• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 11 💖
சுதி அந்தக் காமைக்கலத்தை விழியகற்றாது பார்த்தாள். நேற்று அவள் சமைத்த உணவுதான். வழக்கத்தைவிட காளான் பிரியாணி நன்றாக
வந்திருக்கிறது என அவள் நேற்று எண்ணியவை மொத்தமும் வீணாகிப் போயின. நண்பர்களுடன் வெளியே சென்ற நிவின், சுதி மதியம் சமைத்த உணவை உண்ணவில்லை. அதைத் திறந்து கூட அவன் பார்க்கவில்லை என அவளுக்குப் புரிந்தது.
தன் கையால் உணவை கீழேப் போடுகிறோமே என்ற வருத்தத்துடன் அந்த உணவைக் குப்பைத் தொட்டியிலிட்டாள். எத்தனையோ பேர் பசியாலும் வறுமையாலும் வாட, இப்படி சாப்பாட்டை வீணடித்த நிவினை நினைத்து சுதிக்கு கோபம்தான். ஆனாலும் வாய் வார்த்தையாக எதையும் அவனிடம் கேட்கவில்லை பெண். கேட்டால், ‘நீ என்கிட்டே வேலைதான் பார்க்குற. என்னைக் கேள்வி கேட்க உனக்கென்ன உரிமை?’ எனக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதனாலே பெருமூச்சுடன் வேலையை முடித்துவிட்டு கிளம்பினாள். அவன் கூடத்தில் அமர்ந்திருக்க, வாய் வார்த்தையாக உரைக்காது தலையை மட்டும் அசைத்துக் கிளம்பினாள். அவனும் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை; அவளையும் கண்டு கொள்ளவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமை சுதி விடுப்பு முடிந்து கொஞ்சம் தெம்பாய் திங்கட்கிழமை காலை வேலைக்கு வந்தாள்.
அழைப்பு மணியை அழுத்தச் சென்றவள் கதவு திறந்திருக்கவும் மெல்ல அதைத் தள்ளி உள்ளே சென்றாள். கூடத்தில் பாலுமகேந்திரா அமர்ந்திருந்தார்‌. அன்றைய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தவாறே அமர்ந்திருந்தவர் இவளது அரவம் கேட்டுத் திரும்பினார்.
“வாம்மா சுதா... நல்லா இருக்கீயா மா?” என அவர் வினவ, ஒரு நொடி அவரை எதிர்பாராது திகைத்தவள், “நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே நடந்தாள்.
“நல்லா இருக்கேன் மா! என் மகன் உயிரைக் காப்பத்துனதும் இல்லாம, அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு வேற கொடுக்குறம்மா. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை மா. நீ மட்டும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வரலைன்னா, பையன் தனியா கஷ்டப்பட்டிருப்பான். அவன் கூட என்னாலயும் தங்க முடியாத சிட்சுவேஷன்!” என்றவர் பெருமூச்சுவிட்டபடி,
ஒரே நேரத்துல ரெண்டு வேலை பார்க்குறீயே... உடம்பு என்னத்துக்கும்மா ஆகும்?” என அவள் மீதும் அக்கறையாகக் கேட்க, சுதி புன்னகைத்தாள்.
“பெருசா கஷ்டமா இல்லை சார். தேவை இருந்தா வேலை பார்த்துதானே ஆகணும்” என்றவளை அவர் அனுசரணையாய்ப் பார்த்தார்.
“தேவை இருந்துட்டேதான் இருக்கும் மா... நீயும் என் பொண்ணு மாதிரி தான்மா. உடம்பை பார்த்துக்கோ!” என்றவரிடம் சுதி பதிலளிக்கவில்லை. ஏனோ நிவின் மீதிருக்கும் பிம்பத்தை இவரி மீது புகுத்த விருப்பமில்லை. மகேந்திராவின் வார்த்தைகளில் சுதிக்கு மெதுவாய் பாரம் இறங்கியது போல உணர்ந்தாள். தான் கஷ்டப்படுவதை விட யாரோ ஒருவர் அதைக் கேட்கும்போது வலி குறைந்தது. அக்கறையான வார்த்தைக்கு மனம் ஏங்கியதை உணர்ந்து திடுக்கிட்டுப் போனாள் பெண். ஒரு நொடியில் தன்னை சமாளித்தவள், “நான் போய் குக் பண்றேன் சார்...” என நடந்தவாறே, “உங்களுக்கு காஃபி போட்டுத் தரவா சார்?” எனக் கேட்டாள்.
“இப்போதான் காஃபி குடிச்சேன்மா. இருந்தாலும் உன் கையால எனக்கு ஒன்னுப் போட்டுத் தாம்மா...” என்றவர் சமையலறைக்குள் அவளுடன் நுழைந்து கொண்டார். தலையை அசைத்துவிட்டு சுதி அவருக்கு குளம்பியைத் தயாரித்தாள்.
“ரெண்டா போடும்மா... நீயும் ஒரு காஃபியைக் குடிச்சிட்டு வேலை பார்ப்ப... சீக்கிரம் எழுந்து அங்க இருந்து வர்ற‌. பசிக்கப் போகுது!” என அவர் கூறவும் சுதியின் கண்கள் சட்டென கலங்கிவிட்டன. இந்த மனிதாபிமானம் நிவினிடம் ஏன் இல்லையென மனம் கேட்க, அதைத் தட்டி தூர எறிந்தாள். அவன் கேட்டாலும் கூட அவளுக்கு இங்கே தண்ணீர் குடிக்க கூட விருப்பமில்லை என்பது வேறு விஷயம். முதலில் அவளது பாதுகாப்புதான் முக்கியம். இரண்டாவது தன்மானம் முக்கியமாகப் போயிற்று. அவன் வீட்டில் முன்பே எதையும் சாப்பிட, குடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தாள். பின்னர் அவனுடைய நடவடிக்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
“இல்ல சார்... நான் வரும்போதுதான் டீ குடிச்சிட்டு வந்தேன். நீங்க குடிங்க!” சுதி மறுக்க, “அட... என்னம்மா சங்கடம், இது நம்ப வீடு. எனக்குப் போடும்போது சேர்த்து இன்னொரு காஃபி உனக்கும் போடப் போற...” என மகேந்திரா கூற, இவள் நம்ப வீடு என்ற வார்த்தையில் மெதுவாய் சிரித்தாள்.
“டீ மட்டும்தான் குடிப்பேன் சார். இங்க டீ தூள் இல்ல!” என அவரை சமாளித்தவள், “சுகர் கம்மியா போடணுமா சார்?” சர்க்கரை டப்பாவைக் கையில் வைத்துக்கொண்டு வினவ, “ஆமா... மா. வயசாகிட்டதால சர்க்கரை, எண்ணென்னு எல்லாத்தையும் குறைச்சுக்கிட்டேன்...” என்றவருக்கு குவளையைக் கையில் கொடுத்தாள்.
“உங்க வீட்ல எத்தனை பேருமா... அப்பா, அம்மா என்ன பண்றாங்க?” என அவர் கேட்டதும் சுதியிடம் சில நிமிடங்கள் மௌனம். அவளது முகத்தைப் பார்த்தவர், “சாரிமா... நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” எனக் கேட்டார் பெரியவர்.
“ஐயோ... அதெல்லாம் இல்ல சார். அம்மா, அப்பா உயிரோட இல்ல. சின்ன வயசுல ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. அத்தை, மாமா வீட்லதான் வளர்ந்தேன். விவரம் தெரியுற வரை அவங்கதான் எனக்கு அம்மா, அப்பாவா இருந்தாங்க. இப்பவும் அப்படித்தான்...”
