• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 6 💖

சுதியும் நிவினும் சந்தித்து ஓரிரு வாரங்கள் கடந்திருந்தன. இடையே அவன் வந்திருந்தாலும் முதல் தளத்திலே அவனுக்கு வேண்டிய பொருட்கள் கிடைத்துவிட்டன. உள்ளே நுழைந்ததும் அழையா விருந்தாளியாக சுதி நினைவை நிறைத்தாலும், எந்த மெனக்கெடலும் இவன் மேற்கொள்ளவில்லை. மெதுவாய் பார்வையை உயர்த்தி அவள் தென்படுகிறாளா என மட்டும் பார்த்தான். அவள் அகப்படாததில் தோள் குலுக்கலுடன் அவன் விடை பெற்றான்.

மேல் தளத்தை அடைய ஐந்து நிமிடங்கள் கூட தேவையிராது. ஆனால் இவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. பார்த்தாலும் என்ன பேச போகிறோம். பரஸ்பரமாய் ஒரு புன்னகையைத் தவிர எதுவும் பகிரப் போவதில்லை. பிறகென்ன என்ற எண்ணத்திலே விட்டுவிட்டான். இப்போதும் வணிக வளாகத்திற்குத்தான் வந்திருந்தான்.

பாலு மகேந்திராவும் சனி ஞாயிறு விடுமுறை என மகனைக் காண வந்திருந்தார். இருவரும் அந்த வாரத்திற்குத் தேவையான பொருட்களைப் பட்டியலிட்டுக் கூடையை நிரப்பினர்.

நிவினுக்கு மேல்தளம் செல்ல அவசியம் ஏற்பட, தந்தையைக் கீழே இருத்திவிட்டு இவன் மட்டும் மேலேறினான். ஏனோ இன்றைக்கு சுதியைப் பற்றிய எண்ணமே அவனிடம் இல்லை . அவன் கண்கள் ஒவ்வொரு அடுக்காகத் துழாவ, அன்றைக்கு அவன் வாங்கிய வழலைக் கட்டிகள் தென்பட்டன. அப்போதுதான் சுதி நினைவுகள் சிந்தையை ஆக்கிரமிக்க, ஒருமுறை சுற்றிப் பார்த்தான். அவள் எங்கும் தென்படவில்லை. ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஊழியர்கள் சற்றே எண்ணிக்கையில் குறைவாய் இருந்தனர். அவள் விடுமுறை எடுத்திருக்க கூடுமென எண்ணிவிட்டு தேவையான பொருட்களைத் தேடியெடுத்து கீழே சென்றுவிட்டான்.

“என்னடா, ப்ரெட்டை வாங்கிட்டீயா? எப்படித்தான் இதை சாப்பிட்டு உயிர் வாழ்றீயோ?” என அவர் அலுக்க, மகன் சிறு முறுவலுடன் பணம் செலுத்தும் இடம் நோக்கி நகர, அவரும் உடன் சென்றார்.

“போர் தௌசண்ட் ஃபைவ் ஹண்ட்ரட் சார்!” ஊழியர் கூற, நிவின் தன் பணப் பரிவர்த்தனை அட்டையை எடுத்து நீட்டினான்.

“பாஸ்வேர்ட் சார்?” ஊழியர் கேட்க, அந்த நவீன கருவியில் இவன் கடவுச் சொல்லை இட்டு முடிய, அவன் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்றாள்.

“ஜெகா... ஃபோன் பேசிட்டு இருக்காங்க இல்ல, அந்த மேடம் பில்லோட இந்த ரெட் புல்லை சேர்த்திடுங்க. கூலிங் இல்லாம கேட்டாங்க!” என சுதி சக ஊழியரிடம் கூற, இவனது பார்வை அவளிடம்தான். அவள் இவனை கவனிக்கவில்லை. ஊழியர்கள் வெகுகுறைவாக இருக்க, இன்றைக்கு வருகை தந்திருக்கும் இருபது பேரே அனைத்தையும் பார்க்க வேண்டியிருந்தது. இரண்டு மடங்கு சம்பளத்தோடு இரண்டு மடங்கு வேலையையும் உறுஞ்சிவிடும் நாள் ஞாயிறு என சுதி நினைத்து சிரித்துக் கொள்வாள்.

