• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பூக்களை விரும்பா வேர்களில்லை - 33

Messages
94
Reaction score
2
Points
8
அத்தியாயம் - 33


இடைவிடாது பொழிந்துக் கொண்டிருந்தது வானம். விடாது பெய்த மழையால் அந்த மருத்துவமனையை சூழ்ந்தது உடலை துளைக்கும் குளிர்.


மழை என்றாலும் கூட அந்நிலையிலும் அந்த மருத்துவமனையை சுற்றிலும் திரளாய் வழிந்து ஓடியது மக்கள் கூட்டம். தேநீர் குடுவைகளையும் மருந்து கோப்பைகளையும் ஏந்திய கைகளுமாக முகத்தில் ஈரத்துடன் சிலர் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்தனர். உள்ளிருந்து வெளியேறியவாறும், வெளியிலிருந்து உள் நுழைந்தவாறும் மருத்துவமனை வாயிலை அடைத்திருந்தனர் சிலர். சில மருத்துவர்களும் செவிலியர்களும் கூட அதில் அடக்கம்.


பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த விடியல் நேரத்தை கண்ணாடி சுவர்களுக்கு பின்னால் நின்றிருந்தவாறு வெறித்துக் கொண்டிருந்தான் செங்கதிர்வேலன்.


சிரிப்பை தொலைத்த விழிகளுடன் வெளிறிய முகமாய் நடுங்கிய கரத்தினால் அருகிலிருந்த இருக்கையை இறுகப் பற்றியபடி வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றவனின் நினைவுகள் முழுவதும் தன் தந்தை கங்காதரனை சுற்றியே வலம் வந்துக் கொண்டிருந்தன.


சில மணி நேரங்களுக்கு முன்னால் தான் கண்ட அவருடைய நிலையில் அவன் இதயமே ஒரு நொடி துடிக்க மறந்து செயலிழந்துப் போனது. சிறு வயதிலிருந்து எத்தனை கம்பீரமாய் எத்தனை நிமிர்வோடு அவரை எப்போதும் கண்டிருக்கிறான். அதனாலேயே அவனுடைய ஒரு பாதி இதயமானது அவருடைய இந்நிலையை ஏற்றுக் கொள்ளவே முடியாது துவண்டது. மற்றொரு பாதியோ இறுதியாக அவர் கூறிய வார்த்தைகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.


சுயநினைவில்லாமல் கழிவறையிலேயே கங்காதரன் மயக்கம் அடைந்து விட்டார் என செந்தளிர் பதறி அடித்துக்கொண்டு வேலனையும் அன்புவேந்தனையும் அழைத்துப்போது மணி பத்தை கடந்திருக்கும். அந்த நேரத்தில் அவருக்கு என்னானதென ஒன்றும் புரியாமல் திடீரென்று ஏற்பட்ட மயக்கத்தால் சரிந்துக் கிடந்தவரை தூக்கிப் போட்டுக் கொண்டு வேலனின் மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு விரைந்தது.


இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பிறகான மருத்துவரின் சந்திப்பில் தான் அவருக்கு ஏற்பட்டிருந்தது மாரடைப்பு என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. ஆதி ஐயாவில் தொடங்கி வேலன் வரை அனைவருமே அதற்குள் ஒடுங்கிப் போய்விட்டனர். தலைவலி, காய்ச்சலை தவிர பெரிதாக மருத்துவமனைக்கு வந்திராத குடும்பத்தில், இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்பது முழுதாய் கலங்கி நின்றிருந்த அவர்களின் தோற்றத்திலிருந்தே புரிந்தது.


இதில் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவர் யாரும் எதிர்பார்க்காத விதமாய் முதலில் தேடியது வேலனை தான். அவரை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்த வேலனை தன் தளர்ந்த கைகளால் அருகிலழைத்தவர் விழிகளில் பெருகிய எதிர்பார்ப்புடனும் பெரும் மனஉளைச்சலுடனும் கூறியவையே அவன் மூளைக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன.


“வே..லா… நா..நா..ன்… என..க்கு… குழலிய… பாக்க..ணும்பா… கடைசியா… ஒரே.. ஒரு தடவை… அவ..வள பாக்கணும். இனி..யனை வர சொல்லு வேலா… அவன்கிட்ட நா..ன் மன்னிப்பு கேக்கணும்… ரெண்டு பேரை..யும் என்…னால பாக்க முடியாம போயிருமோனு… அதா..ன்…” பாதி முகத்தை மறைத்தபடி செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில் தெளிவாக பேச முடியாமல் உடைந்து ஒலித்தவரின் குரல் அவனை முன்னிலும் பெரிதாய் பயமுறுத்தியது.


முதற்கட்ட மாரடைப்பு தான் எந்தவித பயமும் வேண்டாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தும் தன் தந்தையின் நிலையைக் கண்டு பெரிதும் உடைந்துப் போய் நின்றிருந்தான் செங்கதிர்வேலன். அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடனே அமிழ்தினியனுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்திருந்தான்.


“ஜிம்மி….” கவலையால் சூழ்ந்திருந்த அவன் முகத்தை பார்த்தபடியே அவன் எதிரில் வந்து நின்றாள் சித்திரப்பாவை.


“ஜிம்மி… மாமாக்கு ஒண்ணுமில்ல. மைனர் அட்டாக் தான். சீக்கிரம் சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கல இன்னும் ஏன் நீ இப்படி இருக்க?”


