• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 9 💖
சோர்ந்து களைத்த முகத்துடன் உள்ளே நுழையும் சுதியைத்தான் சந்திரா நிமிர்ந்து பார்த்தார். எப்போதும் அவள் உள்ளே நுழையும்போது அவரது உதடுகள் மட்டுமே பதிலளிக்கும். மற்றபடி குனிந்து அப்பளத்தை தேய்த்துக் கொண்டிருப்பார். இப்போது நிமிர்ந்து மகளைக் கவலையாய் நோக்கினார் பெண்மணி. இவளுக்கு அந்தப் பார்வையில் முறுவல் பிறந்தது.
“ம்மா... ஜஸ்ட் ரெண்டு மணிநேர வேலைதான். பெருசா கஷ்டமா இல்ல!” என்றவாறு கழுத்திலிருந்த துப்பட்டாவைத் தளர்த்திக் கைப்பையை தூக்கி தூர வைத்தாள். சௌம்யா இவளைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஹக்கும்... அண்ணி. கழுத்து சுளுக்கிக்க போகுது!” என்றவள் அறைக்குள் சென்று உடைமாற்றி முகம் கழுவி வந்து அமர்ந்தாள்.
அப்பள மாவை சுதி எடுக்கச் செல்ல, “சுதி... முகத்தைப் பார்த்தாலே பசி தெரியுது. போ, நீயும் பிள்ளைகளோட சாப்ட்டு போய் படு. இனிமே அப்பளம் தேய்க்க வேணாம். காலைல விரைசா எந்திரிக்கிற. அப்போ சீக்கிரம் படுத்தாதான் தோதுபடும்!” என்றார் சந்திரா.
“ம்மா... அதெல்லாம் ஒன்னுமில்லை மா. அரைமணி நேரம் சீக்கிரம் எழுறேன். அவ்வளோதானே!” என இவள் கரங்களை நீட்டி மாவை எடுக்கச் செல்ல விழைய, சௌம்யா அவளது கைகளைத் தட்டிவிட்டாள்.
“சுதி... போய் முதல்ல சாப்பிட்டு படு. சொல்ற பேச்சைக் கேட்க கூடாதுன்னு நினைச்சிட்டு இருக்கீயா?” அவளை அதட்டினாள் பெரியவள்.
“ரொம்ப பண்றீங்க அண்ணி!” என முனங்கலுடன் எழுந்து சென்ற சுதி சாப்பிட என்ன இருக்கிறதெனப் பார்த்தாள். சந்திரா இடியாப்பம் சுட்டு, தேங்காய் பால் எடுத்து வைத்திருந்தார். சிறுவர்கள் இருவரையும் அழைத்து தன்னுடனே இருத்திக் கொண்டாள். சிறிது நேரத்திலே மூவரும் உண்டு முடித்தனர்.
“ரூம்ல போய் படுத்து தூங்கு சுதி. லைட் வெளிச்சத்துல தூக்கம் வராது...” சந்திரா கூற, சின்னவர்களுடன் அறைக்குள் சென்றாள்.
தவா கட்டிலில் பொத்தென விழுந்து தலை முதல் கால் வரை போர்வையைப் போர்த்தினான். அவனை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே இவள் தரையில் பாயை விரித்து தலையணையைப் படுப்பதற்கு ஏதுவாகப் போட்டவள், சுவரில் சாய்ந்தமர்ந்தாள். இத்தனை விரைவாய் உறங்கி பழக்கம் இல்லாததால் அலைபேசியை சுதி கையிலெடுக்க, “அத்தை...” என செல்லம் கொஞ்சிக் கொண்டே அவளது மடியினுள் அமர்ந்தாள் ருத்ரா.
“தங்கப் புள்ளை!” என இவள் அவளது கன்னத்தில் முத்தமிட, சின்னவளும் பதில் முத்தம் வழங்கினாள்.
“அத்தை... கை பெய்னா இருக்குத்த. எனக்கு ஹோம் வொர்க் பண்ணித் தர்றீயா?” ருத்ரா முகத்தைப் பாவமாக வைக்க, சுதிக்கு அவளின் செய்கையில் முறுவல் பிறந்தது.
“ஹம்ம்... நான் செஞ்சி தர மாட்டேன் ருத்ரா. உனக்கு எப்படி செய்றதுன்னு ஹெல்ப் வேணா பண்றேன்...” என்றாள் கண்டிப்புடன்.
“அத்தை... ப்ளீஸ்‌... ப்ளீஸ், ஒன் டே மட்டும் பண்ணுத்த!” என அவள் கெஞ்ச, சுதி சின்னவள் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.
“இப்படிலாம் கெஞ்சினாலும் நோன்னா, நோதான் ருத்ரா. இப்போ நான் செஞ்சு கொடுத்துடுவேன். நாளைக்கு மிஸ் என்னென்னு கேட்கும்போது நீ தெரியாம நின்னு முழிப்ப. அப்புறம் பனிஷ்மெண்ட் கிடைக்கும். பரவாயில்லையா?” என அவள் வினவ, சின்னவள் வேண்டாமென தலையை அசைத்தாள்.
