• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

18. விலோசன விந்தைகள்

Active member
Messages
131
Reaction score
89
Points
28
மிகவும் தாமதமாகி விட்டதால் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே! இனி தடையின்றி அத்தியாயங்கள் பதிவிடப்படும் 🙏

🌸🌸🌸🌸


அவ்வாறு உறுதி பூண்ட பிறகு, மீனாவும் மகள்களுடைய மன அமைதிக்கு வெகுவாக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.


ஆனால், அவரது இந்த முன்னேற்பாடுகள் தேவையற்றது என்பதைப் போல, யக்ஷித்ராவையும், யாதவியையும் அழைக்கவோ, திட்டவோ செய்யாமல், மௌனப் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தார் கிரிவாசன்.

அவரது மனதில் என்ன இருக்கிறது? எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறார் என்பதை மனைவி இவருக்கே ஒன்றும் விளங்கவில்லை.

அவருக்கு இருந்த ஆறுதல், மூத்தவளும், சிறியவளும் இப்போது நிம்மதியுடன் வளைய வருகின்றனர் என்பதுவே!

ஒருநாள், அந்த வீட்டில் நிலவிய அமைதியைக் கலைத்தார் கிரிவாசன்.

"உன் மகளுக்கு ட்வெல்த் பப்ளிக் எக்ஸாம் நெருங்கிட்டு இருக்கு, ஹோம் டெஸ்ட் எழுதுவாங்களா? இல்லை, இப்படியே ரூமில் அடைஞ்சுக்குவாங்களா?" என்று எள்ளலாக வினவினார் மனைவியிடம்.

"அதெல்லாம் எழுதுவா! நீங்க கொஸ்டீன் செட் பண்ணுங்க" என்று கணவனிடம் உறுதியாக கூறினார் மீனா.

அவரது சுபாவமும் மாறிப் போய் இருப்பதைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிய விட்டு, மாற்ற வேண்டும் என்று நினைத்து இருக்கிறார். அதனால் தான், மகளின் படிப்பை முதலில் தனக்கான ஆயுதமாக எடுத்துக் கொண்டார் கிரிவாசன்.

அவரிடம் உறுதியாகப் பதிலளித்து விட்டு வந்த மீனாவோ, மூத்த மகளிடம்,"நான் வேற அவருக்கு வாக்குக் கொடுத்துட்டேன் யக்ஷி! உன்னால் முடியும் தான?" என்று கலக்கமாக வினவினார்.

"படிப்பு விஷயம் தான ம்மா? நான் கண்டிப்பாக டெஸ்ட் எழுதுவேன்" என்று அன்னைக்குப் பதிலளித்தவள், தங்கையிடமும் அவ்வாறே மொழிந்து விட்டுத், தனது புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விட்டாள் யக்ஷித்ரா.

இன்னும் சில நாட்களில், சிறப்பு வகுப்புகள் முடியப் போகிறது. அப்போதைய தினங்களில், தனக்குள் நிகழ்ந்த மன அழுத்தங்கள் மற்றும் தொய்வுகளை மறந்தும் தோழியிடம் வாய் திறந்து உரைக்கவில்லை அவள்.

இவளது முகம் தீவிரமாக இருப்பதைப் பார்த்து,”என்னாச்சு யக்ஷி? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிற?” என்று தன்னிடம் வினவிய நிவேதிதாவை ஏறிட்டவளோ,

“ஒன்னும் இல்லையே” எனக் கூறிப் புன்னகைக்க முயற்சி செய்தாள் யக்ஷித்ரா.

“ஓஹ்! அது தான், உன் முகம் சோகமாக இருக்கா?” என்று கேட்டு முறைத்தாள் அவளது தோழி.

“ப்ச்! பப்ளிக் எக்ஸாம் வரப் போகுது யக்ஷி. இந்த நேரத்தில் உனக்கு ஏதாவது பிரச்சினை வந்துட்டா அப்பறம் உன்னோட கவனம் சிதறிடும். எங்கிட்ட உன்னோட பிரச்சினையைச் சொன்னால் ஏதாவது தீர்வு கண்டுபிடிக்கலாம்ன்னு தான் கேட்கிறேன். எதுவாக இருந்தாலும் எங்கிட்டே தயங்காமல் சொல்லு” என்று அவளிடம் கனிவாய்க் கேட்டாள் நிவேதிதா.

அவளுடன் சேர்ந்து படித்தக் கடந்த நாட்களில் எல்லாம், தன் சொந்த விஷயங்களைப் பற்றித் தோழியிடம் மூச்சுக் கூட விடவில்லை.

ஆனால், இப்பொழுது தன் மனக் குமுறல்களை அவளிடம் இறக்கி வைக்கத் தோன்றியதால், தனது விழிகளில் இருந்து வழியத் தொடங்கிய கண்ணீரை மெதுவாகத் துடைத்து விட்டவளோ,


எந்தத் தடையும், தயக்கமும் இன்றி, தன்னுடைய இளம் வயதில் இருந்து இப்போது வரை, வீட்டில் நிகழும் விசித்திரமான நிகழ்ச்சிகள், அதற்குக் காரணமாக இருக்கும் தன் தந்தையைப் பற்றியும் அவளிடம் ஒப்புவித்து முடித்தாள் யக்ஷித்ரா.

