• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 9

Administrator
Staff member
Messages
466
Reaction score
795
Points
93
புன்னகை 9:

கொஞ்சும் புன்னகையில்
கொஞ்சம் கொஞ்சமே
இதயத்தை
கொய்து போகிறான்
கோசாரக் கள்வன்…!


சிலை போல அதிர்ந்து நின்றிருந்த செல்வாவை கண்ட பானு, "ஏய் என்னடி இப்படி சிலை மாதிரி ஸ்டக் ஆகிட்ட" என்று உலுக்க,

அதில் சுயநினைவை அடைந்தவள், "ஆங்…" என்று விழித்தாள்.

பானு அவளை புரியாது பார்க்க, செல்வாவிற்கு இன்னும் இதயம் மத்தளம் கொட்டியது.

அதிர்ச்சியில் உறைந்திருந்த புலன்கள் எல்லாம் விழிப்படைய துவங்க,

"ஒ…ஒன்னுமில்லைடி" என்றவளுக்கு வார்த்தை நடுங்கியது.

"அண்ணா என்ன சொன்னாங்க. இனிமேல் பயப்படாம‌ ஆடுவ தானே?" என்று வினா எழுப்ப,

"ஹ்ம்ம் ஆடுவேன்" என்றவளுக்கு ஒரு நொடி நாசியை தாக்கிய அவனது வாசம் மேனியெங்கும் உணர்ந்த அவனது அருகாமையின் கதகதப்பு நீங்காததாய் தோன்ற இரண்டு கரங்களையும் ஒன்றாக கோர்த்து விடுவித்து,

"ஊஃப்" என்று மூச்சை நன்றாக இழுத்து வெளியிட்டாள்.

பானு அவள் நடனமாடுவதற்கு பதட்டப்பட்டு இவ்வாறு செய்கிறாள் என்று நினைத்து அவளது செயலை நோக்க,

"பானு வெல்கம் ஸ்பீச் முடிய போகுது. செல்வாவை வர சொல்லு" என்று சங்கவி வந்து கூறினாள்.

பானு, "ஹ்ம்ம் இதோ வர்றோம்" என்றவள் செல்வாவிற்கு எல்லாம் சரியாக உள்ளதா என்று மேலிருந்து கீழே ஒரு முறை பார்த்துவிட்டு வெளியே அழைத்து சென்றாள்.

மேடையின் வலதுபுறத்தில் திரைசீலைக்கு பின்னே நின்றிருந்தவளுக்கு கால்கள் எல்லாம் நடுங்குவதை போல தோன்ற, விழிகளை இறுக மூடி திறந்தாள்.

மூடிய விழிகளுக்குள் வந்து நின்ற வல்லபன், "நான் இருக்கும் போது நீ எதுக்கு பயப்பட கூடாது. நீ நல்லா டான்ஸ் ஆடுவ" என்று அழுத்தமாக கூற, அவளுக்குள் புதிதாக ஒரு தைரியம் பிறந்தது.

'உன்னால முடியும் செல்வா. யு கேன்' என்று தனக்கு தானே கூறி கொண்ட கணம்,

"நெக்ஸ்ட் செல்வ மீனாட்சி இஸ் கோயிங் டூ பெர்பார்ம் வெல்கம் டான்ஸ்" என்று ஒலி பெருக்கியில் ஒலிக்கபட,

நடந்து மேடையின் மத்தியில் நின்றவள் எல்லோருக்கும் வணக்கத்தை கூறிவிட்டு நடனத்தை துவங்கினாள்.

வாசலிலே நின்று வருபவர்களை வரவேற்றபடி இருந்த வல்லபன் செல்வாவின் நடனம் துவங்கியதை அறிந்து விரைந்து அரங்கிற்கு வந்திருந்தான்.

அப்போது

உனை காணாது நான் இங்கு
நானில்லையே…
விதையில்லாது வேரில்லையே… என்று அரங்கு முழுதும் எதிரொலித்த பாடலுக்கேற்ப
இதழசைத்து முக பாவங்களை மாற்றி நளினத்துடன் நடனமாட,

அதனை கண்ட வல்லபன் தான் அப்படியே உறைந்து நின்றுவிட்டான்.

