• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 23
“அவன் சொல்றது உண்மையா வத்சலா? எங்கப் போய்ட்டு வர்ற?” பல்லைக் கடித்துக்கொண்டு வினவினார் முத்துக்கிருஷ்ணன்.
‘முழுசா நனைஞ்சாச்சு. இனி முக்காடு எதுக்கு?’ என நினைத்தவர், “ஆமாங்க, அங்கதான் போய்ட்டு வர்றேன்...” என்றார்.
“என்ன நினைச்சுக்கிட்டு அங்கப் போய்ட்டு வர்ற நீ? உன் மகன் பண்ணக் காரியத்தால ஊரே நம்மளைத் காரி துப்பிட்டு இருக்கு. ஆமா, யாரைக் கேட்டு அவன் வீட்டுக்குப் போன நீ” மனிதர் கோபத்தில் கத்த, பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை பெண்மணி.
கூடையை எடுத்துக்கொண்டு அடுப்படியில் வைத்து வந்தவர், “ஏன், நான் பெத்தப்புள்ளை வீட்டுக்குப் போறதுக்கு யாரைக் கேட்கணும்?” என வினவினார்.
“ஏன்டி, அவன் நம்ம மானத்தையே கப்பலேத்திட்டான். ஊரே சிரிக்குது, நீ என்னடான்னா அங்க போய் ஜாலியா பேசிட்டு வர்ற?”
“இல்ல, அப்படி என்ன தப்பு பண்ணிட்டான் அவன்? ஊர் உலகத்துல இல்லாத தப்பையா பண்ணி இருக்கான். ஆசைப்பட்ட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்போ அவளை நல்லாதானே பார்த்துக்குறான். நான் பெத்தது தங்கம், என்ன கொஞ்சம் அவசரப்புத்தி...” அலட்டாது கூறிய மனைவியைப் பார்த்து முத்துக்கிருஷ்ணன் கோபம் கரை கடந்தது.
“ஏன் டி, அவன் பண்ண காரியத்துக்கு நீ நல்லவன் சர்டிபிகேட் கொடுத்துட்டு இருக்க. எனக்கு இப்போ சந்தேகம் வருது, நீயும் அவனும் கூட்டா இருப்பீங்களோன்னு...”
“ஓ... நீங்க அப்படி நினைச்சா, அதுக்கு நான் பொறுப்பாக முடியாதுங்க...”
“என்ன டி ரொம்ப பேசுற? அவனுக்கும் நமக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு தானே வீட்டைவிட்டு தொரத்துனோம். இனிமே அங்க போற வேலை வச்சுக்கிட்டா, நடக்குறதே வேற...”
“ஏன், ஏன் நான் அங்க போகக் கூடாது. அவன் பண்ணக் காரியம் தப்பு தப்புன்னு சொல்ற இந்த வாய்தான், உங்க ஒன்னுவிட்ட தங்கச்சி மக ஓடிப்போனப்ப போய் பஞ்சாயத்துப் பண்ணி அவளை வீட்ல சேர்க்க வச்சது. உங்க வீட்டாளுங்க பண்ணா அது தப்பில்லை. இதுவே நாங்க பண்ணா தப்போ? இது எந்த ஊர் நியாயம்?” வத்சலா சண்டைக்கு வந்தார்.
“அது... அது...” மனைவி பேச்சில் தடுமாறியவர், “அவங்க வீடு வேற. நம்ம வீடு வேற?” என சமாளித்தார் மனிதர்.
“ஆமா! அவங்க வீடு வேற. நம்ம வீடு வேறதான். என்ன கேனத்தனமா பேசீட்டு இருக்கீங்க. அவங்க வீட்லயா நம்ம இருக்கோம்?” வத்சலா கேலியாக வினவ, அதில் காண்டாகிப் போனார் மனிதர்.
“இனிமே நீ அங்க போகக் கூடாதுன்னா, போகக் கூடாதுதான்...”
“சரி, நான் போகலை. அதே மாதிரி நீங்களும் உங்க தங்கச்சி வீட்டுக்குப் போகக் கூடாது.”
“அதெப்படி அப்படிலாம் இருக்க முடியும்?”
