• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

33. விலோசன விந்தைகள்

Active member
Messages
131
Reaction score
89
Points
28
“நீ இவ்வளவு சிரமப்பட்டு இந்த டிரெஸ்ஸை எனக்கு வாங்கித் தரக் காரணம் என்ன?” என்று அவளிடம் வினவியவளிடம்,

“உன்னோட சந்தோஷத்துக்காகத் தான்னு உங்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேனே!” என்று தன்னிடம் இயல்பாக கூறிய தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுக்கத் தொடங்கி விட்டாள் யக்ஷித்ரா.

“அச்சோ! எதுக்கு இப்படி அழுகுற?” என்று அவளிடம் பதறிப் போய்க் கேட்க,

“எனக்கு ஏன் இப்படியொரு ஃப்ரண்ட் சீக்கிரமாகவே கிடைக்கலை. இவ்வளவு லேட் ஆக கிடைச்சுட்டியேன்னு தான் ஃபீல் பண்றேன்” என்று அவளுக்கு விளக்கவும்,

“ஹேய்! அதனாலென்ன யக்ஷி? நாம இனிமேல் கடைசி வரைக்கும் இப்படியே கிளோஸ் ஃப்ரண்ட்ஸ் ஆக இருப்போம்!” எனக் கூறித் தோழியைச் சமாதானப்படுத்தினாள் நிவேதிதா.

அதில் தனது முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தவளோ, தன்னுடைய தாயிடமும், தங்கையிடமும் அந்தத் தாவணியைக் காட்டி அவர்களிடம் தங்களது நட்பைப் பற்றிப் புகழ்ந்து பேசினாள் யக்ஷித்ரா.

“நீ இப்படி இரவல் வாங்கிப் போட்டுட்டுப் போகனுமான்னு நினைச்சு உங்கிட்ட வேண்டாம்னு மறுத்துச் சொல்ல யோசிச்சேன் டி. ஆனால், இதுக்காக உன்னோட ஃப்ரெண்ட் ரொம்ப அலைஞ்சு இருந்ததால் அமைதியாகிட்டேன். இதைப் போட்டுட்டுப் போயிட்டுப் பத்திரமாக கொண்டு போய் அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்திரு” என்று தன் மகளிடம் வலியுறுத்தினார் மீனா.

அதற்குப் பிறகு, அந்த உடை தனக்குப் பொருத்தமான அளவில் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டாள் யக்ஷித்ரா.

நல்லவேளையாக, அந்த ஆடையைத் அவளுக்குக் கொடுத்தப் பெண்ணும் அவளைப் போலவே உடல் எடை குறைவாக இருந்ததால் அதில் எந்த மாற்றத்தையும் செய்யத் தேவை இருக்கவில்லை. அவள் அதை அப்படியே அணிந்து கொள்ள ஏதுவாகத் தான் இருந்தது.

அதனால்,”அந்த டிரெஸ் என்னோட அளவில் தான் இருக்கு நிவி” என்று தன் தோழியிடம் உரைத்தாள் யக்ஷித்ரா.

“அப்படியா? சூப்பர்! நான் அதைப் பிடிச்சு அடிக்கனுமோன்னுக் கூட யோசிச்சேன். இப்போ தான் நிம்மதியாக இருக்கு” என்றாள் நிவேதிதா.

அதன் பின்னர், அவர்கள் இருவரும் தங்களது பிரிவு உபச்சார விழாவிற்காக அணிந்து கொள்ளப் போகும் தத்தமது உடைகளுக்கான பிளாஸ்டிக் அணிகலன்கள் சிலவற்றை வாங்கி வைத்துக் கொண்டனர்.

“உனக்கு ஃபேர்வெல் டே- வரப் போகுது. அப்போ அடுத்த வருஷத்தில் இருந்து நீ நம்ம ஸ்கூலில் படிக்க மாட்டல்ல?” என்று கேட்ட தன்னுடைய தங்கையிடம்,

“ம்ம். ஆமாம் யாது. நான் அங்கே இல்லைன்னு நீ என்னை மிஸ் பண்ணாமல் நல்லா படிக்கனும். சரியா?” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினாள் யக்ஷித்ரா.

