• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 11
பத்து நிமிடத்தில் முருகையாவின் வீட்டை அடைந்திருந்தான் அன்பழகன். தன் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓரமாய் நிறுத்திவிட்டு, விறுவிறுவென வீட்டிற்குள்ளே நுழைந்தான்.
முருகையா அறைக்குள் இருக்க, அம்சவேணி சமையல் கூடத்திலிருந்தார். ஏதோ சமைக்கும் வாசனை மூக்கைத் துளைக்க, புருவத்தை உயர்த்தியவன், கூடத்திலிருந்த நீள்விருக்கையில் சட்டமாக அமர்ந்தான். அவன் வருகையை இருவரும் உணரவில்லை.
தன் கையருகே இருந்த தண்ணீர் குவளையை அன்பு கீழே தள்ளிவிட, சத்தம் வீட்டை நிறைத்தது. “யாராது?” என வினவிக்கொண்டே வெளியே வந்த அம்சவேணி அன்பழகனை எதிர்பாராது திகைத்தது ஒரு நொடிதான்.
“ஏய்! பொறுக்கி... நீ எதுக்குடா வீட்டுக்குள்ள வந்த? வீடு தொறந்து இருந்தா, உள்ள நுழைஞ்சுடுவீயா? வெளிய போடா...” அவர் கத்தவும், சுண்டு விரலால் காதைக் குடைந்தான் அன்பழகன். மனைவியின் சத்தத்தில் முருகையாவும் வெளியே வந்தார்.
அவர் முகம் முதலில் அதிர்ச்சியை காட்டிப் பின், இயல்பானது. “வேதா எப்படி இருக்கா. அவளுக்கு ஒன்னும் இல்லைதானே?” இறுகிய குரலில் வேண்டா வெறுப்பாக வினவினார் மனிதர். அவருக்கு வேதவள்ளியின் செயல் அத்தனை உவப்பானதாக இல்லை. அன்பழகனுடன் பெண் செல்லுவாள் என கனவில் கூட கற்பனை செய்யவில்லை மனிதர். அவளின் செயலில் அதிருப்தி மனம் முழுவதும் பரவியது. அதுதான் இப்போது குரலில் வெளிப்பட்டது.
“ரொம்பத்தான் அக்கறை...” என இழுத்தவன், கையைத் தூக்கி சோம்பல் முறித்தான். நக்கலான புன்னகை உதட்டில் படர்ந்தது.
“ஏய்! முதல்ல வெளிய போடா. யார் வீட்ல வந்து, யார் அராஜகம் பண்றது. தொறந்த வீட்டுக்குள்ள எதோ நுழைஞ்ச மாதிரி...” அம்சவேணி கூறவும், அவன் முகமும் உடலும் இறுகியது.
இருக்கையிலிருந்து எழுந்தவன், ஒரு கையால் மற்றொரு கையை திருகிக் கொண்டே கையை மடக்கினான். “பொதுவா நான் பொம்பளைங்க மேல கை வைக்கிறது இல்லை. அதுவும் வயசுல மூத்தவங்க மேல எல்லாம் வைக்க மாட்டேன். எங்க அம்மா என்னை அப்படி வளர்க்கலை. ஆனால் பாருங்க, என் பொறுமை காத்துல பறந்துடுச்சுன்னா, எதிர்ல இருக்கது ஆம்பளையா, பொம்பளையான்னு எல்லாம் பார்க்க மாட்டேன். செவில்ல ஒரே ஷாட்தான். காது ஜவ்வு கிழிஞ்சுடும்...” என்றவனின் குரலில் அம்சவேணி ஓரடி நகர்ந்துவிட்டார். அன்பழகனைப் பற்றி ஏற்கனவே அவரறிவாரே.
அடித்துவிட்டால் என்ன செய்வது? கணவனிடம் வேறு சண்டையிட்டிருக்கிறார். மகனும் வீட்டில் இல்லை.
“வார்த்தையை அளந்து பேசுங்க. என் வீடு இது...” முருகையாவின் குரல் கோபத்துடன் ஒலிக்க, அன்பழகனின் இதழ்களில் நக்கல் புன்னகை படர்ந்தது.