“உங்களால முடியாதுன்னா, என்னாலயும் என் பையன் வீட்டுக்குப் போகாம இருக்க முடியாது. உங்களுக்கு உங்க தங்கச்சி எவ்வளோ முக்கியமோ, அதை விட ஒருபடி அதிகமா எனக்கு எம்புள்ளை முக்கியம்...”
“அங்க... அங்க இனிமே போற வேலை வச்சுக்கிட்டேனா, இந்த வீட்ல உனக்கு இடமில்லை. உன் மகனோட போய்த் தாங்கிக்கோ...” என்ற கணவரைப் பார்த்த வத்சலா அதிர்ந்துவிட்டார்.
“ஓ... வீட்டைவிட்டுப் வெளியே போக சொல்ற அளவுக்கு வந்துட்டீங்களோ? எனக்குத் தெரியும். எப்போடா என்னை வீட்டை தொரத்தலாம்னு முன்னாடியே யோசிச்சு வச்சிருப்பீங்க? சந்தர்ப்பம் வாய்ச்சதும் மனசுல இருந்தது வார்த்தையா வந்துடுச்சு?” என்றவர், விறுவிறுவென அறைக்குள் நுழைந்தார்.
“இதுக்கும் மேல இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன். நீங்க கட்டுன வீடுன்னதும் என்னை தொரத்துவிட்றீங்க? ஹ்ம்ம்... நான் போறேன். என் புள்ளையோட போய் இருந்துக்கிறேன். அவன் என்னை ராஜாத்தியா பார்த்துப்பான். நீங்க மட்டும் இந்த வீட்ல ஒண்டியா இருந்து கஷ்டப்படுங்க...” என்று ஒரு பையை எடுத்து தன் துணிகளை அதில் அடுக்க ஆரம்பித்தார்.
“சாரி, சாரி. தப்பா சொல்லிட்டேன். நீங்க ஏன் தனியா கிடந்து கஷ்டப்பட போறீங்க. உங்காளுங்க எல்லாம் இருக்காங்களே! இங்க கூட்டீட்டு வந்து கும்மரசம் போட்ற ஐடியாலதானே இருக்கீங்க...” காட்டாற்று வெள்ளம் போல பேசிய மனைவியிடம் பதில் பேச முடியாது நின்றிருந்தார் முத்துக்கிருஷ்ணன். அவர் ஏதோ பேசும்போது தெரியாது கூறிவிட்டார். மற்றபடி மனதிலிருந்து எல்லாம் வார்த்தை வரவில்லை. வீம்புக்காய் பேச சென்று அது விபரீதத்தில் முடிந்துவிட்டது.
விளையாட்டாய் வத்சலா பைகளைத் துணியில் அடுக்குகிறார் என பார்த்திருந்த கணவர், அவரது செய்கைகள் யாவும் விளையாட்டில்லை என தாமதமாய் புரிபட, தவித்துப்போய்தான் நின்றிருந்தார்.
“நான் கிளம்புறேன், நீங்க உங்க ஆளுங்க, மக்களோட சந்தோஷமா இருங்க...” என்ற வத்சலா பையை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேற,
“ஏய்! நான் அப்படியெல்லாம் நினைச்சு சொல்லலை டி. வாய் தவறி சொல்லிட்டேன்...” மனிதர் மனைவி பின்னாடியே வர,
“வாய் தவறி எல்லாம் சொல்லியிருக்க மாட்டீங்க. மனசுல இருந்துதான் வந்துருக்கும். எத்தனை நாளா யோசிச்சு வச்சிருந்தீங்க இதை?” எனக் கேட்டுக்கொண்டே வத்சலா கூடத்திற்கு வர, முத்துக்கிருஷ்ணனும் உடன் வந்தார்.
சரியாக அதேநேரம் வெளியே சென்றிருந்த அறிவழகன் உள்ளே நுழைந்தான். “என்னம்மா, பையோட எங்க கிளம்பிட்ட நீ?” என தாயருகே வந்தான்.
இத்தனை நேரம் சண்டையிட்டுக்கொண்டிருந்த பெண்மணி மகனைப் பார்த்ததும் பையைக் கீழே வைத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டார்.
