அன்பு – 3
சடசடவென மழை விடாது பெய்து கொண்டிருக்க, எங்குப் பார்த்தாலும் மையிருட்டாயிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த ஷோபனாவின் விழிகள் மெதுவாய் நனையத் தொடங்கின.
கையிலிருந்த துணியைப் பிழிந்து மீண்டும் மகன் நெற்றியில் வைத்தாள். அவன் உடல் சூடு குறையவே இல்லை. டாடி, டாடி என அனத்திக் கொண்டிருந்தன அவனது இதழ்கள்.
“அப்பா வந்துடுவாரு டா அஷூ… கொஞ்ச நேரம் டா!” என மகன் முடியைக் கோதியவள், அழைப்பு மணி ஒலிக்கவும் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
“சாரி ஷோபி… ஹெவி ரெய்ன். காரை ட்ரைவ் பண்ண முடியலை!” தொப்பலாய் நனைந்து வந்த ரஞ்சனை முறைக்க முடியாது உள்ளே நுழைய வழிவிட்டவள், “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணீட்டு வாங்க…” என அவன் பின்னே சென்று தலையைத் துவட்டிவிட்டாள்.
“அஷு எங்க டி?” எனக் கேட்டவனை அமைதியாகப் பார்த்து, “உங்க போன் எங்க?” எனக் கேட்டாள் குரலில் காரம் தெறித்தது.
“ஷ்… சாரி, சாரி. அது மீட்டிங்க்ல இருந்ததால சைலண்ட்ல போட்டேன்!” எனப் பதிலியம்பியவாறே அலைபேசியை ஒலிக்கவிட்டான். ஷோபனாவிடமிருந்து பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள்.
“எதுக்கு இத்தனை தடவை கூப்பிட்டிருக்க ஷோபி?” எனக் கேட்டவனுக்கு பதில் சொல்லாது இவள் அறைக்குள் நுழைய, “ஷோபி…” என்றவாறே அவனும் நுழைந்தான்.
“அஷு… அஷுக்கு என்னாச்சு?” பதறிப் போனவன் மகனருகே விரைந்தான்.
“ஆப்டர்நூன்ல இருந்து ஹெவி பீவர். உங்ககிட்டே சொல்லலாம்னு கால் பண்ணேன். ஆனால், நீங்க கால் அட்டெண்ட் பண்ணலை.”
“புது இடம், ஹாஸ்பிடல் எங்க இருக்குன்னு தெரியலை. யார்கிட்டே கேட்குறதுன்னு கூடத் தெரியலை. இதுல மழை வேற?” கோபமாய்க் கூற முயன்றவளின் குரல் வருத்தத்தில் தோய்ந்திருக்க, விழிகள் பளபளத்தன.
தானும் அழைப்பை ஏற்காது தனியாய் மகனை வைத்துக்கொண்டு பயந்து விட்டாளென உணர்ந்து, “சாரி டி… சாரி. நிஜமா வேணும்னு செய்யலை!” என்றவன் எழுந்து சென்று ஜன்னலை இழுத்து மூடினான். மழையின் குளிர் வீட்டிற்குள்ளேயும் ஊசியாய் ஊடுருவியது.
“சரி நீ அவனைத் தூக்கிக்கோ. நான் காரெடுக்குறேன். டாக்டர்கிட்டே போகலாம்!” என்றவன் மகிழுந்து சாவியைக் கையிலெடுத்தான்.
“பார்க்கிங் வர வேணாம் நீ. கீழே நில்லு, நான் காரெடுத்துட்டு வரேன்!” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறி மகிழுந்தை உயிர்ப்பித்தான்.
“சார்… சார், மழை ரொம்ப வருதே. இந்த நேரத்துல எங்கப் போறீங்க?” வாயிற்காவலாளி வினவ,
“ஹாஸ்பிடல் போறோம் வாட்ச்மேன். பையனுக்கு ஃபீவர். இங்க பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடல் இருக்கா?” என அவன் வினவ,
“இருவது நிமிஷத்துல ஒரு ஆஸ்பத்திரி இருக்கு சார். இங்கேயே நம்ப டி ப்ளாக்ல ஒரு டாக்டரம்மா இருக்காங்க சார். இந்த அபார்ட்மெண்ட்ல எல்லாரும் அவுங்க கிட்டதான் பார்ப்போம். இந்த மழைல நீங்க அவ்ளோ தூரம் போறதுக்கு அவங்களைப் போய் பாருங்க. நல்லா வைத்தியம் பார்ப்பாங்க!” என்று அவர் கூறவும், ரஞ்சன் ஒரு நொடி சாலையைப் பார்த்தான்.
