இதயம் 22.2

அடுத்த கணமே, இதெல்லாம் ஒன்றுமே இல்லை. வெறும் ஈர்ப்பு தான். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். நீ திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அவளிடம் எதுவுமே இல்லை என்று மற்றொரு மனம் உரக்கக் கூறிட, அவனும் அதனை நம்பினான்.

அதன் பிறகு அவள் குளித்து வந்ததும், அவளது முகம் பாராது கதவை திறந்தவனது நாசியில் மீண்டும் ஏறியது அவளது மஞ்சள் கலந்த வாசனை.

அதனை ஒதுக்கிவிட்டு உள்ளே வந்தவன், அவள் சமையலறை சென்றதும் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

எப்போதும் கூடத்தில் தான் இருப்பான். ஆனால் இன்று, அவளது இருப்பு தன்னை பாதிக்கக் கூடாது என்று எண்ணி, மலர் என்ற ஒருத்தி தன் வீட்டிற்குள் நடமாடுவதை உணர மறுத்து, தன்னுடைய அறைக்குள் முடங்கிவிட்டான்.

மீண்டும் அவள் உண்ண அழைத்த போதும், அவளது விழிகளை சந்திக்க மறுத்தவன், அமைதியாக வந்து அமர்ந்து உண்டான்.

அப்போதுதான் ராதாவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர, ரிஷிக்கு நிதர்சனம் உரைத்தது.

அந்த கணம், இது வெறும் ஈர்ப்புதான். அது அப்படியே முடிந்துவிடும். அதனை மீறி தொடர்ந்தால், நல்ல முறையில் முடிவடைய எந்தவித வாய்ப்பும் இல்லை என்று மனதிற்கு புரிந்தது.

அடுத்த நொடியே தனது சலனத்தை துடைத்தெறியும் முனைப்பை வளர்த்துக் கொண்டான்.

மலர் அங்கிருந்து செல்வதற்குள் அவளது முகத்தை பார்த்து பேசி விட வேண்டும். இந்த சலனத்தை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

அதன்படியே அவள் கிளம்பும் சமயம், “இன்னைக்கு நீ ஆபீஸ்க்கு லீவ் எடுத்துக்கோ, மலர்,” என்று அவளது முகம் பார்த்து கூற, மலரின் முகம் சடுதியில் பூவாய் மலர்ந்தது.

“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். நானே கேட்கலாம்னு இருந்தேன்,” என்று அழகாய் புன்னகைத்தாள்.

அவளது மலர்ந்த முகமும், புன்னகைத்த இதழ்களும் அவனது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பருகியது.

அவனை கொன்று தின்னும் வல்லமை படைத்த விழிகளும், ஒருமுறை நன்றியை யாசித்து விட்டு நகர, இவன் உயிரில் ஒரு நடுக்கத்தை உணர்ந்தான்.

அதன் பிறகு அவளது முகத்தை பார்த்து பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தான். பல நாட்களுக்குப் பிறகு மலரே அவனைத் தேடி அவனது அறைக்கு வந்தாள்.

தன்னைத் தேடி வந்தவளை ரிஷி புருவம் சுருக்கி பார்க்க, வாகன காப்பீடு புதுப்பிப்பதில் வந்த பிரச்சனையை சரி செய்ய இயலாதவள், ரிஷியிடம் உதவி வேண்டி வந்திருந்தாள்.

தனக்கு கீழே இருப்பவர்களிடம் தானே இவள் முதலில் செல்ல வேண்டும். அதனை விடுத்து தன்னிடமே நேரடியாக வந்துள்ளாளே என்று ஒரு கேள்வியும், மனதின் ஓரம் உன்னிடம் தானே வந்துள்ளாள் என்று ஒரு இதமும் பரவியது.

உடனே அந்த இதத்தை துடைத்தெறிந்தவன், “இந்த பிராப்ளத்தை நீ ஜி.எம். கிட்டயோ, சி.ஆர்.எம். கிட்டயோதான ரிப்போர்ட் பண்ணணும். என்கிட்ட ஏன் டைரக்டா வந்த?” என்று ரிஷி வினவ, “சார், அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நான் இதை போய் சொன்னா கண்டிப்பா என்னைத்தான் சார் திட்டுவாங்க. எனக்காக இதை கொஞ்சம் சரி பண்ணி குடுங்க. ப்ளீஸ், சார்,” என்று விழிகள் சுருக்கி அவனிடம் கெஞ்சினாள்.

ரிஷியின் பார்வை அவளது சுருங்கிய விழிகளில் பதிந்திட, மீண்டும் உயிருக்குள் ஒரு சதிராட்டம். இத்தனை நாள் தவிர்த்து வந்த அந்த விழிகளுக்குள் இன்று மாட்டிக் கொண்டான்.