“டேய் அறிவு, என்னை வீட்டை விட்டுப்போக சொல்லிட்டாரு டா இந்த மனுஷன். இது இவர் கட்டுன வீடாம், இனிமே ஒரு நிமிஷம் கூட நான் இங்க இருக்க கூடாதுன்னுட்டாரு டா...” என்றவர் அவனிடமிருந்து பிரிந்து சேலை தலைப்பால் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டார்.
“சீரும் சிறப்புமா என்னைப் பெத்தவங்க இவருக்கு கட்டிக் கொடுத்ததுக்கு இப்போ நாதியத்து நடுரோட்ல நிக்கப் போறேன் டா...” என அழும் குரலில் கூறிய தாயைப் பார்த்து அதிர்ந்தவன்,
“ப்பா, என்னப்பா இது? ஏன் அம்மாவை வீட்டை விட்டு போகச் சொன்னீங்க?” மகன் தந்தையைப் பார்த்து சப்தமிட்டான்.
“டேய்! நான் அப்படியொரு எண்ணத்துல எல்லாம் சொல்லலை டா. வீட்டைவிட்டு வெளியே போன்னு மட்டும்தான் தெரியமா சொல்லிட்டேன் டா. மத்தது எல்லாம் அவளா ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டா டா!” என்றவர் குரல் முழுவதும் பதட்டம் படர்ந்திருந்தது.
“பார்த்தீயா டா! உன் முன்னாடியே அந்த வார்த்தையை சொல்றாரு. அப்போ அவர் சொன்னது உண்மைதானே டா!” என்ற வத்சலா மீண்டும் கண்களைக் கசக்கினார்.
“ப்பா, ஏன் அப்படியொரு வார்த்தையை சொன்னீங்க?” அறிவு கோபமாக வினவ,
“அவ பண்ணக் காரியம் அப்படிடா. அதான் அதை கேட்கப் போய் தெரியாம சொல்லிட்டேன் டா!” என விளக்கினார் முத்துக்கிருஷ்ணன்.
“ப்ம்ச்... அம்மா என்ன தப்பு பண்ணியிருந்தாலும், வீட்டைவிட்டு வெளியே போங்கன்னு எல்லாம் நீங்க சொல்லியிருக்க கூடாது...” அறிவு குரலை உயர்த்த,
“என்ன முத்து, எதுவும் பிரச்சனையா? சத்தம் நம்ம வீட்டு வரை வருது?” பக்கத்துவீட்டு சொந்தக்காரப் பெரியவர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
“வாங்க மாமா, நீங்களே அவர் பண்ணதைக் கேளுங்க. என்னை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லிட்டாரு...” மகனிடம் கூறிய அதே பாவனையில் பேசிய வத்சலா கண்ணைத் துடைக்க, முத்துக்கிருஷ்ணனுக்கு நெற்றியெல்லாம் வியர்வை அரும்பியது.
“என்ன முத்து, உன் வயசுக்கு இப்படியெல்லாம் நடந்துக்கலாமா? உங்களுக்குள்ள பிரச்சனைன்னா, அதை பேசி தீர்க்குறதை விட்டுட்டு அவளை வெளிய போக சொல்றது நல்ல பழக்கமா?” முதியவர் வினவ,
“சித்தப்பா, அவ போய் அன்பழகனைப் பார்த்துட்டு வந்திருக்கா. நான் போகக் கூடாதுன்னு சொன்னதைக் கேட்காம, திரும்ப சண்டை போடவும் நான் அப்படி பேசிட்டேன்...”
“நீங்களே இந்த அநியாயத்தைக் கேளுங்க மாமா, இவங்க வீட்டுக்கு ஒரு நியாயம். நம்ம வீட்டுக்கு ஒரு நியாயமா? அவங்க தங்கச்சி பொண்ணு ஓடிப்போய் கல்யாணம் பண்ணப்போ, பஞ்சாயத்து பண்ணி சேர்த்து வச்சாரு. என் பையனை மட்டும் சேர்த்துக்க மாட்டாராம். சரி, நான் மட்டுமாவது அவன்கிட்ட பேசலாம்னா, அதையும் விட மாட்டாராம். பாவம் புள்ளை, அப்பன் ஆத்தா இருந்தும், தனியா கஷ்டப்படுறான்...” மூக்கை உறுஞ்சினார் வத்சலா.
