• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 21 💜

“ம்மா... ஜூஸ் குடிங்க. வேற ஏதாவது வேணுமா?” எனக் கேட்டுக் கொண்டே சுந்தரியை கைத்தாங்கலாக எழுப்பி அமர வைத்தாள் இசைவாணி. அவருக்கு சிகிச்சை முடிந்து ஒரு வார மருத்துவமனை வாசத்தோடு நேற்றுதான் வீட்டிற்கு வந்திருந்தனர்.

“உனக்கே காய்ச்சல். நீ ஏன் வாணி வேலை செய்ற?” தன்னைக் கடிந்தவரைப் பொருட்படுத்தாமல் அவர் குடித்த குவளையை சிரத்தையுடன் எடுத்தவள்,

“எனக்கு ஃபீவர் சரியாகி ரெண்டு நாளாச்சும்மா. போன வாரம் வந்த காய்ச்சலை இன்னமும் சொல்லி என்னைப் படுக்க வைக்காத. நைட்டுக்கு என்ன குக் பண்ணமா?” என அவரிடம் சுகமாய் அலுத்தாள் மகள்.

“எனக்கு ரசம் சாதம் போதும். ஒரு ஆம்லேட் போட்டுக் குடு. மாப்பிள்ளைக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டு செஞ்சு கொடு வாணி. ரெண்டு நாளா பாவம் அவர் தூங்கலை, சரியா சாப்பிடலை!” என்றார் கரிசனத்துடன். இவள் தன்னறையை எட்டிப் பார்த்தாள்.
மதியம் வயிறு நிறைய உண்டுவிட்டு உறங்கியவன், இன்னும் எழவில்லை.

இவளது கட்டிலில் போர்வையை சுருட்டிப் படுத்திருந்தான். சில நொடிகள் அவனைப் பார்த்துவிட்டு அகன்றாள். சுந்தரிக்கு சிகிச்சை முடிந்த நான்கு நாட்களும் இவள்தான் இரவில் பார்த்துக் கொண்டாள். பகலில் அற்புதா, சரவணன், அம்சவல்லி, காமராஜ் என யாரேனும் இருவர் அவருடனே இருந்தனர். சிகிச்சை முடிந்த மறுநாள் மார்த்தாண்டமும் சிந்தாமணியும் வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.

பரிதி தினமும் காலை மாலை என இருமுறை மருத்துவமனை சென்றான். கமலா செய்து கொடுக்கும் உணவை எடுத்து வந்து கொடுத்துவிட்டு சற்று நேரம் சுந்தரியிடம் பேசிவிட்டுத்தான் அலுவலகம் செல்வான். ஐந்தாம் நாள் மருத்துவமனையிலே இருந்த உடம்பு இசைவாணிக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கமலாவும் இவனும்தான் உடனிருந்தனர். கமலா அறைக்குள்ளே கட்டிலில் படுத்துக்கொள்ள, பரிதி இரண்டு நாட்களும் வெளியே நாற்காலியிலே உட்கார்ந்திருந்தான். அவர்களின் தேவையை அவ்வப்போது பார்த்து நிறைவேற்றினான்.

சிந்தாமணி அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களுக்கு சமைத்துக் கொடுக்க, ஓரளவிற்கு எல்லாம் சமாளித்து வீடு வந்து சேர்ந்திருந்தனர். இரண்டு நாட்கள் உறங்காத உறக்கத்தையெல்லாம் சேர்த்து வைத்து தூங்குவது போல நேற்றிரவு வந்ததும் துயின்றுவிட்டான் பரிதி. காலையில் எழுந்து சாப்பிட்டுவிட்டு அங்கே வீட்டிற்கு சென்று தாய், தந்தையைப் பார்த்துவிட்டு வந்தவன், உண்டுவிட்டு மீண்டும் படுத்தான்.

சமையலறைக்குள் சென்றவள் சாதம் எவ்வளவு இருக்கிறதெனப் பார்த்தாள். மூன்று பேர் சாப்பிடக் கூடிய அளவிலிருந்தது. ரசத்திற்கு தொட்டுக் கொள்ள முட்டைக் கோஸை பாசிப்பருப்பு போட்டு கூட்டு செய்தவள், வண்ண அப்பளங்கள் பொரித்தாள். சுந்தரிக்கு என்ன வகையான உணவுகள் கொடுக்க வேண்டுமென மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் வந்திருந்தாள். அதிகமான எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகள், அப்பளம், ஊறுகாய், துரித உணவுகள் எதையும் சாப்பிடக் கூடாது. தினமும் ஒரு முட்டை, வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரை என மருத்துவர் உணவு அட்டவணை கொடுத்திருக்க, அதன்படியே சமைத்தாள்.

