• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நேயமுடன், நான் - 3

Ush

Well-known member
Messages
109
Reaction score
270
Points
63
3

அன்றிரவு ஆறரை இருக்கும். அவளது யூடியூப் பிரபலமான தோழி ஷாலுவின் அறையில் பீன்பாக் ஒன்றுக்குள் சுருண்டு கொண்டு டார்க் சாக்லேட் மூடிய பாதாம்களை ஒவ்வொன்றாய் வாய்க்குள் அனுப்பிக்கொண்டிருந்தாள் நேயா.

“சோ நீ ருத்ராவுக்கு ப்ரைவேட் செப்.. எங்க ஆல்ரவுண்டர் ருத்ரேஸ்வருக்கு ப்ரைவேட் செப்... அவனோட வீட்ல இவ்ளோ..இவ்ளோ பக்கத்துல இருந்து அவனை பார்த்துட்டு வந்துருக்க.. ஏன்டி டாகே முன்னாடியே சொல்லலை! துரோகி துரோகி..” என்று நம்பிக்கையே இல்லாமல் அமைதியாய் ஆரம்பித்து உச்சஸ்தாயிக்கு போய் அவளுக்கு முன்னே வந்து நின்று ஷாலினி கேள்வி கேட்டுக்கொண்டிருக்க அவளை கண்டு கொள்ளாமல் பாதாமை மென்று கொண்டிருந்தாள் நேயா..

“பதில் சொல்லுடி உருவமே..” அதொன்றுமில்லை..ஷாலு அப்படித்தான் அவளுக்கு யாரையேனும் கெட்ட வார்த்தை போட்டு திட்டத்தோன்றும் நேரமெல்லாம் இப்படித்தான் வினோத வார்த்தைகள் வந்து விழும்.

“வந்ததில் இருந்து நான் எத்தனை கதை சொன்னேன். நீ எதையாவது காதுல வாங்கினியா? அப்படியென்ன ருத்ரா பைத்தியம் உங்களுக்கெல்லாம்? அவனை பக்கத்தில் பார்த்தால் தான் தெரியும் அவன் வண்டவாளம்!” நேயா கோபமாய் சொல்ல

“பக்கத்தில் இருந்து பார்த்து விட்டேன் என்று திமிரில் பேசுகிறீர் மன்னா..” என்று முறைத்தாள் ஷாலு

“அடச்சீ முதல்ல நிறுத்து நானே வெறுத்துப்போய் வந்துருக்கேன்..நான் என்ன செய்யட்டும்?” என்று அழுவாள் போல நேயா கேட்டு குழம்ப

“இவ்வளவு ஏன் குழம்பணும்டி? அவன் உனக்கு அண்ணனா மாமனா? பிடிக்கலைன்னா போடா உன் நஷ்டம்னு வந்துடு சிம்பிள்..” என்று தோளைகுலுக்கினாள் ஷாலு.

“பிடிக்கலைன்னு இல்லை.. இந்த அசைன்மென்ட் எனக்கு ரொம்ப வித்யாசமா சவாலா இருக்கு..பாதருக்காகன்னு இல்லை.. எனக்கே இதை சரி பண்ணி முடிக்கணும்னு ஆசையாத்தான் இருக்கு ஆனா..” என்று நேயா இழுக்க

“ருத்ரா தான் பிரச்சனை..” என்று எடுத்து கொடுத்தாள் ஷாலு..

ஹ்ம்ம்.. என்றவள் “இப்படி யோசியேன்...ஒரு பொல்லாத கடிக்கற நாய்க்குட்டிக்கு காயம்,, அதை கொண்டு வந்து காப்பகத்துல விட்ருக்காங்க.. நான் அங்கே டாக்டர்..அது கடிக்குதுங்கறதுக்காக நான் போடான்னு அதை விரட்டி விட முடியாதுல்ல..” என்று கேட்டாள்

“அது வேற இது வேற.. நான் சொல்லிடுவேன் ஆனால் நீ ஒரு முடிவு பண்ணிட்ட” என்று சிரித்த ஷாலு “நான் சொல்றதை பாலோ பண்ணு” என்று நிமிர்ந்து அமர்ந்தாள்.