பதிலின்றி வெளியே வேடிக்கைப் பார்த்தவனின் முகவாயை தொட முயன்றவளை தவிர்த்தபடியே வேறு பக்கம் திரும்பினான் வேலன்.


“ஜிம்மி… என்னாச்சு?” அவன் முகத்திருப்பலில் அதிர்ந்து விழித்தாள் பாவை.


“நத்திங் சார்ம்…” விட்டேற்றியாய் வந்தது வேலனின் பதில்.


“என…க்கு புரியுது ஜிம்மி… இருந்தாலும் நீயே இப்படி இருந்தா எப்படி…”


தன் கால்சராய் சட்டைப்பைக்குள் கைவிட்டபடியே திரும்பி இவளை ஆழ்ந்து நோக்கியவன், “என்ன புரியுது உனக்கு?” என மெல்லிய கோபம் இழையோடும் குரலில் வினவியது மட்டுமின்றி ஏதோ சொல்ல வந்து நிறுத்தியவன், “உனக்கு என்னை புரியல சார்ம்… புரிஞ்சிருந்தா… ஹ்ம்ம்…” பெருமூச்சோடு சற்று பின்னால் விலகி நின்றான்.


பாவைக்கு சட்டென முகம் மாறிவிட்டது. இதுவரை வேலனை இப்படி இடிந்து போய் அவள் பார்த்தது கிடையாது. மற்றவரின் நிலையை ஏற்றுக் கொண்டவளால் வேலனின் முகம் மாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் அவனோடு தனியாக பேச முயன்றாள்.


கங்காதரனின் உடல்நிலையில் எந்த பின்னடைவுகளும் இல்லை எனினும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதனால் தங்கள் வீட்டின் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு வேலனை காணவென பாவை விரைந்து ஓடி வந்திருந்தாள்.


ஆனால், அவனுடைய பேச்சிலிருந்த ஏதோ ஒன்று அவளை சட்டென எட்ட நிறுத்தியது போல இருந்தது. முந்திய தன்னுடைய செயல்கள் அவனுக்கு அதிருப்தி அளித்தது உண்மை தான் எனினும் இப்போதும் கூட எது அவனை போட்டு அழுத்துகிறது என்று தெரியாமல் பேசில்லாமல் திணறிப் போய் நின்றாள்.


“எல்லாரும் வீட்டுக்கு போயாச்சா?” எதிரே தெரிந்த வாகனங்களை பார்வையிட்டவாறே வேறு பேச்சிற்கு தாவினான் வேலன்.


“ஹ்ம்ம், ஐயா அன்னமோட அண்ணியும் பூர்ணி அக்காவும் குழந்தைகள கூட்டிட்டு கிளம்பிட்டாங்க… அம்மாவும் எல்லாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் பண்ணி எடுத்துட்டு வரேன்னு கிளம்பி இருக்காங்க…”


“பச், உங்க அப்பா கிளம்பிட்டாரா இல்லையா?” சிடுசிடுவென நெற்றியை வருடினான்.


'அதென்ன ஜிம்மி உங்க அப்பா? ஏன் மாமானு சொல்றதுக்கு என்ன?' வாய்வரை வந்துவிட்ட கேள்வியை அவன் நிலை கருதி மென்று விழுங்கியவள், “எங்க அப்பா எப்படி போவாரு ஜிம்மி… அவர் இங்க தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கிறார். அத்தை கூட தான் உட்காந்து இருக்கார்… அவங்களுக்கும் ஒரு ஆறுதலா ஹெல்ப்பா இருக்கும்ல…” சற்றே சத்தமாய் சொல்லியவளை வெடுக்கென திரும்பிப் பார்த்து,


“அதுக்கு தான் நான், அன்பா, மாறனத்தான் இருக்கோமே…” என சொல்லி நிறுத்தியவன்,


“நீ அவரை இங்கிருந்து கூட்டிட்டு போ… அப்பறமா இன்னைக்கு ஈவ்னிங் வேணா வர சொல்லு…” என்றான் யோசிக்காமல்.


“ஜிம்மி…” கத்தரித்து பேசியவனின் அசட்டையான பேச்சில் சினம் பொங்க அவன் முன்பாக வந்தவள், “என்ன பேசுறனு யோசிச்சு தான் பேசுறியா? விஷயம் கேள்விப்பட்டு நடு ராத்திரினு கூட பாக்காம எங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்தவரு… இன்னும் பச்ச தண்ணி கூட குடிக்காம அங்க உட்காந்து இருக்கார். மாமாவ பாக்காம இங்கிருந்து எங்கையும் நகர மாட்டேன்னுட்டார். அவரை போய் நான் எப்படி கூட்டிட்டு போறது. நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஜிம்மி…” வறண்ட நாவை ஈரமாக்கியவளின் விழிகளும் மினுமினுப்புடன் லேசாய் கலங்கியது.


இப்படி எடுத்தெறிந்து பேசுபவன் இல்லையே வேலன். ஏனென்றே தெரியாமல் அவன் முகத்திலும் வார்த்தையிலும் விரவியிருந்த சூட்டில் அடிவரை பொசுங்கியது பாவையின் மனம்.


தலையை அழுத்தமாக கோதிய வேலனின் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என அவனால் ஊகிக்க முடியவில்லை என்பதால் அவனும் கலங்கி போய் நின்றான்.


