• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

36. விலோசன விந்தைகள்

Active member
Messages
131
Reaction score
89
Points
28
அதற்குப் பிறகான நாட்களில், அற்புதன் மற்றும் யக்ஷித்ராவிற்கு இடையேயான புரிதல் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

சின்னச் சின்ன விஷயங்களைக் கூடத் தங்களது இணைகளுக்காகச் செய்வதில் பரவசம் அடைந்தனர் இருவரும்.

தன்னுடைய பணி நேரம் இரவில் இருந்தாலும் கூடத் தனது மனைவியை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவளது அலுவலகத்தில் இறக்கி விடும் வேலையை அவ்வப்போது தவறாமல் செய்து கொண்டு தான் இருந்தான் அற்புதன்.

அதே போலவே, தான் அவனுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள் யக்ஷித்ரா.

அதன் பின்னர், ஒரு விடுமுறை நாளின் போது,”இப்போ உன்னோட காலேஜ் லைஃப் - யைப் பத்திச் சொல்றியா ம்மா?” என்று தன் மனைவியிடம் வினவினான் அற்புதன்.

“ம்ம்… சொல்றேன் ங்க” என்றவளோ, தன்னுடைய கல்லூரி வாழ்க்கையைப் பற்றித் தன் கணவனிடம் சொல்ல ஆரம்பித்தாள் யக்ஷித்ரா.

தங்களது விருப்பப் படிப்பைப் படிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் சுற்றிக் கொண்டு இருந்தனர் யக்ஷித்ரா மற்றும் நிவேதிதா.

அந்த நேரத்தில், யாதவியோ பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்ததால் அவளைத் தொல்லை செய்யாமல் தன்னுடைய கல்லூரிக்குத் தேவையானவற்றைத் தயார் செய்யத் தொடங்கி விட்டாள் அவளது தமக்கை.

“ஸ்கூல் படிக்கும் போது தான் தினமும் யூனிஃபார்ம் போட்டுட்டு இருந்த, இப்போதாவது நல்லாக் கலர், கலராகச் சுடிதார்ஸ் எடு அக்கா” என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் யாதவி.

“அப்படின்னு சொல்ற? சரி. அப்போ ரெண்டு பேரும் போய் எடுத்துட்டு வந்துரு வோமா?” என்றாள் யக்ஷித்ரா.

“நான் வரலை க்கா. எனக்குப் படிக்க நிறைய இருக்கு. நீ அம்மா கூடப் போயிட்டு வா” என்று சொல்லி விடவும், அவளுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்குப் பணம் வேண்டுமல்லவா?

அதைப் பற்றி யோசிக்காமல் அனைத்தையும் முடிவு செய்து விட்டத் தங்களது மடத்தனத்தை நொந்து கொண்டனர் யக்ஷித்ராவும், யாதவியும்.

“எனக்கு எதுவும் வேண்டாம் மா. நான் என்கிட்ட இருக்கிறதை வச்சு மேனேஜ் செய்துக்கிறேன்” என்று தன் அன்னையிடம் உரைத்து விட,

அவரோ,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் உனக்கு எல்லாமே வாங்கித் தர்றேன்” என்று கூறி அவளைத் தன்னுடன் கடைக்கு அழைத்துச் சென்று ஆடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்கித் தந்து விட்டார் மீனா.

அதற்குப் பணம் எப்படி கிடைத்தது? என்று அவரது மகள்கள் இருவரும் வினவ,

“உங்க அப்பா கொடுத்தப் பணத்தில் சேர்த்து வச்சேன். நாம தான் அதிகமாக எதுக்கும் செலவு செய்றது இல்லையே? அதான், நம்மால் இதையெல்லாம் வாங்க முடிஞ்சது” என்றார் அவர்களது தாய்.

“அதுக்காக இவ்வளவு செலவு பண்ணனுமா ம்மா?” என்ற யக்ஷித்ராவிடம்,

“ஆமாம். இதெல்லாம் தேவையான செலவுகள் தான்” என்கவும், அதை அவரது இரு மகள்களும் ஒப்புக் கொண்டார்கள்.

தனது மனைவியும், மூத்த மகளும் கடைக்குச் சென்று வந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த அவர்களது தந்தைக்கு என்னத் தோன்றியதோ,”மீனா!” என்று தன் மனைவியை உரக்க அழைக்கவும்,

உடனே தன்னருகே வந்த மனைவியிடம்,”இந்தா” என்று சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார் கிரிவாசன்.

