• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

35. விலோசன விந்தைகள்

Active member
Messages
131
Reaction score
89
Points
28
அவர்கள் இருவரும் தங்களது பள்ளிக்குச் சென்று விட்டால் தான் உலகத்தையே மறந்து விடுவார்களே? இப்போதும் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் யக்ஷித்ரா மற்றும் நிவேதிதா.

பள்ளியினுள் நுழைந்ததும் தங்களுடைய வகுப்பிற்குத் தான் போனார்கள்.

அங்கே இவர்களுக்குப் பாவாடை, தாவணிக் கொடுத்த மாணவியோ,”ஹேய் யக்ஷித்ரா! உனக்காகத் தான் இந்த டிரெஸ்ஸை நிவேதிதா எங்கிட்ட கேட்டாளா? பார்றா! உனக்குச் சூப்பராக இருக்கே!” என்று அவளை மனதாரப் பாராட்டினாள்.

அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர்களோ, தங்களுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு,”எல்லாரும் நம்மளையே பார்க்கிறா மாதிரி இருக்கே!” என்றாள் யக்ஷித்ரா.

“இங்கே நீ மட்டும் தான் பாவாடை, தாவணிப் போட்டிருக்கிற! அதான், உனக்கு அப்படித் தோனுது” என்று தோழிக்கு விளக்கம் கொடுத்தாள் நிவேதிதா.

“ஓஹ்ஹோ! சரி”

அந்த நேரத்தில், வகுப்பறைக்குள் நுழைந்த அவர்களது வகுப்பாசிரியை, அவர்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்து விட்டு,”உங்களைத் தினமும் யூனிஃபார்ம்லயே பார்த்துட்டு இப்போ கலர் ஃபுல்லா பார்க்கிறதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு! நீங்க எல்லாரும் அழகாகத் தயாராகி வந்திருக்கீங்க” என்று அவர்களுக்குத் தன்னுடைய பாராட்டைத் தெரிவித்தார்.

“தாங்க்ஸ் மிஸ்” என்று அனைவரும் கோரஸாக கூறினர்.

“ம்ம். நாங்க எல்லாத்தையும் ரெடி செய்துட்டுக் கூப்பிட்றோம். நீங்க ஆடிட்டோரியத்துக்கு வந்துருங்க” என்று அவர்களுக்கு வலியுறுத்தி விட்டு அந்த வகுப்பின் தலைமை மாணவிக்குச் சில அறிவுரைகள் வழங்கி விட்டுச் சென்றார் அவர்களது வகுப்பு ஆசிரியை.

“அப்போ அது வரைக்கும் நாம ஃப்ரீயா இருக்கலாம்” என்று ஒவ்வொருவரும் தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்களது வகுப்பிற்கு வந்த வகுப்பாசிரியை,”கேர்ள்ஸ்! எல்லாரும் ஆடிட்டோரியத்துக்கு வாங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தவும், அவர்களும் எழுந்து ஆடிட்டோரியத்திற்குப் போனார்கள்.

அந்த மாணவிகளை அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமரச் சொல்லி விட்டு, விழாவைத் தொடங்கினர்.

அந்த விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுவதற்காக ஒரு பிரபலமான கல்லூரியில் இருந்து பேராசிரியர் ஒருவரை வரவழைத்திருந்தார்கள்.

அந்த தலைமை விருந்தினர் மற்றும் இதர ஆசிரியர்களின் உரைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, மாணவிகளுக்கும ஆளுக்கொரு மெழுகுவர்த்திகள் கொடுக்கப்பட்டது.

“இதைப் பொருத்தி அப்படியே கையில் எடுத்துட்டுப் போய் அந்த ஸ்டேஜில் வைக்கனும். முதல்ல உங்க டிரெஸ்ஸைச் சரி பண்ணிக்கோங்க. அதில் தீப்பிடிக்காமல் பார்த்துக்கனும்” என்று அவர்களுடைய உடைகளைச் சரி செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

அதே போலவே செய்தவர்கள் தங்கள் கரங்களில் இருந்த மெழுகுவர்த்திகளைப் பொருத்தி விட்டு அதை மிகுந்த கவனமாக எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்ற அனைத்து மாணவிகளும் அவற்றை மேடையில் வைத்தார்கள்.