ஷாலு நேயாவுக்கும் ஜெரமிக்கும் மிக நெருக்கமான ஸ்கூல் தோழி. இப்போது மருத்துவக்கல்லூரி மாணவி. ஆரோக்கியமில்லாத உணவுகளை ஆரோக்கியமான வடிவில் காமடியாக பிரசன்ட் செய்து யூடியூபில் பிரபலமாகி வருபவள். ஆகவே தான் தன்னுடைய தற்போதைய பிரச்சனைக்கு ஐடியா கேட்டு ஷாலுவை தேடி வந்திருந்தாள் நேயா..அவள் வாடகைக்கு இருக்கும் வீடும் அங்கிருந்து ஐந்து வீடுகளை தாண்டி நடந்தால் வந்து விடும். ஆக யாராவது ஒருவர் வீட்டில் தான் இருவரும் எப்போதும் இருப்பர்.

அடுத்த அரைமணி நேரம் நிறைய டிப்ஸ், சமையல் குறிப்புக்கள், ருத்ரா இன்றைக்கு அவளை ரசிகை என்று நினைத்த கதை என சிரிப்போடே ஓடி மறைந்தது. மறக்காமல் அவனுடைய டயட் சார்ட்டையும் பார்த்து உறுதிப்படுத்தியவள் வென்று வா மகளே என்று ஆசீர்வதித்தாள்.

“நேரம் ஆயிடுச்சு அம்மா தேடப்போறாங்க” என்று நேயா சொல்லி முடிக்க முன்னர் “மலர் மம்மி காலிங்” என்று மொபைல் அழைத்தது.

அய்யடா என்று அவசரமாய் எடுத்து காதுக்கு கொடுக்க “இன்னும் என்னம்மா பண்ற.. வேலை முடியலையா?” என்று மலரின் கவலைக்குரல் மறுபக்கம் ஒலித்தது.

“மா.. நான் ஷாலு கூட இருக்கேன். உங்களுக்கு வாட்சைப் பண்ணிருந்தேன் பார்க்கலையா?”

“இல்லையே... சரி சரி நீ அங்கேயே இரு.. இன்னிக்கு மினி இட்லி செஞ்சிருந்தேன்,, அவளுக்கு எடுத்துட்டு வர்றேன்” என்று போனை வைத்து விட்டார்.

“என்னடி?”

“அம்மா உனக்கு மினி இட்லி கொண்டு வராங்களாம்”

“ஐ ஜாலி.. “ ஷாலுவின் உற்சாகத்தை பார்த்து லேசாய் புன்னகைத்தவளின் கண்ணில் தோன்றிய சோகத்தை சரியாய் பிடித்துக்கொண்டவள் இப்போ என்னாச்சு என்று விழிகளை சுருக்கினாள்

“போ..அம்மாக்கு பிடிக்கவே இல்லைடி.. கண்மணி அக்கா பண்ணதும் நான் பண்றதும் ஒண்ணுன்னு சொல்றாங்க..” என்று நேயா முறையிட

பட்டென்று சிரித்து விட்டவள் இவள் முறைக்கவும் “அவங்க போன தலைமுறைடி.. இஞ்சினியர் டாக்டர் குறைந்த பட்சம் கவர்ன்மென்ட் வேலை இதெல்லாம் தான் படிச்சவங்க வேலைன்னு நினைப்பாங்க..விட்டுத்தள்ளு” என்று சமாதானம் செய்தாள்

“இத்தனை காலம் ஆயிடுச்சு..இப்போவும் அப்படியே இருந்தா எப்படி?”

“புரிஞ்சுப்பாங்கடி.. அந்த ராயல் அசைன்மென்ட் வந்தப்போ என்கிட்டே உனக்கு கொடுத்த டயமன்ட் நெக்லசை பெருமையா காமிச்சாங்க..” என்று ஷாலு சொல்ல

“அப்பப்போ அந்நியன் மோடுக்கு போய்டுறாங்களே” என்றாள் நேயா

“மாறிடும்டி..உண்மையை சொல்றேன்..ஒரு ரெண்டு வருஷம் முன்னே உன்னை பார்க்கும் போதெல்லாம் என் கூட என் பக்கத்துல இருந்து படிக்க வேண்டியவன்னு எவ்ளோ வருத்தப்படுவேன் தெரியுமா? டாக்டருக்கு படிக்கிறது தான் உயர்வு என்ற எண்ணமெல்லாம் கூட அப்போ எனக்கு இருந்துதுன்னு வையேன். அப்புறமா புரிஞ்சிடுச்சுடி..நீ முழுமையா ஆக என் கூடத்தான் படிக்கணும்னு இல்லை....நீ இருக்கற இடத்துல சந்தோஷமாத்தான் இருக்கன்னு. அது எனக்கும் ஒட்டினதுல தானே இந்த யூடியூப் பிசினசே ஆரம்பிச்சேன்!”

