• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் - 2

மனதே இல்லாது வீட்டிற்குள் நுழைந்தவனை வத்சலா கேள்வியாகப் பார்க்க, “குளிச்சுட்டு வந்து சாப்பிட்றேன் மா...” என அறைக்குள் நுழைந்துவிட்டான் அன்பழகன்.

குளித்து முடித்து உணவுண்ண அமர்ந்தவனுக்கு உணவைப் பரிமாறியவர், “எங்கடா போய்ட்டு வர்ற?” என வினவினார். அவர் கேள்விக்குப் பதிலளிக்காதவன், சாப்பிடத் துவங்கினான்.

“உன்னைத்தான் டா கேட்குறேன். பதில் சொல்லு.‌‌..” வத்சலா கொஞ்சம் அழுத்தமாக வினவ, அவரை நிமிர்ந்து பார்த்து, “இப்ப சாப்பிடவா? இல்லை எழுந்து போகவா?” எனக் கேட்டான் அன்பழகன்.

“ப்ம்ச்...” கரண்டியைப் பட்டென வைத்தவர், அவ்விடத்தைவிட்டு அகலவும், சாப்பிடாமல் கையைக் கழுவிவிட்டு அறைக்குள் நுழைந்துவிட்டான் அன்பு.

“இந்த வீட்ல யார் அம்மா, யார் புள்ளைன்னு தெரியலை. ஒரு வார்த்தைக் கூட பேசக் கூடாதுன்றாங்க. பெரிய இவன், சாப்பிடாம போய்ட்டான். எனக்கொன்னும் இல்லை. உன் வயிறுதான் டா காயும்...” சத்தமாக முணுமுணுத்தவர், உணவைச் சமையலறைக்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டார்.

‘ஊர்ல இல்லாத அழகி அவ! டெய்லி காவல்காரன் மாதிரி பின்னாடியே போக வேண்டியது, வர வேண்டியது. திரும்பிக் கூட பார்க்காதவளுக்கே இவ்வளோ பண்றான். அவ திரும்பிப் பார்த்துட்டா, அவ்வளோதான்...’ ஆத்திரமாய் வந்தது வத்சலாவிற்கு. காவல்நிலையம் வரைக் கூட விஷயம் சென்று வந்துவிட்டது‌. தன் பேச்சைக் கேட்காத மகனை என்ன செய்வது? வத்சலா எத்தனை முறைக் கூறியும் அதை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை ஆடவன். அன்பாய், கோபமாய், அதட்டலாய் எனப் பல விதங்களில் கூறி அலுத்துவிட்டார்.

அறைக்குள் நுழைந்தவன், மீண்டும் படுக்கையில் வீழ்ந்தான். இன்று கடை திறக்க வேண்டாம் என முகிலனிடம் கூறிவிட்டான். இரவு முழுவதும் ஒரே இடத்திலே உட்கார்ந்து வேலை செய்தது முதுகும் கழுத்தும் வலிக்க, அதை கையால் நீவி விட்டுக்கொண்டான். சிந்தையை ஆக்கிரமிப்பு செய்திருந்தாள் வேதவள்ளி. முப்பொழுதும் அவளது நினைவுகளைத்தான் சுமந்து கொண்டு திரிகிறான் அன்பு.

“அப்படி என்னதான் ஊர்ல இல்லாத அழகியோ அவ?” என வத்சலா வசைபாடும்போது மனதும் மூளையும் அந்தக் கேள்வியை ஆராயும். ஆனால், விடை என்னவோ சுழியம்.

எத்தனையோ முறை சுயஅலசல் செய்துவிட்டான் ஆடவன். ஏன் பிடித்தது என்ற கேள்விக்கு விடையே கிட்டாது போனது. இரண்டு வருடங்களாக வத்சலா கூறியது போல காவல்காரன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். காலையில் அவள் வரும்போது எதிரே நிற்பவன், வேலைவிட்டு பெண் செல்லும்போதும் அவள் பின்னே செல்வான்.

கவனித்திருக்கிறாளே பாவை. ஆனால், அவனைத் திரும்பியெல்லாம் பார்க்கவே
மாட்டாள். குனிந்தத் தலை நிமிராது சென்றுவிடுவாள். என்றாவது ஒருநாள் விழியோடு விழி மோதும்போது, அலட்சிய பாவம்தான்.

