• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பூக்களை விரும்பா வேர்களில்லை - 34

Messages
94
Reaction score
2
Points
8
அத்தியாயம் - 34


"இனி மாமா… இனி மாமா…” என சத்தமாக கத்தியவாறே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டியபடியே அந்த பெரிய வரவேற்பறையில் அங்குமிங்குமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.



ஓங்கி ஒலித்த தன்னுடைய குரலுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காமல் போனதாலோ இல்லை தான் தேடியது இன்னும் கிடைக்காததாலோ சலித்தபடியே தன் கால்களை தரையில் உதைத்துக்கொண்டு, தன் முன்னால் நின்றிருந்தவர்களை மீண்டும் கோபமாய் முறைத்து வைத்தது அந்த குட்டி வாண்டு.


“வேலா… மித்து… வரு… பாவ… நாலு பேதும் அவுட்… இங்கி..யே தா இருக்கனு… நா.. இனி மாமாவ அவுட் பண்ணித்டு வதேன்…” என அவர்களை அதட்டிவிட்டு வேலனை மட்டும் மேலும் முறைத்தான் அவனுடைய அண்ணன் மகன்.


தன் வாயில் சுட்டு விரலை வைத்து சிரிப்பை அடக்கிக்கொண்டு சர்வாவிற்கு முன் முதல் ஆளாய் வேலன் நின்றிருக்க, “இனி மாமா… நீங்க சீக்கிதம் அவுட் ஆனா வேலா தான் நெக்ச்ட் கேட்சர்… ப்ளீஸ் மாமா… அவுட் ஆகிதுங்க…” என விரைவாக உந்தித் தள்ளிய சர்வாவின் விழிகள் சிரிக்கும் வேலனை வஞ்சனையின்றி சினத்தோடு எதிர்கொண்டது.


“இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான் உனக்கு டைம் பல்சர்… அதுக்குள்ள நீ அத்தானை கண்டுப் பிடிக்கலனா மறுபடியும் நீ தான் கேட்சர்…” மீண்டும் செங்கதிர்வேலனிடம் ஒரு குறும்பு கலந்த குழந்தை சிரிப்பு.


இவர்களின் விளையாட்டை ரசித்தபடியே வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆதி பகவான் ஐயா, அன்னலட்சுமி அம்மாள், கங்காதரன் மற்றும் குருமூர்த்தி ஆகிய நால்வரும் வேலனோடு நடக்கும் தள்ளுமுள்ளுகளை கண்டு களித்திருப்பதைப் பார்த்ததும் அசட்டையாய் அவர்களை நோக்கி முன்னேறிய சர்வா,


“தாத்தூஸ்… நா… இனி மாமாவ தேதிப் போறே… நா அந்த பக்கம் போனதூ இவங்க மாமாக்கு சிக்னல் குதுக்கப் போகாம நீங்க மூணு பேரும் தா பாத்து..ணும்… பாத்தி… நீங்க இனி மாமா வந்தா என்னை உதனே கூப்பிதுங்க…” என்று நால்வருக்கும் வேலை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயல, எதிரே அவர்களுக்கான தேநீர் கோப்பைகளோடு வந்த மழைக்குழலியைக் கண்டு தன் வேகத்தைக் குறைத்தான்.


பெரியவர்கள் நால்வருக்கும் சூடான தேநீர் கோப்பைகளை கொடுத்து முடித்தவள் சிறியவர்களுக்கென தயாரித்து வைத்திருந்த சத்துமாவு கிண்ணிகளில் இரண்டை எடுத்து மித்ரா, ஸ்வரூப்பிடம் கொடுத்து அவர்கள் இருவரும் குடிக்க பொறுமையாக உதவி செய்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் மட்டும் உண்ணுவதைக் கண்டு மேலும் கோபமான சர்வா தன் கருவிழிகளை மட்டும் உயர்த்தி மேல்பார்வையால் குழலியை சுட்டெரித்தபடியே,


“அத்த… உன் ஹஸ்பண்த் எங்க?” என மூச்சுகள் வாங்க அழுத்தமாய் கேட்கவும் குழலியின் முகம் போன தினுசில் மற்றவர்கள் அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டார்கள்.


“இஷ், என்க்கும் பசிக்குது…” என தன் கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டபடியே தலை கவிழ்ந்த சர்வா அனைவரையும் பாவமாக பார்த்து வைக்க, அவனை தூக்கிக் கொண்டபடியே ஒரு சுழற்று சுழற்றிய மழைக்குழலி,


“என் செல்லத்துக்கு பசிக்குதா… நீ வாடா சர்வா குட்டி… அத்த உனக்கு ஊட்டி விடறேன்…” அவனை அருகிலிருந்த இருக்கை ஒன்றில் அமர்த்தியவாறே மொழியவும் சிலிர்த்துக் கொண்டு வந்த வேலன்,


“ரெயின், என்ன நீ… எங்க ரூல்ஸ் புரியாம பேசுற… பல்சர் இப்ப அத்தானை கண்டுபிடிக்கணும். இல்லனா மறுபடியும் அவன் தான் கேட்சர். இன்னும் இரண்டு நிமிஷம் தான் இருக்கு அதனால நீ கொஞ்ச நேரம் சும்மா இரு…” என்று வேண்டுமென்றே மழைக்குழலியை அங்கிருந்து தள்ளியபடியே கூற,


“இரண்டு நிமிஷம்னா எவ்வளவு டைம் இருக்கு அத்த…” தன் உணவினை தட்டிப் பறித்த வேலனை தவிர்த்தவாறு சலிப்புடன் வினவிய அந்த குட்டி கண்ணனின் முகத்தினை தன் கைகளில் அள்ளிக் கொண்டபடியே,


“இரண்டு நிமிஷம்னா இன்னும் நிறைய டைம் இருக்குடா தங்கம். அவன் கிடக்குறான். வா… உனக்கு அத்த ஹெல்ப் பண்றேன்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து உங்க மாமாவ கண்டுப் பிடிக்கலாம்” என பதிலளித்ததைக் கேட்ட செங்கதிர்வேலன் மென் முறைப்புடன்,


“இல்ல இல்ல… நான் இதை ஒத்துக்க மாட்டேன். பல்சருக்கு யாரும் ஹெல்ப் பண்ணக் கூடாது. இது எங்க ரூல்ஸ்லையே கிடையாது…” தன் உதட்டை சுழித்தவாறே, “ரெயின்… உன்னை அப்பவே நாங்க விளையாட கூப்டோம் நீ தான் வரலன்னு சொல்லிட்டல… அப்பறம் இப்ப மட்டும் எப்படி வந்து ஜாயின் பண்ணலாம். நீ ஒன்னும் வரவே வேணாம் போடி… போய் அம்மாக்கும் அத்தைக்கும் ஹெல்ப் பண்ணு…” அவள் பின்னலை பிடித்திழுத்தபடியே அவளை தடுத்தவாறு நவிழ்ந்தான்.