“சரி நீயா ஹோம் வொர்க் செய்றீயா?” எனக் கேட்ட சுதி புத்தகத்தை எடுத்து அவளுக்கு சொல்லிக் கொடுத்தாள். விழிகள் அப்படியே வலப்பக்கம் சுழல, போர்வைக்குள் அங்குமிங்கும் அலைந்தான் தவசெல்வன்.
“தவா... போன்ல கேம் விளையாட்றீயா நீ?” இவள் அதட்டலாய்க் கேட்க, பட்டென அலைபேசியை ஒளித்து வைத்தான் அவன்.
“ஃபோனை என்கிட்ட குடுத்துட்டு தூங்கு முதல்ல!” இவள் அவனை முறைக்க, “ப்ளீஸ் அத்தை... ஒரு டென் மினிட்ஸ். இந்த மேட்ச் முடிஞ்சதும் குடுக்குறேன்...” தவா கெஞ்சினான்.
“இப்போ ஃபோனைக் குடுக்கலை, அண்ணியைக் கூப்பிடுவேன்!” அவளது அதட்டல் வேலை செய்ய, சின்னவன் முகத்தைத் தூக்கிக் கொண்டே அலைபேசியைக் கொடுத்துவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துவிட்டான். அவனது செய்கையில் இவளுக்கு புன்னகை பிறந்தது. ருத்ரா வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு கட்டிலில் ஏறிப் படுத்துவிட, சுதியும் அப்படியே மெதுவாய் கால்களை இறக்கிப் படுத்து போர்வையை இழுத்துப் போர்த்தினாள். பத்து நிமிடம் அலைபேசியைப் பார்த்தவளுக்கு விழிகள் சொக்க, அப்படியே தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை ஐந்தரைக்கு எழும்போது சுதிக்கு அத்தனை சோர்வாய் இல்லை‌. காரணம் நேற்றிரவு பத்து மணிக்கு முன்பே தூங்கிவிட்டதால் என்றுணர்ந்தவள் கொஞ்சம் புத்துணர்வோடு வேலைக்கு கிளம்பினாள். ஏழு மணிக்கு முன்பே நிவினின் வீட்டை அடைந்தாள். காலையிலே என்ன சமைக்க வேண்டும் என்று அவன் புலனத்தில் அனுப்பியிருந்தான். இவள் சென்றதும் கதவைத் திறந்து தலையை அசைத்தவனின் செவியில் காதொலிப்பான் இருந்தது. மறுபுறம் இருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டே அவளுக்கு கண்களால் சைகை செய்ய, இவள் விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்தாள்.
இரவு அவன் சாப்பிட்ட பாத்திரங்கள் இருந்தன. அவற்றைக் கழுவிக் கவிழ்த்தினாள். சமைக்க வேண்டிய காய்கறிகளை வெளியே எடுத்து வைத்திருந்தான் நிவின். சப்பாத்திக்கு மாவு பிசைய சென்றவள் நினைவு வந்தவளாக பக்கவாட்டிலிருந்த துணி துவைக்கும் எந்திரத்தை நோக்கி நகர்ந்தாள். மற்றொரு அறையிலிருந்த கழிவறையில்தான் எந்திரம் இருந்தது. நேற்றைக்கு வீட்டை சுத்தம் செய்யும்போது கவனித்திருந்தாள்.
அதற்கு அருகிலே கூடையில் பயன்படுத்திய உடைகளைப் போட்டிருந்தான் நிவின். ஒரு நொடி கைகள் தயங்கின. சமையல் மட்டுமே செய்கிறேன் என வீட்டில் பொய்யுரைத்திருந்தாள். மற்ற வேலைகளும் அதில் அடக்கம் எனத் தெரிந்தால் கண்டிப்பாக சௌம்யாவும் சந்திராவும் இவளை செல்ல அனுமதித்திருக்க மாட்டார்கள். தந்தையும் தமையனும் இருந்தவரை ராணியாக வாழ்ந்தவள். வீட்டிலே அவளாக எடுத்துப் போட்டு வேலையை செய்தாலன்றி, ஒருவரும் அவளை வேலை ஏவ மாட்டார்கள்.

யாரோ ஒருவன் அணிந்த உடையைத் தொட்டதும், ஒரு நிமிடம் மனம் வலித்தது. அதைவிட உள்ளாடையை எல்லாம் இதில் வைத்திருப்பானோ என்ற எண்ணத்துடன் வெகுவாய் தயங்கி உடையை எடுத்து இயந்திரத்தில் போட்டாள். ஆனால் நிவினின் உள்ளாடைகள் ஒன்றுமே அகப்படவில்லை. அதில் சுதிக்கு நிம்மதி பெருமூச்சு எழுந்தது. நிவின் உள்ளாடைகளை அவனேத் துவைத்துக் காய வைத்துவிட்டான். அவனுக்குமே அவற்றை வேலைக்காரர்களைத் துவைக்க சொல்வது அநாகரிகம் எனத் தோன்றியது. அதனாலே முன்பும் தானே செய்தான். இப்போதும் அதையே பின்பற்றினான்.
