• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 26
“வேதா, எப்படி இருக்க டா?” முருகையா வினவ, அவரருகே சென்றவள், சின்ன சிரிப்புடன் பதிலளித்தாள். அன்பழகன், தான் நின்ற இடத்திலிருந்து நகரவே இல்லை. எப்போதும் போல அலட்சியமான பாவனையைத் தாங்கியிருந்தான்.
சில நிமிடங்கள் பேச்சுக் கடக்கவும், சிறைச்சாலையின் அந்தச் சிறிய வாயில் திறக்கப்பட, சற்றே ஒல்லியாய் நெடுநெடுவென வளர்ந்திருந்த முதியவர் ஒருவர் வந்தார். முகம் முழுவதையும் தாடி மறைத்திருக்க, கண்களில் மட்டும் சிறிதான தேடல். தலையெல்லாம் நரைத்து, தோள் சுருங்கிப் போயிருந்தார் மனிதர்.
அவரைக் கண்டதும், தன்னிலையை மறந்த வேதவள்ளி, “அப்பா...” என அழுகையுடன் ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டாள்.
“ப்பா, ஏன்ப்பா என்னை விட்டுட்டுப் போனீங்க...” என்றவள் தேம்பிக்கொண்டே தந்தையை இறுக அணைக்க, அவளுடைய மேடிட்ட வயிறு அதை தடை செய்திருந்தது.
அவர் சோனைமுத்து, வேதவள்ளியின் தந்தை. தன்னை ஆரத்தழுவிய மகளைப் பார்த்தவருக்கு விழிகள் கலங்கிப் போனது. சிறுமியாய் தனியே விட்டுச்சென்ற மகள் இப்போது குமரியாகி இருந்தாள். இல்லையில்லை, தாயாகப் போகிறாள். அவளது வயிற்றைப் பார்த்த மனிதரின் பார்வை கழுத்திலிருந்த மாங்கல்யத்தில் நிலைத்தன. நடுங்கிய கரங்களை எடுத்து மகள் தலையைத் தடவிய மனிதருக்குப் பேச்சே வரவில்லை. இத்தனை நாட்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தது எல்லாம் இதோ, தன்னைக் கட்டியணைத்து கண்ணீர் உகுக்கும் இந்த ஜீவனுக்காகத்தானே!
மகள் எப்படியிருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என ஒவ்வொரு நொடி சிந்தைனையும் சிந்தையும் மகளைத்தானே தூக்கி சுமக்கும்.

“அப்பா, உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். ஏன்ப்பா என்னை ஒருதடவைக் கூட நீங்க பார்க்கவிடலை? சொல்லுங்க...” மகள் அழுதுக்கொண்டே வினவ, என்னக் கூறுவார் மனிதர்.‌ லேசாகப் புன்னகைத்தார்.

தன்னைச் சிறையிலிருக்கும் கோலத்தில் அவள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே கடந்த எட்டு வருடங்களாக மகளைத் தவிர்த்துவிட்டிருந்தார்.
நெஞ்சில் சுமக்க முடியாத பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தார் சோனைமுத்து. வேதவள்ளியைக் காணவும், அழையா விருந்தாளியாக மனைவி நினைவுகள் கண்முன்னே வர, நெஞ்சம் அழுத்தியது அவருக்கு.
ஏதேதோ பேசி சண்டையிட்ட மகளிடம் பேச்சு வராது, கையை மட்டும் அழுத்திப்பிடித்து பதில் கூறிக்கொண்டிருந்தார் சோனைமுத்து. அவளுக்கு வலப்புறம் நின்ற ஆடவனைப் பார்த்தவருக்கு புரிந்தது அது அவளுடைய கணவன் என்று.
முருகையா நின்றிருப்பதைப் பார்த்தவர், “ரொம்ப நன்றி முருகா, எனக்கு நீ செஞ்ச உதவிக்கு இந்த ஒரு வார்த்தையெல்லாம் போதாது. என் உயிரையே என்கிட்ட பத்திரமா கொடுத்திருக்க...” என்று நண்பனது கையைப் பிடிக்கவும், முருகையாவிற்கும் லேசாய் விழிகள் கலங்கின.
“பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத சோனை, என் மகளை நான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு எதுக்கு நீ நன்றியெல்லாம் சொல்லிட்டு இருக்க?” என உரிமையாய் கோபம் கொண்டார் முருகையா.
சோனைமுத்துவிற்கும் முகத்தில் புன்னகை, அவரது விழிகளில் நீண்ட நாட்கள் கழித்து ஜீவன் வந்திருந்தது.
“சரி வா சோனை, நம்ம வீட்டுக்குப் போகலாம்...” முருகையா அழைக்க, சோனைமுத்து பதில் கூறும்முன் இடை புகுந்துவிட்டாள் வேதவள்ளி.
“பெரிப்பா, நான் அப்பா அப்பாவை என்கூட கூட்டீட்டு போறேனே...” என்றவளுக்குத் தெரியும், அங்கே சென்றால் அம்சவேணியின் குத்தல் பேச்சுகளைத் தன் தந்தை கேட்க நேரிடும் என்று.
முருகையாவும் சில நொடிகள் யோசித்தவர், “சரி டா, இன்னொரு நாள் நம்ம வீட்டுக்கு வரட்டும்...” என்றவர், நண்பரிடம் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு விடை பெற்றார். வரும்போது அன்பழகன் முன்பதிவு செய்திருந்த அதே மகிழுந்தில் மூவரும் புறப்பட்டனர்.
அன்பழகன் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர, தந்தையும் மகளும் பின்புறம் அமர்ந்துகொண்டனர். வேதவள்ளிதான் தந்தையின் கரத்தை விடவேயில்லையே, தற்சமயம் அன்பழகன் அவளுடைய சிந்தையில் பின்னோக்கி நகர்ந்திருந்தான்.
“ப்பா, ஜெயில்ல ரொம்ப கஷ்டப்பட்டீங்களா பா? ஏன் இப்படி மெலிஞ்சு போய் இருக்கீங்க? இந்த தாடி மீசை ஏன் இவ்வளோ இருக்கு?” அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட மகளை வாஞ்சையாய்ப் பார்த்தார் சோனைமுத்து. இத்தனை நாட்கள் இந்தக் குரலை ஸ்பரிசிக்க, உடனிருந்து அவளைக் கவனித்துக்கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என அவர் மனம் வெதும்பியது.
“ரொம்ப கஷ்டம் எல்லாம் இல்லை மா...” பொய் எனத் தெரிந்தும் மகளுக்காகப் பொய்யுரைத்தார் தந்தை. நடந்த நிகழ்வை மாற்ற முடியாது. தன்னை, தன் நிலைமையைப் பார்த்து மகள் வருந்தக் கூடாது என்று தானே இத்தனை நாட்கள் அவளைத் தவிர்த்திருந்தார். மேலும் அவரிடம் பேசியபடி வந்த வேதவள்ளி அன்பழகனுக்கு முற்றிலும் புதிதானவள். தன்னையே அதட்டி உருட்டும் மனைவி, இப்போது குழந்தையாய் நடந்து கொள்கிறாளே என அத்தனை வியப்பு ஆடவனுக்கு. எதுவும் கூறாது அவர்கள் உரையாடலைக் கேட்ட வண்ணமிருந்தான் அவன்.
“அண்ணா, அந்த பார்பர் ஷாப்ல வண்டியை நிறுத்துங்க...” அன்பழகன் ஓட்டுநரிடம் கூற, அது அவர்கள் இருவரது செவியில் கூட விழவில்லை.
மகிழுந்து ஓரிடத்தில் அசையாது நின்றதும்தான் நிகழ்வுக்கு வந்த வேதவள்ளி கணவனைப் பார்க்க, அவன் பார்வை முடி திருத்தும் கடையை நோக்கியது. அதைப் புரிந்ததும் அவளது முகத்தின் புன்னகை பெரிதாய் நீண்டது.