உன்னை காணாது
நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல்
வேரில்லையே
நிதம் காண்கின்ற
வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா
கூட சுகமல்ல நீ இல்லாமல்
நான் இல்லையே…


என்ற வரிகளில் மையிட்ட விழிகளை ஏற்றி இறக்கி அபிநயித்தவளை கண்டு ஒரு நொடி வல்லபனது இதயம் துடிக்க மறந்துவிட்டது.

இடம் வலமாக தலையசைத்தவளது காதில் ஒய்யாரமாக வீற்றிருந்த ஜிமிக்கி முன்னும் பின்னும் ஆட அதில் இவனது இதயமும் சேர்ந்து ஆடியது.

நடனமாடியபடியே கீழிருந்த கூட்டத்தில் அவனை தேடியவள் விழிகள் ஒரு கணம் அவனிடம் நிலைக்க சடுதியில் பார்வையை திருப்பிக் கொண்டவள்,

உன்னை காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே… என்று அபிநயம் செய்ய,

இங்கு இவன் தான் விநாடிக்கு விநாடி மாறிப்போகும் அவளது பாவங்களில் தொலைந்து உறைந்து அமிழ்ந்து போனவன்,

'ச்சு என்னடா வல்லபா இவ‌‌ உன்னை கண்ணாலயே ஏதாவது பண்ணிடுவா போலயே' என்று உள்ளுக்குள் எண்ணியவன் இடது கையால் கழுத்தை வருட இதழ்களில் மந்தகாச புன்னகை மிளிர்ந்தது.

இங்கு அவனது புலம்பல்களுக்கு காரணமானவளோ

அவ்வாறே நோக்கினால்
எவ்வாறு நாணுவேன்? என்று கருமணிகளை அங்குமிங்கும் அசைத்து அவனை மேலும் மேலும் சிதற செய்து கொண்டிருந்தாள்.

அவனை ஆழியாய் உள்ளிழுக்கும் அஞ்சனமிட்ட விழிகளில் தான் ஆழ்ந்து போய்விட்டான்.

இறுதி வரிகளாக மீண்டும்

உனை காணாது நான்
இன்று நானில்லையே
விலையில்லாமல்
வேரில்லையே… என்று ஆடி முடிக்க,

ஒரு கணம் அசாத்திய அமைதி. பார்வையாளர்களை தன்னுடைய நடனத்தால் கட்டி போட்டிருந்தாள் என்று தான் கூற வேண்டும்.

அடுத்த கணம் பலத்த கரகோஷம் அரங்கின் மூலையெங்கும் எதிரொலிக்க,

அதையெல்லாம் பெரியதாய் எண்ணாத செல்வாவின் விழிகள் வல்லபனின் மீது படிந்தது.

இமைக்காமல் பார்த்திருந்தவன் மேலும் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிவிட்டு,

"ஹ்ம்ம்…" என்று புருவத்தை உச்சி மேட்டிற்கு ஏற்றி இறக்கி பாராட்டை தெரிவிக்க, அவளுக்குள் மெலிதாய் மழை சாரல்.

அரங்கினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அறைக்கு வந்தவள்,

"ஊஃப்" என்று ஆசுவாசமாக மூச்சை வெளியிட்டது.

அவளால் நம்பமுடியவில்லை. மேடை ஏறினால் தன்னுடைய கால்கள் பயத்தில் நடுங்க துவங்கிவிடும் என்று அறிந்திருந்தவளுக்கு இத்தனை தூரம் நன்றாக நடனமாடியதை நம்ப
முடியவில்லை தான்.

எல்லாவற்றிற்கும் காரணம் வல்லபன் தான் என்று மனது அடித்து கூற, சில்லென்ற உணர்வில் இதயம் சிலிர்த்தது.

