• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 17
தன் முன்னே சிரிப்புடன் கையை நீட்டியவனை முறைக்க முயன்று தோற்றவள், அறைக்குள் நுழைந்து உடை மாற்றி வந்தாள்.‌ இன்னும் அன்பழகன் அதே இடத்தில்தான் நின்றான்.
“உனக்காகத்தான் வேதா வாங்கிட்டு வந்தேன்...” முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினான் அன்பழகன்.
கோபமாய் இருப்பது போல முகத்தை வைத்துக்
கொண்டவள், “தேவையில்லை...” என்று சடைத்தவாறு சமையலறைக்குள் நுழையப் போக, அப்படியே அவளைக் கைகளில் அள்ளியிருந்தான் கணவன்.
அதில் அதிர்ந்த வேதவள்ளி, “எ... என்னப் பண்றீங்க?” படபடத்துப் போன குரலில் வினவினாள்.
அவளை நாற்காலியில் அமர வைத்து, “ஷ்...” பேசக்கூடாது என விரலை உதட்டில் வைத்து சைகை செய்தவன், தான் வாங்கி வந்த மெட்டியை அவளது காலில் அணிவித்தான்.
‘சரியான அளவில் வாங்கி வந்திருக்கிறானே!’ என ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் வேதா.
இன்று கடையில் உடன் வேலை பார்க்கும் அக்கா கூட, ‘கால்ல மெட்டிப் போடு வேதா. அதான் கல்யாணமான பொண்ணுங்களுக்கு அழகு’ எனக் கூறியதால், அவனிடம் வாங்கி வரச் சொல்லலாம் என பாவை எண்ணியிருக்க, தன் எண்ணத்தை செயலாக்கி இருந்தவனை விழியகலாது பார்த்தாள் பெண்.
ஒரு காலில் மெட்டியை அணிவித்தவன் நிமிர்ந்து தன்னையே நோக்குபவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டு, மீண்டும் குனிந்து மற்றொரு காலில் அணிவித்து நிமிர்ந்தான். வேதாவின் கால்கள் அவனுடைய முட்டியின் மீதிருக்க, அமைதியாய் அவன் செய்கைகளை அவதானித்திருந்தாள் பெண்.
‘ஏன்?’ எத்தனை முறை தோன்றிய கேள்வி. அப்போதும் உதித்து தொலைத்தது. காவல்நிலையத்தில் அத்தனை பேர் இருக்கும் போது கூட, துளி பயமின்றி திமிராய் நின்றவன், அடிபணிதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமென்ன எனக் கேட்பவன், அவன் இப்போது தனக்கான நேசத்துடன் அடிபணிந்து கனிந்த முகத்துடன் நிற்கின்றான். அவன் முகம் முழுவதும் மென்மை படர்ந்திருந்தது‌. யாருமே நம்பமாட்டார்கள் இதைக் கூறினால், அப்படி இருந்தது கணவனின் செயல்கள்.
அவளை, அவளது யோசனைப் படிந்த முகத்தைக் குறும்புடன் பார்த்தவன் குனிந்து மெட்டியணிந்த விரலில் முத்தமிட்டான். அவனின் இதழின் ஈரம் உணர்ந்ததும் பதறி எழுந்தாள் வேதா. உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றான் அன்பு.
‘எத்தனை புன்னகை? என்னிடம் மட்டுமா? வெளியே சென்றால், உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டது போல் வைத்திருப்பான். இவனுக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா என்ன?’ என வேதவள்ளியே ஆச்சரியப்பட்டிருக்கிறாள். ஆனால், அப்படிப்பட்டவன், இந்த இரண்டு நாட்களும் புன்னகை முகமாய் வளைய வந்தான். ஏதோ, அந்தச் சிரிப்பு அவன் முகத்திலே தங்கிவிட்டதொரு பாவனைதான். அது அவளை ஏதோ செய்தது. வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. ஆனால் அதிகம் பிடித்தது. எப்போதும் பிடிக்குமென்று கூடத் தோன்றியது.
“என்ன டி?” எனக் கேட்டு தலையைக் கோதியவனின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவள், “ஏன்?” என வினவினாள்.
“என்ன ஏன்?” புரியாத பாவனை அன்பழகன் முகத்தில்.
“இல்லை ஏன் என்கிட்ட மட்டும் இப்படி... அது...” எனத் தயங்கியவள், “என்னை ஏன் இவ்வளோ பிடிச்சிருக்கு உங்களுக்கு?” என வினவினாள்.
