• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 10 💖
நிவின் சுதியிடம் கோபமாகப் பேசி ஒரு வாரம் முடிவடைந்திருந்தது. மறுநாள் வேலைக்கு வந்தவள் ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை. வந்தாள், அவளுக்குரிய வேலையை மட்டும் நேர்த்தியாய் செய்து முடித்தாள். நிவினும் சுதியிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. அவளைப் பார்த்ததும் இவன் தலையை மெதுவாக அசைக்க, அவள் உதடுகள் இறுக மூடியிருந்தன, புன்னகைக்கவே இல்லை, முகம் மலரவில்லை.
நீ என் முதலாளி. நான் உன்னிடம் வேலை பார்க்கிறேன் என்ற பாவம் மட்டுமே அவள் முகத்தில். எட்ட நிறுத்திவிட்டாள் என்பதை விட அவளே தள்ளி நின்று கொண்டாள் என்பதுதான் தகும். வேலைக்கு என்று வந்த இடத்தில் தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. முதலிலாவது நேரமாகிவிட்டால் நாளைக்குத் துணியைத் துவைக்கிறேன், மடித்து வைக்கிறேன் என ஓரிரு சலுகைகளை நிவினிடம் எதிர்பார்த்தாள். ஆனால் இப்போது அவையெல்லாம் அற்றுப் போயின.
முடிந்தளவு விரைவில் வந்தாள். தாமதமானாலும் கால் வலி, இடுப்பு வலி என எதையும் பொருட்படுத்தாது விறுவிறுவென நடந்தாள். முடியவில்லை என்று தோன்றினாலும் இழுத்துப் பிடித்து அனைத்தையும் செய்தாள். வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் நிவின் முன்பு கூறியது அவளுக்கு நினைவிற்கு வந்தது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வீட்டைத் துடைக்க வேண்டும் என்று அவன் குறிப்பிட்டிருந்தானே என அன்றைக்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்தாள்.
காலை உணவை அடுப்பில் ஏற்றிவிட்டு முதலில் வீட்டை சுத்தமாய்க் கூட்டினாள். பின்னர் சுத்தம் செய்யும் திரவத்தை நீரில் கலந்து முழு வீட்டையும் துடைத்து, பின்னர் மீண்டும் வெறும் நீரில் துடைத்து சுதி நிமிர்ந்த போது இடுப்பெலும்பு உடைந்துவிட்டது போலொரு வலி பரவியது. கண் சட்டென கலங்கிவிட, வலி மாத்திரையைப் போட்டுவிடு என உடல் அனத்தியது. உணவு உண்ணவில்லை என்ற தகவலை உபரியாய் மூளை முன்னெடுத்துக் கூறினாலும் செவியில் வாங்கவில்லை பெண். காலையில் தேநீர் குடித்திருக்கிறோமே என செரித்த தேநீரைக் காரணம் காண்பித்து மாத்திரையை விழுங்கினாள். எப்படியும் ஒருமணி நேரத்தில் வலி குறைந்துவிடும் என எண்ணியபடியே மதியத்திற்கும் சமைத்து முடித்தாள்.
மெதுவாய் இடுப்பு வலி குறைந்திருந்தது. ஒருமுறை மட்டும் வீட்டைத் துடைத்திருந்தால் அவளுக்கு இத்தனை வலித்திருக்காது. பக்கத்து வீட்டு அக்கா ஏற்கனவே நிவினைக் குறைக் கூறும்போது, “சோப்பு தண்ணி வச்சு தொடைச்சா மட்டும் போதாதாம் சுதி. அவன் வெறுந்தண்ணி வச்சு இன்னொரு தடவை துடைக்க சொல்றான். இடுப்பு பெண்டு கழட்டிடுது!” என அவர் காரணத்தை அன்றைக்கு அடுக்கிய போது அவர் மீதுதான் சுதிக்கு கோபம் வந்தது. அதை நினைத்து இப்போது பெண்ணுக்கு சிரிப்பு வந்தது. அவர் கூறியது அத்தனையும் பொய்யில்லை. சில மெய்யும் பொய்யும் கலந்துதான் உரைத்திருந்தார்.