“அச்சச்சோ… வேலா… சித்தா வந்தா உன்..னை அதிக்கும்…” கையில் வைத்திருந்த சின்னக் கிண்ணத்தை அளவிட்டபடியே மித்ரா வேலனை கண்டிக்க,


“ஆமா ஆமா… சித்தி மேல கை வைக்காத வேலா… சித்தாக்கு பிடிக்காது…” என ஸ்வரூப் கூறியதைக் கேட்டு அனைவரின் முகங்களும் மேலும் விரிந்தன.


“டேய்… அண்ணனும் தங்கச்சியும் வாய திறக்காதிங்க… அதான் முக்கியமான வேலையா இருக்கீங்கள்ல அதைப் பாருங்க…” இடுப்பில் கையூன்றி அவர்கள் இருவரையும் முறைத்தான் வேலன்.


“ரெயின்… நீ கிளம்பு. உன்னை இப்ப சேர்த்துக்க முடியாது…” அதட்டலிட்டான் அவளிடம்.


அதற்கு கொஞ்சமும் சளைக்காமல், “போடா…” வென வேலனின் நெற்றியை தட்டியபடியே சர்வாவோடு முன்னேறிய குழலியை மீண்டும் தடுத்தவன்,


“ரூல்ஸ்ல அத்தெல்லாம் இல்லடி…” என்றவாறே தன் தலையை தேய்த்துக் கொண்டான்.


“ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் உங்களுக்கு தான். எங்களுக்கு இல்ல…” முறுக்கிக் கொண்டவளை மேலும் சீண்டும் பொருட்டு,


“ரூல்ஸ் போட்டது அத்தான்னு சொன்னா…” இதழ் ஓரங்களில் மலர்ந்த குறும்பு சிரிப்போடு அடுத்த அடி எடுத்து வைக்காமல் சட்டென நின்றுவிட்ட குழலியின் முகத்தை குறுகுறுவென நிதானமாக அளவிட்டான் செங்கதிர்வேலன்.


அரை நிமிட யோசனைக்கு பிறகு நிமிர்ந்த மழைக்குழலி, “இப்ப நான் விளையாட வரக் கூடாதுனு யார்லாம் சொல்றீங்க…” என கேட்டதற்கு அங்கிருந்தவர்களில் வேலன் மட்டுமே தன் கையினை மேலே உயர்த்தினான்.


“நான் விளையாடலாம்னு சொல்றவங்க…” என அவள் வேலனை பார்த்தபடியே கேட்க, பெரியவர்கள் உட்பட அங்கிருந்த அத்தனை பேரின் கைகளும் உயர்ந்தன. சமையல் அறையில் இருந்தும் கூட நான்கு ஓட்டுகள் மழைக்குழலிக்கு விழுந்திருந்தன.


“ஹ்ம்ம், மொத்தம் ட்வெல்வ்… உன் அத்தானோட சேர்த்து உனக்கு இரண்டு ஓட்டுனா கூட… யார் வின் பண்ணதுன்னு உனக்கே தெரியும்” எள்ளல் கலந்த புன்னகையோடு அவள் முன்னேறியதை கை நீட்டி தடுத்த வேலன் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தபடியே, “டைம் ஓவர்” என்றான் தன் விழிகளை சிமிட்டி சிரித்து.


அதனை சிறிதும் எதிர்பார்க்காமல் அவர்கள் இருவரும் வேலனை உறுத்து விழிக்க, “வேலா… என் மருமக கிட்ட இவ்வளவு நேரமும் பேசிட்டு இருந்துட்டு, இப்ப டைமாச்சுனா சொல்ற… இதெல்லாம் ஃபவுல். இதுக்காகவே இன்னும் பத்து நிமிஷம் எக்ஸ்ட்ராவா அவங்களுக்கு தருவோம்” என்று முக்கிய நடுவராக தீர்க்கமான முடிவை சொல்லிவிட்டிருந்தார் குருமூர்த்தி.


“போச்சுடா… எங்க அப்பா சொல்லியிருந்தா கூட பரவால்ல. சொன்னது என் மாமனார். தலையாட்டி தான் ஆகணும் போலையே….” தனக்கு தானே பேசுவது போல சொல்லியவாறு ஓய்ந்துப் போய் அங்கிருந்த நீள்விருக்கையில் சாய்ந்தான் செங்கதிர்வேலன்.


அவனுடைய நிலையை கண்டு வாய்பொத்தி சிரித்த சிறியவர்கள் விளையாட்டாய் அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்து முகத்தை சுழித்து 'வெவ்வவ்வே’ என ஒழுங்கெடுக்க, “வா… தங்கம் நாம… உன் மாமாவை கண்டுபிடிச்சிட்டு வருவோம்” என்றவாறு மழைக்குழலி அங்கிருந்து நகர்ந்தாள்.


அப்படி இதுவரை அமிழ்தினியன் எங்கு தான் மறைந்திருக்கிறான் என்றறிய அனைவருக்குமே ஆர்வமாகிப் போனது. வரவேற்பறையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் ஆவலாக காத்திருக்க, சர்வாவோடு மாடியறைகளுக்கு சென்ற மழைக்குழலி ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள்.


முதலிரு அறைகளை தாண்டியதும் சட்டென இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “குழி… அது மாமா குரல் தான…” என சர்வா கிசுகிசுவென கதைக்க, மேலும் கீழுமாய் ஆமோதிப்பாய் தலையசைத்த குழலி, “ஆனா, உங்க அப்பா ரூம்ல எப்படிடா…” என்று மெல்லிய குரலில் கேட்டபடியே அன்புவேந்தனுடைய அறையின் கதவை திறந்துப் பார்த்தாள்.


உள்ளே, இருவரும் கட்டி தழுவியபடி நின்றிருந்த காட்சியை கண்டதும் மழைக்குழலிக்கு மயக்கம் வராத குறை தான். “டேய்… போதும்டா… விட்றா…” தன் மேல் சாய்ந்துக் கொண்டு நின்றிருந்த அன்புவேந்தனை சமாளிக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.


“இல்லடா… என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. தப்பெல்லாம் என் மேல தான். உன்னை விட்டுக்கொடுத்து பேசிட்டேன். பெரியவங்க தான் ஏதோ கோவமா பேசிக்கிட்டாங்கனா நானும் உன்னை அப்படி பேசியிருக்கக் கூடாது. இதுல உன்னை அடிச்சிட்டேன் வேற…” என அன்பு வருத்தமாய் மொழிய,


“பச், நீ கோவப்பட்டனா… அதுக்கான காரணம் எனக்கு புரியுதுடா. யாரா இருந்தாலும் அப்படி தான் நடந்துக்கிட்டு இருப்பாங்க… நீ ரொம்ப ஃபீல் பண்ணாத…” அவனை தள்ளி நிறுத்தியபடியே,


“அப்பப்ப நெஞ்சை நனைக்காதடா” என கன்னம் வரை நீண்ட சிரிப்போடு அவனை கலாய்த்தான்.