சுதி நேரத்தைப் பார்த்துவிட்டு அவனுக்கு நான்கு சப்பாத்திகளை சுட்டாள். அப்படியே அலைபேசியில் பன்னீர் குருமா எப்படி வைப்பது எனக் காதில் வாங்கிக் கொண்டே மாவு பிசைந்த பாத்திரத்தைக் கழுவி வைத்தாள். முதல்முறையாக பன்னீர் குருமா செய்வதால் சின்ன தடுமாற்றம் அவளிடம். வீட்டில் அவர்கள் பன்னீரெல்லாம் உபயோகப்படுத்தியதில்லை. இனிமேல் குழந்தைகளுக்காவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்து சிறுசிறு துண்டுகளாக அவற்றை வெட்டிக் குருமா வைத்தாள். அப்படியே மதியத்திற்கு தக்காளி சாதம் வைத்து உருளைக் கிழங்கையும் வறுத்தெடுத்தாள்.
இயந்திரம் துவைத்து முடித்து விட்டேன் என ஒலியெழுப்ப, அவற்றை வாலியில் எடுத்தாள். கடைசி மாடிக்குச் சென்று காயப்போட வேண்டுமோ என இவள் எண்ண, அவளைக் கவனித்துக் கொண்டிருந்த நிவின், “பால்கனில ட்ரையர் ஸ்டாண்ட் இருக்கு. அதுல ட்ரை பண்ணிடுங்க‌‌...” என அவன் அலைபேசியிலிருந்து சற்றே விலகி இவளிடம் கூறிவிட்டு மீண்டும் கவனத்தை அங்கு வைத்தான். இவள் சிறிதாய் தலையசைப்பைக் கொடுத்துவிட்டு துணி உலர்த்தும் கம்பியில் அதைக் காயப் போட்டு முடித்தாள். நேரத்தைப் பார்த்தவள் வீட்டை ஒருமுறை சுத்தம் செய்து முடிய, முதுகு மெதுவாய் வலிக்கத் தொடங்கியது.
நிமிர்ந்து இரண்டு நிமிடங்கள் சுவரில் சாய்ந்து நின்று தன்னை சமன்படுத்திக்கொண்டு நேரத்தைப் பார்த்தாள். எட்டு முப்பது எனக் காண்பிக்க, முகத்தை ஒரு முறை கழுவிவிட்டு கண்ணாடியில் பொட்டை சரிசெய்து பையை மாட்டிக்கொண்டு, "போய்ட்டு வரேன் சார்!" என அவனைப் பார்த்தாள்.
“ஹம்ம்...” இவளைப் பார்த்து அவன் கூறியதும் சுதி கீழே சென்றாள். அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழே வரிசையாய் கல்மேஜைகள் போடப்பட்டிருந்தன. சுற்றிலும் ஆர்க்கிட் மற்றும் குரோட்டன்களும், இன்னும் சில பல செடிகளும் நட்டுப் பசுமையாய் இருந்தது. ஆங்காங்கு வயதானவர்கள் பேசிக் கொண்டும் நடைபயின்று கொண்டுமிருந்தனர். தாய்மார்கள் பிள்ளைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றுவதற்காக அவர்களோடு நின்றிருக்க, குழந்தைகள் தங்களுக்குள்ளே பேசி அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
வணிக வளாகத்திற்கு சென்றாலும் பின்புறம் அமர்ந்து தான் உண்ண வேண்டும். ஒருவரும் இல்லாது வெறுமையாய் இருப்பதற்கு இங்கேயே அமர்ந்து உண்ணலாம் என அப்படியே ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வேடிக்கைப் பார்த்தாள். சிலுசிலுவென்ற காலை நேரக் காற்றும் மிதமான வெயிலும் மாறி மாறி அவளை சமீபித்தன. பதினைந்து நிமிடங்களில் உண்டு முடித்தவள், மெதுவாய் நடந்தாள். வேகமாக நடந்தால் கால் வலியும் இடுப்பு வலியும் அதிகமாகிவிடும். அதனாலே மெதுவாய் நடந்தாள். ஐந்து நிமிடம் முன்னதாகவே சென்று வேலையில் தன்னைக் கலந்தாள்.
விவேகா காலையிலிருந்து முகத்தைத் திருப்பிச் சென்றாலும் அவளாலும் தோழியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் வாய் ஓயப் பேசுவதைக் கேட்கும் ஒரே ஜீவன் சுதி மட்டுமே. இப்போது அவளிடமும் முனைத்துக் கொண்டதால் விவேகாவிற்குப் பேச நாக்கு துறுதுறுவென்றிருந்தது. ஆனாலும் விரைப்பாய் சுற்றினாள்.