பெருமழை பெய்து கொண்டிருக்க, அவர் கூறுவதற்கு செவிசாய்த்தவன், “தேங்க்ஸ் வாட்ச் மேன். டோர் நம்பர் என்ன?” எனக் கேட்டு, மகிழுந்தை அதன் தருப்பிடத்திலயே நிறுத்திவிட்டு அவன் மின்தூக்கியை நோக்கி நகர, ஷோபனா வந்துவிட்டாள்.
“என்னாச்சுங்க?” என்றவளின் தோளில் அஷ்வின் படுத்திருந்தான்.
“டி பிளாக்ல ஒரு டாக்டர் இருக்காங்களாம். வாட்ச்மேன் சொன்னாரு. வா, அவங்களைப் பார்க்கலாம்!” என இவன் சந்தனாவின் வீட்டை நோக்கி மின்தூக்கியில் நகர்ந்தான்.
“ம்மா… முட்டை சப்பாத்தி வேணும்!” பின்னோடு இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டே தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான் மனோகர்.
“முட்டை சப்பாத்தி தானே? நான் செஞ்சுத்தரேன், வா டா!” லட்சுமியம்மா அழைத்தார்.
“போங்க பாட்டி… எனக்கு அம்மா செஞ்சு தர்றதுதான் வேணும்!” என சந்தனாவின் பின்னோடு நடந்து கொண்டிருந்தவனைப் பார்த்து இவளுக்கு இதழ்கள் மலர்ந்தன.
“மனோ, நீ போய் சமத்தா ஹோம்வொர்க் செய்வியாம். அம்மா முட்டை சப்பாத்தி செஞ்சுத் தருவேனாம்!” என இவள் கூற, “ம்மா… இட்ஸ் டூ போரிங்!” என அவன் சிணுங்கினான்.
“நோ… ஹோம் வொர்க் செய்யலைன்னா, நோ முட்டை சப்பாத்தி!” என்றாள் கண்டிப்பான குரலில்.
“ம்மா… மனோ ஆல்ரெடி ஹோம்வொர்க் கம்ப்ளீட் பண்ணிட்டான்!” சின்னவன் பொய்யுரைக்கவும்,
“பொய் சொல்றான் சந்து மா. பள்ளிக்கூடம் போய்ட்டு வந்ததுல இருந்து இந்தப் பையன் பேக்கை தொறக்கவே இல்லை!” என்ற லட்சுமி அவனது பள்ளிப் பையைத் திறந்து உணவு டப்பாவை வெளியே எடுத்தார். உள்ளே உணவு மிச்சமிருப்பது போலத் தோன்ற, திறந்து பார்த்தார். பாதி உணவு சாப்பிடாமல் அப்படியே இருந்தது.
அதைப் பார்த்த சந்தனா, “மனோ…” என அவனை அதட்டவும், “ம்மா… மனோக்கு ஃபுட் புடிக்கலை மா. அது யம்மியாவே இல்ல!” என சின்னவன் புகாரளித்தான்.
“யம்மியா இல்லனாலும், அது ஹெல்த்தி ஃபுட். எத்தனை தடவை சொல்லி இருக்கேன் சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாதுன்னு!” கொஞ்சம் அதட்டலாய் உரைத்ததும், தாயை முறைத்தவன் அறைக்குள்ளே ஓட, சந்தனா ஒரு நொடி கண்ணை மூடித் திறந்தாள்.
“சரி விடு சந்துமா… டெய்லியா எடுத்துட்டு வர்றான். இன்னைக்கு ஒருநாள் தானே. புள்ளை கோச்சுகிட்டான். நான் போய் சமாதானம் செய்றேன். நீ அவன் கேட்ட முட்டை சப்பாத்தியை செஞ்சு எடுத்துட்டு வா!” என லட்சுமி அவன் பின்னே செல்ல, “நீங்கதான் அவனைக் கெடுக்குறது!” என முணுமுணுப்புடன் சமையலறைக்குள் நுழைந்தாள் சந்தனா.
மூவருக்கும் சேர்த்து மாவை அவள் பிணைந்து கொண்டிருக்க, அழைப்பு மணி ஒலித்தது.
“லட்சுமிம்மா…” இவள் அழைக்க, அவருக்கு கேட்கவில்லை. அழைப்பு மணி ஒலித்துக்கொண்டே இருக்க, அப்படியே செய்யும் வேலையைப் பாதியில்விட்டவள், சென்று கதவைத் திறக்க, நொடியில் மின்சாரம் தடைபட்டிருந்தது.
“ப்ம்ச்…” என உச்சுக் கொட்டியவள் நிமிர்ந்து பார்க்க, முன்னே ஒரு ஆடவன் நின்றிருந்தான். மையிருட்டாய் இருந்ததில் இருவருக்கும் மற்றவரின் முகம் தெரியவில்லை.