பின் தெளிவான முகத்தோடு முடிவெடுத்துவிட்டவனாய் நிதானித்து, “சார்ம்… அத்தானும் ரெயினும் வருவாங்க… அதனால தான் சொன்னேன்…” அவள் விழிகளில் குடியேறியிருந்த ஏதோ ஒன்றில் மெல்ல தடுமாறியது வேலனின் வார்த்தைகள்.


“என்ன? அண்ணாவும் அண்ணியும் வராங்களா?” என பெரிதும் அதிர்ந்தவள், “நீ ஏன்டா இதுக்குள்ள அவங்களுக்கு சொன்ன?” புரியாமல் விழிகளை விரித்தாள்.


சலிப்பாக தன் வலது கையினை மடக்கி காற்றில் வீசியவன், “வேற என்ன பண்ண சொல்ற? எப்பனாலும் அவங்களுக்கும் தெரிய தானே போகுது. நானும் கொஞ்சம் வெயிட் பண்ணி சொல்லலாம்னு தான் இருந்தேன். அப்பா பாக்கணும்னு கேட்டுடார் அதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்…” என இயம்ப,


“இருந்தாலும்… நீ ஒரு ரெண்டு நாளைக்கு அப்பறம்…” தன் நிலையை தெரியப்படுத்தியும் பாவை இழுப்பதை கண்டவன்,


“சார்ம்… இப்ப பேசி எதுவும் ஆகப்போறதில்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்கனு நினைக்கறேன். மாமா இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சனை வரும்…” என்றான் இம்முறை எதையும் மறைக்காமல்.


யோசனையில் சுருங்கிய முகமாய் சில நிமிடங்கள் அமைதியாக நின்றுவிட்ட பாவை, “இன்னைக்கு இனியன் அண்ணனோட கல்யாண நாள் ஜிம்மி…” ஒருவித தெளிவான மலர்ச்சியுடன் மொழிந்தாள்.


“பச்” என அசட்டையாக முகம் திருப்பியவனை தீர்க்கமாய் எதிர்கொண்டவள், “அண்ணனும் அண்ணியும் வரும்போது எல்லாரும் இங்க இருக்கட்டுமே ஜிம்மி. அவங்களை யார் என்ன சொல்லிட போறாங்க. எனக்கு என்னவோ எல்லா பிரச்சனையும் இன்னியோட முடிஞ்சிரும்னு தோணுது…” என நம்பிக்கையில் மிளிர்ந்து கூறிய தொனியில் வேலனின் மனமும் கூட 'அப்படியும் நடக்குமோ?' என ஆவலோடு காத்திருக்க துவங்கியது.


காலை பத்து மணி போல, அதிகாலையில் வீட்டிற்கு சென்றிருந்த அனைவரும் சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குழந்தைகளை மட்டுமாவது விட்டுவிட்டு வந்திருக்கலாமே என வேலன் கேட்டது கூட கேட்பாரற்று காற்றோடு தான் மறைந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட மற்றவர்களுக்கும் காலை உணவினை கொண்டு வந்திருந்தார் தாமரைச்செல்வி.


இரவு இங்கு வந்தபோது எப்படி அமர்ந்திருந்தாரோ அப்படியே தான் இப்போது வரை அமர்ந்திருந்தார் குருமூர்த்தி. அங்கிருந்த ஒருத்தரையும் நிமிர்ந்து பார்க்கக் கூடவில்லை. மரியாதைக்குரிய தன் ஐயா அம்மாவின் முகத்தை கூட அவரால் எதிர்கொள்ள முடியாமல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். அவருடைய மனதிற்குள் தன் நண்பனின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்ற பலத்த சிந்தனை ஒன்றினை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.


குருமூர்த்தியை தவிர அனைவரும் உண்டு முடித்துவிட்டனர். செந்தளிரை கூட பாவை சரிக்கட்டி உண்ண வைத்திருந்தாள். மருந்துகளின் உதவியோடு உறக்கத்திலிருந்த கங்காதரனை வெளியிலிருந்தே கண்டுவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொன்னியும் பூர்ணியும் அங்கிருந்து கிளம்பிவிட, குருமூர்த்தியின் அருகே வந்து அமர்ந்தார் ஆதி பகவான் ஐயா.


“மூர்த்தி… என்னப்பா இது? சின்ன குழந்தை மாதிரி அடம் பண்ணிக்கிட்டு. கங்கா இப்ப நல்லாதான் இருக்கான். நீ வந்து ஒரு வாய் சாப்டுப்பா…” என ஆறுதலாய் குருமூர்த்தியின் தோள் பற்றினார் ஆதி பகவான் ஐயா.


மற்றவர்களின் கவனம் இவர்களிடம் இருந்தாலும் கண்டும் காணாது போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.


அதுவரை இறுகிய முகத்தோடு யாரையும் நிமிர்ந்துப் பார்க்காமல் அமர்ந்திருந்த குருமூர்த்தி ஆதி பகவான் ஐயாவின் கரத்தை பற்றி ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டார்.


