• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 19
அன்பழகன் உள்ளே நுழைய, நாற்காலியிலிருந்து எழுந்தாள் வேதா. முகம்
கடுகடுவென்றிருந்தது.
“என்ன, உங்க பெரியா ஆப்பா கிளம்பிட்டாரா?” நக்கலாக வினவினான்.
“ப்ம்ச்... எதிரியா இருந்தாலும் வீடு தேடி வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடணும். அதான் மனுஷத் தன்மை. அவரை ஒரு வார்த்தை உள்ள வாங்கன்னு கூப்பிட்டா, குறைஞ்சு போய்டுவீங்களா?” படபடவென பொரிந்தாள் பெண்.
“ஓ...” என்றவன் சட்டைக்கையை இழுத்துவிட்டுக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தான்.
“அவர் எவ்வளோ சங்கடப்பட்டுப் போய்ட்டாரு. அப்படியென்ன உங்களுக்கு கோபம். இதெல்லாம் நல்லதுக்கு இல்லை...” கத்திக்கொண்டிருந்தவளைப் பார்த்துக் காதைக் குடைந்தான் அன்பழகன்.
அதைப் பார்த்ததும் வேதவள்ளிக்கு கோபம் சுர்ரென்றது. “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல. இந்த விஷயம்னு இல்லை. நான் நிறைய தடவை கவனிச்சுட்டேன். கோபம், திமிர், யாரா இருந்தாலும் மரியாதை கொடுக்குறது இல்லை. இதெல்லாம் நல்ல பழக்கமா? இதை மாத்திக்கப் போறீங்களா? இல்லையா?” என பல்லைக் கடித்துக்கொண்டு வினவினாள்.
“உண்மையைச் சொன்னா, உனக்குத்தான் கோபம் வரும். டென்ஷனாகி கத்துவ. சொல்லவா?” என கேட்டவன் குரலில் அலட்சியம் நிறைந்து கிடந்தது.
“அப்போ நீங்க உங்களை மாத்திக்க மாட்டீங்க
அப்படித்தானே?” வேதாவின் குரல் சத்தமாக ஒலித்தது.
சுவாதீனமாக எழுந்து சென்று கதவை அடைத்தவன், “முடியாது...” என்றுவிட்டு, அறைக்குள் நுழைந்தான். அவன் பதிலில் கொதித்துப் போனாள் மனைவி.
‘எத்தனை அலட்சியம்?’ எனத் தோன்ற, விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவள், “நாளைக்கு என் அப்பா வந்தாலும், அவர்கிட்டேயும் இப்படித்தான் நடந்துக்குவீங்களா?” காரமாய்க் கேட்டாள்.
அவளைப் பார்த்து நெற்றியைச் சொரிந்தவன், “லூசா டி நீ, சும்மா எல்லார்க்கிட்டேயுமா நான் இப்படி நடந்துக்குறேன்? வயசாம், வயசு... அவங்க அவங்க நடந்துக்குறதை வச்சுத்தான் மரியாதை கொடுக்குறதும், கொடுக்காததும். உங்க அப்பான்னு இல்லை, என்னைப் பெத்தவரா இருந்தாலும் சரி. அவங்க நடந்துக்குறதை வச்சுத்தான் மரியாதை...” என்றவன் அவளருகே சென்று, “உன் விஷயத்துல யாரா இருந்தாலும் என் ரியாக்ஷன் இப்படித்தான். அந்த வீட்ல என்னமோ உன்னை மகாராணி மாதிரி வச்சிருந்த போல அலட்டுறடி நீ‌. ஏழு வருஷம் வேலைக்காரியா வச்சிருந்தாங்க. ஏன் இந்தாளும் அங்கதானே இருந்தாரு, கேட்க வேண்டியதுதானே? பொண்டாட்டி முந்தானையை பிடிச்சு சுத்தீட்டு இருந்தாரா?” எனக் கேட்டவன் குரலில் அப்படியொரு நக்கல்.