அதற்குள் அறையின் வாசலில் நின்றிருந்த மழைக்குழலியின் கைகளிலிருந்து தாவி இறங்கிய சர்வா, “இனி மாமா அவுட்… இனி மாமா அவுட்… கண்துபிடிச்சித்தேன் கண்டுபிடிச்சிட்டேன்” என சத்தமாக கத்திக்கொண்டே அவனை நோக்கி பாய, அவனை தன் கைகளில் அள்ளிக்கொண்ட அமிழ்தினியன்,


“இவ்வளவு லேட்டாவா சர்வஸ் வந்து என்னை கண்டுபிடிப்ப… உங்க அப்பா என்னை படுத்தி எடுத்துட்டான்…” என முகம் நிறைந்த புன்னகையோடு அசையாமல் உறைந்துவிட்ட தன் மனைவியை துளிர் பார்வையால் வருட, அவளுடைய முகமோ இருவரையும் மாறி மாறி அளந்தது.


அடுத்து எதையோ பேச முயன்ற அன்புவிற்கு கண்ணைக் காட்டி அடக்கியவன், “யார ஃபர்ஸ்ட் அவுட் பண்ண சர்வஸ்…” தன் மச்சானின் மகனிடம் பேச்சை வளர்க்க, “வேலா தான் மாமா…” என உற்சாகம் பொங்க கூறி சிரித்தான் சர்வா.


“நான் போய் சொல்லித்து வரே…” அதுவரை பொறுத்திருந்ததே பெரிது என்று சர்வா அங்கிருந்து சிட்டாய் பறக்க, “போதும்டா மச்சான். நீ பேசின வரைக்கும் போதும்… அண்ணன் வந்துட்டு இருப்பான். அவன் கூட போய் மொக்க போடு… என்னை ஆள விடு…” என தன் மனைவியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அமிழ்தினியன்.


“என்ன அத்தான்? என்னாச்சு? அன்பா எதுவும் சொன்னானா? உங்க முகமே சரியில்ல… என்னனு சொல்லுங்க…” அவன் கைப்பிடியை தளர்த்தியவாறே அவள் கேட்க,


“கொஞ்ச நேரம் பேசாம வாடி…” என்றபடியே அவளையும் தன்னோடு இழுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.


அவன் செய்கையில் எதுவும் புரியாமல் விழித்தபடியே நின்றிருந்தவளை தன்னோடு சேர்த்தணைத்து, “இஷ்ஷ். கொஞ்ச நேரம் ஜில்லு ப்ளீஸ்” என்று முனங்கியவனின் காற்றை வருடும் தொடுகையில் முகம் சிவந்தாள் அமிழ்தினியனின் மனையாள்.


“அன்பா வேற எதுவும் பேசலையே அத்தான். அவனுக்கு என் மேல பாசம் அதிகம். அதனால தான் அப்படி சட்டுனு கோவப்பட்டுட்டான். இப்ப ரொம்ப வருத்தப்பட்டான்ல”


“...”


“இன்னும் வருத்தமா அத்தான்… எல்லாரும் உங்ககிட்ட இப்ப நல்லா தான் பேசுறாங்க. ஆனா, மாமா மட்டும் தான் இன்னும்…”


“...”


“நான் அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா அத்தான். என்னால தானே உங்களுக்கு இந்த சங்கடம். ஸாரி அத்தான்”


“...”


“நான் இதெல்லாம் யோசிக்கவே இல்ல… இப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… மாமாக்கிட்ட…” மேலும் பேச விடாமல் அவளுக்கு தன் இதழ்களால் தடை விதித்தவன் சில நிமிடங்களுக்கு பின் விலகியபோது மழைக்குழலி அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.


“ஐ மிஸ் யூ அத்தான். என்னமோ இந்த ஒரு வாரமும் நாம இங்க ஒன்னாவே இருந்திருந்தாலும் கொடைக்கானல்ல இருந்த மாதிரி இல்ல. உங்களை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஆனா, அப்பாக்கு சரியானதும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதெல்லாம் யோசிக்கவே நேரம் இருக்கல” என அவள் பகிர்ந்ததை பொறுமையாக கேட்ட அமிழ்தினியன், தன் மார்பில் படர்ந்திருந்தவளின் முகத்தை மெல்ல தன்னை நோக்கி நிமிர்த்தி,


“உன் கிட்ட நான் ஒண்ணு கேட்கணும் ஜில்லு…” என்றான் திடீரென்று பூடகமாக.


“ம்ம், என்ன அத்தான்?” குழப்பமான மனநிலையோடு ஏறிட்டாள் குழலி.


“நாம திரும்ப கொடைக்கானலுக்கே போயிடலாமா…” என வினவியதை நம்ப முடியவில்லை அவளால்.


“என்ன விளையாடுறிங்களா அத்தான்?”


“இல்ல ஜில்லு… ரொம்பவே சீரியஸா தான் கேட்கிறேன். நாம அங்க போய் இருக்கலாமா? ரொம்ப வேணாம் ஒரு இரண்டு வருஷம் இல்லனா ஒரு வருஷம்…”


“அத்தான்” மொத்தமாய் அதிர்ந்தே போனாள் அவள். அவளுடைய பார்வையில் தன் தலையை தேய்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான் அமிழ்தினியன்.


“நம்ப குடும்பம் இல்லாம தனியா இருக்க உங்களுக்கு கஷ்டம்னு எனக்கு தெரியும். இந்த எட்டு மாசமே நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. அடிக்கடி வெளியூர் வெளிநாடுனு போனாலும் ஒரு வாரம் வரைக்கும் தான் உங்களால தாங்க முடியும். நடுவுல எப்படியாவது வந்துட்டு போவீங்க. நீங்களா இப்படி…”


அவளிடமிருந்து விலகி சென்று நீள்விருக்கையில் அமர்ந்தவன் முழங்கையில் தாங்கிய விரல்களால் தன் நெற்றியினை வருட, அவனருகே வந்து முழங்காலிட்டு அமர்ந்த குழலி, அவன் முகத்தை தாங்கி அதனை குறிப்பாய் ஆராய்ந்தாள். சிவந்திருந்த விழிகள் அவளுக்கு ஆயிரம் கதைகள் சொன்னது.


“ஜில்லு… ஒண்ணுமில்ல. உனக்கு வேணாம்னா போக வேண்டாம்டா” முறுவலோடு அவள் நெற்றி முட்டியவன் தன் உள்ளத்து உணர்வுகளை மனைவி படிக்கும் முன் அங்கிருந்து நகர முயல, அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துத் தடுத்தவள், “இல்ல… நாம போகலாம் அத்தான். கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாம். எனக்கு ஓகே தான்… எப்ப போறோம்?” என படபடவென்று சிந்தித்தாள்.