உண்மையிலே இரண்டு பெரிய அறை, ஒரு விசாலமான கூடம், சிறிய பூஜை அறை, நடுத்தர சமையல் கூடம் என வாயில் வரைக் கணக்கிட்டால் இன்றைக்கு மதிப்பிற்கு குறைந்தது அவளளவில் கணக்கிட்டால் கூட ஐம்பது லட்சம் பெறுமதி பெறும் இந்த வீடு. அப்படியொரு வீட்டை சுத்தம் செய்து முடிக்கும் போது இடுப்பு வலி மட்டுமல்ல, அனைத்து வலியும் வரக்கூடுமென எண்ணியபடியே வேலை செய்தாள். ஆனால் நிவின் அறையைக் கணக்கிடவில்லை. அந்த அறைக்குள் அவன் அவளை அனுமதிக்கவும் இல்லை. வரக்கூடாது என்று கூட புலனத்தில் செய்தி வழியே உரைத்திருந்தான். நேரடியாகக் கூறவில்லை. ஆனாலும் அவன் செய்தியின் உட்பொருள் இவளுக்கும் புரிந்திருக்க, சரியென பதிலளித்திருந்தாள். ஏனோ அவன் சொல்லிவிட்டப் பிறகு அவனாக அழைத்தால் கூட செல்ல வேண்டுமா என யோசிப்பாள் சுதி. அப்படியொன்றும் அவளுக்கு அந்த அறையைப் பார்க்க ஆர்வமும் இல்லை, விருப்பமும் இல்லை.
இருவருக்கும் இடையில் பேச்சுக்கள் சுத்தமாய் அருகிவிட்டிருந்தன. தனக்கு ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் கூட சுதி குறுஞ்செய்தி மட்டுமே அவனுக்கு அனுப்பினாள். நிவினும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. தவறுதான், மன்னிப்பும் கேட்டுவிட்டான். ஆனால் இந்தப் பெண் கொஞ்சம் அதிகபடியாக நடந்து கொள்வதைப் போலொரு எண்ணம் அவனுக்கு. ஆனால், சுதியைப் பொறுத்தவரை அது அவளுடைய சுயமரியாதை. அதைக் காப்பாற்றிக் கொள்வது அவளுக்கு முக்கியமாகப்பட்டது. அதனாலே எவ்வித தவறும் அவள்புறம் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.
வேலையில் ஆழ்ந்து இருந்தவளுக்கு பக்கத்து வீட்டு பாக்கியம் அக்கா நினைவிற்கு வந்தார். அந்த அக்காவிற்காக இவளது மனம் கரிசனத்தை உதிர்த்தது. ஒரு வீட்டில் வேலை பார்க்கவே தனக்கு மூச்சு முட்டுகிறது. அவர் பத்து பதினைந்து வருடங்களாக வீட்டு வேலைப் பார்க்கிறாரே என அவருக்காக மனம் வருந்திற்று.
சமைத்து முடித்துப் பாத்திரத்தைக் கழுவி கவிழ்த்தினாள். இப்போது வலி ஓரளவிற்கு மட்டுப்பட்டிருந்தது. நேற்றைக்குத் துவைத்த துணிகள் மட்டும் மடித்து வைத்தால் போதுமென மற்றொரு அறைக்குள் சென்று கட்டிலில் கிடந்த துணிகளை மடித்து அலமாரியில் அடுக்கினாள். நேரமாவதை உணர்ந்து அவள் வெளியேற எத்தனிக்க, “சுதிரமாலா...” என்ற நிவின் குரல் அவளைத் தடை செய்திருந்தது.
“ஹம்ம்... எனக்கு வொர்க் இருக்கு. உங்களால முடிஞ்சா நேத்து நீங்க வாட்சப் பண்ண க்ரோசரீஸை வாங்கிட்டு வர முடியுமா? ஐ வில் சென் மணி த்ரூ ஆன்லைன் ட்ராஷாக்ஸன்!” என அவன் கேட்க, “மீனாட்சி காம்ப்ளக்ஸ்னு வெப்சைட் இருக்கும் சார். அங்க போய் ஆர்டர் பண்ணிங்கன்னா, டோர் டெலிவரி பண்ணிடுவாங்க சார்!” என சுதி பதிலளித்தாள். நிவின் எப்போதும் கடைக்கே சென்று வாங்குவதால் அவனுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை.