“ஐயா… என்னை மன்னிச்சிடுங்க ஐயா… எல்லாம் எங்க தப்பு தான். அன்னைக்கு உங்களை என்னலாம் பேசிட்டேன். கங்காவையும் எவ்வளவு அவமானபடுத்தினேன். எல்லாம் என்னால தான் ஐயா. கங்காவோட இந்த நிலைக்கு நான் தான் காரணம் ஐயா… என்னை மன்னிச்சிடுங்க ஐயா… தப்பெல்லாம் எங்க மேல தான். இனியனும் நானும் தான்…” என தன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்றவரை வேகமாய் இடையிட்ட வேலன்,


“மாமா… அன்னைக்கு கண்டபடி பேசினது நீங்களும் அப்பாவும் தான். இதுல எதுக்கு இப்ப என் அத்தானை சேர்க்கறீங்க?” என்று அமிழ்தினியனை பேசக் கூடாது என கோபமாய் கேட்க,


முன்தாழ்வார பகுதியிலிருந்து, “வேலா…” என அதட்டலாய் ஒலித்தது ஒரு குரல்.


தன் செவிகளை நிறைத்த குரலிலிருந்தே யாரென அடையாளம் கண்டுக் கொண்ட வேலன் ஆறுதலான புன்சிரிப்புடன் திரும்ப, மற்ற அனைவரும் கூட சத்தம் வந்த திசையினை நோக்கி ஆவலுடன் திரும்பினால், அங்கு மழைக்குழலியோடு இணைந்து நின்றிருந்தான் அமிழ்தினியன்.


கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பிறகு, அமிழ்தினியனையும் மழைக்குழலியையும் கண்டதும் பெரியவர்களின் விழிகளில் திரண்டு நின்ற நீரோடு அனைவரின் இதழ்களிலும் தேங்கியது அழகான புன்முறுவல். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் தங்கள் விழிகளுக்குள் நிறைந்துக் கொள்ள தவிக்க, வேலன் ஓடி சென்று தன் அத்தானை அணைத்துக் கொண்டான்.


அவன் பின்னோடு ஓடி வந்த சித்திரப்பாவையும் விழிகளில் வழிந்த புன்னகையோடு மற்றொரு பக்கமாய் அமிழ்தினியனை தோளோடு அணைத்துக் கொள்ள ஆதரவாய் அவள் தலை கோதிய அமிழ்தினியன் மற்றொரு கையால் அருகிலிருந்த தன் மனைவியின் கரத்தினை விடாமல் இறுகப் பற்றிருந்தான்.


அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு சிறியவர்களின் ஒற்றுமையை கண்டு மனம் குளிர்ந்த போதிலும் அவர்களின் இணக்கத்தை பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.


அன்புவேந்தனும் பரிதிமாறானும் குழலியையும் இனியனையும் மாறி மாறி பார்த்தவாறே அவர்களுக்கு வெகு அருகில் வந்து நிற்க, அமிழ்தினியனின் முழு கவனமும் தன் தந்தையிடமே இருந்தது.
 
Messages
94
Reaction score
2
Points
8
என்ன முகாந்திரம் என எதுவும் அறிந்திராத மழைக்குழலியின் விழிகள் படபடவென அலைந்து திரிந்து சுற்றத்தை அலசியதால் உணர்ந்துக்கொண்ட விஷயத்தில் அவள் உள்ளம் பதறியது. ஒவ்வொருவரின் முகமாக தொட்டு மீண்டவளின் இமைகள் ஒன்றை ஒன்று அழுத்தமாய் தழுவ, அவள் விழிகளிலிருந்து சூடாய் இறங்கியது கண்ணீர் துளிகள்.


“யாருக்கு என்ன? அப்..அப்பா எங்க?” என செய்வதறியாமல் தழுதழுத்தவளின் கரங்களின் இரண்டும் அமிழ்தினியனின் முழங்கையை இறுக்கமாய் பற்றிக்கொள்ள பக்கவாட்டில் திரும்பி தன்னவனின் முகத்தை அளந்தவள், “அத்தான்… அப்பாவுக்கு… என்னாச்சு? ஏன் ஹாஸ்பிடல்ல…” மேலும் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்த, அவர்களுக்கு முன்னால் நின்றிருந்த ஆண்களின் புருவங்கள் தங்களின் நெற்றிப் பொட்டைத் தொட்டு மீண்டது.


“அப்பாவுக்கு மைல்ட் அட்டாக் குழலி. இப்ப நார்மல் ஆகிட்டார். பயப்பட ஒண்ணுமில்லடி…” என்ற அன்புவின் கரங்கள் மேலெழுந்து பாசமாய் அவள் கன்னம் வருடி,


“உனக்கு யார் சொன்னது? இப்படி பதறியடிச்சுக்கிட்டு ஓடி வந்திருக்க… வா முதல்ல வந்து உட்கார்…” என அவளின் கரம் பற்றி தன்னுடன் இழுக்க,


“நிஜமாவா அன்பா… அப்பா இப்ப நல்லா இருக்காரா? நீ அவர்கிட்ட பேசினியா? டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க? எதனால அவருக்கு இப்படியாச்சு… என்..னா..ல தானோ… நா..நான் தான் அவரை ரொம்ப… கஷ்டப்படுத்தி…” கண்களில் மறைத்து வைத்திருந்த மொத்த கண்ணீரும் விடாமல் பொழிந்துக் கொண்டிருக்க அவள் பேசியதை கேட்டு அனைவரின் விழிகளும் துக்கத்தில் வாடியது.


“ரெயின்..” “குழலி” என அனைவரும் அவளருகே பதட்டமாய் முன்னேற அவளுடைய முகமோ கணவனின் பார்வையையே தாங்கி நின்றது.