அதற்குப் பிறகு, விழாவை நிறைவு செய்து விட்டு,”இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கானச் சாப்பாடு தயாராகிடும். அது வரைக்கும் இந்த ஆடிட்டோரியத்திலேயே வெயிட் பண்ணுங்க” என்ற அறிவிப்பு வந்தவுடன்,

அவர்கள் அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து விட்டனர்.

“அந்த மெழுகுவர்த்தியைப் பிடிச்சுக் கொண்டு போய் வச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் அதைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்துருச்சு நிவி!” என்று இன்னமும் அனைத்து மெழுகுவர்த்திகளும் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே தன் தோழியிடம் உரைத்தாள் யக்ஷித்ரா.

“நானும் அதே கண்டிஷனில் தான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நாளில் பப்ளிக் எக்ஸாம் வந்துரும்ல?” என்று வருத்தத்துடன் வினவினாள் நிவேதிதா.

“ஆமாம் நிவி. இன்னைக்கு யாராவது கேமரா கொண்டு வந்திருந்தால், ஃபோட்டோஸாவது எடுக்கலாம்”

இவர்களது பள்ளிக் காலங்களில் கேமரா வைத்த மொபைல் மட்டுமே இருக்கும். அதுவும் அவர்களது பெற்றோர்கள் யாரும் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு போதும் செல்பேசியைக் கொடுக்க மாட்டார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுவதே அபூர்வமான விஷயமாகும்.

தங்களது பிள்ளைப் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான்/ள் என்றால் கேபிள் கனெக்ஷனை எடுத்து விடுவார்கள்.

அதனால் தான், யாராவது கேமரா கொண்டு வந்திருக்கிறார்களா என்று தேடினார்கள் தோழிகள் இருவரும்.

அவர்கள் வகுப்புத் தோழி ஒருத்தி அதிர்ஷ்டவசமாக ஒரு கேமராவுடன் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டனர்.

எனவே,”ஹேய் ஸ்ரீ! அந்தக் கேமரா உன்னோடதா?” என்கவும்,

“ஆமாம் நிவி”

“அப்போ எங்களையும் ஒரு ஃபோட்டோ எடுக்குறியா?” என்றனர்.

“நாம எல்லாரும் சேர்ந்தே எடுக்கலாம். அதுக்குத் தானே இதை எடுத்துட்டு வந்திருக்கேன்”என்று அவர்களிடம் கூறி விட்டாள் ஸ்ரீதேவி.

அதன் பின்னர், அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அதை வாங்கிச் சாப்பிட்டபடியே பேசத் தொடங்கினர்.

எப்பொழுதும் மதிய உணவு இடைவேளையில் தாங்கள் இருவரும் மட்டும் பகிர்ந்து உணவுண்பதால் இன்றைய தினம் மட்டும் தங்களது வகுப்புத் தோழிகள் அனைவருடனும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிட்டதால் அந்த உணவு மிகவும் சுவையானதாக இருப்பதைப் போலிருந்தது யக்ஷித்ரா மற்றும் நிவேதிதாவிற்கு.

நேரம் ஆக ஆக வீட்டில் என்ன நிகழ்கிறதோ என்ற பயம் யக்ஷித்ராவைப் பிடித்துக் கொண்டது.

அதைத் தோழியிடம் சொல்ல,”வீட்டில் என்ன நடந்தாலும் அம்மாவும், யாதுவும் பார்த்துக்குவாங்க. நீ இந்த நேரத்தை ஜாலியாக என்ஜாய் பண்ணு” என்று அவளுக்குப் புத்திமதி கூறினாள் நிவேதிதா.

அதே சமயம்,”அக்கா சொன்னா மாதிரியே ஃபங்க்ஷன் முடிய ரொம்ப நேரம் ஆகும் போலயே ம்மா?” என்று தாயிடம் கேட்டாள் யாதவி.