முகமும் விழியும் அத்தனை அலட்சியமாய் ஆடவனை கூறுபோடும். என்ன இருந்தது அந்தப் பார்வையில் என ஆராய்ந்தால், வெறும் திமிர் மட்டுமே என மனம் ஆணித்தரமாகக் கூறும். முகம் மட்டுமல்ல, உடல் மொழியே அவனை சாய்க்கப் போதுமானது.

ஒரு பார்வைக் கூட நிமிர்ந்து பார்க்காவிடினும், அவளது பாவனையே ஆணை பித்தம் கொள்ளச் செய்யும். கோபம் கொள்ளச் செய்யும். சில சமயம் ரசனையானப் பார்வையை அவள் மீது பரடச் செய்யும். பாவையோ இவனை ஒருநொடி கூட மதிக்காது அலட்சியமாய் கடப்பாள். அன்பழகனுக்கு மட்டும்தான் அவளுடைய அசைவுகள் அத்துப்படி. அவளுக்குப் அப்படியெல்லாம் இல்லை. தன்னருகே ஒரு ஆண் நிற்கிறான், நடக்கிறான் என்று ஒரு நொடி கூட அவள் முகத்தில் பதட்டத்தையோ, பயத்தையோ கண்டதில்லையே என்ற ஆச்சரியமும் கோபமும் ஒரு சேர பொங்கும் கோமகனிற்கு.

‘கொஞ்சமல்ல, அதிகம் திமிர். உடலெல்லாம் திமிர்தான். எத்தனை நாளாகப் பின்னே சுற்றுகிறேன். ஒரு அனுசரணையான பார்வை, ஒரே ஒரு செயல். நான் தாமதமாக வரும் கணங்களில் உன்னை எதிர்பார்த்தேன் என்ற விழிகளின் அலைப்புறுதல் என
எதுவுமே இல்லை. தினமும் அவள் பின்னே சுற்றும் நான், எந்த விதத்திலும் அவளைப் பாதிக்கவில்லையா? வேறு என்ன செய்ய வேண்டும்? அமைதியாக இருந்தால் இவளுக்கு சரிவராது. தன் அதீத பொறுமை அவளிடம் மட்டும்தான். இனிமேல் அதிரடியைத்தான் கையில் எடுக்கவேண்டும்’ என்று மனதில் பலவித எண்ணங்கள் எழும். தான் மட்டுமே பைத்தியக்காரனாகச் சுற்றிக்கொண்டிருக்கிறோம் எனச் சில சமயங்களில் அவள்மீது அத்தனை கோபம் வரும். அதையெல்லாம் யாரிடம் காட்டுவது எனத் தெரியாது கைக்கு கிடைத்தப் பொருளை உடைத்துவிடுவான்.

‘அப்படி என்னதான் அந்த வீட்ல இருக்கோ? அடிமை சாசனம் ஒன்னுதான் எழுதலை. மாடா வேலை வாங்குறாங்க. அப்பவும் திமிர் குறையலை இவளுக்கு...’ என்று பல்லைக்கடிப்பான்.

‘ஏன் இந்தப் பெண் தன்னை இத்தனைப் பாதிக்கிறாள்? அவளில்லாத உலகம் இயங்க மறுக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை மூளையின் ஏதோ ஒரு இடத்தில் அவளது நினைவு நச்சரித்துக்கொண்டே இருக்கிறது. தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத இவள் பின்னே செல்ல வேண்டுமா?’ என ஒருவாரம் அவளைக் காணாது இருக்க முடிவெடுத்தவனால், மூன்று நாட்கள் கூட அதை நடைமுறைபடுத்த முடியவில்லை.

அத்தனை படுத்தி எடுத்துவிட்டது அவளது நினைவு. விழியை மூடி படுக்கையில் சாய்ந்தால் கூட, கனவில் வந்து தொல்லை செய்தாள். ஊடுருவி இருந்தாள், அவனில் மொத்தமாய் ஊடுருவி இருந்தாள் பெண். அப்போதுதான்
தன்னை உணர்ந்திருந்தான் ஆடவன். அந்த நொடிமுதல் அவளின் மீதான பிடித்தங்கள் கூடியதே தவிர குறையவே இல்லை.