“டேய்... அந்தப் பொண்ணையே ஏன் பார்க்குற? பில்லை வாங்குடா!” பாலுமகேந்திரா மகனின் தோள் தொட்டார்.

“ஹம்ம் பா...” என அவளிடமிருந்து பார்வையை அகற்றிவிட்டு அடுத்தப் பகுதிக்கு நகர்ந்து பொருட்கள் அடங்கிய பையைப் பெற்றுக் கொண்டான். அதை தன் கரத்திற்கு மாற்றிக் கொண்டார் பெரியவர்.

“யாரு டா அது... தெரிஞ்ச பொண்ணா?” தந்தை யோசனையாய் வினவ, வெளியேறும வழியை நோக்கி எட்டு வைத்த நிவின், “ஆமா ப்பா...” என பதிலளித்தார்.

“மூனு வருஷமா இங்க வர்றதால எல்லாரையும் பழகிட்டீயா டா?” என அவர் கேட்க, இவன் இல்லையென தலையை அசைத்தான்.

“அவங்கதான் என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க. சோ, அதனால தெரியும் பா...” மகன் நடக்க, அவன் பதிலில் அவர் அப்படியே நின்றுவிட்டார்.

“டேய்... முன்னாடியே சொல்லி இருந்தா, ஒரு தேங்க்ஸ் சொல்லி இருப்பேன்ல?” என அவர் கேட்க, இவனும் அவரைத் திரும்பி பார்த்தான். ஏனோ தன்னைக் கவனிக்காது வேலையில் மூழ்கியிருக்கும் பெண்ணிடம் வலிய சென்று பேசுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அவளும் தன்னைக் கவனித்திருந்தால், ஓரிரு வார்த்தைகளை உதிர்த்திருப்பான். அவ்வளவே, அதுவே அவனுடைய குணமும் கூட.

“சரி இருடா... நான் ரெண்டு வார்த்தை அந்தப் பொண்ணு கிட்டே பேசிட்டு வர்றேன்!” என அவர் சுதியை நோக்கிச் சென்றார்.

“ப்பா... அதெல்லாம் வேணாம். வாங்க!” என நிவின் வார்த்தையை காற்றில் கலக்கவிட்டவாறு மகேந்திரா நகர்ந்திருந்தார். அவனும் வேறு வழியின்றி தந்தை பின்னே சென்றான்.

சிறுமி ஒருத்தி கடையிலிருந்த இன்னெட்டுகளை வாரியிறைத்துவிட்டாள். அவளின் தாய், “சாரி மா... சாரி!” என பதறி அருகேயிருந்த சுதியிடம் மன்னிப்பை யாசித்தார்.

“இட்ஸ் ஓகே மேடம்... குழந்தை தானே. நானே எடுத்து வச்சுடுறேன்...” எனப் புன்னகையுடன் கூறி அந்த சிறுமி கீழே இறைத்த இன்னெட்டுகளை எடுத்து அதற்குரிய டப்பாவில் வைத்தாள் சுதி. அவளின் பின்னே ஆள் அரவம் உணர்ந்து திரும்பியவள், “என்ன வேணும் சார்?” என பெரியவரைப் பார்த்து வினவினாள்.

“நான் நிவினோட அப்பாமா!” என அவர் கூறி முடிக்கும்போது நிவினும் அவள் முன்னே வந்து நின்றான். அவரது பேச்சில் சுருங்கிய சுதியின் புருவம் அவனைக் கண்டதும் இயல்பானது. மகேந்திராவைப் பார்த்து புன்னகைத்தாள் அவள்.

“உனக்கு தேங்க்ஸ் சொல்லலாம்னு வந்தேன் மா. என் பையன் உயிரையே காப்பாத்திக் கொடுத்திருக்க. பார்த்துட்டுப் பேசாம போக முடியலை. இவன் சொன்னதும் ரெண்டு வார்த்தைப் பேசலாம்னு வந்தேன்!” என்றவர் வார்த்தைகளில் இவளுக்கு முறுவல் பிறந்தது.

“பரவாயில்லை சார்!” என்றாள் புன்னகைத்து.