அந்தக் கேள்வியில் ஆடவன் முகத்தில் புன்னகை ஜனித்தது. முகம் முழுவதும் படர்ந்த புன்னகையுடன் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான். பதிலுக்காக அவன் முகத்தையை பார்த்திருந்தாள் வேதவள்ளி. அவனுக்கே விடை தெரியாத கேள்வியாகிற்றே.

தனக்குள்ளே இந்தக் கேள்வியை அத்தனை முறை கேட்டிருக்கிறான் அன்பழகன். அப்படியிருக்கையில் அவளிடம் என்ன கூறுவான். நேசத்தை, அன்பை விளக்கி உவமைப்படுத்தவெல்லாம் முடியாதே. அது உயிரில் உறைந்திட்ட உணர்வுகள். அதை உணரத்தானே முடியும்.
“ஹ்ம்ம்...” என யோசிப்பது போல பாவனை செய்தவன், “சத்தியமா தெரியலை டி. அன்னைக்கு சொன்னதுதான். சம்திங் உன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு. அது... அது என்னை மயக்குது. ஒருமாதிரி தெளிவில்லாத, தெளியாத மயக்கம். கடைசிவரைக்கும் அந்த போதையிலே இருக்கணும்னு மனசு தவிக்குது. இது... இது வெறும் உடல் ஈர்ப்பு இல்லை. ஐ யம் ஷ்யூர், இல்லைன்னா, இந்த ரெண்டு நாள்ல உன்கிட்ட வந்துருக்க மாட்டேனா? அது ஏதோ ஒன்னு, சொல்றதுக்கு வார்த்தையெல்லாம் இல்லை...” கைகளை நெட்டி முறித்தவன், “ரொம்ப ஸ்பெஷலான ஃபீலிங் டி... நீ, உன்னோட திமிரான பார்வை, ஆட்டிட்யூட், உன் கண்ணு, மூக்குத்தியோட மின்னுற மூக்கு, அப்பப்ப முணுமுணுக்குற உதடு, இன்னும் எவ்வளவோ. நானும் ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டேன். ஒன்னு ரெண்டுன்னா லிஸ்ட் போடலாம். பட், இந்த வேதாவை மொத்தமாய் பிடிக்குதே. எனக்கு வாழ்நாள் முழுசும் அவ வேணும்னு மனசு கேட்குதே!” என்றவன் அவளைப் பிடித்திழுத்து தன் மடிமீது அமர்த்தியிருந்தான்.
இந்த அன்பழகன் புதிது வேதாவிற்கு. வார்த்தைகள் கூட ரசனை சொட்டப் பேசி, பெண்ணை வசீகரித்தான். அலட்டலில்லாத பாவனையில் அழகாய் தன் மீதுள்ள நேசத்தை வார்த்தைகளில் கோர்த்து, தன்னிடம் சேர்ப்பித்தவனை அதிகம் பிடித்தது. லேசாய் அவனோடு ஒன்றி சாய்ந்தமர்ந்தாள்.
வயிற்றோடு சேர்த்து அணைத்தவனின் தலை, அவளது கழுத்து வளைவில் புதைந்தது.
“டெய்லி இப்படி நீ என் பக்கத்துல இருக்க மாதிரி தோணும். பட், இப்போ நிஜமா இருக்க டி. எனக்கே, எனக்காக என்னோட வேதா...” மென்மையாய்க் கூறியவன், அவளது முன்னுச்சியில் முத்தமிட்டான். காமமில்லை, அது நேசம் என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாகிப் போய்விட்ட உணர்வு. ஏதோ பக்தன் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கைப் போன்றிருந்தது.
சிரித்தாள் பெண், லேசாக. பின் புன்னகை உதட்டை முழுதாய் ஆக்கிரமித்தது. முன்பு அவளுக்கு தன் வருங்கால கணவனைப் பற்றிய சிலபல கனவுகள் இருந்தன. பெரிதாய் இந்த மனம் என்ன வேண்டப் போகிறது? வாழ்நாள் முழுவதும் தன்னைக் கட்டிப்போடும் தூய அன்பின் பிடியில் சிக்கிக் கொள்வதை விட, அழகான அவஸ்தை ஒன்றிருக்க வாய்ப்பில்லை.
