• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

34. விலோசன விந்தைகள்

Active member
Messages
131
Reaction score
89
Points
28
“என்னங்க?” என்று அவரை அழைத்ததும்,

தலையைத் திருப்பித் தனது மனைவியைப் பார்த்து,”நீ சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன். அப்போ அந்த ஃபங்க்ஷன் முடிஞ்சதும் நான் போய் உன் பொண்ணைக் கூட்டிட்டு வரனும் அதான?” என்று அவரிடம் வினவினார் கிரிவாசன்.

“ஆமாம் ங்க” என்று அவருக்குப் பதிலளித்தார் மீனா.

“ஏன் உன் பொண்ணு அந்த ஃபங்க்ஷனுக்குக் கண்டிப்பாகப் போய்த் தான் ஆகனுமா?” என்ற கேள்விக்கு,

“அவ ஸ்கூல் லைஃப்ல நடக்கிற கடைசி ஃபங்க்ஷன் இது! அப்படியிருக்கும் போது அதுக்குப் போகனும்னு நினைக்க மாட்டாளா?” என்றார் அவரது மனைவி.

“ஓஹ்! நான் உங்களை ஏதாவது வேலை வாங்குறேனா? அப்பறம் நீங்க எதுக்கு நான் உங்களுக்கு வேலை செய்யனும்னு ஆர்டர் போட்றீங்க?” என்று கேட்டத் தொனியில், அங்கே நின்றிருந்த மீனாவுக்கும், இதை அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அவர்களது மகள்களுக்கும் மனம் சுக்குநூறாக உடைந்து போயிற்று.

“ அப்பா என்ன க்கா இப்படி பேசுறார்? நாம அவர் பெத்தப் பொண்ணுங்க தானே? நமக்காக வந்தால் என்னக் கெட்டுப் போயிடப் போகுது?” எனத் தன்னுடைய தமக்கையிடம் கூறி வெதும்பினாள் யாதவி.

அவள் கூடத் தன் மனக்குமுறலை வாய் விட்டுச் சொல்லி விட்டாள்! ஆனால், தன்னுடைய நிலையை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

“அக்கா!” எனத் தன்னை உலுக்கியவளிடம்,

“ஹான்!” என்றவளுக்கு வார்த்தைகள் வெளியே வராமல் தொண்டையில் சிக்கியது போலானது.

“என்னாச்சு க்கா?” என்று தமக்கையின் நிலையைப் பார்த்துப் பதறினாள் அவளது தங்கை.

“அவர் நம்மளை அவரோட பொண்ணாவே மதிக்கலை யாது!” என்று கூறி விசும்பத் தொடங்கி விட்டாள் யக்ஷித்ரா.

“அக்கா! இப்போ எதுக்கு அழுகுற? அம்மா என்னப் பதில் சொல்றாங்கன்னுக் கேட்போம். பொறுமையாக இரு. கண்ணைத் துடைச்சுக்கோ” என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் இளையவள்.

அதே சமயம்,”இது உங்களுக்கு ஒரு வேலையாகத் தெரியுதா ங்க? நம்மப் பொண்ணுங்களோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டதை உங்களால் எப்படி இப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க முடிஞ்சது?” என்று அவரிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் மீனா.

“வேற எப்படி பார்க்கிறது? நீயும், அவங்களும் இவ்வளவு நாளாக என் கூடப் பேசவே இல்லை. ஆனால், இப்போ மட்டும் உன் பொண்ணுங்களுக்காக என்கிட்ட வந்து ஹெல்ப் கேட்டுட்டு நிற்கிற! இதுக்கு நான் சரின்னு சொல்லனுமா?” என்று தன் மனைவியிடம் கடுமையான குரலில் வினவினார் கிரிவாசன்.

“இப்போ முடிவாக என்னத் தான் சொல்ல வர்றீங்க?” எனவும்,

“இந்த விஷயத்தில் மட்டுமில்லை உங்க மூனு பேர் சம்பந்தப்பட்ட எதிலேயும் தலையிட்றதாக இல்லை!” என்று தன்னிடம் முடிவாகச் சொல்லியவரை,

தீர்க்கமான பார்வையுடன் ஏறிட்டு,”அப்படியா? சரிங்க” என்று அவரிடம் கூறி விட்டுத் தன்னுடைய மகள்களைத் தேடிச் சென்றார் மீனா.

அவர்களது உரையாடல்கள் யாவையும் தன்னை நிலைகுலையச் செய்வதை உணர்ந்தவளோ,

தனது வலி நிறைந்த பார்வையைத் தாயை நோக்கி வீசி,”என்னம்மா நடக்குது இந்த வீட்ல? எங்களோட அப்பா அவர்! ஆனால், அவரோட பேச்சைக் கேட்டதுக்கு அப்பறம் தான் அவருக்கு மகளாக நாங்க இந்த வீட்டில் எதுக்கு இருக்கோம்ன்னு இப்போ யோசிக்கிறோம்!” என்று வெடித்து அழுதாள் யக்ஷித்ரா.