“யார் நீங்க?” என இவள் வினவ,
“இங்க டாக்டர் சந்தனா இருக்காங்களா?” என ரஞ்சன் வினவினான்.
“யெஸ் நான்தான். என்னாச்சு, உள்ள வாங்க!” என்றவள், “ஒரு நிமிஷம், கேண்டில் எடுத்துட்டு வரேன்!” என இவள் அறைக்குள் நுழைய, லட்சுமி இடுப்பில் அமர்ந்திருந்தான் சின்னவன். இருட்டென்றால் அவனுக்கு கொஞ்சம் பயம்.
லட்சுமி இரண்டு மெழுகு திரியை ஏற்ற, “லட்சுமி மா, யாரோ வந்திருக்காங்க ட்ரீட்மெண்ட்காக. நீங்க இவனைப் பார்த்துக்கோங்க!” என்றவள் மெழுகுதிரியை எடுத்து வந்து ரஞ்சனையும் ஷோபனாவையும் அழைத்து அமர வைத்தாள்.
“நாங்க இங்க ஈ பிளாக்ல இருக்கோம் டாக்டர். என் பையனுக்கு ஃபீவர். மழை அதிகமா இருக்கதால, வெளியப் போக முடியலை. உங்களைப் பார்க்கலாம்னு வந்தோம்!” ரஞ்சன் சொல்ல,
“பரவாயில்லை சார்… பையனை உள்ள கூட்டீட்டு வாங்க!” என அவள் எழுந்து அறைக்குள்ளே நுழைய ஷோபனா அவள் பின்னே செல்ல, ரஞ்சன் கூடத்திலே நின்றுவிட்டான்.
“பையனை படுக்க வைங்க!” என்றவள் தனது மருத்துவ உபகரணப் பெட்டியை எடுத்து அவனது உடல் சூட்டை ஆராய்ந்தாள்.
“எத்தனை நாளா ஃபீவர் இருக்கு?”
“ஆப்ரடர்நூன்ல இருந்துதான் டாக்டர்!”
“வேற எதுவும் கம்ப்ளைண்ட்ஸ் இருக்கா?”
“நோ டாக்டர்!” என ஷோபனா பதிலுரைத்ததும், ஊசியில் மருந்தை ஏற்றினாள். அஷ்வின் உறக்கத்திலிருப்பதை உறுதி செய்துவிட்டு மருந்தை அவன் உடலில் ஏற்றினாள். வலியில் அவன் முனங்கினான்.
“ஒன்னும் இல்ல டா கண்ணா!” என அவனைத் தட்டிக் கொடுத்தாள் ஷோபனா.
“இது பாராசிட்டமால் சிரப். ஆறுமணி நேரத்துக்கு ஒரு தடவை 5ml கொடுங்க. ரொம்ப ஹை டெம்ப்ரேச்சரா இருக்கு, குறையலைனா 4 மணி நேரத்துக்கு ஒரு தடவையும் கொடுக்கலாம். ஒன் ஆர் டூ டேய்ஸ்ல சரியாகிடும். அப்படி ஃபீவர் கன்டினியூ ஆச்சுன்னா, ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம், கிளினிக் வந்துடுங்க!” என்றாள்.
“தேங்க் யூ சோ மச் டாக்டர்!” என்ற ஷோபனாவின் குரலில் இத்தனை நேர பதற்றம் மெதுவாய் வடியத் தொடங்கியது. வாயிற்காவலாளி மின்ஆக்கியை முடுக்கவும் மின்சாரம் இணைக்கப்பட்டு அறை வெளிச்சமாகியது. சந்தனா அப்போதுதான் ஷோபனாவின் முகத்தைப் பார்த்தாள். கொஞ்சம் கவலை அப்பிக் கிடந்தது.
“உங்கப் பையனுக்கு பெருசா ஒன்னும் இல்ல. டோன்ட் வொர்ரீ, இது ப்ளூ சீசன். அதான் ஃபீவர் வந்திருக்கு. நாளைக்கு க்யூர் ஆகிடும்” என ஷோபனாவின் தோளில் ஆதரவாகத் தட்டிப் புன்னகைத்தாள். அந்த நகை இவளையும் தொற்றிக்கொண்டது.
“புது இடம், சோ கொஞ்சம் பயந்துட்டேன் டாக்டர், மத்தபடி எதுவுமில்லை!” என்றவள் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டாள்.
“இட்ஸ் ஓகே, வேற எதாவதுன்னா, கிளினிக் வாங்க!” என முகவரியை வழங்கினாள்.