அப்படித்தான் வேதாவும் வேண்டியிருந்தாள். கலங்கமில்லாத அன்பொன்றை வாழ்நாள் பரிசாகக் கொடுக்கும் கணவன் வேண்டுமென்று கடவுளிடம் கோரிக்கை வைத்திருந்தாள். அது அவரது செவிக்கு எட்டிவிட்டது போல. அதனால்தான் இத்தனை தூய அன்பை, நேசத்தை அன்பழகன் வடிவில் தன்னிடம் சேர்ப்பித்துவிட்டாரென்று மனம் அந்த நொடி அதிகமாய் கடவுளுக்கு நன்றி நவில்ந்தது.
இன்று மதியம் வேலை நேரத்தில் கூட, தன்னை நினைத்தே அவளுக்கு அத்தனை வியப்பு. எப்படி தன்னால் அவனிடம் மட்டும் இயல்பாய் இருக்க முடிகிறது. என்று அம்சவேணி வீட்டில் காலடி எடுத்து வைத்தாளோ, அன்றே அவளது குணம் மொத்தமும் அடியோடு மாறிவிட்டிருந்தது. அன்றிலிருந்து அமைதியாகிவிட்டவளின் தன்னியல்புகள் எல்லாம் அன்பழகன் அருகில் மீண்டும் துளிர்விட்டிருந்தது. தனக்கு புதிதாய் கிடைத்த தோழமை உணர்வு அவனிடம். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள மனம் கூட முன்வந்தது.
‘எப்படி இப்படி நிகழலாம்?’ என அலசி ஆராய்ந்த போது, தன் கண்ணீரைக் கண்டு துடித்தவனின் தவிப்பான முகமும், அன்பாய் தன்னிடம் பேசிய வார்த்தைகளும் முன் வந்து நின்றன. எப்போதும் தனக்கு ஆதரவாய், நேசக்கரம் நீட்டும் ஒருவனின் தோழமையை மனது சுகமாய் ஏற்றுக் கொண்டது. தோழமை மட்டும்தானா? என்ற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. சொல்லவும் மனதில்லை என்பதே உண்மை.
ஆழ்ந்த அமைதி இருவருக்கும் இடையில் திரையிட்டிருக்க, பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்தாள் வேதவள்ளி. தலையை சரித்துச் சிரித்தவன், கண்ணை சிமிட்டினான். வேதா இமை சிமிட்டாமல் பார்க்கவும், லேசாய் அதில் திணறிப் போனான் அன்பழகன். அந்தப் பார்வை தன்னை கட்டிப்போட்டது போலொரு பிரம்மை.

விழிகளை அவளிடமிருந்து விலக்கி சுற்றிலும் படரவிட்டவன், அவள் கன்னத்தில் ரெண்டு தட்டுத்தட்டி, “போய் எதாவது சமைங்க மேடம். பசிக்கிது.‌..” என தானும் எழுந்து அவளையும் கைக்கொடுத்து தூக்கிவிட்டான்.
பதிலேதும் கூறாத வேதா, சமையலறைக்குள் நுழைந்தாள். இதயம் மட்டும் அன்பென்னும் வீணையை மீட்டியது. அவனைக் கண்ட முதல் நாள் தொடங்கி இன்று வரையிலான நினைவுகளை மனம் அணைக்க, அதோடு தானும் ஒன்றிப் போனாள். அவனின் அதிரடித்தனமான செய்கைகள் அப்போது கோபத்தையும் எரிச்சலையும் ஒருங்கே தந்திருந்தாலும், இப்போது சிரிப்பை வரவழைத்தன. தானாய் சிரித்துக்கொண்டாள்.
இருவரும் உண்டுவிட்டு படுத்தனர். கைபேசி அழைப்புவர, எடுத்து பேசியவாறே அன்பழகன் படுக்க, லேசாய் உருண்டு அவன் கரத்தில் தலைவைத்து விழிகளை மூடினாள் வேதவள்ளி. ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டே பேசி முடித்தவன், குனிந்து, “என்னடி மயக்கப் பார்க்குறீயா?” என சிரிப்புடன் கேட்க, அவளுக்குமே புன்னகை ஜனித்தது.
“ப்ம்ச்... அமைதியா படுங்க...” என அதட்டியவள், மறுபுறம் திரும்பி படுக்கவும் பின் புறமிருந்து அணைத்துக்
கொண்டான் கணவன். அவனை பெண் விலக்கவெல்லாம் இல்லை. அவனுள் பொருந்திப் போய்விட்டாள். இருவரும் ஏகாந்த மனநிலையில் உறங்கிப் போயினர்.
நாட்கள் மெதுவாய் அழகாக நகர்ந்தன. வேதாவும் அன்பழகனின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தாள். உண்மையிலே அவளுக்கு நல்லத் தோழமையாக அமைந்துவிட்டான் அன்பழகன்.