'என்ன இந்த நேசம், பிடித்தம் என்னைப் பைத்தியக்காரன் பட்டத்தோடு சுற்ற வைத்துவிடுமோ? அவளில்லாது போனால், தெருவில் சுற்றுவேனா? என்ன செய்வேன்?' என எண்ணிப் பயந்து, இரத்த அழுத்ததைத் ஏற்றிக்கொள்வான். தன்னால் முடிந்தால், அவளைக் கண்ட நாளை, தன் நினைவிலிருந்து அழிக்கக் கூட செய்திருப்பான். அத்தனை படுத்தியிருக்கிறாள் பெண். ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் மௌனமான ஆயுதமே அவனை வீழ்த்தப் போதுமானது.

ஒரே ஒருநாள் உடல்நிலை சரியில்லை என பெண் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்ட போது உயிரே இல்லை அவனிடம். கொட்டும் மழை எனக்கூட பொருட்படுத்தாது, அவள் வீட்டுமுன்னே நின்றிருக்கிறான். மறுநாள் அவள் உடல்தேறி வந்துவிட, இவன் காய்ச்சலில் வீழ்ந்துவிட்டான்.

வேதவள்ளியின் ஒரே ஒரு முகச்சுணக்கம், சுருக்கம் அவனது கவனத்தைச் சிதறசெய்து அன்றையை வேலையை தடைசெய்துவிடும். என்ன? ஏன்? என்ற கேள்வியுடன் தலையைப் பிய்த்துக் கொள்வான். அவனாகச் சென்று கேட்டாலும், அவள் பதிலெல்லாம் கூறவேமாட்டாள்.

'போடா... போ' என்ற அலட்டலான அலட்சியபாவம். அந்த நொடியில் அவளை இழுத்து அறைய வேண்டும் என்று தோன்றும் கையைக் கட்டுப்படுத்திக் கொள்வான். அப்படி அறைந்தால் கூட, தன்னிடம் மட்டுமே பெண் அடைக்கலம் புகவேண்டும் என்ற நப்பாசையெல்லாம் தோன்றும்.

‘யார் என்ன கூறினாலும் பரவாயில்லை. அவதான் என்னோட மனைவி’ என மனதில் எப்போதோ ஆணி அடித்துவிட்டான். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை ஆடவனால். தன் தாய் தந்தையை எப்படி சமாளிப்பது, பேசுவது எனத் தெரிந்தவனுக்கு அவளை எப்படி சம்மதிக்க வைப்பதென்ற ரகசியம் பிடிபடவில்லை. அன்பு அவளருகில் பேச சென்றாலே, காத தூரம் நகர்ந்துவிடுவாள். காதலியே தன் காதலுக்கு எதிராக இருந்தால், என்னதான் செய்வான் ஆடவன்.

அதையும் மீறி அவன் அழைத்தால் கூட, அதைப் பொருட்படுத்தாத அலட்சிய பாவம் அவளது விழிகளில் தென்படும். அது, அந்த அலட்சியம்தான் அவளை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தை ஒவ்வொரு நொடியும் அவனுள் விதைக்கும்.

சிந்தனையில் உழன்றவனுக்குப் பசித்தாலும், வைராக்கியமாகப் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் அறைக்கதவு திறக்கப்பட, வத்சலா தட்டில் உணவுடன் உள்ளே நுழைந்தார். அதில் அன்பழகன் இதழ்களில் மென்னகை.

“எழுந்திரிச்சு சாப்பிடுங்க சார். பட்னியா கிடக்குறான்...” தட்டை மேஜையில் வைத்தார் வத்சலா. அசையாது படுத்திருந்தான் அன்பு.

“டேய்... எழுந்திரு டா. பெரிய இவன் மாதிரி சாப்பிடாம படுப்பான்” அவனை உலுக்கினார் தாயானவர்.