“போதும் நிறுத்துங்க. உங்ககிட்டே பேசுனேன் பாருங்க. என்னை சொல்லணும். சே...” என்றவளுக்கு இயலாமையில் விழியோரம் நீர் துளிர்த்தது. விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள்.
இரவு இருவருமே உணவு உண்ணவில்லை. அன்பழகன் அறையில் படுக்க, போர்வையையும் தலையணையும் எடுத்துவந்து கூடத்தில் விரித்துப் படுத்துவிட்டாள் வேதா. அவளை சில நொடிகள் பார்த்தவன், தோளை குலுக்கிக்கொண்டு படுத்துவிட்டான். மனம் மனைவியருகே சென்று படுக்க உந்த, தலையணையில் முகத்தைப் புதைத்துக்
கொண்டான் அவன். திருமணம் முடிந்து இருவருக்கும் இடையே வரும் முதல் ஊடல். மனைவியருகே இல்லாததால் உறக்கம் விழிகளை எட்ட மறுக்க, அதை விரட்டிப் பிடித்து ஒருவழியாய் நித்திரையை தழுவினான் அன்பழகன்.
வேதவள்ளிக்குமே விழிகள் கலங்கியபடி இருக்க, துடைத்தவாறே படுத்திருந்தாள். மனம் கணவன் வந்து தன்னை சமாதானம் செய்வான் என எண்ணியிருக்க, அவன் உறங்கியது மேலும் அவளைக் காயப்படுத்தியது. ‘போடா... போ. நானாக உன்னிடம் பேச மாட்டேன். நீயாக வந்து பேசினாலும், அத்தனை எளிதில் சமாதானமடைய மாட்டேன்’ என மனதில் நினைத்துக்கொண்டே உறங்கிப் போனாள் அவள்.
மறுநாள் காலையில் எழுந்தவள், சமைத்து வைத்துவிட்டு, கல்லூரி கிளம்ப ஆயத்தமானாள். அன்பழகனும் எழுந்து குளித்து முடித்தான். காலை உணவை இருவரும் உண்ணவில்லை, ஆனால் அவனுக்காக சமைத்து வைத்துவிட்டாள் மனைவி. எந்தவித பேச்சுக்களும் இல்லை இருவருக்கும் இடையில். அவள் வெளியே சென்றதும், கணவனும் தன் இருசக்கர வாகனத்தை இயக்க, அமைதியாக அவன் பின்னே அமர்ந்தாள் வேதவள்ளி.
அவளைக் கல்லூரியில் அன்பழகன் இறக்கிவிட்டதும் அவன் முகம்கூட காணாது சென்றுவிட்டாள் பெண். நடந்து செல்பவளையே சில நொடிகள் வெறித்தான் ஆடவன். பின் தோளை குலுக்கிக்கொண்டு விடை பெற்றான்.
காலையிலும் மாலையிலும் பேசும் அலைபேசி உரையாடல் நிறுத்தப்பட்டது. வேதா அழைக்கவில்லை. அன்பழகன் இரண்டு முறை அழைத்தும் அழைப்பை ஏற்காதவள், குறுஞ்செய்தி அனுப்ப, அவனும் ‘போடி...’ என்றுவிட்டான்.
அந்த வார இறுதியில் அன்பழகன் மனைவியை அழைக்க வர, அமைதியாய் அவனுடன் வந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அன்பு அவளிடம் பேச முயற்சிக்க, அதைக் கவனிக்காதது போல அறைக்குள் நுழைந்தவள் உடைமாற்றி இருவருக்கும் இரவு உணவை சமைக்க ஆரம்பித்தாள்.
என்னதான் போ என்றுவிட்டாலும் இந்தப் பிரிவு கணவனை அதிகம் வாட்டியது என்னவோ உண்மை. வேதவள்ளியின் முகம் பார்க்காமல், குரல் கேட்காமல் எல்லாம் அவனால் நாட்களை எளிதில் கடத்த முடியாது.