மெல்ல மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிய அமிழ்தினியன் தன் மனைவியின் புறமாக திரும்பி அவள் விழிகளை கூர்ந்துப் பார்த்தவாறே, “பீ காம் ஜில்லு… மாமாவுக்கு எதுவும் ஆகாது. அவர் உடல்நிலை சீக்கிரமே சரி ஆகிடும். இனி அவரை நல்லா பாத்துக்க வேண்டியது நம்ப பொறுப்பு” மெல்லிய தூறலை தாங்கிய குரலோடு அவளை தேற்றியவன், தன் தலையை இடவலமாக அசைத்து 'அழக் கூடாது' என விழிகளால் மிரட்டினான்.


அதே சமயம் கங்காதரனின் அறையிலிருந்து வெளியே வந்த செவிலியர் அவர் விழித்துக் கொண்டதை தெரிவித்துவிட்டு செல்லவும் செங்கதிர்வேலன், “அத்தான்… நீங்க முதல்ல ரெயின கூட்டிட்டு போய் அப்பாவ பாத்துட்டு வாங்க…” என சொல்லியபடியே அவன் முன்னால் செல்ல,


தன் தந்தையின் நலிந்த தோற்றத்தை வருடி சென்ற அமிழ்தினியனின் விழிகள் வேலனை நோக்கி திரும்ப, “இல்ல வேலா… ஐயாவும் அப்பாவும் முதல்ல போய் பார்க்கட்டும்…” என்றவாறே தன் அத்தையை ஏறிட்டவன், “அத்தை நீங்களும் கூட போயிட்டு வாங்க… நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாக்கறோம்…” என உறுதியாய் கூறவும்,


“இல்லத்தான். அப்பா தான் உங்களையும் ரெயினையும் பாக்கணும்னு…” என்றிழுத்த வேலனின் வார்த்தைகள் அமிழ்தினியனின் பார்வையால் தடைப்பட்டு நின்றது.


எந்தவித மறுப்புமின்றி சில நிமிடங்களில் அவர்கள் மூவரும் அறைக்குள் சென்று மறைய, இன்னும் சில மணி நேரங்களில் கங்காதரனை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு மாற்றி விடலாம் என சொல்லி சென்றார் மற்றொரு செவிலியர்.


“எப்படி இருக்கீங்க குழலி?” அங்கு நிலவிய கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது தாமரைச் செல்வியின் கேள்வி. கேள்வி என்னமோ மருமகளிடம் இருந்தாலும் அவரின் கவனம் எல்லாம் தன் செல்ல மகன் அமிழ்தினியனின் மீது தான் இருந்தது.


அவர் கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதியாக நின்றிருந்த கணவனை தழுவிய மனதோடு, “ஹ்ம்ம்… இருக்கோம் அத்தை” என பதிலளித்தாள் மழைக்குழலி.


“உங்க ரெண்டு பேரையும் நாங்க இப்படி ஒரு சூழ்நிலையில தான் மறுபடியும் பாக்கணுமா?” என அருகே அமர்ந்திருந்த அன்னலட்சுமி அம்மாள் மனதே இல்லாமல் கூறிட, அவரருகே வந்தமர்ந்த அமிழ்தினியன்,


“இப்ப என்னவாம் அன்னத்துக்கு? அதான் நாங்க வந்துட்டோமே… ஏன்டா இவ்வளவு நாள் வரலனு இந்நேரம் என் காதைப் பிடிச்சுத் திருகி இருக்க வேணாவா… அதைவிட்டுட்டு இதென்ன சோகமா உட்காந்து இருக்க? ஏன் உன்னையும் நாங்க உள்ளப் போக விடலனு கோவமா?” என மெல்லிய குறும்பு குரலில் அவரை வம்பிழுக்க,


“நான் ஏன்டா அதுக்கு கோவப்படப் போறேன்? என் கோபம் எல்லாம் உன்மேல தான். இத்தனை நாளுக்கு அப்பறம் தான் எங்க ஞாபகம் வந்துச்சா உனக்கு?” சுருங்கிய முகமாய் வெடுக்கென முறைத்தார் அவனை.


“ஓஹோ… அப்ப மேடம் கோவமா தான் இருக்கீக? ஆமா, நீ ஏன் கோவமா இருக்க. நியாயமா நான் தான் உன் மேல கோவமா இருக்கணும்? என் மாமானர நல்லா பாத்துக்கறதை விட அப்படி என்ன வேலை உனக்கு? எப்பவும் போல உன் வீட்டுக்காரரை தான் பாத்துக்கிட்டியா அன்னம் நீ?” அவனும் விடாமல் விளையாட்டாய் கேட்டுக் கொண்டே இருந்தான்.


அவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் மனதும் அந்த சூழலிலும் லேசாய் மாறிட, அதுவரை அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையே முற்றாய் மாறிவிட்டது.


வேலனோ, 'இதற்கு தான் தன் அத்தான் வேணுமுன்றது' என்பது போல அருகே நின்றிருந்த தன் அண்ணனின் முகத்தை மிதப்பாய் பார்த்து வைக்க, அன்போ இவனை காணாதது போல வேண்டுமென்றே வேறு பக்கமாய் முகம் திருப்பினான்.