பரிதிக்கென்று என்ன சமைப்பது எனத் தெரியவில்லை. குளிர்சாதன பெட்டியை ஆராய்ந்தாள். நான்கு நாட்கள் முன்னே கமலா வாங்கி வைத்த உறைய வைத்த கோழிக்கறி இருந்தது. முதலில் அதை எடுத்து வெறும் தண்ணீரில் போட்டாள்‌. எளிமையாக கறிக் குருமாவை வைத்து, தோசை சுட்டுக் கொடுக்கலாம் என எண்ணி அதற்கு ஆயத்தம் செய்தாள். அரைமணி நேரத்தில் சமையலை முடித்துவிட்டாள்.

கமலா பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கோவிலுக்குச்‌ சென்றுவிட்டு வந்தார். அங்கே சென்னையில் சிவன் கோவில் பக்கத்திலே இருப்பதால் அவர் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சென்றுவிடுவார். இங்கே உடன் யாருமில்லாத காரணமும், புது இடம் என்பதாலும் பழகும் வரை எங்கும் செல்லவில்லை. சுந்தரி மருத்துவமனையிலிருந்த ஒரு வாரமும் இவருக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் தவித்துப் போனார். அதனாலே பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் பேச வேண்டியதாயிற்று. அப்படியே அவரிடம் நட்பையும் பெற்று கோவிலுக்குச் சென்று வந்தார்.

“ஏன் வாணிம்மா.‌.. நான் வர மாட்டேனா? நீயே எல்லாத்தையும் செய்வீயா? அப்புறம் எதுக்கு இந்த வீட்ல நான்?” அவர் மென்மையாகக் கடிய,

“ப்ரேக் பஸ்ட், லஞ்ச் நீங்கதானே செஞ்சீங்க. அதான் நான் டின்னர் பண்ணேன் கமலாம்மா!” என்றவள் நெற்றியில் அவர் விபூதியை இட வந்தார்.

சட்டென பின்னே சென்றவள், “வைக்க கூடாது கமலாம்மா. நான் பீரியட்ஸ்!” என்றாள்.

“சரி... அம்மாவுக்கு குடுக்குறேன்!” என அவர் செல்ல, இவளும் அவர்களுடன் சென்றமர்ந்து சிறிது நேரம் பேசினாள். இரவுணவு நேரம் வந்தது.

“ம்மா... வாங்க சாப்பிடலாம்!” என அவரைக் கைத்தாங்கலாக அழைத்தாள் இவள்.‌

“ஏன் வாணிம்மா கஷ்டப்பட்டு அவங்களை நடக்க சொல்ற. இங்கயே சாப்பாட்டை எடுத்துட்டு வரலாம் இல்ல?” என்றவரை இவள் மென்மையாய் முறைத்தாள்.

“அம்மா நல்லாகிட்டாங்க கமலாம்மா. அவங்க அப்பப்போ எழுந்து நடக்கணும். சின்ன சின்னதா ஏதாவது வேலை செய்யணும். தையல் போட்ட இடத்துல புண்ணு ஆறுனதும் எப்பவும் போல அவங்க நார்மலா எல்லா வேலையும் பண்ணலாம். ரூம்க்குள்ளே அடைச்சு நேயாளியாக்க கூடாது!” என தாயை அழைத்துச் சென்றாள். மூவரும் உண்ண அமர்ந்தனர்.

ரசம் சாதம், முட்டைக் கோஸை தாய்க்குப் பரிமாறியவள், தனக்கும் கமலாவிற்கும் அப்பளத்தை எடுத்துக் கொண்டாள்.

“சாரிம்மா... உனக்கு இன்னும் ஹெல்த் இம்ப்ரூவானதும் அப்பளம் தரேன். இப்போ வேணாம்!” என அவள் அப்பளத்தை எடுத்துக் கடித்தாள். சுந்தரி பெரிதாய் அப்பளம் விரும்பி சாப்பிட மாட்டார். அதனாலே தனக்காக பொரித்து எடுத்து வந்தாள் சின்னவள்.