“பின்னாடிதான் மா நம்ப வீடு இருக்கு. ஒருநாள் கண்டிப்பா வரணும்!” அவர் அன்பாய்க் கூற, இவள் மெதுவாய் தலையை அசைத்தாள். வைகுண்டத்தின் பார்வை இவளிடம் குவிந்திருந்தை உணர்ந்தவளுக்களுக்கு அவர் மேலும் எதுவும் பேசாது நகர்ந்தால் தேவையில்லை என மனதில் தோன்றிற்று. அவளால் சட்டென பேச்சைக் கத்தரிக்க முடியாது. மகேந்திராவின் பாவனையைக் குரலை வைத்தே அவரின் குணத்தை ஓரளவு அவதானித்தாள். நிவினையும் அவள் பார்த்துப் புன்னகைக்க, அவள் பார்வைப் போகும் திசையை அவனும் கவனித்தான் போல.

“ப்பா... இது அவங்க வொர்க்கிங் டைம். இன்னொரு நாள் பேசலாம். இப்போ வாங்க!” அவன் தந்தையை அழைக்க, “சரிம்மா... விருதுநகர்தான் சொந்த ஊர். அந்தப் பக்கம் வந்தாலும் வீட்டுக்கு வாங்க!” என்றவருக்கு இவள் பதிலுரைக்காது தலையை அசைத்தாள். புன்னகை முகத்தில் வாடவே இல்லை. நிவினையும் நன்றியாய்ப் பார்த்துவிட்டு விறுவிறுவென அவ்விடத்தைவிட்டு அகன்றாள். வைகுண்டத்தின் பார்வை படாதவாறு நகர்ந்து பணியைக் கவனித்தாள்.

“பீனட் பட்டர் வேணும்!” எனக் கேட்ட வாடிக்கையாளருக்கு அவர் கேட்ட தர அடையாளத்தில் சுதி எடுத்துக் கொடுக்க, அவர் அலைபேசியில் கவனமாய் இருந்து அதை தவறவிட்டிருக்க, கண்ணாடி குவளை என்பதால் அது கீழே உடைந்து சிதறியிருந்தது. நொடியில் நிகழ்ந்ததில் சுதிக்கு பக்கென பயம் தொண்டையை அடைத்தது. அந்த வாடிக்கையாளரை அவள் நிமிர்ந்து பார்க்க, அதற்குள்ளே வைகுண்டம் அவ்விடத்திற்கு வந்துவிட்டார்.

“சுதிரமாலா... கண்ணாடி பொருளை ஹேண்டில் பண்ணும்போது கேர்ஃபுல்லா பண்ணணும்னு உங்களுக்குத் தெரியாதா? ஹவ் கேர்லெஸ் யூ ஆர்...” என அவர் வார்த்தைகளைக் கடித்து துப்ப, செய்யாத தப்பிற்கு அவர் திட்டவும் இவளுக்கு முனுக்கென்றுவிட்டது.

“சார்... நான் எதுவும் பண்ணலை. சார்தான் வாங்கும்போது தெரியாம மிஸ் பண்ணிட்டாரு...” என்றாள் அழுத்தமாய் வாடிக்கையாளரைக் கை காண்பித்து.

“ஏம்மா... நீ கொடுக்கும்போது ஒழுங்கா கொடுக்காம, என் மேல குத்தம் சொல்றீயா? உடைஞ்ச பட்டர்க்கு என்கிட்ட பணத்தை வாங்கலாம்னு நினைச்சுட்டீயா?” என அவர் கேட்டதில், சுதிரமாலா அதிர்ந்து போனாள். அவள் மீது துளியளவும் கூடத் தவறில்லாதிருக்க, இந்த மனிதர் ஏன் இப்படி பேசுகிறார் என மனம் அவளுக்குப் பதறியது.

“சுதிரமாலா... தப்பை நீங்க செஞ்சிட்டு கஸ்டமர் மேல ப்ளேம் பண்ணாதீங்க. சச் அ சீப் பிகேவியர்!” வைகுண்டம் பற்களை நறநறக்க, இவளுக்கு அவமானமாய் இருந்தது. முகம் சிவக்க, விழிகள் தளும்பத் துவங்கின. ஏனோ செய்யாத தவறுக்கு குற்றவாளியாக்கப்பட்டதில் நெஞ்சம் விம்மித் துடிக்க, கழிவிரக்கத்தில் கலங்கிய கண்களை இழுத்துப் பிடித்தாள். சுள்ளென அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எதிரிலிருக்கும் மனிதர்களை காயப்படுத்தி அதைக் கீறிப்பார்க்க தவறவில்லை.