“எப்பா… இனியா… நீ இல்லாம இத்தனை நாளும் நம்ப வீடு வீடாவே இல்லப்பா… இப்ப தான் மனமே நிறைஞ்சு இருக்கு…” என அவன் கன்னம் வருடி அன்னலட்சுமி அம்மாள் கூறிட,


“இதென்னப்பா வம்பா இருக்கு… அதுக்குன்னு என்னால உன் கூடவே உட்கார்ந்திருக்க முடியுமா.. என் பொண்டாட்டி என்னை கோவிச்சிக்க மாட்டா…” என இதழ்கள் தாண்டிய புன்னகையை வாய்க்குள் அதக்கி,


“இதோ… ஏதொரு கோவத்துல அவ என்மேல கோவிச்சிக்கிட்டு போயிட்டானு சமாதானப்படுத்தி அவளை கூட்டிட்டு வரவே எனக்கு ஒரு வருஷமாகிடுச்சு… இதுல நான் உன் கூட இல்லனு தான் உனக்கு கவலையாக்கும்?” என்று மூக்கை வளைத்து நொடிக்க, அவனுடைய புன்னகை மற்ற அனைவரின் முகங்களிலும் தொற்றிக் கொண்டது.


நடந்த அனைத்தையும் இதைவிட அழகாய் சொல்லிவிட முடியுமா? இதையும் விட எளிதாக யாராலும் நடந்தவைகளை எடுத்துக்கொள்ள முடியுமா? அத்தனை அர்த்தமற்ற பேச்சுகளுக்கும் நிதானமற்ற சண்டைகளுக்கும் இப்படி ஒருவன் வேண்டும் அத்தனையையும் எளிதாய் எடுத்துக்கொள்ள, அனைத்தையும் சரிசெய்துவிட்டு மகிழ்ச்சியை முழுதாய் மீட்டெடுக்க.


மழைக்குழலி மெல்ல அவனருகே வந்து நின்றுக் கொண்டாள். வாஞ்சையில் பொங்கி வழிந்த நேசத்தோடு அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் பெண்ணவள். நெற்றியில் வழிந்த வியர்வையோடு ஜொலித்த முகமாய் அமர்ந்திருந்தவனின் விழிகள் மட்டும் ஏகத்திற்கும் சிவந்திருந்தது. மூன்று நாட்களின் உறக்கமின்மையால் இருக்கக் கூடும் என அனுமானித்துக் கொண்டது அவள் மனம். ஆனால், அவளுக்குமே தெரியும் அது அவனுடைய மனவலியால் என்று.


என்னதான் வெளியே சிரித்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவன் உள்ளம் சுமந்திருக்கும் வலியை அவன் மட்டுமே அறிவான். அதன் பக்கங்களை யாரிடமும் காட்ட அவனுக்கு மனதில்லை. அதிலும், தனக்காக இத்தனை நாட்கள் துயரை அனுபவித்த இவர்களிடம் காண்பிக்க சுத்தமாய் அவனுக்கு மனதே வரவில்லை. அதனாலேயே அனைவரிடமும் எந்த சுணக்கமும் இல்லாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.


“என்னடி அத்தானை சைட் அடிக்கிறியா?” குழலியின் விடாத பார்வையில் அவளை கண்டுக் கொண்டான் வேலன்.


“ஹ்ம்ம்… ஆமா…” என்று உடனே ஒப்புக் கொண்டாள் இனியனின் மனையாள்.


“என்ன ரெயின் சட்டுனு சரினுட்ட?”


“ம்ம்… அவரோட மச்சான் நீயே அவரை விடாது சைட் அடிக்கும்போது அவரோட பொண்டாட்டி நான் ஏன்டா சைட் அடிக்கக் கூடாது…” சற்றே அவன் பக்கமாய் சரிந்து வேலனின் காலை வாரினாள் மழைக்குழலி.


“ஹிஹி… அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா…” என வெட்கமே இல்லாமல் சிரித்தான் வேலன்.


“எனக்கு மத்தவங்களை பாத்தெல்லாம் பயம் இல்லடா. உன்னை பாத்தா தான் லைட்டா பயமா இருக்கு…” சிந்தனை சுமந்த வதனத்தோடு கூறியவளை ஏறிட்டவன்,


“ஏன் ரெயின்? நான் என்ன பண்ணேன்? என்னை பாத்து ஏன் டி பயம் உனக்கு?” புரியாமல் கேட்க,


“ஹ்ம்ம்… நான் அசந்த நேரமா பாத்து என் அத்தானை நீ இழுத்துட்டுப் போய்ட்டா…” தீவிரமான குரலில் கூறியவள், “அந்த பயம் தான்டா எனக்கு” என சிரித்தவாறே மொழிந்தாள்.


முதலில் புரியாமல் விழித்தவன் பின் புரிந்ததும், “அடிப்பாவி… இரு உன்னை… வீட்டுக்கு போய் வச்சுக்கறேன். நிறைய இருக்கு உனக்கு. என்னை எப்படியெல்லாம் கதறவிட்டிருக்க தெரியுமா? நீ பயந்துட்டே இரு… அப்பாவுக்கு சரியானதும் இருக்கு உனக்கு…” என்று பல்லைக் கடித்தான்.


அன்புவேந்தனும் பரிதிமாறனும் மனதிற்குள் எதையோ யோசித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்துக் கொள்ளவும் இல்லை தள்ளி நிற்கவும் இல்லை. அவர்கள் ஐவரும் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டே அமைதியாக நின்றிருந்தார்கள். அன்புவிற்கு அமிழ்தினியன் மேல் முன்பிருந்த கோபம் இப்போது இல்லை.