“அப்பா, வாங்கப்பா. பழைய படி உங்களோட முடியை மாத்திடலாம். இந்த பெரிய தாடி, மீசையெல்லாம் இருக்கும்போது நீங்க நல்லாவே இல்லை...” சோனைமுத்து கையை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
“அண்ணா வெயிட் பண்ணுங்க...” என்று ஓட்டுநரிடம் கூறிய அன்பழகன் தானும் உள்ளே நுழைந்தான்.
தனது அலைபேசியின் பின்புறம் கடவுச்சீட்டு அளவிருந்த புகைப்படத்தை எடுத்து முடி திருத்துபவரிடம் காண்பித்த வேதவள்ளி, “அண்ணா, இந்த மாதிரி அப்பாவுக்கு வெட்டி விடுங்க...” என்றாள்.
“வேதா, அதெல்லாம் வேண்டாம் மா...” சோனைமுத்து சங்கடப்பட, “ப்ம்ச்... ப்பா, உங்களுக்கொன்னும் தெரியாது. அமைதியா இருங்க...” என அவரை அதட்டி உருட்டி அமரவைத்தவள், முடி திருத்துபவரைப் பார்க்க, அவர் வேதா கொடுத்தப் புகைப்படத்திலிருந்தது போல சோனைமுத்துவின் முடியை வெட்டினார்.
“தாடியை ஃபுல்லா எடுத்துடுங்க அண்ணா, மீசை இருக்கட்டும். அதான் அப்பாவுக்கு நல்லா இருக்கும்...” ஆசையாய்க் கூறிய மகளைப் பார்த்தார் சோதனைமுத்து. மகள் தன்னை எத்தனை தேடியிருக்கிறாள் என அவருக்குப் புரிந்தே இருந்தது. அவள் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தும், தன்னிடம் எதையும் பகிரவில்லை என அவருக்குத் தோன்றியது. கண்டிப்பாக கூறுவாள் என நினைத்துக் கொண்டார்.
முடியைத் திருத்தி முடிய, அருகிலிருந்த கடைக்குச் சென்றிருந்த அன்பழகன் வந்துவிட்டிருந்தான். அவனது கையில் சில நெகிழிப்பைகள் இருந்தன. சோனை முத்துவிற்கு புதிதாய் சில உடைகள் வாங்கி வந்திருந்தான். முடி திருத்துபவரிடம் அன்பு பணத்தைக் கொடுக்க, வேதா எதுவும் கூறவில்லை. தந்தையோடு அளவளாவிக் கொண்டிருந்தவள், “ப்பா, நம்ம வீட்டுக்குப் போகலாமா பா? நான் வீட்டை சுத்தம் பண்ண சொல்லிட்டேன். என்ன சொல்றீங்க?” மகள் கெஞ்சும் பாவனையுடன் கேட்க, சோனைமுத்துவால் மறுக்க முடியவில்லை. அங்கு சென்றால் நடந்த நிகழ்வின் துக்கம் தொண்டையைக் கவ்வும் எனத் தெரிந்தும் தலையை அசைத்தார் மனிதர்.
“அண்ணா, இந்த அட்ரஸூக்குப் போங்க...” ஓட்டுநரிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள் அவள். அன்பழகன் வெறும் பார்வையாளன் மட்டுமே அங்கு.
விருதுநகருக்கும் மதுரைக்கும் இடையிலிருந்த பிரதான சாலையில் நுழைந்த மகிழுந்து, கிராமம் ஒன்றிற்குள் சென்று, ஒரு ஓட்டு வீட்டின் முன்பு நின்றது.
அந்தக் காலத்து வீடு அது. வீட்டின் இருபுறமும் திண்ணைகள் இருக்க, தாழ்வாரம் சற்றே இறங்கியிருக்கியிருந்தது. வீட்டு வாயிலுக்குச் சென்றதும் வேதவள்ளியின் விழிகளிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் மரணித்தது. தன் தாய் இறந்தத் துக்கம் கூடத் தாளாமல் இருந்த தன்னை, தந்தை முருகையா வீட்டில் விட்டுச்சென்ற நொடிகள் மனதில் வந்து ஊசலாடின. சோனைமுத்துவிற்கும் மனைவியின் நினைவில் கண்கள் பனித்தன.
