• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 11

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 11:


உணர்தலுக்கும்

உடைதலுக்குமான
சிறு இடைவெளியை
நிரப்பிடும் ஆகப்பெரும்
உணர்வு தான் இந்த
அலாதியான
நேசம்…!


மதியம் பனிரெண்டு மணிக்கு ஆதவன் தன் கதிர்களால் சுட்டெரித்து கொண்டிருக்க,

சாளரத்தின் வழியே பாய்ந்து வந்து தன் மீது படர்ந்த வெயிலின் தாக்கத்தை கூட உணராது தன்னுடைய புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தாள்.

அது மதிய நேரம் என்பதால் நூலகத்தில் அவளையும் நூலகரயும் தவிர யாருமில்லை.

இன்னும் இரண்டு வாரங்களில் அவளுக்கு கல்லூரியில் உள் தேர்வு இருக்க அதற்காக புத்தகத்திலிருந்து குறிப்பு எடுத்து கொண்டிருந்தாள்.

இதோ அவள் பந்தயத்தின் போது மயங்கி விழுந்து ஒரு வாரங்கள் கடந்திருந்தது.

அந்த நிகழ்விற்கு பிறகு மிகவும் உடைந்து தான் போயிருந்தாள். ஒரு நொடி அவனுடைய வாகனம் நழுவிய போது துடிப்பை நிறுத்தியிருந்த இதயம் அவளுக்குள் அவனுக்கான இடத்தை தெரிவிக்க சிறிதாக சிதறி தான் போயிருந்தாள்.

உணர்வுகளுக்கும் உண்மைக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கி தவித்தவள்,

'வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம் யாரும் வேண்டாம்' என்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்தாள்.

நடக்காது என்று தெரிந்த பிறகும் ஆசையை வளர்த்து கொண்டு பின்னால் சிதைந்து போவதற்கு இப்போதே இதனை வெட்டிவிடலாம் என்று நினைத்து கொண்டாள்.

இதோ இந்த மூன்று மாத காலம் நடந்தவை தன் வாழ்வில் நடக்கவே இல்லை என்று நினைத்து கொள்வோம்.

படிக்க வந்த இடத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் வேலை செய்து தன்னை கல்லூரிக்கு அனுப்புவது படிக்க மட்டும் தான்.

அதுவும் இந்த இரண்டு வாரத்தில் இதனால் எத்தனை பேரிடம் தேவையே இல்லாமல் கோபப்பட்டோம் எரிந்து விழுந்தோம் என்று உணர்ந்து நொந்து போனாள்.

அதன் பின்னர் படிப்பே தனது முழு மூச்சாக கொண்டவள் அவனது நினைவை ஒதுக்க புத்தகத்தில் புதைந்து போனாள்.

அனைத்தையும் மீறி எழும் அவளது நினைவுகள் உள்வரை ஆட்டம் காண செய்தாலும் வேண்டாம் மனமே இறுதியில் காயப்பட்டு போவாய் என்று தனக்கு தானே கூறி கொண்டாள்.

மறக்க நினைத்த பிறகு தான் மணாளனின் முகம் அடிக்கடி வந்து செல்கிறது.

பாவைக்கு யார் புரிய வைப்பது வேண்டாம் என்று நினைத்த ஒன்றின் பின் தான் மனது வரையறையின்றி போய் நிற்கும் என்று.

தனக்குள்ளான தனக்கான போராட்டத்தில் சற்று இறுகி அமைதியாகி தான் போனாள்.

யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. பேசினால் தான் எரிந்து விழுகிறோம் என்று பேச்சை குறைத்து கொண்டாள்.

படபட பட்டாசாய் பொறிந்திடும் செல்வ மீனாட்சியிடம் வார்த்தைகளுக்கு பஞ்சமாகி போனது.

புத்தகத்தினுள்ளே அமிழ்ந்து விடுபவள் போல அத்தனை நெருக்கத்தில் ஒற்றை விரலால் கண்ணாடியை ஏற்றிவிட்டு கொண்டு உற்று பார்த்து எழுதி கொண்டிருந்தாள்.

