• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நேயமுடன் நான் - 2

Ush

Well-known member
Messages
109
Reaction score
270
Points
63
2

காலை ஆறுமணிக்கு வீட்டின் அருகில் சின்னதாய் நிறுவப்பட்டிருக்கும் புனித அந்தோனியார் உருவச்சிலைக்கு முன்னே மலர்களை வைத்து அன்றைய நாள் சுமூகமாய் போக வேண்டும் என்று கண்மூடி தாஜா செய்து கொண்டிருந்தாள் நேயா..முதல் தடவை அந்த பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினருக்காக வேலை செய்ய சென்ற போது கூட அவளது மனம் பயத்திலும் பதட்டத்திலும் இவ்வளவு அடித்துக்கொள்ளவில்லை.. இன்றைக்கு காலையில் அம்மாவிடம் காபி வாங்கும் போதே கை நடுங்கி தொலைத்தது..

“ப்ச் என்னதிது..” அம்மா வேறு அதை கூர்மையாய் கண்டு கொண்டு “இவ்வளவு பதட்டமா அந்த வேலைக்கு போய்த்தான் ஆகணுமா?” என்று கேட்டு விட்டார்

“பாதர் என்கிட்டே கேட்ட ஒரே உதவிம்மா. நான் செய்யாம இருக்க மாட்டேன் அவர் அவ்ளோ பெரிய பிரபலம்ன்றதால தான் லைட்டா டென்ஷனா இருக்கேன்..மத்தபடி ஐ ஆம் ஸ்டெடி” என்று அறிக்கை விட்டு விட்டு வந்து விட்டாள்.

வழிபட்டு முடித்து விட்டு கீழே வந்து ஷூவை மாட்டிக்கொண்டிருக்க வாசலில் அவளுக்கு முன்னரே அறிவித்திருந்தது போல வால்ஸ்வாகன் ஒன்று வந்து நின்றது. இங்கிருந்தே டிரைவருக்கு வருகிறேன் என்பது போல கையசைக்க அவர் வண்டியை எடுத்துக்கொண்டு வந்து அவளருகில் நிறுத்தினார்.

அவள் பின் கதவை திறக்கவும் மத்திம வயதில் ராணுவ வீரரின் கம்பீரத்தோடு இருந்த டிரைவர் “சாரிம்மா..உங்க ஐடி காமிச்சீங்கன்னா...” என்று கேட்டார்

அவசரமாய் கைப்பையில் இருந்து எடுத்து காண்பித்தாள் நேயா. எவ்வளவு கவனமா டிரைவர் கூட கவனிக்கிறார் என்று நினைத்துக்கொண்டவளை அவரது அடுத்த வசனம் நொந்து போக வைத்து விட்டது.

“சரிம்மா ஏறிக்கோங்க..” என்றவர் “செப் என்றதும் கொஞ்சம் பெரியவங்களா எதிர்பார்த்தேன்மா..உங்களை பார்த்ததும் கொஞ்சம் குழம்பிட்டேன்” என்றதும்

“பரவாயில்லை சார்” என்று சிரித்தவளுக்கு “ஆரம்பமே சிறப்பா இருக்கேடா” என்று தான் தோன்றியது. இப்படி யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவே தான் மெனக்கெட்டு பென்சில் ஸ்கர்ட், பேபி ப்ளூ ப்ளவுஸ், போனிடெயில், ஷூ கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டு பக்கா ப்ரொபெஷனல் செப் லுக்கில் கிளம்பி வந்ததெல்லாம் இப்படி அண்ணனுக்கொரு ஊத்தாப்பமாய் முடிந்தது அவளுக்கு வருத்தமோ வருத்தம்!

அதை தொடர்வது போல ஜெரமி அழைக்கிறான் என்று மொபைல் காண்பிக்க ‘எப்படிடா கண்டுபிடிக்கிறாங்க? ஒருவேளை அம்மா அவன்கிட்ட போட்டு கொடுத்துட்டாங்களோ’ என்று குழம்பியவள் போனை காதுக்கு கொடுத்தாள் “ஹலோ” என்றபடி..

பதிலுக்கு “நொய்நொய்! என்ன பண்ற” என்ற ஜெரமியின் உற்சாகக்குரல் போன்வழி வந்தது..

ஹப்பாடா அவனுக்கு தெரியலை..

“இருக்கேன்டா.. ஒரு புது அசைன்மென்ட் அதுக்குத்தான் போயிட்டு இருக்கேன்” என்று சொன்னவளின் குரலிலும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது.

“என்ன அசைன்மென்ட்?”