“என்ன டா, நம்ம வீட்டுக்கு வந்த புள்ளையை இப்படி அழ விடலாமா? நீ பண்றது சரியா? உனக்கு கோபம் இருந்துச்சுன்னா, நீ போய் அவனை பார்க்காம, பேசாம இரு டா. அவளைத் தடுக்காத. இனிமே வீட்டைவிட்டு வெளிய போன்னு எல்லாம் சொல்ல கூடாது...” என்று கூறியவர்,
“வத்சலா, நீயும் புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கோ மா. இப்படி பையெல்லாம் தூக்கிட்டு வெளிய போகாத. அவன் வேற எதுவும் சொன்னா, உடனே என்னைக் கூப்பிடு. நானும் உன் அத்தையும் எதுக்கு இருக்கோம், வந்துட்றோம்...” என்ற வத்சலாவிடம் உரைத்தவர்,
“நல்லா பார்த்துக்கோ டா மருமகளை. அவ அழுதா, உன்னை வெளுத்துப் போடுவேன்...” முத்துக்கிருஷ்ணனை மிரட்டிவிட்டு, “அம்மாவை உள்ளே கூட்டீட்டுப் போ...” என அறிவழகனிடம் கூறி வெளியேறினார்.
“பையைக் கொடும்மா...” என்ற அறிவு, தாயை அறைக்குள்ளே அழைத்துச் செல்ல, முத்துக்கிருஷ்ணன் முக்கதிலிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே நாற்காலியில் பொத்தென அமர்ந்துவிட்டார். இப்போது தவறு செய்தது தானா? இல்லை மனைவியா? என்ற சந்தேகம் அவரை ஆக்கிரமித்திருந்தது.
கதவை லேசாக சாற்றிய வத்சலா கட்டிலில் மெத்தன அமர்ந்தார்.‌ “என்ன மா?” தன் தாய் உண்மையிலே கலங்கிவிட்டார் என அறிவு வருத்தமாக வினவினான்.
அறை வாயிலை எட்டிப் பார்த்தவர், “டேய்! அம்மா பெர்பாமென்ஸ் எப்படி டா?” என சன்னமான சிரிப்புடன் வினவினார் வத்சலா.
“ம்மா, ஆக்ட் பண்ணியா நீ?” அறிவு அதிர்ச்சியுடன் வினவ,
“ஆமா டா. பின்ன என்ன, இப்படி சண்டை போட்டாதான், நாளைபின்னே நான் அவனைப் பார்க்கப் போகும்போது உங்க அப்பா அமைதியா இருப்பாரு. இல்லைன்னா, ஒவ்வொரு முறையும் நான் என்ன பொய்யை சொல்லி உன் தம்பியை பார்த்துட்டு வர்றது. அதான் டா...” என்றவர் சிரித்துவிட்டார்.
“எல்லாம் ஓகே மா, என்கிட்ட லைட்டா கண்ணைக் காட்டி இருக்கலாம். நான் தேவையில்லாம ஓவர் பெர்பாமென்ஸ் பண்ணிட்டேன்...” அறிவு வருத்தப்பட,
“அடேய் என் அறிவே, நான் சொல்லியிருந்தா, நீ சொதப்பி இருப்ப. அதான் டா, அம்மா எப்படி?” என அவர் இல்லாத சட்டையின் முனையைத் தூக்கிவிட,
“ஹம்ம்... அவன் ஏன் இப்படி இருக்கான்னு நினைச்சிருக்கேன். உன்னை மாதிரிதான் அவனும்...” அறிவு சிரிக்க, “போடா படவா...” என்றார்.

"ஆமா, பக்கத்து வீட்டு தாத்தா எப்படி உள்ளே வந்தாரு?" அறிவு சந்தேகமாய் வினவ,

"இப்படியெதும் நடக்கும்னு பயந்துட்டுதான் வந்தேன். அதுக்கேத்த மாதிரி உன் தம்பி, தங்க கம்பி எப்பவும் போல அவன் வேலையை காமிச்சுட்டான். அதான் சத்தமா பேசிட்டே ஹாலுக்கு வந்துட்டேன். பக்கத்து வீட்ல அவரு இருக்கதை வீட்டுக்குள்ள நுழையும்போது எதேச்சையா முன்ன பார்த்தேன்..." என்றவர் நடந்ததைக் கூற,

"சரியான ஆள்தான்மா நீ..." அறிவு தாயைப் பார்த்து சிலாகித்தான்.