“ப்ம்ச்... என்னம்மா?” என முறைத்தவாறு எழுந்து அமர்ந்தவன் கையில் தட்டைத் திணித்தவர், “இப்போ சாப்பிட்டு முடி. அப்புறம் பேசுவோம்...” என்றார்.

“எப்போ பேசுனாலும், என் பதில் ஒன்னுதான். அவதான் இந்த வீட்டு மருமக. ஓகேன்னா சொல்லு சாப்பிட்றேன். இல்லைன்னா வேண்டாம்...” என்றவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தார் வத்சலா.

“ஏன் டா, என் பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு இருக்கீயா? ஊர்ல வேற பொண்ணே கிடைக்கலையா டா உனக்கு?” ஆதங்கமாய்க் கேட்ட தாயைப் பார்த்துப் புன்னகைத்தான் அன்பு.

“ம்மா... ஊர்ல இருக்க எல்லாரும் வேதாவாகிட முடியாது மா. அவ, அவ மட்டும்தான் மா”

“ஒரு அம்மாகிட்டே பேசுற மாதிரி பேசுடா”

“அதனால்தான் இவ்ளோ டீசென்ட்டா பேசுறேன் மம்மி” என்றவன் உணவை எடுத்து உண்டுக்கொண்டே, “என் மனசை மாத்தணும்னு ட்ரை பண்றதை விட்டுட்டு அவதான் இந்த வீட்டு மருமகன்னு உன் மைண்ட்ல பிக்ஸ் பண்ணிக்க. அப்புறம் அப்படியே உன்ற வீட்டுக்காரர் மூளையிலயும் இதை பதிய வை. திடுதிடுப்புன்னு ஒருநாள் அவளை இழுத்துட்டு வந்து நிக்கும்போது ஷாக்காகக் கூடாது...” என்றவன் இட்லியை வாயில் வைத்தான்.

“ரொம்ப பேசுற டா நீ. அப்படி எதுவும் செஞ்சுட்டு வந்த, தொலைச்சுடுவேன் தொலைச்சு. முதல்ல இந்த நினைப்பை கைவிட்டுடு டா. உங்கப்பா ஏற்கனவே அந்தப் பொண்ணு விஷயத்துல கோபமா இருக்காரு. அவளை அவருக்குப் பிடிக்கலை...” தீவிர பாவனையுடன் பேசியவரை சில நொடிகள் பார்த்தவன் உண்டுமுடித்து கையைக் கழுவினான்.

“ம்மா, அப்பாவுக்கு வேதாவைப் பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அவக்கூட வாழப்போறது நான்தான், எனக்கு பிடிச்சா மட்டும் போதும்...” பதில் இயம்பியவனின் முதுகில் பட்டென ஒரு அடியைப் போட்டார் வத்சலா.

“ஏன் டா இவ்வளோ பிடிவாதமா இருக்க இந்த விஷயத்துல. அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிச்சா கூட, நான் உங்க அப்பாவைக் கன்வின்ஸ் பண்ணுவேன். ஆனால், அவங்க உன்னைப் பார்த்தாலே, ஏதோ வேண்டாதவனைப் பார்க்குற மாதிரி பார்க்குறாங்க. சரி, அந்தப் பொண்ணுக்கு இஷ்டம் இருந்தா கூட, நம்ம யோசிக்கலாம். எல்லா வழியும் அடைச்சிருக்கு டா. இனி நீ பண்றதுக்கு ஒன்னும் இல்லை...”

“ம்மா, ஏற்கனவே இருக்க வழியில போறதுல என்னம்மா சுவாரஸ்யம் இருக்கு. புதுசா ஒரு வழியை உருவாக்குவோம்...” அலட்சியமாகத் தோளை குலுக்கினான் ஆடவன்.