அவரது செய்கையைப் புரியாமல் பார்த்த மீனாவிடம்,”காலேஜூக்குப் போக இன்னும் என்னென்ன தேவையோ அதை எல்லாத்தையும் வாங்கிக் கொடு” என்று அவரிடம் கூறவும்,

அதைக் கேட்ட, தாய்க்கும், மகள்களுக்கும் அத்துணை ஆச்சரியமாக இருந்தது.

அந்தப் பணத்தை வேண்டாம் என்று மறுப்பதற்கு வாயைத் திறந்த போது,”என்ன தான் இருந்தாலும் என்னோட கடமைன்னு ஒன்னு இருக்குல்ல? அதை இவங்களுக்குக் கல்யாணம் நடக்கிற வரைக்கும் நான் செய்து தானே ஆகனும்? அதான்” என்றதும், அதற்கு மேலும் மறுத்துப் பேசாமல் அவர் கொடுத்தப் பணத்தை வாங்கிக் கொண்டார் மீனா.

“இப்போ பணம் தந்துட்டு அப்பறம் அதையும் சொல்லிக் காட்டி நான் கொடுத்ததை எண்ணி எடுத்து வைங்கன்னுச் சொல்லிடப் போறார் ம்மா!” என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தாள் யக்ஷித்ரா.

“அதை அப்போ பார்த்துக்கலாம் டி” என்று அவளிடம் சொல்லி விட்டுத் தன் கணவர் தந்தப் பணத்தை அப்படியே பத்திரமாக வைத்து விட்டார் அவளது தாய்.

அதன் பின்னர், தனது பள்ளிச் சீருடை மாறி இப்போது சாதாரண சுடிதார் அணிந்து, இரட்டைப் பின்னலில் அடக்கும் தலைமுடியை ஒற்றையாகப் பின்னி இருந்த தன் தோற்றத்தைக் கண்டு தனக்கே வியப்பாக இருந்தது.

தன்னுடைய பள்ளிப் படிப்பு முடிந்து பதினெட்டு வயது பூர்த்தி அடைந்து விட்டோம் என்பதை இந்த மாற்றங்கள் தான் தனக்கு ஞாபகப்படுத்துகிறது என்று எண்ணிக் கொண்டே கல்லூரிக்குச் செல்லத் தயாரானாள் யக்ஷித்ரா.

“அக்கா! இப்போ நீ வேற யாரோ மாதிரி இருக்கிற!” என்று அவளது தங்கை கூறவும்,

“ஆஹான்! இந்த சேஞ்ச் நல்லா இருக்கா, இல்லையா யாது?” என்று அவளிடம் ஆர்வமாக வினவினாள் யக்ஷித்ரா.

“சூப்பராக இருக்கு!” என்றாள் யாதவி.

“தாங்க்ஸ் டி” என்றுரைத்து விட்டு உணவருந்தப் போனாள் அவளது தமக்கை.

இப்போது யாதவி பன்னிரெண்டாம் வகுப்புப்‌ படிப்பதால் காலை நேர சிறப்பு வகுப்பிற்காக விரைவாகவே எழுந்து கிளம்பிச் சென்றிடுவாள்.

இன்றும் அப்படித் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த உரையாடல் நிகழ்ந்தது.

“ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிடுங்க” என்று அவர்களுக்கு உணவைப் பரிமாறி உண்ண வைத்தார் மீனா.

அப்போது, தனது மூத்த மகள் பள்ளிச்சீருடையில் இல்லாமல் வேறொரு உடை அணிந்திருப்பதைக் கண்ட பிறகு தான் அவள் வளர்ந்து விட்டாள் என்பதை புரிந்து கொண்டார் கிரிவாசன்.

அப்படியென்றால், இன்னும் சில வருடங்களில் அவளுக்கு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்பதையும் உணர்ந்தவருக்கு, இந்தப் பிள்ளைகள் ஏன் இவ்வளவு வேகமாக வளர்கிறார்கள்? அவர்களை விட்டுப் பிரிவது எத்தனை பெரிய வலி? என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டே மகளின் தலையை வருடிக் கொடுக்க எண்ணியவர் அதைச் செய்யாமலேயே அங்கேயிருந்து அகன்று விட்டார் கிரிவாசன்.

அதற்குள் அவரது வருகையையும், அவர் எதையோ சிந்தித்துக் கொண்டே சென்றதையும் பார்த்து விட்ட யாதவியோ,”உன்னைப் பார்த்துட்டு எதுவுமே சொல்லாமல் போறாரே! நீ முதல் முதல்ல காலேஜூக்குப் போகப் போற, ஒரு விஷ் பண்ணி அனுப்பனும்னுத் தெரிய வேண்டாம்? எல்லாத்தையும் பார்த்துட்டுப் பார்க்காத மாதிரி இருக்கார்” என்று தன் அக்காவிடம் சொல்லிப் பொருமினாள்.