“நீ என்ன ப்ளைட் ஓட்டுற? எந்த பைலட் கூட போறேன்னு நான் கேட்கிறேனா? நீயும் கேட்க கூடாது..” என்று மெல்ல சண்டை போட்டே சமாளித்து விடப்பார்த்தால் அவனோ

“ப்ச்.. நானும் நீயும் ஒண்ணா” என்று மீண்டும் அதிலேயே வந்து நின்றான்.

“பின்னே இல்லையா?”

“காலங்கார்த்தால கடுப்படிக்காதடி என்னமோ மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது உன் ஞாபகம் வந்துது..உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையேன்னு வேலை மெனக்கெட்டு கால் பண்ணி ஒரு மனுஷன் கேட்கிறான்..நீ பெண்ணுரிமை பேசிட்டிருக்க..” அவன் சிடுசிடுக்க

எப்போதும் அவனுக்கு வரும் அந்த உள்ளுணர்வை இப்போதும் எண்ணி அதிசயித்தபடி “லூசு நான் ஜாலிக்கு சொன்னேன்.. ஐ ஆம் ஒகே டா.. ஒரு VIP க்ளையன்டுக்கான அசைன்மென்ட். அதனால எக்சைட்மென்ட்லதான் இருக்கேன்” என்றாள் கவனமாய் மனதை மறைத்து.

அதை நம்பியிருக்க வேண்டும் “சரி கேர்புல்லா இரு. மத்த ஸ்டாப்ஸ் இல்லாம தனியா எங்கேயும் போகாதே.. எனக்கு ட்ரைனிங்குக்கு நேரமாயிடுச்சு. பை”

“நீயும் லேடி ட்ரைனர் நல்லா இருக்காங்கன்னு சைட் அடிக்காம பத்ரமா ப்ளைட்டை ஒட்டு. பை”

சிரித்துக்கொண்டே அவன் போனை கட் செய்து விட ஆசுவாசமாய் ஒரு மூச்சு விட்டவள் அன்புத்தொல்லை தாங்கலடா சாமி..நானே அங்கே என்னாகுமோ ஏதாகுமோன்னு டென்ஷன்ல இருக்கேன்.. என்று நொடித்துக்கொண்டு இன்ஸ்டாக்ராமை திறந்தாள். சும்மா இருந்தால் யோசித்து டென்ஷன் தான் கூடும்!

இன்ஸ்டாக்ராமில் அவளது பெஸ்ட்டி ஷாலு வழக்கம் போல ஒரு வீடியோவில் ஹிட் அடித்துக்கொண்டிருக்க சிரித்துக்கொண்டே அதை பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை..

அவள் மீண்டும் நிமிர்ந்து பார்த்த போது சிட்டியில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் மரங்கள் அடர்ந்த பாதையில் கிளைபிரிந்து கார் பயணித்து கொண்டிருந்தது. ஒரு இடத்தில் எல்லை கேட் போடப்பட்டிருக்க ஒன்றிரண்டு பேர் அந்த ஏழு மணி நேரத்திலும் “கெட் வெல் சூன் ருத்ரா” அட்டையோடு நின்று கொண்டிருந்தார்கள்.. அவளின் பார்வையை கவனித்து விட்டு

“நேரம் போகப்போக ஆளுங்க எண்ணிக்கை கூடிடும்மா. பகல்ல நம்ம இந்த வழியா வரவே முடியாது. இரவு வேலை முடிஞ்சதும் என்னை கூப்பிடுங்க..நான் வந்து கூட்டிட்டு வர்றேன்..”

அந்த வேகத்தடையை தாண்டிக்கொண்டு கார் உள்ளே இன்னும் கொஞ்சம் பயணிக்க இப்போது அந்த வெள்ளை மாளிகை நன்றாகவே கண்ணுக்கு புலப்பட்டது..

“சரிங்க அண்ணா” இயந்திரமாய் வாய் சொன்னாலும் அவளது மனம் அங்கில்லை.. ருத்ரேஷ்வர் என்றதுமே பயம் வந்தது தான். ஆனால் இந்த ரசிகர்கள் வீடு எல்லாவற்றையும் பார்க்கத்தான் அவனது உயரம் எவ்வளவு பெரியது..என்று நன்றாய் உறைத்தது. என்ன எண்ணத்தில் பாதர் என்னிடம் கேட்டார் என்பதை விட நாம் எப்படி இதற்கு ஒத்துக்கொண்டோம் என்று தலை சுற்றியது அவளுக்கு..