என்று வலுக்கட்டாயமாக சிரிக்க முயன்றாள். என்ன முயன்றும் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
பெரியவர் சில நொடிகள் அமைதியாய் இருந்தார். “என்ன சொல்றதுன்னு தெரியலை மா. கடவுள் ஒன்னைப் பறிச்சாலும் இன்னொன்னை கொடுத்துருக்காருன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் மா!” என்றவருக்குப் பதில் இவளது முகத்தில் வருத்தப் புன்னகை. அதையும் கடவுள் பறித்துவிட்டார் என்று கூறி இவரிடம் அனுதாபம் தேட சுதிக்கு விருப்பமில்லை. அதனாலே வேலையைக் கவனித்தாள்.
அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சமைத்து முடித்துப் பாத்திரத்தைக் கழுவி வைத்தவள், வீட்டைப் பெருக்க ஆயத்தமாகப், பெரியவர் குளித்து வருவதாய் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அப்போதுதான் நிவின் எழுந்து வெளியே வந்தான். தொலைக்காட்சி யாருமில்லாத வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அதை அணைத்தான். அவன் நிற்கும் இடத்தைதான் சுதி சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவன் அருகே வரவும் திடீரென எதிர்பாராது ஒரு நொடி பயந்து விலக, நிவின் நின்றான். அவன்தான் வந்திருக்கிறான் என்பதை புலன்கள் உணர்ந்து மூளைக்கு கடத்த, ஆசுவாசப் பெருமூச்சை வெளிவிட்டாள் பெண். அவன் அதைப் பார்த்தும் கண்டு கொள்ளாது அகன்றுவிட, இவளுக்கு மனம் கடுகடுவென்றிருந்தது.
சத்தம் இல்லாமல் இப்படித்தான் வந்து நிற்பானா என எண்ணியபடியே வீட்டை சுத்தம் செய்து முடித்துவிட்டு கிளம்ப சென்றாள். மகேந்திராவிடம் சொல்லிக் கொள்ளாது கிளம்ப மனம் வரவில்லை பெண்ணுக்கு. நிவினைக் கொண்டுதான் அவர் பழக்கம் என்றாலும் அவரின் அக்கறையான வார்த்தைகளும் அன்பான பார்வையிலும் எவ்வித பிசுறும் இவளால் கண்டறிய முடியவில்லை. நிவினுக்கு வேண்டுமென்றால் நான் வேலைக்காரியாக இருந்துவிட்டுப் போகிறேன்.
தன் தந்தை உயிரோடிருந்தால் இவரை ஒத்துதான் இருந்திருப்பார் எனத் தோன்ற, பால்கனியில் வந்து நின்றாள். இளம் வெயில் முகத்தில் பட்டுத் தெறிக்க, மெதுவாய் சிந்தனை எங்கெங்கோ சென்றது. இழுத்துப் பிடிக்க மனதில்லாது அதன் போக்கிலே விட்டுவிட்டாள். சரத்தும் அவளது மாமாவும் உடனிருந்த பசுமையான நாட்கள் நினைவை நிறைக்க, மீண்டும் வராத அந்தக் காலத்தை எண்ணியதும் ஏக்கப் பெருமூச்சுதான்.
“ஸ்கூல் பஸ் வரலைன்னு பொம்பளைப் புள்ளையை பஸ்ல போகச் சொல்ற நீ? ஆயிரம் காவாலிப் பயலுகள வருவாங்க. எனக்கு டைமானாலும் பரவாயில்லை. நான் சுதியை ஸ்கூல்ல விட்டுட்டு ஆஃபிஸ் போறேன்...” எனத் தன்னைப் பொத்திப் பாதுகாத்த தந்தை ஸ்தானத்திலிருந்த மாமாவை நினைத்ததும் மனம் கனிந்து போனது. பேருந்திலேறி சிரமப்படக் கூடாதென தாங்கிய மனிதர் இன்று தான் அனுபவிக்கும் வேதனைகளை பார்த்திருந்தால், துடித்துப் போயிருப்பார்.
பத்து வயது தன்னைவிடக் குறைவு என்பதாலே அத்தை மகள் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாது குட்டிமா எனக் கொஞ்சும் சரத்தை நினைக்கையில் மனம் விம்மும். மாமா இறந்ததிலிருந்து கூட அவள் சீக்கிரம் மீண்டிருந்தாள். ஆனால் சரத் இழப்பை ஈடுகட்ட முடியாது அவர்கள் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போயிருந்தது. அத்தனை சிறிய வயதில் சௌம்யா கணவனை இழந்து கதறிய காட்சி இன்றுமே அவளை உலுக்கும்.
“ம்மா சுதா... கிளம்பிட்டீயா?” மகேந்திரா குரலில் மீண்டவள், “ஆமா சார்... டைமாச்சு. நான் கிளம்புறேன்...” என்றவள் வெளியே நடந்தாள்.
“காலைல சாப்பாடு சாப்பிடலையா மா? அங்கப் போய் சாப்பிடுவீயா?” அவர் கேட்க, “டிபன் கட்டீட்டு வந்துருக்கேன் சார். போய்தான் சாப்பிடணும்!” என்றவள் விடைபெற, இவர் தலையை அசைத்தார்.
விவேகாவின் புலம்பலில்தான் சுதிக்கு நாளே துவங்கியது. அவளுடைய அண்ணன் ஏதோ தகராறில் மூக்கை நுழைத்திருந்தான். காவல்துறையினர் அடித்து வெளுத்துவிட்டார்களாம். இவளும் தந்தையும் சென்றுதான் அவர்களிடம் பேசி, ஐந்தாயிரம் பணத்தைக் கொடுத்து அவனைக் காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்திருந்தார்கள். போதாத குறைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் அனுமதித்து வீட்டிற்கு வரும்போது இருபதாயிரத்து சொச்சம் செலவாகியிருந்தது. விவேகா திருமணத்திற்கென்று வாங்கிய தங்கச் செயினை அடகுவைத்து அந்தப் பணத்தைக் கட்டியிருந்தாள். அதற்கெல்லாம் சேர்ந்துதான் இப்போது தமையனை வசைபாடிக் கொண்டிருக்கிறாள். சுதி என்னப் பேசுவது எனத் தெரியாது அமைதியாய் அவள் புலம்பலைக் கேட்டாள்.
“ஊர்ல உலகத்துல எத்தனையோ ஆம்பளை பசங்க வீட்டை நில்லுன்னு நிறுத்துறாங்க. ஆனால் எங்க வீட்லன்னு வந்து பொறந்திருக்குப் பாரு. எல்லாம் எங்க தலைவிதி டி சுதி. வீட்டுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் என்னத்தையோ சோத்தை சாப்ட்டு அமைதியா இருக்கான்னு நினைச்சேன். இப்போ அந்த நிம்மதியையும் கெடுத்துட்டான். நான் அவன் ஜெயில்லயே கிடக்கட்டும், அப்போதான் புத்தி வரும்னு சொன்னேன். ஆனால் எங்கம்மா உக்காந்து ஒரே ஒப்பாரி. எரிச்சலா இருக்கு டி. காலைல இருந்து நைட்டு வரைக்கும் நின்னு நின்னு காலே செத்துப் போற அளவுக்கு வேலை பார்த்து காசை சேர்த்தா, இவன் ரெண்டு நாள்ல என் ரெண்டு மாச சம்பளத்தை வேஸ்ட் பண்ணிட்டான். மனசே ஆறலை டி... சரியா திங்காம, உங்காம சேர்த்த காசு. அனாமத்தா போச்சேன்னு வயிறு எரியுது!” என அவள் கோபமும் ஆதங்கமுமாய்ப் பேசினாள்.