“அச்சோ! அக்கா!” என அவளை அணைத்துக் கொண்டவளோ,”நீங்க எப்படித் தான் இப்படியொரு கேரக்டர் இருக்கிறவரைக் கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னீங்கன்னு எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கு ம்மா!” என்று தங்களது அன்னையிடம் புலம்பினாள் யாதவி.

“நான் தேடிப் போய் விழுறதுக்கு என்னோடது என்ன லவ் மேரேஜ்ஜா? அவரும், நானும் சொந்தக்காரங்க. அதனால் கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க! அதுக்கு முன்னாடி அவரோட குணாதிசயத்தைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது!” என்று தன் சோகக் கதையை மகள்களிடம் மேலோட்டமாகப் பகிர்ந்து கொண்டார் மீனா.

“அதானே பார்த்தேன்! இவரை எப்படி நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பீங்கன்னு ஒரு டவுட் இருந்துச்சு ம்மா” என்று தாயிடம் சலித்துக் கொண்டாள் அவரது சின்ன மகள்.

அவர்களது பேச்சு வார்த்தைகள் தனது மனக் காயத்தைத் தற்காலிமாக ஆற்றியது போலும்.

அதனால், அவ்விருவரையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்தாள் யக்ஷித்ரா.

“உங்க கல்யாணக் கதையைக் கேட்டு அக்கா ஸ்மைல் பண்றா பாருங்க” என்று தன்னுடைய அன்னையிடம் தெரிவித்தாள் யாதவி.

அதைக் கேட்டுத் தன் மூத்த மகளைக் கண்டவருக்கும் அதே புன்னகை தொற்றிக் கொண்டது.

“இப்படியே இரு” என்று அவளது தலையில் கையை வைத்து ஆசியும் வழங்கினார் மீனா.

“ஷ்யூர் ம்மா. நீங்களும், இவளும் என்னை மீட்டெடுக்கத் தயாராக இருக்கும் போது எனக்கு என்னக் கவலை? இப்படியே ஹேப்பியா இருக்கேன்” என்று அவர்களிடம் கூறிப் புன்னகைத்தாள் யக்ஷித்ரா.

அதன் பிறகுத் தங்களுடைய அரட்டைகளைத் தொடர்ந்தனர் மூவரும்.

அதே நேரத்தில், தன் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்த கிரிவாசனோ, தனது குடும்பத்தின் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார்.

அவர்கள் தன்னைப் பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ற கோபம் அவரது கண்ணை மறைத்தது.

தன் மகள்களுடைய இந்தச் சின்ன எதர்பார்ப்பைக் கூடத் தான் நிறைவேற்றவில்லை என்று கொஞ்சம் கூட அவருக்குக் குற்ற உணர்ச்சியின்றி அவர்களின் மீது சினம் கொண்டிருப்பது என்ன நியாயம் என்பது அவருக்குப் புரியவில்லை.

தான் போய் அழைக்கச் சென்றால் ஒழிய பிரிவு உபச்சார நிகழ்ச்சி முடிந்து யக்ஷித்ராவால் வீட்டிற்கு வந்து சேர முடியாது என்ற திண்ணக்கத்தில் இருந்தார் கிரிவாசன்.

அவருடைய இளைய மகளும் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும், அவளும், யக்ஷித்ராவும் ஒருவருக்கொருவர் துணையாக பள்ளியிலிருந்து நடந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்பதையும் மறந்து விட்டிருந்தார்.

அதை அவருக்கு ஞாபகப்படுத்தும் நேரம் வந்து விட்டது போலும்!

அதனால்,”ஃபங்ஷன் முடிஞ்சதும் நீயும், இவளும் சேர்ந்து வீட்டுக்கு வந்துடுவீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனால், இந்த தடவை நீங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ளே ரொம்ப இருட்டாகிடும்! அதனால், நீங்க வீட்டுக்கு வரத் தாமதம் ஆச்சுன்னா நான் வந்து கூப்பிட்டுக்கிறேன்” எனத் தனது இரண்டு மகள்களுக்கும் வலியுறுத்தினார் மீனா.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா. நம்ம வீட்டு சைடு இருக்கிறவங்களோட பொண்ணுங்களும் எங்க ஸ்கூல்ல தானே படிக்கிறாங்க? அவங்களைக் கூட்டிட்டுப் போக அவங்களோட அப்பா, அம்மா வருவாங்க! நாங்க அவங்க கூடவே வீட்டுக்கு வந்துடறோம்” என்று தன் தாயிடம் கூறினாள் யக்ஷித்ரா.