“சரிக்கா” என்று கூறினாலும், அவள் இனிமேல் தன்னுடன் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு வர மாட்டாள் என்பதை யாதவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும், இது நிதர்சனமான உண்மை தானே? அதை அவளால் மாற்ற முடியாது அல்லவா? அதனால், அதைச் சிறிது சிறிதாக ஏற்றுக் கொள்ளப் பழகினாள் யக்ஷித்ராவின் தங்கை.

இவர்கள் மூவரும், யக்ஷித்ராவுடைய பள்ளியில் நடக்கவிருக்கும் பிரிவு உபச்சார விழாவிற்குத் தேவையானவற்றைப் பற்றிய பேச்சு வார்த்தையில் மும்முரமாக இருக்கும் போது,”ஃபங்க்ஷன்ஸ்ஸைப் பத்திப் பேசி முடிச்சாச்சுன்னா எக்ஸாமைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்துப் படிக்கலாம்” என்று யாருக்கோ சொல்வதைப் போல அறிவித்து விட்டுச் சென்றார் அந்தக் குடும்பத்தின் தலைவர் கிரிவாசன்.

அவரது பேச்சைக் கேட்டவுடன் சட்டென்று தங்களது சம்பாஷணையை நிறுத்தி விட்டார்கள் மூவரும்.

அதை மீண்டும் தொடர அவர்களுக்கு முழுமையாகப் பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று.

இப்பொழுதெல்லாம், அவர்களிடம் தன்னுடைய நேரடி பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ளவில்லை கிரிவாசன்.

இப்படித் தான், போகிற போக்கில் எதையாவது கூறி விட்டுப் போய் விடுவார்.

அதை அவர்கள் கேட்டார்களா? இல்லையா? என்பதைக் கூட ஆராய மாட்டார்.

ஆனால், தனது கருத்துக்களை அவர்களிடம் எப்படியாவது கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறார் போலும்! அந்த வேலையைச் செவ்வனே செய்வார் கிரிவாசன்.

இப்போதும் அதையே செய்திருக்க, அவரது இளைய மகளான யாதவியோ,”இதுக்குத் தான் ரூமில் போய்ப் பேசலாம்னு சொன்னேன்” என்று மற்ற இருவரிடம் சொல்லிச் சலித்துக் கொண்டாள்.

அதைத் தானும் ஒப்புக் கொள்ளும் வகையில்,”ஆமாம் டி” என்றாள் யக்ஷித்ரா.

“நீங்க இப்படிப் பேசுறதை முதல்ல நிறுத்துங்க டி. எப்போ பார்த்தாலும் அவர் வீட்டுக்குள்ளே வந்ததுமே நீங்க ரெண்டு பேரும் எழுந்திரிச்சு ரூமுக்குள்ளே போறது, நான் கிச்சனுக்குள்ளே போய் ஒழிஞ்சிக்கிறது இதெல்லாம் இனிமேல் நடக்கக் கூடாதுன்னுத் தான் நான் உங்களை இங்கே உட்கார வச்சுப் பேசிட்டு இருக்கேன். இனிமேலும் இது தான் நடக்கும்!” என்று தன் மகள்களிடம் ஒரு போடு போட்டார் மீனா.

அவரது அந்த உறுதியான பேச்சில் தங்களது அன்னையைக் கண்டு யக்ஷித்ராவும், யாதவியும் பிரம்மித்துப் போனார்கள்.

“சரி. போய்ப் படிங்க. நான் அவருக்குக் காஃபி போட்டுக் கொண்டு போறேன்” என்று தன் மகள்களிடம் சொல்லி விட்டுச் சென்றார் அவர்களது அன்னை.

அவரை இன்னும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த யக்ஷித்ரா மற்றும் யாதவியோ, தங்கள் அறைக்குப் போயப் படிக்கத் தொடங்கி விட்டனர்.