“ஓ... ஓகே, ஓகே. தேங்க் யூ சுதிரமாலா!” என அவன் புன்னகைக்க, இவள் தலையைத்தாள். அன்றைக்குப் பூட்டியிருந்த பூட்டு இன்னுமே உதடுகளை இறுக்கிப் பிடித்திருந்தன. வைகுண்டம் எப்படியோ நிவினும் அப்படித்தான். அவரைப் பார்த்தெல்லாம் சுதி ஒருநாளும் புன்னகைத்தது இல்லை. இங்கே வேலைக்குச் சேர்ந்து நான்கு நாட்களாக நிவினைப் பார்த்து நட்பாய் சிரித்திருந்தாள். அதற்குப் பின்னர் நடந்த நிகழ்வில் எந்த முதலாளியாக இருந்தாலும் சிரிக்கவே கூடாதென மனதில் அழுந்தப் பதிய வைத்திருந்தவள், பெயரளவில் தலைசைத்துவிட்டு செல்ல, நிவின் அவளின் சிரித்த முகத்தை எதிர்பார்த்தானோ என்னவோ. சின்ன ஏமாற்றம்தான். இரண்டு முறை முயற்சித்தும் சுதி இறங்கி வரவில்லை. அவனுக்கு கொஞ்சம் தன்னகங்காரம் எட்டிப் பார்க்க, அடுத்து தானே சென்று பேச வேண்டாம் என முடிவெடுத்திருந்தான். பேசாது போனால் போகட்டும் என‌ மனம் அலட்சியமாய் கூறிவிட்டது.
வேலை செய்யும் பெண்தானே சுதி. அவளிடம் பேசி என்னவாகப் போகிறது. அப்பெண் அவளுடைய வேலையை சரியாய் செய்தால் போதும். அவளுக்கும் தனக்கும் என்ன இருக்கினதென்ற எண்ணத்திலே சுதியிடம் அவனுமே பேச்சை அறவே குறைத்திருந்தான். அப்படியே அடுத்த வாரமும் கழிந்திருந்தது. ஒருவர் முகத்தைக் கூட மற்றொரு பார்த்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. சுதி இனிமேல் மாதத்தில் இரண்டு ஞாயிறு வணிக வளாகத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தாள். நிவினின் வீட்டில் இரண்டு மணிநேரம் வேலையை முடித்துவிட்டால் போதும். வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என மனம் சற்றே மகிழ்ச்சி கொள்ள, நேற்றைக்கு அவன் சமைக்க கூறிய காளான் பிரியாணியை பேருந்தில் செல்லும் போதே அலைபேசியில் எவ்வாறு செய்வதென ஒருமுறை பார்த்தாள்.
சென்ற வாரமும் நிவின் சைவ உணவுதான் சமைக்க கூறியிருந்தான். இந்த வாரமும் இறைச்சிப் பற்றி அவன் எதுவும் உரைக்கவில்லை‌. அவன் சைவம் மட்டும் உண்ணுபவனாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணம் சுதிக்கு வந்தது. ஆனாலும் மீன் பொரிக்கும் பொடி, கோழி வறுவல் பொடி என அனைத்தையும் வாங்கி வைத்திருந்ததைக் கண்டிருக்கிறாள். என்னவென அவளால் ஊகிக்க முடியவில்லை. அவளளவில் இறைச்சி சமைக்க கூறவில்லை என்ற நினைப்பில் மனம் மகிழ்ந்தது.
சுதிக்கு இறைச்சி சமைக்க வராது என்பது உண்மை. ஓரிரு முறை வீட்டில் முயன்று அதுவும் பாழாகியிருந்தது. அவள் சரியாய் வேக வைக்காத கோழிக் கறியை உண்டுவிட்டு சரத் வாந்தி எடுத்துவிட, பின்னர் இவள் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டாள். தங்கை முகம் வாடப் பொறுக்காது அவளை வெளியே அழைத்துச் சென்று கேட்டதை வாங்கிக் கொடுத்து சிரிக்க வைத்திருந்தான் அண்ணன். அன்றைய நினைவில் இவளது முகம் கனிந்திருந்தது. நிவின் அனுப்பியிருந்த உணவுகளை சமைத்தாள். எப்போதும் விரைவில் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை உந்தும். ஆனால் இன்றைக்கு நேரம் பற்றிய பிரக்ஞை அற்றுப் போக, மெதுவாய் வேலை செய்தாள்.