“நீ எதை நினைச்சு சொல்றேன்னு எனக்கு நல்லா புரியுது டா. ஏற்கனவே என் புருஷனை போலீஸ் ஸ்டேஷன் வரை கூட்டீட்டுப் போய்ட்ட. அதுக்கே உன்னை வெளுத்துருக்கணும். ஏதோ சின்னபையன், தெரியாமப் பண்ணிட்டேன்னு விட்டுட்டோம். இனியொரு முறை அவரை அசிங்கப்படுத்துற மாதிரி எதுவும் செஞ்ச, நீ இந்த வீட்ல இருக்க முடியாது பார்த்துக்கோ...” என்றவர் தட்டை எடுத்துக்கொண்டு நகர,

“ம்மா... இன்னும் என்னை சின்ன பையன்னே நினைச்சுட்டு இருக்காத. ஆறுமாசத்துல சில்வர் ஜூப்ளி செலிபிரேட் பண்ணப் போறேன்...” என்றவன், “கவலைப்படாதே! உன் புருஷனை எங்கேயும் கொண்டுவர மாட்டேன். என்னால அவர் எங்கேயும் தலைகுனிய அவசியம் இல்லை. நானும் என் பொண்டாட்டியும் தனக்குடித்தனம் போய்ட்றோம்...” என்று கத்தியவனின் மேல் குவளையை எறிந்துவிட்டு சென்றார் வத்சலா.

எத்தனை முறை கேட்டும் ஒரே பதிலைப் பலவித கோணங்களில் கூறி தன் தாயைக் கோபப்படுத்துவதுதான் அன்பழகனின் வேலையே. அவருக்கும் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது, வாய் வலி வராதது ஒன்றுதான் குறை. மற்றபடி தினசரி இந்த வாக்குவாதம் வீட்டில் நிகழும் ஒன்று.

உண்ட மயக்கத்தில் நன்றாய் உறங்கி எழுந்தான் அன்பழகன். அறிவு அப்போதுதான் கல்லூரி முடித்து வந்திருக்க, “என்ன டா எக்ஸாம் எப்படி பண்ண, ஈஸியா?” எனக் கேட்டவாறு சோம்பல் முறித்தான்.

“ஆங்... நல்லா பண்ணியிருக்கேன் டா. இந்த மந்த்தோட காலேஜ் முடியுது. அடுத்து ஜாப்தான்” அறிவு புன்னகைக்கவும், “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் டா. முதல்ல நல்லபடியா ஸ்டடீஸை முடி” எனத் தமையன் தோளில் தட்டினான் அன்பு.

“இந்தா டா காஃபி...” பெரியவன் கையில் குளம்பியைக் கொடுத்த வத்சலா சின்னவனை முறைத்துவிட்டு செல்லவும்,
“டேய் என்ன டா?” என அறிவு வினவினான்.

“ப்ம்ச்... ஒன்னும் இல்லை டா. உண்மையைச் சொன்னேன். உங்கம்மாவுக்குக் கோபம் வந்துடுச்சு” என்ற தம்பியை நம்பாதப் பார்வைப் பார்த்த அறிவு, “நீ எதாவது தேவையில்லாம பேசியிருப்ப டா” என்றான்.

“அட... நான் எதுக்குடா தேவையில்லாததை பேச போறேன். சீக்கிரம் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனிக்குடித்தனம் போறேன்னு சொன்னேன். உங்கம்மாவுக்கு கோபம்”

“ஏன் டா! டெய்லி அம்மாவை கோபப்படுத்திட்டே இருக்க?” அறிவழகன் அன்பை முறைக்கவும், “போடா டேய்” என்றவன், வெளியே கிளம்பிவிட்டான்.

சரியாக அதேநேரம் முத்துக்கிருஷ்ணன் உள்ளே நுழைய, வெளியே செல்பவனை முறைத்தார் அவர். அதை ஒரு நொடி கூட பொருட்படுத்தாதவன், இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பறந்தான்.

மறுநாள் எப்போதும் போல முகிலன் சென்று கடையைத் திறந்து வைத்துவிட்டு அன்புவிற்காகக் காத்திருக்க, இவன் கிளம்பி சென்று அந்தத் தேநீர் விடுதியின் முன்பு நின்றான். நேரம் சரியாக ஒன்பது முப்பது எனக் காட்டவும், வேதவள்ளி பேருந்திலிருந்து இறங்கினாள்.