சமையலறைக்குள் நுழைந்தவன், “வேதா...” என இருமுறை அழைத்தும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
“ஏய்! மனுஷன் கூப்பிட்றேன் இல்லடி. மதிச்சு என்னென்னு கேட்குறீயா?” பல்லைக் கடித்தவனை மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
“உங்களை அலட்சியம் செஞ்சா, கோபம் வருதோ? இதே மாதிரிதானே அன்னைக்கு வீட்டுக்கு வந்தவருகிட்டே நீங்க நடந்துக்கீட்டீங்க?” அமைதியாய் அழுத்தமாய்க் கேட்டாள் பெண்.
“ப்ம்ச்...” என நெற்றியைச் சுருக்கியவன், “உங்க பெரியப்பா பெரிய சுதந்திர போராட்ட தியாகி. அவரை நாங்க அவமதிச்சுட்டோம்...” அதே நக்கல் தொனிதான் அவனிடம்.
அதில் கோபம் பொங்கினாலும், முகத்தில் எதையும் காட்டதவள், “என்னைக்கு நீங்க செஞ்சது தப்புன்னு ரியலைஸ் பண்றீங்களோ, அப்போ வந்து என்கிட்ட பேசுங்க...” என்றாள்.
“ஹே! என்னடி தப்பு தப்புன்னுட்டு இருக்க...” என்றவனுக்கும் கோபம் தாறுமாறாக வந்தது. “அப்படியென்ன தப்பைக் கட்டுண்ட நீ என்கிட்ட? பேசலைன்னா போடி...” என்றவன் விறுவிறுவென வெளியே சென்று இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தான்.
செல்லும் அவனையே வெறித்தவளின் விழிகள் பனிக்கத் தயாராக உதட்டைக் கடித்து அதை அடக்கிக்கொண்டாள். ஏனோ மனது முழுவதும் பாரம் சூழ்ந்துகொண்டது. உண்ணத் தோன்றவில்லை. எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, கூடத்தில் போர்வையை விரித்து அமர்ந்துவிட்டாள்.
விழிகள் வாயிலையே வெறித்த வண்ணமிருந்தன. நேரம் சென்று கொண்டேயிருந்ததே தவிர, அன்பழகன் வரவேயில்லை. மனம் கொஞ்சம் பதட்டமடைய, அலைபேசியை எடுத்தவள், கோபத்தை விடுத்து அவனுக்கு அழைத்தாள். பல முறை அழைப்புச் சென்றும் ஏற்கப்படாது போக, அடிவயிற்றில் பயபந்து உருளத் துவங்கியது. விழிகள் கடவுளிடம் ஏதோ கோரிக்கையை வைக்க, விழிகள் நீரை உகுக்க தயாராகின.
மணி பன்னிரெண்டைத் தொடவும், வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அன்பழன். கணவன் வரும் வரை வேதவள்ளியிடம் உயிரே இல்லை. அத்தனை தவித்துப் போனாள் பெண்.
அவன் வந்ததும் எழுந்து நின்றவளுக்கு விழிகளிலிருந்து நீர் குபுகுபுவென வழிந்தது.
விறுவிறுவென அன்பழகன் முன்னே சென்று வழியை மறைத்தவள், “டைமை பார்த்தீங்களா? எத்தனை மணிக்கு வர்றீங்க? உங்களுக்காக இங்க ஒருத்திக் காத்திருப்பேன்றது நினைவுல இருக்கா? இல்லையா?” என கேட்டவளின் குரல் உடைந்து போனது. அழக்கூடாது என நினைத்தும் அழுகையை அடக்க முடியவில்லை அவளால். கடந்த இரண்டு மணி நேரம் இரண்டு யுகமாக கழிந்ததை பெண் மட்டுமே அறிவாள்.
கற்பனைப் புரவி பலவழிகளில் தறிக்கெட்டு ஓட, கணவனுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என உயிர் மொத்தமும் பயம் ஆக்கிரமித்திருந்தது. அவன் வந்ததும்தான் மூச்சையே வெளிவிட்டாள். அவனில்லாது போனால் என்ன ஆவேன்? என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லை.