தன் பையிலிருந்து திறவு கோலை எடுத்து வேதா கதவைத் திறந்து, “ப்பா, உள்ள வாங்க பா...” என அவரை அழைத்தவள், “வாங்க...” என கணவனையும் அழைத்தாள்.
‘பரவாயில்லை, உடன் ஒரு ஆள் வந்தது நினைவிருக்கிறது...’ என நினைத்து, உள்ளே நுழைந்தான் அன்பழகன். வீடு ஓரளவுக்கு சுத்தமாகவே இருந்தது.
உள்ளே நுழைந்ததும் தன், தாய் தந்தையுடன் தான் வாழ்ந்த நாட்களின் சந்தோஷங்களை மனம் மீட்ட, கசப்பான சம்பவங்களை மனதிற்கடியில் புதைத்தவள், பாயை விரித்தாள்.
எதுவும் பேசாது அப்படியே அமர்ந்துவிட்டார் சோனைமுத்து.
கூடத்தில் பெரிதாய் மாட்டப்பட்டிருந்த மனைவியின் புகைப்படத்தை சோனைமுத்து வேதனையுடன் காண, வேதவள்ளிக்கும் விழிகளிலிருந்து பொலபொலவென நீர் வழிந்தது.
“ப்பா, ஏன் ப்பா என்னை விட்டுட்டுப் போனீங்க? நீங்களும் இல்லாம அம்மாவும் இல்லாம அநாதை மாதிரி வாழ்ந்தேன் பா. ரொம்ப உங்களைத் தேடுனேன். டெய்லி வாசலையே பார்த்துட்டு இருப்பேன், இன்னைக்கு வருவீங்க, நாளைக்கு வருவீங்க, நாளன்னைக்கு வருவீங்கன்னு அவ்வளோ எதிர்பார்த்தேன். ஆனால் நீங்க வரவே இல்லை. ரொம்ப நாள் கழிச்சுதான் எனக்குப் புரிஞ்சது, நீங்க வர முடியாத தூரத்துல இருக்கீங்கன்னு. வயசு ஏற ஏற, புத்திக்கு உறைச்சது, சரி நானா பார்க்க வந்தப்போ கூட ஏன்ப்பா ஒரு தடவைகூட என்னை நீங்க பார்க்க சம்மதிக்கலை?” என்றவள் முகத்தை மூடித் தேம்பினாள். ஏனோ இத்தனை வருடமாக மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனைச் சுமைகளையும் தந்தையானவரிடம் இறக்கி வைக்கச் சொல்லி மனம் கெஞ்சியது.
தான் வாழ்ந்த வாழ்க்கையின் நாட்கள் கூட அத்தனை கனமாய் இல்லை பெண்ணுக்கு. அதை தன்னவரிடம் கூறும்போது மனதெல்லாம் சொல்லமுடியாத வலி, அதையெல்லாம் வார்த்தைகளில் கொட்டி தன்னுணர்வுகளை அவருக்கு உணர்த்த முயன்றாள். இந்தப் பொல்லாத நேசம் தன்னவர்களிடம் மட்டுமே கண்ணீராய் வெளிப்பட்டு சுக துக்கங்களைப் பகிரச் சொல்லித் தொலைக்கும்.
“என்னை மன்னிச்சிடு டா, இந்த அப்பாவை மன்னிசிடு டா... உன்னை தனியா விட்டுட்டுப் போக வேண்டிய சூழ்நிலை டா...” என்றவர் மகள் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட, அந்தக் கரத்தில் அப்படியே முகம் புதைத்தவளின் உடல் அழுகையில் குலுங்கியது. உதட்டைக் கடித்து அடக்க முயன்ற துக்கமெல்லாம் வார்த்தைகளில் வெளிப்பட்டன.