"பரவாயில்லை டா. ரொம்ப புகழாத..." என்றவர் எட்டி கணவர் முகத்தைப் பார்த்துவிட்டு, “கொஞ்சம் பாவம்டா உங்கப்பா...” என்றார்.
இடம் வலமாக இல்லை என்பதைப் போல தலையை அசைத்தவன், “கொஞ்சம் இல்லைம்மா, உன்னைக் கல்யாணம் பண்ணதுல இருந்தே அவர் பாவம்தான்...” என கூறி வெளியேறியவனை முறைத்தார் பெண்மணி.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன.‌ வேதா விடுதிக்குச் செல்கிறேன் எனக் கூற, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினான் அன்பு.
“என்னங்க...” என அழைத்தவளை சட்டை செய்யாது தாயிடம் கேட்டு மனைவிக்கு என்னென்ன வாங்க வேண்டும் என வாங்கிய அனைத்தையும் ஒரு பையில் அடைத்துக்
கொண்டிருந்தான்.
குனிந்து பையில் அடுக்கிக் கொண்டிருந்தவனின் பின்புறமிருந்து அணைத்த வேதா, “என்னங்க, என்னை கோவிச்சுக்கிட்டு என்ன பண்ண? நீங்கதான் இங்க காலேஜே இல்லாத மாதிரி, வெளியூர்ல சேர்த்துவிட்டீங்க. இப்போ நான் கிளம்புனா, உங்களுக்கு கோபம் வேற, நான் என்ன சொல்ல?” என்றாள்.
“ஒன்னும் சொல்ல வேணாம், போடி...” என்ற அன்பு அவள் கையை எடுத்து விட, “ச்சு...” என சலித்தவாறே அவன் முன்னே முறைப்புடன் நின்றாள் மனைவி. இவனும் அதற்கு குறைவில்லாது பதில் பார்வை பார்த்து வைத்தான்.
“சரி, சரி. அதான் இன்னும் மூனு நாள்ல வீக்கெண்ட் லீவ் இருக்கே. அப்போ வரப்போறேன். செமஸ்டர் வேற வரப்போகுது. அப்போ ஸ்டடி ஹாலிடேஸ்ன்னு மாசத்துல பாதிநாள் வீட்லதான் இருக்கப் போறேன். அப்புறம் என்ன?” எனக் கேட்டு கணவனின் கரங்களில் முத்தமிட்டாள். அதில் இளகியவன், அரைமனதாக தலையை அசைக்க இருவரும் கல்லூரி சென்று சேர்ந்தனர். அவளை இறக்கிவிட்டு, “பத்திரம் வேதா, எதுனாலும் உடனே எனக்கு இன்பார்ம் பண்ணணும்...” எனக் கூறி விடை பெற்றான்.
கடகடவென அந்தவாரம் முடிந்துவிட, வேதா வீட்டை அடைந்தாள். அவள் வீட்டிற்கு வந்ததை அறிந்த வத்சலா கூடையை எடுத்துக்கொண்டு பெரிய மகனோடு சின்னவனைப் பார்க்க கிளம்பினார். கணவர் தன்னைக் குறுகுறுவென பார்ப்பதை எல்லாம் அவர் ஒரு பொருட்டாய்க் கூட மதிக்கவில்லை. அதுவுமில்லாமல் அந்த சண்டை நடந்து முடிந்ததிலிருந்து முத்துக்கிருஷ்ணனிடம் பேசுவதில்லை பெண்மணி. அறிவழகன்தான் இருவருக்கும் இடையில் அல்லல்பட்டுக்
கொண்டிருக்கிறான்.