‘நான் இல்லாம போனால் கூட, படிப்பு உன் வாழ்க்கையை மூவ் பண்ண உதவும்...’ என்றவனின் வார்த்தைகள் செவியில் ஒலித்து இதயத்தின் இயக்கத்தை தடை செய்திருந்தது. அப்பப்பா! அவன் வரும் வரை உள்ளம் பட்டபாட்டை வார்த்தைகளில் எல்லாம் வடிக்க முடியாது. முதன்முதலில் யாருமற்று அம்சவேணி வீட்டில் நிற்கும் போது ஏற்ப்பட்ட அதே உணர்வுதான், அடிவயிற்றிலிருந்து எழ, பெண் செத்தே போனாள்.

மற்றொரு மனம், 'ஏதும் வேலையாகச் சென்றிருப்பான். வந்து விடுவான்' என சமாதானம் செய்ய விழைய, அதையெல்லாம் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூச்சடைத்துப் போனது. யாரேனும் அருகிலிருந்தால் கூட கொஞ்சம் பலம் வந்திருக்குமோ? என்னவோ? யாருமற்றிருந்த வீடும் அதிகமாய் அவளை பயம் கொள்ளச் செய்திருந்தது. துடித்துப் போனாள் பெண்‌. அதுதான் இப்போது கேவலாக வெளிப்பட்டது.
கோபம் கரை கடந்துவிட்ட நிலையில்தான் வெளியேறியிருந்தான் அன்பழகன். இருசக்கர வாகனத்தில் சுற்றியவனின் அலைபேசி அழைப்பு வர ஏற்றுப் பேசினான். அவசரமாய் காவல்நிலையத்தில் ஒரு வேலை என அழைக்க, நேரத்தைக் கருத்தில் கொள்ளாது சென்றுவிட்டன். அரைமணி நேர வேலைதான் என்றாலும் அங்கு சென்றுவிட்டு வீடு திரும்ப நேரம் பிடித்துக்கொண்டது. இடையில் அவள் அழைத்த அழைப்புகள் யாவும், அலைபேசியை அணைத்து வைத்திருந்ததால், அவனுக்குத் தெரியவில்லை.
மனைவி தனக்காக காத்திருப்பாள் எனத் தாமதமாகவே தோன்ற, பதறியபடியே ஓடி வந்திருந்தான்.
அழுதுக்கொண்டிருப்பவளைப் பார்த்து கோபமெல்லாம் வடிந்துவிட்டது அன்பழகனுக்கு. அவளது அழுகுரலில் தவித்துப் போனவன், “வேதா, சாரி டி...” என பெண் தோளைத் தொடவும், “தொடாதீங்க என்னை...” எனக் கோபமாக அவன் கரத்தை தட்டிவிட்டாள்.
“ஆம்பளை, நீங்க சண்டை போட்டா இப்படி வெளிய சுத்தீட்டு வரலாம். இதே நாங்க போய்ட்டு இப்படி வர முடியுமா? முடியாதுன்றதால தானே இந்த ஹீரோயிசம்?” எனக் கேட்டாள் குரல் மொத்தமும் கோபம்தான்.
“ப்ம்ச்... வேதா...” என்றவன் கூற வருவதைக் கூட கருத்தில் கொள்ளாது சென்று படுத்துவிட்டாள். இருந்தும் உடல் நடுக்கம் குறைந்தபாடில்லை. அழுதாள், உதட்டைக் கடித்து அடக்க முயன்றும் அருவியாய் விழிகளில் கொட்டியது. தனக்கென்றிருக்கும் ஒரே உறவு, கணவன் மட்டும்தான். அவனுமின்றி போய்விட்டால், நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை பெண்ணால். சர்வ அவையங்களும் சிறிது நேரம் இயக்கத்தை நிறுத்தியிருந்தன. நினைக்க நினைக்க ஆற்றாமையும் கோபமும்தான் வேதவள்ளிக்கு.