சோனை முத்துவின் கைகள் காய்ச்சுப் போய் இருக்க, “அப்பா, கையெல்லாம் என்னப்பா இப்படியிருக்கு? வலிக்குதா ப்பா? ரொம்ப கஷ்டப்பட்டீங்களா ஜெயில்ல? ஏன்ப்பா?” எனக் கேட்டு மீண்டும் கண்ணீரை உகுத்த மகளை மடியில் படுக்க வைத்தார் மனிதர்.
“எனக்கு ஒன்னும் இல்லை டா. உன்னைப் பார்த்ததும் எல்லாமே சரியா போச்சு...” என்றவரின் கரங்கள் மகளின் தலையை ஆதரவாகத் தடவ, அதைத் தன் கரத்துக்குள் பொதிந்தவள், “ப்பா, இனிமே என்னைத் தனியா விட்டுட்டு எங்கேயும் போய்டாதீங்க ப்பா. ப்ளீஸ் பா...” கெஞ்சிய மகளைப் பார்த்து நெஞ்சடைத்துப் போனது பெற்றவருக்கு.
“எங்கேயும் போக மாட்டேன் டா, நான் எங்கேயும் போக மாட்டேன்.‌ உன் கூடத்தான் இருப்பேன்...” என்றவரின் குரலில் வேதவள்ளி சற்று சமாதானம் அடைந்தாள். சிறிது நேரம் சோனைமுத்துவின் மடியில் படுத்திருந்தவள், நேரத்தைப் பார்க்க அது மதியத்தை தொட்டிருந்தது.‌
“ப்பா, டைமாச்சு... உங்களுக்குப் பசிக்குதா பா? சாப்பிட்டீங்களா? அதை நான் கேட்கவே இல்லை...” பதறி எழுந்தவளின் தோளைப் பிடித்து அமர்த்தியவர், “நீ சாப்பிட்டீயா மா?” என வினவினார்.
“இன்னும் இல்லைப்பா, உங்க கூட சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சேன். அதான் சாப்பிடலை. நீங்க குளிச்சுட்டு வாங்கப்பா, சேர்ந்து சாப்பிடுவோம்...” என்றவள், கணவன் வாங்கிக் கொடுத்த உடையை தந்தையிடம் நீட்டினாள். அவர் குளிக்கச் செல்ல, வெளியே எட்டிப்பார்த்தாள் வேதவள்ளி.
திண்ணையில் அமர்ந்திருந்தான் அன்பழகன்.‌ “ஏங்க, சாப்பாடு வாங்கீட்டு வாங்க...” என்று அவள் கூறவும் தலையை அசைத்து காலணிகளை அணிய, “ஏத்தா வேதா, எப்படியிருக்க? உன் அப்பன் வந்துட்டானா?” ஒரு முதிய பெண்மணி வீட்டிற்குள் நுழைய, அவரிடம் பதிலளித்தவாறே வீட்டிற்குள் சென்றாள் வேதா.
சில நிமிடங்கள் அந்தப் பெண்மணி அவளது வாழ்க்கையைப் பற்றி துழாவிக்கொண்டிருக்க, சோனைமுத்து வந்துவிட்டார். அவரிடமும் சிறிதுநேரம் பேசிவிட்டுத்தான் அந்தப் பெண் நகர்ந்தார். சென்று நீண்ட நேரம் கழித்தே திரும்பி வந்தான் அன்பழகன். அந்தக் கிராமத்தில் ஒரு கடையும் இல்லை, வெளியே பிரதான சாலைக்குச் சென்றே உணவு வாங்கி வந்தான்.
“ஏங்க வாங்க நீங்களும், ப்பா உட்காருங்க...” என்றழைத்த வேதா, தந்தையை அமர வைத்தாள்.
“இல்லை, எனக்குப் பசிக்கலை, நீங்க சாப்பிடுங்க...” என்ற அன்பழகனுக்கு, தான் அந்த இடத்தில் அந்நியமாகிப் போன உணர்வு.