அவளுக்கு ஒன்று தான் புரியவில்லை. இவ்வளவு பயத்தில் புலம்பியபடி இருந்தவளுக்கு அவனுடைய ஒற்றை வார்த்தை யானை பலம் கொடுத்துவிட்டதா? அவ்வளவு தூரம் அவனில் தான் அமிழ்ந்துவிட்டமா? என்று வினா எழும்பிய சமயம் இதயம் துடிப்பை நிறுத்தி துடித்தது.

அந்நொடி புரிந்தது அவனில் எத்தனை தூரம் ஆழ்ந்து போயிருக்கிறோம் எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறான் என்று.

அதுவும் அவனது ஒற்றை புருவம் உயர்த்தலில் எதையோ சாதித்த உணர்வு எப்படி வந்தது என்று தான் புரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அவன் தனக்குள் நுழைந்து அழிக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டான் என்று.

புரிந்த போது ஏதும் செய்ய தோன்றாது பத்து நிமிடங்கள் அமர்ந்துவிட்டாள்.

பானு , "ஹே செல்வா கலக்கிட்ட போ. எப்படி கை தட்னாங்க பாத்தியா?" என்று ஆர்ப்பரிப்புடன் வந்தவள்,

"என்னடி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலையா?" என்று வினவவும் தான் செல்வா தன்னிலை அடைந்தாள்.

இதனை பற்றி பிறகு சிந்தித்து கொள்ளலாம் என்று நினைத்தவள்,

"பைவ் மினிட்ஸ்ல வர்றேன்" என்றுவிட்டு உடை மாற்றி வெளியே சென்று பானுவின் அருகில் அமர்ந்துவிட்டாள்.

விழிகள் ஒரு முறை வல்லபனை தேடி கிடைக்காததில் சோர்வடைந்து திரும்பி கொண்டாள்.

அடுத்த அடுத்த நிகழ்வுகள் விமர்சையாக நடக்க மதிய உணவு இடைவேளை வந்தது.

ஒரு மணி நேரம் இடைவேளை பின்னர் விழா மீண்டும் தொடங்கும்.

எல்லோரும் உணவு கூடத்தை நோக்கி நகர செல்வாவிற்கு ஏனோ பசியில்லாததால்,

"நான் வரலை நீ போய்ட்டு வா டி" என்று பானுவிடம் கூறிவிட்டாள்.

ஏதோ யோசனையில் இருந்தவளை,

"ஹாய் செல்வ மீனாட்சி" என்ற குரல் கலைத்தது.

எதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நவ நாகரீக உடையில் நின்றிருந்தார்.

பார்ப்பதற்கு நன்றாக உயரமாக கண்ணாடி அணிந்திருந்தவரின் முகச் சாயல் யாரையோ நினைவு படுத்துவதாக தோன்ற,

"ஹாய் சார்" என்று எழுந்து நின்றார்.

அவர் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவர். கல்லுரி முதல்வரே எழுந்து சென்று பேசியதை செல்வா கவனித்திருந்தாள். அதன் காரணமாகவே எழுந்து நின்றாள்.

"ரொம்ப நல்லா டேன்ஸ் ஆடுனம்மா" என்று பாராட்ட,

"தாங்க் யூ சோ மச் சார்" என்று புன்னகைத்தாள்.

எல்லாம் அவனால் தான் தோன்ற அவள் இதழ்களின் புன்னகை பெரியதானது.

"அப்புறம் உன்னோட நேட்டீவ் கோயம்புத்தூர் தானா?" என்று வினவ,

"ஆம சார். நேட்டீவ் கோயம்புத்தூர் தான்" என்று கூறுகையில்,

"என்ன சார் என் ஆளுக்கிட்ட ப்ளேடு போட்றிங்களா?" என்றபடி வந்து நின்றான் வல்லபன்.

அவனது கூற்றில் அதிர்ந்த செல்வா விழிவிரித்து அவனை பார்த்துவிட்டு எதிரில் இருந்தவரிடம்,

"சா… சாரி சார் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதிங்க சார்" என்று பதட்டமாக கூறிவிட்டு வல்லபனை முறைத்தாள்.