“யார் வீட்ல வந்து, யார் மேலடா கையை வைப்ப. எவ்ளோ தைரியம்?” அம்சவேணி அடங்காது எகிறினார்.
“ஏய்...” என கத்திய அன்பழகனின் கத்தல் மொத்த வீட்டிலும் எதிரொலித்தது. அதில் அம்சவேணி அதிர, “அம்சு, அமைதியா இரு கொஞ்ச நேரம்...” என்று முருகையா மனைவியை அதட்டினார். பெண்மணியின் வாய் பூட்டுப் போட்டுக் கொள்ள, “ஒரு வார்த்தை பேசக்கூடாது நீங்க. அமைதியா இருக்கணும், இருப்பீங்கன்னு நினைக்கிறேன்...” என்றவன் குரல் அதட்டலாக அழுத்தமாக வெளிவந்தது.
“எதுக்காக இங்க வந்துருக்கீங்க? பிரச்சனை பண்ணணும்னா?” முருகையா கோபமாக வினவினார்.
அவரைப் பார்த்துக்கொண்டே
இரண்டடி பின்னே நகர்ந்து இருக்கையில் அமர்ந்த அன்பழகனின் முகம் கடுமையானது. “நீங்களாம் மனுஷங்களா?” எனக் கேட்டவனின் பார்வை அம்சவேணியை எரித்தது.
“சீ... உடம்பு சரியில்லாதவளை வீட்டுல ட்ராப் பண்ண வந்தவரோட போய் இணைச்சு தப்பா பேசியிருக்கீங்களே! உங்களுக்கு எல்லாம் அறிவுன்றதே ஒன்னு கிடையாதா? கழட்டி வச்சுட்டுத்தான் சுத்துறீங்களா?” என ஆத்திரத்துடன் வினவினான் அன்பழகன்.
அவனது பேச்சில் அதிர்ந்த முருகையா, “ரொம்ப பேசுறீங்க. வார்த்தையை விடாதீங்க...” அழுத்தமாக கூறினார்.
“என்ன... இல்லை என்ன வார்த்தையை அளந்து பேசச் சொல்றீங்க? சே! இதுவே நீங்க பெத்த பொண்ணா இருந்தா, இப்படி அடிச்சுருப்பீங்களா?” என வினவியவன் கைகளைக் கோபத்தில் மடக்கினான்.
“அவ பண்ணக் காரியத்துக்கு நீ வக்காளத்து வாங்குறீயா? அசிங்கம் புடிச்சவ...” அம்சவேணி கூறியதும், “இன்னொரு வார்த்தை அவளைப் பத்தி தப்பா பேசுனீங்க, என் வாய் பேசாது. கைதான் பேசும்...” என்றவனின் பொறுமை காற்றில் பறந்திருந்தது.
“இத்தனை வருஷமா அவளைப் பார்த்துக்கிட்டேன்னு மார்தட்டிட்டு வர்றீங்களே! சும்மாவா பார்த்துக்கிட்டீங்க? சம்பளம் இல்லாத வேலைக்காரியாத்தானே வச்சிருந்தீங்க?” என பல்லைக் கடித்தவன், அமர்ந்த இடத்திலிருந்து எழுந்திருந்தான்.
“லுக், இனிமே அவ என்னோட பொறுப்பு. அவளைப் பத்தி தப்பா பேசுறது, காயப்படுத்துறதுன்னு எதுவும் பண்ணீங்க, தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்கவே மாட்டேன். ஆளை வச்சு அடிச்சு தூக்கிடுவேன்...” என்றிருந்ததான்.
“டேய்! எங்க வீட்லயே வந்து, என்னா பேச்சு பேசுற நீ. கேடு கெட்டவ. ஆளை வச்சு பேச விட்றாளா?” என்றவரை அடிக்கும் வேகம் வந்தது அன்பழகனுக்கு. கடைசியாய் வேதவள்ளி தன்னைப் பார்த்த பார்வையை மனதில் நிறைத்து, பொறுமையை இழுத்துப் பிடித்தான்.