"சாப்பிட போகலையா செல்வ மீனாட்சி?" என்ற நூலகரின் வினாவில் புத்தகத்தில் இருந்து நிமிர்ந்தவள்,

"இல்லை மேம் பசிக்கலை" என்று கூற,

"சரிம்மா. நான் சாப்பிட்டு வர்றேன். யாராவது புக் எடுக்க வந்தா டென் மினிட்ஸ் வெயிட் பண்ண சொல்லு" என்றார்.

'சரி' என்று தலையசைத்தவள் மீண்டும் புத்தகத்தில் நுழைந்துவிட,

ஐந்து நிமிடத்தில் வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டது.

நூலகர் கூறியது நினைவு வந்து தலையை நிமிர்த்தி பார்க்க வாசலில் வந்து நின்றான் வல்லபன்.

சட்டென்று பார்வையை திருப்பி கொண்டவள் அவனது வரவை கவனியாது போல குனிந்து கொள்ள,

அவன் அழுத்தமான காலடி தடம் செவிக்கு வெகு அருகில் கேட்டு அவன் அருகில் வந்துவிட்டதை உறுதி செய்தது.

இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். இந்த ஒரு வாரமாக அவனும் விதவிதமாக அவளிடம் பேச முயற்சிக்கிறான்.

ஆனால் அழுத்தக்காரி முடியாது என்று சாதிக்கிறாளே.

வந்து எதிரில் நின்றவன் அவளையே உற்று பார்க்க, அப்படி ஒரு ஜீவனே அங்கில்லாத பாவனை அவளிடத்தில்.

இரண்டு நிமிடங்கள் முழுதாக கடந்த பிறகும் எந்த எதிர்வினையும் இல்லாது போக, பட்டென்று அவளருகில் வந்து அமர அதில் உள்ளுக்குள் அதிர்ந்து போனவள் சில அடிகள் தள்ளி நகர்ந்து தனது வேலையை தொடர்ந்தாள்.

அவனோ அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து அவளையே வெகு அருகில் இமைக்காது பார்க்க துவங்க,

இரண்டு நிமிடம் ஐந்து பத்து நிமிடமாக ஆகியது.

அவளுக்குள் நிமிடம் கடக்க குறுகுறுக்க துவங்கியது.

அவளும் எத்தனை நேரம் தான் அவனது பார்வையை ஒதுக்குவாள்.

ஊசியாய் ஊடுரும் பார்வை தனக்குள் எதையோ செய்ய சிறிதாக நெளிய துவங்கினாள்.

எதிரே இருந்தவனது பார்வை முழுவதும் அவளிடம் தான்.

குனிந்து எழுதியவளின் தோளில் அனாயசமாக வழிந்த கார்குழலில் விழிகள் பதிந்தது. புத்தகத்தை வாசித்தவளின் கருமணிகள் அங்குமிங்கும் நர்த்தனம் ஆட அதில் அவனுது இதயமும் சேர்ந்து ஆடியது.

அடிக்கடி பேனாவை ஒரு விரலால் திருப்பியவளின் மருதானியில் விழிகள் நிலைத்தது.

காற்றாடி ஓடி கொண்டிருந்தாலும் வெயிலின் தாக்கத்தால் பாதி மறைத்திருந்த நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகள் ஆதவனின் ஒளியினால் மின்னி கொண்டிருக்க நெற்றியில் தொடங்கி இதழில் முடிந்தவனது பார்வை அவளது மச்சத்தில் ரசனையாய் மொய்க்க,

இதயத்தினுள் சிறிதாக ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.

'ச்சு என்ன பண்ணிட்டு இருக்க நீ. அவளை சமாதானப் படுத்த வந்திட்டு' என்று தன்னை தானே அதட்டி பார்வையை மாற்றி அவளது நோட்டினை நோக்கினான்.

அவனது வெது அருகாமையில் சிறிது சிறிதாக சிதறி கொண்டிருந்தவள் என்னை செய்கிறோம் என்ற பிரஞ்ஞை இன்றி எழுதியவள் அதற்கு மேல் தாங்காது எழுந்துவிட்டாள்.

அவனுக்கு புரிந்தது எல்லாம் தன்னால் தான் என்று. இருந்தும் பார்வையை மாற்றாமல் அவளையே நோக்கினான்.