“ஆமா... அந்த அப்பளத்துல என்ன இருக்கு. வெறும் உப்புதான். எனக்குப் பிடிக்கலை. நீயும் கமலாவும் சாப்பிடுங்க. எனக்கு வேணாம்!” அவர் முகத்தைச் சுளித்தார்.

“அப்பளத்தோட அருமை தெரியாதும்மா உங்களுக்கு. சின்ன வயசுல ஒரு தட்டுக் கஞ்சியை ரெண்டு அப்பளத்தை வச்சு குடிச்சு முடிச்சிடுவோம் நாங்க!” கமலா நொடித்தார். அவர்கள் பேசிக்கொண்டே சாப்பிட, பரிதி அப்போதுதான் உறங்கி எழுந்து வந்தான். கமலாவிடம் எந்த பாரபட்சமும் காண்பிக்காமல் உணவு மேஜையில் அமர்த்தி அன்போடு அன்னமிட்ட இசைவாணியை சிரிப்புடன் பார்த்தவாறே அவளுக்கருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“வாங்க தம்பி... சாப்பிடுங்க!” என்ற சுந்தரி, “வாணி... சீக்கிரம் சாப்பிட்டு, தம்பிக்கு தோசை ஊத்திக் குடு!” என்றார் மகளிடம்.

“ஆன்ட்டி... இப்பதானே எழுந்தேன். கொஞ்ச நேரமாகட்டும். அவளை அவசரப்படுத்தாதீங்க. அப்புறம் உங்க பொண்ணு ரூம்க்குள்ள வந்து என்னை அடிச்சு வைப்பா!” என்றான் கன்னத்தை தடவி போலியான குரலில். இசைவாணி அவனை கண்ணைச் சுருக்கி முறைத்தாள்.

“வாணி... தம்பி சொல்றது உண்மையா? அவரை அடிக்கிறீயா நீ?” மகளை முறைத்தார் சுந்தரி.

“ம்மா... தம்பி விளையாட்றாரு. அதெல்லாம் நம்ப வாணி பாப்பா தங்கம். அடிக்கலாம் மாட்டா” கமலா இவளுக்கு ஆதரவாகப் பேசினார்.

“பாருங்க ஆன்ட்டி... கமலாக்காவுக்கு என்னைப் பிடிக்கவே இல்ல. அதான் எனக்கு அகைன்ஸ்டா பேசிட்டே இருக்காங்க. அவங்களுக்கு என் மேல என்ன கோபமோ?” இசைவாணியின் தட்டிலிருந்த அப்பளத்தை எடுத்து மென்றவாறே கமலாவை வம்பிழுத்தான். அவரும் பதிலுக்குப் பேசினார். இவன் அவரைக் கேலி செய்து கொண்டே வாணியின் அப்பளத்தைக் கொறித்தான். இவளுக்குத்தான் அவன் செய்கையில் ஒருமாதிரி அசௌகரியம் வந்தமர்ந்தது.

“அங்க கிச்சன்ல அப்பளம் கிண்ணத்துல இருக்கு பரிதி. வேணும்னா போய் எடுத்து வச்சு சாப்பிடு. என் தட்டுல கை வைக்காத. எனக்கு சுத்தமா பிடிக்காது!” தன் தட்டிலிருந்த அப்பளம் ஒவ்வொன்றாய் அவன் வாயில் அரைபடவும், சின்னக் குரலில் அவனைக் கடிந்தாள். பெரியவர்கள் இருவரும் அவளைக் கேள்வியாகப் பார்த்தனர்.

“என்ன ஆன்ட்டி‌ பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க? கட்டுன புருஷனக்கு இம்மினியூண்டு அப்பளம் கூடத் தர மாட்டுறா!” என சுந்தரியிடம்‌ இவளைப் புகார் செய்தான். ஆனாலும் அவரின் ஆராய்ச்சி பார்வை மகளைத் துளைத்தது. இவள் படக்கென குனிந்து மானசீகமாக தன்னையே திட்டிக்கொண்டு உணவை வாயில் வைக்க செல்ல, வெடுக்கென அவள் கையை தன்னிடம் இழுத்து உணவை உண்டுவிட்டான் பரிதி.

“பசிக்குது டீ... என்னைப் பார்க்க வச்சு சாப்பிட்றீயே. இதெல்லாம் நல்லா இருக்கா?” எனப் பாவமாய் கேட்டான். அவள் அவனை முறைக்க முடியாது பல்லைக் கடித்தாள். அவன் செயலில் பெரியவர்களுக்குப் புன்னகை முளைத்தது.