“இந்த பீனட் பட்டரோட ரேட் எவ்வளோ?” என அவர் அருகிலிருந்த மற்றொரு ஊழியரிடம் கேட்க, “செவன் ஹண்ட்ரட் சார்!” என்றான் அவன்.

“டிடெக் திஸ் அமௌண்ட் ஃப்ரம் ஹெர் சேலரி!” என அவர் கூறியதும் சுதியின் முகம் மாறிப்போயிற்று. ஆக மொத்தத்தில் இந்த மாத ஞாயிற்றுக்கிழமையும் அமோகமாக பறிக்கப்பட்டதில் நெஞ்சு முழுக்க வேதனைப் பரவியது. அவள் உடைத்திருந்தால், இந்த தண்டனையை ஏற்றிருப்பாள். வாடிக்கையாளரின் கவனக் குறைவிற்கு இவள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்று தோன்ற, அழுத்தமாய் நின்றாள். உருண்டு திரண்டு நின்ற உவர் நீரை வெளியே செல்ல அனுமதிக்காது இமையை சிமிட்டினாள். தான் அழுதால் குற்றம் செய்தது போலாகிவிடும் என நியாய மனது அவளை முடுக்கிவிட்டது.

நிவினும் மகேந்திராவும் வாயில் வரை சென்றவர்கள் பேச்சு சத்தம் கேட்கவும் அப்படியே நின்றனர். சுதிக்கு அவர்கள் கண்ணுக்கு புலப்படவில்லை. ஆனால் இவர்கள் இருவருக்கும் நடப்பது அனைத்தும் தெளிவாய் தெரிந்தது.

“ஏன் டா, அந்தப் பொண்ணு தப்பு செய்யலைன்னு சொல்லியும் இவ்வளோ ஹார்ஷா திட்டலாமா டா? ரொம்ப கோபமா பேசுறாரே அந்த ஓனரு... சிசிடிவியை செக் பண்ணா தெரிஞ்சிடுமில்ல?” மகேந்திரா ஆதங்கத்தில் பேச, இவனுக்கும் அது தோன்றியிருக்க வேண்டும். அவனுக்கு முன்னே சென்று பேசவோ, வாதிடும் எண்ணமோ இல்லதான். இருந்தும் சுதியின் கண்ணீர் முகம் அவனை நிதானப்படுத்தியது.

தனக்கு உதவி செய்த பெண் என்ற வார்த்தையைத் தாண்டி செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனைப் பெற போகிறாள் என்ற இயல்பான மனிதாபிமானம் தலை தூக்க, விறுவிறுவென முன்னே சென்றான்.

“சார்... அவங்க மேல மிஸ்டேக் இருக்கா, இல்ல இவர் மேல மிஸ்டேக் இருக்கான்னு சிசிடிவியை செக் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிடுமே? எதுக்கு தேவையில்லாம கான்வர்சேஷன் பில்ட் பண்றீங்க. டூ செக் சிசிடிவி!” என நிவினை முந்திக் கொண்டு அருகிலிருந்த வாலிபன் ஒருவன் உரைக்க, சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் அதை ஆமோதித்தது போல.

“சார்... என்ன சொல்ல வர்றீங்க நீங்க. என் மேல தப்பு இருக்குன்னு ப்ரூஃப் பண்ண பார்க்குறீங்களா?” என வாலிபனிடம் எகிறிய அந்த வாடிக்கையாளர் வைகுண்டத்திடம் திரும்பினார்.

“ஏன் சார்... எத்தனை வருஷமா ரெகுலரா உங்க கடைக்கு நான் வர்றேன். இப்படி எல்லார் முன்னாடியும் வச்சு அசிங்கப்படுத்துவீங்களா?” என அவரிடமும் எகிறினார்.