என்றைக்கும் இதைப்பற்றி பேசியிராத ஷாலுவின் வார்த்தைகளில் அயர்ந்து போனவள் “நிஜமாவா?” என்று கேட்டாள்.

“ம்ஹ்ம்...”

“உனக்கு புரியுது இந்த ஜெரமி ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேன்றான்? பொய் பொய்யா சொல்லிட்டு திரியிறேண்டி.. எப்போ மாட்டிக்கப்போறேனோ தெரியல” அவள் சலித்துக்கொள்ள

“ட்ரஸ்ட் மீ ஹி நோஸ்” என்றாள் ஷாலு அமர்த்தலாய்

புரியாமல் அவளை ஏறிட்டு பார்த்தாள் நேயா.

“ஆம்பளை புத்தி.. அவங்களுக்கு அவங்க தான் மத்தவங்களுக்கு செய்யணும்.. அவங்களுக்காக இல்லைன்னாலும் ஊர் உலகத்துக்கு அப்படி தெரியணும்.. இதுல நீயே விரும்பி போயிட்டாலும் மொத்தமா லாபம் அவனுக்குன்னு ஆயிடுச்சுல்ல..உன் கிட்ட இருந்து எடுத்து அவன் வாழ்ந்ததா ஆயிடுச்சு..இதுவே மத்த மாதிரி ஆயிருந்தா எங்க அண்ணன் தங்க அண்ணன்னு உன்னை பாடவச்சு சார் பிலிம் காட்டியிருப்பார்.. இப்போ அது முடிலைன்னு பீலிங்.. சின்னபையன்டி வளர்ந்துருவான்..”

ஷாலு ஏற்ற இறக்கத்தோடு சொன்ன விதத்தில் வெடித்து சிரித்தாள் நேயா.. அவனுக்கும் நம்ம வயசு தாண்டி.

“மனதளவுல அவனுக்கு நம்மை விட நாலு வயசாவது கம்மி..”

“ஏய் என்ன என் பையனை பத்தி உங்களுக்கு என்ன கிண்டல் வேண்டியிருக்கு” என்று சிரிப்போடு கேட்டபடி கொண்டு வந்த மலர் பையை டேபிளில் வைத்து விட்டு.. “ஷாலு ஏன்டி இருக்கறது ரெண்டே ரூம் ஒழுங்கா வச்சா என்ன? நீயும் தான வந்து அரை மணிநேரமா இருக்க என்று ரெண்டு பேருக்கும் டோஸ் விட்டு விட்டு சிதறிக்கிடந்த புத்தகங்களை ஒதுக்கியவர் “நாளைக்கு ரூம் டூர் கிச்சன் டூர்னு எதையாவது வீடியோ போடு..கமன்ட்ல வந்து கிழிக்கிறேன்” என்று விழிகளை உருட்டி மிரட்டினார்

வெடித்து சிரித்தவர்களை வெட்டி பிரித்து “வா வா ஆறுமணிக்கு வேலைக்கு கிளம்பிடற.. சாப்பிட்டு சீக்கிரம் தூங்கு.. ஷாலும்மா கேட்டை பூட்டிக்க” என்று மலர் நேயாவை அழைத்துக்கொண்டு வர இருவருமாய் இருளில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

பகலில் இருந்த இறுக்கமெல்லாம் இப்போது ஓடிப்போயிருக்க அமைதியான மனதுடன் அடுத்த நாள் செய்யவேண்டியவைகளை திட்டமிட்டபடி நிம்மதியாய் படுத்தும் விட்டாள்.

மறுநாள் அவள் ருத்ரன் வீட்டுக்கு போனபோது வீடு அமைதியாய் இருந்தது.. உள்ளே போனால் சுபா வீடு முழுக்க தானியங்கி துடைப்பானை ஓட விட்டு விட்டு வேலை செய்து கொண்டிருந்தார்..

அவளைக்கண்டதும் புன்னகைத்தவர் “நேத்து நீங்களே கழுவி அடுக்கியும் வச்சிட்டீங்களேம்மா..எனக்கு கிச்சன்ல வேலையே வைக்கலையே..” என்று கேட்டார்

“அட அதெல்லாம் பெரிய வேலை இல்லை சுபா” என்று சிரித்தபடி தன்னை சுத்தம் செய்து ஏப்ரனை அணிந்து கொண்டு இன்றைக்கு எளிமையான ஆம்லேட் சூப்போடு ஆரம்பிக்கலாம் என்று பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு கிச்சனுக்கு வர வீட்டுக்கு பின்பக்கமுள்ள தோட்டத்தில் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது.