முன்பே தங்கள் வீட்டினர் சொல்லி அறிந்திருந்தாலும், இன்று இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு நின்ற காட்சியும், தொட்டத்திற்கெல்லாம் அடிக்கடி அமிழ்தினியனின் முகம் பார்த்து நிற்கும் குழலியின் பாங்கிலும் அவர்களுக்கு நிறையவே புரிந்துப் போனது. கணவன் மனைவியின் உறவினை பற்றி தெரிந்த அனுபவஸ்தர்களுக்கு அவர்களின் இணக்கம் புரிந்தது. இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகியிருக்கக் கூடும் என்பதும் புரிந்தது. ஆனாலும், இருவரும் மௌனம் காத்து வந்தனர்.


அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அமிழ்தினியனும் இல்லை மழைக்குழலியும் இல்லை. உள்ளே சென்றிருப்பவர்களின் எண்ணம் மட்டுமே அவர்களுக்குள். அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நொடிக்கு நொடி எகிறிய பதட்டத்தோடு காத்திருந்தார்கள். நிலத்தில் ஊன்றிய காலினை மேலும் கீழுமாய் தட்டியபடி இனியனும், நகத்தைக் கடித்தபடி குழலியும் நிதானமின்றி பரிதவிப்பதை கண்டுக் கொண்ட வேலன் பாவைக்கு கண்ணைக் காட்டியவாறு அமிழ்தினியனுக்கு அருகில் வந்து வந்தான்.


“எப்ப கிளம்பி வந்தீங்களோ அத்தான் எதுவும் சாப்ட்டிருக்க மாட்டீங்க… அத்தை டிஃபன் எடுத்துட்டு வந்திருக்காங்க. சாப்டுங்க அத்தான்… ரெயின் நீயும் வா… வந்து சாப்டு…” என்று சற்று சத்தமாகவே அழைக்க, நிமிர்ந்துப் பார்த்து அவனை நன்றாக முறைத்தான் அமிழ்தினியன்.


“அப்பா நல்லா தான் இருக்காங்க அத்தான்… இதுக்கு முன்ன கண்ணு முழிச்சப்ப என்கிட்ட நல்லா தான் பேசினார்…” என்று அவனை இயல்பாக்கும் பொருட்டு நல்லவிதமாய் வேலன் கூறியபோதும் அவனுடைய முகம் இன்னும் தெளியவில்லை.


உள்ளே சென்றிருந்த மூவரும் திரும்பி வருவதற்காக அனைவரும் காத்திருக்க, அதற்குள் கங்காதரனை வேறு அறைக்கு மாற்றுவதற்கான வேலைகள் எல்லாம் நடந்து முடிந்தது.


குருமூர்த்தியும் கங்காதரனும் வேறு இவ்வளவு நேரம் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்படவில்லை. சிறியவர்கள் ஒருவராவது உடன் சென்றிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் இப்போது புதிதாய் உறுத்தியது.


அதற்கெல்லாம் அவசியமே இல்லாதது போல அவர்கள் இருவரும் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர். ஏதோ ஒரு காரணத்திற்காக இடையில் ஏற்பட்ட நட்பின் பிளவு இன்று மீண்டும் ஒருங்கிணைந்து பல வர்ணங்கள் பூசியது.


தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் ஊஞ்சலாடிய உணர்வுகள் கட்டவிழ்ந்து நண்பர்களை மீண்டும் இணைந்திருந்தது. காலத்திற்கும் நிலைத்திருக்குமாறு செதுக்கப்பட்ட நட்பென்னும் ஓவியம் இன்று உயிர்ப்போடு வளம் வருகிறது.


யார் முதலில் துவங்கியது, யார் முந்திக் கொண்டு மன்னிப்பு யாசித்தது என்றெல்லாம் அவர்களுக்கே நினைவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் கண்டதும், இருவரின் விழிகளுமே அவர்களின் பாசத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது. மன்னிப்பு என்ற வார்த்தைக்குக் கூட அவர்களுக்குள் தேவை இருக்கவில்லை.


எல்லாம் பேசி முடித்து, தன் நண்பனின் நலத்தை நேரடியாக விசாரித்துவிட்டு தெளிந்த முகத்தோடு தான் வெளியே வந்தார் குருமூர்த்தி. வெளியே வந்தவரின் வற்றிய இதழ்கள் தன் மகனை தவிர்த்து மற்றவர்களை கண்டு புன்னகைக்க முயன்றது.


“ஒண்ணுமில்ல என் நண்பனுக்கு. நல்லா இருக்கான் அம்மா. நல்லா இருக்கான். யாரும் கவலைப்பட வேணாம். சீக்கிரமே பழைய மாதிரிக்கு ஆகிடுவான்…” என ஒவ்வொருவராய் வருடிச் சென்றவரின் விழிகள் இறுதியாக அசையாமல் தன் மகனில் நிலைத்தது.


“நடக்கக் கூடாதது சிலது நடந்துச்சு. இனிமே அப்படி எதுவும் நடக்காதுனு நினைக்கறேன். அப்படி நடந்தா என்ன ஆகணும்னும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்” என தெளிவான குரலில் அழுத்தம் திருத்தமாக கூறவும், தனக்கு தான் கூறுகிறார் என்பதை உணர்ந்து அமிழ்தினியன் எழுந்து நின்றான்.