“சார்... நீங்க யாரு? எதுக்கு எங்க ஸ்டாப் விஷயத்துல தலையிடுறீங்க? உடைஞ்ச பொருளுக்கு நீங்க காசு கட்டப் போறீங்களா என்ன? தப்பு செஞ்சது எங்க ஸ்டாப் தான்‌. அதை நான் பார்த்துக்கிறேன்!” என வைகுண்டம் புதியவனிடம் எகிறினார். அவனுக்கு பணம் கொடுக்க விருப்பமில்லை. மனிதாபிமானத்திற்காகப் பேச சென்று தண்டச் செலவு செய்ய விருப்பமில்லை என்பது போல அவன் விலகிக் கொள்ள, சுதி உதட்டைக் கடித்தாள். தன்னைக் கொண்டுதான் இந்தப் பேச்சு என்பதில் ஏனோ அவமானக் குன்றலில் மேலும் முகம் சிவந்தது.

'சே... என்ன மனிதன் இவன்? தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் என்ற காரணத்திற்காக தேவையில்லாத வீண் பழியை சுமத்தலாமா? பணமில்லாதவர்களிடம் சுயமரியாதையும் இருக்கக் கூடாதென நினைகிறாரா?' என நினைத்து நெஞ்சு துடித்துப் போனது. இத்தனை நேரம் அமைதியாய் இருந்த நிவினுக்கு பொறுக்கவில்லை. சுதியின் அழுகை நிறைந்த முகமும் பாவனையும் அவள் தவறிழைத்திருக்க மாட்டாள் என்பதை அறுதியிட்டுக் கூற, பெருமூச்சை வெளிவிட்டு முன்னே வந்து பேசினான்.

“சார்... உங்க பாய்ண்ட் ஆஃப் வியூக்கே வருவோம். சுதிரமாலாதான் இதை உடைச்சிருந்தாங்கன்னா, நான் பே பண்ணிட்றேன். சப்போஸ் இவர் உடைச்சிருந்தாருன்னா, அவங்ககிட்டே சாரி கேட்கணும். சோ சிசிடிவை செக் பண்ணுங்க!” என்று இவன் தனது பணப் பரிவர்த்தனை அட்டையை அவரின் முன்னே நீட்ட, வைகுண்டம் இவனை யாரென பார்த்தார். எப்போதும் அவன் இங்கு வருவதால் அவருக்குமே பரிட்சயம் இருந்தது‌. எல்லோருடைய பார்வையும் இங்கிருக்க, அவரால் வேறு எதையும் பேச முடியவில்லை. சுதி இறுகிப் போய் நின்றிருந்தாள். அனைவருடைய பார்வையும் கரிசனையாய் அனுதாபத்துடன் அவள் மீது படர, கழிவிரக்கத்தில் விழிகள் உடைப்பெடுத்தன. குளம் கட்டிய நீருடன் தரையை வெறித்திருந்தாள். அவளுக்காகப் பேசிய இரண்டு ஆண்களின் குரல் மட்டும் செவியில் விழுந்தது.

நிவின் மீது எதுவும் கோபம் கொள்ள முடியாது சுதியை முறைத்த வைகுண்டம் அலைபேசியை எடுத்து அந்தக் காணொளியை ஓட்டிப் பார்த்தார். சுதியின் மீது தவறில்லை எனப் புரிய கணநேர தடுமாற்றம் அவரிடம்.

எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவர், “சார்... நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா வாங்கி இருக்கலாம் சார். இல்லைன்னா இப்படி பிராப்ளம் வந்திருக்காது!” என வாடிக்கையாளரிடம் தன்மையாய்ப் பேசியவர், “சுதிரமாலா... நீங்களும் கஸ்டமர் என்னப் பண்றாங்கன்னுப் பார்த்துட்டு திங்க்ஸை கொடுங்க!” என அவளிடமும் கூறினார். என்ன முயன்றும் அவளிடம் பேசிய குரலில் பணிவின் அடிநாதத்தைக் கூட கண்டறிய முடியவில்லை. அதிகாரமாகத்தான் அவரால் பேச முடிந்தது‌.

“பிரச்சனை ஒன்னுமில்ல. எல்லாரும் போய் வேலையைப் பாருங்க...” என்ற வைகுண்டம் அந்த வாடிக்கையாளரைக் கையோடு அழைத்துச் செல்ல, சுதி உணர்வற்ற முகத்துடன் நின்றிருந்தாள்‌. ஏனோ இப்படியெல்லாம் இங்கே வேலை பார்க்க வேண்டுமா என ரோஷ மனம் கேள்வி கேட்க, எப்போதும் போல அதற்குப் பதிலளிக்காமல் தட்டிவிட்டாள். விதியே என வேலை பார்க்கும் இடத்தில் மரியாதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதே என அவளது உதடுகளில் விரக்தி சிரிப்பு குவிந்தது.