மெல்ல எட்டிப்பார்த்தாள் ருத்ரேஷ்வர் தான் அந்த நேரத்தில் தோட்டத்தில் ஹாஸ் பைப்பை வைத்துக்கொண்டு தண்ணீர் விட முயன்று கொண்டிருந்தான்

இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.. என்று நேயா எண்ணி முடிப்பதற்குள் ஹார்ஸ்பைப்பை மேலே தூக்கி ஆ என்று வலியில் முகம் சுருக்கியபடி அதை தரையில் போட்டு விட்டு வேலு வேலு என்று கத்தினான்..

வேலு ஓடி வந்து பைப்பை எடுத்துக்கொள்ள மீதிக்கு தண்ணீர் விடுமாறு கையை காட்டி விட்டு விடு விடுவென வீட்டுக்குள் போய் அறைக்கதவை மடாரென்று அடைக்க

பின்னாலேயே நின்று பார்த்திருக்க வேண்டும் “ரொம்ப வலிச்சிருச்சு போலம்மா” என்றார் சுபா ரகசியகுரலில்..

ஏழடி வளர்ந்த எருமை மாட்டுக்கு கையை தூக்கினா காஸ்ட் போட்ட தோள் வலிக்கும்னு தெரியாதா என்று எரிச்சலாய் நினைத்துக்கொண்டவள் ஒன்றும் சொல்லவில்லை..ஏனோ ருத்ரனின் வலியில் கசங்கிய முகமே நினைவு வந்தது.

என்ன நினைத்தாளோ பிறகு எடுத்த பொருட்களை எல்லாம் கொண்டு போய் மீண்டும் வைத்து விட்டு ஷாலு சொன்னவைகளை மனதுக்குள் ஓட்டிப் பார்த்து புதிய செட் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தாள்

“என்னம்மா மாத்தி எடுத்துட்டு வந்துட்டீங்களா?” என்று வேலையில் கவனமாய் இருந்தாலும் அவள் செய்வதையும் ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருந்த சுபா கேட்க

“ஹாஹா மெனுவை மாத்திட்டேன்” என்று கண்ணடித்தவள் வேலையில் இறங்கினாள்..

வெள்ளையாய் சிரித்தபடி “ஐயா கொஞ்ச நேரத்துக்கு கொஞ்சம் கோபமா தான் இருப்பார்” என்று மெல்லிய குரலில் எச்சரித்து விட்டு சுபா போய்விட்டார்

சரியாய் அந்த நேரம் ஷாலு அப்போது தான் எழுந்திருப்பாளாய் இருக்க வேண்டும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

காப்பகம் தொடர்ந்து நடக்க நாய்க்குட்டியின் ரெக்கமெண்டேஷன் தேவையில்லை..

நீ தொடர்ந்து வேலை செய்ய ருத்ரேஷ்வர் ரெக்கமண்டேஷன் தேவை
என்று கிண்டல் சிரிப்பு இமொஜி சேர்த்து அனுப்பியிருந்தாள்.

உள்ளே சிலீரென்றது அவளுக்கு. கிண்டல் போல இருந்தாலும் ஷாலு எச்சரிக்கை தான் செய்திருந்தாள்..அவனுடைய செல்வாக்குக்கு அவளை கறுப்பு பட்டியலில் போட எவ்வளவு நேரமாகும்..நேயாவுக்கு வாழ்க்கையே போய்விடுமே..

இங்கிருக்கும் ஒவ்வொரு படியையும் பார்த்து எடுத்து வைக்க வேண்டும்.. இதயம் சொல்வதை ப்ளாக் செய்து விட்டு மூளை சொல்வதை கேட்கவேண்டும். இன்றைக்கு எப்படியாவது அவனிடம் திட்டு வாங்காமல் சண்டை போடாமல் இருவரும் சேர்ந்து இயங்குமளவு உறவு நிலைக்கு அடித்தளம் போடவேண்டும் என்று சங்கல்பம் அவள் மனதில் உருவானது.

சரியாக அவள் எல்லாவற்றையும் எடுத்து வழக்கம் போல பெரிய தட்டில் அடுக்கிக்கொண்டு இருக்க ருத்ரா!!! ருத்ரா என்று புதிய ஆண்குரல் ஒன்று அழைத்தபடியே கதவை திறந்து வீட்டுக்குள் வந்தது..

ருத்ரனிடம் இருந்து பதில் வரவில்லை..

ஆனால் அவன் இறங்கி வருகிறான் என்று காலடி சத்தம் கேட்டது.