பொறுமையாய் வீட்டைக் கூட்டினாள். கண்ணாடி முன்னிருக்கும் மேஜையருகே இவள் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது தெரியாமல் கைத்தவறி நிவினின் வாசனை திரவியம் கீழே விழச் செல்ல, இவள் நொடியில் அதைக் கெட்டியாகப் பிடித்திருந்தாள். இதயம் படபடவென அடித்துக் கொள்ள, குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவள் மூச்சை வேக வேகமாக வெளிவிட்டாள். தன்னுடைய கவனக்குறைவு தான் காரணம். உடைந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்ற நினைப்பே சுதியைப் பதற்றப்படுத்தியது. ஆறாயிரம் ஆகிற்றே. நிவின் வீட்டில் அவளது மூன்று வார சம்பளம் அது. தன்னை நிதானப்படுத்திவிட்டு, அதை உள்ளே தள்ளி வைத்தாள்.
ஏனோ இந்த வாசனை திரவியத்திற்கும் தனக்கும் ஒத்துப் போகவில்லை. எங்கு சென்றாலும் தன்னைத் திட்டு வாங்க வைக்க முயல்கிறதே என்று அதை முறைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து முடித்தாள். இயந்திரம் துணி துவைத்து முடிந்ததும் அதற்குரிய கம்பியில் காயப் போட்டாள். நேரம் பத்தாக பத்து நிமிடங்கள் இருக்கின்றன எனக் கடிகாரம் காண்பித்தது. வயிற்றில் வேறு ஒருமணி நேரமாக அமிலம் சுரந்து கொண்டிருந்தது. வழக்கமாக அவள் சாப்பிடும் உணவு நேரத்தை தாண்டிவிட்டது அல்லவா. அதனாலே பசித்தது‌.
வீட்டிற்குச் செல்ல எப்படியும் குறைந்தது அரைமணி நேரமாவது எடுக்கும் என நினைத்து தண்ணீர் பொத்தல் முழுவதையும் வாயில் சரித்தாள். வயிற்றிலிருந்த அமிலத்தை நீர் நடுநிலைப்படுத்தி இருந்தது.
இவள் கிளம்பலாம் எனப் பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டே சமையலறையிலிருந்து வெளிவந்தாள். நிவின் எப்போதும் போல கூடத்தில் தான் அமர்ந்திருந்தான். சுதிரமாலா வேலை செய்து முடித்துக் கிளம்பும் வரை அவன் கூடத்திலிருக்கும் நீள்விருக்கையில்தான் அமர்ந்திருப்பான். அவள் சென்றதும் அறைக்குள் முடங்குவான். அவளும் அதைக் கவனித்தாள். ஆனால், பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
நிச்சயமாய் அவன் செயல் நியாயமானது தான். யாரென்று தெரியாத பெண்ணை வீட்டில் வேலைக்கு அமர்த்தி இருக்கும்போது அவனுடைய கண்பார்வையிலே அவள் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகத் தோன்றியது அவளுக்கு.
அவள் கதவை உட்பக்கமாகத் திறக்க, சரியாய் அந்நேரம் வாயிலில் நின்றிருந்தனர் நந்தனாவும் பாலாஜியும். இவளைக் கண்டதும் நந்தனா முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவள் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை நிவினைக் காண வந்திருந்தாலும் சுதியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஏனென்றால் அவள் வேலை முடிந்து முன்மாலை பொழுது தான் வருவாள். சுதி அந்நேரம் இங்கிருக்க மாட்டாள். அதனாலே ஒருவரை ஒருவர் பார்க்க வாய்ப்பில்லாது போனது. ஆனால் அக்ஷா சுதி இங்கு வேலை பார்ப்பதை முன்பே தோழியிடம் உரைத்திருந்தாள்.
“ஹாய் சுதி‌‌... எப்படி இருக்கீங்க?” நந்தனா சிரிப்புடன் வினவ, இவளிடம் அளவான புன்னகைதான்.