அமைதியாக அவர் நின்றிருந்த கதவினை நோக்கி வந்தவன் தன்னை தாண்டி செல்ல முயன்ற வேலனை மார்பிற்கு குறுக்காக கைநீட்டி தடுத்து கழுத்தை வளைத்து திரும்பிப் பார்த்து தன் மனைவியை தேடினான். மெல்ல தலையசைத்து அருகில் வருமாறு அழைத்தவனின் பார்வைக்காகவே காத்திருந்ததை போல விரைந்து அவன் அருகே ஓடி வந்தாள் குழலி.


அவள் கரம் பற்றியவன் தன் தந்தையின் முகத்தை அளவிட்டவாறே, “எங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு நான் சொல்லப் போறது கிடையாது. உங்ககிட்ட சொன்ன மாதிரி எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு நான் குழலியோட இங்க திரும்பி வந்திருக்கேன். ஆனா, என்ன நடந்திருந்தாலும் அதனால நம்ப மொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கு. நீங்க சொன்னதை நான் ஏத்துக்கறேன். இனி, இப்படி நடக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. கண்டிப்பா இனிமே இப்படி நடக்காது. எங்களால நம்ப குடும்பத்துக்குள்ள எந்த பிரச்சனையும் வராது. எங்களை மன்னிச்சுகங்கப்பா…” என கனிந்த முகமாய் இயம்பியவனை குழலி இடையிட்டு தடுக்க முயன்றாள்.


அவள் கரத்தினை பிடித்திருந்த கையில் அழுத்தத்தைக் கூட்டியவன் தன் ஆள்காட்டி விரல் கொண்டு வேலனிடம் சைகை புரியவும், “வாங்க மாமா… நீங்க ரெஸ்ட் எடுங்க கொஞ்ச நேரம். வீட்டுக்கு போகலாம். சாப்ட்டு கிளம்பலாம் வாங்க…” என்றவாறு உடனே குருமூர்த்தியை அங்கிருந்து அழைத்து சென்றான் அவன்.


அமிழ்தினியனும் மழைக்குழலியும் என இருவரும் ஒன்றாக அறைக்குள் நுழையவும் கங்காதரனின் விழிகள் அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டது. பேருவகை பொங்கிய இதயத்தோடு அவர்கள் வரும் வரைக் கூட காத்திருக்க முடியாமல் தன் கை நீட்டி இருவரையும் அருகே அழைத்த கங்காதரன் எழுந்து அமரவும் முயன்றார். வேகமாய் எட்டு வைத்து அவரருகே விரைந்த அமிழ்தினியன், “மாமா.. பாத்து…” தன் கைகளால் அவரை அணைத்துப் பிடித்துக்கொண்டு எழுந்து அமர வைத்தான்.


அருகே அமர்ந்திருந்தவனின் விழிகள் தன் மாமனாரை அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்க, மழைக்குழலியின் விழிகள் உடைப்பெடுத்திருந்தன. கங்காதரனின் உணர்வுகள் தன் மருமகனை தொட்டுவிட்டு மகளின் சென்று நின்றது. செயற்கை சுவாசக் கருவியை அகற்றியவர் குழலியின் கைகளை எட்டிப் பிடித்துக்கொண்டார்.


“என்ன…டாமா.. ஏன்டா..மா அழற? அப்பாக்கு ஒன்..னும்..மில்லடா” தன் மகளின் கண்ணீரை பொறுக்க மாட்டாமல் அவரே அவளுக்காக ஆறுதல் உரைத்தார்.


“உங்க ரெண்டு பேரை..யும்… பாக்க… முடியா..ம போயிருமோனு தான்…”


“மாமா ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க? நீங்க கூப்ட்டா நாங்க ஓடி வந்துற போறோம்…” மெலிதாக இதழ் பிரித்து முறுவலித்தான்.


“இனியா… ஏதோ… தெரியமா… என்..னை மன்னிச்சுடுயா…”


“அய்யோ… மாமா… என்ன இது?” பதறியவன், “நான் உங்க வீட்டு பிள்ளை. நீங்க வளத்த பிள்ளை. என்னை என்ன சொல்லவும் உங்களுக்கு உரிமை இருக்கு. நான் பண்ணது தப்பு அதனால நீங்க என்னை கண்டிச்சிங்க… இதுல என்ன மாமா இருக்கு? தப்பெல்லாம் நான் பண்ணிட்டு… என்கிட்ட… நீங்கபோய்…” எனவும் குழலியின் பார்வையும் அவரை மெல்லிய கண்டிப்புடன் அதட்டியது.


“முதல்ல உங்களுக்கு சரியாகட்டும். வீட்டுக்கு வாங்கப்பா… அப்பறம் இதைப் பத்தி பேசிக்கலாம்…” என்று தீர்க்கமாய் கூறிவிட்டாள் மழைக்குழலி.


அப்படி இப்படியென கங்காதரன் பூர்ண குணமடைந்து வீடு திரும்ப ஒரு வாரமாகிவிட்டது. அதுவரை தினமும் காலை மாலை என இருவேளையும் அழைப்பாரின்றி மொத்த குடும்பமும் அந்த மருத்துவமனையில் குடியேறிவிடும். கூடவே, பார்வையாளருக்கான இரண்டு மணி நேரங்களை வினாடி மிச்சம் வைக்காமல் செலவிட்டனர்.



ஹாய் பூக்களே,


33 - வது அத்தியாயத்தை பதிவு செய்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூஸ்.


- அபிராமி இளவரசன்💓
 
Top