அதன் பிறகுக் காஃபிக் கோப்பையுடன் தன்னுடைய கணவனின் முன்னால் போய் நின்றார் மீனா.

அவரை முறைத்தாலும் கூடத் தன் கரத்தை நீட்டி அவரிடமிருந்த கோப்பையை வாங்கிக் கொண்டார் கிரிவாசன்.

“நைட்டுக்கு என்னச் சாப்பாடு செய்யப் போற?” என்று அவரிடம் வினவவும்,

“இட்லி சுடலாம்ன்னு இருக்கேன் ங்க” என்ற தனது மனைவியிடம்,

“ஓஹ்! எனக்குத் தோசையைச் சுட்டு ஹாட் பாக்ஸில் வச்சிரு. நான் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறி விட்டார் கிரிவாசன்.

“சரிங்க” என்றார் மீனா.

“அதுக்குத் தொட்டுக்கச் சாம்பார் வை” என்று அடுத்தக் கட்டளையைப் பிறப்பித்தார் அவரது கணவர்.

“ம்ம். சரி” என்று அதற்கும் சம்மதம் தெரிவிக்கவும்,

“அது தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே! அப்பறம் எதுக்கு இங்கே நிற்கிற? டீ குடிச்சதும் நானே தம்ளரைக் கொண்டு வந்து வச்சிடறேன். நீ இங்கேயிருந்து போ” என்று அவர் சொல்லவும்,

அடுத்த நிமிடத்தில் அவ்விடத்தை விட்டு நகர்ந்து வந்தவரோ,

உணவைப் பற்றிய சாதாரணமானப் பேச்சு வார்த்தை, அதுவும் சில நிமிடங்களில் முடிந்து விட்டிருக்க வேண்டியது. ஆனால், அதை இவ்வளவு ஜவ்வாக இழுத்துப் பேசக் காரணம் என்ன? என்ற தன்னுடைய சந்தேகத்தை மகள்களிடம் பகிர்ந்து கொண்டார் மீனா.

“உங்க அப்பா என்னடி இப்படி நடந்துக்கிறார்? எனக்கு ஒன்னுமே புரியலை” என்றவரிடம்,

“அவரைத் தனிமை வாட்டி எடுக்க ஆரம்பிச்சிருச்சு ம்மா. முதல்ல எல்லாம் நாம ஏதாவது ஒரு விஷயத்துக்காக அவர்கிட்ட போய்ப் பர்மிஷன் கேட்டுட்டு இருப்போம். அப்பறம், அவர் உங்க கூடச் சண்டை போட்டால் எங்களைச் சமைக்கச் சொல்லுவார். ஆனால், இப்போ இதெல்லாம் நடக்கிறது இல்லையே? அதான், அவருக்குத் தான் வீட்டிலேயே தனியாக இருக்கிற மாதிரியும், நாம அவரை அப்படி ஒதுக்கி வைக்கிற மாதிரியும் ஃபீல் பண்ணிட்டு இருக்கிறார்! அதனால் தான், உங்களைக் கூப்பிட்டுப் பேச முடியாததால், நீங்களா போய் ஏதாவது கேட்டால் உங்களை ரொம்ப நேரம் அவர்கிட்டே நின்னுப் பேச வச்சிட்டு அனுப்பிட்டு இருக்கிறார் போல!” என்று தன்னுடைய தந்தையைப் பற்றிச் சரியாக அனுமானித்துக் கூறினாள் யக்ஷித்ரா.

“அப்படியா?” என்று மகளிடம் ஆச்சரியத்துடன் வினவியவரோ,

தன் கணவன் அவ்வாறெல்லாம் செய்யக் கூடிய ஆள் எல்லாம் இல்லை என்று இப்போது வரை எண்ணி இருந்தார் மீனா.

ஆனால், இப்போது கொஞ்ச நாட்களாகவே கிரிவாசனின் நடவடிக்கைகளைக் கவனிக்கும் போது மகள் சொன்னது உண்மையாகத் தான் இருக்கக் கூடும் என்பதை முழுக்க முழுக்க நம்பினார் அவளது அன்னை.