அதைக் கேட்கக் கேட்கத் தன்னுடைய முக பாவனைகளை நொடிக்கொரு முறை மாற்றிக் கொண்டிருந்தாள் நிவேதிதா.

“உன் முகத்தைப் பார்த்தாலே நீ இதைக் கேட்டதும் அதிர்ச்சி ஆகிட்டேன்னுத் தெரியுது” என்ற தோழியிடம்,

“இவ்வளவு வருஷமாக எப்படி அவர் கூட இருக்கீங்க?” என்ற கேள்வியை அவளிடம் கேட்கவும்,

அதற்கு விரக்தியாகப் புன்னகைத்து விட்டு,”நாங்களாவது பரவாயில்லை. நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து தான் இப்படியான கொடுமையை அனுபவிக்கிறோம்! ஆனால், எங்களோட அம்மா, அவங்களுக்குக் கல்யாணம் ஆனதுல இருந்து இதையெல்லாம் சகிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க!” என்று அவளுக்குப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

“ம்ஹ்ம். ஆமாம். அவங்க ரொம்பவே பாவம் மா!” என்று அவளது தாயின் நிலையை நினைத்து சில மணித்துளிகள் வருத்தப்பட்டாள் நிவேதிதா.

அதற்குள் பெருமூச்செறிந்த அவளது தோழியோ,”என்னப் பண்றது? இதையெல்லாம் மாத்தவே முடியாது” என்று விரக்தியுடன் உரைத்தவளிடம்,

“அதெப்படி மாத்த முடியாமல் போகும்? உங்க அம்மாவால் முடியாமல் போனாலும் நீயும், உன் தங்கச்சியும் நினைச்சா மாத்தலாம்!” என்றவளை வியப்புடன் பார்த்து,

“நாங்க எப்படி? என்ன செஞ்சிட முடியும்?” என்று வினவினாள் யக்ஷித்ரா.

“நீங்க தான் பண்ணனும். நீ பண்றது சந்தேகம் தான்! ஆனால், யாதவியால் கண்டிப்பாக முடியும்!” என்று அவளிடம் உறுதியாக கூறினாள் நிவேதிதா.

“புரியுற மாதிரி சொல்லு!” என்றவளிடம்,

“உங்க அப்பாவோட பேச்சும், நடவடிக்கைகளும் தானே உங்களை ரொம்ப காயப்படுத்துது?” எனவும்,

“ம்ம். ஆமா” என்று அதை ஆமோதித்தாள் யக்ஷித்ரா.

“நீ அதையெல்லாம் காதிலேயே வாங்கிக்காமல், அவருக்குப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துரு. அப்பறம், அவரே அலுத்துப் போய் விட்டுடுவார்” என்று அவளுக்கு யோசனை சொன்னாள் நிவேதிதா.

“இப்போ கொஞ்ச நாளாக அப்படித் தான் நடந்துட்டு இருக்கேன். அம்மாவுக்கும் என்ன நடந்தாலும் பார்த்திடலாம்ன்னு ஒரு எண்ணம் வந்துருச்சு. அதனால், அவங்களும் இனிமேல் விட்டுக் கொடுக்கிற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டாங்க!”

“அப்பறம் என்ன? நீயும், அம்மாவும் அமைதியாக இருந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவியுங்க. யாதவியை மட்டும் உங்க அப்பாவுக்குப் பதில் கொடுத்துக்கிட்டே இருக்கச் சொல்லுங்க” என்று தோழியிடம் கூறவும்,


யக்ஷித்ரா,“அவளுக்கு அப்படியெல்லாம் பேச வருமான்னுத் தெரியலையே”

“அவளுக்கு மட்டும் தான், அப்படிப் பேச வரும்ன்னு தான், யாதவிக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கச் சொன்னேன்” என்றாள் நிவேதிதா.

அதைக் கேட்டவுடன்,“ஓஹ்ஹோ!” என்று கூறிக் கொண்டாள்.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிவேதிதா, தனது சக தோழியின் சிக்கலான நிலைக்கு எவ்வாறு தீர்வு கூற முடியும் என்ற ஐயம் எழலாம்? அதுவும் நியாயம் தான்!

ஆனால், தன் வீட்டிலும் இப்படி சில சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது என்பதாலேயே, அவளால் தனது தோழிக்கு இப்படியானதொரு யோசனையைக் கூற முடிந்தது.

ஆம்! நிவேதிதாவும் தன் வாழ்வில், தன்னுடைய சொந்த தந்தையின் வாயிலாக இந்த மாதிரியான நிகழ்வுகளைச் சந்தித்து விட்டுத் தான் வந்திருக்கிறாள்!

ஆனால், அதை வெளிப்படையாகத் தோழியிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்து விட்டாள்.