எழுந்து புத்தக அலமாரிக்கு பின்னால் சென்று,

"ஊஃப்" என்று மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள்.

விலகி விலகி சென்றாலும் கண்முன்னே வந்து நிற்பவனை என்ன தான் செய்ய என்று வழியறியாது தவித்தவள் இறுதியில் அமைதி ஆயுதத்தை கையில் எடுத்தாள்.

அவனுருகாமையில் தவித்து தடுமாறி நின்ற மனதினை வெகுவாக கட்டுப்படுத்தியவள் வேறு ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டு வர அவன் இன்னும் அசையாது அதே இடத்தில்.

முகத்தில் எதையும் காண்பிக்காது உட்கார்ந்தவள் பாதியில் விட்டதை தொடர, சடுதியில் அவளிடமிருந்த எழுதுகோல் பறிக்கப்பட்டது.

அதில் சிறிதான அதிர்வுடன் நிமிர்ந்து அவனை நோக்க, அவளிடத்தில் இருந்த நோட்டை எடுத்து அவள் எழுதியிருந்ததில் எதையோ திருத்தி எழுதியவன்,

"படிச்சா போதாது. படிப்புல கவனம் இருக்கணும்" என்று அவள் தவறாக எழுதியதை சுட்டி காட்ட, அவளுக்கு புரிந்தது.

அவனருகில் இருக்கும் வரை எதுவும் சரியாக செய்ய இயலாது என்று நினைத்தவள் ஒரு நொடி அவனை வெறித்து பார்த்தாள்.

ஒரே ஒரு விநாடி தான் சட்டென்று தன்னுடைய பையை எடுத்து கொண்டு கிளம்ப வெளியே வர, சரியாக அதே நேரம் நூலகரும் வருகை தர கூறிவிட்டு வந்துவிட்டாள்.

நேராக வகுப்பறைக்கு தான் சென்றாள். உணவு இடைவேளை நேரம் என்பதால் ஒருவரும் இல்லை.

தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவள் கரங்களால் தலையை பிடித்து கொண்டாள்.

விழிகள் தன்னிச்சையாக கலங்கியது.

அவளால் சுத்தமாக முடியவில்லை. இந்த உணர்வின் போராட்டத்தில் தளர்ந்து போனாள்.

நடக்காத ஒன்றிற்காக ஏங்கி தவிக்கும் மனதிடம் என்ன பதிலளிப்பது என தெரியவில்லை.

முயன்று கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் இமைகளை சிமிட்டிவிட்டு அப்படியே தலையை சரித்தாள்.

இங்கு அவளது வெறித்த பார்வையை உணர்ந்த வல்லபன் தான் செய்வதறியாது ஒரு கணம் நின்றுவிட்டான்.

அவளுடைய படபடவென பேச்சையும் கோபத்தையும் எதிர்கொள்ள முடிந்தவனால் இந்த அமைதியை தாங்க இயலவில்லை.

அதுவும் இதோ ஒரு கணத்திற்கு முன்பு அவனை நோக்கி கொடுத்தாளே ஒரு வெற்று பார்வை அதில் அவனது உள்ளே ஒன்று நொருங்கிவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள் உடைந்த இதயத்தை உணர்ந்தவன் இதற்கு மேல் தாளாது என்று எழுந்தேவிட்டான்.

இனியும் இதனை வளரவிட கூடாது அவளுக்கு எந்த கோபமாக இருந்தாலும் பேசி தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்தவன் விறுவிறுவென அவளுடைய வகுப்பறையை நோக்கி சென்றான்.

அவள் அங்கு தான் நிச்சயம் சென்றிருப்பாள் என அவளை புரிந்தவனுக்கு தெரிந்தது.

அவன் நினைத்தபடியே வகுப்பறையில் தான் அமர்ந்திருந்தாள்.

அதுவும் விழிகள் முழுவதும் நீருடன். அவளும் அவனை தான் பார்த்தாள்.

கண்ணீர் வேறு நிற்காமல் வழிந்தது. துடைக்க துடைக்க ஆறாக பெருகியது.