“ஆன்ட்டி... கமலாக்கா... நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. புருஷன் சாப்பிட்டதை மட்டும் இல்ல, பொண்டாட்டி சாப்பிட்டதைக் கூட புருஷன் சாப்பிடலாம்!” என மீண்டும் ஒருமுறை அவள் கையிலிருந்த உணவை பிடுங்கி உண்டான். அவர்கள் கண்டும் காணாமலும் சாப்பிடத் தொடங்க, இவள் விறுவிறுவென உண்டு முடித்து சமையலறைக்குள் நுழைந்தாள். பரிதியும் அவள் பின்னோடு சென்றான்.

“அறிவில்லையா பரிதி உனக்கு? எதுக்காக இப்போ என் கையால நீயே ஊட்டிக்கிட்டே, அம்மா கமலாம்மாலாம் இருக்காங்க. என்ன விளையாட்டு இது?” என அவள் கத்தல் வெளியே வரைக் கேட்டது.

“புருஷனுக்குப் பசிக்குமே, அவனுக்கு சோறு போடணும்னு அக்கறை இருக்கா உனக்கு? நீ மட்டும் உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்க, சரி ரெண்டு அப்பளமாவது சாப்பிடலாம்னா அதுக்கும் முறைக்கிற!” என அவன் சலித்தான்.

“ரூம்க்குள்ள வா... உனக்கிருக்கு!” உதட்டை அசைத்தவள் கண்களின் உக்கிரத்தில் சிக்க விரும்பாதவன், வராத அலைபேசியை எடுத்து காதிற்கு கொடுத்தான்.

“ஆங்மா... இதோ வந்துட்டேன்மா!” என வெளியேறியவன், “வீட்டுக்குப் போய்ட்டு வரேன் ஆன்ட்டி!” என பெரியவர்களிடமும் கூறிவிட்டு அகன்றான்.

இசைவாணி வந்ததும், “ஏன் வாணி, தம்பிகிட்டே இப்படி சுள்ளுன்னு பேசுற. அவர் ஏதோ விளையாட்டுக்குப் பண்றாரு. அதுக்கெல்லாம் திட்டுவீயா?” மகளைக் கண்டித்தார் சுந்தரி.

“ப்ம்ச்... ம்மா நீ வேற. இதே வேலையை அவங்க வீட்லயும் பண்ணுவான்மா. அங்க கீர்த்தனா, அஜித்னு சின்ன பசங்க இருக்காங்க. அவங்க முன்னாடி இப்படிலாம் நடந்துக்கலாமா? அதட்டலைன்னா மறுபடியும் செய்வான். உனக்கு அவனைப் பத்தி தெரியலை!” என்றவாறே அவள் அகன்றாள்‌.

“என் முன்னாடியே எத்தனை அவன் இவன் போட்றான்னு பாரு கமலா!” பெரியவர் கூற,

“விடுங்கமா.‌. இந்தக் காலத்து புள்ளைங்க. அவங்களுக்கு எல்லாம் தெரியும். நம்மளை மாதிரி கிடையாது...” கமலா அவரை சமாதானம் செய்தார்.

பரிதி உள்ளே நுழைய, சிந்தாமணி உண்டு கொண்டிருந்தார். கீர்த்தனா படுத்தவாறே தொலைக்காட்சியைப் பார்த்திருந்தாள். இவன் அவரருகே சென்று அமர்ந்தான்.

“வாடா... எங்க அம்மா வீடு இருக்கதையே மறந்துட்டீயோன்னு நினைச்சேன்” அவர் கேலியாக கூற, தாயை முறைத்தான்.

“ஏன்... அப்போ என் பொண்டாட்டி இங்க வந்தப் பின்னாடி அவங்கம்மா இப்படி கேட்டா நீ சும்மா இருப்பியா? அதென்னமா கேர்ள்ஸ்க்கு ஒரு நியாயம்? பசங்களுக்கு ஒரு நியாயம்?” என சடைத்தான்.

“கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆவலை. அதுக்குள்ளேயும் உன் பொண்டாட்டிக்கு இவ்வளோ சப்போர்ட் பண்ணாத டா. என் மருமக ரொம்ப விவரம். புருஷனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டா!” என நொடித்தவருக்கு மகன் தன்னிடம் எதுவும் கூறலாமே அங்கு தங்கிவிட்டதில் மனத்தாங்கல்.