சுதிக்கும் அவளது பேச்சின் நியாயங்கள் புரிந்தே இருந்தது. இங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் எத்தனையோ வலிகளைத் தாங்கிக்கொண்டு வேறு வழியின்றி வேலை பார்க்கின்றனர். அப்படியிருக்கையில் இருபத்தைந்தாயிரம் என்பது ரொம்ப பெரிய தொகை. அதிலும் விவேகாவின் உழைப்பும் வீணாகிவிட்டதே என இவளுக்கும் வருத்தம் பிறந்தது. அவளைப் பேசி சரி செய்தாள் சுதி.
மறுநாளும் சுதியை பாலு மகேந்திராதான் வரவேற்றார். புன்னகையுடன் அவருக்கு குளம்பியைத் தயாரித்தாள்.
“இந்தாம்மா... கடைக்கு போனேன் காலைல. அப்படியே சிக்கன் எடுத்துட்டேன். கறிக்குழம்பு வச்சு, சாப்பாடு செஞ்சுடும்மா... அப்படியே அவனுக்கு ரசம் வச்சிடு. நான்வெஜ் சாப்பிடமாட்டான் அவன்!” என அவர் இறைச்சியை அவளுக்கு அருகே வைக்க, அவர் கையில் குளம்பியைக் கொடுத்தவள், “நிவின் சார் தக்காளி சாதம் வச்சு, காலிஃப்ளவர் பொரிக்க சொன்னாரு...” என்றாள் தயக்கமாய்.
“அவன் அப்படித்தான் மா. காய்கறியைத் தின்னு வளர்ந்தவன்.‌ சின்ன வயசுலயே கோழியும் ஆடும் பாவம்னு அழுதுட்டே நான் வெஜ் சாப்பிட மாட்டேன்னு அடம்புடிச்சு, இன்னைக்கு வர அதை ஃபாலோ பண்றான் மா!” என்றவர், “நீ நல்லா மணக்க மணக்க கோழிக் குழம்பை வைம்மா!” என்றார். சுதி அப்படியே நின்றாள். ஏற்கனவே நிவின் பேசிய சுடுசொற்கள் இன்னுமே மனதில் வடுவாய் தங்கியிருக்க, மீண்டுமொருமுறை காயப்பட அவளுக்கு விருப்பமில்லை.
“இல்ல சார்... நான் வேற எதுவும் சமைச்சா அவருக்குப் பிடிக்காது. அவர் சொல்றதை செய்றதுக்குத்தானே எனக்கு சம்பளம் தர்றாரு. அதனாலே என்னால அதை மீற முடியாது, சாரி சார்!” என்றாள். பெரியவரிடம் இப்படிப் பேச அவளுக்குமே மனதில்லை. இருந்தும் நிவினின் குணத்தை அவளறிந்தவரை இப்படிக் கூறினால் மட்டுமே அவளுடைய வேலையைப் பார்க்க முடியும்.