“ப்ம்ச்... என்ன பசிக்கலை? காலையிலிருந்து நீங்க சாப்பிடலை, வாங்க...” மனைவி கொஞ்சம் அதட்ட, அமைதியாய் அசையாது நின்றிருந்தான் அன்பழகன். முகத்தைச் சுருக்கியவள், தான் உண்ண மறந்திருந்ததை நினைவு கூர்ந்தாள். உதட்டில் மெல்லிய புன்னகைப் படர்ந்தது.
“வாங்க, நானும் சாப்பிட்றேன்...” என்றவாறே அவனுடன் உண்ண அமர, இருவரும் சாப்பிடத் துவங்கினர். சோனைமுத்து அனைத்தையும் கவனித்தார்.
உண்டு முடிந்தததும் அசாத்திய அமைதி ஆட்கொண்டது. வேதாதான் தந்தை முகத்தைப் பார்ப்பதும், லேசாய் குற்ற உணர்வில் மருகுவதுமாய் அமர்ந்திருந்தாள். அவருக்குத் தெரியாது தன் வாழ்க்கையே தீர்மானித்த நிகழ்வை எப்படி அவரிடம் கூறிட முடியும் என்ற குற்ற குறுகுறுப்பு அவளிடம்.
ஒருவழியாய்த் திக்கித் திணறி, “ப்பா, இவர் அன்பழகன், என்னோட வீட்டுக்காரரு. உங்களோட மருமகன்...” என்று பெண் கூறவும், அன்பழகன் பார்வை நக்கலாக மனைவியைத் தொட்டது.
சோனைமுத்து அவனைப் பார்த்து லேசாய்ப் புன்னகைக்க, தலையை அசைத்தான் ஆடவன். இருவருக்கும் என்ன பேசுவதென தெரியவில்லை. வேதவள்ளியும் தந்தை முகத்தைப் படபடப்புடன் பார்த்திருந்தாள். நெற்றியில் லேசாய் வியர்வை அரும்ப, பெண்ணின் வதனத்தைப் பார்த்த தந்தைக்கு முகம் கனிந்து போனது.
“மாப்பிள்ளை என்ன பண்றாரு டா?” என வினவி மகளை இயல்பாக்க முயன்றார். மூச்சை நன்றாய் வெளிவிட்ட வேதா, அன்பழகன் பற்றியும் அவனது குடும்பம் பற்றியும் விவரித்தாள். தான் படிக்கும் கல்லூரி, முன்பு தான் வேலைப்பார்த்த வணிக வளாகம் என அவளுக்குத் தந்தையிடம் கூற ஆயிரமிருந்தது. கடந்த எட்டு வருடத்தில் நிகழ்ந்த அனைத்தையும், தனக்கு நினைவில் நின்ற நிகழ்வை அவருக்கு விளக்கிக் கூறிக்கொண்டிருந்தாள்.
அவள் பேசுவதையெல்லாம் கேட்ட அன்பழகனுக்கு, மனைவி தன்னிடம் ஒரு நாளும் இப்படியெல்லாம் பகிர்ந்து கொண்டதில்லையே, என உறைத்தது. கொஞ்சம் கோபமும் ஆதங்கமும் மனதில் துளர்விட, எழுந்து கால்போன போக்கில் நடந்தான். அந்த ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இடையில் தாயிடமிருந்து அழைப்பு வர, அதை ஏற்று பதில் கூறினான். நேரம் சென்று கொண்டேயிருக்க, இரவு கவிழ்ந்ததும் மனைவி அழைத்தாள். தந்தைக்கு உணவு வாங்கி வரப் பணித்தாள். அன்பழகனும் உணவை வாங்கி வர, “ப்பா, நாங்க நாளைக்கு வர்றோம். வீட்ல எதுவும் சொல்லாம வந்துட்டோம். அதான் பா, என் அத்தை, மாமாகிட்டேயும் சொல்லைப்பா. அவங்க கிட்டயும் நாளைக்கு பேசிட்டு, உங்களை அறிமுகப்படுத்துறேன் பா. எதையும் நினைச்சு கவலைப்படாம தூங்குங்க. சாப்பிடணும் மறக்காம...” என்றுவிட்டு விடைபெற்றாள் மகள்.