அவரது இளைய மகளும் கூட,“ஆமாம் மா. எனக்கும் அக்கா சொல்ற மாதிரி தான் இருக்கும்ன்னுத் தோனுது” என்று தன் தமக்கையின் பேச்சை ஆமோதித்துக் கூறவும்,

“அப்போ இன்னும் கொஞ்ச நாளில் அவர் செஞ்சது எல்லாம் தப்புன்னுப் புரிஞ்சிக்கிட்டு நம்மகிட்ட அதைப் பத்திப் பேசுவாருல்ல?” என்று தன் இரு மகள்களிடமும் கேட்டார் மீனா.

“அதுக்கு எல்லாம் வாய்ப்புக் கம்மி தான் ம்மா! நீங்க அப்படியெல்லாம் கனவு கண்டுட்டு இருக்காதீங்க” என்று அவருக்கு அறிவுறுத்தினார்கள் இருவரும்.

ஏனெனில், அவர்கள் மூவரால் இன்று வரையிலும் கிரிவாசனைப் பற்றிய ஒரு நிலையான புரிதலுக்கு வரவே முடியவில்லை. அப்படியிருக்கும் போது, இப்படி அவர் மீது வீணாக நம்பிக்கை வைக்க வேண்டாமென்று தாயிடம் கேட்டுக் கொண்டனர் யக்ஷித்ரா மற்றும் யாதவி.

அவர்களது அறிவுரையின்படியே நடந்து கொள்ள முடிவெடுத்து விட்டார் மீனா.

அதைப் போலவே, தனது கணவரிடம் அதிகப் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி இருந்தாலும் கூட உணவு மற்றும் இன்னபிற வீட்டுப் பொருட்களைப் பற்றிய உரையாடலின் போது அவர்களுடைய சம்பாஷணையின் கால் அளவு நீளமாகிக் கொண்டே போகிறது என்பதை அவரும் புரிந்து கொண்டார்.

ஆனால், அதற்கான விளக்கத்தை அவரிடம் கேட்டறிந்து கொள்ள மீனாவிற்கு விருப்பமில்லை. அதனால், கிரிவாசனாகவே உண்மையைக் கூறட்டும் என்று விட்டு விட்டார்.

அதற்குப் பிறகான தினங்களில், தங்களுடைய பிரிவு உபச்சார விழாவிற்கான நாள் வந்து விட்டிருந்ததால், அதற்கு முந்தைய நாளில்,”நீ என்னக் கலர் சுடிதார் போடப் போற நிவி?” என்று தன் தோழியிடம் வினவினாள் யக்ஷித்ரா.

“உன்னோட பாவாடை, தாவணியோட கலரில் தான் நானும் சுடிதார் போடப் போறேன்” என்றுரைத்தாள் நிவேதிதா.

“ஹேய்! சூப்பர்! நான் கூட நீ தாவணி போடாததுக்கு ஃபீல் செய்துட்டு இருந்தேன். இப்போ தான் சந்தோஷமாக இருக்கு” என்றவளிடம்,

“அதைத் தான் நானும் நினைச்சுட்டு இப்படியொரு ஐடியா வச்சிருக்கேன்”

“அப்போ நாம ரெண்டு பேரும் ஒரே கலர் டிரெஸ் தான் போடப் போறோம்! ஹைய்யா ஜாலி!”

அதன் பிறகு, அவர்களுக்கானப் பிரிவு உபச்சார விழா நடக்கப் போகும் நேரத்தை அவர்களுக்குத் தெரிவித்தார் வகுப்பு ஆசிரியை.

அதைக் கேட்டவுடன்,”எப்பவுமே ஃபங்க்ஷன் சாயந்தரம் தான் நடக்கும்னுத் தெரியும். ஆனால் இவ்வளவு லேட் ஆக இருக்கும்னு நினைக்கலையே! எங்க வீட்டில் விடுவாங்களான்னு வேற தெரியலை” என்றாள் யக்ஷித்ரா.