சில நொடிகள் அவளையே வெறித்தவன், மெத்தையை அப்படியே விட்டுவிட்டு, போர்வையை எடுத்து வந்து அவளுக்கு சற்றுத்தள்ளி விரித்து படுத்துக்கொண்டான்.
அழுதழுது வேதவள்ளி சிறிது நேரத்திலே உறங்கியிருக்க, மெதுவாய் நகர்ந்து அவளருகே சென்று படுத்தான். முகம் முழுவதும் கண்ணீர் தடயங்கள். அப்போதும் லேசாக விழியோரம் ஈரம் கசிந்தது. தன்னையே நிந்தித்துக்கொண்டவன், லேசாய் அவளைத் தன்புறம் திருப்பினான்.
ஒருபக்கமாய் படுத்தது கை வலித்தது போல. வேதாவும் மறுபுறம் திரும்பிப் படுக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவளது தலையைத் தன் கரத்திற்கு மாற்ற, அவளும் உறக்கத்திலே கணவன் ஸ்பரிசத்தை உணர்ந்து அவனோடு ஒன்றிப்படுக்க, அணைத்துக்கொண்டான் இறுக்கமாய். ஒருவாரமாக அவளது வாசனை, ஸ்பரிசம் இன்றி கணவனுக்கு கிறுக்குப் பிடித்துப் போனதென்னவோ உண்மை. நீண்ட நேரம் கழித்தே உறங்கினான் அன்பழகன்.
காலையில் புரண்டு படுத்த வேதவள்ளியின் நாசி கணவன் ஸ்பரிசத்தை உணர்ந்தது. அவனோடு மேலும் பெண் ஒன்ற, ஆடவன் கைகள் அன்னிச்சையாய் அவளை தன்னுடன் இணைத்துக்கொண்டன. விழிகளைத் திறக்காது கணவன் அருகாமையை உள்வாங்கியவள், பிறகு எழுந்து சென்று தேநீரை தயாரித்தாள்.
இரண்டு நாட்களும் அமைதியாய் கழிந்தது. கல்லூரிக்குத் தயாராகி நின்றவளிடம் அன்பழகன் ஏதோ கூற வர, அதைக் கேட்க விரும்பாது கடந்துவிட்டாள் பெண்.
சரி பொறுமையாய் அவளிடம் பேசி சமாதானம் செய்யலாம் என கல்லூரியில் இறக்கிவிட்டு வந்தான். இடையில் பல முறை அழைத்தும், அதற்கு எதிர்வினையாற்றவில்லை வேதவள்ளி. அடுத்த வாரமும் இதேதான் தொடர்ந்தது.
அன்பழகன் எத்தனையோ முறை அவளிடம் பேசச் சென்றும், கல்லாய் இறுகிப் போனது போலத்தான் இருந்தாள் பெண். அவன் செய்த தவறை ஒப்புக்கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்ளும் வரை, பேசவே கூடாது என அழுத்தமாய் இருந்துவிட்டாள் மனைவி.
அவளது அழுத்தத்தில் அதிகமாய் பாதிக்கப்பட்டது அன்புதான். பல வழிகளில் முயன்றும் மனைவியை சமாதானம் செய்ய இயலவில்லை. ஒரு மாதம் முடிந்திருந்தது அவர்களுக்கு இடையே சண்டை நிகழ்ந்து. வேதா ஒரு படி கூட தன்னிலையிலிருந்து இறங்கி வரவேயில்லை.
கணவன் திண்டாடிப் போனான். அவளோடு பேசாத நாட்களெல்லாம் நரகத்தை விட கொடுமையாக இருந்தது. சரி பேசாவிட்டாலும் பார்த்துவிட்டாவது வரலாம் என இல்லாத வேலையை உருவாக்கிக்கொண்டு மதுரைக்குச் சென்றான்.