மீண்டுமொரு நன்றியை நவில்ந்துவிட்டு ஷோபனா வெளியேற, ரஞ்சன் எழுந்து நின்றான்.
இவள் தலையை அசைக்க, “ஃபீஸ் எவ்வளோ டாக்டர்!” என அவன் கேட்க, மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு நிமிர்ந்தவள், “ஃபீஸ் எதுவும் வேணாம் சார்!” என்றாள் மென்னகையுடன்.
“அப்போ எப்போ வந்தாலும் ஃப்ரீ ட்ரீட்மெண்ட் தான் போல!” அவன் இலகுவாய்க் கேட்க,
“ஆல்வேய்ஸ் வெல்கம் சார்” என இவள் பளிச்சென புன்னகைத்தாள். ஆனால் அது விழிகளை எட்டவே இல்லை போல. தலையை அசைத்தவன் அஷ்வினை மனைவியிடமிருந்து வாங்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.
“மா… முட்டை சப்பாத்தி!” மனோகர் உதட்டைப் பிதுக்கியவாறே அறையிலிருந்து கத்த, “இதோ… டூ மினிட்ஸ் டா, அம்மா ரெடி பண்றேன்” என வேகவேகமாக உணவைத் தயாரித்து முடித்திருக்க, மூவரும் உண்டு உறங்கச் சென்றிருந்தனர்.
“சாரி ரஞ்சன், அஷூவுக்கு ஃபீவர்னதும் என்னால எதையும் குக் பண்ண முடியலை!” என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“ஷோபி, பரவாயில்லை. நீ அஷூவைப் பாரு, நான் குக் பண்றேன்” என அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு, எளிமையாக இட்லியும் சட்னியும் தயாரித்தான். உறக்கத்திலிருந்த அஷ்வின் இப்போது கொஞ்சமாய் தெளிந்திருக்க, ஷோபனா அவனுக்கு உணவை ஊட்டி முடித்திருந்தாள். ரஞ்சன் மனைவிக்கும் சேர்த்து உணவை எடுத்து வந்தமர்ந்தான்.
அஷ்வினைப் படுக்க வைத்துவிட்டு இவள் வெளியே வர, “ஷோபி வா…” என அவளைத் தன்னருகே அமர்த்தி உணவை ஊட்டிவிட்டான்.
“நானே தனியா சாப்பிட்டுக்குறேன். நீங்க சாப்டுங்க…” என அவள் கூறவும், “நோ… இன்னைக்கு என் ஷோபி ரொம்ப பயந்துட்டா. ஆல் பிகாஸ் ஆஃப் மீ. சாரி டி!” என்று மனதார மன்னிப்புக் கேட்டவனைப் புன்னகையுடன் பார்த்தாள் இவள்.
ரஞ்சன் எப்போதும் அப்படித்தான். அவனுடைய பொறுப்புகளிலிருந்து பெரிதாய் தவறியதில்லை. என்றேனும் தவறிழைத்தால் கூட தயங்காது மன்னிப்பைக் கேட்டுவிடுவான். அவளுக்கு மிக மிக பிடித்தவனிடம் உள்ள குணங்கள் அனைத்துமே அவளது விருப்பமானவைதான்.
“இட்ஸ் ஓகே ரஞ்சன்!” என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் இவள். புருவத்தை உயர்த்தியவனின் உதடுகளில் புன்னகை நீண்டு விரிந்தது. இருவரும் உண்டு முடித்து, ஒன்றாகவே சமையலறையை சுத்தம் செய்துவிட்டு அறைக்குள் நுழைந்தனர்.
ஷோபனா அலைபேசியை எடுத்து ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அலறியை வைக்க, “ஷோபி, நான் எழுந்து அவனுக்கு சிரப்பைக் கொடுக்குறேன்…” என்றான் கணவன்.
“இல்ல ரஞ்சன், நீங்க படுங்க. நாளைக்கு ஆஃபிஸ் போகணும் இல்ல. நான் பார்த்துக்குறேன்!” என அவள் படுக்கை விரிப்பை சரிசெய்தாள். அவர்களது அறையிலே பெரிதாய் ஒரு மெத்தையும் அஷ்வினுக்கென தனியாய் ஒரு கட்டில் மெத்தையும் போட்டிருந்தனர். சில சமயங்களில் தாய் தந்தையுடன் உறங்குபவன், பல நாட்கள் தனியாய் படுத்துக் கொள்வான்.
இன்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் தந்தையோடு ஒட்டிப் படுத்தான். அவனது கைகள் மகனை மெதுவாய் அணைத்துக் கொள்ள, ஷோபனா அவர்களுக்கு மறுபுறம் வந்து படுத்தாள்.