சுதி மெதுவாய் உணவு உண்ணும்போது வேண்டுமென்றே வைகுண்டத்தைப் பற்றி இரண்டு வரிகள் திட்ட, அதை முடித்து வைத்தது சாட்சாத் விவேகாதான். காலையிலே இவளிடம் முகத்தைக் காண்பித்து விட்டார் என வளவளவென அவரைப் பற்றி தீட்டித் தீர்த்துவிட்டாள் பெண். வசதியாய் அவள் சுதியிடம் இட்டிருந்த சண்டையை மறந்து போயிருந்தாள். ஞாபகம் வந்தாலும் அதையே இழுத்துப் பிடிக்க மனதில்லை. சுதியின் வீட்டு சூழ்நிலையும் இவளுக்குப் புரிய, தோழிக்காக வருந்த மட்டுமே அவளால் முடிந்தது.
இரண்டு நாட்கள் கழிந்திருந்தன.
நிவின் என்ன சமைக்க வேண்டும் என்பதை முதல்நாள் இரவே அவளுக்குப் புலனத்தில் அனுப்பிவிடுவதை வாடிக்கையாக்கி இருந்தான். அதுபோல தேவையான பொருட்களை அவனே சமையல் மேடையிலே எடுத்து வைத்துவிட, இவளுக்கும் வேலை குறைந்திருந்தது. முதல்நாள் போல் அல்லாது ஒருவாறாய் நேரத்தை இழுத்துப் பிடிக்கப் பழகியிருந்தாள் சுதி. காலையில் கல்மேஜையில் அமர்ந்து உண்ணும் உணவும், பிள்ளைகளோடு இரவு செலவழிக்கும் நேரமும் அவளது உடல் சோர்வை மங்கச் செய்தன. அவளுக்குமே அண்ணன் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என ஒரு அத்தையாய் அக்கறை கொள்ள வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் என அவ்வப்போது மனதில் நெருடும். ஆனால் முன்பெல்லாம் அதற்கு நேரம் வாய்க்கவில்லை. இப்போது கிடைத்த காலத்தைப் பயன்படுத்திக் கொண்டாள்.
இரவு பத்து மணிக்கு முன்பே தூங்கி அதிகாலை எழுவது கூட அவளுக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. பன்னிரெண்டு மணிக்குத் தூங்கச் சென்றால் உறங்கவே ஒரு மணியைத் தொட்டுவிடும். அதனாலே சரியாய் உறங்காத நாட்கள் ஏராளம். இப்போது அப்படியில்லை. இரண்டு இடத்தில் வேலை செய்வதால் உடல் அசதியில் உடனே ஓய்விற்கு சென்றுவிடுகிறது.
அன்றைக்கும் வழக்கம் போல நிவின் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தாள் சுதி. கைகள் அளவாய் நிலக்கடலையை எடுத்து சட்டியிலிட, அதை வறுத்தெடுத்து தக்காளி வெங்காயம் சேர்த்து சட்னியை அரைத்து முடித்திருந்தாள். நிவின் நேற்றைக்கு, ‘தட் பீனட் சட்னி வாஸ் நைஸ் சுதிரமாலா. சோ ப்ரிபேர் தட் சட்னி வித் தோசா டுமாரோ!’ என அனுப்பியிருக்க, இவளுக்கு முகம் மலர்ந்தது. மனநிறைவுடன் சட்னியை அரைத்து முடித்து தோசைக்கு மாவைக் கலக்கி ஊற்றத் தொடங்கினாள்.
வெளியே ஆள் அரவம் கேட்க, மெதுவாய் தலையை நீட்டினாள். அக்ஷா வந்திருந்தாள். அவர்கள் இருவரும் ஏதோ பேச, இவள் வேலையில் கவனமானாள்.

நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் இப்போதுதான் அக்ஷா இங்கு வருகிறாள். நிவினின் சுடு சொற்கள் கொடுத்த சுணக்கம் மறைந்து முகம் பளிச்சென மின்னியது‌. யார் சமையல் செய்வது என் அவள் விசாரிக்க, நிவின் சுதியைப் பற்றிக் கூற, “ஓ... அவங்கதான் நியூ சர்வண்டா ஜாய்ன் பண்ணி இருக்காங்களா?” எனக் கேட்டு பையை மேஜை மீது வைத்துவிட்டு சமையலறையை நோக்கி அவள் எட்டு வைக்க, நிவின் அறைக்குள் புகுந்திருந்தான்.
“ஹாய்...” என அக்ஷா குரலோடு அவளது வாசனை திரவியமும் நாசியைத் துளைக்க, சுதி புன்னகையுடன் திரும்பினாள்.