காலையில் அவனுடன் வேலைக்குச் சென்று, மாலையில் அவனுடன்தான் வீடு சேர்ந்தாள். சின்ன சின்ன மாற்றங்கள்தான் இருவருக்கும் இடையில். முதலில் வேதவள்ளியின் பின்னே நடந்து வந்தவன், இப்போது உரிமையோடு அருகே நடக்கப் பழகியிருந்தான். தன்னை அவளுக்குப் பழக வைத்துக் கொண்டிருந்தான். தன் பழக்கவழக்கங்கள், தான் என்னும் தனி மனதனாய் தன்னை அவளுக்கு உணர்த்தப் போராடினான்.
வெறும் உடல் ரீதியான ஈர்ப்பென்றால், எப்போதோ அதை அன்பழகன் தணித்திருக்கலாம். ஆனால், இது மனதின் தவிப்புகள். அதெல்லாம் மனம் மண்ணுக்குள் மடியும்வரை அப்படியேதான் இருக்கும். நேசம் என்ற வார்த்தைகள் எல்லாம் சொல்லில் அடங்காதவை. அதுதான் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அடக்கி ஆள்கிறது. அன்பழகனும் அப்படித்தான் தன்னுடைய நேசத்தால் பெண்ணை ஆட்சி செய்ய விரும்பினான்.
மெதுவாய் அவனை ஏற்றுக் கொள்ளப் பழகினாள் வேதவள்ளி. கொஞ்சம் மட்டுமே எஞ்சியிருந்தன தயக்கங்கள். இப்போது அதை துடைத்தெறிந்து இருந்தாள். அவர்களுக்கான பொழுதுகள் இருவரையும் சுருட்டிக்கொண்டது, அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல்.
சில சில ஊடல்கள், அதற்குப் பின்னான அன்பழகனின் சமாதானப் புறக்கள் எல்லாம் வாழ்க்கையை வஞ்சனையின்றி நிறைத்தன. பெண் நிறைத்தாள் அன்பழகனின் வாழ்க்கையை. அது அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான உலகம். அதை சுகித்தனர் இருவரும்.
முழுதாக இரண்டு மாதங்கள் மடமடவென ஓடியிருந்தது. இடைப்பட்ட நாட்களில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வீட்டை நிறைத்திருந்தான் அன்பழகன். ஒவ்வொன்றிற்கும் நண்பனே ஆகினும் முகிலன் வீட்டிற்கு வேதவள்ளி செல்வது அவனுக்குப் பிடித்தமில்லாதுப் போக, ஓரளவுக்கு எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டான். வேதா கூட அவனை சத்தம் போட்டிருந்தாள், இருக்கும் நிலைமையில் இதெல்லாம் தேவையா என்பது போல. அதையெல்லாம் அலட்டாது பெற்றவன் பதில் வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை.
எப்போதும் போல அன்று இரவு வேதவள்ளி சமைத்து எடுத்து வைக்க, இருவரும் உண்டு கொண்டிருந்தனர். “வேதா, இந்த மந்த்தோட வேலையை விட்ரு...” என்றான் அன்பு.
நிமிர்ந்து அவனை யோசனையாக நோக்கியவள், “ஏன்?” என வினவினாள்.
“நீ வேலைக்குப் போக வேண்டாம். காலேஜ் சேர்த்துவிட்றேன். படிக்க போடி...” என்றவனைப் பார்த்தவள் எதுவும் கூறாது, உண்டு எழுந்தாள்.
“அதெல்லாம் வேணாம். எனக்கு இஷ்டமில்லை” ஒரு வார்த்தையில் மறுதலித்தாள்.
“என்ன வேணாம். நீ படிக்கிற” அழுத்தமானக் குரலில் கூறியவனைத் திரும்பிப் பார்த்தவள், “எனக்குப் பிடிக்கலை...” என்றாள்.
வேதவள்ளிக்குப் படிக்க வேண்டும் என்கிற ஆசை பள்ளி முடித்த பொழுதில் நிறைய இருந்தது. படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும், தன் தந்தை வரும்போது அவரைத், தான் பெருமை பட வைக்க வேண்டும். வாழ்க்கையில் தனக்கென அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என அத்தனை கனவுகள். எல்லாவற்றிற்கும் கற்பனையில் உயிரைக் கொடுத்து அதனோடு வாழ்ந்த நாட்கள் ஏராளமானவை. ஆனால், சூழ்நிலை ஒத்துழைக்காததால், அந்த எண்ணத்தை புதைத்துவிட்டிருந்தாள்.