இப்போது மனதிற்கு தன்னை நோக்கி வருபவனது மிகப்பெரிய பின்புலமும் செல்வநிலையும் தான் தெரிந்தது.

அவனுடைய நிலைக்கு தான் பொருத்தமில்லை என்று தான் தோன்றியது.

அவள் அலைபேசியில் கண்ட அவனது மாளிகை போன்ற வீடும் அதன்முன்னே ஒய்யாரமாக நின்றிருந்த பல கோடி மதிப்புள்ள மகிழுந்தும் கண்முன் நிழலாட கண்ணீர் பெருகியது.

கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்து கொள்ள வற்றாத ஜீவநதியாகியது விழிநீர்.

உன்னால் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலவில்லையா? என்று வேறு வேதனை பெருகியது.

அச்சிறு பெண்ணால் அப்போராட்டத்தை தாங்க முடியவில்லை.

அவளுடைய வெற்று பார்வையில் பாதிக்கப்பட்டு வந்தவன் அவளது அழுகையில் அதிர்ந்து,

"செல்வா என்னாச்சு ஏன் அழற?" என்க,

அவளிடம் பதிலில்லை. அவள் உடைந்துவிட்டாள்.

முகத்தினை கரங்களால் மூடி கொண்டவளுக்கு அழுகை பெருகியது.

இந்த கடந்த மூன்று வாரங்களாக அடக்கி வைத்திருந்த உணர்வுகள் நேசத்தின் விளிம்பில் கரை உடைத்திருந்தது.

"உன்னதானடி கேக்குறேன்?" என்று மீண்டும் அதட்ட, கண்ணீரே பதிலானது.

அவள் பதிலளிக்காததில் சிறிது சலிப்பு வர, "ப்ச் என்னதான்டி உன் பிரச்சனை சொன்னாதான தெரியும்" என்று கூற,


சடுதியில் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.

கண்ணீரை அழுத்தமாக துடைத்தவள், "நீ… நீதான் என் பிரச்சனை" என்று கூற,

அவன் அதிர்ந்து பார்த்தான்.

"ஆமா நீ தான் நீ மட்டும் தான் என் பிரச்சனை.‌ எதுக்கு நீ என் வாழ்க்கையில குறுக்க வந்த? நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு தான இருந்தேன்" என்றவள்,

"ப்ச் என்னால முடியலை. எங்க பார்த்தாலும் உன் முகம் தான் வருது. எப்போ பார்த்தாலும் உன் ஞாபகம் தான் வருது. சாப்பிட முடியலை தூங்க முடியலை" என்று அழுதழுது சிவந்த முகத்துடன் தலையை பிடிக்க,

அதிர்ச்சியில் இருந்தவனது முகத்தில் மெலிதான சிரிப்பில் இதழ்கள் நெளிய துவங்கியது.

அவன் முகத்தை கண்டவள் மேலும் கோபமாகியவள் கையில் கிடைத்த நோட்டையை தூக்கி எறிந்து,

"இனிமேல் என் கண் முன்னாடி வராதிங்க" என்றுவிட்டு விறுவிறுவென எழுந்து வெளியே சென்றிட,

போகும் அவளையே இமைக்காது பார்த்தவனின் புன்னகை இதழ்நீண்ட பெரிய புன்னகையாக விரிந்தது.

'உலகத்தில் உன்னை பிடித்திருக்கிறது என்று யாரும் இத்தனை அழகாய் கூறியிருக்க மாட்டார்கள்' என்று எண்ணியவனின் முகத்தில் மந்தகாச முறுவல் நிறைந்து நின்றது.


புயலென்று நினைத்தேன் என்னை

புயல் கட்டும் கயிராய் வந்தாள்
மலையென்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே…


*****************
 
Last edited:
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
வல்லபனுக்கு மறுபுறம் திரும்பி அமர்ந்திருந்த செல்வாவிற்கு இன்னும் அதிர்ச்சி குறையவில்லை.

'காதல் திருமணமா அதுவும் தானா?' என்று தன்னையே கேட்டு கொண்டவளால் நிச்சயமாக நம்ப இயலவில்லை.