“நான் இருக்கும் போது நீங்க ஏன் அவங்க கூட வீட்டுக்கு வரனும்? நான் வர்றேன். அவ்வளவு தான்!” என்று இந்த விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் மீனா.

அதற்குப் பிறகுப், பிரிவு உபச்சார விழாவிற்குத் தான் கண்டிப்பாக வருவதாக நிவேதிதாவிடம் உரைத்தாள் யக்ஷித்ரா.

“அப்பாடா! இப்போதாவது நல்ல வார்த்தைச் சொன்னியே! எப்படியும் உங்க அப்பா அவ்வளவு சீக்கிரத்தில் விட்டிருக்க மாட்டார். என்னச் சொல்லி சம்மதம் வாங்குனீங்க?” என்று கேட்க,

“எப்பவும் போலத் தான்! ஆனால் இந்த முறை நான் ரொம்ப ஹர்ட் ஆகிட்டேன்” என்றவளோ, அவளிடம் தனது வீட்டில் நடந்ததைச் சொன்னாள் யக்ஷித்ரா.

“உங்க அப்பா என்ன மாதிரியான ஆளுன்னே என்னால் ஃபிக்ஸ் பண்ணிக்க முடியலை! சரி விடு. நீ ஃபங்க்ஷனைப் பத்தி மட்டும் யோசி” என்று தோழிக்கு அறிவுறுத்தினாள் நிவேதிதா.

வகுப்பறைக்கு வந்து விட்டாலே அந்தச் சூழலில் தன்னுடைய அனைத்து மனக்கஷ்டங்களும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடும் என்பதால், தோழியுடன் உரையாடத் தொடங்கி விட்டாள் யக்ஷித்ரா.

அடுத்த நாள் மாலையில் தான், பிரிவு உபச்சார விழா என்பதால், தங்களது வீட்டிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டுப் பொறுமையாக கிளம்பி விழாவிற்கு வருமாறு அனைத்து மாணவிகளுக்கும் காலை முதல் மதியம் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் எதிர்பாராத செய்தியான,’அனைத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளும் தங்கள் வீட்டிலிருந்து தங்கையையோ, தம்பியையோ அழைத்து வரக் கூடாது என்று உறுதியாக கூறி விட்டார் அந்தப் பள்ளியின் முதல்வர்.

அதைக் கேட்டவுடன், தன்னுடைய மனக்கோட்டைச் சரிந்து விழுந்து விட்டதை உணர்ந்தாள் யக்ஷித்ரா.

“என்ன இப்படி சொல்லிட்டாங்க?” என்று அவளிடம் அதிர்ச்சியுடன் வினவினாள் நிவேதிதா.

“அதான், எனக்கும் கஷ்டமாக இருக்கு ம்மா. நம்ம ஃபேர்வெல் டே- யைப் பார்க்கிறதுக்கு என் தங்கச்சி ரொம்ப ஆர்வமாக இருந்தா! இப்போ இதைப் போய்ச் சொன்னா வருத்தப்படுவா!” என்றவளோ, உணவு இடைவேளையின் போது தன்னுடைய தங்கையிடம் சென்று இதைக் கூறி விட்டாள் யக்ஷித்ரா.

“என்னது! நமக்கு மட்டும் ஏன் இப்படியே நடக்குது க்கா?” என வருத்தம் மேலிட தமக்கையிடம் கேட்டாள் யாதவி.

“என்னப் பண்றது? நம்ம விதியும், நேரமும் அப்படி இருக்கு” என்று சொன்னவளோ, தங்கள் வீட்டிற்குப் போய்த் தாயிடமும் இவ்விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள் சகோதரிகள் இருவரும்.

“அதனால் என்ன? அவ ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வரட்டும்” என்று இயல்பாக உரைத்து விட்டார் மீனா.

“போங்க ம்மா!” என்று அவரிடம் தன்னுடைய கோபத்தையும், சோகத்தையும் வெளிப்படுத்தி விட்டுப் போய் விட்டாள் யாதவி.

“இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிஞ்சா போக வேண்டாம்ன்னு சொல்லுவாரே ம்மா?” என்று வருத்தத்துடன் வினவினாள் யக்ஷித்ரா.

“அதுக்கு என்னப் பண்ண முடியும்? நாம முடிவெடுத்தாச்சு. அவ்வளவு தான்!” என்றுரைத்து விட்டார் அவனது அன்னை.

அதன் பின்னர், மறுநாள் காலையில், இளைய மகள் மட்டும் பள்ளிக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டு இருப்பதைக் கண்டு,”இன்னைக்கு நீ மட்டும் தான் ஸ்கூலுக்குப் போறியா?” என்று வெகு நாட்களுக்குப் பின்னர் இன்றைக்குத் தான் முதல் முறையாக அவளிடம் வினவினார் கிரிவாசன்.