(தொடர்ந்து கீழே படிக்கவும்)
 
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113

அவளது முகத்தையும் குரலையும் பார்த்த மகேந்திரா, “ஏன் மா... ஏன் ஒருமாதிரி பேசுற. நிவின் எதுவும் திட்டிட்டானா?” என சந்தேகமாகக் கேட்டார்.
“ஐயோ... அதெல்லாம் இல்ல சார். இது... இதுதானே என்னோட வேலை. ஒருத்தருக்குத்தான் சமைக்கிறேன். அவருக்குப் பிடிச்ச மாதிரி சமைக்கணும்னுதான் சார் சொன்னேன். நீங்க ஒருதடவை நிவின் சார்கிட்டே கேளுங்க சார். அவர் ஓகே சொல்லிட்டா, நான் நான் வெஜ் குக் பண்றேன்!” என்றவளின் குரலில் அவன் கூறினால் மட்டுமே சமைப்பேன் என்ற அழுத்தமிருந்தது. நிவினும் அப்போதுதான் எழுந்து வந்தான். இன்றைக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் தாமதமாய் எழுந்திருக்கிறான். அவர்கள் பேச்சு முழுவதையும் அவனும் கேட்டுக் கொண்டுதான் வந்தான்.
“சுதிரமாலா... அப்பாவுக்கு நான்வெஜ் குக் பண்ணுங்க. எனக்கு ரசம் மட்டும் வைச்சுடுங்க. போதும்!” என அவன் குரல் கூடத்திலிருந்து கேட்க, திரும்பியவள், “ஓகே சார்...” எனத் தலையை அசைத்து விளையாட்டு, அசைவத்தை சமைத்தக் தொடங்கினாள்.

சந்திராவிடம் சென்ற ஞாயிறுதான் கறிக்குழம்பு எப்படி வைப்பதென பழகியிருந்தாள்.
இருந்தாலும் சிறு தடுமாற்றத்துடன் வைத்து முடித்தவள் விறுவிறுவென சாதம் வடித்து ரசம் வைத்தாள். அவனுக்குத் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லையெனத் தோன்ற, இரண்டு உருளைக்கிழங்கை வெட்டிப் பொரித்து முடிக்க, நேரம் சட்டென ஒன்பதாகப் பத்து நிமிடங்கள் இருந்தன. பக்கென்றிருந்தது அவளுக்கு. நேரம் பார்க்காது இறைச்சியை சமைப்பதில் மும்முரமாகி விட்டாள்.
தண்ணீரைக் குடித்து பசித்த வயிற்றை சமாதானம் செய்தவள், “டைமாகிடுச்சு... நான் வரேன் சார்!” என அவள் மகேந்திராவிடம் கூறி அகல, நிவின் ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.
“பார்த்து பத்திரமா போம்மா... ரெண்டு நிமிஷம் லேட்டானா தப்புல்ல!” என பெரியவர் குரலில் சிரிப்புடன் தலையசைத்து காலணியை அணிந்துகொண்டு பறந்திருந்தாள். வியர்க்க விறுவிறுக்க அவள் செல்வதைத்தான் நிவின் கண்ணெடுக்காமல் பார்த்தான்.
“நல்ல பொண்ணு டா. அம்மா, அப்பா இல்லைனாலும் நல்லா வளர்த்துருக்காங்க வீட்ல!” பெரியவர் கூற, அவரைத் திரும்பிப் பார்த்தவன் பதிலளிக்கவில்லை.
“ஆமா... நீ எதுவும் அவளைத் திட்டுனீயா... நான் அவ்வளோ சொல்லியும் கேட்கலை. நீ சொன்னாதான் நான் வெஜ் சமைப்பேன்னு நின்னுட்டா!” என அவர் மகனை கூர்மையாய்ப் பார்த்துக் கேட்டார்.
அவரைப் பார்த்துக் கொண்டே எழுந்து ஒற்றைக் கையால் சோம்பல் முறித்தவன், “சம்பளம் நான்தானே தரேன். சோ, நான் சொல்றதைத்தான் கேட்கணும்னு சொன்னேன்!” என்றவன் அலட்டிக்காது நகர, பெரியவருக்கு கோபம் வந்தது.