“ஹாய் மேடம்!” என அவள் கூற, “சாரி... சாரி. உன் நேம் கெஞ்சம் டிபகல்ட் டூ ரிமெம்பர். சோ ப்ளீஸ்!” என அவள் கூற, “சுதிரமாலா மேடம். நீங்க சுதின்னு கூப்டுங்க. ஈஸியா இருக்கும்!” என்றவள் திரும்பி வேலையைப் பார்த்தாள். முதல்முறையாக அவள் வணிக வளாகத்தில் பார்த்தப் போதிருந்த பன்மை விளிப்பு இப்போது இங்கே வேலைக்கு சேர்ந்ததில் குறைந்திருப்பதை உணர்ந்தாலும் சுதியிடம் எதிர்வினை இல்லை. அதைக் குறிப்பிட்டு மரியாதையைக் கேட்டு வாங்க விருப்பமில்லை. எப்படியும் சுதியைவிட அவளுக்கு பிராயம்‌ ஒன்றிரண்டு அதிகமாக இருக்கும் என மனதைத் தேற்றிக் கொண்டாள். மற்றபடி எந்த சிந்தனையையும் மூளையில் ஏற்றவில்லை.
“என்ன குக் பண்ற சுதி?” எனக் கேட்டு சுதி சமைத்தவற்றை திறந்து பார்த்தாள் அக்ஷா.
“கடலைப்பருப்பு சட்னியும் தோசையும் மேடம். மதியத்துக்கு சாதம் வடிச்சு, சுண்டல் குழம்பும் முட்டைகோஸ் பொரியலும் பண்ணப் போறேன் மேடம்!” என்றவளின் கைகள் தன் வேலையைப் பார்த்தன.
“கடலைப்பருப்பு சட்னியா? நிவினுக்கு அதெல்லாம் பிடிக்காதே சுதி. அவன் சாப்பிட மாட்டானே!” என்றவள் அந்த சட்னியைத் தொட்டு நாக்கில் வைத்தாள்.
“நாட் தட் மச் டேஸ்டி. இது வேணாம்... நீ சுண்டல் ஊற வச்சிருக்கல்ல?” எனக் கேட்டு ஊற வைத்த சுண்டலை திறந்து பார்த்தவள், “நான் சென்னா செய்றேன். சாட் மசாலா போட்டு செஞ்சா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்...” என்றாள்.
சுதி அவள் முகத்தைத் தயக்கமாய்ப் பார்த்தாள். “இல்ல மேடம்... சார் தான் செய்ய சொன்னாரு!” எனத் தயங்கினாள்.
“ப்ம்ச்... அவன்கிட்ட நான் சொல்லிக்கிறேன் மா...இது இப்போ வேஸ்ட்!” என்றவள் சட்டென அவள் அரைத்த சட்னியை எடுத்து குப்பையில் கொட்டிவிட, சுதியின் முகம் நொடியில் வாடிப்போனது. இவ்வளவு நேரம் அவள் மெனக்கெட்டு அக்கறையாய் செய்தவற்றை அக்ஷா நொடியில் குப்பைக் கூடையிலிட்டிருந்தாள். அதில் வருத்தம் மேவியது பெண்ணுக்கு.
“தோசை ஏன் இவ்வளோ ஹார்டா இருக்கு? அவன் சாப்பிட்றதே மூனு தோசைதான். இப்படி சுட்டா, அதுவும் சாப்பிட மாட்டான். இந்த தோசையும் வேணாம். நான் வேற சுட்றேன்!” என்றவள் சுதி சுட்ட தோசையைக் கீழே போடச் செல்ல, இவள் தடுத்திருந்தாள்.
“மேடம்... அதைக் கீழப் போடாதீங்க. நான் யாருக்கும் கொடுத்துடுறேன். சாப்பாட்டை வேஸ்ட் பண்ண வேண்டாம்!” என்றாள் தயக்கமாய்.
“ஷ்யூர்... நோ இஷ்ஷூஸ். எடுத்துட்டுப் போங்க!” என்றவள் சுதியைத் தள்ளி நிற்க வைத்துவிட்டு சென்னா மாசாலாவை வைத்து தோசையை மொறுகலாக
சுட்டாள். சுதிக்கு அங்கே என்ன செய்வதெனத் தெரியவில்லை. துடப்பத்தைக் கையிலெடுத்து வீட்டை சுத்தம் செய்ய சென்றுவிட்டாள்.

சிந்தனை முழுவதும் அக்ஷாவின் செயலையே சுற்றி வந்தது. ஏனோ தான் கஷ்டப்பட்டு சமைத்தவற்றை அவள் நொடியில் வீணடித்திருக்க, மனம் கொஞ்சம் துவண்டது. உண்மையிலே தான் ஒழுங்காய் சமைக்கவில்லையோ? வாங்கும் சம்பளத்திற்காகவது நன்றாய் சமைத்து அவனின் வயிறு வாட விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றொரு உந்துதல் பிறந்தது. ஆனாலும் அக்ஷா கூறிய அளவிற்கு தான் அப்படியொன்றும் மோசமாய் சமைக்கவில்லை என எண்ணினாள் சுதி.
தான் சமைத்த எதையும் சுவைபார்க்க மாட்டாள் சுதிரமாலா. அது நிவினுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ? ஒரு சிலருக்கு இது போன்ற செய்கையில் விருப்பமிருக்காது. அதுவுமின்றி அவளுக்கு எப்போதும் எச்சரிக்கை உணர்வு தலை தூக்கும். நிவின் வீட்டில் தண்ணீர் கூட அருந்த மாட்டாள். அதற்காக அவன் மீது சந்தேகம் என்றில்லை. அவளுடைய பாதுகாப்பிற்கு தான் மட்டும்தானே பொறுப்பு என்ற எண்ணம் மனம் முழுவதும் உண்டு.