இனி பின் வாங்கி என்ன செய்வது? ரெம்பத்தாமதம்

கார் பிரமாண்ட கேட்டை திறந்து கொண்டு உள்ளே பயணித்து போர்ட்டிக்கோவில் நிற்க தயங்கியபடி உள்ளே இறங்கியவளை நேர்த்தியாய் உடையணிந்திருந்த ஒரு பெண் பணிவாய் வரவேற்றவர் “நீங்க தான் சாருக்கு “குக்காம்மா” என்று கேட்டார்

அவரை திருத்தாமல் “ஆமாம்” என்று புன்னகைத்தாள் நேயா.

“வாங்கம்மா” என்று அவளை பக்கப்புற கதவு வழியாக உள்ளே அழைத்துக்கொண்டு போனவர் ஒரு பிரமாண்டமான மாடுலர் சமையலறைக்குள்ளே அவளை அழைத்துக்கொண்டு போனார்.

கறுப்பு வெள்ளையில் நல்ல பெரிதாய் கொஞ்சம் தனித்தே இருந்த சமையலறையை பார்த்ததுமே நேயாவுக்கு பிடித்து போனது

“இது தான் சாதாரணமா வீட்டுக்கு சமையல் பண்ற இடம்.. வெளியே ஒரு சமைலயலறை இருக்கு..கெஸ்ட் வந்தாங்கன்னா அவங்க கூட பேசிட்டே அங்கே சமைப்பாங்க..அப்புறம் பெரிய அளவுல பண்றதுக்கு இன்னொரு இடம் பின்னாடி இருக்கு” என்றவர் “பொருள்லாம் இங்கே இருக்கும்மா” என்று ஒரு கதவை திறக்க அங்கே மினி சூப்பர் மார்க்கட்டே இருந்தது..

அழகான பிரமாண்டமான கிச்சன் அதன் உபகரணங்கள்..பசுமையான காய்கறிகள் இறைச்சி வகைகள் எல்லாவற்றையும் கண்டதும் பரிச்சயமான உணர்வு தோன்ற மெல்ல மெல்ல இறுக்கம் தளர்ந்தாள் நேயா..

“என் பெயர் சுபா.. நானும் வேலுவும் காலையிலேயே வந்து எல்லாம் கூட்டி துடைச்சு வீட்டு வேலை எல்லாம் செஞ்சிட்டு போய்டுவோம்..மறுபடியும் இரவு ஒரு தடவை வருவோம்.. சமைச்ச பாத்திரமெல்லாம் நீங்க கழுவணும்னு அவசியம் இல்லம்மா.. ஓரமா வச்சிட்டீங்கன்னா நான் வரும் போது மெஷின்ல போட்டுடுவேன்” என்று வெள்ளையாய் புன்னகைத்தவரை பார்க்கவே சின்ன இதம் முளைத்தது.

“சாரோட மானேஜர் ஆதவன் சார் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்னு சொல்ல சொன்னார். அதுவரை உங்களை காலை சமையலை பார்க்க சொல்லிருந்தார். ருத்ரன் சார் எட்டுமணிக்கெல்லாம் சாப்பிடுவார்.அவ்ளோ தானே நா கிளம்பவாம்மா? வேறே ஏதும் வேணும்னா கேளுங்க” என்ற சுபாவுக்கு

“என் பெயர் நேயா.. நேயான்னு கூப்பிடுங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க

உள்ளிருந்து ஆஆ என்று கடினமான ஆண்குரலின் வேதனையும் எரிச்சலுமான அலறல் கேட்டது

அவள் அதிர்ந்து அந்தப்பக்கம் திரும்ப தொடர்ந்து படபடவென எதுவோ தள்ளப்படும் சத்தமும் அதே ஆணின் கோபக்குரலிலான வாக்குவாதங்களும் கேட்டது..

“ருத்ரா சார் தாம்மா..இந்த டாக்டர் வந்து எக்சர்சைஸ் பண்ண ஆரம்பிச்சாலே பாவம் வலியில் கத்த ஆரம்பிச்சிடுவார்” என்று சொன்னவர் கிளம்பி விட்டார்..

தனியாக விடப்பட்ட நேயாவுக்கோ அந்த வேதனையும் எரிச்சலுமான சத்தங்களே முழுக்க ஆக்கிரமித்து கொண்டன. பாவம் அவன் வேதனைக்குரல் மனதை போட்டு பிசைந்தது.