“வாயை மூடுங்க. நடந்தது என்னென்னு கூட விசாரிக்காம, ஒரு பொண்ணோட கேரக்டரை தப்பா பேசுற உங்களுக்கு எல்லாம்... சே...” கூற வந்த வார்த்தைகளை விழுங்கியவன், “வேதாவை குத்தம் சொல்றீங்களே! நீங்கப் பெத்த நாய் என்ன பண்ணுதுன்னு ஒரு நாளாவது பார்த்துருக்கீங்களா?” எனக் கேட்டு தன் அலைபேசியை எடுத்தான்.
அதில் சில புகைப்படங்களை அவர்கள் முன்னே நீட்டினான். எழில் அரைகுறை உடையுடன் ஒரு பெண்ணுடன் நின்றிருந்தான். மேலும் அவளுடன் நெருக்கமாக சில புகைப்படங்கள் இருக்க, ‘எழில்...’ என பல்லைக் கடித்தார் முருகையா. அம்சவேணிக்கு அந்தப் புகைப்படத்தை பார்த்ததும் பக்கென்றிருந்தது. கணவர் முகத்தைக் கலவரத்துடன் பார்க்க, அவர் மனைவியைப் பார்வையால் எரித்தார்.
“அடுத்த வீட்டுப் பொண்ணை குத்தம் சொல்றதுக்கு முன்னே, உங்க வீட்ல இருக்க நாயை கட்டி வைங்க. கண்ட இடத்துல ஊர் மேயுறான்...” என்றவன் இதழில் கேலிப்புன்னகை. முகிலன்தான் எழில் புகைப்படத்தை வேறொரு பொண்ணுடன் இணையச் செயலி மூலம் சேர்த்து, அன்பழகனிற்கு அனுப்பியிருந்தான்.
அவர்கள் இருவரின் முன்பும் கையை நீட்டியவன், “இனிமே வேதாவுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவ என்னோட வேதா. அவ விஷயத்துல எந்த இடத்திலும் உங்க தலையீடு இருக்க கூடாது. மீறி இருந்துச்சுன்னா... ம்கூம், இருக்காதுன்னு நம்புறேன்...” என்ற அன்பழகன் எச்சரிக்கும் பார்வையுடன் வெளியேறி தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்திருந்தான். வலக்கை வாகனத்தை இயக்க, இடது கை அலைபேசியில் முகிலனுக்கு அழைப்பை விடுத்தது.
“என்ன டா மச்சான், எல்லாம் ஓகே வா?” முகிலன் மறுபுறம் வினவ, “ஹ்ம்ம் டா. ஆனால், பத்தலை மச்சான். வேற எதாவது அவனை பண்ணணும் டா” அன்பு பல்லைக் கடித்தான்.
“என்ன பண்ணணும்னு சொல்லு டா. பசங்களை அனுப்பவா?” முகிலன் யோசனையாய்க் கேட்டான்.
“ஹ்ம்ம்... அனுப்புடா. நான் சொல்ற இடத்துல போய் அவனை தூக்கிட்டுவாங்க. கடைசியா என்ன சொன்னான். ஹ்ம்ம் ஓடுகாலின்னு சொன்னான் இல்லை, அவன் காலே இல்லாத மாதிரி பண்ணுவோம்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, பதினைந்து நிமிடத்தில் முகிலனிடமிருந்து குறுஞ்செய்தி வர, இதழ்கள் கேலியாக வளைந்தன ஆடவனுக்கு.
இருசக்கர வாகனத்தை அந்த ஆள் அரவமில்லாத இடத்திற்குள் அன்பழகன் விடவும், அங்கே மகிழுந்து ஒன்று காத்திருந்தது. உள்ளே எழில் முகத்தில் துணியை வைத்து மறைத்தவாறு, அவனது கையும் காலும் கட்டப்பட்டிருந்தன. அன்பழகனின் நண்பர்கள்தான் எழிலிடம் முகவரி கேட்பது போல, அவனை மகிழுந்தில் பிடித்து ஏற்றி வந்திருந்தனர்.
“மச்சான்...” நண்பன் எதோ கூற வர, வாயில் விரலை வைத்து எதுவும் பேசாதே என்பது போல சைகை செய்தவன், அருகிலிருந்த கட்டை ஒன்றை எடுத்தான்.