அவன் பின்னூடே அறைக்குள் நுழைந்தவர், “இப்படியே சொன்னீயா டா?” எனக் காட்டமாய்க் கேட்டார்.
அவரை மெதுவாய் திரும்பிப் பார்த்தவன், “யெஸ் பா... அதுல என்ன தப்பிருக்கு?” எனக் கேட்டுக் கொண்டே அலமாரியைத் திறந்து குளிப்பதற்காக உடைகளை எடுத்தான்.
“டேய் நிவினு... எப்போல இருந்து டா இப்படி மாறுன. காசு கொடுக்குறன்றதுக்காக மனுஷத்தன்மை இல்லாம நடந்துப்பீயா டா?” கோபமாய்க் கேட்டார் பெரியவர்.
அவரை உறுத்து விழித்து, “நான் என்ன ஹுமானிட்டி இல்லாம நடந்ததைப் பார்த்தீங்க பா?” என நிவினும் கடுப்புடன் கேட்டான்.
“இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசி வச்சிட்டு, என்ன தப்புன்னு கேட்குற. கஷ்டத்துக்காகத் தான் வேலைக்கு வர்றாங்க. அதுக்காக உன் இஷ்டத்துக்கு நடந்துக்காத. உனக்கும் அப்புறம் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனருக்கும் என்ன வித்யாசம்?” எனக் கேட்டவரை அசட்டையாய்த் திரும்பிப் பார்த்தவன், “பெருசா எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன். அப்படியே நீங்க டிப்ரென்ஸ் கண்டு பிடிச்சா, நாளைக்கு அவ வந்ததும் சொல்லுங்க!” என்றுவிட்டு குளியலறைக் கதவை பட்டென அடைத்தான்.
“உங்கம்மா இருந்திருந்தா, இப்படியெல்லாம் பேச விட்ருப்பாளா என்ன? வாய்லயே ரெண்டு போட்டுருப்பா...” என அவர் முனங்கியது இவனுக்கு கேட்டலும் அதை கண்டு கொண்டானில்லை மகன்.
சுதி இரவு வீடு திரும்பும்போது எழில்மதியின் பேச்சுதான் அவளை வரவேற்றது. சௌம்யாவின் தாயும் தந்தையும் மகளைக் காண காலையிலே வந்திருந்தனர். காலணியைக் கழட்டும்போதே சுதி கோபத்தையும் ரோஷத்தையும் வெளியே கழற்றிவிட்டு தான் வந்தாள். அவர்களைக் கண்டதும் இவள் வலியப் புன்னகைக்க, “வாம்மா சுதி... எப்படியிருக்க?” எனக் கேட்டார் காமராஜ்.
“நான் நல்லா இருக்கேன் பா... நீங்க எப்படி இருக்கீங்க?” என அவள் கேட்க, “நல்லாத்தான் இருக்கோம் சுதி. ஆமா, நீ ஏன் இப்படி ஒடிச்சா உடைஞ்சு விழுற மாதிரி இருக்க. சோறு சாப்பிட்றீயா இல்லையா?” என எழில்மதி முகத்தை அங்குமிங்கும் திருப்பிக் கேட்டார். அவர் கேள்விக்குப் பதிலளிக்காதவள், கட்டாயமாகப் புன்னகையை உதிர்த்தாள்.
“சுதி... நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா!” சௌம்யா சுதியைக் காப்பாற்றி அறைக்குள் அனுப்ப, அவளை நன்றியுடன் பார்த்தவாறு அறைக்குள் அடைந்தாள் சின்னவள்.
“ஏன் சந்திரா... இவளுக்கு எப்ப கல்யாணத்தைப் பண்ணுறதா இருக்கீங்க? வயசு ஏறிட்டே போகுது. ஏற்கனவே இவ பார்க்க தேவாங்கு கணக்கா இருக்கா. இதுல வீட்லயே வச்சிருந்தா, ஒரு பையனும் கட்ட மாட்டான்!” என அவர் பேச்சு தன் காதில் விழுந்தாலும் சுதி அதைப் புறந்தள்ள முயன்றாள்.
“ம்மா... இப்போ இந்தப் பேச்சு தேவையில்லாதது. டைமாச்சு, நீயும் அப்பாவும் கிளம்பலையா. ரொம்ப இருட்டீடுச்சுன்னா, அப்புறம் அப்பாவுக்கு வண்டி ஓட்றது கஷ்டம்!” சௌம்யா அந்தப் பேச்சைக் கத்தரிக்க முயன்றாள்.
“ஏன் டி... என்னத் தேவையில்லாததை பேசிட்டேன் நான். உள்ளதைதானே சொன்னேன். கொஞ்சமாச்சு பொண்ணு மாதிரி சதை வச்சு இருக்காளா இவ? ஒன்னுமே இல்லாம ஒடுங்கிப் போய் கிடக்கா. இதுல நீங்க அவளை வேலைக்கு அனுப்பிட்டே இருக்கீங்க. அப்புறம் எப்படி அவ தேறுவா?” அக்கறையானப் பேச்சு போல தேள் கொடுக்கப் அவர் பேசவும், சுதிக்கு மெதுமெதுவாக கண்கள் கலங்கின. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிவிட்டு நீண்ட முடியைத் தூக்கிப் பின்னலிட்டு கண்ணாடி முன்னே நின்றாள். தேகம் முன்னைவிட இன்னுமே இளைத்திருந்தது. முட்டைக் கண்கள் கொஞ்சம் இடம்பெயர்ந்து உள்ளே சென்றிருந்தன. அவர் கூறியது போல தான் அத்தனை மோசமாய் இருக்கிறோமா என மனம் கேள்விக் கேட்க, மூளை பதிலயம்ப எடுத்துக் கொண்ட சில நொடிகளில் அவளே விடைக் கூறினாள்.