“ஹேய், என்னடா? எதுவுமே கேட்காம… சரினு சொல்லிட்ட?” இப்போது அமிழ்தினியன் அதி தீவிரமாய் அவளை ஆராய்ந்தான்.


“என்னமோ உங்களுக்குள்ள இருக்குனு புரியுது. என்னனு சொல்லணும்னு இல்ல… எனக்கு என் அத்தானை தெரியும்”


“ஹ்ம்ம்” என யோசனையில் ஆழ்ந்தவன், “என்னமோ எல்லாம் புதுசா இருக்குடா. பழைய மாதிரி தோணல. மத்தவங்ககிட்ட என்னால எதையும் காமிச்சுக்க முடியல. நம்ப வீட்டு குட்டிஸ்ல இருந்து எல்லாரும் என்னை புதுசா பாக்குற மாதிரி இருக்கு. கொஞ்ச நாள் நாம அங்க இருப்போமே…” என்று முடித்தான். அதற்குமேல் தன் எண்ண ஓட்டங்களை அவனால் ஏனோ வெளிப்படுத்த முடியவில்லை.


பேசுவது தங்கள் குடும்பத்தை பற்றிய விஷயங்களை. அதனாலே எதுவும் தவறாய் அர்த்தம் கற்பித்துவிடுமோ என வெகு ஜாக்கிரதையாக பேச வேண்டி இருந்தது. இவளிடமாவது மனம்விட்டு அவனால் பேச முடிகிறது. மற்றவர்களிடம் அதைக் கூட செய்ய முடியாமல் திணறுகிறான். அது தன்னை உள்ளும் புறமும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் வேலனாய் இருந்த போதிலும், அவனிடமும் கூட பகிர முடியாது போயின.


உண்மையில் அமிழ்தினியனுக்கு அப்படி தான் தோன்றியது. தங்கள் வீட்டினர் அனைவரும் வெகுவாய் கவனித்து ஒவ்வொன்றாய் யோசித்து யோசித்து தன்னிடம் பேசுவது போலவே இருந்தது. அதிலும் அவன் தந்தை அவனை பற்றிய பேச்சுகளை முழுதாய் தவிர்த்துவந்த வண்ணம் இருக்கிறார். அவர் பேசாதது கூட அவனுக்கு ஒரு பொருட்டாக பதியவில்லை. மற்றவர்களின் அணுகுமுறையும் கவனிப்பும் அவனை மனதளவில் பெரிதும் ஒதுங்க வைத்திருக்கிறது.


அவர்களுடைய மனநிலையும் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால், மழைக்குழலிக்கு கிடைக்கும் நெருக்கங்களில் பாதியளவு கூட அவனுக்கு கிடைக்கவில்லை. அவளிடம் அவர்கள் காட்டும் இயல்பு ஏனோ இவனிடம் மட்டும் தவறுகிறது. அதில் இரு வீட்டாரும் அடக்கம். வேலன் மட்டுமே எப்போதும் போல அவனோடு பழக்கம் கொண்டான். மற்றவர்கள் புதிதிலும் புதிதாய் மிளிர்ந்து பிசிறு தட்டியது.


மழைக்குழலிக்கு அவனுடைய மனம் ஓரளவுக்கு புரிந்தது. இந்த ஒரு வாரமாய் அமிழ்தினியன் கங்காதரன் வீட்டில் தான் இருக்கிறான். மருந்துக்கும் கூட தன் வீட்டுப்பக்கம் அவன் செல்ல முயலவில்லை. கண்டிப்பாக அவனுக்கும் தோன்றிருக்கும் தான். ஆனால், செல்ல முயலவில்லை எனில் என்னவோ இருக்கிறது என்று அவளுமே சிந்தித்த வண்ணம் தான் இருந்தாள்.


பிரச்சனை எதுவாய் இருப்பினும் காரணம் இவளல்லவா! அதனால் அவளால் எதையும் கேட்கவும் முடியவில்லை. என்ன செய்து சரி செய்வது என்றும் புரியவில்லை. நிச்சயமாய் இதைப்பற்றி குருமூர்த்தியிடம் பேசிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.


“ஹ்ம்ம் ஓகே அத்தான்…” நெடு நேர சிந்தனைக்கு பிறகு அவளிடமிருந்து கிடைத்த ஆமோதிப்பில் பெருமூச்சோடு அவளை நோக்கி முன்னேறிய அமிழ்தினியன்,


“என்னாச்சு ஜில்லு?” பேச்சினூடே அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் தாடையில் விரல் பதித்தவள், “ஐ மிஸ் யூ…” அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.


“ஜில்லு…” என முழுதாய் கிறங்கிப் போய் நின்றான் அமிழ்தினியன்.


சிலிர்த்த விரல்களுடன் அவளை இறுக்கியவன் மெல்ல அவள் முகம் நோக்கி குனிய, முறுவலோடு அலட்டிக்கொள்ளாமல் அவன் இதழ்களில் மிருதுவாய் தன்னை உடனே சேர்த்தாள் மழைக்குழலி.


“ஹாப்பியா இருக்கியா?” சத்தமின்றி அவள் காதுகளில் முனங்கியவனை பாரபட்சமின்றி தன் விழிகளால் விழுங்கியவள்,


“உங்க கூட இருக்கும்போது நான் எப்பவுமே ஹாப்பியா தான் இருப்பேன் அத்தான்” என்று கூறவும் கன்னங்களில் விழுந்து குவிந்த குழிகளுடன் ஆழமாய் புன்னகைத்தான் அமிழ்தினியன்.


“இவ்வளவு நாளும் என்னை சுத்தல்ல விட்டுட்டு… இப்ப நல்லாவே பேசுற டி நீ…”


“அத்தான்…” அதட்டலிட்டு அவனை அடக்கினாள் மனைவி.


“ஓகே ஓகே சரண்டர்…” என தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக தூக்கியவன், பின் அவள் கழுத்தில் மாலையாய் கோர்த்து,


“உன்னை அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கு ஜில்லு… அள்ளிக்கட்டுமா?” மயக்கமாய் அவள் கழுத்தினை வருடினான்.


“அள்ளுவிங்க அள்ளுவிங்க… நாம தனியா இல்லைங்கறதை மறந்துடாதிங்க…” ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தாள்.


அவளை விட்டு விலகி சென்று இருக்கையில் சாய்ந்தவன், “தனியா இருந்துட்டா மட்டும் அப்படியே அள்ளிக்க விட்றுவியா… போடி…” என சத்தமாக கிண்டலடித்தான். அவனுடைய கிண்டல் பேச்சினை கேட்டு இடுப்பில் கையூன்றிக் கொண்டு அவனை முறைத்தாள் குழலி.


“என்ன அள்ளணும்? என்ன அத்தான் எதை அள்ளிப் போறிங்க…” என கேட்டபடியே அவர்களின் அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் செங்கதிர்வேலன்.


