?” இவள் வினவ, அசூயையாய் அவளைப் பார்த்தவர், “அதெதுக்கு டாக்டர் இப்போ? அவகிட்ட பேசி முதல்ல பைத்தியத்தை தெளிய வைங்க!” என்றார் காரமாய்.

“கண்டிப்பா சார், அதுக்கு முன்ன நான் கேட்குற டீடெயில்ஸ்க்கு மட்டும் பதில் சொல்லுங்க!” பொறுமையாய் கேட்டாள்.

“பதினைஞ்சு வருஷமாச்சு!” என விட்டேற்றியாகப் பதிலளித்தார் அந்த மனிதர்.

“ஓ… லவ் மேரேஜா?”

“இவளை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிட்டாலும். எல்லாம் என்னைப் பெத்தவங்க பண்ண வேலை!” காட்டமாய்க் கூறினார்.

“நீங்க என்ன வேலை பார்க்குறீங்க? உங்க வொய்ஃப் படிச்சிருக்காங்களா? வேலைக்குப் போறாங்களா?”

“நான் ஐடி மேடம். இவ ஏதோ பேருக்கு படிச்சிருக்கா. வீட்ல இருக்க வேலையையே பார்த்துக் கிழிச்சிட்டா. வெளிய வேலைக்கு அனுப்ப?”

“ஓ… அப்போ வீட்ல அவங்க பார்க்குறது எல்லாம் வேலைன்ற வார்த்தைக்கு கீழதான் வருதோ சார்?” இவள் பேச்சில் அவரது முகம் மாறியது.

“ஆமா… பெரிய வேலை, வீட்ல பொண்டாட்டி வேலை பார்க்குறது ஒன்னும் அதிசயம் இல்லையே!”

“ஹம்ம்… ரொம்ப சரியா சொன்னீங்க சார். காலைல எழுந்து காஃபி போட்டு, சமைச்சு முடிச்சு, புள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி, உங்களை ஆஃபிஸ்க்கு அனுப்பிட்டு, வீட்டைக் க்ளீன் பண்ணி, தென் ட்ரெஸ் வாஷ் பண்ணணும்.”

“ஈவ்னிங் நீங்க வந்ததும் சுடசுட காபி ஸ்நாக்ஸ் கொடுக்கணும். நைட்டு நீங்க சாப்ட சாப்பாடு செஞ்சு கொடுத்து, படுக்குற பெட் வரைக்கும் சரி பண்ணிக் கொடுக்கணும். ஒருநாள் இல்ல, வாரத்துல ஏழு நாள், மூனு வேளை விதவிதமா சமைக்கணும். மாசத்துல முப்பது நாள், வருஷத்துல முந்நூத்து அறுபத்தஞ்சு நாளும் செய்யணும். இதெல்லாம் என்ன பெரிய வேலை ஏன் சார், நீங்க கஷ்டப்பட்டு வாரத்துல ஐஞ்சு நாள் வேலை செய்றீங்க. அதுவும் லேப்டாப் முன்ன உட்கார்ந்து. அதனால உங்களுக்கு வீட்டு வேலை எல்லாம் பெரிய டாஸ்க்கா இருக்காதில்ல!” என அவள் பேசி முடிக்கவும் சில நொடிகள் அந்த மனிதரிடம் அமைதி.

“என்ன டாக்டர் நீங்க, என்னமோ என் மேல தான் தப்பு இருக்க மாதிரி பேசுறீங்க. நீங்க ட்ரீட்மெண்ட் பார்க்க வேண்டியது எனக்கில்லை. என் பொண்டாட்டிக்கு. அவளுக்குப் பார்க்க முடியுமா? முடியாதா?” என எகிறினார். அவரை அமைதியாகப் பார்த்தவள், அந்தப் பெண்ணின் புறம் திரும்பினாள்.

“என்ன படிச்சிருக்கீங்க? மேரேஜ்க்கு முன்னாடி வொர்க் பண்ணீங்களா? இப்போ ஏன் ஹவுஸ் வொய்ஃபா இருக்கீங்க?” என சந்தனா கேட்டதும் அவரிடம் சில நொடிகள் அமைதி.

“எம்.பி.ஏ படிச்சிருக்கேன் டாக்டர், ஹெச்.ஆர்-ஆ வொர்க் பண்ணேன். மேரேஜ்க்குப் பிறகு ஹஸ்பண்ட், குழந்தைகளைப் பார்த்துக்கணும்னு வீட்ல இருக்கேன்!”

“சோ, உங்க ஹஸ்பண்ட்காக தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போறீங்க? ரைட்?” என இவள் கேட்டதும், அந்தப் பெண்ணின் தலை ஆமாம் என்பது போல அசைந்தது.