இதுவரை சிந்தாமணியிடம் கூறாமல் பரிதி எங்கும் இரவு தங்க மாட்டான். அப்படியே வெளியே சென்றாலும் ஒரு வார்த்தை தாயிடம் கூறிவிடுவான். அப்படியிருக்கையில் அவன் ஒன்றுமே பேசாது இரவு அங்கேயே தங்கி உண்டு என இருக்க, இவருக்கு சட்டென உரிமையுணர்வு தலை தூக்கியது.

“ப்ம்ச்... டிபிகல் மாமியார் மாதிரி பேசாத. அவ காதுல விழுந்தா அப்புறம் சிரிச்சுடுவா!” என்றவன், “நான் என்ன மோதிரமா? கர்சீப்பா? என்னைக் கைக்குள்ள போட்டுக்க? உயிரும் உடம்பும் இருக்க மனுஷன்மா நான்!” இவன் சடைத்தான்.

“கல்யாணமானதும் நல்லா பேச கத்துக்கிட்டடா!” அதற்கும் அவர் பதில் பேச,

“ஐயோ... என்னாம்மா நீ? இதுக்கு முன்னாடி நான் என்ன ஊமையாவா இருந்தேன். எதுக்கெடுத்தாலும் கல்யாணத்தை இழுக்காத. இன்னைக்கு நைட்டு மட்டும் அங்க தங்குறேன். நாளைக்கு நம்ப வீட்டுக்கு வந்துடுவேன்!” என்றான் அழாத குறையாக.

“இதெல்லாம் எதுக்குப்பா என்கிட்டே சொல்ற. உன் பொண்டாட்டி வீடு. நீ ஒரு மாசம் கூட இருந்துட்டு வா. என் வீட்டை என் புருஷன் பார்த்துப்பாரு!” இவர் முகத்தை தோளில் இடித்தார்.

தாயை சமாதானம் செய்யும் வழியறியாது தலையைச் சொரிந்தவன், “என்னம்மா சாப்பிட்ற? பருப்புண்டை குழம்பா? எனக்குப் பிடிச்ச குழம்பு. ஆனால் நான் இல்லாதப்ப செய்வ?” எனக் கேட்டு கொஞ்சம் உருண்டையை பிய்த்து வாயிலிட்டான். அவர் எதுவும் பதிலுரைக்காமல் சாப்பிட, ஆவென இவன் வாயைத் திறந்தான். மகனை முறைத்துக் கொண்டே மீத சோற்றை அவனுக்கு ஊட்டி முடித்தார் சிந்தாமணி.

“ம்மா... என்னதான் சொல்லு. உன் கைப்பக்குவம் யாருக்கு வரும்? உருண்டை குழம்பு செம்ம டேஸ்ட்!” என்றான் சப்புக் கொட்டி.

“சோறு போட்றேன். சாப்பிட்டு போடா!” என்றவர், ஒரு தட்டில் சோறு உருண்டை குழம்பு, வத்தல், மாங்காய் பச்சடி என வைத்துக் கொடுத்தார்.

“அதெப்படிம்மா நான் இல்லாத நேரம் பார்த்து நல்லா சமைக்குற?” அவரை முறைத்தவாறே சாப்பிட்டான்.

“சரிம்மா... நான் போய் தூங்குறேன். இசைவாணி எனக்காக வெயிட் பண்ணுவா!” என்றான் கைகளை நெட்டி முறித்து.

“ஹம்ம்...” அவனைப் பார்க்காமல் தலையை அசைத்தவர் தொலைக்காட்சி தொடரில் கவனமானார்.

“இந்த அம்மாவுக்கு இவ்வளோ பொசசீவ் வேணாம்டா சாமி. ஒருநாள் அவ வீட்ல தூங்கிட்டேன்னு இந்த பேச்சு பேசுது!” முனங்கிக் கொண்டே சென்றவன், மார்த்தாண்டத்தைப் பார்த்து இரண்டு வார்த்தைகள் பேசினான். அவர் கடையை அடைக்க உதவிவிட்டு வாணியின் வீட்டிற்குள்ளே நுழைந்தான்.

ஒரு கையை தலைக்கும் நீள்விருக்கைக்கும் இடையே கொடுத்து இசையருவியில் ஏதோ பாடலைப் பார்த்திருந்தாள் அவள். இவன் வந்ததும், “எவ்ளோ நேரம் உனக்காக வெயிட் பண்றது பரிதி. வா, வந்து சாப்பிடு...” என்றவாறே சமையலறைக்குள் நுழைந்தாள்.