"எடுத்துக்கட்டுமே தப்பாவே எடுத்துக்கட்டும் ஐ டோண்ட் கேர்" என்று தோளை குலுக்க,

அவரை சங்கட்டமாக பார்த்துவிட்டு,

"என்ன பேசிட்டு இருக்கிங்க. அவர் நம்ம காலேஜ்க்கு வந்திருக்க சீஃப் கெஸ்ட். முதல்ல அவர்க்கிட்ட சாரி கேளுங்க" என்க,

"இவர் சீஃப் கெஸ்ட்டோ சீப் இல்லாத கெஸ்ட்டோ. நான் சாரிலாம் கேட்க மாட்டேன்" என்று திமிராக கூறினான்.

இதில் செல்வா தான் பாவம் என்ன செய்வதென தெரியாது விழித்தாள்.

செல்வாவின் முகத்தை கண்டு எதிரில் நின்றிருந்தவருக்கு பாவமாக போய்விட சிரிப்புடன்,

"டேய் போதும்டா எம் மருமக பாவம் பயந்துட்டா" என்க,

"யாரு இவ பயப்பட்றாளா. போங்கப்பா நீங்க வேற" என்று சிரிப்புடன் அலுத்து கொள்ள,

செல்வாதான் இருவருக்கும் இடையில் மலங்க மலங்க விழித்தாள்.

செல்வாவின் முழிப்பில் பெரிதாகிவிட்ட சிரிப்புடன்,

"ஓய் ஜான்சிராணி இவர் தான் அபிஷேக் சக்கரவர்த்தி.‌ என் அப்பா உன் வருங்கால மாமனார்" என்று கண்ணடிக்க,

"வணக்கம் மருமகளே" என்று புன்னகைத்தார் அபிஷேக்.

யாரோ எவரோ என்று பேசியவள் விடயம் அறிந்ததில் அதிர்ந்து விழித்தவள்,

"வ… வணக்கம் சா…" என்று ஆரம்பித்து, "அங்கிள்" என்று முடித்தாள்.

"என்னம்மா அங்கிள் அழகா தமிழ்ல மாமான்னே கூப்பிடு" என்று இயம்ப,

செல்வாதான் என்ன பதில் அளிப்பதென தெரியாது திகைத்தாள்.

"அப்புறம் டாடி எப்படி எங்க ஜோடி பொருத்தம்" என்று சடுதியில் அவளது தோளில் கைப்போட்டு வினவ,

"ஹ்ம்ம் பெர்பெக்ட்" என்று கரங்களை உயர்த்தி காண்பித்தார்.

அவனது செயலில் ஒரு கணம் அதிர்ந்தவள் முறைப்புடன் கையை எடுத்துவிட்ட பின்னர் தான் எதிரில் இருந்த அபிஷேக் நினைவு வர,

திரும்பி அசட்டு புன்னகையை உதிர்த்தாள்.

வல்லபனுக்கு தான் செல்வாவின் முகத்தை பார்த்து சிரிப்பில் இதழ்கடை துடித்தது.

அபிஷேக், "சே சே நான் இதுக்கெல்லாம் ஒன்னும் நினைச்சிக்க மாட்டேன். வேணும்னா நாலு அடி கூட அடிச்சிக்கோ. நான் சொன்னா எதையுமே கேட்க மாட்டான்.‌ அவனையும் மிரட்டறதுக்கு ஆள் வந்திருச்சு இப்போ" என்று சிரிக்க, செல்வாவும் சேர்ந்து புன்னகைத்தாள்.

மேலும் சில நிமிடம் பேசிவிட்டு நேரத்தை பார்த்தவர்,

"சரிம்மா டைம் ஆச்சு நான் கிளம்பணும். இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" என்று கூற,

"சரிங்க அங்கிள்" என்று மென்னகை புரிந்தாள்.