“நல்லா இருக்கேன் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க?” என இவள் கேட்க, “சூப்பரா இருக்கேன்...” என்றவள், “டோன்ட் பீ பார்மல். அவன்கிட்டதான் நீங்க வொர்க் பண்றீங்க. சோ, என்னை நந்தனான்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க. நே இஷ்ஷூஸ்!” எனத் தோளைக் குலுக்கினாள்.
சுதி முகத்தில் சிறிய புன்னகை. அவ்வளவே, பதிலியம்பவில்லை.
“என்ன சிரிக்குறீங்க? அப்போ பேர் சொல்லிக் கூப்பிட மாட்டீங்க?” நந்தனா மென்மையாய் மற்றவளை முறைத்தாள். பெண்கள் பேச்சில் கலந்து கொள்ளாது பாலாஜி நிவினின் அறைக்குள் நுழைந்திருந்தான்.
“பரவாயில்லை மேடம்... இதுவே இருக்கட்டும்!” என்ற சுதிக்கு பேர் சொல்லி அழைப்பதில் விருப்பமில்லை தான். நந்தனா என்னதான் சிரித்துப் பேசினாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்வது அவளுக்கு உவப்பாய்த் தோன்றவில்லை.
“சரி... அன்னைக்கே உங்களுக்கு வெறும் தேங்க்ஸ் சொல்லி அனுப்பிட்டேன்னு வருத்தமா இருந்துச்சு. இன்னைக்கு நாங்க லஞ்சுக்கு வெளிய போறோம். நீங்களும் எங்களோட ஜாய்ன் பண்ணிக்கோங்க!” என நந்தனா அழைக்க, சுதி மறுப்பாய் தலையை அசைத்தாள்.
“இல்ல மேடம்... நீங்க ப்ரெண்ட்ஸா போய்ட்டு வாங்க. நான் வரலை மேடம்!” என மறுதலித்தாள்.
“ப்ம்ச்... என்ன சுதி, ஒருநாள் தானே. நீங்களும் வாங்க. உங்களைப் பத்திரமா வீட்ல ட்ராப் பண்ணிட்றோம். டோன்ட் வொர்ரீ!” என அவள் வற்புறுத்த, சுதி சங்கடமாய் சிரித்தாள். நந்தனாவின் பேச்சில் உண்மையிலே சுதியின் மீதான அன்பும் நன்றியுணர்வும் வெளிப்பட்டது. சிநேகமான புன்னகையைத் துளி கூட அவளால் சந்தேகிக்க முடியாது. ஆனாலும் இந்த சிரித்த முகத்துடனே தன் எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டாள். அதற்கு மேல் தாண்டினால் நிவின் விஷயத்தில் போல காயப்பட்டு நிற்க வேண்டி வருமென ரணப்பட்ட இதயம் அவளை அறிவுறுத்தியது. அதனாலே புன்னகைத்த முகத்துடன் விடைபெற யத்தனித்தாள்.
“டேய் நிவினு, நீயாவது கூப்பிடு. உன்னோட சர்வண்ட்!” என்றவள் நாக்கை கடித்துவிட்டு, “சாரி... சாரி ஃப்ரெண்ட் சுதிரமாலாவை நம்மளோட ஜாய்ன் பண்ண சொல்லு டா! நம்மளுக்கும் புதுசா ஒருத்தவங்க ஜாய்ன் பண்ணும்போது இன்னும் டே நல்லா போகும்!” என அவள் நிவினைக் கேட்க, அப்போதுதான் அவனும் இவளைப் பார்த்தான்.
சுதி வந்ததிலிருந்து நிவின் முகத்தைக் காணவில்லை. இப்போது நந்தனா பேசவும் அவனை நோக்கினாள். இவளை அழைக்க விருப்பமில்லை என்பது போலொரு பாவனை அவனது முகத்தில். சுதி அதைக் கண்டாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அவனே அழைத்தால் கூட, இவளுக்கு அவர்களுடன் செல்ல ஒரு சதவீத விருப்பம் கூட இல்லை. அவன் பேசும் முன்னே இவளே இடையிட்டாள்.