“ஏய்.. இசைவாணி, இப்போதான் பருப்புருண்டை குழம்பு, வத்தல், மாங்காய் பச்சடின்னு வயிறு நிறைய சாப்பிட்டுட்டு வந்தேன். எனக்கு எதுவும் வேணாம்!” என்றான் அவள் பின்னாடியே சென்று. அவனைத் திரும்பி முறைத்தவள், அவனுக்காக செய்த கறிக்குருமாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றினாள்.

“எதுக்கு இப்போ முறைக்கிற நீ?” எனக் கேட்டு அவளருகே வந்தவன், “ஹே... என்ன இது? சிக்கன் கிரேவியா? ரசம் சோத்தை போட்டு ஏமாத்திடுவீங்கன்னுதான் நான் வீட்லயே சாப்பிட்டுட்டு வந்தேன்!” என்றான் அதிர்ச்சியாக.

“ஆமா... என் அம்மாதான் மாப்பிள்ளைக்கு ஏதாவது ஸ்பெஷலா செஞ்சு குடுன்னு சொன்னாங்க!” என்றாள் கடுப்புடன். இவள் கஷ்டப்பட்டு சமைக்க, அவன் அங்கேயே உண்டதில் கோபம் வந்தது.

“ஹே... நிஜமாக எனக்காக செஞ்சீயா?” எனக் கேட்டு குருமாவை தொட்டு சுவைத்துப் பார்த்தான். சரியான அளவில் காரமம், உப்பு என சுவை பிரமாதமாயிருந்தது.

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப் தோத்துடுவார் போல. பெர்பெக்ட் டேஸ்ட், உப்பு, காரம் எல்லாம் கரெக்டா இருக்கு...” ஆச்சரியப்பட்டவன், “சாரி... சாரி இசைவாணி. நீ எனக்காக குக் பண்ணிருக்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அங்க சாப்பிட்டிருக்க‌ மாட்டேன்!” என்றான் வருத்தமான குரலில்.

“நான் உனக்காக குக் பண்ணலை பரிதி. எங்கம்மாவோட நொச்சு தாங்காம பண்ணேன். சப்போஸ் நான் மாட்டேன்னு ஏதாவது சொன்னா அவங்களுக்கு எதுவும் டவுட் வந்துடும். மத்தபடி நீ சாரி கேட்கலாம் அவசியம் இல்ல!” எனக் கூறினாலும் அவள் குரலில் சின்னதாய் ஒரு ஏமாற்றம் படர்ந்தது.

தான் வேண்டாமென மறுத்தும் சுந்தரியுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அனைத்தையும் பார்த்து செய்தவனுக்கு தன் கையால் சமைத்து கொடுக்க ஆசையாயிருக்க, அவனுக்குப் பிடித்த அசைவ உணவை சமைத்தாள். அதுவும் பரிதி முதன்முதலாக இவளது கைப்பக்குவத்தை ருசி பார்க்கப் போகிறானென சிரத்தையெடுத்து குருமாவை செய்தாள்.

அவள் குரலிலே அகத்தை அறிந்தவன், “சரி... சரி. அப்செட்டாகாத இசைவாணி. நான் வேணா உனக்காக நீ செஞ்ச கிரேவிக்காக ஒரு தோசை சாப்பிட்றேன்...” என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்கோடு.

“ப்ம்ச்... அதுக்கெல்லாம் அவசியம் இல்ல பரிதி. நீ வழியை விடு...” அவனைத் தாண்டிக்கொண்டு சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தாள்.

“உனக்காக இல்ல... மிட் நைட்ல எனக்குப் பசிக்கும். முக்கால் வயிறுதான் சாப்பிட்டேன். கால் வயிறு ஃப்ரியா இருக்கு. ஒரே ஒரு தோசை சுட்டு குடு இசைவாணி!” என அவன் கெஞ்ச,

“முக்கால் வயிறு சாப்பிட்டல்ல. அதுவே போதும் உனக்கு. எதுனாலும் காலைல சாப்பிடு. போய் படு வம்பு பண்ணாம!” என்றாள் கண்டிப்பான குரலில்.

“ஒரு தோசை சுட்டுக் கொடுத்தா என்ன குறைஞ்சு போவ நீ?” அவன் அடமாகக் கேட்க, கமலா அந்நேரம் வந்துவிட்டார்.