பத்து நாள் முன்னர் வரை உலகமே காலடியில் என்பதைப்போல வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கை ஒரே நாளில் இப்படி ஆகி விட்டது..இப்போது கூட கெட் வெல் சூன் அட்டையை பிடித்திருக்கும் மனிதர்கள் தங்களுடைய ஆதர்ச நாயகனின் உண்மையான உடல் உள போராட்டத்தை கற்பனை பண்ணி பார்ப்பார்களா? அப்பாவும் இப்படித்தானே.. திடீரென்று மரணம் வரும் என்று எண்ணியிருந்தால் இன்னும் கொஞ்சம் அவரை இறுக்கிப்பிடித்திருக்கலாம்.. ப்ச்.. நடந்து முடியும் வரை இது தான் கடைசி என்று நமக்கு தெரிவதே இல்லையே.. ஒற்றைக்கண்ணீர் துளி கண்ணை விட்டு இறங்க டிஷூவால் ஒற்றி எடுத்துக்கொண்டவள் ஒரு முடிவோடு ஏப்ரனை எடுத்து அணிந்து கொண்டாள்.

நேயா இந்த வேலையையும் ஒரு கரை காணமுன் விட்டு விட்டுப்போகப்போவதில்லை.

ஏற்கனவே யோசித்து வைத்திருந்தாலும் அவனுடைய டயட் சார்ட்டை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு மூலப்பொருட்கள் இருந்த அறைக்குள் போய் தேவையானதை எடுத்து வந்து அடுக்கி வைத்தாள்.

அதன் பின்னர் வேலை மடமடவென்று ஆரம்பமானது.

அவனுக்கு இப்போதெல்லாம் உள்ளூர் உணவுகள் தான் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது ஆனால் டயர்ட் காரணமாய் வெறுமனே ரோஸ்ட் வகையறாக்கள், அவித்த காய்கறிகள் என்று தருவதால் அவனுக்கு பிடிக்கவே இல்லை என்று பாதர் சொன்னார். காலையில் கடுமையான பிசியோதெரப்பி செசனுக்கு பிறகு கொஞ்சம் காரசாரமாய் செய்தால் நன்றாய் இருக்கும் என்பது எண்ணத்தில் பச்சை பயறில் லேசாய் பூண்டு கொஞ்சமாய் தேங்காய்ப்பால் சேர்த்து கஞ்சி பதத்துக்கு எடுக்கலானாள் நேயா.

கூடவே சிப்ஸ் போல ஓட்ஸ் மாவு, சீஸ் கொஞ்சமாய் சேர்த்து முக்கோணமாய் பேக் செய்தாள்.

,காரத்துக்கு வெங்காயம், பூண்டு. மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து ஒன்றும் பாதியுமாய் அரைத்து கஞ்சியை கிண்ணத்தில் பரிமாறி அதன் மேல் அழகுற அந்த துவையலை ஆங்காங்கே தூவி மேலே கொஞ்சம் கிரீம் விட்டு ஒரு பெரிய தட்டில் பக்கத்திலேயே இன்னொரு பாஸ்கட்டில் சிப்ஸ் அடுக்கி அவனுக்கு தண்ணீர் இத்யாதிகள் எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவள் காத்திருக்க...

உள்ளே டாக்டருக்கும் அவனுக்கும் ஒரே காரசாரமாய் வாக்குவாதம்.. பிறகு.. “நீங்க போகலாம் நான் வேற டாக்டரை பார்த்துக்கிறேன்” என்று என்று ஒரேயடியாய் அவன் குரல் உயர்வதும் டாக்டரின் காலடி சத்தம் அவசரமாய் நெருங்கி மறைவதும் அவளுக்கு கேட்க இங்கே அவளின் இதயம் தந்தியடிக்க ஆரம்பித்தது.

அவனின் ஆத்திரக்குரலை கேட்டாலே பக்கென்றது. யாரையோ திட்டும் போதே இப்படி இருக்கே..நமக்கு என்ன காத்திருக்கோ,,, எடுத்துக்கொண்ட உறுதி மொழி லேசாய் ஆட்டம் கண்டது.

இந்த மானேஜர் ஆதவன் சீக்கிரம் வந்து அவளை அறிமுகப்படுத்தினால் பரவாயில்லை..

நாமே போய்விடலாமா? எட்டு மணி ஆகிறதே..அவள் யோசித்துக்கொண்டிருக்க காலடி சத்தம் கிச்சனை நெருங்கியது..

அச்சோ இங்கே தான் வர்றான்

படபடத்துப் போய் பட்டென்று ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த தட்டில் மீண்டும் அடுக்குவதை போல குனிந்து மும்முரமாய் வேலை செய்வது போல காட்டிக்கொள்ள ஆரம்பித்தாள் நேயா..

“ஹூ தி ஹெல் ஆர் யூ?”

காதுகளை இறுக பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது..அவ்வளவு ஆங்காரம் அக்குரலில்

திரும்பியவளின் கஷ்டகாலம் ருத்ரேஷ்வரை வாசலில் அவ்வளவு பெரிதாய் கிட்டத்தில் பார்க்க நாவு வேறு தந்தியடித்தது..