அவர் திடீரென்று கேட்ட இந்தக் கேள்வியில் திடுக்கிட்டவளோ, தன்னைச் சமாளித்துக் கொண்டு,”ஆமாம் ப்பா” என்ற பதிலைக் கொடுத்தாள் யாதவி.

“ஏன்? ஃபேர்வெல் ஃபங்க்ஷன் ஈவ்னிங் தானே? அப்போ போனால் போதாதா? இன்னைக்கு உனக்கு லீவ் விடலையா?” என்று மேலும் வினா எழுப்பினார் அவளது தந்தை.

“இல்லை ப்பா. எங்களுக்குக் கிளாஸ் வச்சிட்டாங்க” என்று மெல்லிய முணுமுணுப்புடன் அதற்கு மேல் நின்று அவருடன் பேச்சை வளர்க்காமல் தாயிடமும், தமக்கையிடமும் விடைபெற்றுக் கொண்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள் அந்த வீட்டின் இளைய பெண்.

அவளிடமிருந்து எந்தப் பதிலையும் கறக்க முடியவில்லை என்ற ஆத்திரம் இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகி விட்டார் கிரிவாசன்.

மாலை நேரம் ஆனதும், விழாவிற்குச் செல்லும் நேரம் வந்து விட்டதால், குளித்து முடித்து வந்த தன் மகளுக்குப் பாவாடை, தாவணியை உடுத்தி விட்டுத், தலைமுடியையும் அழகாக ஒற்றைப் பின்னல் பின்னி விட்டார் மீனா.

அந்தச் சமயத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த யாதவியோ,”வாவ் க்கா! இந்த டிரெஸ்ஸில் சூப்பராக இருக்கிற” என்க,

“தாங்க்ஸ் யாது” என்றவளோ, அறையை விட்டு வெளியேறவும் அவளைக் கூர்மையாக ஆராய்ந்தார் கிரிவாசன்.

அவளது உடையும், சிகை அலங்காரமும் இவருக்குப் பார்த்ததும் கண்களில் மென்மை ஏற்பட்டது.

தந்தையானவருக்கு இயற்கையாகவே தங்கள் பிள்ளைகளின் மீது இருக்கும் பாச உணர்வு அவரது விழிகளில் இருந்து சிறிது சிறிதாக கசியத் தொடங்கியதை உணர்ந்தவரோ,

தனது மகளைப் பார்க்கையில் தன் தாயின் நினைவு வரும் என்று ஒவ்வொரு தந்தையும் பொதுவாகவே கூறுவதுண்டு! அதே போலான எண்ணமும் தனக்குள் நுழைந்து கொண்டதோ? என்ற கேள்விக்குறியுடன் மகளைப் பார்த்தார் கிரிவாசன்.

ஆனால் அவளுக்கோ தந்தையைக் காணும் போதெல்லாம் அவரது கொடிய விஷ வார்த்தைகள் தான் ஞாபகத்திற்கு வந்தது.

எனவே, தான் முழுவதுமாக கிளம்பி முடித்ததும், லேண்ட்லைனில் இருந்து தன் தோழி நிவேதிதாவிற்கு அழைத்து அவள் எத்தனை மணிக்கு வருகிறாள் என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டவளோ,

தங்கள் இருவருடைய வீட்டிற்கும் பொதுவாக ஒரு தெரு இருக்கும். அதில் இருவரும் சந்திப்பதாக முடிவெடுத்து விட்டு,

அதற்கான நேரம் வந்ததும், தாயிடமும், தங்கையிடமும் போய்,”நான் கிளம்புறேன்” என்றாள் யக்ஷித்ரா.

“ஓகே க்கா. நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா” என்று அவளிடம் கூறினாள் யாதவி.

மகளுடைய முகத்தில் தன்னிரு கரங்களை வைத்து நெற்றி வழித்து திருஷ்டிக் கழித்து விட்டு,”நீ பெரிய பொண்ணான அப்போ தாவணி கட்டி நான் பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இப்போ தான் பார்க்கிறேன்! ரொம்ப அழகாக இருக்க டா ம்மா!” என்று கூறி அவளைப் பாராட்டி விட்டு வீட்டின் வெளியே அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்தார் மீனா.

அவரிடம் விடைபெற்றுக் கொண்டுத் தன்னுடைய தோழியிடம் போனவள், தன் உடையின் நிறத்தைப் போலவே சுடிதார் போட்டிருந்த நிவேதிதாவிடம்,’சேம் பின்ச்!” என்று புன்னகையுடன் உரைத்தாள் யக்ஷித்ரா.

“சாக்லேட் தானே வாங்கித் தர்றேன்” என்றவாறே இருவரும் தங்களது பள்ளியை நோக்கி நடந்தனர்.

- தொடரும்
 
Top