தன்னைக் காண வந்தவனிடம் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை மனைவி. ‘என்னைக் காணத்தான் வந்தாயா?’ என்பது போல பார்த்தவள், ‘கண்டுவிட்டாய் என்றால், கிளம்பு’ அலட்சியமாகப் பார்த்து வைக்க, தவித்துப் போனான் அன்பழகன் மனைவியின் பாரா முகத்தில். ஆனாலும் அவனால் தன்னியல்பை மாற்றிக் கொள்ள முடியாது என்பதே உண்மை. அத்தனை எளிதில் பிறவி குணத்தை மாற்ற முடியாதே! அதுவும் வேதவள்ளி விஷயத்தில் சிறு தவறென்றாலும், அவர்களை மன்னிக்க மனம் துளி கூட இடம் கொடுக்கவில்லை.
‘சே! இந்தப் பெண்கள் எல்லாம் கல்நெஞ்சக்காரர்கள். அவர்களுக்கெல்லாம் அன்பு, பாசம், அக்கறை என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தமே தெரியாது’ என மனதில் புலம்பியவாறே வீட்டிற்கு திரும்பிச் சென்றான்.
அடுத்தமுறை வரும்போது எப்படியாவது அவளை சமாதானம் செய்ய வேண்டும் என யோசித்தவன், மனைவிக்குப் பிடித்த எதாவது ஒரு பொருளை பரிசளிக்கலாம் என தேடி தேடி கொலுசு ஒன்றை வாங்கியிருந்தான். சென்ற முறை அவளது காலை எதேச்சையாக கவனிக்கும் போது வெறுங்காலாக இருக்க, ஆசையாய் கொலுசு வாங்கியிருந்தான்.
மறுமுறை வேதா வரும்போது அதை மேஜை மீது வைத்துவிட்டான். வீட்டையே சுற்றி வந்தவளின் கண்களில் அது படவே இல்லை. பொறுமையாய் அவள் பின்னே கண்களை சுழலவிட்டான் ஆடவன்.
சிறிது நேரத்திலே எதையோ எடுக்க வந்த வேதவள்ளியின் விழிகளில் கொலுசு தென்பட்டது. அதை எடுத்துப் பார்த்தவளின் விழிகள் தன்னை ஆர்வமாய் நோக்குபவனைப் பார்க்க, அன்பழகனும் லேசான புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
கொலுசை எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்தவள், விறுவிறுவென அதை எடுத்துக்கொண்டு சென்று அலமாரியில் வைத்து பூட்டவும், அன்பழகன் நொந்து போனான்.
“மச்சான், பொண்டாட்டியை எப்படி டா சமாதானம் செய்றது?” என முகிலனையும் ஒருவழியாக்கியிருந்தான்.
மேலும் இரண்டு வாரங்கள் இதே போலத்தான் கடந்திருந்தன. அன்பழகன் முயற்சிகள் யாவும் தோல்வியையே தழுவியிருந்தன.
திங்கட்கிழமை காலை அன்று, அன்பழகன் நன்றாக உறக்கத்திலிருக்க, மெல்லிய கொலுசொலி காதை நிறைத்தது. கனவென நினைத்துப் புன்னகைத்தவன் மறுபுறம் திரும்பி தூக்கத்தைத் தொடர, மீண்டும் அந்தக் கொலுசொலி அவனைத் தொல்லை செய்தது.
“ப்ம்ச்...” என சலித்துக்கொண்டே எழுந்து அமர்ந்தவனின் விழிகளை நிறைத்தாள் பெண். அசந்து போனான் அன்பழகன். அயர்ந்து கூடப் போனான் என்பதே உண்மை.
அவன் வாங்கிக் கொடுத்த தங்க நிற ஜரிகை வைத்த புடவையை அழகாய் மடிப்பெடுத்து உடுத்தியிருந்தாள். தலைக்கு குளித்திருந்தவள், முன்புறம் மட்டும் எடுத்துக் குத்தி, மீதமிருந்த முடிக்கற்றைகளை விரித்துவிட்டு மல்லிகைப் பூவை சூடியிருந்தாள்.
சற்றே உடலை வளைத்துக் குறுக்கி கண்ணாடி உயரத்திற்கு குனிந்து விழிகளில் மையிட்டவளுடன் உலகம் உறைந்து போன உணர்வு.