முதன் முதலில் வேலைக்குச் செல்லும்போது அத்தனை அழுதாள் பெண். வேறு வழியே இல்லை. அவளாகத்தானே வேலைக்குச் செல்கிறேன் என முருகையாவிடம் அடம்பிடித்தாள். தேற்றிக்கொண்டவளின் கனவுகள் எல்லாம் அதோடு அருகிப் போயின. அதைத்தான் அன்பழகன் இப்போது தோண்டிக் கொண்டிருந்தான்.
“வேதா, சொல்றதைப் புரிஞ்சுக்கோ, நீ படிக்கணும். உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்றான் அன்பு. பொறுமையாகத்தான் கூறினான். ஆனால் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தன.
ஏனோ இப்போது அவன் பேசுவது எரிச்சலை தந்தது வேதவள்ளிக்கு. தான் வேண்டாம் என கத்தியும், இவன் பிடியிலே நிற்பது போலத் தோன்ற, “அந்த ஆசையெல்லாம் விட்டுப் போச்சு. அதான் இப்போ வேலை பார்க்குறேன் இல்லை. அதுவே போதும். அதை என்னால விட முடியாது...” என்றுவிட்டாள்.
“ஆமா! இவ பெரிய கலெக்டர் வேலை பார்க்குறா. அதை விட முடியாது...” சத்தமாய் முணுமுணுத்தவனின் குரல் செவியை அடையவும், கோபம் வந்தது பெண்ணுக்கு.
“ப்ம்ச்... ஆமா, நான் கலெக்டர் வேலைதான் பார்க்குறேன். அந்தக் கலெக்டரைதான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு பின்னாடியே வந்தீங்க...” கோபமாய் கூறியவள் சற்று நிறுத்தி நிதானமாக, “ஓ... நீங்க இன்ஜினியரிங் படிச்சு இருக்கீங்க. உங்க பொண்டாட்டி நான் எதுவும் படிக்கலைன்னு தோணுதோ? இதை என் பின்னாடி வர்றதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்...” என்றவளுக்கு ஏனோ விழிகளெல்லாம் கலங்கின. அவள் பேசுவதை கைக்கட்டி அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் அன்பழகன்.
“அவ்ளோதானா? இன்னும் எதாவது கேட்கணுமா?” அசட்டையாய் தோளைக் குலுக்கியவனைப் பார்த்து விழிகளில் நீருடன் முறைத்தவள், விறுவிறுவென சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.
‘ஷப்பா...’ என நெற்றியைத் தேய்த்தவன், எழுந்து உள்ளேச் சென்றான். விழிகளில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள் வேதா. அவளைப் பார்த்ததும், கோபமெல்லாம் வடிந்த உணர்வு. முகம் மென்மையாக, “வேதா...” என அழைத்தான்.
‘போடா.‌..’ முறைப்பாய் ஒரு பார்வை பார்த்தவளை, சிரிப்புடன் இழுத்து அணைத்துக்கொண்டான்.
“ப்ம்ச்... போங்க. போங்க...” விடுபட போராடியவளை அநாயாசமாக அடக்கி அணைத்தவன், “அழாத டி...” என்றான். குரலில் தவிப்பிருந்தது.
அமைதியாய் அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டவள் விசும்ப, “ப்ம்ச்... ஏன்டி என் விஷயத்துல மட்டும் எதையும் சரியா யோசிக்க மாட்ற? எல்லாரும் உன்னை நல்ல முதிர்ச்சியானப் பொண்ணுன்னு சொல்றாங்க. ஆனால், நீ அவசரக்குடுக்கையா இருக்கீயே!” மெலிதாய் புன்னகையுடன் கூறியவனை விழிகளில் நீருடன் நிமிர்ந்து முறைத்தாள் பெண்.
அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “பின்ன என்னடி? மனுஷனை பாடாய்ப்படுத்து... ஹம்ம்...” என இழுத்தவன், “நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்காகத்தான் இருக்கும்னு நம்பணும் நீ” என்றவனை அமைதியாய்ப் பார்த்தாள்.
“சரி, நான் கேட்க்குற கேள்விக்குப் பதில் சொல்லு. நீ யாரு?” என வினாத் தொடுத்தவனைப் புரியாது பார்த்தாள் மனைவி.