"இங்கேயே இரு ஜான்சிராணி வந்திட்றேன்" என்றவன் தந்தையை விட்டு வர சென்றான்.

அடுத்தடுத்த தாக்குதலில் கலைத்திருந்தவள் சோர்ந்து அமர்ந்தாள்.

நிச்சயமாக அந்த புதிய மனிதர் வல்லபனின் தந்தையாக இருக்க கூடும் என்று அவள் நினைக்கவே இல்லை. அதுவும் அவர் இவ்வளவு இலகுவாக தன்னை எடுத்து கொண்டதில் பெரும் ஆச்சர்யம் தான் அவளுக்கு.

"ஓய் என்ன என்னடி பண்ண?" என்றவாறு எதிரே அமர்ந்தான்.

"நான் நான் என்ன பண்ணேன்" என்று திகைக்க,

"ஆமா நீ தான் ஏதோ பண்ற. இதோ என்னை உருட்டி உருட்டி மிரட்டுற இந்த கண்ணால நல்ல செர்ரி ப்ரூட் மாதிரி சிவந்த மூக்கை வச்சு முறைக்கும் போது நீ பேசும் போது படபடக்குற இந்த இமையால நீ என்னை ஏதோ ஏதோதோ பண்ற" என்று ஆழந்த குரலில் கூறி அவளது விழிகளுக்குள் ஊடுருவ,

அவள் பதிலின்றி திணறிப் போனாள் அந்த பார்வையில்.

மீண்டும் அந்த விழிகளுக்குள் விழுந்தவன்,

" இதோ இப்படி கண்ணை விரிச்சு விரிச்சு பார்த்து தான் என்னை புலம்பவிட்டுட்டு இருக்க.‌ இன்னும் என்ன பண்ற ஐடியால இருக்க" என்று கழுத்தை வருடியவன் பின்,

"ச்சு போடி மாயக்காரி…" என்றுவிட்டு எழுந்து செல்ல,

போகும் அவனையே பார்த்து விழிவிரித்திருந்தாள் செல்வ மீனாட்சி.


கண்ணும் கண்ணும்
மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும்
காலும் ஓட வில்லை…



***********************


"செல்வா கதவை திற…" வினிதாவின் தட் தட் என்ற சத்தத்தில்,

"ப்ச்" என்று புரண்டு படுத்தவளுக்கு உறக்கம் கலைந்துவிட்டது.

"இதோ வர்றேண்ணி" என்று சுவாதீனமாக குரல் கொடுத்தவள் கூந்தலை அள்ளி முடிந்தபடி எழுந்து வந்தாள்.

கதவை திறந்ததும் வினிதா, "செல்வா இந்தா குளிச்சிட்டு இந்த சேலையை கட்டிக்கிட்டு ரெடியாகு நாம கோவிலுக்கு போறோம்" என்க,

சேலையை கண்டதும் விழித்தவள்,

"அண்ணி சேலை எதுக்குண்ணி. நான் சுடி போட்டுக்கவா?" என வினவ,

"செல்வா. நீ சின்ன பொண்ணு இல்லை. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. கோவிலுக்கு சேலை தான் கட்டிட்டு போகணும்" என்றாள்.

"இல்லண்ணி எனக்கு சேலை கட்ட தெரியாது" என்க,

"ஷ்..‌. சாரி டி. நான் மறந்துட்டேன். குளிச்சிட்டு வந்து எனக்கு கால் பண்ணு. நான் வந்து கட்டிவிட்றேன்" என்றாள்.

மனமே இல்லாமல் தலையசைத்தவள்,

"கண்டிப்பா கட்டி தான் ஆகணுமா?" என்று பார்க்க,

"ஆம செல்வா. இன்னைக்கு கோவிலுக்கு போறதே உனக்கும் அண்ணாக்கும் அகெய்ன் சாமி முன்னாடி கல்யாணம் பண்ணத்தான்" என்று கூற,

"வாட். திரும்ப கல்யாணமா?" என்று திகைத்தாள்.