“உங்க ஹஸ்பண்ட் அண்ட் குழந்தைகளை ரொம்ப பிடிக்குமோ?” இவள் கேட்டதும்,

“என் உலகமே அவங்க தான் டாக்டர்!” என்று விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தார் அப்பெண்மணி.

அந்த மனிதர் புறம் திரும்பிய சந்தனா, “பார்த்தீங்களா சார், அவங்க பேசுனதைக் கேட்டீங்களா? இங்க வந்ததுல இருந்து உங்களோட வொய்ஃபை குறை மட்டுமே சொல்லிட்டு இருந்தீங்க நீங்க. ஆனால், அவங்க ஒரு வார்த்தை உங்களைப் பத்தி பேசலை. நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைல இருந்தவங்க. இப்போ வீட்ல இருக்க காரணம், வெளிய போகத் தெரியாம இல்ல. உங்களையும் குழந்தைகளையும் எந்தவித குறையும் இல்லாம பார்த்துக்கணும்னுதான்.”

“எத்தனையோ பெண்கள் வேலைக்குப் போய்ட்டு வீட்டையும் கவனிச்சாலும், இன்னும் நம்ப குடும்பத்துக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணணுமோ, கேர் பண்ணணுமோன்னு குற்ற உணர்வுல இருக்காங்க. அப்படியெதுவும் ஆகிடக் கூடாதுன்னு உங்க மனைவி யோசிச்சு இருக்காங்க.”

“உங்களுக்காகன்னு பார்க்குற அவங்களுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? தண்டச் சோறுன்னு பட்டம் வேற. எங்க ஒரு ரெண்டு நாள் அவங்க செய்ற வேலையை நீங்க செஞ்சுப் பாருங்க பார்க்கலாம். நிச்சயமா முடியாது. என்னைக்காவது ஒருநாள் நம்ப பொண்டாட்டி வருஷம் முழுசும் வேலை செய்றாளே, நமக்கு வாரத்துல ரெண்டு நாள் லீவு இருக்கு. அவளுக்கு ரெஸ்ட் குடுப்போம்னு உங்களுக்குத் தோணியிருக்கா? ஒரே ஒருநாள் அன்பா, அனுசரணையா ஒரு கப் காஃபி போட்டுக் கொடுத்து இருக்கீங்களா?”
“ச்சு, அதெல்லாம் விடுங்க. அட்லீஸ்ட் அவங்களைத் திட்டாம இருந்து இருக்கீங்களா? உங்களோட பேச்சுதான் அவங்களை இப்படி டிப்ரஷன்குள்ளகொண்டு வந்து நிறுத்தியிருக்கு. பிரச்சனை அவங்களுக்கு இல்ல, உங்ககிட்டே தான் இருக்கு. நீங்கதான் மாறணும்!” என சந்தனா கூறி முடித்ததும்,

“வந்ததுல இருந்து நானும் பார்க்குறேன். உங்க இஷ்டத்துக்கே பேசீட்டு இருக்கீங்க. இதுல எனக்குத்தான் பிரச்சனையாம்? இதெல்லாம் ஹாஸ்பிடல்னு உங்களை நம்பி வந்தேன்ல, என்னை சொல்லணும்!” என சந்தனா கூறிய உண்மை தன்னை சுட்டாலும், அதை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர், பட்டென இருக்கையில் இருந்து எழுந்தார்.

திரும்பி மனைவியை முறைத்தவர், “எல்லாம் இவளை சொல்லணும். இவ சரியா இருந்தா, யாரும் என்னை எதுக்கு கேள்வி கேட்கப் போறாங்க!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர், “வந்து தொலைடி…” என விறுவிறுவென அறையைவிட்டு வெளியேறினார்.

அந்தப் பெண் சந்தனாவை வேதனையுடன் பார்த்துவிட்டு இருக்கையிலிருந்து எழ, “இது என்னோட விசிடிங் கார்ட். என் பெர்சனல் நம்பர் இருக்கு. ஃப்ரீயா இருக்கும்போது என்னைக் காண்டாக்ட் பண்ணுங்க…” என அவர் கையில் ஒரு அட்டையைத் திணித்தாள்.

“தேங்க் யூ டாக்டர்!” என அவர் அகலவும், சந்தனா பெரிய மூச்சொன்றை இழுத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள். இது போல எத்தனையோ நபர்களை கடந்திருந்தாலும், மனம் கொஞ்சம் பாரமாய் இருந்தது. அரைமணி நேரம் கூட அவருடன் தன்னால் பொறுமையாகப் பேச முடியவில்லை.

ஆனால், இந்தப் பெண்மணி எப்படி இத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என அவருக்காக மனதில் இரக்கம் சுரந்தது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட அவளால் எளிதில் மீட்டெடுக்க முடிந்தது‌. இந்த சமூகத்தின் ஆணாதிக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களை அத்தனை எளிதில் குணப்படுத்த முடியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top