“என்ன வாணி நீ... பசிக்குதுன்னு தம்பி சொல்றாரு. ஒரு தோசை சுட்டுக் கொடுக்க மாட்டீயா நீ?” அவர் இவளைக் கடிந்தார்.

“கமலாம்மா... உங்க தம்பியை ஒன்னும் பட்டினியா போடலை நான். அதெல்லாம் அவங்கம்மா கையாலே நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு வந்திருக்காரு!” என்றாள் அவனை பார்த்து முறைத்தவாறே.

“அங்க அம்மா சாப்பிட்டுட்டு இருந்தாங்கக்கா. அப்படியே எனக்கும் நாலு வாய் ஊட்டி விட்டாங்க. அதை சொன்னதுக்கு கோச்சிக்கிட்டா. இவ எனக்காக ஃபர்ஸ்ட் டைம் குக் பண்ணிருக்கா. அதை நான் சாப்பிடலைன்னு உங்க வாணிக்கு ரொம்ப கோபம் வருது!” அவன் அவரிடம் கூற, சின்ன குழந்தைகள் போல இருவரும் தன்னிடம் புகாரளிக்கின்றனர்‌ என்றெண்ணி சிரித்துவிட்டார் அவர்.

“தம்பி... இப்போதானே கல்யாணமாகியிருக்கு. போகப் போக பொண்டாட்டியையும் அம்மாவையும் சமாளிக்க கத்துப்பிங்க!” என சிரித்த கமலா, “வாங்க... நானே தோசை சுட்டுத் தரேன்...” என்றார்.

“கமலாம்மா... நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்” அவரை அனுப்பிவிட்டு தானே தோசையை ஊற்றினாள்.

சமையல் திண்டில் ஏறியமர்ந்தவன், “ஒன்னே போதும் இசைவாணி. இன்னொரு தோசை சுட்றாத. என் வயிறு வெடிச்சிடும்!” என முணுமுணுத்து, ரசித்து ருசித்து உண்டான். அவன் சாப்பிடுவதையே பார்த்திருந்தாள் இசைவாணி.

ஒரு தோசை விள்ளலை எடுத்து குழம்பில் தோய்த்து அவள் வாயில் திணித்துவிட்டான். திடுக்கிட்டு பயந்து, அந்த தோசையை உண்ணாது கையில் துப்பி குப்பைக் கூடையிலிட்டவள், “அறிவிருக்கா பரிதி உனக்கு? அப்போ அப்படித்தான் என் கையால நீயே ஊட்டிக்கிட்டே. இப்போ நீ சாப்பிட்டதை எனக்கு ஊட்டி விட்ற. நம்ப ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃபா மத்தவங்க முன்னாடி நடிச்சா போதும். நீ ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்!” என்றாள் ஆத்திரம் மிகுந்த குரலில்.

“ரொம்ப பண்ணாத இசைவாணி. நான் ஜஸ்ட் ப்ரெண்ட்லியா ஊட்டுனேன். ஏன் உன் ஃப்ரெண்ட்ஸ் ஊட்டிவிட்டா நீ சாப்பிட மாட்டீயா?” எனக் கடுப்புடன் கேட்டான் அவன்.

“என் ப்ரெண்ட்ஸூம் நீயும் ஒன்னும் இல்ல பரிதி. நீ என்கிட்ட சொன்னதுதான். நோ பெர்சனல் அட்டாச்மெண்ட்ஸ். டிஸ்டன்ஸ் கீப் பண்ணு. அப்போதான் இந்த‌ ரிலேஷன்ஷிப் ப்ரேக் பண்ணும்போது யாருக்கும் கஷ்டமா இருக்காது!” என்றாள் அழுத்தமான குரலில்.

“நான் என்ன உனக்கு முத்தமா கொடுத்தேன் அட்வாண்டேஜ் எடுத்துக்காதன்னு சொல்ற? ஜஸ்ட் ஒரு வாய் தோசை ஊட்டுனேன். அதுக்குப் போய் க்ளாஸ் எடுக்குற நீ. ப்ரெண்ட்ஸா இருப்போம்னு கதை விட்டது நீதான். ஏன் நான் ஊட்டி விட்டதால உனக்கு என் மேல லவ் பொத்துகிட்டு வந்துடுச்சா என்ன?” என்றான் கேலியாக.‌