எதிர்பாராத விதமாய் உள்ளே நுழைந்த தன் உடன்பிறந்தவனை கண்டதும் மழைக்குழலி விழித்துக் கொண்டு நிற்க, இதழ்களில் பொங்கிய குறும்பு சிரிப்போடு அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அமிழ்தினியன்.


குழலியின் முகத்தைப் பார்த்தே எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த வேலன், “ஸாரி, இன்னும் கீழ வரலையேனு அத்தானை தேடி வந்தேன். ஃபோன்ல பேசுறார்னு நினைச்சு உள்ள வந்துட்டேன் டி…” அவளை தான் இங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்ற செய்தியோடு அவளருகே வந்து அவள் கைகளைப் பிடித்தான்.


“இல்..இல்ல… வே…வேலா… அது அள்ள… அப்படின்னு எல்லாம்… அது வந்து… ஒன்னுமில்லடா”


தடுமாறிய மனைவியை ஆசைப் பொங்க ரசித்த அமிழ்தினியன், “ரிலாக்ஸ் ஜில்லு…” என்று வேலன் முன்பே சொல்ல, மேலும் அதிர்ந்துப் போய் நின்றாள் பெண்ணவள்.


'என்ன இது வேலன் முன்னால்?' என்ற குறிப்பு வேறு அவள் விழிகளில் தேங்கி நின்றது.


வேலனுக்கும் அதிர்ச்சி தான். அமிழ்தினியனின் புன்னகையிலும் அதில் அவ்வபோது பகிரப்பட்ட நேசத்திலும் சங்கடத்தோடு சங்கோஜம் கொண்டான்.


“நான் அப்பறம் வரேன்” என உடனே விடைபெற முயன்றவனை இழுத்து தன்னருகே அமர்த்திய அமிழ்தினியன், குழலிக்காகவும் ஒரு நாற்காலியை நகர்த்த, அவளோ முகம் நிமிராமல் சிலையாய் நின்றிருந்தாள்.


“அது ஒன்னுமில்லடா… நாளைக்கு சண்டேல… முன்னாடி நாம சோசியல் குரூப்ஸோட பீச் போய் அங்கிருக்கற வேஸ்ட் எல்லாம் கலெக்ட் பண்ணுவோம்ல. அதான் நாளைக்கு போய் வேஸ்ட் எல்லாம் எடுக்கலாம்னு பேசிட்டு இருந்தோம். அப்படியே நாம ஃபேமிலியா கொஞ்ச நேரம் வெளிய போன மாதிரியும் இருக்கும். மாமாவோட ஹெல்த் கண்டிஷனுக்கும் பீச் போனா அவருக்கு கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கும்ல… அதான் ப்ளான் பண்ணிட்டு இருந்தோம்” என அவனிடம் தெரிவித்தவாறே தன் மனைவியை தோளோடு அணைத்தபடி அழைத்து வந்து தன்னருகே அமர்த்தினான்.


“நாளைக்கு பீச் போய் குப்பை அள்ளணும்னு தான் நீங்க ரெயின் கிட்ட பேசிட்டு இருந்தீங்கனு நான் நம்பனும் இல்லத்தான்…” குறும்பு குரலில் இதழ் மடித்து வேலன் நக்கலாய் கேட்க, அவன் பேச பேச லஜ்ஜையுற்று தன் முகத்தை பக்கவாட்டாக திருப்பியவாறு வெட்க புன்னகை ஒன்றினை சிந்தினாள் மழைக்குழலி.


ஆண்கள் இருவருமே அவள் புன்னகையில் கரைந்துப் போய் அமர்ந்திருக்க, தன் எதிரே அமர்ந்திருந்த தமக்கையின் கைகளைப் பிடித்த வேலன், “ரொம்ப ரொம்ப அழகா இருக்க ரெயின். எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இரு டி…” அவள் கைகளில் அழுத்தம் கூட்ட,


தன் சகோதரனின் பாசமிகு வார்த்தைகளில் நெகிழ்ந்தவள், “கண்டிப்பாடா… உன் அத்தான் இருக்கும்போது எனக்கென்ன கவலை. இனிமே, நான் எப்பவும் சிரிச்சிட்டே தான் இருப்பேன். நீ எங்களை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு உன் வாழ்க்கைய பாரு. நீயும் பாவையோட சந்தோஷமா இருக்கறதை நாங்க பாக்கணும்” இருக்கையை விட்டு எழுந்து வந்து உரிமையாய் அவனை தோளோடு அணைத்துக் கொண்டாள்.


வெகு நாட்களுக்கு பிறகாக கிட்டிய அவள் தோழமை நிறைந்த அணைப்பில் கலங்கிய வேலன், “ரெயின்… ஐ மிஸ்ட் யூ சோ மச் டி… இனி இப்படி பண்ணாத டி. என்னால தாங்கவே முடியாது” என அதிகமாய் உணர்ச்சிவயப்பட, அமர்ந்திருந்தவனின் தலையில் தாடை பதிய இறுக்கமாய் ஒருமுறை தழுவி விலகியவள்,


“போய் சொல்லாத எரும… நான் இல்லைன்னு நீ கவலைப்பட்டியா? தொல்லை ஒழிஞ்சிதுனு பாவை கூட ஜாலியா டூயட் பாடிட்டு தானே இருந்திருப்ப…” வேண்டுமென்றே அவனோடு வம்பு வளர்க்க,


“போடி, நீ மட்டும் என்ன? அத்தானை பாத்தியா… சண்டப் போட்டியா… சமாதானம் ஆனியானு… கோபம் குறைஞ்சு உடனே கிளம்பி வருவனு பார்த்தா… அத்தானை அங்கேயே பிடிச்சு வச்சிக்கிட்டு அவரோட கொடைக்கானலை சுத்திட்டு ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வர. இனி எங்கயாவது போ… இருக்கு உனக்கு…” அவள் தலையில் நறுக்கென கொட்டியபடியே தன் முகத்தை சுருக்கி மிரட்டினான்.


அதுவரை இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் அமைதியாக வேலனின் பேச்சினை கேட்டிருந்த கணவன் மனைவி இருவரும் இறுதியாக அவன் கூறிய சொற்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, அவர்கள் இருவரையும் ஒருசேர முறைத்து வைத்தான் செங்கதிர்வேலன்.


“என்ன இரண்டு பேரும் எதாவது ப்ளான் போட்டு வச்சிருக்கிங்களா என்ன?” என்று அவர்களின் மனம் படித்தவனாய் சரியாய் விசாரிக்க,


“அது வந்துடா…” என துவங்கிய குழலியைக் கண்ணை காட்டிய அடக்கிய அமிழ்தினியன், “ஹ்ம்ம், என் மனசுக்குள்ள ஒண்ணு ஓடிட்டு இருக்கு. அது சரியா தப்பானு தெரியல. நான் கொஞ்சம் யோசிக்கணும்டா. எதுவா இருந்தாலும் நாளைக்கு சொல்றேன்… கிவ் மீ சம் டைம்” அப்போதைய மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பாது அமிழ்தினியன் அமைதியாக இருந்துவிட, வேலனுக்கும் அதற்குமேல் அவனிடம் தோண்டி துருவ மனம் வரவில்லை.
 