“இல்ல மேடம்...அம்மா வீட்ல திட்டுவாங்க. அவங்க கிட்டே சொல்லலாம எங்கேயும் போக மாட்டேன். இப்போ நான் வர லேட்டாகிடுச்சேன்னு வெயிட் பண்ணுவாங்க. அதனாலே நான் கிளம்புறேன் மேடம்!” என்றாள். நந்தனாவால் அதற்கு மேலும் சுதியை வற்புறுத்த முடியவில்லை.
“ஓகே சுதி, நெக்ஸ்ட் டைம் நீங்க வீட்ல பெர்மிஷன் வாங்கிட்டு எங்களோட ஜாய்ன் பண்ணிக்கோங்க!” என அவள் இவளது தோளணைத்து விடுவிக்க, சுதி மென்மையாய் தலையசைத்து வெளியேறினாள்.
“இந்த அக்ஷாவை வேற இன்னும் காணோம் டா. எங்களுக்கு முன்னாடி கிளம்பிட்டேன்னு மெசேஜ் போட்டா!” என பாலாஜி முணுமுணுக்க, நந்தனாவும் வாயிலை நோட்டமிட்டாள். அவளைக் காணவில்லை என இவர்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.
சுதி சென்று மின்தூக்கியின் முன்பு நிற்க, சில நிமிடங்களில் அது திறந்ததும் அக்ஷா வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் சுதியின் உதடுகள் புன்னகைக்கவா? வேண்டாமா என விவாதத்தில் இறங்க, “ஹே சுதிரமாலா... எப்படி இருக்க?” என்று அவளே துவங்கி வைத்தாள்.
சுதிக்கு அவளிடம் பேச விருப்பமில்லை. இருந்தும் சிரித்து பேசுபவரிடம் முகத்தில் அறைந்தது போல விலகி செல்ல முடியாது வலிய புன்னகைத்தவள், “நல்லா இருக்கேன் மேடம்” என்றாள்.
“சாரி சுதி, அன்னைக்கே உன்கிட்ட அப்பாலஜிஸ் கேட்கணும்னு நினைச்சேன். நிவின் உன்னைத் திட்டிட்டதா சொன்னான். என்னால நீ திட்டு வாங்கிட்டீயேன்னு எனக்கு ஒரே கில்டியா போச்சு. சாரி சுதிரமாலா!” என்றாள் உண்மையான வருத்தத்துடன். சுதி பதிலுரைக்கவில்லை எனினும் அதை ஏற்றுக் கொண்டது போல புன்னகைத்தாள்.
“தேங்க் காட்... உங்களுக்கு என் மேல கோபம் இல்லைல. ஆக்சுவலி நிவின்னு வந்துட்டாலே இந்த மாதிரி எதாவது கிறுக்குத் தனம் பண்ணிட்றேன். ஐ க்நோ, திஸ் இஸ் மேட்னெஸ். பட் ஐ லவ் ஹிம் தட் மச். சோ, அவன் சம்பந்தப்பட்ட எல்லாத்துலயும் நானே ப்ரீயரா இருக்கணும்னு நினைச்சுத்தான் அன்னைக்கு அப்படி பிகேவ் பண்ணிட்டேன். பட் ஐ ரியலைஸ்ட் மை மிஸ்டேக்!” என அவள் வருந்த, சுதிக்கும் புரிந்திருந்ததே. அக்ஷாவின் பார்வையும் செயலும் நிவின் மீதான காதலை புடம் போட்ட தங்கம் போல மின்னிக் காண்பித்தன‌.
நேரமானதை உணர்ந்த அக்ஷா, “ஓகே சுதிரமாலா. வீ வில் டாக் அனதர் டே. இப்போ எனக்கு லேட்டாகுது. சீ யூ...” என அவள் விடைபெற, இவள் பெருமூச்சுடன் மின்தூக்கியில் நுழைந்தாள். அக்ஷாவின் மீது நிவினும் விருப்பப்படுகிறானோ? இல்லை இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரமாய் காதலிக்கின்றனர் போல. அதனாலே அன்று அவளிடம் கோபத்தைக் காண்பிக்க முடியாது என்னிடம் காட்டிவிட்டதாய் உரைத்தானா? என எண்ணியவள், பிறகு வீட்டு நினைவில் அதை மறந்து போயிருந்தாள்.