"ஆமா. உன் கழுத்துல தாலியே இல்லை பாரு" என்று வினிதா கூறியதும், சடுதியில் அவளது கரங்கள் கழுத்தினை தடவியது.

கழுத்து ஆபரணங்கள் ஏதுமின்றி வெறுமையாக இருந்தது.

"உனக்கு ஆபரேஷன் பண்ணும் போது தாலியை கழட்டிட்டாங்க. அப்புறம் திரும்ப போடலைல. அதான் அத்தை கோவில்ல போய் சாமி கும்பிட்டு போடலாம்னு சொல்லிட்டாங்க" என்று விளக்கம் அளிக்க,

அவள் அதிர்வு மாறாது தலையசைத்து உள்ளே சென்றாள்.

கையில் இருந்த சேலையை பார்த்தவள் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

இரவு வெகுநேரம் உறங்காமல் இருந்தது வேறு கண்கள் இரண்டும் எரிந்தது.

காரணம் சாட்சாத் வல்லபன் தான்.‌ அவனது வார்த்தைகள் செயல் தான்.

அவளுக்கு புரிந்தது அவன் என்னவோ செய்கிறான் வார்த்தையால் பார்வையால்.

அது என்னவென்று சரியாக சொல்ல தெரியவில்லை.

இத்தனை அமைதியாக பேசுபவனை கண்டவளுக்கு அவனது இயல்பு இதுவல்லவோ என்று தோன்றியது.

மிகவும் அழுத்தக்காரனாக இருப்பானோ என்று ஒவ்வொரு நடவடிக்கையும் எண்ண வைத்தது.

மொத்தத்தில் என்னவோ செய்து அவளது உறக்கத்தை களவாடிவிட்டான் அது மட்டும் உண்மை.

அவனை பற்றிய சிந்தித்தவள் தாமதமாக தான் உறங்கினாள்.

இப்போது காலையில் புதிதாக வந்து உனக்கு மீண்டும் வல்லபனுடன் திருமணம் என்க, அவளுக்கு என்ன செய்வது சொல்வது என்று தெரியவில்லை.

முற்றும் முழுதாக குழப்பம் குடி கொண்டது.

'தான் அழைக்கவில்லை என்றால் அண்ணியே பத்து நிமிடத்தில் வந்துவிடுவாள்' என்று எண்ணி குளிக்க சென்றாள்.

பத்து நிமிடங்களில் வினிதா வந்து செல்வாவிற்கு புடவை கட்டிவிட பவியும் உதவி புரிந்தாள்.

கழுத்தில் மெல்லிய கழுத்தணி சிறிதாய் ஜிமிக்கி என்று மிகவும் எளிமையான அலங்காரத்தில் தயாராகி இருந்தவளது முகத்தில் குழப்ப திட்டுக்கள்.

"என்ன இன்னுமா ரெடியாகிட்டு இருக்கிங்க. நல்ல நேரம் முடியிறதுக்குள்ள கோவிலுக்கு போகணும்" என்று வேதவள்ளி வந்து நிற்க,

"ஹ்ம்ம் இதோ நாங்க ரெடியாகிட்டோம் கிளம்பலாம்" என்று
பவி எழுந்து நின்றாள்.

திடீரென செய்யப்பட்ட அலங்காரங்கள் என்னவோ போல இருக்க ஒரு வித கூச்ச சுபாவத்துடன் தான் கீழிறங்கி வந்தாள்.

வரும் பொழுதே எதிரே அதியுடன் அமர்ந்து தந்தையிடம் மென்னகையுடன் வேட்டி சட்டையில் பேசியபடி இருந்த வல்லபன் கண்களை நிறைத்தான்.

அதியா செல்வாவின் புடவை நிறத்திலே பட்டுபாவாடை அணிந்து இரண்டு குடுமி போட்டு கழுத்தணி அணிந்து மிகவும் அழகாக இருந்தாள்.

தாயை கண்டவுடன், "ம்மா புது தெஸ் நல்லா இதுக்கா?" என்று கொலுசொலி சலசலக்க தாயிடம் ஓடி வந்தாள் அதியா.