“கல்யாணத்துக்கு முன்ன உங்க அப்பாவுக்கு பொண்ணு. ஆப்டர் மேரேஜ் என்னோட மனைவி. இதுல எங்கேயுமே நீ இல்லையே வேதா. உனக்கான அடையாளம் எது? சொல்லு... அப்பாவோட பொண்ணு, என்னோட மனைவின்னு சொல்றதை விட, தனி மனுஷியாய் உனக்கான ஐடென்ட்டீயை நீ கிரியேட் பண்ணணும். அதுக்குத்தான் உன்னைப் படிக்க சொல்றேன்...” என்றவனை இமைக்க மறந்து பார்த்தவளின் விழியோரம் ஈரம் துளிர்த்தது.
தன்னுடைய கனவுகளுக்கெல்லாம் வார்த்தையால் உருவத்தைக் கொடுத்து, நிஜமாக்கப் போராடிக் கொண்டிருந்தவனை நினைத்து மனம் நனைந்து போனது. ‘எனக்காக, என் ஆசை, கனவுகளை மதித்து எனக்கான பாதையை அழகாய் அமைத்துதர முன்வந்திருக்கிறானே!’ என நினைத்ததும் மீண்டும் விழிகள் பனித்தன.
பெரு விரலால் அவளது விழிநீரை துடைத்தெறிந்தவன், “எனக்குத் தெரியும் டி. உனக்குப் படிக்கணும்னு எவ்ளோ ஆசை இருக்குன்னு...” என்றவன் கூடத்திற்குச் சென்று அவளது பள்ளிச் சான்றிதழ்களை எடுத்து வந்தான்.
“டென்த்ல 90 பெர்சன்டேஜ், ட்வெல்த்ல ஸ்கூல்ல தேர்ட் மார்க். படிக்க ஆசையில்லாமதான் மார்க் வாங்குனீயா?” கேள்வி கேட்டவனிடம் பதில் இயம்பவில்லை வேதா.
“படி டி... அது, எப்பவும் உன்கூட துணை நிக்கும். ஏன் நானே உன்கூட இல்லைன்னா கூட, நீ படிச்ச படிப்பு உனக்கு வாழ்க்கையை மூவ் பண்ண உதவும். படிக்கிறீயா?” அன்பாய்க் கேட்டான். அக்கறையாய் கேட்டான். அழுகை வந்தது வேதாவிற்கு. இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளியைக் குறைத்து அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவளது தந்தைதான் நினைவு வந்தார் அந்த நொடியில். தந்தையையும் அன்பழகனையும் ஒன்றாய் வைத்து மனம் அந்த நொடியில் மகிழ்ந்தது.
வேதாவின் செய்கையில் அன்பழகன் இதழ்கள் விரிய, ஒருக்கரத்தால் அவளை அணைத்தவன், மற்றொரு கரத்தால் தலையை தடவினான்.
“படிக்கிறேன். ஆனால்...” என இழுத்தாள் வேதா.
“ஆனா என்னவாம்?” புன்னகையுடன் கேட்டான் அன்பு.
“ப்ம்ச்... அது... அது வந்து எனக்கு வயசான ஃபீலிங்...” சிணுங்கியவளின் சிணுங்களில் அன்பழகன் உறைந்து போனான். அத்தனை அழகாய் அவன் முகம் பார்த்து வெட்கப்பட்டவளைக் கண்டவனின் மனம் முழுவதும் அந்த நொடி பாவையிடம் சரணாகதிதான். உதட்டைச் சுழித்ததாள் வேதா.
அதில் கிறங்கியவன், தன்னை நிலைப்படுத்தித் தொண்டையைச் செருமினான். இதழ்கள் தானாய் விரிந்தன. “எத்தனை வயசாகு டி உனக்கு?” எனக் கேட்டவனின் கரங்கள் மனைவியை தோளோடு அணைக்க, “பத்தொன்பது...” என்றாள் வேதா.
அதில் அன்பழகனுக்கு முகம் முழுவதும் முறைப்பு.‌ “நூத்துக் கிழவி மாதிரி பேசாம, ஒழுங்கா படிக்குற வழியைப் பாரு...” என மிரட்டியவனின் வார்த்தை முழுவதும் அவள் மீதான நேசமும் அக்கறையும் கொட்டிக் கிடந்தன.




































































 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
இன்னும் டீன் ஏஜே முடியல, படி, படி
 
Top