“சுதிரமாலா, ஆர் யூ ஓகே?” நிவின் கேட்க, அவனை நிமிர்ந்து நன்றியுடன் நோக்கினாள். ஏனோ அழுகை வந்தாலும் அதை அடக்கிக் கொண்டவள், “தேங்க் யூ சோ மச் சார்.‌ இது... இது பெரிய உதவி!” என்றவளுக்கு இத்தனை பேரின் முன்பும் அவமானப்பட்டதை ஏற்கவே முடியவில்லை. இது போல வேலைக்கு வந்துவிட்டால் தன்மானத்தை வீட்டிலே வைத்துவிட்டு வந்துவிட வேண்டுமோ என்ற எண்ணத்தில் முகம் கசங்கிப் போனது.

"சிஸ்டர்... விடுங்க!" என அந்த வாலிபன் கூற, அவனை நிமிர்ந்து பார்த்தாள். இதற்கு முன்பு அவனைப் பார்த்ததாய் நினைவில்லை. பரிட்சயமில்லாத தனக்காக பேசியவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றவள், "தேங்க் யூ சோ மச் சார்!" என அவனுக்கும் ஒரு நன்றியை நவில்ந்தாள்.

“ஒன்னும் இல்ல மா... தெரியாமதானே நடந்துச்சு. விடு மா... போய் முகத்தை கழுவிக்கோ!” என மகேந்திரா கூற, அவரிடம் தலையசைத்துவிட்டு விறுவிறுவென அவள் நகர்ந்து கழிவறைக்குள் சென்று அடைத்துக் கொண்டாள். கண்களில் பொலபொலெவென கண்ணீர் வடிந்தது‌. இரண்டு நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டு விழிநீரைத் துடைத்துவிட்டு வெளியே வந்தாள். ஒரு சிலர் அவளையே கவனித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வேலையில் மூழ்க முயன்றாள். கொஞ்ச நேரத்தில் அனைவரும் அவருடைய வேலையைக் கவனிக்க, சுதி சுயத்தேற்றலில் தன்னை மீட்டுக் கொண்டாள்.

“நல்லவேளை சுதி... அவன் வந்து ஹெல்ப் பண்ணான். இல்ல இந்த காண்டாமிருகம் சூப்பர் வைசர் எவனோ உடைச்ச பொருளுக்கு உன் தலைல காசைக் கட்டியிருப்பான். அதுவும் இல்லாம சண்டே வேலைக்கும் வரணும். விக்காத எதாவது ஒரு பொருளை வித்துக் கொடுன்னு இம்சையைக் கூட்டி இருப்பான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கோ டி. இன்னைக்கு நீ முழிச்ச முகம் சரியில்ல போல!” விவேகா தேநீர் இடைவேளையின் போது வாய் வலிக்க வலிக்க பேச, சுதியின் உதடுகளில் பேரமைதி புகுந்திருந்தது. அமைதியாய் சூடாய் இருந்த தேநீரை உள்ளிறக்கி அவளுக்குள்ளிருக்கும் சூட்டை தணிக்க முயன்றாள்.

தோழியை அவ்வாறு காணப் பிடிக்காது விவேகா ஏதேதோ கூறி சுதியைத் திசை திருப்பிவிட்டாள். அப்போதைக்கு சுதி அந்தப் பேச்சை மறந்துவிட்டாள். மாலை வீட்டிற்கு செல்லும்போதும் மீண்டும் நடந்தவை கண்முன்னே விரிந்தன.

அந்த வாலிபனும் நிவினும் மட்டும் பேசாதிருந்தால் இந்நேரம் பணத்தோடு சேர்த்து அவளது நிம்மதியும் பறிக்கப்பட்டிருக்கும். நூதன தண்டனை எனக் கூறி அந்த மாத ஞாயிறையும் பறித்திருப்பார் வைகுண்டம். அதை நினைத்ததும் சுதிக்குப் பெருமூச்சு எழுந்தது. அதோ இதோவென மனதை அரட்டி உருட்டி இந்த வார ஞாயிறை சமீபிக்கும் நேரத்தில் இப்படி நிகழ்ந்து விட்டதே என அந்த நேரத்தில் மனம் மொத்தமாய் சோர்ந்து போனது.