“அடிப்பாவி! நீ என்னத் திடீர்னு இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்ற? நீ ஃபங்க்ஷனுக்கு வரனும்னு நான் குட்டிக்கரணம் எல்லாம் போட்டு என்னென்ன வேலைப் பார்த்து வச்சேன்! நீ என்னடான்னா இப்படி சொல்லிட்டு இருக்கிற!” என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அவளிடம் அதிர்ச்சியுடன் கூறினாள் நிவேதிதா.

அவளைப் பரிதாபத்துடன் பார்த்தவளோ,”சாரி நிவி. எங்க வீட்டு நிலவரத்தைப் பத்தித் தான் உனக்கு நல்லா தெரியுமே? அதான், என்னை ஃபங்க்ஷனுக்கு அனுப்புவாங்களா, மாட்டாங்களான்னுத் தெரியாமல் முழிச்சிட்டு இருக்கேன்” என்று உரைத்தாள் அவளது நண்பி.

“ஊஃப்! இதுக்கு மேல எதுவும் பண்ணவும் முடியாது, சொல்லவும் முடியாது யக்ஷி. இனிமேல் எல்லாமே உன் சாமர்த்தியம் தான்! உன் வீட்டுக்கு வந்து நான் பர்மிஷன் கேட்கவும் முடியாது!” என்று அவளிடம் விழுந்த முகத்துடன் கூறி விட்டுக் கையை விரித்த தோழியிடம்,

“நீ எனக்காக நிறைய செய்துட்ட நிவி. இதுக்கப்புறம் என்னால் முடிஞ்சதை நான் பண்ணப் பார்க்கிறேன்” என அவளுக்கு நம்பிக்கை அளித்து விட்டு,

அதன் பின்னர், தன்னுடைய வீட்டிற்குச் சென்று தங்களுக்காக நடத்தப்படும் பிரிவு உபச்சார விழாவிற்குச் சொல்லி இருக்கும் நேரத்தை முதலில் தன் தாய் மற்றும் தங்கையிடம் தெரிவித்திருந்தாள் யக்ஷித்ரா.

அவளது அன்னை மீனாவின் முதல் கேள்வியே,”ஃபங்க்ஷன் ஆரம்பிக்கிற நேரமே ஆறு மணியா? அப்போ, முடியிறது எப்போவா இருக்கும்? அதைச் சொல்லாமல் விட்டு இருக்காங்களே?” என்பதாகத் தான் இருந்தது.

“அது எப்போ முடியும்னு அவங்களுக்கே தெரியாதாம் மா! அதான்” என்று அவரிடம் கெஞ்சும் குரலில் சொன்னாள் அவரது மூத்த மகள்.

“சரி. உன்னோட சேஃப்டி எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதனால், நீ இதை உங்க அப்பாகிட்டே சொன்னா என்னப் பதில் கொடுப்பார்ன்னு உனக்கே தெரியும்” என்று அவளிடம் தீர்க்கமாக கூறினார் மீனா.

“ம்மா!” என்று அதீத சத்தத்தை வெளிப்படுத்தினாள் யக்ஷித்ரா.

“என்னடி? அந்த ஃபங்க்ஷன் முடியிறதுக்கு ஒன்பது மணிக்கு மேலே ஆகிடுச்சுன்னா என்னப் பண்ணுவ?” என்று அவளிடம் வினவவும்,

“அவரை வந்து என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க ம்மா. இல்லைன்னா, நீங்க வாங்க” என்று அவரிடம் சொல்லிய மகளைப் பார்த்து,”அதுவும் கரெக்ட் தான். நாங்க உன்னை ஏன் போகக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளே இருக்க வைக்கனும்? இதைப் பத்தி அவர்கிட்டே பேசுறேன்” என்று மகளிடம் தெரிவித்தவர்,

இதைத் தன் கணவரிடம் சொல்லி விட்டு அவரது பதிலிற்காக காத்துக் கொண்டு நின்றிருந்தார் மீனா.

அவருக்குத், தான் எந்தப் பதிலையும் கொடுக்காமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார் கிரிவாசன்.

- தொடரும்
 
Top