‘எவ்ளோ தைரியம் இருந்தா, என் வேதாவை திட்டுவ. ஓடுகாலின்னு தானே சொன்ன? இனி நடக்கக் கூட உனக்கு கால் இருக்காது டா. இனிமே எந்தப் பொண்ணைப் பத்தியும் தப்பா இந்த வாய் பேசுமா?’ எனக் முணுமுணுத்துக் கொண்டே எழில் வாயிலும் காலிலும் முடிந்தளவிற்கு அடித்தான் அன்பழகன்.
கைவலி வரும்வரை அவனைப் போட்டு வெளுத்த அன்பு மகிழுத்திலிருந்து இறங்கி கதவை அடித்துச் சாத்தினான். “இவனை எடுத்துட்டுப் போய் பக்கத்துல இருக்க ஜீ.ஹெச்ல போட்டுடு டா” என்றவன், நண்பனிடம் நன்றி உரைத்துவிட்டு,
மருத்துவமனைக்கு நகர்ந்திருந்தான்.
இப்போது மனம் கொஞ்சமே கொஞ்சம் சமாதானம் அடைந்திருந்தது. இத்தனை நாட்கள் வேதவள்ளி அங்கிருக்கிறாளே, என்ற எண்ணத்தில்தான் எழிலை எதுவும் செய்யாது அமைதியாய் இருந்தான். இப்போது வேதவள்ளி வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, பல நாட்களாக மனதிலிருந்த கோபத்தைக் காட்டிவிட்டான்.
மருத்துவமனைக்கு வாகனத்தை செலுத்தியவன், வழியில் பழச்சாறு ஒன்றை வாங்கிக் கொண்டான். மேலும் பத்து நிமிடங்கள் கழித்தே அவன் மருத்துவமனையை அடைந்திருந்தான்.
வேதாவின் கையிலிருந்த குளுக்கோஸ் ஏறி முடிந்ததும், செவிலியர் ஊசியை அகற்றியிருக்க, அந்த அறையின் வாயிலுக்கும் உள்ளேயும் பத்து முறை வந்து நடந்துவிட்டாள் பெண். பத்து நிமிடத்தில் வருகிறேன் என்றவன், ஒரு மணி நேரம் கடந்தும் வரவில்லை என்றதும் மனம் பதைபதைத்துப் போனது. அன்பழகனின் கோபக்குணம் அவளறிந்ததே. வாகனத்தை மட்டும் எடுத்துவிட்டு வர, இத்தனை நேரமெல்லாம் ஆகிவிடாதே! என மூளை அறிவுறுத்த, முகத்தில் பய
ரேகை படர்ந்தது.
அன்பழகனுக்கு அப்படியெதுவும் இல்லை என்பதை போல, அத்தனை இயல்பாய் உள்ளே நுழைந்தான். அவன் வந்ததும் தான் வேதாவிற்கு மூச்சே வந்தது. “ஏன் இவ்வளோ நேரம்?” வார்த்தைகள் பட்டென பெண்ணிடமிருந்து வந்தது.
“அது, பைக் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் வர்ற வழியில ஒர்க் ஷாப்பை தேடி சரி பண்ணிட்டு வர டைமாகிடுச்சு...” அலட்டலே இல்லாது பொய்யுரைத்தவனின் விழிகள் அவளது கரத்தில் பதிந்தன.
“ட்ரிப்ஸ் ஓவரா?” என வினவியவாறே பழச்சாற்றை அவளிடம் கொடுத்தான்.
“இதை குடிச்சு முடி. அதுக்குள்ளே நான் போய் பில் பே பண்ணிட்டு, டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்” என்ற அன்பழகன் நகர யத்தனிக்க, “என்கிட்ட காசு இருக்கு” என்றாள் வேதா.
அவளது குரலில் திரும்பி கோபமாய் பார்த்த அன்பழகன், “பரவாயில்லை, அதை பத்திரமா வச்சுக்கோ. எப்போவாது யூஸ் ஆகும்...” என்றுவிட்டு வெளியேறியவன், ‘இங்க மட்டும் வாய் பேசுவா. அந்தப் பொம்பளையோ, அந்த நாயோ பேசுனா, அழ வேண்டியது...’ என மனதிற்குள் வேதாவை திட்டியபடியே மருத்துவரை சந்திக்க சென்றான்.