“இந்த மாதிரி வரம்பு மீறி பேசாத பரிதி. உனக்கு வேணா நீ பண்றது எல்லாம் ஃபன்னா தெரியலாம். பட் நான் அப்படி கிடையாது. ஈவன் ப்ரெண்ட்ஸ்னாலும் டிஸ்டன்ஸ் கீப் பண்ற ஆளு நான். எனக்கு மொத்தமே ரெண்டு மூணு ஃப்ரெண்ட்ஸ்தான். அந்த லிஸ்ட்ல நீயெல்லாம் வரவே மாட்ட. உன் கேரக்டர் வேற.‌ என்னோட செட்டே ஆகாது!” என்றவள் விறுவிறுவென நகர,

‘யப்பா... இன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. ரெண்டு பேர் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாங்க. காரணமே இல்லாம திட்டு வாங்குற ஒரே ஆள் நான்தான்!’ என முனங்கியவன், வயிறு நிரம்ப உண்டு விட்டதால் சிறிது நேரம் நடந்துவிட்டது அறைக்குள் நுழைந்தான்.

“ஆமா வினோத்... வி.எஃப்.எஸ்க்கு டேட் வந்துடுச்சு. நெக்ஸ்ட் மந்த் ட்வென்டி தான். ஆமா!” என இசைவாணி அலைபேசியில் உரையாட,

“ஹே... வி.எப்.எஸ் வந்துடுச்சா இசைவாணி?” என ஆர்வமாகக் கேட்ட பரிதி, அவள் மடிக்கணினியைத் திருப்பி பார்த்து உறுதி செய்தான். அவள் விண்ணப்பித்த நுழைவு இசைவுக்காக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு வந்திருந்தது.

“சென்னையா? பெங்களூரா?” எனக் கேட்டவன், சென்னையின் முகவரியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

அவள் அலைபேசியை வைத்ததும், “இசைவாணி... நானும் வரேன். சென்னை போய்ட்டு வரலாம்!” என்றான் ஆர்வமாக.

“நீ எதுக்கு, நானே தனியா போய்ட்டு வந்துடுவேன்!” அவள் உர்ரென கூற,

“ம்ப்ச்.. இசைவாணி. விடு, இனிமே நான் உன்கிட்ட நீ சொல்ற மாதிரி அட்வாண்டேஜ் எல்லாம் எடுக்க மாட்டேன். அதனால் முகத்தை நார்மலா வை!” என அவளை சமாதானம் செய்தவன்,

“ கல்யாணமாகி முதமுத நீ வெளியே போற. அப்படி இருக்கப்போ தனியா போனா ரெண்டு வீட்லயும் சந்தேகமா பார்ப்பாங்க. சோ, பெட்டர் சேர்ந்தே போகலாம். என் ப்ரெண்ட்ஸ் அங்க இருக்காங்க. அவங்களை மீட் பண்ணிட்டு வரேன் நான். நீயும் உன் வேலையை முடி. ரெண்டு பேரும் ஓன்னா ரிடர்ன் வருவோம்!” என்றான் சின்னதான திட்டமிடலுடன்.

“ஹம்ம்... போலாம்!” அவள் முடித்துவிட, அவன் அவளது மெத்தையில் படுத்துக் கொண்டான்.

“தூங்கு மூஞ்சி பெட். படுத்தா சொர்க்கமா தூக்கம் வருது!” என்றவன் கொட்டாவி விட, அவனிடமிருந்த தன் போர்வையை உருவியவள், வேறொன்றைக் கொடுத்தாள்.

நேற்று இவள் அறைக்கு வரும் முன்பே இவளது போர்வையை எடுத்துப் போர்த்தி உறங்கிவிட்டான் பரிதி. என்னவோ அவளுக்கு அது அசௌகரியத்தை கொடுத்தது. தன் பொருட்களை அவன் உபயோகிக்க கூடாது என்று யோசித்துதான் புதிதாய் போர்வை, தலையணை எல்லாம் வாங்கி வைத்தாள்.

ஆனால் பரிதி இவளுடையதை எ
டுத்து வெகுஇயல்பாக பயன்படுத்தினான். இன்றைக்கு அவன் ஊட்டிவிட்டதில் இவளுக்கு உடன்பாடில்லை. அவனுக்கான எல்லையை தீவிரமாக வரைய வேண்டும் என்ற எண்ணத்தோடு உறங்கிப் போனாள்.

தொடரும்...


 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Enna theeviram ah iva yosichi enna use anga parithi avan istathuku than panran.
 

Lak

New member
Messages
28
Reaction score
10
Points
3
Nice
 
Top