சென்ற மாதமும் விடுமுறை இல்லாது உழைத்திருந்தாள். இந்த மாதம் நான்காம் ஞாயிற்றுக் கிழமைக்காகவென ஒவ்வொரு வாரமும் ஆசையாய் காத்திருந்தாள். மாதம் முழுவதும் உழைத்து சோர்ந்த உடலுக்கும் மனதிற்கும் அந்த ஒருநாள் விடுப்பு பரமசுகம். இப்போதெல்லாம் முதுகு வலி, கால் வலி, கழுத்துவலி என அவளின் வலிகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

தினமும் காலையில் எழும்போது ஒருநாள் விடுப்பு எடுத்தால் தகும் என அரற்றும் மனதை அதட்டியபடி எழுந்து அறக்கபறக்க கிளம்பிவிடுவாள். இன்னும் நான்கு நாட்களே உள்ளன விடுமுறை தினத்திற்கு என மனம் அற்பமாய் களிப்புற்றது‌. ஆம், யாரேனும் கேட்டால் அற்பம் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால், சுதியின் நிலையிலிருந்து பார்த்தால் அது சொர்க்கம். மாதம் இருபத்து ஒன்பது நாளிற்கும் சேர்த்து அந்த ஒருநாளில் ஆற்றலை உடலில் சேமித்துக் கொள்ளும் வகையில் சேர்த்தி அவள்.

தினமும் வணிக வளாகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் கோபம், ரோஷம், சுய மரியாதை என அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டுத்தான் உள்ளே செல்வாள். வேறு வழியும் இல்லை அவளுக்கு. இவற்றையெல்லாம் அவள் எடுத்துக்கொண்டு உள்ளே போனால், அன்றைக்கே அவளது வேலை பறிபோய்விடும். கடந்த ஏழு வருடங்களாக சுதியின் குணமே மாறிவிட்டிருந்தது. வளவளவென பேசாவிடினும் பள்ளிப் படிக்கும்வரை கொஞ்சம் கலகல பேர்வழிதான்.

என்றைக்கு இங்கு வேலைக்கு சேர்ந்தாளோ அன்றைக்கே அவளது பேச்சுகள் அருகிவிட்டன. காலையிலிருந்து இரவு வரை அநாவசியமாக பேசக் கூடாதென மனதில் உருப்போட்டுக் கொண்டிருப்பவளுக்கு இப்போதெல்லாம் பேசுவது ஒரு வேலை எண்ணுமளவிற்கு இருந்தது. ஆம், அப்படித்தான் அளந்து அளந்து பேசப் பழகிவிட்டாள்.

‘என்ன வேணும் சார்? ஓகே சார், ஷ்யூர் சார்?’ என்ற வார்த்தைகள்தான் இப்போது அவளது அகராதியில் பிரதானமாய் இருந்தன. இரவு வீட்டிற்குச் சென்றாலும் யாரிடமும் பேச நேரமிருக்காது. மாதத்தில் அந்த ஒரு ஞாயிறு மட்டுமே அவளுக்கு கிடைக்கும். அதிலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவாள். சௌம்யாவிடம் பேசுவாள். சந்திரா வெகு அமைதி. வார்த்தைகள் எல்லாம் எண்ணி பேசுவார். அதுவே இவளுக்கும் தொற்றிக் கொள்ள, வணிக வளாகத்தின் விதிமுறையும் பத்தோடு பதினொன்றாக இணைந்து கொண்டன.

இவளுக்கு எதிர்மாறு விவேகா, எப்போதும் மூன்று ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுப்பெடுத்துக் கொள்வாள். ஒரே ஒரு ஞாயிறு மட்டும் வேலைக்கு வந்து அந்தப் பணத்தில் அவளுக்குத் தேவையான உடைகள், இன்னப் பிற இத்யாதிகளை வாங்கிக் கொள்வாள். ஆனால் சுதி அப்படியல்ல. சம்பளத்தை ஒரு ரூபாய்க் கூட எடுக்காது அப்படியே சந்திராவிடம் கொடுத்துவிடுவாள். அவராக இவளுக்கென்று பேருந்திற்கும் கைச்செலவிற்கும் பணம் கொடுப்பார்.