‘ஆமா... நான் அழகா இல்லைதான்...’ என மனதிற்குள் முணுமுணுத்தாள். கருப்பு என்று பார்த்ததும் கூறிவிடும் நிறம். முட்டைக் கண்கள்தான் முகத்திற்கு அழகு சேர்ப்பவை. அதுவே இப்போது உள்ளே சென்றிருந்தன. புசுபுசுவென்றிருந்த கன்னம் இப்போது வற்றியிருக்க, கழுத்தெலும்புகள் துருத்தி நின்றன. கைக்கொண்டு அதனை வருடிப் பார்த்தாள். ஒரு நொடி மேலும் கீழும் தன் உடலைப் பார்த்தவளுக்கு வருத்த முறுவல் பிறந்தது. அவர் கூறுவது போலத்தான் இருக்கிறேன். ஒருவருக்கும் தன்னைப் பிடிக்காது போல. திருமண வாழ்க்கை வாழ ஒரு யோகம் வேண்டும் போல என்றதும் விழிகள் கலங்கின. முகத்தைக் கழுவி துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
“ம்மா... உன் அக்கறைக்கு தேங்க்ஸ். அவளுக்கு எப்போ கல்யாணம் பண்றதுன்னு எங்களுக்குத் தெரியும். என் அத்தைக்குத் தெரியும். அதை அவங்கப் பார்த்துப்பாங்க. நீ அடுத்தவங்க விஷயத்துல தலையிடாத!” சௌம்யா தாயைக் கண்டித்தாள். இது போல அவர் பேசக் கூடுமெனக் கருதிதான் சுதி வருவதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற முனைந்தாள். ஆனால் எழில்மதி அமர்ந்த இடத்திலிருந்து நகருவதாய்க் கூடத் தெரியவில்லை.
“ஏன்டி... ஏன் இப்படி பேசுற நீ? உன்னை மாதிரித்தான் எனக்கு சுதியும். அவளையும் மகளாத்தான் பார்க்குறேன் நான். அவளுக்கு ஒரு நல்லது செய்ய நினைக்குறது தப்பா?” எனக் கேட்டவர், “என்ன சுதி, நான் சொல்றது சரிதானே. உன்னை என் பொண்ணாத்தான் பார்க்கறேன்!” என சுதியிடம் முடித்தார் பெரியவர். சுதி தலையை மட்டும் சம்மதமாக அசைத்தாள்.
“ஏன் சௌமி... நம்ப சுப்பு மகனிருக்கான் இல்ல, அவன் இப்போ கவர்மெண்ட்ல குப்பை அள்ளுற கான்ட்ராக்ட் எடுத்து கை நிறையா சம்பாரிக்குறான் டி. ரொம்ப நல்ல பையன். உனக்குத்தான் தெரியுமே!” என்ற எழில்மதியை சௌம்யா சந்தேகமாக இடுங்கியக் கண்களுடன் பார்த்தாள்.
“அவனுக்கு என்ன இப்போ?” அவள் குரல் ஆராய்ச்சியாய் வந்தது.
“அவனுக்கு என்ன நல்லா இருக்கான். அவன் மொதக் கல்யாணம் சரியில்லாம போச்சு. தங்கமான பையன். முதல்ல கட்டிட்டு வந்தவ சரியான ரப்பு புடிச்சவ. இருக்க மாட்டேன்னு ஓடிப்போய்ட்டா, அதுக்கு இவன் என்ன பண்ணுவான். மகன் ஒண்டியா கிடக்கான்னு சுப்பு அழுதா. அப்போதான் எனக்கு சுதி ஞாபகம் வந்தா. அப்பன், ஆத்தா இல்லத புள்ளை. நம்பளா பார்த்து ஒரு பையனைக் கட்டி வச்சாத்தான் ஆச்சு. இல்லைன்னா, யாரு இவளை ஒன்னும்மில்லாம கட்டீட்டுப் போவா. அதான் நான் உங்ககிட்டே பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன்!” என அவர் பேசியதும் முனுக்கென சுதியின் கண்களில் நீர் நிரம்பி, பளபளத்தன.
“ம்மா... என்ன பேசுற நீ?” என சௌம்யா வேகமாய்க் குரலை உயர்த்தினாள்.
“எதுக்குடியவ இப்போ குரலை உசத்துற. நான் என்னத்தை தப்பா சொல்லிட்டேன். உள்ளதைதானே சொன்னேன். இவளுக்கு பவுனும் சீரும் செய்ய உங்ககிட்டே என்ன இருக்கு? தங்கம் விக்கிற விலை வாசில ஒரு பவன் எடுக்கவே உங்களுக்கு வக்கில்லை. இந்தக் காலத்துல குறைஞ்சது பத்து பவன் இல்லாம யாரும் பொண்ணைக் கட்டுறது இல்லை. அப்படியிருக்கும் போது தேடி வர்ற சம்பந்தத்தை வேணாம்னு சொல்லாதீங்க. அப்புறம் இன்னும் ஐஞ்சாறு வருஷம் போச்சுன்னா, இவ முத்திப் போய்டுவா. ரெண்டாந்தாரம்னு நினைக்காம, முத இவளைக் கட்டிக் கொடுத்து அனுப்ப பாருங்க!” என அவர் நீட்டி முழக்கியதும், சுதி அவரை சலனமில்லாமல் பார்த்தாள். விழிகள் மேலும் நீரை உகுக்கத் தயாராகி நின்றன. உதட்டைக் கடித்து அமைதியாய் அமர்ந்திருந்தாள். மனம் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் துடித்துப் போனது.