இவள் வீட்டை சுத்தம் செய்து முடிக்க, அக்ஷா சமைத்திருந்தாள். சுதி சென்று மதியத்திற்கு என்ன சமைப்பது என யோசித்தாள். ஊற வைத்திருந்த சுண்டலை மற்றவள் எடுத்துக் கொள்ள, ரசம் வைக்கலாம் என நினைத்து சாதம் வடித்து ரசம் வைத்தாள். அதற்கு தோதாக முட்டைக் கோஸை பாசிபருப்புடன் சேர்த்து பொரியல் செய்து முடித்தாள். அப்படியே பாத்திரத்தையும் இடையிடையே கழுவிவிட்டாள். அக்ஷா இடையிட்டதால் சுதியால் அன்றைக்கு வேலையை நேரத்திற்குள் முடிக்க முடியவில்லை.
தாமதமாகவே அனைத்தும் முடிய, காலை உணவு உண்ண நேரமின்றி போனது. சாப்பிட மனதும் இல்லாது போக, நிவினுக்காக செய்த தோசையோடு தன் உணவையும் சாலையோரத்தில் அமர்ந்திருந்த பெரியவரிடம் கொடுத்துவிட்டாள். அவர் மனம் மகிழ்ந்து நன்றியுரைக்க, அதை சிறுமுறுவலுடன் ஏற்றவள் வேலைக்குச் சென்றுவிட்டாள்.
மறுநாள் சுதி நிவின் வீட்டில் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் வந்து நிற்கும் அரவம் உணர்ந்தாள். அவனுக்கு முன்னே வாசனை திரவியம் வந்து நின்றது.
“என்ன வேணும் சார்? காஃபி போட்டுத் தரவா சார்?” என இவள் வினவ, “நோ நீட் சுதிரமாலா. நேத்து நான் என்ன குக் பண்ண சொன்னேன். நீங்க என்ன பண்ணி வச்சிருந்தீங்க?” என அவன் அழுத்தமாய்க் கேட்க, சுதி சில நொடிகள் நிதானித்தாள்.
“நான் நேத்து நீங்க சொன்னதைதான் செஞ்சேன் சார். மேடம்தான் உங்களுக்கு கடலைப்பருப்பு சட்னி பிடிக்காதுன்னு அதைக் குப்பைக் கூடையில போட்டுட்டு வேற செஞ்சாங்க!” என்றாள் மெதுவாய்.
“இங்க நான்தான் உங்களுக்கு ஓனர். நான்தானே சேலரி தரேன். சோ நீங்க எனக்குத்தான் ஒபே பண்ணணும். மத்த யார் எதை சொன்னாலும் ஃபாலோ பண்ணக் கூடாது. காட் இட்?” அவன் சுள்ளென கோபத்தில் வார்த்தைளைக் கொட்ட, சுதியின் முகம் மெதுமெதுவாக மாறத் தொடங்கியது. நான்கு நாட்களாக புன்னகைத்த முகம் இன்றைக்கு திடீரென மற்றொரு பக்கத்தைத் கண்பிக்கவும் அவளுக்கு விழிகள் மெல்ல கலங்கின.

அவன் முன்னே அழக் கூடாதென கண்ணீரை இழுத்துப் பிடித்தவள், “சாரி சார்... என் தப்புதான். இனிமே அந்த மேடம் இல்ல, யார் என்ன சொன்னாலும் நீங்க சொல்றதை மட்டும்தான் குக் பண்ணுவேன். திஸ் இஸ் மை லாஸ்ட் மிஸ்டேக் சார். இனிமே இப்படி நடக்காது!” என்ன முயன்றும் சுதியின் குரல் கலங்கி வெளிவந்தது. நிவின் இருந்தக் கோபத்திற்கு அதையெல்லாம் கவனித்தானில்லை. விறுவிறுவென அவன் வெளியேறிவிட, சுதிக்கு கண்ணீர் பொங்கியது.
விழிகளைத் துடைத்தவள் வேலையைக் கவனித்தாள். ஏனோ சட்டென அவன் குரல் மாற்றத்தை இவளால் ஏற்க முடியவில்லை. கண்ணில் நீர் நிற்காமல் வழிய, அதைத் துடைத்துக் கொண்டே வேலையை செய்தாள். சில பல நிமிடங்களில் நடந்ததை ஏற்று நிதர்சனம் அவளுக்கு உறைத்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றினாள். மனம் சில நொடிகளில் அவளை சமாதானம் செய்ய விழைந்தது. வைகுண்டம் திட்டாத வார்த்தைகளா? அவற்றையெல்லாம் பொறுத்துப் போன மனது ஒரு சுடுசொல்லை ஏற்காதா என்ன? தவறு தன் மீதுதான். அவன் கூறுவது போல அவன்தானே முதலாளி. தான் இங்கு அவனிடம் வீட்டு வேலைக்கு வந்திருக்கிறோம். அதனால் அவன் கூறியபடி நடப்பதுதானே சரி என அவளுக்கு அவளே சமாதானம் கூறினாள். இருந்தும் நிவின் கோபப்பட்டாமல் தன்மையாய்க் கூறியிருக்கலாம் என காயம் கண்ட மனது கனத்துப் போக, அவளுக்கு சிரிப்பு வந்தது.