“என்னடா நினைச்சிட்டிருக்க உன் மனசுல.. நேத்து பிசியோத்தெரப்பிஸ்டை விரட்டி விட்டுட்டியாம்..டீம் மானேஜ்மென்ட் என்னை பிடிச்சு கத்துறாங்க..நேத்து முழுக்க என்னை வச்சு செஞ்சிட்டாங்க.. பிரைவேட் செப் வேணாம் நாங்களே ஒழுங்கு பண்ணிக்கிட்டோம்னு சொன்னதுக்கு அவனுக்கு திரும்ப டீமுக்கு வரணும்னு எண்ணம் இருக்கா இல்லையான்னு கேட்கிறாங்க..” அந்த குரல் டென்ஷனாய் ஒலித்தது

...

“ருத்ரா! நான் கேட்டுட்டிருக்கேன் நீ பதிலே சொல்லாம இருக்க..”

“எனக்கு அந்தாளை பிடிக்கலைன்னு அர்த்தம்..”

“இத்தோட இது நான்காவது ஆள்..”

“நான் தேடிக்கிறேன்..உனக்கு அந்த கவலை வேணாம்..”

“என்னவோ பண்ணித்தொலை.. நல்லா ஞாபகம் வச்சுக்க அடுத்த வருஷம் டீ சீரீஸ் ஆடனும்னா இன்னும் மூணே மாசத்துல தோளை சரி பண்ணி மூணு மாசம் முழு மூச்சா ப்ராக்டிஸ் பண்ணினா தான் லிஸ்ட்ல வர முடியும்”

ருத்ரனின் பக்கம் பதிலில்லை.. வந்த மனிதனை முகம் பார்க்காமலே நேயாவுக்கு பிடிக்கவில்லை..

“சாப்பிட்டியா? எட்டு மணி ஆகுதே வா..”

பேசாமல் ருத்ரன் எழுந்து வர சூடான தட்டுக்களோடு நேயா வர இப்போது ருத்ரனை விட கொஞ்சம் மெலிதாய் கொஞ்சம் உயரம் குறைவாய் இறுக்கமான முகத்துடன் அந்த குரலுக்குரியவன் புலப்பட்டான்.

அவன் முகத்திலும் இவளை கண்டதும் அதிர்ச்சி தான் தெரிந்தது.

“நீ..நீங்க தான் பாதர் அனுப்பிய ப்ரைவேட் செப்பா?”

“ஆமாம்” என்று நேயா தன்னை இறுக்கமான முகத்துடன் அறிமுகப்படுத்தி கொள்ள ருத்ரனை பார்த்தான் அவன்.. அவன் விழிகளாலேயே தோள்களை குலுக்கும் முகபாவனையோடு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

தன் பெயரை “ஆதவன்” என்று முறைப்பாய் சொன்னவன் “ருத்ரேஷ்வரோட உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் காயம் ஆறவும் அவன் உடம்பு பிட்டாவே இருக்கணும்னா..கொஞ்சம் கூட சமரசம் பண்ணக்கூடாது” என்று வெடுக்கென்று சொல்லிக்கொண்டே போனவன் அதற்குள் ருத்ரன் மூடியை திறக்கவும் அதற்குள் அமர்ந்திருந்த பான் கேக் அடுக்குகளையும் சிரப்பையும் கண்டு நெஞ்சை பிடிக்காத குறையாய் ஏய் ஏய் ஏய் என்று அதிர்ந்து ருத்ரனை நிறுத்த முயன்றான்..

“ஏம்மா அறிவிருக்கா உனக்கு? என்ன செஞ்சு வச்சிருக்க..அவன் இதெல்லாம் சாப்பிடக்கூடாது!”

அவன் சொல்லிக்கொண்டிருப்பதற்குள் ருத்ரன் இவர்கள் இருவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டு கத்தியால் வெட்டி சிரப்பில் தோய்த்துக்கொண்டு உண்ணவே ஆரம்பித்து விட அவன் விழிகள் தெறித்து விடும் போல விரிந்ததை கண்டு நேயாவுக்கு சிரிப்பை அடக்க பகீரத பிரயத்தனம் வேண்டியிருந்தது. சரியான பிரஷருக்கு பிறந்தவன்!