“ம்ம். அவ தான் சொன்னாளே…? எட்டு மணிக்கு மேலே ஆகிடுச்சுன்னா நான் கிளம்பிப் போறேன்” என்று அவளிடம் கூறினார் மீனா.

“சரிம்மா” என்றவளுக்கு இவ்வளவு நேரமாகத் தந்தையின் கோபக்குரல் எதுவும் கேட்கவில்லையே? என்ற வியப்பு ஏற்பட்டது.

ஆகவே,”அப்பா வீட்டில் தானே ம்மா இருக்கார்?” என்று விசாரித்தாள் யாதவி.

“ஆமாம். ஏன் டி இப்படி கேட்கிற?”

“இல்லை… இன்னும் அவர் எதுவுமே பேசாமல், கத்தாமல் அமைதியாக இருக்கார். அதான் கேட்டேன்” என்றாள் இளையவள்.

“அவர்கிட்ட தான் முதல்லயே எல்லாத்தையும் சொல்லியாச்சே? அது தான் சைலண்ட் ஆக இருக்கார்” என்றார் மீனா.

“ஓஹ்!” என்றவளோ, தந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள் யாதவி.

கிரிவாசனோ, எந்தப் பிரச்சனையும் செய்யாமல் இரவு உணவை உண்டு விட்டு அக்கடாவென உறங்கப் போய் விட, அதைக் கண்டு அதிசயித்துப் போனத் தாயும், மகளும் ,’இதுவும் நன்மைக்குத் தான்!’ என்று விட்டு விட்டனர்.

இங்கே விழாவில் உணவுண்டு முடித்ததும், அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தத்தமது வீட்டிற்குச் செல்ல ஆயத்தம் ஆயினர்.

தன் தம்பி மிதுன் வந்து தன்னை அழைத்துச் செல்லத் தயாராக இருக்கத், தோழியின் தாய் வந்த பிறகு வீட்டிற்குச் செல்லலாம் என்று அவனைக் காத்திருக்கச் சொன்னாள் நிவேதிதா.

தன்னுடைய இளைய மகளிடம் சொல்லி விட்டு மூத்த மகளை அழைத்து வரக் கிளம்பிய மீனாவோ,”நான் போயிட்டு வர்றதுக்குள்ளே உங்கப்பா எழுந்திரிக்க மாட்டார். அதனால் நீ டிவி பார்த்துட்டு இரு” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

அவர் சொன்னவாறே, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி அதைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் யாதவி.

சில நிமிடங்களில் பள்ளியை அடைந்தவரோ, அதன் வாயிலில் யக்ஷித்ரா, நிவேதிதா மற்றும் அவளது தம்பியும் நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம் போய்,”ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று சங்கடத்துடன் வினவினார் மீனா.

“இல்லை ம்மா. மிதுன் இப்போ தான் வந்தான். நீங்க வந்ததும் கிளம்பலாம்னு இருந்தோம்” என்றாள் நிவேதிதா.

அவர்கள் முன்னால் தந்தையைப் பற்றிக் கேட்க வேண்டாமென்று,”வீட்டுக்குப் போகலாமா ம்மா?” என்று தன் அன்னையிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

“ம்ம். வா. போயிட்டு வர்றோம்” என்று மகளுடைய தோழி மற்றும் அவளது தம்பியிடம் விடைபெற்றுக் கொள்ள,

“பை நிவி. பை மிதுன்” என அவர்களுக்குக் கையசைத்து விட்டுத் தாயுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள் யக்ஷித்ரா.

“அப்பா எதுவும் சொன்னாரா ம்மா?” என்றவளிடம்,

“அவர் வாயே திறக்கலை டி!” என்று அவளுக்குப் பதிலளித்தார் மீனா.

“ஓகே ம்மா” என்றவள், வீட்டை அடைந்ததும்,

“யாது!” எனத் தங்கையை அழைத்தாள் யக்ஷித்ரா.

“அக்கா! முதல்ல போய் டிரெஸ்ஸை மாத்திட்டு வா” என்று அவளை அனுப்பி விட,

அவளது தமக்கையும் வேகவேகமாக சென்று உடையை மாற்றி விட்டு, முகத்தையும் கழுவிக் கொண்டு வந்தாள்.