வணிக வளாகத்தில் கொஞ்சம் மரியாதையான வேலைதான். அங்கேயே வைகுண்டம் வார்த்தைகளைக் கடித்து துப்புவார். இப்போது இங்கே அவளென்ன கலெக்டர் வேலைக்கா வந்தாள். வீட்டு வேலைக்குத்தானே. அப்போது இது மட்டுமல்ல இன்னும் பேச்சுக்கள் கூட கேட்க நேரிடலாம். ஆனாலும் இனிமேல் நிவின் திட்டுமளவிற்கு தான் நடந்து கொள்ளக் கூடாது. கவனமாய் இருக்க வேண்டும் என மனதிலே உருப்போட்டாள். விழிநீர் வற்றியிருந்தது. பழகிப் போன ஒன்று என்றாலும் வைகுண்டம் அல்லாது புதிய முதலாளி திட்டியதால் முனுக்கென நீர் வந்துவிட்டது போல என இவள் உதடுகளில் கசப்பான முறுவல் தோன்றிற்று.
முகத்தை நீரில் அடித்துக் கழுவினாள். அழுதது விழிகளில் சிவப்பை உண்டாக்கி இருந்தது. இப்படியே சென்று நின்றாள் விவேகா கேள்விகளால் துளைத்தெடுப்பாளே என மனம் சுணங்க, கைப்பையில் பொட்டைத் தேடினாள். வெறும் காதிதமே இருக்க, பொட்டு தீர்ந்திருந்தது. சரியென்று முகத்தைத் துப்பட்டாவால் துடைத்துக் கண்ணாடியில் சரிசெய்தவாறே வெளியே சென்றாள். ஏனோ நிவினைப் பார்க்காது சென்றுவிடு என ரோஷம் கொண்ட மனது உந்த, அவளால் அப்படியெல்லாம் செல்ல முடியாதே. வேலையை விட்டு சென்றால் பார்க்காது செல்லலாம்.
எப்படியிருப்பினும் நாளை அவன் முகத்தில்தானே விழிக்க வேண்டும். என்ன செய்ய என மனம் முழுவதும் கசந்து வழிய, அவனைப் பார்த்தாள். பாதி திறந்திருந்த அறையின் வழியே இவள் நிற்பது தெரிய நிவின் எழுந்து வந்தான். அவள் முகம் அழுது சிவந்திருப்பதைக் கூற இவனுக்கு மெலிதாய் குற்றவுணர்வு எட்டிப் பார்த்தது.
இது முழுவதும் அக்ஷா மீதிருக்கும் கோபம்தான். ஏனோ அந்தப் பெண் அவளிஷ்டத்திற்குத் தன்னை வளைக்கிறாளே என்ற ஆதங்கமும் கோபமும் இவள் மீது திரும்பியிருந்தது. அவளிடம் அவனால் காண்பிக்க முடியவில்லை. சுதி அரைத்த சட்னி தாயை நினைவுப்படுத்தியிருக்க, அதனாலே அவளை கடலைப்பருப்பு சட்னியை அரைக்கச் சொல்லி இருந்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தாயின் கைமணம் போல உணவு. அத்தனை சுவையாய் இல்லையெனினும் சுதி அவனுக்காக மெனக்கெட்டு செய்கிறாள் எனப்‌ புரிந்து வைத்திருந்தான். முன்பு வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் கடமைக்கு செய்தது போலொரு எண்ணம். ஆனால் சுதியின் உணவு அப்படியில்லை. கொஞ்சம் வேறுபாட்டை அவனால் கண்டறிய முடிந்தது. அப்படியிருக்கையில் அவளிஷ்டத்திற்கு சமைத்தது இவனுக்குப் பிடிக்கவில்லை. உணவு என்பதைக் காட்டிலும் அவனுடைய முடிவை அக்ஷா மாற்றுகிறாள் என்ற நினைப்பே அவனை எரிச்சலைடைய செய்ய காரணமாய் இருந்தது.
சுதி நிவின் முகத்தைப் பார்க்காது தரையை வெறித்திருந்தாள். “வேலையெல்லாம் முடிச்சிட்டேன் சார்...” என அவள் கூற, மெல்லிய தலையாட்டலுடன் அதை ஏற்றவன், தயக்கத்துடன், “சாரி சுதிரமாலா... ஐ யம் ரியலி சாரி. அது இன்டென்ஷனல் இல்லை. அக்ஷா மேல இருக்க கோபத்துல அப்படி பேசிட்டேன்!” என அவன் உரைக்க, சுதி மெதுவாய் நிமிர்ந்து அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள். அங்கே காண்பிக்க முடியாத கோபத்தை இவளிடம் கொட்டி விட்டதாக உரைத்தவனைக் கண்டு அவளுக்கு ஆச்சரியம் எதுவும் இல்ல. வேலைக்கு வருபவர்களிடம் முதலாளி சொந்தக் கோப தாபங்களைக் காண்பிப்பது ஒன்றும் அவளுக்குப் புதிதில்லையே.