“எவ்வளோ நல்ல பையனா இருந்தாலும் ரெண்டாந்தாரம் வேணாம் அண்ணி. எம்பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணணும்னு எனக்குத் தெரியும். நீங்க அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. உங்ககிட்ட கல்யாணத்துக்கு சீர் செய்ய முடியலைன்னு வந்து நிக்க மாட்டோம்...” இத்தனை நேரம் பொறுமையாய் இருந்த சந்திரா குரலில் அழுத்தத்துடன் பேச, எழில்மதி முகம் கன்றியது.
“சரியா சொன்னீங்க அத்தை. உன்னை எத்தனை தடவை சொல்லியிருக்கேன் மா. யார் மனசையும் கஷ்டப்படுத்தாம பேசத் தெரியாதா உனக்கு? வீட்டுக்கு தயவு செஞ்சு கிளம்பு. உன்கிட்ட கஷ்டம்னு நாங்க வந்து நின்னா, இந்த மாதிரி ஆகாத போகாத கதையெல்லாம் பேசு. அப்படியொரு நிலைமையை கடவுள் எங்களுக்கு கொடுக்க மாட்டாரு...” எனப்‌ பொரிந்த சௌம்யா, “ப்பா... முதல்ல உங்கப் பொண்ட்டியைக் கூட்டீட்டு கிளம்புங்க. அம்மான்ற ஒரு காரணத்துக்காகத்தான் இவ்வளோ அமைதியா இருக்கேன். என் பொறுமையை சோதிக்காம கிளம்புங்க. தயவு செஞ்சு மறுபடியும் அம்மாவைக் கூட்டீட்டு இங்க வராதீங்க. உங்களுக்கு என்னையோ பசங்களையோ பார்க்கணும்னு தோணுச்சுன்னா, போன் பண்ணுங்க. நானே வர்றேன்!” என எழுந்து நின்றாள். குரலில் கடுப்பும் கோபமும் நிறைந்திருந்தது.
“இது வேணும் டி எனக்கு... இதுவும் வேணும். இன்னமும் வேணும். ஏதோ, நாதியத்துக் கிடக்கிறவளுக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சேன்ல... என்னை செருப்பாலயே அடிக்கணும். அப்படி இவ இருக்க இருப்புக்கு எந்த ராஜாகுமாரனைக் கட்டி வைக்கிறீங்கன்னு நானும் பார்க்குறேன். எப்படியும் ஒன்னும் போடாம அனுப்ப போறீங்க. நொள்ளையோ சொள்ளையோ ஒருத்தன் வரத்தான் போறான். நகைப் போடாம வந்தான்னு அவன் வாழ வெட்டியா அனுப்பலை, என் பேரு எழில் இல்லை டி!” என அவர் விறுவிறுவென வெளியேறிவிட, சரசரவென சுதியின் கண்கள் தளும்பி வழிந்தன. மரத்திருந்த இதயத்தோடு அவரை நிர்மலமான முகத்துடன் பார்த்தாள்.
“ராசிக் கெட்டவ... பொறந்த கொஞ்ச நாள்ல அப்பன், ஆத்தாளை முழுங்குனவ. இங்க வந்து மாமானையும் மாமன் மகனையும் முழுங்கிட்டா‌.‌ என் பொண்ணு வாழாம இப்படியிருக்கதுக்கு இவளோட ராசித்தான் காரணம். நான் சொன்னா யாரு கேட்குறா... எப்போ கூட இருக்கவங்களை முழுங்கப் போறாளோ!” என அவர் மேலும் என்னவெல்லாம் பேசியிருப்பாரோ. சுதி பட்டென காதை அடைத்துக் கொண்டாள். அவளது உடல் அழுகையில் குலுங்கியது. விம்மி வந்த அழுகையை அடக்க முடியாது அது வெடித்துச் சிதறியதில் மனம் வெந்திருந்தது.
“அத்தை... அழாத!” என ருத்ரா அவளை அணைக்க, தவசெல்வன் தவிப்புடன் அவளருகே நின்றான்.
“ச்ச... மனுஷியாப்பா இதெல்லாம். எப்படி இந்தப் பொம்பளையோட இத்தனை வருஷம் வாழ்ந்தீங்க. வயசு ஏற ஏற புத்தி மழுங்குதா என்ன? நாக்குல நரம்பில்லாம பேசுது பாருங்க!” என காமராஜிடம் ஆற்றாமை தாங்காமல் மகள் வெடித்தாள்.
“என்னை என்ன பண்ண சொல்ற சௌமி. நான் கூட்டீட்டு வர மாட்டேன்னு தான் சொன்னேன். வருவேன்னு அடம்புடிச்சு வந்தா!” என்றவர், “என்னை மன்னிச்சுடு மா சந்திரா. ஒரு அண்ணனா என்னால எதையும் பேச முடியலை. உங்கண்ணி ஒரு ராட்சசி. உங்களுக்கே தெரியும்ல!" என்றவர் சௌம்யா கையில் கொஞ்சம் பணத்தை திணித்தார்.