“இப்போ சொல்லு. அந்த ஃபங்க்ஷனில் என்னவெல்லாம் என்ஜாய் பண்ணுன?” என்று அவளிடம் வினவினாள் யாதவி.

அதைக் கேட்டவுடன், பிரிவு உபச்சார விழாவில் நிகழ்ந்தவற்றை அவளிடம் விவரித்தாள் யக்ஷித்ரா.

“பார்றா! செம்ம ஜாலி போலவே?” என்று கேட்டவளிடம்,

“ஆமாம். பெஸ்ட் மெமரீஸ்!” என்று அவளிடம் சொல்லிப் பூரிப்பு அடைந்தாள் அவளது தமக்கை.

ஒன்பது மணிக்கு மேலாகி விட்டதால்,”சரி. நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல? தூங்கப் போங்க.” என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டுத் தானும் உறங்கப் போனார் மீனா.

அதற்கடுத்த நாளிலும் கூடத் தன்னுடைய மூத்த மகளைக் கண்டும் காணாமல் இருந்தார் கிரிவாசன்.

அவளது முக்கியத் தேர்வைப் பற்றியும் கூட எந்த விசாரிப்புகளையும் மேற்கொள்ளவில்லை அவர்.

அதற்குப் பிறகான தினங்களில், யாதவிக்கு மிதிவண்டி வழங்கி விட்டனர் அவளது பள்ளி நிர்வாகம்.

அதை வாங்கியவுடன் அவளது முகம் பிரகாசமாக ஜொலித்தது.

தன்னுடைய மிதிவண்டியைத் தமக்கையிடம் காட்டி,”இங்கே பார்த்தியா? என்னோட புது சைக்கிள்! நல்லா இருக்கா?” என்று உற்சாகத்துடன் வினவினாள் யாதவி.

“ம்ம். சூப்பர்!” என்றாள் யக்ஷித்ரா.

அதே போல, தன்னுடைய தந்தையின் முன்பாகவும் அதை இப்படி, அப்படி திருப்பிப் பார்த்துப் பெருமிதப்பட்டுக் கொண்டாள் அவரது இளைய மகள்.

அதையெல்லாம் சத்தமில்லாத ஊமைப் படத்தைப் பார்ப்பதைப் போன்றதொரு பார்வையை வீசி விட்டுப் போனார் கிரிவாசன்.

இப்பொழுதெல்லாம் அவரது அதிகபட்ச எதிர்வினைகள் இப்படியாக மட்டும் தான் இருந்தது.

அதைப் பற்றி மற்ற மூவரும் கவலைப்படவில்லை.

யக்ஷித்ரா மற்றும் நிவேதிதாவும் தங்களது பொதுத்தேர்விற்குத் தயாராக ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த தடவை தனது தந்தையிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தோழியுடன் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

அதை அறிந்த போதிலும் அமைதியாக இருந்து கொண்டார் கிரிவாசன்.

நாட்கள் செல்லச் செல்லத் தங்களது பொதுத் தேர்விற்கான கால அட்டவணையைப் பெற்றுக் கொண்டவர்களோ,

“எந்தெந்த பாடங்களுக்கு எத்தனை நாள் லீவ் இருக்குன்னுப் பார்க்கனும்” என்று ஆராய்ந்தனர்.

“முக்கியமாக இந்த மேத்ஸ் எக்ஸாமுக்குப் பாரு நிவி” என்றாள் யக்ஷித்ரா.

“அதுக்கு ரெண்டு நாள் லீவ் இருக்கு!” என்றதும்,

“ஹப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு” என்று அவ்விருவரும் படிக்கத் தொடங்கினர்.

இந்த முறை தன் மகளுடைய உடல் மற்றும் மனநலனை நன்றாகப் பார்த்துக் கொண்டார் மீனா.

அவர்களது பொதுத்தேர்வும் வந்து விட காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணிக்கு முடியும் என்பதால், மதிய உணவு எடுத்துச் செல்லத் தேவையில்லை.