“இதெல்லாம் எப்பவும் நடக்கிறது தானே? ஃப்ரீயா விடு யாது” என்று தங்கைக்கு உபதேசம் செய்தவள், தன்னுடைய உணவை உண்டு முடித்தாள் யக்ஷித்ரா.

“சரிக்கா. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் எப்படி போச்சுன்னு சாயந்தரம் வந்து நீ கண்டிப்பாக எங்கிட்டே சொல்லனும்” என்று அவளுக்குக் கட்டளை விடுத்து விட்டுத், தனது உணவைக் காலி செய்தவளோ,”ம்மா, நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேன்” என்று தாயிடம் விடைபெற்றுக் கொண்டாள் யாதவி.

அவளை அனுப்பி வைத்து விட்ட மீனாவோ,”உனக்கு எத்தனை மணிக்குப் பஸ் வரும் யக்ஷி?” என்று தன் மூத்த மகளிடம் வினவினார்.

“ஒன்பது மணிக்கு நான் பஸ் ஸ்டாப்புக்குப் போகனும் மா” என்றவுடன்,

“இப்போ மணி எட்டரை ஆகிடுச்சு. காலேஜ் பையை எடுத்துக்கோ” என அவளுக்கு அறிவுறுத்தினார் மீனா.

“சரிம்மா. சாமி கும்பிட்டுட்டுக் கிளம்பிட்றேன்” என்றவள், சாமிப் படத்திற்கு முன்னால் போய் நின்று தன்னுடைய கரங்களைக் குவித்துக் கண்களை மூடிக் கொண்டவளது வாய்க்குள்ளே இருந்து சிறு முணுமுணுப்புச் சத்தம் வந்து கொண்டிருந்தது.

தங்களது குடும்பம் எப்போதும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் தன் பிரார்த்தனையை முடித்துக் கொண்டாள் யக்ஷித்ரா.

அப்படியே தன்னுடைய தாயிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டுக் கல்லூரிப் பையை எடுத்துக் கொண்டவள்,”நான் காலேஜூக்குப் போயிட்டு வரேன் ம்மா” என்று அவரிடம் கூறி விட்டுப் பேருந்து நிலையத்திற்குச் சென்று விட்டாள் யக்ஷித்ரா.

தங்களது இரண்டு மகள்களும் தத்தமது பாடசாலைகளுக்குப் போனதும், தன்னுடைய கணவரிடம் சென்று,”நீங்க இன்னும் வேலைக்குக் கிளம்பலையா?” என்று அவரிடம் கேட்டார் மீனா.

“இல்லை” என்று எங்கோ வெறித்தபடியே அவருக்குப் பதிலளித்தார் கிரிவாசன்.

“ஏன் ங்க?” என்றவரிடம்,

“உடம்பு சரியில்லை” என்று கூறி விட,

“என்னாச்சு ங்க? ஹாஸ்பிடல் போகலாமா?” என்று அவரிடம் வினவினார் மீனா.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடுவேன்” என்று மனைவியிடம் சொல்லி விட்டுத் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார் கிரிவாசன்.

அவரைப் பின்தொடர்ந்து சென்று,”என்னா ஆச்சுன்னு சொல்லுங்க. நான் அதுக்குத் தேவையான மாத்திரையைக் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்று அவர் மீதிருந்த உண்மையான அக்கறையுடன் கேட்க,

“எந்த மாத்திரையும் எனக்குத் தேவையில்லை. நீ என்னைக் கொஞ்சம் தனியாக விடு” என்று கூறி விட்டுக் கட்டிலில் படுத்துக் கொள்ளவும்,

“சரிங்க. ஏதாவது வேணும்னா என்னைக் கூப்பிடுங்க” என அவருக்கு அறிவுறுத்தி விட்டு வெளியேறினார் மீனா.

தன் கணவருக்கு உடலில் எல்லாம் கோளாறு எதுவும் இல்லை. மனதில் தான் ஏதோ ஒன்று அரித்துக் கொண்டிருக்கிறது. அதை வாய் விட்டுச் சொல்லித் தன்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு அவருடைய மனம் இடம் கொடுக்கவில்லை என்பதை இப்போது தான் புரிந்து கொண்டார் கிரிவாசனின் மனைவி.

எந்த மனக் கவலையாக இருந்தாலும் அதைத் தன் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது தனக்குள் இருக்கும் இறுக்கம் தளர்ந்து போய் விடும் என்பதை தன்னுடைய கணவர் எப்போது தான் உணர்ந்து கொள்ளப் போகிறார்? என்ற வேதனையுடன் வேலையைப் பார்க்கப் போனார் மீனா.