“என்ன பண்ணி வச்சிருக்க.. உனக்கு எல்லா விபரமும் முன்னாடியே அனுப்பிருந்தேன்ல..” இப்போ ஆதவன் முழுமையான ஒருமைக்கு தாவியிருக்க

நேயா விறைப்பாய் நிமிர்ந்தாள் “எல்லாமே டயர்ட் சார்ட்படி தான் செய்திருக்கேன் சார்.. கொஞ்சம் கூட கார்போவைதரேட் அளவு கூடாமல், இனிப்பு சுத்தமாய் இல்லாமல் தான் செய்திருக்கிறேன்.. பான் கேக் போல தெரிந்தாலும் உண்மையில் அது பான் கேக் இல்லை. சிரப்பில் இருப்பது ஸ்டேவியா..அது சாருக்கு கொடுக்கலாம் என்று சார்ட்டில் போட்டே இருந்தது..”

அதன் பிறகு என்ன சொல்வது என்று விழித்து நம்ப முடியாமல் அந்த பான் கேக்கை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு “ அடுத்த ப்ளட் டெஸ்ட் எடுக்கும் போது தெரியும். உன் மேல் கேஸ் கூட போட முடியும்.. தெரியும்ல” என்று மிரட்டி விட்டு வெளியே போய்விட்டான்..

அவளும் உள்ளே போய்விட்டவள் சற்று நேரத்தில் சாப்பிடும் அறையில் அரவம் இல்லாமல் போனதும் போய் பார்த்தாள், ஒன்று கூட மிச்சமில்லை.. பாவம் என்று தான் தோன்றியது..

சதா இந்த ஆதவன் பேச்சை கேட்டால் இல்லாத ஸ்ட்ரெஸ் எல்லாம் வந்து தான் சேரும்..

அவள் தொடர்ந்து மதிய சமையலுக்கு ஆயத்தமாக உள்ளே இப்போது தெரப்பிஸ்ட் என்று வாக்குவாதம் போய்க்கொண்டிருந்தது.

உள நல மருத்துவரிடம் பேச மாட்டேன் என்று ருத்ரா அவரையும் நிறுத்தியிருக்க வேண்டும்.. டீம் மானேஜ்மெண்டுக்கு என்ன பதில் சொல்ல என்று ஆதவன் வெந்து கொண்டிருந்தான்.

விளையாட்டு என்றால் அவர்களுக்கென்ன ஜாலியாய் விளையாடி விட்டு போவார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.. ஆனால் அவர்களுக்கு பின்னே இருக்கும் அழுத்தங்கள் கிட்டத்தட்ட பொம்மைகள் போல யாரோ தயாரித்து வைத்த அட்டவணைக்கு ஏற்றால் போல வாழ வேண்டியதை பார்க்கும் போது பரிதாபம் தான் வந்தது. கிட்டத்தட்ட மாடுகளுக்கு கொம்பு சீவி, தீனி போட்டு சண்டைக்காய் வளர்ப்பது போலத்தான் இங்கேயும்!

காலையில் கொஞ்சம் அதிகமாய் சந்தோஷப்பட்டு விட்டாள் போலும். மதியத்துக்கு அவள் செய்து வைத்த உணவு கொறிக்கப்பட்டிருந்தது..பெரும்பகுதி அப்படியே மீதமாகியிருக்க ஆதவன் போனதும் மேலே போய் அறையை அடைத்துக்கொண்டவன் வெளியே வரவே இல்லை..

நோயாளி எல்லா நேரமும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதே.. ஒரு பெருமூச்சோடு அதை கொண்டு போய் கொட்டி விட்டு அவன் இல்லாததில் தைரியம் பெற்று ஹாலை ஒரு சுற்று சுற்றி வந்தாள்.. ஹாலே மூன்று பிரிவாக ஒவ்வொன்றும் பிரமாண்டமான திறந்த அறைகள் போல இருந்தன.. அதில் டிவி இருந்த பகுதிக்கு முன்னே மிகப்பிரமாண்டமான ரிக்ளைனர் போடப்பட்டிருந்தது. அதற்கு முன்னே இருந்த கப்போர்டில் கீழே மொத்தமாய் அவன் வாங்கிய கோப்பைகள், ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க மேல் பக்கம் கிட்டார் ஒன்று போடப்பட்டிருந்தது. நன்றாக பழகியது போலிருந்த அதன் தோற்றமும் R என்று கூர்மையான எதனாலேயோ வெட்டப்பட்டிருந்ததையும் பார்க்க ருத்ரனுடையதோ என்று ஊகித்தாள் நேயா.. அதன் மேல் தட்டில் ஒரு வரிசைக்கு புத்தகங்களும் இருந்தன..