மணி பத்தறையாகியிருந்தது. எப்படியும் வீட்டிற்கு செல்ல பன்னிரெண்டைத் தொட்டுவிடும். மதிய உணவுதான் உண்ண முடியும் எனத் தோன்ற, வயிறு மீண்டும் பசியில் துள்ளியது. அப்படியே மெதுவாய் நடந்தவளின் கண்ணில் இளநீர் கடைத் தென்பட்டது. ஐம்பது ரூபாய் ஒரு இளநீர் என எழுதியிருக்க, ‘ஐம்பது ரூவா செலவு பண்ணி எளநி குடிக்கணுமா?’ என மனம் கேள்வி கேட்க, விரல்கள் கைப்பையைத் துழாவின. பேருந்து பயணச்சீட்டிற்குப் போக கொஞ்சம் சில்லறைகள்தான் இருந்தன. கண்டிப்பாக ஐம்பது ரூபாய் இருக்காது எனத் தோன்ற, இளநீர் கடையைக் கண்டும் காணமலும் கடந்தாள்.
பேருந்து நிலையத்தை ஒட்டி கரும்புச்சாறு கடை ஒன்றிருந்தது. சில்லறைகளைப் பொறுக்கி எடுத்தாள். பதினெட்டு ரூபாய் இருந்தது. மூன்று ரூபாயைப் பையிலே போட்டுவிட்டு பதினைந்து ரூபாய்க்கு கரும்புச்சாற்றை வாங்கிப் பருகினாள். வெயிலுக்கு குளுகுளுவென்றிருந்த பானம் தேனாய் இனித்தது. வயிறும் நிரம்பியிருந்தது. உடலில் தெம்பு வரப் பெற்றதை உணர்ந்தவள், ஐந்து நிமிடக் காத்திருப்பில் பேருந்தில் ஏறியமர்ந்தாள்.
விடுமுறை தினம் என்பதால் வெறிச்சோடி கிடந்தது பேருந்து. ஆங்காங்கே ஒன்றிரண்டு தலைகள் மட்டுமே தெரிந்தன. இவள் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தததற்கான அறிவிப்பு வர, திறந்து பார்த்தாள். நிவின்தான் அனுப்பியிருந்தான்.
“யூ கேன் டேக் ஒன் சண்டை அஸ் அ லீவ் ஆன் ஈச்‌ மந்த்!” என மாதத்தில் ஒரு ஞாயிறு விடுமுறை எடுத்துக் கொள்ள அவன் கூறியிருக்க, சற்று முன்னர் நிரம்பியிருந்த வயிறோடு மனமும் சுதிக்கு நிறைந்து போனது.
“தேங்க் யூ கடவுளே!” என முணுமுணுத்துவிட்டு அவனிடம் சரியென்று பதிலை அனுப்பினாள். வீட்டு வேலையில் மாதம் ஒருநாள் விடுப்பு எடுப்பது ஒன்றும் அத்தனை பெரிதல்ல. எல்லா இடத்திலும் விடுமுறை கட்டயம் தானே. அந்தளவில் இவனுக்கு விடுப்பு கொடுக்க மனம் வந்திருக்கிறதே என நினைத்துப் புன்னகைத்தவள், அலைபேசியில் ஸ்வர்ணலதா பாடிய பாடலை கசியவிட்டு வேடிக்கைப் பார்த்தவாறே வீட்டைந்தாள்.
தொடரும்...











































 
Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
இவன விட இவன் பிரெண்ட்ஸூக்கு பேஸிக் மேனர்ஸ் இருக்கு
 
Messages
55
Reaction score
36
Points
18
நிதம் ஒரு முகம்
நாளும் ஒரு விதம்
நன்றிக்கு உதவி
நிஜம் கொஞ்சம் விளங்கி
நிவினின் நடவடிக்கை
நல்லவனா கொஞ்சம் சுயநலமா????
நான் என்ற கோட்டுக்குள்
நின்று விட்டால்
நலமே எந்நாளும் என நங்கையும் நகர்ந்து நிற்கிறாள்....
 
Active member
Messages
178
Reaction score
119
Points
43
Lovely
Yov writer eh intha asha ponnum paaavam ithuku oru end card poden
 
Top