'காதல் அதுவும் உனக்கா? வாய்ப்பே இல்லை' என மனது அடித்து கூறியது.

தன்னை தூரத்தில் இருந்து பார்த்து பிடித்திருந்தாலும் தன்னுடைய அடாவடி தனத்தால் அலறி ஓடியவர்களை தான் அவள் பார்த்திருக்கிறாள்.

அப்படியிருக்கையில் தான் ஒருவரை காதலித்து அதுவும் அவனது வீட்டை எதிர்த்து திருமணம் வேறு செய்திருக்கிறேனா?

'அதுவும் கல்லூரி படிக்கையிலே காதலா?'

படிக்கும் வயதில் எதற்கிந்த காதல் என்று தானே நிறைய பேரை பார்த்து நினைத்திருக்கையில் எப்படி இது சாத்தியம் என்று குழம்பி தவித்தவள் அவனை திரும்பி பார்க்க, இதழ்கடையில் சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.

ஒருவேளை இவர் பொய் கூறுகிறாரோ? என நினைத்தவள்,

'சே சே இருக்காது அவர் ஏன் தன்னிடம் பொய் கூற வேண்டும் என்று தனக்கு தானே கேட்டு கொண்டவள்,

தன்னுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அவன்புறம் திரும்ப மகிழுந்து அவர்களது வீட்டை அடைந்திருந்தது.

வல்லபன் அதியை தூக்கி கொண்டு இறங்க அவளும் உடன் இறங்கி செல்ல அதி உறக்கத்தில் இருந்து விழித்து விட்டிருந்தாள்.

"பொண்ணும் மாப்பிள்ளையும் வந்தாச்சா?" என்று கேட்டபடி முகம் நிறைந்த புன்னகையுடன் கையில் ஆரத்தி தட்டுடன் வந்து நின்றார் புவனேஷ்வரி அருகில் வினிதா தியாகு தம்பதியின் மகன் தனுஷ்.

செல்வா புவனாவை கண்ட ஆனந்த அதிர்ச்சியில் பேச்சற்று நின்றுவிட்டாள்.சடுதியில் விழிகள் நிறைந்துவிட்டது.

கண்விழித்ததிலிருந்து அவள் காண நினைத்த ஒரு ஜீவன் தான் புவனேஷ்வரி.

இமை சிமிட்டி உள்ளிழுத்து கொண்டவள் பார்வை தனுஷின் மீது பதிந்தது.

புவனா ஆரத்தி சுற்றி முடிக்க,

பவி, "என்னக்கா பாக்குற நம்ம தனுஷ் தான்" என்க,

"அத்தை…" என்று ஆர்பரிப்புடன் வந்து செல்வாவின் காலை கட்டி கொண்டான் அச்சிறுவன்.

செல்வா, 'தனுஷ் இவ்வளவு பெரியதாக வளர்ந்துவிட்டானா?" என வியப்புடன் பார்க்க,

"த்தை தூக்கு தூக்கு" என்று கையை நீட்டினான் தனுஷ்.

"தனுக்குட்டி அம்மா ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல தூக்க சொல்ல கூடாது நீ சின்னப் பையன் இல்லைன்னு" என்று வினிதா அதட்ட,

சடுதியில் அவனது முகம் சுருங்கிவிட்டது.

அதனை கண்டு வருந்திய செல்வா,

"ண்ணி ஏன் என் தனுக்குட்டிய திட்றிங்க. எவ்ளோ வளந்தாலும் எனக்கு குட்டி பையன் தான்" என்றவள் அவனை கைகளில் தூக்கி கொண்டு உள்ளே செல்ல,

எல்லோரும் உள்ளே நுழைந்தனர்.

"தனுக்குட்டி என்ன படிக்கிறிங்க?" என்று புன்னகையுடன் வினவியபடி நீள்விருக்கையில் அமர,

"செகெண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன் த்தை" என்று விழிகள் விரித்து பதில் கூறினான்.