தன்னையே இமைசிமிட்டாமல் பார்க்கும் கணவனை இம்மி அளவிற்கு கூட மதிக்காது, அறைக்குள் நுழைந்திருந்தாள். அன்பழகனுக்குத்தான் மூச்சடைத்துப் போனநிலை.
‘சே...’ என முன்னுச்சி முடிகளைக் கோதிக்கொண்டவனின் மூச்சு அனலாய் வெளிவந்தது.
‘என்னை எத்தனை பாடுபடுத்துகிறாள் இவள்?’ என நொந்து கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான். இப்போது அவர்களது படுக்கை, ஒற்றை அறையிலிருந்து நிரந்தரமாக கூடத்திற்கு குடி வந்திருக்க, வாங்கிய மெத்தை நிராதரவாக அங்கேயே ‌கிடந்தது.
இரண்டு எட்டுகள் வைத்தவனைக் கடந்து சென்றவள், மீண்டும் கண்ணாடி முன்பு நின்று வளையலை மாட்டினாள். காதில் அணிகலன்களைப் பூட்டினாள். அவளைப் பார்த்துக்கொண்டே கழிவறைச் சென்று வந்தான் அன்பழகன்.
வேண்டுமென்றே கூடத்திற்கும் அறைக்கும் நடந்து கொண்டிருந்தவளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்திருந்தவனின் மனம் முழுவதும் நிறைந்து போயிருந்தாள் மனைவி. அவள் சாதரணமாக சேலை உடுத்திருந்தாலே, அவனுக்கு அத்தனைப் பிடிக்கும். இப்போது வேதா இத்தனை அழகாய் இருந்து தொலைத்தால், அவனும் என்னதான் செய்வான்.
ஏதோ தவறு செய்துவிட்டு தன் அன்னையைப் பாவமாகப் பார்க்கும் குழந்தை போல முகத்தை வைத்து, விழிகளை அவள் பின்னே சுழலவிட்டுக் கொண்டிருந்தான் அன்பழகன். அப்படி ஒரு மனிதன் அங்கிருக்கிறான் என்பதை கூட, தான் உணரவில்லை என்பது போலத்தான் வேதாவின் செய்கைகள் இருந்தன.
‘கடவுளே!’ என நெற்றியை சொரிந்தவன், அவள் அறைக்குள் செல்லவும் பின்னே நுழைந்தான்.
“வேதா...” என அழைத்தவனின் குரல் காற்றாய் வெளிவந்தது. நிச்சயமாக அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. தொண்டையை செருமிக்கொண்டான். சிறிய நாற்காலியை எடுத்துப்போட்டு அலமாரி மீதிருந்த எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள் வேதவள்ளி.

“என்னென்னு சொல்லு டி. நான் எடுத்துத் தர்றேன்...” என்றவன் அருகில் வருவதற்குள்ளே வேதவள்ளி லேசாகத் தடுமாற, அவளது தோளைப் பிடித்து தாங்கியிருந்தவனின் முகம் பெண்ணின் கழுத்தில் பதிந்தது. அவள் சூடியிருந்த மல்லிகையும் பெண்ணுக்கே உரிய பிரத்யோக மணமும் சேர்ந்து அவனது மூளையை மங்கச் செய்து செயலிழக்கச் செய்தது எல்லாம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை.
அவனிடமிருந்து பிரிந்தவள் எதுவும் நடவாதது போல சேலையை சரிசெய்து கொண்டே கூடத்திற்கு செல்ல, ‘இவளை... பொறுமையா சொன்னா எல்லாம் புரியாது. அடிதடி, அடாவடிதான் சரிவரும்...’ என அவள் பின்னே சென்றான் அன்பழகன்.
































































 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
உனக்கு மட்டும் தான் கோபம் வருமா?
 
Top