காலையில் ஆதவன் சொல்லிவிட்டு தான் போயிருந்தான்..என்னமோ சமையல் செய்து விட்டு சோம்பேறியாய் அவள் படுத்து தூங்கிவிடுவாள் என்பது போல..வீட்டை ஒருதடவை சுத்திபார்..அவனுக்கு தோளில் தட்டக்கூடிய எதேனும் தென்பட்டால் வேலுவிடம் சொல்லி மாற்றி வை..அதுவும் உன் வேலை தான் என்று..

வேலுவை அழைத்தவள் மேலே இருந்த கிட்டாரையும் புத்தகங்களையும் கீழ் வரிசையில் அடுக்கி கோப்பைகளை மேலே அடுக்க சொன்னாள். ..அப்போது அவள் மனதில் இருந்ததெல்லாம் ருத்ரனின் இப்போதைய நிலையில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கைக்கெட்டும் தூரத்துக்கு இடம்மாற்றி வசதி செய்வது..

“ஆமாம்மா மேலே வச்சாத்தான் இதெல்லாம் நல்லா தெரியும்.. புத்தக தட்டை மேலே வச்சுட்டாங்க” என்று வேலுவும் ஒத்துக்கொண்டு மாற்றி வைத்து விட்டார். வீட்டில் மீதி எல்லாமே துளி அழுக்கின்றி இருக்க எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு இரவு உணவை தயாரிக்க போய்விட்டாள் நேயா..

ஐந்து மணி வரை ருத்ரன் கீழே வரவே இல்லை. வேலுவிடம் அவனுக்குரிய ஜூசை கொடுத்தனுப்பியும் அதுவும் ரிட்டர்ன் வந்தது..

என்னாச்சு இவனுக்கு? ஆதவனுக்கு அழைத்து சொல்லவேண்டுமோ என்று யோசித்தவள் இரவு உணவுக்கும் அப்படியே செய்தால் பார்ப்போம் என்று அதை கொஞ்சம் தள்ளி வைத்தாள்.

ஒரு வழியாய் ஐந்தரைக்கெல்லாம் கீழே வந்தவன் உடனேயே வித்தியாசத்தை கண்டு கொண்டு

நேயா என்று கத்தினான். இம்முறை அவளது பெயரை மிகச்சரியாகவே உச்சரித்து!

அவனுக்கு பிடிக்கலையோ..அந்த கிட்டார் அவனுடையதில்லையோ.. என்று பதறி ஓடி வந்தவள் அவனது சிவப்பு கண்ணை கண்டு ஒரு கணம் பயந்து விட்டாள்

குடித்திருப்பானோ..குடிக்கவே கூடாதே...ப்ச் இவ்வளவு பெரியவன் அவனுக்கு அவன் மேல் இல்லாத அக்கறையா உனக்கு.. ரொம்ப பொங்காதே என்று மூளை தலையில் தட்ட அமைதியாகிவிட்டாள்.

“யார் இதெல்லாம் மாத்தி வச்சது?” பல்லை கடித்துக்கொண்டு கேட்டான் ருத்ரன்

“நா..நான் தான் சார்.. உங்களுக்கு ஈசியா எடுக்க முடியும்னு..”

“என்ன கையில்லாதவன்னு சொல்லி காமிக்கிறியா? இல்லை இனிமே உனக்கு இதுதான்னு குத்தி காமிக்கிறியா?”

உண்மையில் இவன் தோளில் தான் பந்து பட்டதா இல்லை தலையிலா? லூசு மாதிரி என்னென்னமோ சொல்றான்? என்று அதிர்ந்து விட்டவள்

“அப்படில்லாம் இல்லை சார். என் வேலை வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாத்துறது. நீங்க எதுவும் மாற்றகூடாதுன்னு சொல்லல. புத்தகங்கள் கிட்டார் எல்லாம் உங்க மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு நினைச்சு தான் செஞ்சேன் சாரி..” என்றாள் சங்கடமாய்

“எனக்கு மனசு சரியில்லைன்னு உன்கிட்ட சொன்னனா...அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாத. சொன்ன வேலையை மட்டும் செய்..” அவன் சொன்ன தொனியே உன் இடம் எதுவென்று புரிந்து உன் எல்லையில் நின்று கொள் என்று தெளிவாக சொன்னது

யாருமே இதுவரை அவளை இப்படி நடத்தியதில்லை..லேசாய் கண்ணீர் எட்டிப்பார்த்தது நேயாவுக்கு.

படித்து முதல் மதிப்பெண் வாங்கி..ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எத்தனையோ பிரபலங்களிடம் பாராட்டு வாங்கி மதிப்போடு இருந்தவள் இங்கே வந்ததும் வந்தாள் இப்படி தரையில் தட்டி விட்டது போல ஆகிவிட்டது.