எதிரில் அதியுடன் அமர்ந்திருந்த வல்லபனும் மென்னகையுடன் பார்த்திருக்க,

அதிக்கு அப்படி இல்லை போலும்.‌ தன் தாயின் மடியில் வேறொருவர் அமர்ந்திருப்பது பிடிக்காது,

"ம்மா நானு நானு தூக்கு…" என்று தந்தையிடமிருந்து தாயிடம் கையை நீட்ட,

"ம்ஹூம் நான் தா அத்தைட்ட இருப்பேன்" என்று தனுஷ் மறுக்க,

இடையில் செல்வாதான் பதில் கூற இயலாது மலங்க மலங்க விழித்தாள்.

அதி, "ம்மா தூக்கு தூக்கு" என்க,

"நான் போமாட்டேன்" என்று வேகமாக தனுஷ் செல்வாவின் கழுத்தை கட்டி கொண்டான்.

"வந்ததுமே ஆரம்பிச்சிட்டிங்களா உங்க சண்டைய?" என்று வினிதா அலுத்தபடியே தேநீரை மற்றவர்களுக்கு கொடுக்க,

பவியும், "ரெண்டு பேரும் எப்பவுமே இப்படிதான் நீ இருக்கும் போது மட்டும் உரிமை போரை ஆரம்பிச்சிடுவாங்க" என்று சிரிக்க,

"ம்மா…" என்று அவளை ஏக்கமாக பார்த்த அதி இதழ்களை பிதுக்கி அழுகைக்கு தயாராக,

செல்வா, 'என்னை யாராவது காப்பாற்றுங்களேன்' என்ற பாவனையில் மற்றவர்களை காண,

எல்லோரும் கையை விரித்து விட்டனர்.

இறுதியில் அவள் பார்வை வல்லபனிடம் பதிந்தது.

அதில் மனைவியை உணர்ந்து கொண்டவன்,

"அதிக்குட்டி நீ நேத்து கேட்ட டைகர் ஸ்டோரி டாடி சொல்லவா?" என்று மகளிடம் வினவ,

தாயிடமிருந்த கவனம் கலைந்து,

"ஹ்ம்ம் பெரிய டைகர் ஸ்டோரியா?" என்று ஆர்வமாக விழிகளை விரித்தாள்.

மகளது பாவனையில் இதழோரச் சிரிப்புடன், "ஹ்ம்ம் ஆமா. பெரிய டைகர் தான்" என்றான்.

இதனை கவனித்த தனுஷ், "எனக்கு டைகர் ஸ்டோரி…" என்று முகத்தை பாவமாக வைத்து செல்வாவை பார்க்க,

"அச்சச்சோ எனக்கு டைகர் ஸ்டோரிலாம் தெரியாது" என்று பதிலுக்கு பாவமாக பார்த்து வைத்தாள் செல்வா.

குழந்தையுடன் குழந்தையாய் மாறிவிட்ட மனைவியை கண்ணோரம் சுருங்கும் சிரிப்புடன் பார்த்தவன் தனுஷிடம், "வா…" என்று கைகளை நீட்ட,

அவனும் சிரிப்புடன் வல்லபனிடம் தொற்றி கொண்டான்.

இருவரையும் இருபுறமும் தூக்கி கொண்டவன்,

"நாம மேல ரூம்க்கு போனதும் உங்களுக்கு டைகர் ஸ்டோரி சொல்றேன்" என்று எழுந்து செல்ல,

இரண்டு குழந்தைகளையும் வாகாக தூக்கி சென்றவனது மீது சிறு துளியாய் ரசனை துளிர்விட்டது அவளிடம்.

மற்றவர்கள் எழுந்து சென்றுவிட,

"என்ன செல்வா வந்ததுல இருந்து அத்தையை கண்டுக்கலை" என்று சிரிப்புடன் புவனா வர,

அவரை முறைத்தவள்,

"அதை நான் சொல்லணும்" என்று அவளது கைகளை பிடித்து கொண்டாள்.

வெகுநாட்கள் அவரை பிரிந்திருந்த உணர்வு செல்வாவிற்கு.

"எங்க போயிருந்த நீ. ரெண்டு நாளா உன்னை எவ்ளோ எக்ஸ்பெக்ட் பண்ணேன் தெரியுமா?" என்று சிறு பிள்ளையாக குறைப்பட்டவளின் விழிகளில் நீர்ப்படலம்.