“யார் உன்னை உள்ளே விட்டா.. செக்கியூரிட்டி....” என்று அவன் அலறவும் தான் யாரோ இளம் ரசிகை அவனை பார்க்க சுவரேறி குதித்து வந்து விட்டாள் என்று நினைக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

அவசரமாய் “சார் என்னை பாதர் ஜார்ஜ் அனுப்பினார்” என்று பிரமாஸ்திரத்தை முதலில் பிரயோகித்தவள் “உங்களுக்காக வந்திருக்கும் ப்ரைவேட் செப்” என்று ஒரு வழியாய் சொல்லிவிட்டாள்

பாகற்காயை கடித்தவன் போல முகமே மாறிபோக “இஸ் திஸ் ஏ ஜோக்?” என்றவன் குரல் மேலும் கீழுமாய் அவளை ஆராய்ந்தது..

“நீ எனக்கு ப்ரைவேட் செப்பா? ஸ்கூல் முடிச்சயா நீ? என்ன சமையல் பண்ணி கொடுப்ப..குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியுமா? பாதருக்கு வயசாயிடுச்சு மூளை எங்கோ தூங்க போயிருச்சு” என்றெல்லாம் அவன் வாய்க்குள் முணுமுணுத்தது அவளுக்கு கேட்காதிருக்குமா

அந்த ரணகளத்திலும் குபீர் சிரிப்பு வந்து தொலைத்தது அவளுக்கு..ப்ச் அவன் உன்னைத்தான் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறான் என்று மனம் ஒரு இடி இடிக்க அட்டென்ஷன் மோடுக்கு வந்தவள் “நான் “AOS” க்ராஜூவேட் சார். உங்களை போல கிளையன்ட்ஸ் உடன் வேலை செய்த அனுபவம் எனக்கு நிறையவே இருக்கு” என்றாள் இறுக்கமாய்

அவனது முகபாவம் மாறவில்லை. முறைத்தபடியே உறுத்து பார்த்தவன் “உன் பேர் என்ன?” என்று கேட்டான்

“நேயா நிரந்தரி சார்”

ஆளும் அவ பேரும்!! என்று வாய்க்குள் முணுமுணுத்தது??? மீண்டும் தெளிவாகவே அவளுக்கு கேட்டது..

ஒன்று மட்டும் புரிந்தது. ருத்ரேஷ்வருக்கு அவளை சுத்தமாய் பிடிக்கவில்லை..

“சார் உங்களுக்கு என்னவெல்லாம் சாப்பிடணும் போல தோணுதுன்னு சொன்னீங்கன்னா, டயட் கட்டுப்பாட்டுக்குட்பட்டு அதே டேஸ்ட் கொண்டு வர முயற்சி பண்ணுவேன்....எல்லா வகையான சமையலிலும் எனக்கு பரிச்சயம் இருக்கு” என்று அவர்களின் பேச்சை நடப்புக்கு கொண்டு வர நேயா முயல

சில கணம் அவளையே உறுத்துப் பார்த்திருந்தவன் பிறகு “நான் காய்கறி, கீரை இதெல்லாம் சாப்பிட மாட்டேன். இப்போ எனக்கு பான் கேக் , சிரப், கூடவே சாக்லேட் சாஸ் செஞ்சு எடுத்துட்டு வா..” என்று அசால்ட்டாய் சொல்லி விட்டு திரும்பியே பாராமல் போய் விட்டான்.

‘எதே! பான் கேக் சிரப்பா.. அவனது டயர்ட் சார்ட்டில் மாவு வகையறாக்கள், சீனி எதுவுமே சிவப்பு வர்ணத்தில் கொடுக்கவே கொடுக்க கூடாது என்று அடிக்கோடிடப்பட்டு போட்டிருக்க இவனானால் சாக்லேட் சாஸ் வேற வேணும்னு ஆர்டர் போட்டுட்டு போறான்.. இதில் காய்கறி கீரை வேறு சாப்பிட மாட்டானாம்.. இவன் என்ன ரெண்டாம் வகுப்பு பாப்பாவா’ என்று டென்ஷன் ஆகிவிட்டாள் நேயா..

ஒன்றிரண்டு ஆழ மூச்சுக்களை எடுத்து விட்ட பிறகு, என்ன நடக்கிறது என்று புரிந்தது அவளுக்கு. ருத்ரேஷ்வர் அவளை மிரட்டி வேலை செய்ய முடியாத நிலையை உருவாக்கி ஓட வைக்க பார்க்கிறான். ஆனால் உனக்கு ஒன்று தெரியாமல் போய்விட்டது.. உன்னால் முடியாது என்று ஒரு விஷயத்தை சொன்னால் தான் அதை செய்தே ஆவேன் என்று நான் டியூன் ஆவேன்..என்று தலையை அசைத்துக்கொண்டாள் நேயா..