“யா ஷ்யூர், நீங்க கிளம்பலாம். நல்லா கரெக்ட் டைம்க்கு சாப்பிட்டாலே போதும். வேற பெரிய இஷ்ஷூ எதுவும் இல்லை...” மருத்துவர் கூற, எவ்வளவு பணம் கட்டவேண்டும் எனக் கேட்டு அதை கட்டிவிட்டு வேதாவின் அறைக்குள் நுழைந்தான் அன்பு.
அவளும் முகத்தைச் சரிசெய்து, மனதையும் ஓரளவுக்கு திடப்படுத்தி வைத்திருந்தாள். தலை முடியை சீராக்கி, புடவை கசங்கலை நீவி விட்டிருந்தாள்.
“போகலாமா?” அன்பழகன் வினவ, சரியென்பதாய் தலையை அசைத்தவள், அவன் பின்னே நடந்தாள். நேரம் மாலை நான்கை தொட்டிருந்தது. நடந்த களோபரத்தில் அன்பழகன் உணவு உண்ணவில்லை. அதைக் கேட்கலாம் என்றால், தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது பாவையிடம்.
எங்கே செல்கிறோம் எனக் கூடத் தெரியாது அன்பழகனின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் வேதா. அவள் விவரம் அறிந்து, முருகையாவிற்கு அடுத்தாதாக ஒரு ஆணுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்கிறாள். லேசாய் தயங்கியபடி அவனை உரசாது ஏறி அமர்ந்தாள் பெண்.
அன்பழகன் இதழ்களில் மெல்லிய புன்னகை, அவளது தயக்கத்தைப் பார்த்து. அவனும் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பான் வேதவள்ளியை தன் இருசக்கர வாகனத்தில் தனக்குப் பின்னே அமரவைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று. இதோ, இப்போது அந்த ஆசை நிறைவேறப் போகிறது
என்று உதட்டில் உறைந்த புன்னகையுடன் மெதுவாக வண்டியை செலுத்தினான்.
மனதில் அத்தனை நிறைவு அவனுக்கு. தன்னை எத்தனை தூரம் நம்பியிருந்தால், பிரச்சனை என வந்தப் போது பெண் தன்னை தேடியிருக்கிறாள், நாடியிருக்கிறாள். தான் அவளுக்கு இந்தளவிற்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறோம், தன் மீதான அவளுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம் என்று தெரிந்ததும், அவனையும் அறியாது மனதில் ஓர் ஆசுவாசம் பிறந்தது.
சில நிமிடங்கள் கடந்தன. எந்தப் பாதையில் அன்பு செல்கிறான் எனத் தெரியாது பார்வையை சுற்றிலும் பதித்தவள், “வண்டியை நிறுத்துங்க...” என்றாள்.
யோசனையுடன் வாகனத்தை ஒரு ஓரமாய் நிறுத்தியவன், “என்னாச்சு வேதா, எதுவும் வேணுமா?” என வினவினான்.
‘ஆமாம்...’ என்பது போல தலையை அசைத்தவளின் பார்வை ஆடவன் முகத்தில் பதியவில்லை. அதீத தயக்கம் பிறந்தது பெண்ணிடம்.
சுற்றிலும் படரவிட்டவள், “என்... என்னோட அப்பா, ‘என் பொண்ணா இருக்க வரை நீ முருகையா வீட்லதான் இருக்கணும். நான் வர்றவரை இங்கேயே இருடா’ ன்னு சத்தியம் வாங்கிட்டாரு...” திக்கித் திணறிக் கூறினாள் பெண்.
அவளது கூற்றில் நெற்றியை சுருக்கியவன், “சோ... மறுபடியும் அங்க போக போற?” என கேட்டவனின் குரலில் அழுத்தமும் கோபமும் கொட்டிக் கிடந்தது.
‘இவளாம் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டா...’ கோபத்தில் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்திருந்தான்.
அன்பழகன் செயலில் அதிர்ந்த வேதவள்ளி, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
அவள் வாய்க்குள் எதையோ முணுமுணுக்கவும், அதை உணர்ந்தவன் முகத்தில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் படர்ந்தது.


அத்தியாயம் - 12

https://iragitamilnovels.com/forum/threads/வேதம்-12-💖.2525/
 
Last edited:
Top