Last edited:
Messages
94
Reaction score
2
Points
8
அதன்பிறகு நேரம் போனதே தெரியாமல் மூவரும் பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்க, சற்று நேரத்திற்கு எல்லாம் அன்புவேந்தனும் பரிதிமாறனும் அவர்களோடு இணைந்துக் கொண்டார்கள். ஐவரும் ஒன்றாக அமர்ந்து இடைப்பட்ட ஒரு வருட கதைகளை எல்லாம் முழுதாய் பேசிமுடித்ததும், வழக்கம் போல ஆண்கள் அனைவரும் ஒன்றாக கூடி மழைக்குழலியை கலாய்த்துக் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.


அவர்களில் ஒருவனாய் அவள் கணவன் அமிழ்தினியனும் பங்கேற்று, கொடைக்கானலில் நிகழ்ந்தவைகளை கடைப்பரப்பி அவளை கலாய்ப்பதாகவும் சில நேரங்களில் அவளுக்கு ஆதரவு கரம் நீட்டுவதாகவும் இரண்டு கூட்டணியிலும் இடம் பெற்றுவிட, அந்த இடமே சிரிப்பலைகளால் நிறைந்தது. இவர்கள் ஐவரின் கூச்சலிலும் புன்னகையிலும் அதுவரை களையிழந்து வாடிய அவர்களின் இல்லம் மீண்டும் தன் உயிர்ப்பை அடைந்து மலர்ந்தது.


இவர்களின் அமர்களங்களில் மேல்தளத்திற்கு குதித்துக் கொண்டு வந்த சிறியவர்கள் அங்கிருந்தவர்கள் அனைவரையும் மீண்டும் விளையாட அழைக்க, சித்திரப்பாவையும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள். வேலனை பலிக்கெடாவாக வைத்து மீண்டும் துவங்கியது அவர்களின் கண்ணாம்பூச்சி ஆட்டம். இம்முறை ஒன்பது பேரும் உற்சாகம் பொங்க குஷியாய் களத்தில் இறங்க, பெரியவர்கள் வழக்கம்போல புன்சிரிப்புடன் அவர்களின் விளையாட்டை பார்வையிட்டனர்.


செந்தளிர், தாமரை, பூர்ணிமா, பொன்னி என பெண்கள் நால்வரும் இரவு உணவிற்கு தடபுடலாய் சைவ விருந்தினை தயார் செய்துக் கொண்டிருந்தனர். இரவு எட்டு மணி போல, விளையாடி முடித்து களைப்படைந்தவர்களோடு பெரியவர்களும் இணைந்து பேசி சிரித்தபடி மிகழ்ச்சியாய் அன்றைய இரவு உணவினை முடித்தார்கள். பின், பெரியவர்களோடு சிறியவர்கள் மூவரும் ஓய்வெடுக்க சென்றுவிட, மீண்டும் அங்கே கூடியது இளைஞர்களின் பட்டாளம்.


அதுவும் இப்போது நான்கு ஜோடிகளும் ஒன்றாய் அமர்ந்து பேச்சு, அரட்டை, விளையாட்டு என கேலி கிண்டல்கள் எல்லாம் முடித்து உறங்க செல்வதற்குள் மணி இரவு ஒன்றை கடந்திருந்தது. நெடு நாட்களுக்கு பிறகு ஒன்று கூடி, எந்தவித கவலையுமின்றி பேசி மகிழ்ந்ததாலோ என்னவோ மற்ற மூன்று ஜோடிகளும் படுத்த உடனே உறங்கி விட, வேலனுக்கும் பாவைக்கும் மட்டும் உறக்கம் சிறிதும் அண்டவில்லை.


இருவரும் மருத்துவமனையில் பேசிக் கொண்டதோடு சரி. மற்றபடி, தேவை என்றால் ஒழிய கணவன் மனைவி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை கூட கவனமாய் தவிர்த்தே வந்தனர். ஆனால், மழைக்குழலி வந்ததிலிருந்தே பாவையும் இங்கு தான் இருக்கிறாள். அதாவது வேலனின் அறையில் தான் தங்குகிறாள். அதனாலே, வேலனுக்கு பாவை மீது கோபம் துளிர்த்தது. தன் மனதினை உணர்ந்து அவளாகவே வரவேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு இது பெருத்த ஏமாற்றமே.


குறைந்தபட்சம், எதையேனும் தன்னோடு பேசுவாள் என பொறுமைக்காத்தவனுக்கு பரிசாய் கிட்டியது அவளின் மௌனமே. அதனாலே, அவள் மீதான ஏக்கங்கள் எல்லாம் கோபங்களாய் உருமாறி அவனை வதைத்துக் கொண்டிருந்தது. அமைதியும் பச்சாதாபமும் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்தது. இன்று, அதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனைவிக்காக காத்திருந்தான் செங்கதிர்வேலன்.


தண்ணீர் குவளையோடு உள்ளே நுழைந்த சித்திரப்பாவையின் விழிகள் தீவிர சிந்தனையோடு மெத்தையில் அமர்ந்திருந்த தன் கணவனின் குழப்பமான முகத்தை ஆராய்ச்சியாய் ஏறிட்டது. வேலனும் அவளை நிமிர்த்துப் பார்த்தபோது தன்னாலே விழிகளை வேறு இடத்திற்கு மாற்றினாள் பாவை.


கையோடு கொண்டு வந்திருந்ததை மேஜை மீது வைத்துவிட்டு இரவு விளக்கினை ஒளிர செய்தவள், குழல்விளக்கினை அணைத்து அவனை தாண்டி செல்லவும் அவள் கையினைப் பிடித்துத் தடுத்த வேலன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சார்ம்…” ஒரு முடிவோடு தான் இருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்லினான்.


“ம்ம்ம்” அவள் குரல் லேசாக கமறியது போல இருந்தது.


“இப்படி உட்கார்…” என அவள் கைப்பிடித்து தன்னேதிரே அவளை அமர வைத்தான்.


அறையில் கசிந்த மெல்லிய ஒளியில் அவள் முகத்தை ஊடுருவியவனின் பார்வை சத்தியமாய் கண்ணியமாய் இருக்கவில்லை. அதில், லேசாய் குளிர்ந்த மேனியை தன் கைகளைக் கட்டிக் கொண்டு அடக்கினாள் பெண்ணவள்.


தொண்டையை செருமிய வேலன், “எல்… க்கும்… நம்ப டீல்ல நீ தோத்துட்டனு ஒத்துக்குறியா?” என எடுத்ததுமே ஏடா கூடமாய் கேட்டுவிட, சுறுசுறுவென எகிறியது பாவையின் சினம்.