அந்த கணமும் அவனுக்கு உள்ளுக்குள் கேள்வி இருந்தது. ஒரு பெண்ணின் விழிகள் தன்னை இவ்வளவு சலனப்படுத்துமா என்று.

வினாடியில் தன்னை சமாளித்தவன், அவளது பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் இறங்கினான்.

என்னவோ, அந்த விழியில் வதனத்தில் மகிழ்ச்சியை காண வேண்டும் என்று உள்ளுக்குள் ஒன்று அந்த கணம் உந்தி தள்ளியது.

பேச்சு அலைபேசியின் மறுமுனையில் இருந்தவரிடம் இருந்தாலும், விழிகள் என்னவோ அவளிடம் தான் நிலைத்திருந்தது.

ஐந்து நிமிடத்தில் ஆச்சரியம், வியப்பு, அதிர்ச்சி என்று மாறி மாறி வந்து போன அவளது பாவனைகளை அவனது விழிகள் படம்பிடித்துக் கொள்ள, பேசி முடித்தவன், “என்ன?” என்று அவளை புருவம் உயர்த்தி வினவினான்.

“இவ்வளவு நேரம் நான் இதைத்தான் சார் சொன்னேன். ஆனா அவர் ஒத்துக்கவே இல்ல. நீங்க பேசுனதும் எப்படி சார் உடனே ஓகே சொன்னாரு?” என்று ஆச்சரியம் விலகாது விழி விரித்து கேட்க, அந்த விரிந்த விழிகளுக்குள் ஒரு முறை விழுந்து எழுந்தான் ரிஷிகேஷவ்.

வழக்கம்போல தன்னை சமாளித்து மீண்டவன், மலரிடம் விரைப்புடன் பேசி அவளை அங்கிருந்து அகற்றினான்.

அவளது பார்வையில் இருந்து, தன்னை கொன்று தின்னும் அந்த இதழ்களில் இருந்தும் விடுதலை பெற இரண்டு நாட்கள் வீட்டிற்கு சென்றுவிட்டான்.

ஆனால், அங்கு சென்றும் சதா அவளது நினைவு தான் ரிஷியை ஆட்டிப்படைத்தது.

அந்த இடைப்பட்ட நாட்களில் ஆயிரம் முறையாவது ரிஷி எண்ணி இருப்பான். அந்த உறங்காத விழிகளும், உலர்ந்த இதழ்களும், ஒப்பனையற்ற வதனமும் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்குமா என்று.

எத்தனை நாளானாலும் அந்த சிலிர்ப்பு, சலனம் துளியும் குறையவில்லையே என்று அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

இரண்டு நாட்கள் இரு யுகமாய் கழிய, பள்ளி விடுமுறையை கண்டதும் துள்ளி குதிக்கும் குழந்தையாய் மனம் அவளைக் காண அவா கொண்டது.

வீட்டிற்கு வந்து மலரிடம் ஷாலினி கொடுத்து விட்ட உடைகளை கொடுக்க, விழிகளை ஆழியாய் விரித்த மலர், “நிஜமாவே இந்த டிரஸ் எல்லாம் எனக்குத்தானா சார்?” என்று வினவிட, அந்த விழிகளில் தெரிந்த மகிழ்ச்சிக்காக ஒரு துணிக்கடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றே ரிஷிக்கு தோன்ற, அமைதியாய் அவளிடம் தலையசைத்தான்.

“எல்லாமே புதுசு மாதிரி இருக்கே சார்,” என்றவள் ஐயத்துடன் கேட்க, “எல்லாமே யூஸ் பண்ண டிரஸ்தான்,” என்று ரிஷி பதில் மொழிந்தான்.

“சரி,” என்பதாய் தலையசைத்தவள், “நான் பை ஏதும் கொண்டு வரல சார். சாயந்தரம் வரும்போது கொண்டு வந்து எடுத்துக்கிறேன்,” என்று பதில் இயம்ப, “இந்த ட்ராலியும் உனக்குத்தான். எடுத்துட்டு போ,” என்று ரிஷி கூறினான்.

“உண்மையாவா?” என்று விழிகளை இன்னும் பெரிதாக விரித்து ஆச்சரியமாய் கேட்க, உள்ளுக்குள் பூத்த பூகம்பத்துடன் ரிஷி அமைதியாய் தலையாட்டினான்.

“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். எனக்கு இந்த மாதிரி ட்ராலி வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை,” என்றவளது குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

ஆசையாய் அந்த ட்ராலியைத் தொட்டுப் பார்த்தவள், “நான் போயிட்டு வரேன் சார்,” என்றபடி ட்ராலியைத் தள்ளிக்கொண்டு நடக்க, தான் அந்த ட்ராலியாய் பிறந்திருக்கக் கூடாதா என்று மனம் அபத்தமாய் ஏக்கம் கொண்டது.