மதிய உணவு நேரத்திலும் தன் மனைவி அழைத்த போதும் கூட, அங்கே சென்று சத்தமில்லாமல் சாப்பிட்டு விட்டு வந்தார் கிரிவாசன்.

அப்போது அவரைக் கவனித்த போது தான், இவர் ஏதோ பலத்த யோசனையில் இருக்கிறார். அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கண்டறிந்தார் மீனா.

தன் கணவராகவே அனைத்தையும் சுய பரிசோதனை செய்து கொண்டுத் தனது சுபாவத்தை மாற்றிக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் தோன்றியது அவருக்கு.

ஆனால், அதற்குக் கிரிவாசன் மனது வைக்க வேண்டுமே என்ற ஆற்றாமை தோன்றியதையும் அவரால் மறுக்க முடியவில்லை.

இதே சமயம், பேருந்து நிலையத்திலிருந்துப் பேருந்தில் ஏறித் தன்னுடைய கல்லூரிக்குச் சென்றிருந்தாள் யக்ஷித்ரா.

அப்போது தான், தனது தோழி நிவேதிதா இன்னும் அங்கே வந்திருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டவளோ, அதற்கு என்னக் காரணம் என்று கேட்டறியக் கூடத் தன்னிடம் செல்பேசி இல்லையே என்று முதல் முறையாக வருத்தப்பட்டவள், தன்னுடைய வகுப்பறையைத் தேடிச் செல்லாமல் சிமெண்ட் பலகையிலேயே உட்கார்ந்து விட்டாள் யக்ஷித்ரா.

சில நிமிடங்கள் கடந்ததும், தன்னருகே அமர்ந்த உருவத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

தான் நினைத்ததைப் போலவே, அந்த உருவத்தின் சொந்தக்காரி தனது தோழி நிவேதிதா தான்.

“நான் உன்னைத் தான் இவ்வளவு நேரமாகத் தேடிட்டு இருந்தேன். ஏன் இவ்வளவு லேட்?” என்று அவளிடம் கேட்க,

அவளோ,”இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜூக்குப் போறதால் கோயிலுக்குப் போயிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. அதான், லேட் ஆயிடுச்சு” என அவளுக்கு விளக்கம் அளித்தாள் அவளது தோழி.

“பார்றா! நான் வீட்டிலேயே சாமி கும்பிட்டுட்டு வந்துட்டேன்” என்றாள் யக்ஷித்ரா.

“சரி. நம்மக் கிளாஸைக் கண்டுபிடிச்சுட்டியா?”

“இல்லை நிவி. நான் உள்ளே வந்ததும் உன்னைக் காணாமல் இங்கேயே உட்கார்ந்துட்டேன்”

“அப்போ வா போகலாம்” என இருவரும் சென்று தங்களது வகுப்பறையைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அங்குத் தங்களுடைய எந்தப் பள்ளித் தோழியும் இருக்கவில்லை.

அதனால், தாங்கள் இருவர் மட்டும் தான் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர் யக்ஷித்ரா மற்றும் நிவேதிதா.

அந்தக் காலகட்டத்தில், அனைத்து கல்லூரிகளிலும் ரேகிங் பிரபலமானதாக இருந்தது.

அவர்களுடைய கல்லூரியிலும் அது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் எல்லை மீறிப் போனது இல்லை. எனவே இதையெல்லாம் தெரிந்தே தான் இங்கே படிக்க வந்திருக்கிறார்கள் இரு தோழிகளும்.

அதே போலவே, அந்த வாரத்தில் ஒருநாள் அவர்களுக்கு ரேகிங் நடக்கும் என்ற செய்தியையும் அறிவித்தனர் அவர்கள் சீனியர்.

அன்றைக்கு முதல் நாள் என்பதால், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் விதமாக அனைவரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார்கள் அவர்களது பேராசிரியர்கள்.

அதன் பின்னர், இந்தப் படிப்பில் இருக்கும் எளிது மற்றும் கடினமானவற்றைப் பற்றி எடுத்துரைத்தனர்.

இப்படியாக, மாலை வரையில் வேறு ஒரு அழகான உலகத்தில் இருந்ததைப் போலான திருப்தியுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவளுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பற்றி தாயும், தங்கையும் கேட்க, அதைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை டைனிங் டேபிளில் அமரச் சொல்லி விட்டுத் தானும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள் யக்ஷித்ரா.

அவள் சொல்லத் தொடங்கிய நேரத்தில் அம்மூவரும் எதிர்பாராதவிதமாக அங்கேயிருந்த மற்றைய நாற்காலியில் சாவகாசமாக வந்து அமர்ந்திருந்தார் கிரிவாசன்.

- தொடரும்

 
Top