‘பாவம்... வருபவர்கள் எல்லாரையும் துரத்தி விட்டு இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடம்பு மொத்தமாய் கெட்டுப்போனால் என்ன செய்வான்? மறுபடி அணிக்கு திரும்ப வேண்டாமா? இவனுடைய பெற்றோர்கள் எங்கே?’ என்றெல்லாம் தறிகெட்டு ஓடிய யோசனையை மனம் “நீ ஒரு ப்ரொபெஷனல் உன் வேலை டாக்டர்கள் சொன்னபடி உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுவதை அவனுக்கு பிடித்தமான விதத்தில் செய்வதே. அதிலேயே உறுதியாய் நில். வேறேதும் உனக்கு தேவையில்லை’ என்று இறுக்கி பிடித்தது.

உப்ப் என்று மூச்சை ஒரு தடவை இழுத்து விட்டுக்கொண்டவள் எல்லாவற்றையும் அளவாய் சூடு படுத்தி மேசையில் கொண்டு போய் மூடி வைத்து விட்டு வந்தாள்.

சில நிமிஷங்களிலேயே காலடி சத்தம் நெருங்கி வர கிச்சனில் இருந்த சின்ன இடைவெளி வழியாய் ஹாலை எட்டிப்பார்த்தாள்.

ருத்ரேஷ்வர் குளித்து விட்டு வந்திருக்க வேண்டும்..தோளில் போடப்பட்டிருந்த கட்டு இப்போது அவன் அணிந்திருந்த ஆர்ம்கட் டீஷர்ட்டில் நன்றாய் தெரிந்தது. வலது தோள்பகுதியை வலது மேற்கையோடு மாலையாய் போட்டு இணைத்திருந்தார்கள். அதை பார்க்கவே இவளுக்கு வலிப்பது போலிருந்தது..இடுப்பில் ஸ்வாட் பான்ட் அதில் தேசிய கிரிக்கட் அணியின் லோகோ இருந்தது. ஒரு கறுப்பு நைக்கி செருப்பு.. நைக்கி அம்பாசடர் இவன் தானே..அவள் யோசித்துக்கொண்டிருந்த கணம் அவன் மேசையில் இருந்தவற்றை திறந்து பார்த்திருக்க வேண்டும்..

“ஏய் நேஹா!!!” என்று உறுமல் கேட்க

அச்சோ என பாய்ந்தோடிப்போய் பவ்யமாய் நின்றாள்

“உன்னை என்ன பண்ண சொன்னேன் என்ன செஞ்சு வச்சிருக்க!” என்று அவளை முறைத்த கண்களை கவனமாய் தவிர்த்தவள்

“உங்க டயர்ட் சார்ட் படிதான் காலை உணவு இருக்கு சார். மதியத்துக்கு உங்களுக்கு ஒரு ஸ்வீட் ஐட்டம் இருக்கற போல பார்த்துக்கிறேன்..பான்கேக் வேணும்னா இன்னொரு நாள் செய்து தர்றேன்” என்று இயந்திரமாய் சொன்னாள்

கொஞ்ச நேரம் அவளை முறைத்து பார்த்தவன் பிறகு அந்த கஞ்சியை முறைத்தான்

“என்னது இது?... ஓட்ஸ் கஞ்சின்னா அப்படியே இதை எடுத்துட்டு நீயும் போயிரு” என்று சொல்ல மீண்டும் சிரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவள் அடக்கிக்கொண்டாள்

“பயத்தம் கஞ்சி சார்.. ஒரே ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க” இறைஞ்சலாய் அவன் முகம் பார்க்க.

அவனது முகபாவம் அஷ்டகோணலானது “பயறா? நான் என்ன குருவியா?” அவன் கொலைவெறியாய் முறைக்க

இருக்கும் நிலை மறந்து மீண்டும் சிரிப்பு வர பார்த்தது நேயாவுக்கு. இவ்வளவு பெரிய குருவி ஷங்கர் படத்துல தான் வரும்!

“அந்த சிவப்பு துவையல் ரொம்ப காரமா வாய்க்கு நல்லா இருக்கும்.. அந்த சிப்ஸ் மொறுமொறுன்னு நல்லா இருக்கும்” அவள் இடித்த புளியாய் தன் கைவண்ணத்தை விளம்பரம் செய்ய

ஒரு முழு நிமிடம் அவளை பார்வையிலேயே எரித்தவன் பிறகு என்ன நினைத்தானோ அந்த சிப்சை எடுத்து வாயில் போட்டு மென்றான்.