“என்ன டீல்?” எதுவுமே தெரியாது போல காரமாக வினவினாள்.


“அதான்… என் கூட இருக்க முடியலைனு இங்க இருந்துப் போனல… இப்ப திரும்ப வந்துட்டியே அதனால என் கூட வாழ விரும்பி…” அவன் முடிப்பதற்குள்ளேயே,


“அப்படின்னு நான் சொன்னேனே?” எதிர்வாதம் செய்தாள் பாவை.


“பின்ன?” முகம் இறுக பல்லைக் கடித்தவன், “பின்ன எதுக்கு டி இங்க வந்த?” என்று சீறினான்.


“ஹ்ம்ம், அவசியம் சொல்லணுமா?” அருகிலிருந்த தன் போர்வையை இழுத்து உடலில் சுற்றிக் கொள்ள முயன்றவளை தடுத்தவன்,


“சொல்லணுமானா? என்ன அர்த்தம்? என்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைக்கிறியா?” என அவள் கைகளை மீண்டும் மிருதுவாக பற்றினான்.


குனிந்து அதனை வெறித்தபடியே, “சொல்ல வேணாம்னு நான் நினைக்கல. சொன்னா நீ வருத்தப்படுவ… அதான் யோசிக்கிறேன்” என சுற்றி வளைத்தவளை பார்த்து பொறுமையிழந்தான் வேலன்.


“என்னனு சொல்லி தொலை டி. என்னை ஏத்துக்காம எதுக்கு டி இங்க வந்த… இங்க வந்தும் என்னை டார்ச்சர் பண்றதுக்கா?”


“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நம்ப குடும்பத்துக்காக தான் வந்தேன்…” சத்தமே இல்லாமல் அவன் தலையில் இடியை இறக்கினாள்.


“வாட்?”


“ஆமா, அண்ணா அண்ணி வந்துட்டாங்க. இப்ப எல்லாரும் மறுபடியும் ஒன்னு சேர்ந்தாச்சு. அப்ப நான் மட்டும் எப்படி அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க முடியும்… அதனால தான் நானும் இங்க வந்துட்டேன். எனக்கு பிடிக்குதோ இல்லையோ இனிமே இங்க தான் இருக்கப் போறேன்”


அவளின் ஒவ்வொரு அசைவுகளிலும் வார்த்தைகளிலும் எக்கச்சக்கமாய் இரத்தழுத்தம் ஏறியது வேலனுக்கு. தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவன் அவளையே அழுத்தமாக பார்த்திருந்தான்.


“இப்ப என்ன தான்டி சொல்ல வர?”


“அது…”


“என் கூட வாழ முடியாதுனு தானே சொல்லப் போற?”


“அப்படியில்ல… நீ என்னை நம்ப குடும்பத்துக்காக கல்யாணம் பண்ண. இப்ப நானும் அதே காரணத்திற்காக இங்க இருக்கேன்னு சொல்றேன். அவ்வளவுதான் ஜிம்மி…” இயல்பாக சொல்லிவிட்டு தன் தோள்களை குலுக்கிய மனைவியை என்ன செய்வது என்று தெரியாமல் வெறித்தான் செங்கதிர்வேலன்.


'பழி வாங்குறா ராட்சஸி' கைகளை பிசைந்துக் கொண்டு முனங்கியவனின் கண்கள் மீண்டும் வஞ்சனை இல்லாமல் அவளை ஆராதித்தது.


'இப்ப என்ன? நான் இறங்கிப் போகணும். அதுவும் என் சார்ம்கிட்ட தானே. இறங்கி போனா தான் என்ன? அவளே வரணும்னு ஆசை இருக்கு தான். ஆனா, நான் இறங்கி வரக் கூடாதுனு இல்லையே. அவ எவ்வளவு காயப்பட்டிருந்தா திரும்ப திரும்ப அந்த விஷயத்தையே நினைப்பா… ஹ்ம்ம், பொண்டாட்டி கால்ல விழுறதுல தப்பில்ல…’


ஒரு முடிவோடு அவளை முழுதாய் சுற்றியிருந்த போர்வையோடு அவளை தன்னை நோக்கி இழுத்தான். தன் தோளோடு சுற்றிக் கொண்டு இடை அணைத்தவன்,


“என்னடி வேணும் உனக்கு? நான் தப்பு பண்ணிட்டேன்னு ஒத்துக்கணும் அவ்வளவு தானே. ஒத்துக்குறேன் போதுமா… நம்ப கல்யாண விஷயத்துல நான் தான் அவசரப்பட்டு முடிவு பண்ணிட்டேன். உன்னை கேக்கல. உனக்காக எனக்காகனு எல்லாம் யோசிக்காம முடிவு பண்ணது தப்பு தான் போதுமா. அதுக்காக இன்னும் எத்தனை முறை தான்டி என்னை கொடுமைப் படுத்தப்போற…” அவள் முகத்தோடு முகம் பதித்து இதழ்களால் அவள் கன்னங்களில் கோலமிட, அவனுடைய இறுகிய பிடிக்குள் அடங்காமல் வளைந்து திமிறினாள் சித்திரப்பாவை.


“பச் சார்ம்… டோண்ட் யூ வான்ட் டூ ஹோல்ட் மீ…” அவள் கன்னம் தாங்கி, “எனக்கு தெரியும் நீ என்னை லவ் பண்ற… நானும் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு நல்லவே தெரியும் தானே டி. இன்னும் என்ன உனக்கு?” இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று பெரிதாய் ஈர்த்தது.


“என்னனு சொல்லு சார்ம்… நீ என்னை தவிர்க்கிறதை என்னால ஏத்துக்க முடியல டி. அதை கூட விடு, என்னால உன்னை அவாய்ட் பண்ணவே முடியல. அப்பப்ப சின்ன சின்ன ஹக், கிஸ் எல்லாம் வேணும்னு தோணுது. ஆனா, இப்பலாம் நீ என்னை ஏறெடுத்து கூட பாக்கக் கூட மாட்ற…”


“...”


“இன்னைக்கு எல்லாத்தையும் தெளிவா பேசிடனும். ஹாஸ்பிடல்ல அன்னைக்கு அவ்வளவு பேசினதுக்கு என்னை ஹக் பண்ணி ஒண்ணுமில்லனு நீ எனக்கு ஆறுதல் சொல்லுவனு எதிர்பார்த்தேன். முன்னாடி எப்படினு தெரியல இப்பலாம் உன்கிட்ட நான் நிறைய எதிர்பார்க்கிறேன். ஆனா உனக்கு தான் எதுவும் புரியல சார்ம்”


“...”


“ஃபேமிலிகாக்கனு சொன்னது தப்புதான். பட், நிஜமா உன்னை தவிர யாரை டி என்னால லவ் பண்ணிட முடியும். உன்னை தவிர யார்கிட்ட இவ்வளவு உரிமை எடுக்க முடியும் என்னால…” அவள் கழுத்தில் முகம் பதித்தவனின் இதழ்கள் அவன் அனுமதியின்றியே அவளில் அலைப்பாய்ந்தது.