"ச்சு என்ன இது குழந்தை மாதிரி அழுதுகிட்டு. உனக்கே ஒரு குழந்தை வந்திடுச்சு. கோவில்ல இருந்து ரெண்டு நாள்ல வந்திருவேன்னு அண்ணன் சொன்னாரு தானே" என்று அவளது கண்ணீரை துடைக்க,

அவர் கூறிய குழந்தைக்கு தாய் என்ற வார்த்தையில் அவளது முகத்தில் கலக்கம்.

"அத்தை நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்?" என்று அவரை பார்க்க,

"என்ன இந்த கல்யாணம் குழந்தை எல்லாம் உண்மைதானான்னு கேட்க போறீயா?" என்க,

அவளுக்கு தன் கண்ணசைவிலே புரிந்து வைத்திருக்கும் அத்தையை கண்டு எப்போது போல இப்போதும் வியப்பு மேலிட்டது.

"இத்தனை பேர் சொல்லியும் உனக்கு நம்பிக்கை வரலையா?" என்று அவளது பார்வையை உணர்ந்து முறைக்க,

"யாரு என்ன சொன்னா என்ன? நீ சொல்லு" என்று சலுகையாக அவரது தோளில் சாய்ந்து கொள்ள,

அவளது தலையை தடவியவர்,

"நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு உன்னோட ஹஸ்பண்ட் வல்லபன் தான் அதி உன்னோட பொண்ணு தான். உனக்கு ஞாபகம் வந்தாலும் வரலைன்னாலும் இனி அவங்க தான் உன் லைஃப்" என்று கூற,

அவளது மனதின் ஓரத்தில் இருந்த சிறிதான சந்தேகமும் மாயமாக மறைந்திட்டது.

எத்தனை பேர் என்ன கூறினாலும் புவனாவின் வார்த்தை அவளுக்கு வேத வாக்கு.

அவளுடைய உலகத்தில் மிக மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் புவனா.

சரியென தலையசைத்தவள் அவரை கட்டி கொண்டாள்.

அதன்பிறகு இருவருக்கும் நிறைய பேச இருக்க நேரம் பார்க்காது பேசினர்.

இறுதியில் புவனா தான், "போதும் டா. அப்புறம் பேசிக்கலாம். போய் உன் வீட்டுக்காரும் பாப்பாவும் என்ன பண்றாங்கன்னு பாரு. டீ வேணுமான்னு கேட்டு கொடு" என்று கூற,

சரியென தலையசைத்தவள் எழுந்து மேல செல்ல,

அங்கே அறையில் வல்லபன் குழந்தைகள் இருவரையும் எதிரெதிரே அமர வைத்து கதையை கூற, இருவரும் அத்தனை ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் பாவனையில் அவளது முகத்தில் கீற்றாய் புன்னகை பிறக்க ரசனையுடன் நின்றுவிட்டாள்.

நொடிகள் கடக்க அவளது பார்வையை உணர்ந்த வல்லபன் தான் திரும்பி என்னவென புருவம் உயர்த்தி கேட்க,

அதனை எதிர்பாராதவள் சடுதியில் பார்வையை மாற்றிவிட்டு, "அது அத்தை உங்களுக்கு டீ காஃபி எதாவது வேணுமானு கேட்க சொன்னாங்க" என்க,

"ஓ… உங்கத்தை கேட்க சொன்னததால தான் கேட்டு வந்தியா? உனக்கா கேட்க தோணலையா?" என்று வல்லபன் பார்த்தான்.

அதில் திகைத்தவள் பதில் கூறாது விழிக்க,

அவனது இதழ்களில் குறும்புச்சிரிப்பு மின்னியது.

"எனக்கு டீ வேண்டாம். பசங்களுக்கு மட்டும் பால் எடுத்திட்டு வா" என்று மாறாத சிரிப்புடன் கூற,

சம்மதமாக தலையசைத்தவள் விட்டால் போதுமென்று ஓடிவந்தவள் இருவருக்கும் பாலை ஆற்றி கொண்டு சென்றாள்.