பிறகு தீபாவளி போனஸ் கொடுத்த போது, அதனை நம்பாது வியப்பில் ஆர்ப்பரித்தவளை கண்டு, இதயம் எகிறி குதித்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், எல்லாம் மறுநாள் ராதா வரும் வரை தான். அவரைக் கண்டதும், அதுவும் அவர் மலரை நடத்தும் விதம் கண்டதும், ரிஷிக்கு நடக்காத ஒன்றுக்கு ஆசைப்படுகிறோம் என்று தெளிவாக புரிந்து போனது.

இருக்கட்டும். இதை வெறும் ஈர்ப்பாகவோ அல்லது அதனை தாண்டி நேசமாகவோ இருந்து விட்டுப் போகட்டும். என்னவாக இருந்தால் என்ன? அதனை அப்படியே மறந்துவிடலாம். உள்ளுக்குள் புதைத்து விடலாம். எல்லா நேசமும் கை கூடுவதில்லையே என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

அதுவும் ராதா தனக்கு பெண் பார்த்திருப்பதாக கூற, ரிஷிக்கு நிச்சயமாய் அந்த கணம் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று புரியவில்லை.

மனதிற்குள் ஒருத்தியை வைத்துக்கொண்டு, வேறொரு பெண்ணை எப்படி பார்க்க முடியும் என்றுதான் உள்ளுக்குள் கேள்வி எழுந்தது.

அதனால் ராதாவிடம் தீர்க்கமாக மறுத்து விட்டான். ஆனால், மலர் மாலை வேளையில் வந்து தாயிடம் பேசுவதை கேட்டவன், அவளுக்கு தன் மீது துளியும் விருப்பமில்லை. தன்னை எந்த காலத்திலும் அவள் இந்த கோணத்தில் பார்க்க மாட்டாள் என்று புத்திக்கு உரைத்தது.

அதுவும் தன் தாயுடன் சேர்ந்து தனக்கு பார்த்திருக்கும் பெண்ணை பற்றி அவள் புகழ்ந்து பேசுவதை கண்டவன், அவள் எந்த காலத்திலும் அவளது எல்லையை தாண்டி வந்து தன்னை பார்க்க மாட்டாள் என்று மனதுக்குப் புரிந்தது.

நடக்காத ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டிருப்பதை விடுத்து, தாய் தேர்ந்தெடுத்த பெண்ணை சென்று ஒரு முறை பார்த்து வரலாம். ஒருவேளை அந்தப் பெண்ணை தனக்கு பிடித்துவிட்டால், இந்த தவிப்பிற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று எண்ணி, தாயிடம் சம்மதம் கூறினான்.

ஆனால், ரோஹிணியின் வீட்டிற்கு சென்று அவளை பார்த்த கணம், அவனுக்கு கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல தான் இருந்தது. எந்த உணர்வும் தோன்றவில்லை. ரோகினி நிச்சயமாக பேரழகி தான். கண்ணிருக்கும் எவனும் அவளை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று கூற மாட்டான். ஆனால், தன்னை ஒரு சதவீதம் கூட அவளது அழகு ஈர்க்கவில்லை.

அந்த கணம் ரிஷிக்கு புரிந்தது. உலக அழகியே வந்தாலும், தன்னால் மலர் என்ற ஒருத்தியை தாண்டி வர முடியாது என்று.

அவளை தவிர்த்து வேறொரு பெண்ணை எந்த காலத்திலும் தன்னால் பார்க்க முடியாது என்று பொட்டில் அறைந்தது போல புத்திக்கு உரைத்தது.

உரைத்த கணம், ரிஷியும் வெகுவாய் அதிர்ந்து தான் போனான். தன்னுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள தன் முகத்தை ஆவலாய் நோக்கும் தனது குடும்பத்தினரையும், ரோஹிணியின் குடும்பத்தினரையும் எதிர்கொள்ள திறன் இல்லாதவன், யோசித்து விட்டு கூறுவதாக மொழிந்து அங்கிருந்து வெளியேறினான்.

அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வந்தவனுக்கு பெரிதாய் ஒரு ஆசுவாசம் பிறந்தது.

என்னவோ, இந்த பிறவியில் மலர் ஒருத்தியை தவிர வேறு எந்த பெண்ணையும் தன்னால் ஏறெடுத்து பார்க்க முடியாது. அது இயலாத காரியம். அவள் ஒருத்தியே இந்த ஒரு ஜென்மத்தை கடப்பதற்கு போதுமானவள் என்று புரிந்திட, அத்தனை நாள் தவிப்பிற்கும் விடை கிடைத்தது.

இது காதலா?
முதல் காதலா?
ஒரு பெண்ணிடம் உருவானதா?
இது நிலைக்குமா?
நீடிக்குமா, நெஞ்சே…

error: Content is protected !!
Scroll to Top