சில சமயம் இலவச பேருந்தில் சென்று அந்தப் பணத்தை மிச்சம் பிடித்து சிறியவர்களுக்கென்று எதாவது வாங்கி வருவாள். இல்லையென்றால் அவர்களுக்கு புத்தகம், எழுதுகோல் எனத் தேவையான இத்யாதிகளை வாங்கிக் கொடுப்பாள். அவளுக்கென்று உடைகளெல்லாம் எடுக்க மாட்டாள். சந்திராவாகத்தான் ஒவ்வொரு வருடமும் நான்கு உடைகள் எடுத்து தருவார். அதை இவள் பத்திரப்படுத்திக் கொள்வாள். அவ்வளவுதானே அன்றி ஒரு ரூபாய் கூட அநாவசியமாக செலவழிக்க சுதிக்கு கிஞ்சிற்றும் எண்ணமிருக்காது. ஏனென்றால் அதை சம்பாரிக்க அவள் எத்தனை கஷ்டப்படுகிறாள் என்பது அவள் மட்டுமே அறிவாள்.

மறந்தும் கூட வணிக வளாகத்தில் நடப்பவை எதையும் வீட்டில் மூச்சு கூட விடமாட்டாள். இவள் இவ்வாறெல்லாம் கஷ்டப்படுகிறாள் எனத் தெரிந்தால் அவர்கள் வருந்தக் கூடுமென எண்ணி எதையும் காண்பித்துக் கொள்ள மாட்டாள்.

உழைத்துக் களைத்து சோர்வு அப்பியபடி உள்ளே நுழைந்த சுதியின் முகத்தில் ஏதோ குறைந்ததை உணர்ந்த சௌம்யா, “சுதி... என்னாச்சு, ஏன் டல்லா இருக்க?” என வினவினாள்.

அவளிடம் என்ன பொய்யுரைப்பது எனத் தெரியாது தடுமாறிய சுதி, “அது... அண்ணி செம்மையா தலை வலிக்குது. அதான் ஒரு மாதிரி இருக்கு...” என்றாள் தடுமாற்றமாய்.

“அப்படியா... சரி, நான் உனக்கு சூடா டீ போட்டுத் தரவா? கூடவே ஒரு பாராசிட்டமால் போட்டுக்கோ. தலைவலி சரியாகிடும்!” என அவள் கூற, இவள் தலையை அசைத்து உடைமாற்றி அமர, “அத்த...” என ருத்ரா அவளருகே அமர்ந்தாள்.

சௌம்யா தேநீருடன் மாத்திரையை எடுத்து வர, “சுதி... டீயைக் குடிச்சுட்டு, சாப்ட்டு மாத்திரை போட்டுட்டு படு. தூங்கி எழுந்தா, தலைவலி சரியாகிடும்...” என சந்திரா கூறினார்.

“ஐயோ... இல்ல ம்மா... எனக்கு லைட்டாதான் வலிக்குது. டீ குடிச்சா சரியாகிடும்!” என்றாள் சுதி.

“சொன்னதை செய் சுதி. அப்பளத்தை நானே தேய்ச்சு முடிச்சிடுவேன். போய் ரெஸ்ட் எடு!” அவர் அதட்டலாய் உரைக்க, இவளும் உண்டுவிட்டு கூடத்தின் ஒரு ஓரத்தில் பாயை விரித்துப் படுத்தாள். போர்வையை கழுத்து வரை போர்த்தியவளுக்கு விழியோரம் ஈரம் கோர்க்க, பத்து நிமிடத்திலே அசதியில் தூங்கிப் போனாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
881
Reaction score
652
Points
93
Paavam ma suthi, nivin um antha payyanum pesamma irunthirunthaa innum mosamaayirukkum
Waiting for next ud ma
 
Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
பாவம் சுதி, அந்த பையனும் நிவினும் தலையிடவே தப்பிச்சா
 
Messages
55
Reaction score
36
Points
18
செய்யாத தவறுக்கு
சராமாரி திட்டுக்கள்

உண்மை தெரியாமல்
உடைக்கும் வார்த்தைகள்

கலங்கம் கண்டு
கண்களில் நீர் நிறைக்க
காப்பாற்றிய கண்ணனே
காலம் முழுவதும் நன்றாக வாழ்

வாயாக...
 
Top