தன் வாழ்க்கையில் மட்டுமே இப்படி நடக்கிறது என்று உள்ளுக்குள் இறுகி, குறுகிப் போயிருந்தவளோ,

இப்பொழுது தன்னுடைய தோழியும் இந்தக் கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்று அவளுடன் உரையாடிய பின்னர் தெரிய வந்ததும் மனமுடைந்து போனவளோ,

அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுத் தான் இந்தச் சமயத்தில் யக்ஷித்ராவிற்கு உறுதுணையாக இருந்து, தனக்குத் தெரிந்த, தானும் செய்து பார்த்து, வெற்றி கண்டவற்றை அவளுக்குப் போதித்தாள் நிவேதிதா.

யக்ஷித்ரா,“நீ எப்படி இந்தளவுக்குத் தெளிவாக ஐடியா கொடுக்கிற?” என்று தன்னிடம் கேட்கவும்,

உடனே தன்னைச் சுதாரித்துக் கொண்டு,”அஃது…! எனக்கு சைக்காலஜி படிப்பிலும் ஆர்வம் அதிகம். அது சம்பந்தமான புக்ஸ் படிப்பேன். அதான், இப்படியெல்லாம் எனக்கு ஐடியா வருது!” என்று கூறிச் சமாளித்தாள்.

“அப்படியா?” என்றாளே தவிர, அவளிடம் வேறெதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள விழையவில்லை யக்ஷித்ரா.

ஆனால், நம்முடன் சிரித்துப் பேசிக் கொண்டு, இவ்வளவு வருடங்களாகத் தோழியாக இருக்கும் நிவேதிதாவிற்கும் யாரிடமும் சொல்ல முடியாத ஒரு கதை ஒளிந்து கொண்டு இருக்கிறது எனவும்,


அதை அவள் தன்னிடம் கூறுவதற்கு அவளது மனதில் தெம்பு இல்லை. இப்போது தன்னுடைய கதையைக் கேட்டறிந்து பிறகு, அவளது காயமும் துளிர்த்து எழுந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டவளோ,

“உனக்குள்ளேயும் ஏதோ ஒரு காயமும், கஷ்டமும் இருக்குன்னு எனக்கு இப்போ தான் புரியுது நிவி. எனக்கு ஆறுதலும், தீர்வும் சொல்லப் போய் உன்னோட கஷ்டத்தை மறுபடியும் நீ நினைச்சுப் பார்த்துக் கஷ்டப்பட வேண்டியதாகப் போச்சு! என்னை மன்னிச்சிடு” என்று அவளிடம் மன்னிப்பும் கூடக் கேட்டு விட்டாள் யக்ஷித்ரா.

“அதையெல்லாம் நான் கடந்து வந்துட்டேன். உன்னையும் அதைத் தான் பண்ணச் சொல்றேன். அதுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்” என்று அவளைத் தேற்றினாள் நிவேதிதா.

“சரி. செஞ்சுப் பார்த்துடுவோம்!” என்று நேர்மறையானப் புன்னகையை உதிர்த்தாள்.

அதற்குப் பிறகு, அவளுடைய கவலைகளையும், தனது பாரங்களையும் ஒதுக்கி வைத்து விட்டுப் படிப்பைப் பற்றிய பேச்சில் மூழ்கி விட்டனர் இருவரும்.

🌸🌸🌸🌸

“நிவேதிதா ஒரு நல்ல ஃப்ரண்ட் ம்மா. எல்லாருக்கும் இப்படிப்பட்ட ஃப்ரண்ட் கிடைக்க மாட்டாங்க. ஆனால், உனக்குக் கிடைச்சிருக்காங்க! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவங்களை எனக்கும் அறிமுகப்படுத்தி வை. நான் கண்டிப்பாகத் தாங்க்ஸ் சொல்லனும்” என்று தன் மனைவியிடம் கூறினான் அற்புதன்.

“ஆமாங்க. நான் அவளை எப்பவும் மறக்க மாட்டேன்” என்றாள் யக்ஷித்ரா.

“அவங்களுக்கு நடந்த கஷ்டத்தை உன்கிட்ட சொன்னாங்களா?” என்று கேட்ட கணவனிடம்,

“அப்போ இருந்து இப்போ வரைக்கும் அதைப் பத்தி அவ எதுவுமே மூச்சே விடலை ங்க! நானும் நிறைய தடவை கேட்டுப் பார்த்துட்டேன். ஆனாலும், அவள் சொல்றதுக்குத் தயாராக இல்லாததால் அந்த விஷயத்தை அப்படியே விட்டாச்சு” என்று அவனிடம் கூறி விட்டாள்.

“இப்போ அவங்களோட வாழ்க்கை நல்லா இருக்குல்ல?” என்றவனிடம்,

“ம்ஹ்ம். நிவியோட ஹஸ்பெண்ட் அவளை நல்லா பார்த்துக்கிறார் ங்க” எனச் சந்தோஷமாக உரைத்தாள் யக்ஷித்ரா.


- தொடரும்
 
Top