பிறகு ஒரு ஸ்பூன் கஞ்சி உள்ளே போனது.. பிறகு வேக வேகமாய் கஞ்சி உள்ளே போக ஆரம்பிக்க வெற்றி வெற்றி என்று குதிக்காத குறையாய் உள்ளே ஓடி விட்டாள் நேயா..

ஒரு நேர உணவு வேளையை தாண்டுவதற்குள்ளேயே உயிர் போய் வந்து விட்டதே ஒவ்வொரு வேளையையும் எப்படி சமாளிக்க போகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை..

அரை மணிநேரம் கடந்திருக்கும். அதன் பிறகு எந்த பேச்சு வார்த்தையும் வைக்காமல் அவன் போய் விட்டான்.. ஆனால் சாப்பிட்டு முடித்திருந்ததே அவளுக்கு இமாலய சாதனையாய் தான் பட்டது.. அவள் அடுத்த வேளைக்காய் மெனுவை திட்டமிட்டுக்கொண்டிருக்க

“ஏய் நேஹா”

உள்ளேன் ஐயா.. என்பதை போல ஓட்டமாய் உள்ளே ஓடி செல்ல ஹாலில் சோபாவில் புதைந்திருந்தவன் அவள் ஓடிவருவதை முகம் சுளித்து பார்த்து விட்டு “போய் உன் சர்ட்டிபிக்கேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்று முறைப்பாய் சொன்னான்.

ஓடிப்போய் கொண்டு வந்த பைலை எடுத்து அவனிடம் கொடுக்க அவளை உட்கார கூட சொல்லவில்லை அவன்..

பைலை ஒவ்வொன்றாய் அசுவாரஸ்யமாய் புரட்டி பார்த்தவன் “ஒரு டிகிரி, கொஞ்சம் அனுபவம் இருந்தா உன்னால் ருத்ராவுக்கு வேலை செஞ்சிட முடியுமா?” என்று கூர்மையாய் கேட்டான்

நேயாவுக்கு கோபம் வந்து விட்டது. இவன் பெரிய கிரிக்கட்டர் என்றால் அது இவனோடு.. என்னை மட்டம் தட்ட இவன் யார்? “பாதர் முடியுமான்னு கேட்டார். உங்களுக்கு தேவையானதை செய்ய எனக்கு படிப்பும் அனுபவமும் இருக்கு. அதை தவிர க்ளையன்ட்சை பெரியவங்க சிறியவங்கன்னு பிரிச்சுப் பார்க்க எனக்கு யாரும் சொல்லித்தரல சார்..” என்று விறைப்பாய் சொல்லி விட்டாள்.

அவளையே முறைத்தவன் “பாதர் என்னமோ நிறைய அடிச்சி விட்டாரே..ஸ்கூல் பர்ஸ்ட்டா வந்தியாமே..அப்புறம் உன் அண்ணனை படிக்க வைக்க காலேஜ் போகாம AOS போனயாமே. அவ்ளோ பெரிய தியாகியா நீ?” என்று நக்கலாய் கேட்டான்

பாதர் ஏன் இதெல்லாம் இவனுக்கு சொல்றார் என்று மானசீகமாய் தலையிலடித்தாலும் “நாங்க ட்வின்ஸ் சார்” என்று திருத்தியவள்.. “யாரும் யாருக்காவும் தியாகம் பண்றதில்லை சார்..எல்லாம் எங்களோட சொந்த தெரிவுகள் தான். அதை தவிர என் சொந்த வாழ்க்கையை வேலை செய்யற இடத்துல பேச எனக்கு பிடிக்கலை” என்றாள் முறைப்பாக.

நக்கல் சிரிப்பு உதடுகளில் வழிந்தோட “என் வீட்டில் எனக்கு இவ்வளவு பக்கத்தில் வேலை பார்க்கற நீ என்ன நோக்கத்துல வந்திருக்கன்னு எனக்கு உன் சொந்த வாழ்க்கையை அலசி ஆராயாம கண்டு பிடிக்க முடியாது. சும்மா எனக்கு வேணும்னு கேட்டு வாங்கிக்கிறவங்களை நம்பிரலாம்.. உன்னை மாதிரி இந்த டிராமா பண்றவங்களை நம்பவே முடியாது. உனக்கு ப்ரைவேட் டிடெக்டிவ் போட்டிருக்கேன். ரிப்போர்ட் வரட்டும்” என்று எச்சரிக்கை போல சொன்னான்.