அதில் மற்றதை விடுத்தவள், "ஹ்ம்ம் அழகா இருக்குடா" என்று புன்னகைத்தாள்.

"தூக்கும்மா" என்று கையை தூக்க, செல்வா கைகளில் அவளை வாரி கொண்டாள்.

"ம்மா புது வளையல் தோது" என்று அனைத்தையும் மகிழ்ச்சியுடன் முகம் மின்ன காண்பிக்க, அவள் புன்னகையுடன் கேட்டு கொண்டாள்.

மனையாளும் மகளும் பேசுவதை கண்ட வல்வபனுக்கும் இதழ்களில் கீற்றாய் புன்னகை முகிழ்ந்தது.

எல்லோரும் தயாரனதும் மகிழுந்தில் இப்போது செல்வா அமர நடுவில் அதியா அதி மறுபுறம் வல்லபன் அமர்ந்தான்.

செல்வா கவனித்தாலும் எந்தவித முக மாற்றத்தையும் காண்பிக்கவில்லை.

தான் இரவு பேசியதன் விளைவு தான் அதியாவை தன்னிடம் அனுப்பியது மற்றும் இப்போது அருகில் உட்கார்ந்திருப்பது என்று புரிந்தது.

தனக்காக தான் யோசித்து செய்கிறான் என்று தெரிந்ததும் உள்ளுக்குள் இதம் பரவியது.

மற்றொரு மகிழுந்தில் மற்றவர்கள் ஏறி கொள்ள அரைமணி நேர பயணத்தில் கோவிலை அடைந்தனர்.

வல்லபன் அதியை தூக்கி கொள்ள மூவரும் ஒன்றாக தான் கோவிலுக்கு நுழைந்தனர்.

அன்று வார நாட்கள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர்

அது ராமநாதனின் குல தெய்வம் பாப்பாத்தி அம்மன் கோவில் அது.

செல்வாவின் விழிகள் கோவிலை சுற்றி வந்தது.‌ கோவிலிலும் சிற்சில மாற்றங்கள் செய்திருந்தனர்.

கோவில் பூசாரி ராமநாதனை கண்டதும், "வாங்க ராமநாதன் பூஜை இப்போதான் முடிஞ்சது. நல்ல நேரம் முடியிறதுக்குள்ள தாலியை எடுத்திட்டு வந்துட்டிங்கன்னா சாமியை கும்பிட்டு கல்யாணத்தை முடிச்சிடலாம்" என்று கூற,

"இதோ எடுத்துட்டு வர்றேன் ஐயா" என்றவர் தானே தாலியை எடுத்து தாம்பூல தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார்.

எல்லோரும் வரிசையாக நின்று கடவுளை கண்மூடி வணங்க,

செல்வா, "அம்மா என் வாழ்கையில என்ன நடக்குதுன்னே தெரியலை. உன்னை நம்பிதான் இருக்கேன். என் அம்மா அப்பா காட்டுற வழியில போயிட்டு இருக்கேன். நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணனும்" என்று விழிமூடி வேண்டிக்கொண்டாள்.

மந்திரங்களை கூறி கடவுளை வேண்டிய பூசாரி தாலியை வல்லபனது கையில் கொடுக்க, அதனை வாங்கியவன் அவளை நோக்க, அவளும் வல்லபனை தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.

செல்வாவின் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடியே அவளது கழுத்தில் மங்கள நாணை பூட்டினான் வல்லபன் சக்கரவர்த்தி.

விழிமூடி ஏற்ற கொண்டவளின் மனது நிர்மலாக இருந்தது.

இந்த மாங்கல்யம் இருவருக்குமான உறவை புதுப்பிக்குமா…?
























 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ashok nalla mamanar thaan appa pillayum selva va nalla pannidaga 😅😅😅avathan kojam pavom vallpan selva etha marrige la iruthu nallathu nadagadum🥳🥳🥳🥳
 
Top