“இப்படியே கண்ணீர் விட்டுட்டே கொஞ்ச தூரம் நடந்து போனேன்னா மைக்கோட நிப்பான்க,,எப்போடா ருத்ரன் சிக்குவான்னு பார்த்துகிட்டு..அவன்க கிட்ட சொல்லு ருத்ரன் உன்னை அடிச்சிட்டான்..அது பண்ணிட்டான் இது பண்ணிட்டான்னு ஒரே பாட்டுல பணக்காரியான போல ஆகிடுவ.. சரியான டிராமா குவீன்..” அவனது வெறுப்புக்குரல் அவளது கண்ணீரை கண்டு இன்னும் சாடியது

அதற்கு பதில் சொல்லக்கூட அவள் தன்மானம் இடம் தரவில்லை.. இப்போது சொட்டவே ஆரம்பித்து விட்ட கண்ணீருடன் விடுவிடுவென கிச்சனுக்குள் போய்விட்டாள்.

சற்று நேரத்தில் “சாருக்கு காபி வேணுமாம்மா..” என்றபடி வேலு வந்து நின்றார்.. முகத்தில் அவளுக்கான அனுதாபம் அப்படியே தெரிந்தது.

மௌனமாய் அவன் குடிக்கும் முறையில் அதை தயாரித்து வேலுவையே அழைத்து காபியை அனுப்பி வைத்தாள்.

அடுத்த நிமிஷம் பந்து திரும்பி வந்தது,

“சாருக்கு சீனி போட்டு வேணுமாம்..”

வேணும்னே பண்றான் பார்..

செயற்கை இனிப்பூட்டியை கொஞ்சமாய் கலந்து அவரிடமே தந்து விட்டாள்..

மீண்டும் வேலு.. “சூடு பத்தலையாம்மா” அவரது விழிகளில் மன்னிப்பு கோரும் பாவம் இருக்க புரிந்து கொண்டதாய் புன்னகைத்தவள் மீண்டும் சூடாக்கி ஆற்றி அனுப்பி வைத்தாள்.

பத்து நிமிஷம் போயிருக்கும். மறுபடியும் வேலுவே பிரசன்னமானார்

உனக்கிப்போ என்ன தான் பிரச்சனை என்று காத்த தோன்றியது..

“நைட்டுக்கு மட்டன் பிரியாணி வேணுமாம்மா..” என்று சங்கடமாய் சொன்னார்

ஒரு கணம் விழிகள் விரிந்தன.. பிறகு அவன் செய்வதை புரிந்து கொண்டவளாய் “சரி அண்ணா” என்று அதற்கும் தலையசைத்து விட்டு அவள் திரும்பிக்கொள்ள

அவன் மேல் இருக்கும் கோபத்தில் எங்கே மட்டன் பிரியாணியை செய்து கொடுத்து விட போகிறாளோ என்ற பயத்தில் “நேயாம்மா..சாருக்கு ஒத்துக்காதே..” என்று ரகசியக்குரலில் வேலு நினைவு படுத்த

நான் பார்த்துக்கிறேன் என்பதாய் அவள் புன்னகைக்க அவர் சமாதானமாய் போய்விட்டார்.

மதியமும் அவன் உண்ணவில்லை..ஆக கொஞ்சம் கலோரிக்கு இடமிருக்கிறதே.. உனக்கு பிரியாணி தானே வேண்டும்

அரிசிக்கு பதிலாய் கீன்வா வைத்து அவன் கேட்டதை செய்ய ஆரம்பித்து விட்டாள் நேயா..

சற்று நேரத்தில் ஹாலில் இருந்து கிட்டார் சத்தம் கேட்டது. நேயா திரும்பியே பார்க்கவில்லை.

கர்ண கொடூரமான சத்தம். நிச்சயம் அந்த கிட்டார் இவனுடையது இல்லை.. அவளையும் மீறி சின்ன சிரிப்பு உதிர முனைய அதற்கு உதட்டாலே பூட்டு போட்டு கொண்டவள் ஆவி பறக்கும் ‘பிரியாணி’யை கொண்டு போய் மூடி வைத்து விட்டு பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்

உன் உடல் உன் வாழ்க்கை.. நீ ஒன்றும் நான் வளர்க்கும் கோழியில்லை..பிடித்தால் கட்டுப்பாட்டுடன் இரு..இல்லையேல் எல்லாவற்றையும் தூக்கிப்போடு எனக்கென்ன வந்தது?
 
Top