அவளிடம் பாலை வாங்கி தானே குழந்தைகளை குடிக்க வைத்தவன்,

"செல்வா நமக்கு நைட் ப்ளைட்" என்று கூற,

அவள் முழுதாக அதிர்ந்து பார்த்தாள்.

அவனுடன் செல்ல வேண்டும் என்று அவளுக்கு தெரியும் ஆனால் இத்தனை விரைவாக அவள் எதிர்பார்க்கவில்லை.
அதனை அவள் முகமே காட்டி கொடுத்தது.

"கொஞ்சம் வொர்க் அதிகமா இருக்கு. சிக்ஸ் மந்த்ஸா எதையும் சரியா பார்க்க முடியலை" என்று அவளது பார்வைக்கு விளக்கம் தர,

அவளுக்கும் புரிந்தது. ஆறுமாத காலமாக பார்க்காது இருந்தால் நிறைய வேலை இருக்கும் என்று.

இருந்தும் மனதிற்கு அத்தனை வருத்தமாக இருக்க,

"ஹ்ம்ம்" என்று தலையசைத்துவிட்டு வந்தாள்.

வெளியே வர வேதவள்ளி, "செல்வா இந்த பேக்ல உன்னோடதும் பாப்பாவோடதும் கொஞ்சம் துணி இருக்கு" என்று ஒரு பையை காண்பிக்க,

"செல்வா இதுல கொஞ்சம் ஸ்னாக்ஸ் வச்சிருக்கேன்" என்று வினிதா வந்து நின்றாள்.

எல்லோரும் தன்னை அனுப்புவதிலே குறியாக உள்ளூர் என்ற‌ எண்ணம் மேலோங்க இன்னும் வருத்தமாகி போனாள்.

எல்லாவற்றிற்கும் அமைதியாகவே பதிலளித்தவள் சுணங்கிய மனதுடனே உடைமாற்றி தயாரானாள்.

இரவுணவை எல்லோரும் சேர்ந்து தான் உண்டனர்.

செல்வாவின் முகத்தை கண்ட புவனாவிற்கு அனைத்தும் புரிய, ஆறுதல் கூறினார்.

வல்லபனுக்கும் அவளது வாடிய முகம் வருத்தத்தை தான் அளித்தது.

இருந்தும் என்ன செய்வது அவளைவிட்டுவிட்டா செல்ல முடியும்.

அவளை பிரிந்து நிச்சயமாக அவனால் இருக்க இயலாதே. போக போக சரியாகிவிடும் என்று நினைத்து கொண்டான்.

விமான நிலையம் சென்று திரும்ப வெகு நேரமாகிவிடும் என்று கூறி அவர்களை வழியனுப்ப விமான நிலையம் வரவேண்டாம் என்று வல்லபன் கூறிவிட்டான்.

அத்தனை நேரம் அமைதியாக இருந்தவளுக்கு மகிழுந்தில் ஏறும் சமயம் கண்கள் சடுதியில் கலங்கிவிட்டது.

குடும்பத்தை முதல் முறை பிரிகிறாள். அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் என்று அறிமுகமான ஒருவனோடு.

எல்லோரும் சிரித்த முகத்துடன் வழியனுப்ப தான் மட்டும் அழுது நின்றாள் நன்றாயிராது என்று எண்ணியவள் கண்ணீரை உள்ளிழுத்து விடைபெற்று வாகனத்தினுள் ஏறிவிட்டாள்.

ஏறிய கணம் விழிகள் உடைப்பெடுக்க கண்மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டாள்.

அவளை உணர்ந்த வல்லபன் அவளது கரங்களை பிடித்து கொள்ள அந்நேரம் அவளுக்கும் அது தேவைப்பட்டிருக்கும் போல அமைதியாக ஏற்று கொண்டாள்…
















 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அச்சோ ஆண்டவா ரெண்டு உள்ளங்கள் தவிப்பதை விட அதியோட எதிர்பார்ப்பு ரெம்ப கஷ்டம் 🙄🙄🙄🙄🙄🙄
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Selva ku avana veynam venum solla theriyala athu romba kastama suitation vallapan sari pannuvan 🤩🤩🤩 selva athi vallapan kelampidaga ini selva ku ellam nabagam varuma ❤️❤️
 
Top