“இதை, அவர்கிட்ட கொடுத்துட்டு வா சேஃப்டிக்கு...” மனைவியின் கையில் பணத்தை திணித்த கணவன் காலையிலிருந்து மனதை நனையச்
செய்துகொண்டிருந்தான். சிரிப்புடன் அதை தந்தையிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.
இருவரும் வீட்டை நோக்கி மகிழுந்தில் செல்ல, அன்பழகன் தோள் சாய்ந்து கண்ணை மூடினாள் பெண். ஏனோ மூடிய விழிகள் கலங்கின சந்தோஷத்தில்.
‘தன் தந்தை வந்துவிட்டார், இனிமே எல்லாமே சரியாகிவிடும். தனக்கும் தாய் வீடிருக்கிறது. அன்னையாய் தாங்க தகப்பன் இருக்கிறார்...’ நினைக்க நினைக்க விழிகள் பனித்தன. அத்தனை சுகமாய் இருந்தது பெண்ணுக்கு. தான் கூறாது முகம் பார்த்து நடந்த கணவனை நினைத்தொருபுறம் மனம் மகிழ்ந்து தொலைத்தது. அத்தனை இதமான நாள் இறுதியில் கனத்தை சுமந்து தொலைக்கப் போகிறது.
வீட்டிற்குள் நுழைந்ததும் மாமியார் கேட்ட கேள்விக்கு உண்மையை உரைக்காது, திக்கித்திணறிப் பொய்யைக் கூறி அறைக்குள் நுழைந்தாள். நடந்ததை எல்லாம் ஒரே மூச்சில் கணவனிடம் கூற வேண்டும் என்ற அவா எழுந்தது.
அவனருகில் சென்று இறுக அணைத்துக்கொண்டாள் பெண். விழிகள் லேசாக நனைய, “தேங்க்ஸ் ங்க...” என்றாள். அன்பழகன் எதுவும் கூறவில்லை. விரைப்பாய் நின்றிருந்தான். தன்னைக் கணவன் அணைக்கவில்லை என்பதை உணர்ந்தவள், “என்னங்க, என்னாச்சு?” எனக் கேட்கவும், அவன் முகம் இறுகியிருந்தது.
“ஒன்னும் இல்ல, போய் படு டி...” என்றவனின் குரல் பேதத்தை உணர்ந்தவள், “ஏங்க...” என எதோ கூற வர, “ப்ம்ச்... டென்ஷன் பண்ணாம போய் படு டி...” என்றவன் பேச்சில் எரிச்சல் மண்டி கிடக்க, குரல் உள்ளே போய்விட்டது வேதாவிற்கு. விழிகள் பட்டென நிறைந்து விட, இரண்டடி தள்ளி நின்றாள்.
“நைட்டு எனக்கு வேலையிருக்கு. நீ தூங்கு...” என்றவன் இல்லாத வேலையை நோக்கி நகர, கணமண் தெரியாத கோபம். யார் மீது காட்ட எனத் தெரியாது வெளியேறினான்.
“டேய், கல்யாணம் முடிஞ்சாவது நைட் வேலைக்குப் போக மாட்டேன்னு நினைச்சேன். அப்படி என்னடா வேலை உனக்கு, புள்ளைத்தாச்சி பொண்ணைத் தனியா விட்டுட்டுப் போற அளவுக்கு...” வத்சலா சத்தம் காதைக் கிழித்தாலும், அதை பொருட்படுத்தாமல் தனது இருசக்கர வாகனத்தில் பறந்திருந்தான் அன்பழகன். விழிகள் எல்லாம் சிவந்து போயிருந்தது ஆடவனுக்கு. இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு பறந்தான்.



























































 
Top