"இதை செலவுக்கு வச்சுக்கோமா!" என அவர் கூற, "ப்பா... செம்ம டென்ஷனாகிடுவேன் நான். நீங்க பண்ற உதவி, எங்களுக்கு உபத்திரம்தான். இந்தப் பணத்தை எடுத்துட்டு கிளம்புங்க. மறுபடியும் வந்துடாதீங்க!" என்ற மகளை வேதனைப் பொங்க பார்த்துவிட்டு அவர் அகன்றார்.

சந்திரா அமைதியாய் நிற்க, "உங்க அண்ணன் பொண்டாட்டின்னா, என்ன வேணாலும் பேசலாமா அத்தை. இன்னும் நாலு நறுக்குன்னு அவங்கிட்டே பேசிருக்கணும் நீங்க. மனசுல கொஞ்சம் கூட ஈரமில்லாம பேசிட்டு போகுது அந்தப் பொம்பளை!" என்றவள் அதே கடுப்புடன் சுதியிடம் திரும்பினாள்.

"ஏன்டி... உனக்கு அறிவுருக்கா? இல்லைய? ஹம்ம்... அந்தம்மா ஏதோ பேசுச்சுன்னா, நீயும் பதிலுக்கு பேச வேண்டி தானே. இப்படி அழுதுட்டு இருக்க. கண்ணைத் தொட முதல்ல!" என அவளை அதட்டி சமாதானம் செய்து சௌம்யா உண்ண வைக்க, சுதிக்கு தொண்டைக்கு கீழே உணவு இறங்கவில்லை. நிமிர்ந்து சந்திராவையும் சௌம்யாவையும் பார்த்தவள், "நான் ராசிக் கெட்டவளாம்மா?" எனக் கனத்த குரலில் கேட்டாள். அவள் குரலில் இருந்த வேதனை மற்றவர்களைத் தாக்க, "வாயை மூடிட்டு சாப்பிடு சுதி. இதென்ன பேச்சு!" என சந்திரா அதட்டியிருந்தார்.

உண்டு முடித்து படுக்கையில் விழுந்த சுதியின் கண்களின் ஈரம் காலை வரை காயவே இல்லை. ஒண்ட வந்தவள் என எத்தனையோ பேர் அவள் காதுபடவே பேசியதைக் கேட்டு மனம் ஏற்கனவே மரத்திருந்தது. ராசிக் கெட்டவள் என்ற பேச்செல்லாம் அவளுக்குப் புதிதொன்றும் இல்லை. அதனாலே பொதுவாய் எந்த விசேஷத்திலும் கலந்து கொள்ள மாட்டாள். யாருடனும் சேராது தனித்திருந்து பழகியிருந்தாள்.

தனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும். அன்பாய், அனுசரணையாய் பார்த்துக் கொள்ள ஒரு ஜீவன் வேண்டுமென சமீபகாலமாக மனம் ஒரு அன்பான கரத்திற்கு ஏங்கித் தொலைத்தது. பெரிதாய் சந்தோஷம் இல்லையெனினும் நிம்மதியான திருமண வாழ்க்கை வாழ வேண்டும் என்றொரு ஆசை அவளுக்கு நிறைய இருந்தது. ஆனால் எழில்மதியின் பேச்சில் தனக்குத் திருமணம் கூட எட்டாக் கனிதான் போல. எதற்கும் கொடுத்து வைக்கவில்லை என நினைத்ததும் அழுகைப் பொங்கியது. தேம்பியபடியே படுத்திருந்தாள். போர்வை இழுத்துப் போர்த்தியபடி அழுதுக் கொண்டே நீண்ட நேரம் சென்று உறங்கிப் போனாள் பெண்.

தொடரும்...





































 
Well-known member
Messages
881
Reaction score
652
Points
93
Rendu naal kalichu pottuttu ipdi azha vakkiriye maa 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

Paavam suthi, appo Chandra avaloda aththaya, Amma illayaa
 
Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
அச்சோ பாவம் சுதி, அப்போ சந்திரா சொந்த அம்மா இல்லியா?
 
Messages
55
Reaction score
36
Points
18
கவரும் நிறம் இல்லை
கண்டதும் பிடிக்கும்
களை இல்லை
காந்தமாய் இழுக்கும் கண்களும் இல்லை...
காய்ந்து போன உடலும்
கடுமையான வேளையில்
கை கால்களும் தளர்ந்திட
கண்டவர்கள்
கண்டதைப் பேசி
கன்னி மனம் உடைய...
காக்கும் கரங்களுக்குள் கனிந்திட ஏங்கும்
கனவு நிறை

வேறுமா....
 
Top