அச்சோ பயந்துட்டேன்...நான் தான் பின் லேடனோட மருமகள், மாறு வேஷத்துல உன் கிட்ட வேலை பார்க்கிறேன்ற உண்மை வெளியே வந்துடபோகுது போடாங்.... என்று வாய்க்குள் நக்கல் செய்து கொண்டு அவள் அப்படியே நிற்க

“என்ன பரிதாபபடுறீங்களா? ஐயோ பாவம் ருத்ரனோட தோள்மூட்டு போச்சே.. நீ தான் அவனை சரி பண்ணணும்னு பாதர் சொல்லிருப்பார். நீயும் பரிதாபப்பட்டு கிளம்பி வந்துட்டல்ல” என்று இழுத்தவன் மேசையை ஒங்கி ஒரு அடி அடித்தான். “யாரும் பரிதாபடற அளவுக்கு ருத்ரன் ஒண்ணும் ஆயிடல புரிஞ்சுதா.. இங்கேயே இருந்தா என் கோபத்தை தாங்க மாட்ட. இப்போவே கிளம்பி ஓடிரு. “

அப்படி மேசையில் அடிப்பான் என்று எதிர்பார்க்காததால் அனிச்சையாய் ஒரு அடி பின்னகர்ந்து நின்றவள் “அதெல்லாம் எனக்கு தெரியாது சார். உங்களை மாதிரி ஒரு ஹை ப்ரொபைல் கிளையன்ட் கிட்ட வேலை செய்வது என் காரியருக்கு நல்லது..என்னை பொறுத்தவரை நான் இங்கே வேலைக்கு வந்ததன் நோக்கம் அது தான்.. மீதியெல்லாம் உங்களோட பிரச்சனை நீங்கதான் அதுக்கு தீர்வு கண்டு பிடிக்கணும்.. நான் போலாமா? வேலை இருக்கு” என்று முகம் மாறாமல் கேட்க

“ஆமா ட்வின்னு சொல்ற.. ஏன் அவன் வேலைக்கு போய் உன்னை படிக்க வச்சா ஆகாதா..என்ன ஒரு சகோதர பாசம்..” என்று மீண்டும் அவளது தனிப்பட்ட கதையில் மிகப்பலவீனப்புள்ளியை தாக்கி ஜெரமியை மறைமுகமாய் நக்கல் செய்தான் ருத்ரன்.

அவ்வளவு தான் அத்தனை நேரமும் போட்டுக்கொண்டிருந்த பாவனைப்போர்வை மொத்தமாய் அகன்று போக நேயாவின் நாப்பூட்டு கழன்றது. “ஜெரமியை பத்தி தப்பா பேசாதிங்க சார். என்ன தெரியும் உங்களுக்கு அவனை பத்தி..எங்களை பத்தி? சமீப காலமா உங்களையும் பத்தி இப்படித்தான் பலவிதமா பேசறாங்க.. அவங்க அவங்க நிலைமைல இருந்து பார்க்காம யாரும் எதுவும் சொல்லிட்டு போலாம்..ஆனா பாதிக்கப்பட்ட நீங்களே அப்படி இன்னொருத்தங்களை பத்தி பேசறது நல்லால்ல..” என்று அவளும் ருத்ரன் பக்கம் ஒரு மெல்லிய நரம்பை தொட்டு விட்டாள் போலிருக்கிறது பைலை தூக்கி வீசியவன் “கெட் அவுட்” என்று கத்தினான்.

நாவை கடித்துக்கொண்டு கிச்சனில் புகுந்து கொண்டாள் நேயா..

அவனது நோக்கம் உன்னை எப்படியேனும் துரத்துவது என்று உனக்கு புரிகிறது தானே..பிறகேன் நீயும் பதிலுக்கு அவன் பர்சனலை இழுத்து பேசினாய்..? வேலை செய்யும் கிளையன்டிடம் இப்படித்தான் பேசுவதா..? என்று மனம் இடித்துரைக்க “அந்த கிளையன்ட் மட்டும் என்னிடம் என் பர்சனல் வாழ்க்கையை பற்றி தப்பா பேசலாமா? நான் வாயை மூடிட்டிருக்கணுமா” என்று பதில் கேள்வி கேட்டது அவள் இதயம்.

என்னடா டெய்லி அப்டேட் போடறேனே என்று தப்பா நினைக்காதீங்க மக்களே.. கொஞ்ச சாப்டர் எழுதி வச்சிருக்கேன்.. ஹி ஹி
 

Ush

Well-known member
Messages
109
Reaction score
270
Points
63
Shock azhitean sis, 3 epi ya parthathu.. story nicely going.
😂😂😂 konjam ezhuthi stock vachirujthenln.. Not anymore 😁
 
Top