“இந்தாங்க அண்ணா...” கடைக்காரரிடம் பத்து ரூபாய் தாளைத் திணித்தவன், சாலையைக் கடந்து அவனிருக்கும் சாலையின்புறம் வந்தவளுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

வேதவள்ளி அந்தத் தெருவின் முற்றிலிருந்த ஒரு வணிகவளாகத்தில் பணிபுரிகிறாள். நல்ல மதிப்பெண் எடுத்தும் படிக்க வாய்ப்பில்லாது போனது பெண்ணிற்கு. அம்சவேணிக்கு, தான் கல்லூரி சேர்வதில் விருப்பமில்லை எனத் தெரிந்து, தானே அடம்பிடித்து வேலைக்கு சேர்ந்திருந்தாள். இங்கு அவள் வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களாகிறது.

அடர் நீல நிற சுடிதார்தான் பணியாளர்களுக்கான சீருடை. அதை நேர்த்தியாய் உடுத்தியிருந்தவள் முடியை தளரப் பின்னலிட்டிருந்தாள். மாநிறத்திலிருந்தவளின் முகம் மஞ்சள் பூசி அந்த வெயிலுக்கு விகசித்தது. எப்போதும் மங்களகரமாகத்தான் வேலைக்கு வருவாள். குனிந்த தலை ஒருவரைக் கண்டும் இதுவரை நிமிர்ந்தது இல்லை. அதில் அன்புவும் அடக்கம். ஆனாலும் சளைக்காது இரண்டு வருடமாக அவள் பின்னே சுற்றி வருகிறான் ஆடவன்.

வேதவள்ளியின் நடைக்கு ஈடுகொடுத்து மெதுவாக நடந்தவன், “உடம்பு எப்படியிருக்கு வேதா?” என அக்கறையாக வினவினான்.

தினமும் தான் நடக்கும்போது உடன்வந்து, வணிக வளாகம் வந்ததும் சென்றுவிடுபவன், இன்று பேசவும், ஆச்சரியமாய் இருந்தது பெண்ணுக்கு. ஆனால், முகத்தில் எதையும் காட்டவில்லை. எப்போதும் போல அதே அலட்சிய பாவனைதான் அவளிடம்.

“உடம்பு முடியலைன்னா வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?
தேவையில்லாம எதுக்கு வேலைக்கு வந்த?” இதைக் கேட்டதும் பெண்ணின் இதழ்களில் அலட்சியப் புன்னகை.

“உங்க பெரியம்மா அந்தப் பொம்பளை...” என்றவன் வேறுபேசும் முன் அவன்புறம் திரும்பி கையைக் கட்டிக்கொண்டு நின்றவளின் முகம் முழுவதும் முறைப்பு.

“ப்ம்ச்...” என நெற்றியைத் தேய்த்தவன், “இதெல்லாம் தேவையாடி உனக்கு? அடிமைசாசனம் எழுதுறவங்களுக்குக் கூட கருணை காட்டுவாங்க. அதுகூட இல்லாத வீட்ல இருக்கணும்னு என்னடி கட்டாயம் உனக்கு?
தடிமாடு மாதிரி ஒரு பிள்ளையை பெத்துவிட்ருக்காங்களே! அவன் எல்லாம் சோத்தைத் திங்கத்தான் லாய்க்கா?” எனக் கேட்டவன் கோபத்தில் கையை மடக்கினான்.

அத்தனை கோபம் அம்சவேணி மற்றும், அவருடைய கணவர் முருகைய்யா, அவர்களின் மகனின் மீதும். இத்தனை பேர் வீட்டிலிருந்தும் உடல்நிலை முடியாதவளை வேலை வாங்கவேண்டும் என்று அவசியமென்ன? வாடி வதங்கிப் போயிருந்தாள் பெண். மூன்று நாட்கள் காய்ச்சலிலே கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் சதையும் காணாமல் சென்றிருக்க, அவளது முகத்தைப் பார்த்து ஆதங்கத்தில் கொட்டியிருந்தான் வார்த்தைகளை.

அவனுக்குப் பதில் பேசச் சென்றவளின் கவன
ம் அன்புவிற்குப் பின்னே வாகனத்தில் சென்ற எழிலரசன் மீது படிய, ஐயோ! என மூச்சடைத்துப் போனாள் பாவை.

தொடரும்...














 
Well-known member
Messages
551
Reaction score
389
Points
63
அப்படி ஒரு லவ்வு
 
Top