தன்னை சமாளித்தவள், “என் மேலதான் சார் தப்பு. நீங்க சாரி கேட்க தேவையில்லை. நான் சொன்னது போல இட்ஸ் மை மிஸ்டேக். என் பக்கம்தான் முழு தப்பும் இருக்கு. நிச்சயமா இனிமே மிஸ்டேக்ஸ் எதுவும் நடக்காம பார்த்துக்கிறேன் சார். சம்பளம் கொடுக்குற உங்களோட வார்த்தையை ஒபே பண்றேன். சப்போஸ் என்னையும் மீறி எதாவது மிஸ்டேக் பண்ணிட்டா, சாரி சார்!” என்றாள் அன்னியமான குரலில். இத்தனை நாட்கள் அவளது குரலில் சிநேகமான பாவமும் அவனைக் கண்டால் உதடுகளும் மலரும். ஆனால் இப்போது அது இரண்டுமே அற்றுப் போயிருந்தது. நீ முதலாளி, தான் தொழிலாளி என்று அவனிடமிருந்து எட்டி நின்று கொண்டவள், “எனக்கு டைமாச்சு சார். நான் கிளம்புறேன்!” என்றுவிட்டு சில நொடிகள் தயங்கி, “சார், உங்களுக்கு என்னோட சமையல்ல எதுவும் பிடிக்கலை, இல்லை இன்னும் பெட்டரா இருக்கணும்னு தோணுச்சுன்னா கண்டிப்பா சொல்லுங்க. இல்லைன்னா மெசேஜ் கூடப் பண்ணுங்க. வாங்குற சம்பளத்துக்கு உங்க ஒரு ஆளுக்குத்தான் சமைக்கிறேன். உங்க வயித்தை வாடவிடாம பார்த்துக்கணும்னு தோணுது. அதான் கேட்டேன்!” என்றாள்.
ஏனோ நிவினுக்கு முகம் கன்றியது. அவள் சரியாய் இருக்கிறாள். தான் தான் தவறிவிட்டோம் என்ற குற்றவுணர்வு அதிகரித்தது. சுதி வாய் வார்த்தையாக உரைக்கவில்லை எனினும் அவளது செயல்களே ஓரளவிற்கு திருப்தியாய் இருந்தன. வாங்கும் சம்பளத்திற்குரிய உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பை அவளிடம் கண்டிருக்கிறானே. தேவையில்லாது அக்ஷா மீதிருக்கும் கோபத்தை இவளிடம் காண்பித்து விட்டோம் என தன் மீதே கோபம் வந்தது நிவினுக்கு. சுதி சென்று ஐந்து நிமிடங்கள் கடந்தும் நிவின் அப்படியே நின்றான். அவள் அகல, இவன் பால்கனிக்குச் சென்றான்.


(தொடர்ச்சியை கமெண்ட் பிறகு ஸ்க்ரோல் செய்து படிக்கவும்)
 
Last edited:
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
சுதி நடந்து செல்வதையே பார்த்தான். அவளுக்கும் அவன் தன்னைப் பார்வையாலே தொடருவது புரிந்தது. அங்கே அமர்ந்து உணவுண்ண விருப்பமில்லை. உணவு உட்கொள்ளவே விருப்பமில்லாது போக, மெதுவாய் நடந்தாள். இன்னும் அரைமணி நேரம் இருந்தது. வணிக வளாகத்திற்கு இத்தனை விரைவாய் சென்றால் சுதிரமாலா அரைமணி நேரம் அதிகமாய் வேலை பார்த்துவிட்டாள் என வைகுண்டம் தனக்கென்ன விருதாய் கொடுக்கப் போகிறார் மனம் கேலி செய்தது. இனிமேல் உணவில் உப்பைக் குறைத்துப் போட்டு சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்த ரோஷம் அழுகையெல்லாம் வராது என நினைத்துக் கொண்டே நடந்தாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
881
Reaction score
652
Points
93
Nivin😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠 herovache athanaala thittama poren, podaaaaaa

Paavam suthi, Ava mela irukka kaduppa iva mela kaattuvaana
 
Messages
55
Reaction score
36
Points
18
அடுத்தவர் மீது கொண்ட
கோவம்_ தவறு செய்யாத
அவளை தாக்கியது...

கோபத்தில் உதிர்ந்த வார்த்தை
வாள் போல மனதை
அறுக்க...

வாங்கியவள் விழி கண்ணீரில் நிறைய
வீசியவனுக்கும் வலிக்கி
றது....

 
Active member
Messages
178
Reaction score
119
Points
43
Lovely baby
 
Top