அதனால் காலையில் விரைவாகவே எழுந்து சிறிது நேரம் படித்து விட்டுக் கிளம்பி ஒன்பது மணிக்குள்ளாகப் பள்ளிக்குச் சென்று தங்கள் ஒவ்வொரு தேர்வுகளையும் எழுதி முடித்தார்கள் யக்ஷித்ராவும், நிவேதிதாவும்.

அதன் பின்னர், தங்களது மதிப்பெண்கள் வருவதற்காக காத்திருக்கத் தொடங்கினர் இருவரும்.

“நாம ட்வெல்த்ல பயோமேத்ஸ் எடுத்ததால் காலேஜில் எந்தச் சப்ஜெக்ட்டை வேணும்னாலும் எடுத்துக்கலாம். நீ எதைச் செலக்ட் செய்யப் போற?” என்றவளிடம்,

“மேத்ஸ் தான் நிவி” எனப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

“நானும் அதையே தான் படிக்கலாம்ன்னு இருக்கேன்” என்றாள் அவளது தோழி.

“சூப்பர்!” என்று கூறியவளோ, தங்களது இந்த முடிவைத் தாயிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

“நல்லா யோசிச்சீங்க தானே?” - மீனா.

“ஆமாம் மா. எனக்குப் பிடிச்ச சப்ஜெக்ட்” என்கவும்,

“சரி. எந்தக் காலேஜில் சேரலாம்ன்னு உங்க ஸ்கூல் மிஸ் யார்கிட்டேயாவது கேட்டுப் பார்த்துச் சொல்லுங்க” என்று மகளுக்கு அறிவுறுத்தினார் அவளது அன்னை.

அதைக் கூட கிரிவாசனிடம் கேட்கத் தயாராக இல்லை அவர்கள் இருவரும்.

அதனால், நிவேதிதாவிடம் சொல்லவும், அவளோ தங்களது வகுப்பாசிரியையின் உதவியை நாடினாள்.

அவரும் கூட அந்த ஊரிலிருக்கும் தனக்குத் தெரிந்த நல்ல கல்லூரிகளைப்‌ பற்றிய விவரங்களை அவர்களுக்குச் சொன்னார்.

“இப்படி முதல்லயே எல்லாத்தையும் கேட்டு வச்சாச்சு. ஆனால் அதுக்கேத்த மாதிரி மார்க் வரனும்” என்று யக்ஷித்ராவும், நிவேதிதாவும் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

அதே போலவே, அவர்கள் எதிர்ப்பார்த்த மாதிரியே இருவரும் அதிகமாகவே மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.

அதனால், தங்களுக்குப் பிடித்தமான பாடத்தை, தாங்கள் விரும்பிய கல்லூரியிலேயே படிக்கும் வாய்ப்பும் கிட்டியது அவர்களுக்கு.

தன் மூத்த மகள் கல்லூரியில் எந்தப் பிரிவு பாடத்தை எடுக்கப் போகிறாள் என்ற ஆவல் உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கேட்கவில்லை கிரிவாசன்.

ஆனால், அவருக்குக் கேட்கும் வகையில் தன்னுடைய தங்கையிடம் விவரத்தைக் கூறி விட்டாள் யக்ஷித்ரா.

அதைக் கேட்டவுடன் அவளது தந்தைக்குத் தானாக நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

அப்போது அந்த இடத்தில் தன் மனைவி கதைச் சொல்வதை நிறுத்துமாறு கூறிய அற்புதனோ,”உன்னோட காலேஜ் லைஃப் - ஐயும், நம்மளோட மேரேஜ் அரேன்ட்ஜ்மெண்ட் அப்போ நடந்ததையும் இன்னொரு நாள் கேட்கிறேன் யக்ஷூ! இப்போ ரொம்ப லேட் ஆகிடுச்சு. ரெஸ்ட் எடுத்துக்கவா?” என்று அவளிடம் வினவினான்.

“ஓகே ங்க” எனப் புன்னகையுடன் அவனுக்கு அனுமதி அளித்தாள் யக்ஷித்ரா.

- தொடரும்
 
Top