இருவரிடமும் பேச்சில்லை. எத்தனை நெருங்கியும் அவள் இதழ்களை தீண்டும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அன்று போல், எதையேனும் சொல்லி தன்னை காயப்படுத்தி விடுவாளோ என்ற எண்ணத்தை விடவும் தங்களின் உறவினை குறித்த விமர்சனங்களை ஏற்க முடியாமல் திணறும் நிலை தனக்கு வேண்டாம் என்று நிறையவே தயங்கினான்.


அன்று சுயநினைவின்றி இருந்தவளிடம் தள்ளி நின்றவன் இன்றும் அவள் அனுமதிக்காக காத்திருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக பாவையின் விழிகள் செங்கதிர்வேலனை அணுஅணுவாய் தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்தது.


“ஐ மிஸ் யூ… ஏதோ என்னை சுத்தி இருக்கற எல்லாரும் ஹாப்பியா இருக்கற மாதிரியும் நான் மட்டும் தனியா இருக்கற மாதிரியும் ஃபீல் ஆகுது சார்ம். உனக்கு என்னோட ஃபீலிங் புரியுது தானே டி…” போர்வையை தாண்டி அவளை உணர துடித்தவனின் நிதானம் அவளை கரைக்க முயன்றது.


“எதாவது சொல்லு சார்ம். உனக்கு ஓகேவா? நான் உனக்கு ஓகே தானே?” கிசுகிசுப்பாய் அவள் காதோரம் கிறங்கினான்.


பேச வேண்டும் என்று நினைத்தவனின் எண்ணம் அவள் அமைதியில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறியது. அதை ஏற்பாளா இல்லையா என்பது தான் அவனுக்கு இப்போதிருக்கும் பெரும் குழப்பம். நிதானமாக தான் அவளை அணுகினான். எனினும், வார்த்தையால் சொல்லிவிட முடியாத விஷயங்களை செயல்களால் உணர்த்திக் கொண்டிருந்தான். எதிலும் துளியும் வேகமில்லை. அவனுடைய பிடியும் கூட அவளை உருக வைத்தது.


அத்தனை மென்மையையும் ரசனையையும் தருவித்தன வேலனின் நகர்வுகள். தன் உள்ளத்தின் உணர்வுகளை கூட அவளுக்கு நுணுக்கமாக தெரியப்படுத்தினான். தன்னுடைய ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.


“நீ நினைச்சது எல்லாமே உன் ஆசைபடியே நடந்துச்சு. இப்ப அடுத்தது நடக்கணும்னு நினைக்கற. இல்ல ஜிம்மி…”


தான் பேசியதிற்கும் அவள் பேசுவதிற்கும் இடையே இருந்த வேறுபாடுகளை அவன் மனம் அடுக்கும் முன், அவள் அடுத்தடுத்த வார்த்தைகளை அவன் மீது விஷமாய் வீசியிருந்தாள்.


“எனக்கு ஓகே தான் ஜிம்மி. உனக்கானு…”


நம்பவே முடியாத அதிர்ச்சியில் பட்டென அவளை உதறி தள்ளிவிட்டு எழுந்தவன் தன்னை அடக்கப் படாதபாடுபட்டான்.


“ஜிம்மி…”


“இஷ்ஷ்… எதுவும் பேசாத” சத்தமே இல்லாமல் மெலிந்த குரலில் தன் வாயில் விரல் வைத்து தலையாட்டி வேண்டாம் என மறுத்தான்.


“இல்லடா…”


“வேணாம். பேசாத. எதுவும் பேசாத” இதுவரை அவள் அறிந்திராத தோனி அவனிடம்.


தன்னை நிதானிக்க முடியாமல் அங்குமிங்குமாக நடை பயின்றான். என்ன செய்தும் உள்ளுக்குள் அடங்க மறுத்த காயங்களோடு தன் அறையை ஒட்டிய கதவினை திறந்த வேலன் அடுத்த நொடி சிறிதும் யோசிக்காமல் மேல் தளத்திற்கு சென்றுவிட்டான்.


அரை மணி நேரம் கடந்தும் அவன் கீழே வராததால் பாவையை பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏற்கனவே நள்ளிரவை தாண்டி விட்டது. அவன் முகமும் கோபத்தால் சூழ்ந்திருந்தது. மனமெங்கும் திரண்டு நின்ற குழப்பத்தோடு கீழேயே அமர்ந்திருக்க முடியாமல் சித்திரப்பாவையும் மேல் தளத்திற்கு செல்ல விரைந்தாள்.


உடலை துளைத்த பனிக்காற்று கூட அவனுக்கு இதம் சேர்ப்பதாக தெரியவில்லை. அங்கு பரவியிருந்த குளிருக்கு மாறாக அவன் உடலெங்கும் உஷ்ணம் பரவியது போல இருந்தது. அதன் வெப்பத்தில் கசங்கிட பிடிக்காமல் மேகக் கூட்டங்களுக்கு இடையே மறைந்த வெண்ணிலவை இமைக்காமல் வெறித்தான்.


“ஜிம்மி…” அவளுக்கு முதுகுக் காட்டி திரும்பி நின்றிருந்தவனின் இறுகிய தோள்களை தொட நீண்ட தன் கையினை அடக்கியவாறு அவனை அழைத்தாள்.


சில நொடிகளுக்குள் ஒன்றுமே நடக்காததை போல நிர்மலமான முகத்தோடு திரும்பியவன், “வேணாம் சார்ம். ஐ'ம் குட். நீ கீழ போ. நான் வரேன்” என இயல்பாக தெளிவான குரலில் கூறவும்,


“ஜிம்மி… அது…” என்றவளை,


“ஊஃப்… நீ இன்னும் என்னை உணரல சார்ம். என்னையும் என்னோட காதலையும் உணரும்போது என்கிட்ட பேசு. அதுவரைக்கும் ப்ளீஸ்…” அதற்குமேல் அவளை பேசவே விடாமல் கத்தரித்தவன் உடனே கீழே வந்துவிட்டான்.


வேறு எதுவும் அவளோடு பேச பிடிக்கவில்லை அவனுக்கு. பேசும் மனநிலையிலும் அவனில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு வரை முகம் கொள்ளா புன்னகையோடு சுற்றித் திரிந்தவனின் இந்த பாராமுகம் அவளை ஏனோ கவலையில் ஆழ்த்தியது. ஆயினும், என்ன செய்வதென தெரியாமல் பெருமூச்சோடு அவன் சென்ற பாதையை வெறித்தாள் பாவை.



- விருப்பம் தொடரும்





ஹாய் பூக்களே,


34 - வது அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்த்துக் கொள்ளுங்கள் நட்பூஸ்!



- அபிராமி இளவரசன்💓
 
Last edited:
Top