வேதவள்ளியைப் பார்த்து பேசிவிட்டு வீடு வந்தார் வத்சலா.‌ ஒவ்வொரு வாரமும் இதுவே தொடர்ந்தது. மகனையும் மருமகளையும் காணாது அவருக்கு வாரம் முற்றுப்பெறுவது இல்லை என்றாகிப் போனது.
என்னதான் மகன் செயலில் அதிருப்தி இருந்தாலும், பேரக் குழந்தைகள் என்று வரும்போது வத்சலா இளகிவிட்டார். வேதவள்ளிக்கு அத்தனை பக்குவம் பார்த்தார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என ஆயிரம் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் பட்டியலிட்டார். அவரது அன்பை எந்த ஒரு அலட்டலுமின்றி ஏற்றுக்கொண்டாள் பெண்.
எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாலும், அவ்வப்போது மருகளை அதட்டுவார் பெண்மணி. அது எதற்கென்று வேதவள்ளிக்குமே தெரிந்தது. மகன் மருமகளின் முந்தானையைப் பிடித்து சுற்றினால், எந்த தாய்க்குத்தான் கோபம் வராது. அவரது செயலில் நியாயம் இருப்பதாய் தோன்ற, அவரது அன்பையும் அதட்டலையும் ஒன்றாய் ஏற்றுக்கொண்டாள் மருமகள்.
இடையில் முருகையா ஒருமுறை வேதாவைக் காண வந்தவர், விஷயம் கேள்விப்பட்டு மகிழ்ந்து போனார். அதிலிருந்து மாதம் ஒருமுறையாவது அவளைப் பார்க்க வருவார். வரும்போது மகளுக்கென பைகள் நிறைய வாங்கி வருபவரின் அன்பில் நனைந்து போனாள் வேதவள்ளி.
தன்னைச் சுற்றி கணவன், மாமியார், கொழுந்தன், பெறாத தகப்பன் என இத்தனை பேரின் அன்பில் அவள் திக்குமுக்காடிப் போனாள். ஒருவரின் அன்புக்கு ஏங்கியவளுக்கு கடவுள் பல மடங்கு அழகான உறவுளைப் பரிசளித்துவிட்டார்.
நாட்கள் நகர, இரண்டாம் பருவத் தேர்வுகள் வந்துவிட, நல்லபடியாக அதை முடித்திருந்தாள். குழந்தையும் படிப்பையும் ஓரளவுக்கு ஒன்றாய் கையாளப் பழகியிருந்தாள் வேதா.
மனைவியின் மீதான அன்பு இன்னும் இன்னும் கூடிப்போனது அன்பழகனுக்கு. அவளை அத்தனையாய் அன்பு செய்தான், காதலித்தான், நேசத்தால் நனைய வைத்துக்கொண்டிருந்தான்.
கடகடவென ஐந்து மாதங்கள் கடந்துவிட, வேதாவின் வயிறு நன்றாய் கனிந்து கூம்பிவிட்டிருந்தது.

எப்போதும் போலொரு ஞாயிற்றுக்கிழமை அது. அப்படியே நடந்து கடைக்குச் சென்று வீட்டிற்கு தேவையானதை வாங்கி வரலாம் என வேதவள்ளியும் அன்பழகனும் கடைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
கணவனிடம் பையைக் கொடுத்துவிட்டு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தாள் வேதவள்ளி. இருவரும் எதையோ பேசி சிரித்துக்கொண்டே வர, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை இயக்கியவரை இருவருமே கவனிக்கவில்லை.
லேசாய் வேதவள்ளியின் வயிற்றில் இடிப்பது போல வந்தவரை நொடியில் பார்த்து சுதாகரித்து மனைவியை தன்புறம் இழுத்த அன்பழகன், “யோவ்! அறிவில்லை உனக்கு?” எனத் திட்ட, திரும்பிய அந்த நபரைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான். முத்துக்கிருஷ்ணன்தான் நின்றிருந்தார். அவரது பார்வை அன்பழகனையும், அவளருகே நின்ற வேதவள்ளியையும் அவளது வயிற்றையும் தொட்டு மீண்டது.






































































 
Top